Friday, December 25, 2009

82-தருமரின் உறுதி

அர்ச்சுனன் கூறிய காரணங்களை கேட்டும் தருமர் மனம் மாறவில்லை.துறவு மேற்கொள்ள இருக்கும் தன் முடிவில் மாற்றமில்லை என்றார்.அவர் அர்ச்சுனனிடம்..'நான் சொல்வதை உன் ஐம்புலன்களையும் ஒருமுகப் படுத்தி நான் சொல்வதைக் கேள்.அப்போது நான் சொல்வதில் உள்ள நியாயம் உனக்குப் புரியும்.முனிவர்கள் சேர்க்கையால் நான் மேலான நிலைமையை அடையப் போகிறேன்.நீ சொல்வதால் அரசாட்சியை நான் மேற்கொள்ளப் போவதில்லை.நான் காட்டுக்குச் செல்லப் போவது உறுதி.கானகம் சென்று கடுந்தவம் இருக்கப் போவது உறுதி.தவிர்க்க இயலாது.உலகப் பற்று நீங்கி முனிவர்களுடன் கூடி ஆத்ம சிந்தனையில் திளைப்பேன்.உடலை சாத்திரப்படி உண்ணாவிரதத்தால் இளைக்கச் செய்வேன்.இரண்டு வேளையும் நீராடுவேன்.காட்டில் உள்ள பறவை,விலங்குகளின் இனிய ஒலிகளைக் கேட்டு மனம் மகிழ்வேன்.தவம் செய்வோர் மேற்கொள்ளும் சாத்திர விதிப்படி பின்பற்றுவேன்.விருப்பு,வெறுப்பு,இன்ப துன்பம்,மான அவமானம் ஆகியவற்றிலிருந்து விலகி எப்போதும் தியானத்தில் இருப்பேன்.எனக்கு இனி நண்பரும் இல்லை..பகைவரும் இல்லை.

வாள் கொண்டு ஒருவர் கையை அறுத்தாலும் சரி,சந்தனத்தால் ஒருவர் அபிசேகம் செய்தாலும் சரி இருவருக்குமே தீங்கையோ, நன்மையையோ நினைக்க மாட்டேன்.இவ்வளவு நாள் இந்த புத்தி இல்லாமல்தான் சகோதரர்களைக் கொன்றேன்.பிறப்பு,இறப்பு,மூப்பு,நோய்,வேதனை இவைகளால் பீடிக்கப் படும் மனித வாழ்க்கையில் ஒரு பயனும் இல்லை.நிலையில்லா உலகில் தோன்றும் அற்ப ஆசைகளால் ஒரு அரசன் மற்ற அரசனைக் கொல்கிறான்.இவ்வளவு நாட்கள் அறிவு தெளிவற்றுக் கிடந்த நான் இப்போது தெளிந்த ஞானத்துடன் ஒரு முடிவிற்கு வந்து விட்டேன்..என்றும் நிலைத்து நிற்கக் கூடிய முக்தியை அடையத் துணிந்து விட்டேன்' என்றார்.

பீமன் சத்திரியர் துறவு மேற்கொள்ளக்கூடாது என்றும் தருமர் அரசாட்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்திக் கூறியவை அடுத்த பதிவில்...

Wednesday, December 16, 2009

81- தருமருக்கு அர்ச்சுனனின் பதில்

தருமரின் மொழிகளைக் கேட்ட அர்ச்சுனன் பதில் கூற ஆரம்பித்தான்..

'செயற்கரிய செயலை முடித்து..அதனால் பெற்ற செல்வத்தை இழக்கக்கூடாது.உமது துயரம் என்னை வியக்க வைக்கிறது.பகைவரைக் கொன்று தருமத்தால் கிடைத்த பூமியை எப்படி விட்டுப் போவது?அஃது அறிவீனம்.பயமும்,சோம்பலும் உடையவர்க்கு ஏது அரச செல்வம்?உலகில் ஒன்றும் இல்லாதவன் தான் பிச்சை எடுத்து உண்பான்.அவன் முயற்சியால் செல்வத்தை பெற மாட்டான்.மிகப் பெரிய அரச செல்வத்தை விட்டு விட்டு பிச்சை எடுத்து தவம் மேற்கொள்ளப் போகிறேன் என்ற உமது பேச்சை யாரேனும் ஏற்றுக் கொள்வார்களா? எல்லா நம்மைகளையும் விட்டு விட்டு அறிவிலி போல் ஏன் பிச்சை எடுக்க வேண்டும்?அரும்பாடு பட்டு வெற்றி கொண்ட பின் ஏன் காடு நோக்கி செல்ல வேண்டும்?ஒன்றும் இல்லாமல் இருப்பது சாதுக்களுக்கு தருமம்.ஆனால் அரச தருமம் அல்ல.அரச தருமம் என்பது பொருளால் நடைபெறுவது.அரச தருமம் மட்டுமல்ல சாது தருமம் கூட பொருள் இல்லாது போனால் நிலைகுலைந்து விடும்.சாதுக்கள் சாது தருமத்தைக் காக்க இல்லறத்தார் துணை செய்வர்.பொருள் இல்லையெனில் இல்லறத்தாரால் எவ்வாறு சாதுக்களுக்கு உதவ முடியும்.எனவே உலகில் பொருள் இல்லாமை பாவம் ஆகும்.பல்வேறு வகைகளில் திரட்டப் படும் செல்வமே எல்லா நன்மைகளும் பெருக காரணமாகிறது.அண்ணலே..பொருளிலிருந்து இம்மை இன்பம் கிடைக்கிறது.தருமம் பிறக்கிறது.இறுதியில் மறுமை இன்பமும் கிடைக்கிறது.

உலக வாழ்க்கை பொருள் இல்லாது மேன்மையுறாது.பொருளற்றவனின் முயற்சி கோடைகால நீர்நிலை போல் வற்றிப் போகும்.ஒரு பயனும் தராது.எவனிடம் பொருள் உண்டோ அவனிடம் நண்பர்கள் இருப்பார்கள்.எவனிடம் பொருள் இருக்கிறதோ அவனுடன் நெருங்கிய சுற்றத்தார்கள் இருப்பர்.எவனிடம் பொருள் இருக்கிறதோ அவனே சிறந்த அறிஞன்.அவனே தலைவன்.ஆகவே..யானையைக்கொண்டு யானையைப் பிடிப்பது போலப் பொருளைக் கொண்டு பொருளை சேர்க்க வேண்டும்.மலையிலிருந்து நதிநீர் பெருகுவதுப் போல பொருளில் இருந்து தான் தருமம் பெருகுகிறது.உண்மையில் உடல் இளைத்தவன் இளைத்தவன் அல்ல.பொருளற்றவனே இளைத்தவன் ஆவான்.

பகை அரசரின் நாட்டைக் கவர்வது அரச நீதி.அரச வம்சத்தை ஆராய்ந்தால் இதன் உண்மை விளங்கும்.ஒரு காலத்தில் இந்தப் பூமி திலீபனுடையதாக இருந்தது.பின் நகுஷன் கைக்குப் போனது.பின் அம்பரீஷனுடையதாகியது.பின் மாந்தாவுக்குச் சொந்தம் ஆனது.தற்போது உம்மிடம் உள்ளது.எனவே முன்னோர்களைப் போல அரச நீதி உணர்ந்து நீர் ஆட்சி புரிய வேண்டுமேயன்றிக் காட்டுக்குப் போகிறேன்..என்று சொல்லக் கூடாது'

என்று அர்ச்சுனன் சொல்லி முடித்தான்.

Tuesday, December 8, 2009

80-தருமரின் துயரம்

போர்க்களத்தில் ஏற்பட்ட உயிர்ச் சேதங்களை எண்ணி தருமர் சோகமாகக் காணப்பட்டார்.சகோதரர்களையும்,சுற்றத்தாரையும் இழந்து பெற்ற பயன் என்ன என ஏங்கினார்.அர்ச்சுனனைக் கூப்பிட்டு தருமர் சொல்ல ஆரம்பித்தார்.

'நாம் காட்டிலேயே இருந்திருந்தால் துயரம் இருந்திருக்காது. நம் சகோதரர்களைக் கொன்றதால் என்ன நன்மை..வனத்தில் இருந்த போது நம்மிடம் பொறுமை இருந்தது.அடக்கம் இருந்தது,அஹிம்சை இருந்தது.இவையே தருமம்.அறிவின்மையாலும்,ஆணவத்தினாலும்,பொருளாசையாலும் அரசாட்சியில் உள்ள கஷ்டத்தை விரும்பி துயரத்தை அடைந்தோம்.எல்லோரையும் கொன்றுவிட்டு கேவலமாக உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.நம்மால் கொல்லப்பட்டவர்கள் மரணம் என்னும் வாயிலில் புகுந்து யமனின் மாளிகையை அடைந்து விட்டார்கள்.நன்மைகளை விரும்பும் தந்தைகள் அறிவுள்ள மக்களைப் பெற விரும்புகின்றனர்.தாய்மார்கள் விரதங்களும், தெய்வ வழிபாடுகளிலும் ஈடுபடுகின்றனர்.மகனையோ,மகளையோ பெற்று அவர்கள் நல்லபடியாக கௌரவத்துடனும்,செயல்திறனுடனும் புகழுடன் வாழ்வார்களாயின் தமக்கு இம்மையிலும்,மறுமையிலும் நற்பேறு கிட்டும் என பெற்றோர் எண்ணுகின்றனர்.இங்கே அவர்கள் நனவு கனவாயிற்று.அவர்கள் வாழ்க்கையும் பாலைவனம் போல் ஆயிற்று.அவர்களின் பிள்ளைகள் நம்மால் கொல்லப்பட்டார்கள்.அவர்கள் தாய் தந்தையர்க்கு ஆற்ற வேண்டிய கடமை நம்மால் தடுக்கப்பட்டது.

ஆசையும், சினமும் மிக்கவர்கள் வெற்றியின் பயனை அடைய முடியாது.இதில் கௌரவர்களும்..நாமும் ஒன்றுதான்.இந்த பூமியின் பயனை அவர்களால் அனுபவிக்க முடியவில்லை.ஆசைவயப்பட்ட நம்மால் மட்டும் இதன் பயனை அனுபவிக்க முடியுமா?எண்ணிப்பார்த்தால் துரியோதனனால் அலைக்கழிக்கப்பட்ட நாமே இந்த உலகின் அழிவுக்கும் காரணமானோம்.நம்மிடம் பகைக் கொண்டு நம்மை அழிப்பதே அவன் லட்சியமாக இருந்தது.நமது பெருமையைக் கண்டு பொறாமை கொண்ட அவன் உடல் வெளுத்துக் காணப்பட்டான்.இதை சகுனியே திருதிராட்டிரனிடம் சொல்லி இருக்கிறான்.துரியோதனன் மீது கொண்ட பாசத்தால் யார் பேச்சையும் கேட்காமல் துரியோதனன் மனம் போனபடி போக வழிவிட்டார்.பீஷ்மரின் பேச்சையும் விதுரருடைய பேச்சையும் கேளாமல் மகனின் மனம் போல செயல்பட்டார்.

கெட்ட புத்தியுள்ள துரியோதனன் பழிபட செயல் புரிந்து உடன்பிறந்தவர்களைக் கொல்வித்தான்.தாய்,தந்தையரைச் சோகத்தில் ஆழ்த்தினான்.கண்ணனை கடுஞ்சொற்களால் ஏசினான்.

யார் செய்த பாவமோ..நாடு அழிந்தது.பல்லாயிரம் வீரர்கள் மடிந்ததும்..நம் கோபம் அகன்றது.ஆனால் இப்போது சோகம் வாள் கொண்டு பிளக்கிறது.நாம் செய்த பாவம்தான்..சகோதரர்கள் அழிவுக்குக் காரணமோ என அஞ்சுகிறேன்.இந்தப் பாவம் தவத்தினால் போகக்கூடியது என ஆகமங்கள் கூறுகின்றன.ஆதலால் நான் தவக்கோலம் பூண்டு காட்டிற்குச் செல்ல விரும்புகிறேன்.இல்லறத்தில் இருந்துக் கொண்டு நாம் செய்யும் செயல்கள் மீண்டும் பிறப்பு, இறப்புக் காரணம் என அற நூல்கள் கூறுகின்றன.ஆகவே சுக துக்கங்களைத் துறந்து சோகமில்லா ஓரிடத்தை நாடிச் செல்ல விழைகிறேன்.தவம் ஒன்றே நம் பாவங்களை சுட்டெரிக்கும் என உணர்கிறேன்.ஆகவே அர்ச்சுனா..இந்த பூமியை நீயே ஆட்சி செய்..எனக்கு விடை கொடு..' என்றார்.

இதற்கு அர்ச்சுனனின் பதில் அடுத்த பதிவில்.

Friday, December 4, 2009

79-இரும்புப் பதுமைத் தூண்

வியாசரும்..திருதிராட்டிரனுக்கு ஆறுதல் கூறினார்.ஆயினும் அவன் சினம் அடங்கவில்லை.கண்ணன் தருமரை அறிமுகப் படுத்த சாதாரணமாக தழுவிக் கொண்ட திருதிராட்டிரன்..பீமனைத் தழுவும்போது அறிவிழந்தான்.அவன் மனநிலையை அறிந்திருந்த கண்ணன் பீமனைப் போன்ற இரும்பாலான ஒரு பதுமையைக் காட்டினார்.திருதிராட்டிரன் அந்த இரும்பு பதுமையை இறுகத் தழுவி பொடியாக்கினான்.'இன்னுமா உன் வெறுப்பு தீரவில்லை? இந்த கெட்ட எண்ணமே உன் குலநாசம் அடையக் காரணம்' எனக் கண்ணன் கூற நாணித் தலைக் குனிந்தவன், மனம் தெளிந்து பீமன்,அர்ச்சுனன்,நகுலன்,சகாதேவன் ஆகியோரை தழுவிக் கொண்டான்

பாண்டவர்கள் காந்தாரியைக் காணச் சென்றனர்.காந்தாரியின் சினம் கண்ட வியாசர் 'நீ கோபப்படுவதால் பயன் இல்லை.நீ போருக்கு முன் துரியோதனனிடம் கூறியது என்ன..தருமம் உள்ள இடத்தில் வெற்றி நிச்சயம் என்றாய்..பாண்டவர்கள் பக்கம் தருமம் இருந்ததால் அவர்கள் வெற்றி பெற்றனர்.அவர்களை வாழ்த்துவாயாக..'என்றார்.

'பாண்டவர்களும் என் மக்கள் தான்..ஆயினும் பீமன் மீது எனக்குக் கோபம் உண்டு.நெறிகெடத் துரியோதனனை தொடையில் அடித்து வீழ்த்தினான்.துச்சாதனனின் ரத்தத்தைக் குடித்தான்.இந்த கொடுமைகளை எப்படி மன்னிப்பேன்?' என்ற காந்தாரிக்கு பீமன் பதிலளித்தான்.

'தாயே! துரியோதனன் எங்களுக்கு இழைத்த கொடுமைகளை நீங்கள் அறிவீர்கள்.உச்சக் கட்டமாக..பாஞ்சாலியைத் தன் தொடைமீது வந்து அமரும்படிக் கூறினான்.துச்சாதனன் அவளின் ஆடையைக் களைய முற்பட்டான்..ஆனாலும் நான் மேற்கொண்ட சபதப்படி அவன் ரத்தத்தைக் குடிக்கவில்லை.பல்லுக்கும்,உதட்டுக்கும் கீழே செல்லவில்லை ரத்தம்.அதனை உமிழ்ந்து விட்டேன்.விகர்ணனைப் பொறுத்தவரை நான் எவ்வளவோ..கேட்டுக் கொண்டும் அதனை செவி சாய்க்காமல் போரிட்டு மாண்டான்' என்றான்.

பின் காந்தாரியின் அருகில் வந்து தருமர் வணங்கினார்.கட்டியிருக்கும் துணி வழியே தருமரின் கால் விரல்களின் நகங்களைக் கண்டாள்.அவை சினத் தீயால் கருத்து விகாரம் அடைந்தன.அது கண்டு அர்ச்சுனன் அச்சம் கொண்டான்.பின் ஒருவாறு காந்தாரி சாந்தம் அடைந்தாள்.

பாண்டவர்கள் பின் பெற்ற தாயான குந்தியைக் காணச் சென்றனர்.

வியாசரின் அருளால் காந்தாரி இருந்த இடத்திலிருந்து போர்க்களத்தைக் கண்டாள்.துரியோதனன் தரைமீது மாண்டுக் கிடப்பதுக் கண்டு..கதறி அழுதாள்.கண்ணனைப் பார்த்து..'உன்னால்தான் எல்லாம்..சகோதரர்களிடையே பூசலை அவ்வப்போது தடுத்து நிறுத்தியிருந்தால் பேரழிவு ஏற்பட்டிருக்காது..என் குலம் நாசம் அடைந்தாற் போல உன் குலமும் நாசம் அடைவதாக' என சபித்தாள்.அவளுக்கு நல்லுணர்வு ஏற்படுமாறு கண்ணன் ஆறுதல் அளித்தார்.

இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்யும் நேரம் வர..குந்தி..கர்ணன் தன் மூத்த மகன் என்ற ரகசியத்தை வெளிப்படுத்தினாள்.

பின்..முறைப்படி ஈமச் சடங்குகள் நடை பெற்றன.

ஸ்திரீ பருவம் முற்றிற்று..அடுத்து சாந்தி பருவம்..தருமரின் மனக்குழப்பமும்,தெளிவும்,பீஷ்மரின் உபதேசமும்..அடுத்து வரும் பதிவுகளில்..

Sunday, November 29, 2009

78-வாழ்க்கை ஒரு காடு

அஸ்தினாபுரமே துயரக் கடலில் ஆழ்ந்திருந்தது.போரில் இறந்தவர்கள் வீடுகள் எல்லாம் துயரத்தில் மூழ்கி இருந்தது.மைந்தரை இழந்த திருதிராட்டிரன்,காந்தாரி இருவரும் வேரற்ற மரமாய் வீழ்ந்து வேதனையில் துடித்தனர்.விதுரர் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.இவை உலக மக்களுக்கு உரைத்த பொன்மொழிகளாக எண்ணலாம்.

விதுரர் - 'யாருக்குத்தான் மரணமில்லை.மரணத்திற்கு வயது வரம்பு கிடையாது.மரணம் எந்த வயதில் வேண்டுமானாலும் நிகழலாம்.போர்க்களத்தில்..போரில் ஈடுபடுவோர் பிழைப்பதும் உண்டு..வீட்டில் பலத்த பாதுகாப்போடு இருப்பவர் இறப்பதும் உண்டு.பழைய உடையை நீக்கிவிட்டு புதிய உடையை உடுத்துவது போல உயிர்கள் இந்த உடலை விட்டு வினைப்படி வேறு உடலை எடுத்துக் கொள்கிறது. வினைப்பயன் யாரையும் விடாது பற்றும் தன்மை உடையது.நாம் விதைக்கும் விதை முளைப்பது போல நாம் செய்த வினைப்பயன் நம்மை வந்து அடையும்.

மேலும் அவர் கூறுகிறார்..ஒருவன் ஒரு கொடிய காட்டை அடைந்தான்.அங்கு சிங்கம்,புலி முதலிய கொடிய விலங்குகள் அவனைத் துரத்தின.அவன் தப்பித்து ஓடினான்.ஓட..ஓட..ஒரு புலி அவனை துரத்தியது.விரைந்து அவன் ஒரு மரத்தின் மீது ஏறும் போது தவறிப் பாழுங் கிணற்றில் வீழ்ந்தான்.பாதிக் கிணற்றில் கொடிகளைப் பற்றிக் கொண்டு தலை கீழாகத் தொங்கினான்.கிணற்றுக்கடியில் இருந்த கரும்பாம்பு சீறியது.கிணற்றுக்கருகில் இரண்டு முகமும் ஆறு கொம்புகளும் பன்னிரெண்டு கால்களும் உடைய யானை ஒன்று பயங்கரமாகச் சுற்றித் திரிந்தது.ஆதரவாகப் பிடித்துக் கொண்டிருந்த கொடிகளை கருப்பும், வெள்ளையுமான இரண்டு எலிகள் கடித்துக் கொண்டிருக்கின்றன.அப்போது மரத்திலிருந்த தேன்கூட்டிலிருந்து தேன் சொட்டு சொட்டாகத்..துளித் துளியாகச் சிந்தியது.அவனோ தன்னைச் சூழ்ந்திருக்கும்..புலி,பாழுங்கிணறு,யானை,பாம்பு,எலிகள் ஆகிய ஆபத்துகளை மறந்து சிந்தும் தேன் துளியைச் சுவைத்திருந்தான்.அந்த ஆபத்திலும் உயிர் வாழ்க்கையை விரும்பினான்..
என்ற விதுரர் இந்த உருவகத்தை மேலும் விளக்கினார்..

மனிதன் சென்றடைந்த காடுதான் சம்சார வாழ்க்கை.நோய்கள் தாம் கொடிய விலங்குகள்.துரத்தி வந்த புலிதான் யமன்.ஏற முயன்ற மரம் தான் முக்தி.நரகம் தான் பாழுங்கிணறு.பற்றி பிடித்த கொடிகள் தாம் ஆசையும், பற்றும்.யானையின் இரு முகங்கள் அயணங்கள் (தக்ஷிணாயனம்,உத்தராயணம்).ஆறு கொம்புகள் ஆறு பருவங்கள்.பன்னிரெண்டு கால்கள் பன்னிரெண்டு மாதங்கள்.வருடமே யானை.காலபாசம் தான் கரு நாகம்.கொடிகளைக் கடிக்கும் கருப்பு,வெள்ளை எலிகள் இரவு பகல்கள்.அவை மனிதனின் வாழ்நாளை குறைத்துக் கொண்டே இருக்கின்றன.அவன் பெறுகின்ற தேன் துளி போன்ற இன்பமே இந்த உலக வாழ்வு.எனவே ஒவ்வொரு வினாடியும் நமது வாழ்நாள் குறைந்துக் கொண்டே வருகிறது என்பதை உணர வேண்டும்.இறுதியில் மரணம் என்பது யாவராலும் தவிர்க்க முடியாததாகும்!
என நாளும் நாளும் மனிதன் சாகின்றான் என்பதை விதுரர் தெளிவாக விளக்கினார்.

Thursday, November 19, 2009

77-அஸ்வத்தாமனின் அடாத செயல்

தொடைகள் முறிந்ததால் நகர முடியாது துரியோதனன் துயரமுற்றான்.தான் அணு அணுவாக செத்துக் கொண்டிருப்பதை அறிந்தான்.அப்போது கிருபர்,கிருதவர்மா,அஸ்வத்தாமா ஆகியோர் அவனைக் கண்டு வேதனைப் பட்டனர்...அவனுக்கு ஆறுதல் கூறும் வகையில் பொழுது விடிவதற்குள் பாண்டவர்களை கொன்று வருவேன் என அஸ்வத்தாமன் கூறினான்.சாகும் நிலையில் இருந்தும் துரியோதனன் மனம் மாறவில்லை.அஸ்வத்தாமனுக்கு ஆசி வழங்கி அவனை தளபதி ஆக்கினான்.

பாண்டவர் பாசறை நோக்கிச் சென்ற மூவரும் ஒரு ஆலமரத்தடியில் அமர்ந்தனர்.அந்த மரத்தில் இருந்த பல காகங்களை ஒரு கோட்டான் கொன்றதை அஸ்வத்தாமன் கவனித்தான்.அதுபோல உறங்கிக் கொண்டிருக்கும் பாண்டவர்களையும்..பாஞ்சாலியையும் கொல்ல வேண்டும் எனக் கருதினான்.ஆனால் கிருபர் அத்திட்டத்தை ஏற்கவில்லை.

ஆனால் அஸ்வத்தாமன் பாண்டவர் பாசறையில் நுழைந்தான்.அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர்.அவன் திரௌபதியிம் புதல்வர்களான உபபாண்டவர்களைக் கொன்றான்,தன் தந்தையைக் கொன்ற திருஷ்டத்துய்மனைக் கொன்றான்.சிகண்டியையும் கொன்றான்.அப்போது பாண்டவர்களும்,கண்ணனும் அங்கு இல்லை.அஸ்வத்தாமன் செயல் அறிந்த துரியோதனன் மகிழ்ந்தான்.பின் அவன் உயிர் பிரிந்தது.வாழ்நாளில் ஒரு கணம் கூட அவன் தன் செயலுக்கு வருந்தவில்லை.

செய்தி அறிந்து பாண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.தன் மைந்தர்கள் மாண்டு கிடப்பதைக் கண்ட பாஞ்சாலி மயங்கினாள்.அஸ்வத்தாமனை யாராலும் கொல்ல முடியாது என அவள் அறிவாள்.'அவன் தலையில் அணிந்திருக்கும் மணியைக் கவர்ந்து அவனை அவமானப் படுத்த வேண்டும்..இல்லையேல் பட்டினி கிடந்து இறப்பேன்' என சூளுரைத்தாள்.

உடன் பீமன் தேரில் ஏறி கிளம்பினான்.

அவனை எளிதில் பிடிக்க முடியாது என்பதால் கண்ணன் அர்ச்சுனனை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.கங்கைக் கரையில் முனிவர்களோடு முனிவராக வியாசருடன் இருந்த அஸ்வத்தாமனைக் கண்டனர்.பீமன் அவன் மீது பல அம்புகளை செலுத்தினான்.அஸ்வத்தாமன் பிரமாஸ்திரத்தை செலுத்த..அர்ச்சுனனும் பிரமாஸ்திரத்தை செலுத்தினான்.இரண்டும் மோதுமாயின் உலகம் அழியும் என அறிந்த வியாசரும்,நாரதரும் உலகைக் காக்க நினைத்தனர். அவர்கள் கட்டளைக்கு பணிந்த அர்ச்சுனன் பிரமாஸ்திரத்தை திரும்ப அழைத்துக் கொண்டான்.

ஆனால் அஸ்வத்தாமனுக்கு..திரும்ப அழைத்துக் கொள்ளும் ஆற்றல் இல்லை.அந்த அஸ்திரம் ஏதேனும் ஒரு இலக்கை அழித்தே தீரும்.அஸ்வத்தாமன் பாண்டவர் வம்சத்தையே பூண்டோடு ஒழிக்க எண்ணி'பாண்டவர் மனைவியர்களின் கர்ப்பத்தில் இருந்த சிசுக்கள் அனைத்தும் அழியட்டும்;' என அந்த அஸ்திரத்திற்கு இலக்கு நிர்ணயித்தான்.ஆனால் கண்ணனின் அருளால் உத்திரையின் கரு காப்பாற்றப்பட்டது.

சிசுக்களை அழித்த அஸ்வத்தாமனை கண்ணன் பழித்தார்.தலையில் இருந்த மணியை வியாசர் தருமாறு கூற அவ்வாறே அளித்தான்.'அறிவிலியே..நீ தொழுநோயால் பீடிக்கப்பட்டுக் காட்டில் தன்னந்தனியாய்ப் பல ஆயிரம் ஆண்டுகள் தவிப்பாயாக' என்று அஸ்வத்தாமனை சபித்தார் வியாசர்.

உத்தரையின் கருவில் உள்ள குழந்தை நல்லபடியே பிறந்து பரீட்சித் என்னும் பெயருடன் இந்நில உலகை ஆளுவான் என்றும் கூறினார்.சாபப்படி அஸ்வத்தாமன் காட்டிற்குச் சென்றான்.பாசறைக்குத் திரும்பிய கண்ணனும்,பீமனும்,அர்ச்சுனனும் திரௌபதியிடம் அஸ்வத்தாமனின் மணியைக் கொடுத்து ஆறுதல் கூறினர்.

(சௌப்திக பருவம் முற்றும்)

Sunday, November 15, 2009

76-பதினெட்டாம் நாள் போர் (தொடர்ச்சி)

துரியோதனனின் கூற்றைக் கேட்ட பீமன் கூறுகிறான்..

'துரியோதனா நீயா தர்மத்தைப் பற்ரிப் பேசுகிறாய்?அன்று ஒருநாள் எனக்கு விஷம் கொடுத்தாயே அது தர்மமா?

கொடிகளால் கட்டி நதியில் வீசினாயே..அது தர்மமா?

அரக்கு மாளிகையில் எங்களைத் தங்கவைத்து தீயிட்டாயே..அது தர்மமா?

பாஞ்சாலியை மன்றத்தில் பலர் முன்னிலையில் துகில் உரிந்து மான பங்கம் செய்தாயே..அது தர்மமா?

எங்கள் குலக்கொழுந்தான அபிமன்யூவை நிராயுதபாணியாக்கி..மூலைக்கு ஒருவராக நின்று கொன்றீர்களே..அது தர்மமா?

பாவத்தின் மொத்த வடிவமான நீயா தர்மத்தைப் பற்றியும்..வீரத்தைப் பற்றியும் பேசுகிறாய்? என்றவாறு பீமன் அவனை எட்டிக் காலால் உதைத்துக் காலை அவன் தலையின் மீது வைத்து அழுத்தினான்,.

ஆனால் தருமர் பீமனின் இச் செயலை விரும்பவில்லை..'வீழ்ந்து கிடப்பவன் தலையில் காலை வைத்து அழுத்துதல் தர்மம் அன்று'என பீமனைக் கண்டித்தார்.பலராமனும் பீமனைக் கண்டித்தார்.

ஆனால்..துரியோதனன் தன் தவறுகளுக்கு வருந்தவில்லை.உலகெலாம் ஒரு குடைக்கீழ் ஆண்ட வீரமும், சத்திரிய தர்மத்தின்படி போர்க்களத்தில் போரிட்ட பெருமிதமும் தோன்ற உயிர் துறப்பேன் என்றான்.

பின்னர்..கண்ணன்..அர்ச்சுனனை தேரில் உள்ளக் கருவிகளை எடுத்துக் கொண்டு தேரில் இருந்து இறங்கச் சொன்னார்.அவர்கள் இறங்கியதுமே..தேர் பற்றியெரிந்தது. உடன் கண்ணன் 'பீஷ்மர்,துரோணர்,கர்ணன் ஆகியோர் செலுத்திய அம்புகளால் முன்னமே தேர் எரிந்திருக்கும்.நான் அதில் இருந்ததால் அழிவு ஏற்படவில்லை.நான் இறங்கியதும்..அம்பு தாக்கிய வெப்பத்தால் தேர் எரிந்து விட்டது' என்றார்.பாண்டவர்கள் கண்ணனை வணங்கி நன்றி கூறினர்.

திருதிராட்டினனுக்கும்..காந்தாரிக்கும் கண்ணன் ஆறுதல் கூறினார்.'உங்கள் துயரத்திற்கு துரியோதனனே காரணம்.அவன் சன்றோர்களின் அறிவுரையை ஏற்கவில்லை.'தான்' என்னும் ஆணவத்தால் அழிந்தான்.அவனால் பாண்டவர்கள் பட்ட கஷ்டத்தை சொல்லி மாளாது.காந்தாரி ஒருமுறை உன் மகன் துரியோதனனிடம் நீ என்ன கூறினாய் "மகனே..தர்மம் எங்கு உண்டோ அங்கு வெற்றி உண்டு '
என்றாயே...அஃது அப்படியே நிறைவேறியது.எல்லாம் விதி.எனவே பாண்டவர்களிடம் கோபம் கொள்ள வேண்டாம்.' என்ற கண்ணபிரானின் அறிவுரையைக் கேட்ட காந்தாரி சற்று ஆறுதல் அடைந்தாள்.கண்ணன் பின் பாண்டவர்கள் இருக்குமிடம் சென்றார்.

Thursday, November 12, 2009

75-பதினெட்டாம் நாள் போர்

கௌரவர்கள் பக்கம் மீதம் இருந்தது சில வீரர்களே..இந்நிலையில், துரியோதனன் வேண்டுகோளை ஏற்றுச் சல்லியன் அன்றைய போருக்குத் தளபதி ஆனான்.கர்ணன் போர்க்களத்தில் இறந்தால் தானே போர்க்களம் சென்று கண்ணனையும், அர்ச்சுனனையும் கொல்வதாகக் கர்ணனிடம் கூறிய உறுதிமொழியை மனதில் கொண்டான்.சல்லியனை எதிர்த்து போராட தருமர் முன் வந்தார்.

இரு திறத்துப் படை வீரர்களும் போர்க்களம் அடைந்தனர்.இதுவரை நடந்த போரில் ஏராளமான உயிர்ச் சேதம்,பொருட் சேதம் ஏற்பட்டிருந்தது.தவிர யானைப்படை, தேர்ப்படை, காலாட் படை, குதிரைப் படை என்ற நால்வகைப் படைகளின் அழிவு பேரழிவுதான்.

சல்லியன் சிறு வியூகம் வகுத்தான்.அதற்கேற்பப் பாண்டவர்களும் வியூகம் அமைத்தனர்.நகுலன் கர்ணனின் புதல்வன் சித்திரசேனனுடன் போரிட்டான்.இருவரும் கடுமையாக போரிட்டனர்.இறுதியில் சித்திரசேனன் இறந்தான்.கர்ணனின் மற்ற இரு மைந்தர்களும் நகுலனுடன் போரிட்டு மாண்டனர்.சல்லியனின் புதல்வனைச் சகாதேவன் கொன்றான்.சல்லியனை எதிர்த்து..தருமர் போரிட்ட போது..பீமன் தருமருக்குத் துணையாக வந்தான்.அவனை சல்லியன் தாக்கினான்.தருமருக்கும்,சல்லியனுக்கும் விற்போர் நீண்ட நேரம் நடந்தது.கடைசியில்..தருமர் சீற்றம் கொண்டு..ஒரு வேலைச் செலுத்த அது சல்லியனை கொன்றது.

பின்..சகுனி போருக்கு வந்தான்.அவனைச் சகாதேவன் எதிர்த்து போரிட்டான்.சகுனியின் மகன் உலூகனுக்கும் நகுலனுக்கும் போர் நேர்ந்தது.உலூகன் நகுனனால் கொல்லப்பட்டான்.அதை அறிந்த சகுனி..பல பாண்டவ வீரர்களைக் கொன்றான்.ஆனால்..சகாதேவனை எதிர்த்து நீண்ட நேரம் அவனால் போரிட முடியவில்லை.அப்போது சகாதேவன்..'அடப்பாவி..உன்னால் அல்லவா இந்தப் பேரழிவு..குல நாசம் புரிந்த கொடியவனே! இது சூதாடும் களம் அல்ல..போர்க்களம்..இங்கு உன் வஞ்சம் பலிக்காது' என்றபடியே சகுனியின் தலையை ஒரு அம்பினால் வீழ்த்தினான்.பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் செய்த சபதம் நிறைவேறியது.

துரியோதனன் படைகள் அழிய,தளபதிகள்,உடன் பிறந்தோர் என பலரை இழந்தான்.போர்க்களத்தை உற்று நோக்கினான்.தன்னைத் தவிர யாரும் இல்லை என உணர்ந்தான்.ஒரு கதையை எடுத்துக்கொண்டு நடந்தான்.தன்னைக் காண வந்த சஞ்சயனிடம் 'நான் ஒரு மடுவில் இருப்பதாகக் கூறிவிடு' என்று அனுப்பி விட்டு மடுவில் புகுந்துக் கொண்டான்.பாண்டவர்கள் துரியோதனனைத் தேடினர்.அவன் மடுவில் இருப்பதை சில வேடர்கள் தெரிவித்தனர்.

அவன் இருக்குமிடம் வந்த தருமர் 'துரியோதனா..சத்ரியனான நீ போர்க்களத்தை விட்டு ஒடி வந்து பதுங்கிக் கொண்டாயே..அதுவா வீரம்..எழுந்து வெளியே வந்து போர் செய்' என்றார்.அதற்கு துரியோதனன்..'தருமரே..நான் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்கிறேன்.நாளை வந்து போர் செய்வேன் அல்லது காட்டிற்குச் சென்று தவம் செய்வேன்.எனக்குரிய நாட்டை தருமமாகத் தருகிறேன் .பெற்றுக்கொள்' என்றான்.

நடுவே புகுந்த பீமன்..'வீண் பேச்சை நிறுத்து..கதை யுத்தம் செய்வோம் வா' என்றான்.வேறுவழியின்றி துரியோதனனும் சம்மதித்தான்.இருவரும் குருசேத்திரத்தின் மெற்குப் பகுதியில் உள்ள புனிதமான சமந்த பஞ்சக மடுவின் கரைக்குச் சென்றார்கள்.சமமாகவே போரிட்டனர்.இரண்டு கதாயுதங்களும் மோதும் போது ஏற்பட்ட ஒலி எட்டு திக்கும் எதிரொலித்தது.போர் முடிவிற்கு வருவதாகத் தெரியவி
ல்லை.



அப்போது கண்னன்..யுத்த நெறிக்கு மாறாகப் போர் செய்தால்தான் அவனை வீழ்த்தமுடியும் என்பதை உணர்ந்து..அவன் தொடையைப் பிளக்க வேண்டும்..என அர்ச்சுனனிடம் குறிப்பால் தெரிவிக்க..அர்ச்சுனனும் பீமன் பார்க்குமாறு தன் தொடையைத் தட்டிக்காட்டினான்.குறிப்பறிந்த பீமன்..தனது கதாயுதத்தால் துரியோதனனின் இரு தொடைகளையும் முறித்தான்.நிற்கவும் இயலாது துரியோதனன் கீழே வீழ்ந்தான்.ஆத்திரமும், சினமும் கொண்டு'பீமா இதுவா போர் முறை?இதுவா சத்திரிய தர்மம்?' என்றான். (தொடரும்)

Friday, October 30, 2009

74-பதினேழாம் நாள் போர்

போர் ஆரம்பிக்கையிலேயே கர்ணனுக்கும், தேரோட்டியான சல்லியனுக்கும் முரண்பாடு ஏற்பட்டது. 'இன்று பாண்டவர்களை வெல்வது உறுதி' என்றான் கர்ணன்.உடன் சல்லியன் 'உன் தற்பெருமையை நிறுத்தி வீரத்தை போர்க்களத்தில் காட்டு'என்றான் சல்லியன்.

'தேவாதி தேவர்களையும், அசுரர்களையும் வென்ற எனக்கு அர்ச்சுனனை வெல்வது எளிது' என்றான் கர்ணன்.

'வீண் தற்பெருமை வேண்டாம்..உன் வீரம் நான் அறிவேன்.சிவனுடன் போர் புரிந்தவன் அர்ச்சுனன்.சித்திரசேனன் என்னும் கந்தர்வனுடன் போரிட்டு துரியோதனனை மீட்டவன் அவன்.அப்போது, கர்ணா..நீ எங்கே போனாய்?விராட நகரில் ஆநிரைகளை மீட்ட போது அர்ச்சுனனுக்கு பயந்து ஓடியவன் நீ.உத்தரன் தேரோட்டிய போதே கங்கை மைந்தனையும்,துரோணரையும் வென்றவன்..கண்ணன் தேரோட்டும் போது..சற்று எண்ணிப்பார்.உன் ஆணவப் பேச்சை நிறுத்தி..ஆற்றலை செயலில் காட்டு ' என்றான் சல்லியன்.

துரியோதனன் இருவரையும் அமைதிப் படுத்தினான்.போர்ப் பறை முழங்கியது.போர் ஆரம்பித்தது.துச்சாதனன் பீமனைத் தாக்கினான்.போரின் ஆரம்பத்தில் பீமன் தன் முழு ஆற்றலைக் காட்டவில்லை.பின் தன் சபதம் நிறைவேறும் தருணம் நெருங்கிவிட்டது உணர்ந்து..தன் ஆற்றல் வெளிப்படும் வகையில் போரிட்டான்.துச்சாதனனின் வலிமை மிக்க தோள்களைப் பிடித்து அழுத்தி..'இந்த கைதானே திரௌபதியின் கூந்தலைத் தொட்டு இழுத்தது' என அவன் வலக்கையைப் பிய்த்து வீசினான்..'இந்தக் கைதானே..பாஞ்சாலியின் ஆடையைப் பற்றி இழுத்தது' என இடக்கையை பிய்த்து எறிந்தான்.அவன் சினம் அத்துடன் அடங்காமல் துச்சாதனன் மார்பைப் பிளந்தான்..துச்சாதனன் மாண்டு தரையில் கிடந்தான்.பீமனின் சபதத்தில் பாதி நிறைவுப் பெற்றது.(மறு பாதி துரியனைக் கொல்வதாகும்)

தருமர் கர்ணனை எதிர்த்தார்.வச்சிரம் போன்ற கருவியைக் கர்ணன் மீது எறிந்தார்.கர்ணன் அதன் வேகத்தை தடுக்க முடியாது மயங்கினான்.பின் எழுந்த கர்ணன் தருமரின் தேரை முறித்தான்.தருமர் உள்ளம் தளர்ந்து பாசறைக்குத் திரும்பினார்.

தருமரைக் காண கவலையுடன் அர்ச்சுனன் கண்ணனுடன் பாசறைக்கு வர..அவன் கர்ணனைக் கொன்றுவிட்டு வந்ததாக மகிழ்ந்தார் தருமர்.அது இல்லை என்றதும் கோபம் மேலிட'அவனைக் கொல்லாமல் ஏன் இங்கு வந்தாய்..பயந்து ஓடி வந்து விட்டாயா?உன்னைப்போல ஒரு கோழைக்கு வில் வேண்டுமா?அந்தக் காண்டீபத்தைத் தூக்கி எறி' என்றார்.

தருமரின் எதிர்பாரா இப்பேச்சைக் கேட்ட அர்ச்சுனன்..உணர்ச்சி வசப்பட்டு தருமரை நோக்கி'நீயா வீரத்தைப் பற்றிப் பேசுவது?நீ எந்த போர்க்களத்தில் வென்றிருக்கிறாய்..சூதாடத்தானே உனக்குத் தெரியும்? அதில் கூட நீ வென்றதில்லை.இவ்வளவு துன்பங்களுக்கு நீயே காரணம்' என்றவாறே அவரை கொல்ல வாளை உறுவினான்.

உடன் கண்ணன் அவன் சினத்தைப் போக்க இன்சொல் கூறினார்.தன் தவறுணர்ந்த அர்ச்சுனன்..மீண்டும் வாளை உறுவினான்..ஆனால்..இம்முறை தனைத்தானே மாய்த்துக் கொள்ள.தருமரின் பாதங்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டான்.தருமரும்..தன் இயல்புக்கு மாறாக நடந்துக் கொண்டதற்கு வருத்தம் தெரிவித்தார்.அர்ச்சுனன்'அண்ணா, கர்ணனைக் கொன்று திரும்புவேன்'எனக் கிளம்பினான்.

கர்ணனும், அர்ச்சுனனும் போரில் இறங்கினர்.அம்புகள் பறந்தன.கர்ணனின் விஜயம் என்ற வில்லும்..காண்டீபமும் ஒன்றை ஒன்று மோதின.அர்ச்சுனனுக்கு தான் வைத்திருந்த சக்தி என்னும் வேல் இப்போது இல்லையே என கர்ணன் வருந்தினான்.(அதை கடோத்கஜனைக் கொல்ல கர்ணன் உபயோகித்து விட்டான்)பின் நாகாஸ்திரத்தை எடுத்து எய்தான்.அது மின்னல் வேகத்தில் பார்த்தனை நெருங்கியது.தேவர்கள் திகைக்க, மக்கள் கத்த..அந்த நேரம் பார்த்துப் பார்த்தஸாரதி தேர்க்குதிரைகளை நிறுத்தித் தேரைத் தம் காலால் மிதித்து ஓர் அழுத்து அழுத்தினார்.தேர் சில அங்குலங்கள் பூமிக்குள் இறங்க..அந்த நாகாஸ்திரம் அர்ச்சுனனின் முடியைத் தட்டிச் சென்றது.

யார் வெற்றி பெறுவார் என்பது கணிக்க முடியாமல் இருந்தது..ஆனால் அச்சமயம் கர்ணனின் தேர்ச் சக்கரம் சேற்றில் சிக்கிக் கொண்டது.தனக்கு பாதுகாப்பாக இருந்த கவச, குண்டலங்களைக் கர்ணன் முன்னமேயே இந்திரனுக்குத் தானமாக வழங்கி விட்டான்.அந்த இந்திரனிடமிருந்து பெற்ற சக்தி ஆயுதமும் இல்லை..நிராயுதபாணி ஆன அவன்,,'தருமத்தின் பெயரில் கேட்கிறேன்..தேரை சேற்றிலிருந்து எடுக்க சற்று அவகாசம் கொடு' எனக் கெஞ்சினான்.

அப்போது கண்ணன்..'கர்ணா..நீயா தர்மத்தைப் பேசுகிறாய்.துரியோதனன், சகுனியுடன் சேர்ந்து தீமைக்குத் துணைப்போனாய்.அப்போது உன் தர்மம் என்ன ஆயிற்று..மன்னர் நிறைந்த அவையில்..பாஞ்சாலியின் உடையைக் களைய நீயும் உடந்தைதானே..அப்போது எங்கே போயிற்று உன் தர்மம்..பாண்டவர்கள் பதின்மூன்று காலம் வன வாசம் முடித்து வந்ததும்..நீ தர்மப்படி நடந்துக் கொண்டாயா..அபிமன்யூவை தர்மத்திற்கு விரோதமாக பின்னால் இருந்து தாக்கினாயே..அப்போது எங்கே போயிற்று உன் தர்மம்' எனக் கேட்டார்.

கர்ணன் பதில் பேச முடியாது நாணித் தலைக் குனிந்தான்.ஆயினும்..அர்ச்சுனனின் கணைகளை தடுத்து நிறுத்தினான்.இறுதியாக அர்ச்சுனன் தெய்வீக அஸ்திரம் ஒன்றை எடுத்து 'நான் தர்மயுத்தம் செய்வது உண்மையெனின் இது கர்ணனை அழிக்கட்டும்'என கர்ணன் மீது செலுத்தினான்.தர்மம் வென்றது.கர்ணனின் தலை தரையில் விழுந்தது.தன் மகனின் முடிவைப் பார்த்து சூரியன் மறைந்தான்.துரியோதனன் துயரம் அடைந்தான்

Wednesday, October 28, 2009

73-பதினாறாம் நாள் போர்

பிஷ்மர்,துரோணர்,ஜயத்ரதன் ஆகியோர் வீழ்ச்சிக்குப் பின் கௌரவர் படை கலகலத்தது.துரியோதனனின் தம்பியர் பலர்,உதவிக்கு வந்த அரசர்கள் பலர் கொல்லப்பட்டனர்.ஆயினும்..துரியோதனன் மாறவில்லை.எப்படியாவது பாண்டவர்களை ஒழிக்க வேண்டும் என்றே குறியாய் இருந்தான்.அசுவத்தாமன் ஆலோசனைப் பேரில் கர்ணன் தளபதியாக நியமிக்கப் பட்டான்.

போர் தொடங்கும் போது மகர வியூகம் அமைத்தான் கர்ணன்.திருஷ்டத்துய்மன் அர்த்த சந்திர வியூகம் அமைத்தான்.போர் ஆரம்பித்தது.முதலில் நகுலனை எளிதில் வென்றிடலாம்..என கர்ணன் அவனுடன் போரிட்டான்.எழுபத்து மூன்று அம்புகளை அவன் மீது செலுத்தினான்.அவன் வில்லை ஒடித்தான்.தேரை அழித்தான்.வாளை துணித்தான் .கேடயத்தைச் சிதைத்தான்.கதையைப் பொடியாக்கினான்.அவன் நகுலனை எளிதாகக் கொன்றிருப்பான்..ஆனால் தாய் குந்திக்கு கொடுத்த வாக்குறுதி காரணமாக அவனை கொல்லாது விடுத்தான்.ஒரு புறம் கிருபருக்கும்..திருஷ்டத்துய்மனுக்கும் கடும் போர் மூண்டது.கிருதவர்மா சிகண்டியைத் திணற அடித்தான்.அர்ச்சுனன் பலரைவீழ்த்தினான்.

துரியோதனனுக்கும் தருமருக்கும் போர் மூண்டது.தருமர் அவன் தேரை அழித்தார்.வில்லை முறித்தார்..தமது சக்தி ஆயுதத்தால் துரியோதனனின் உடம்பெங்கும் புண்ணாக்கினார்.பின் ஒரு அம்பை எடுத்து அவன் மீது எய்தார். அச்சமயம்..துரியோதனனைக் கொல்வேன் என்ற பீமன் சபதம் ஞாபகம் வர..அதை திரும்பிப் பெற்றார்.ஆகவே அன்று அவன் தப்பித்தான்.அன்றைய போர் அத்துடன் முடிந்தது.அனைவரும் பாசறைக்குத் திரும்பினர்.

கர்ணனின் செயல் துரியோதனனை வருத்தியது.அவன் நகுலனையாவது கொன்றிருக்கலாம் என எண்ணினான்.கர்ணனிடம் சென்று..தன் வாழ்வு அவனிடம்தான் இருப்பதாகக் கூறி..எப்படியேனும் அடுத்த நாள் அர்ச்சுனனை போர்க்களத்தில் கொன்றுவிடுமாறு கேட்டுக் கொண்டான்.

கர்ணன் மனம் திறந்து துரியோதனனுடன் பேசினான்.'பல விதங்களில் நான் அர்ச்சுனனைவிட ஆற்றல் மிக்கவன்.அம்பு எய்வதில் அவன் என்னைவிட சிறந்தவன் அல்ல.விஜயம் என்னும் எனது வில் சக்தி வாய்ந்தது.இந்த வில்லால்தான் இந்திரன் அசுரர்களை மாய்த்தான்.தெய்வத்தன்மை வாய்ந்த இந்த வில்லை இந்திரன் பரசுராமருக்குக் கொடுத்தான்.பரசுராமன் எனக்கு அளித்தார்.அர்ச்சுனனிடம் இரண்டு அம்புறாத் தூணிகள் உள்ளன..அவை போன்றவை என்னிடம் இல்லை.எல்லாவற்றிற்கும் மேலாக அவனுக்கு கண்ணன் தேர் ஓட்டுகிறான்.அத்தகைய சாரதி எனக்கு இல்லை.ஆயினும்..சல்லியன் என் தேரை ஓட்டுவானானால்..நான் நிச்சயம் அர்ச்சுனனைத் தோற்கடிப்பேன்" என்றான்.

துரியோதனன் உடன் சல்லியனிடம் சென்று..'நீர் தேரை ஓட்டுவதில் கண்ணனைவிட சிறந்தவர்..ஆகவே கர்ணனுக்கு தேரோட்டியாய் இருந்து தனக்கு வெற்றியை பெற்றுத் தர வேண்டும்' என வேண்டினான்.

சல்லியன் ஒரு நிபந்தனையுடன் கண்ணனின் தேரைச் செலுத்தச் சம்மதித்தான்.போரில் கர்ணன் தவறிழைத்தால் தனக்கு அவனை கண்டிக்கும் உரிமைவேண்டும்..என்பதே நிபந்தனை.துரியோதனன் அந்த நிபந்தனையை ஏற்றான்.

Monday, October 26, 2009

72-பதினைந்தாம் நாள் போர்

(துரோணரின் முடிவு)

தோல்வி மேல் தோல்வியைச் சந்தித்து வந்த துரியோதனன் நம்பிக்கையை இழக்கவில்லை.துரோணர் வெற்றியை பறித்துத் தருவார் என எண்ணினான்.துரோணரும் கடுமையாகப் போரிட்டார்.போரின் உக்கிரத்தைக் கண்டு கண்ணன் ஆழ்ந்து சிந்தித்தார்.அறநெறிப்படி துரோணரை வெல்ல முடியாது என உணர்ந்தார்.பிரமாஸ்திரத்தையும் துரோணர் பயன்படுத்தக் கூடும் என எண்ணினார்.

ஏதேனும் பொய் சொல்லித் துரோணரின் கவனத்தைத் திருப்பினாலன்றி வெற்றி கிடைக்காது என எண்ணினார் கண்ணன்.ஒரு முனையில் யுத்தகளத்தை கலக்கிக் கொண்டிருந்தான் பீமன்.'அசுவத்தாமன்'என்ற புகழ் மிக்க யானையைக் கதாயுதத்தால் கடுமையாக தாக்கினான்.அது சுருண்டு விழுந்தது.அசுவத்தாமன் என்ற அந்த யானை இறந்ததில் அசுவத்தாமனே இறந்தாற்போல..உணர்ச்சி
வயப்பட்ட பீமன், 'அசுவத்தாமனை கொன்றுவிட்டேன்' என கத்தினான்.இது துரோணர் காதில் விழுந்தது..தலையில் இடி விழுந்தாற் போல ஆனார்.ஆனால் பின் மனம் தெளிந்தார்.அச் செய்தி பொய்யாய் இருக்கும் என எண்ணினார்.ஆற்றல் மிக்க தன் மகன் அசுவத்தாமனை யாராலும் கொல்லமுடியாது என நினைத்து போரைத் தொடர்ந்தார்.ஆயிரக்கணக்கான குதிரைகளையும்,வீரர்களையும்,யானைகளையும் கொன்று குவித்தார்.ரத்த வெள்ளம் பெருக்கெடுத்தது.போர்க்களம் ரத்தக் கடல் போல் காட்சியளித்தது.

துரோணர்..விண்ணுலகம் செல்லும் காலம் வந்ததை உணர்ந்த வஷிஷ்டர் முதலான ரிஷிகள் அவரிடம் வந்தனர்.'சாந்த நிலை அடையுங்கள்' என வேண்டினர்.முனிவர்கள் கூற்றும்..சற்று முன்னர் பீமன் கூற்றும் அவரது போர்ச்செயலை அறவே நிறுத்தின.உண்மையில் மகன் கொல்லப்பட்டானா? என்ற வினா உள்ளத்தை வாட்ட, சத்தியமே பேசும் தருமரிடம் கேட்டால் உண்மை தெரியும் என அவரை அணுகினார்.

இதற்கிடையே..ஒரு நன்மையின் பொருட்டு..பொய் சொல்லுமாறு தருமரிடம் கண்ணன் கூறினார்.தருமர் மறுத்தார்.'அசுவத்தாமன் என்னும் யானை இறந்தது உண்மைதானே! அதையாவது சொல்லுங்கள் 'என கண்ணன் வற்புறுத்த ,தருமரும் சரியென அதை அவர் கூற முற்பட்டபோது 'அசுவத்தாமன் இறந்தான்' என்ற செய்தி மட்டும் காதில் விழுமாறும்..மற்றவை விழாதவாறும் சங்கை எடுத்து முழங்கினார் கண்ணன்.தருமரின் கூற்று பொய்யாய் இராது என துரோணர் ஆயுதங்களைத் தூக்கி எறிந்து விட்டு தியானத்தில் ஆழ்ந்தார்.அந்த நேரம் பார்த்துத் திருஷ்டத்துய்மன் வாள் கொண்டு துரோணரின் தலையைத் துண்டித்தான்.அவரது தலை தரையில் உருள, உடலிலிருந்து கிளம்பிய ஜோதி விண் நோக்கிச் சென்றது.

அசுவத்தாமன் கொல்லப்பட்டான் என்பதை சொல்ல கண்ணன் வற்புறுத்திய போது..அதில் உள்ள சூழ்ச்சியை தருமர் உணர்ந்தார்.பின்னரும் அப்படிச் சொல்ல உடன்பட்டது அவரின் பண்பில் நேர்ந்த குறை என்று இன்றும் விவாதிப்பவர்கள் உண்டு.

துரோணரின் வீழ்ச்சியோடு பதினைந்தாம் நாள் போர் முடிந்தது.

Friday, October 23, 2009

71-பதினான்காம் நாள் இரவுப் போர்

துரியோதனனின் மன வேதனையை உணர்ந்த துரோணர்..தன் முழு ஆற்றலையும் செலுத்திப் போரிடத் துணிந்தார்.பகைவரை ஒழித்தப் பின்தான் கேடயத்தை கழட்டுவேன் என்று சவால் விட்டு..மாலை மறைந்தும்..இரவுப் போரைத் தொடர்ந்தார்.தன்னை எதிர்த்து வந்த சிபி என்னும் மன்னனின் தலையைக் கொய்தார்.தன்னை எதிர்த்த திருஷ்டத்துய்மனின் மைந்தரைக் கொன்றார்.

பீமன் வேறு புறத்தில் துரியோதனனின் தம்பியரான துர்மதனையும்,துஷ்கர்ணனையும் கொன்றான்.சாத்யகி சோம தத்தனை எதிர்த்தான்.சகுனி சோம தத்தனுக்கு உதவினான்.

கடோத்கஜன் ஒரு புறம் கடும் போர் புரிந்தான்.அவன் மகன் அஞ்சனபர்வா அஸ்வத்தாமாவை எதிர்த்து போரிட்டான்.ஆயினும் அம்மகன் கொல்லப்பட்டான்.மகனை இழந்த ஆத்திரத்தில்..அஸ்வத்தாமாவுடன் கடும் போரிட்டான் கடோத்கஜன்.இருவரும் சளைக்கவில்லை.பின்னர் கர்ணனிடம் வந்தான் கடோத்கஜன்.அவனது பேராற்றலைக் கண்ட துரியோதனன் நடுங்கினான்.பயம் மேலிட்டதால்..சக்தி மிகுந்த சக்தி ஆற்றலை கர்ணன் கடோத்கஜன் மீது செலுத்த வேண்டியதாயிற்று.அது இந்திரனிடம் இருந்து கர்ணனால் பெறப்பட்டது.அந்த சக்தி ஆயுதம் ஒருமுறை மட்டுமே பயன் படும்.அதை அர்ச்சுனனைக் கொல்ல கர்ணன் வைத்திருந்தான். கடோத்கஜன் யாராலும் வெல்ல முடியாதபடி போர் புரிந்ததால்..அதை அவன் மீது செலுத்தி கடோத்கஜனைக் கொன்றான்.

ஆயினும்..இனி எப்படி அர்ச்சுனனைக் கொல்வது என கவலையில் மூழ்கினான் கர்ணன்.

பாண்டவர்களோ பதின் மூன்றாம் நாள் போரில் அபிமன்யூவை இழந்ததற்கும்..பதினான்காம் நாள் போரில் கடோத்கஜனை இழந்ததற்கும் வருந்தினர்.

இந்த அளவில் போர் நின்றது.

Thursday, October 22, 2009

70-பதினான்காம் நாள் போர்

அர்ச்சுனனின் சபதத்தைக் கேட்ட ஜயத்ரதன்..போர்க்களத்தை விட்டு ஓடிவிடலாமா..என யோசித்தான்.அது வீரர்க்கு அழகன்று என மற்றவர்கள் தடுத்தனர்.அர்ச்சுனனை எண்ணி துரோணர் கலங்கினார்.அன்றைய போர் பயங்கரமாய் இருக்கும் என உணர்ந்தார்.அதற்கேற்ப பத்மவியூகம்,சகடவியூகம் என வியூகங்களை வகுத்தார்.

எங்கே அர்ச்சுனன்? என ஆர்ப்பரித்த கௌரவர்கள்..துரியோதனனின் தம்பியான துர்மர்ஷணனை பெரும்படையுடன் அர்ச்சுனனை நோக்கி அனுப்பினர்.அப்போது கண்ணன் தேரை ஓட்ட..காண்டீபத்துடன் உள்ளே வந்தான் பார்த்தன்.அனுமக்கொடியுடன்..ஆக்ரோஷத்துடன் வந்த அர்ச்சுனனைக் கண்டு புறமுதுகிட்டு ஓடினான் துர்மர்ஷணன்.அவன் ஒட்டத்தைக் கண்ட துச்சாதனன் கடும் சினம் கொண்டு அர்ச்சுனனை எதிர்த்தான்.பின் முடியாமல் திரும்பினான்.

அர்ச்சுனன்..துரோணரைச் சந்தித்து போரிட்டான்.ஆனாலும் அவருடனான போர் நிலைக்கவில்லை.ஏனெனில்..அர்ச்சுனனுக்கு அன்றைய இலக்கு ஜயத்ரதன்.

ஜயத்ரதனை நோக்கி வந்த அர்ச்சுனனைக் கண்டு துரியோதனன் மிகவும் கோபம் கொண்டு..துரோணரைக் கடிந்துக் கொண்டான். 'அவனை ஏன் உங்களைக் கடந்து ஜயத்ரதனை நோக்கி செல்ல அனுமதித்தீர்.உங்கள் அன்பும்..பரிவும் எப்போதும் பாண்டவரிடம்தான்' என்றான்.

"துரியோதனா..என் திட்டம் என்ன தெரியுமா? அர்ச்சுனனை வேறு பக்கம் போக வைத்தால்..தருமரை பிடித்து விடலாம்.என்னிடம் மந்திர சக்தி வாய்ந்த கவசம் இருக்கிறது.உனக்குத் தருகிறேன்.அதை யாரும் பிளக்க முடியாது.முன்னர் சிவபெருமான் இதை இந்திரனுக்கு அளித்தார்.அவன் ஆங்கீசரருக்குக் கொடுத்தான்.அவர் அவர் புதல்வன் பிரகஸ்பதிக்கு அருளினார்.பிரகஸ்பதி அக்னியேச்யருக்குக் கொடுத்தார்.அவர் எனக்குத் தந்தார்.அதை உனக்கு நான் தருகிறேன்..இனி உனக்கு வெற்றியே..போய் அர்ச்சுனனுடன் போரிடு' என்றார் துரோணர்.

மகிழ்ச்சியுடன்..அக்கவசத்தை அணிந்து..அர்ச்சுனனைத் தாக்கினான் துரியோதனன்.அர்ச்சுனனின் அம்புகள் கவசத்தைத் துளைக்க முடியவில்லை.ஆகவே அர்ச்சுனன் கேடயம் இல்லாத இடமாக அம்புகளைச் செலுத்தினான்.துரியோதனன் வலி பொறுக்காது..வேறு பகுதிக்கு நகர்ந்தான்.

பின்..அர்ச்சுனன் துரியோதனனிடமிருந்து விலகி ஜயத்ரதனை தாக்கும் முயற்சியில் ஈடுபட்டான்.அர்ச்சுனன் ஜயத்ரதனைக் கொல்லாதபடி..பூரிசிரவஸ் தாக்கினான்.உடன் சத்யகி அர்ச்சுனனின் உதவிக்கு வந்து பூரிசிரவஸைத் தாக்கத் தொடங்கினான்.சாத்யகியை கீழே தள்ளினான் பூரிசிரவஸ்..காலால் மார்பில் உதைத்தான்..மயக்கம் அடைந்தான் சாத்யகி...உடன் அவன் தலையை துண்டிக்க முயற்சித்தான் பூரிசிரவஸ்.உடன் அர்ச்சுனன் அவன் கையை வெட்டினான்.அந்த கை வாளுடன் வீழ்ந்தது...பூரிசிரவஸ் அர்ச்சுனனைப் பார்த்து'நான் வேறு ஒருவருடன் போரிடும் போது அறநெறிக் கெட்டு கையை வெட்டினாயே..தருமரின் தம்பி நீ அதர்மம் செய்யலாமா?' என்றான்.

'நேற்று என் மகன் அபிமன்யூ மீது தர்ம வழி மீறி போரிட்டவன் நீயும் அல்லவா?' என்றான்.உடன் பூரிசிரவஸ் தன் செயல் குறித்து நாணினான்.பரமனை எண்ணி தியானம் செய்தான்.அப்போது மயக்கம் தெளிந்த சாத்யகி தியானத்தில் இருந்தவன் தலையை வெட்டினான்.

மாலை நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.பலரையும் வென்றவாறு..அர்ச்சுனன் ஜயத்ரதனை நெருங்கினான்.அக்கணத்தில் ஜயத்ரதன் துரோணரைப் பார்த்து..'நீங்கள் அனைவருக்கும் விற் பயிற்சி அளித்தீர்..ஆனால் அர்ச்சுனன் போல் மற்றவர்கள் சிறக்கவில்லையே ஏன்?' என்றான்.

அதற்கு துரோணர்,'அர்ச்சுனன் தவ வலிமை உடையவன்..ஆகவே மேம்பட்டு விளங்குகிறான்' என்றார்.

பின் அர்ச்சுனனை ஜயத்ரதன் தாக்கத் தொடங்கினான்.கண்ணபிரான்..சூரியன் மறைந்தாற் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினார்.சூரியன் மறைந்ததா எனப் பார்க்க ஜயத்ரதன் மேற்குத் திசையை நோக்கினான்...'அர்ச்சுனா..அம்பை செலுத்து'எனக் கூறி இருளைப் போக்கினார் கண்ணன்.அர்ச்சுனன் உடனே தன் பாசுபதாஸ்திரத்தை செலுத்தினான்.அது ஜயத்ரதனின் தலையை துண்டித்தது.அப்படி துண்டித்த தலை தவம் செய்துக் கொண்டிருந்த ஜயத்ரதனின் தந்தை விருத்தாட்சத்திரன் மடியில் போய் விழுந்தது.அதை ஏதோ என நினைத்தவன்...தன் கையால் தள்ளிவிட அது தரையில் விழுந்தது..ஜயத்ரதனின் தந்தையின் தலையும் சுக்கல் சுக்கலாகியது.தன் மகனின் தலையைத் தரையில் வீழ்த்துபவர் தலை சுக்கலாக வேண்டும்..என அத்தந்தை பெற்ற வரம்..அவருக்கே வினையாயிற்று.ஜயத்ரதன் மறைவு அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால்..துரியோதனனோ பெரும் கவலை அடைந்தான்.துரோணரிடம்..'இன்று என் தம்பியர் பலர் மாண்டனர்.பீமனும் சாத்யகியும் செய்த போரில் வீரர் பலர் இறந்தனர்.ஜயத்ரதனும் மாண்டான்.அர்ச்சுனனின் வல்லமையை யார் வெல்ல முடியும்..இனிப் பேசிப் பயனில்லை..வெற்றி அல்லது வீர மரணம்' என்று புலம்பினான்.

இவ்வாறு..ஒரு தரத்திற்கு மகிழ்ச்சியும்..மற்றவருக்கு சோகமுமாக அன்றையப் போர் பகல் போர் முற்றுப் பெற்றது.

Sunday, October 18, 2009

69-பதின்மூன்றாம் நாள் போர்

படைகள் அணிவகுத்து நின்றன.துரோணர் பத்மவியூகம் அமைத்தார்.முகப்பில் அவர் இருந்தார்.துரியோதனன் நடுவில் நின்றான்.பத்மவியூகத்தை உடைத்துச் செல்வது கடினம்.அந்த அமைப்புக் கண்டு தருமர் கலக்க முற்றார்.அபிமன்யூவிடம் ஒரு தனி ஆற்றல் இருந்தது.அவனால்..பத்மவியூகத்தை உடைத்துக் கொண்டு உள்ளே செல்லமுடியும்.இந்த பயிற்சியைப் பெற்றிருந்த அபிமன்யூ வெளியே வரும் பயிற்சியைப் பெற்றிருக்கவில்லை.ஆயினும்..அவனுக்குத் துணையாக பல்லாயிரக் கணக்கில் வீரர்கள் உள்ளே புகுந்தால்..கௌரவர் படை சிதறி ஓடும் என தருமர் எண்ணினார்.அபிமன்யூவும் துணிச்சலாக உள்ளே சென்று தாக்கினான்.ஆனால் மற்ற வீரர்கள் உள்ளே செல்லுமுன் வியூகம் மூடிக் கொண்டது.ஜயத்ரதன் யாரையும் உள்ளே நெருங்க விடவில்லை.

ஆகவே..துரோணர்,அசுவத்தாமா,கர்ணன் ஆகியோருடன் தனித்து நின்று போரிட்டான் அபிமன்யூ.அவன் வீரம் கண்டு துரோணர் கிருபரிடம் 'இவன் வீரத்தில் அர்ச்சுனனைவிட சிறந்து காணப்படுகிறான்'என்று வியந்து பாராட்டினார்.இதைக் கண்ட துரியோதனன்..'எதிரியை புகழும் நீர் செய்வது நம்பிக்கைத்துரோகம்..இதனால் நம் படையின் உற்சாகம் குறையும்' என்றான்.

அவனுக்கு பதில் அளிக்கும் விதத்தில் போரில் வீரம் காட்டினார் துரோணர்.எப்படியாவது அவனை வீழ்த்த எண்ணி..அதரும யுத்தத்தில் ஈடுபலானார்.கர்ணன் யுத்த நெறிக்குப் புறம்பாக பின்னால் இருந்து அபிமன்யூவின் வில்லை முறித்தான்.பின்புறமிருந்து தாக்கியவன் யார் என அபிமன்யூ திரும்பி பார்த்தபோது..துரோணர் அவனின் தேர்க் குதிரைகளை வெட்டிச் சாய்த்தார்.ஆனால்..இதற்குத் தளராத அபிமன்யூ வாளைக் கையில் ஏந்தி ..தேரிலிருந்து குதித்து பல நூறு வீரர்களை வெட்டி வீழ்த்தினான்.

உணர்ச்சிவசப்பட்ட துரோணர் மீண்டும் புறம்பாக பின்புறத்திருந்து வாளைத் துண்டித்தார்.அதேமுறையில் கர்ணன் அவனது கேடயத்தைத் தகர்த்தான்.

மாவீரன் அபிமன்யூ தேரையும்,வில்லையும்,வாளையும்,கேடயத்தையும் இழந்தாலும்..வீரத்தை இழக்கவில்லை.ஒரு கதாயுதத்தைக் கையில் ஏந்தி அசுவத்தாமாவை விரட்டினான்.பல வீரர்களைக் கொன்றான்.

முன்னர் திரௌபதியை தூக்கிச் செல்ல முயன்று தோல்வியுற்று, பாண்டவர்களால் அவமானப்பட்ட ஜயத்ரதன், பாண்டவர்களை பழிதீர்த்துச் சிவனை நோக்கித் தவம் செய்து , அர்ச்சுனனைக் கொல்ல இயலாது எனினும் ஒரு நாள் மற்றவர்களை சமாளிக்கக்கூடும் என்னும் வரத்தை பெற்றிருந்தான் அல்லவா?அதற்கான வாய்ப்புக் கிடைத்தது.பீமன்,நகுலன்,சகாதேவன் ஆகியோர் அபிமன்யூவிற்கு உதவி செய்யாதவாறு த டுத்தான்.கையில் ஆயுதமும் இன்றி..துணைக்கும் யாருமின்றி போர் செய்த சிங்கக்குட்டியை (நரிகள் ஒன்று சேர்ந்து )மாவீரனான அபிமன்யூவைக் கொன்று விட்டனர்.

தென்திசையில் சம்சப்தர்களை ஒழித்துத் திரும்பிய அர்ச்சுனன் காதில் இச் செய்தி விழ..அவன் மயங்கி விழுந்தான்.அவன் துயரத்தை எழுத்தில் வடிக்க இயலாது.மகனின் மரணத்திற்கு மூலக் காரணம் ஜயத்ரதன் என அறிந்தான்.பின்'ஜயத்ரதனை நாளை மாலைக்குள் கொல்வேன்..அல்லாவிடின்..வெந் நரகில் வீழ்வேன்' என சூளுரைத்தான். அதன் அறிகுறியாக தன் காண்டீபத்திலிருந்து ஒலி எழுப்பினான்.அவ்வொலிக் கேட்டு அண்ட கோளங்களும் அதிர்ந்தன.பூமி நிலை குலைந்தது.இந்நிலையில் அன்றைய போர் நிறைவுப் பெற்றது.

Tuesday, October 13, 2009

68-பன்னிரண்டாம் நாள் போர்

தருமரை..உயிருடன் பிடிக்க வெண்டுமெனில்..அர்ச்சுனனை அவர் அருகில் இருக்க விடக்கூடாது.போரை வேறு திசைக்கு மாற்றி அர்ச்சுனனை அங்கு இழுக்க வேண்டும் எனத் திட்டம் தீட்டினர் கௌரவர்கள்.திரிகர்த்த வேந்தனாகிய சுசர்மனும் அவனது சகோதரர்கள் சத்தியரதன்,சத்தியவர்மன்,சத்தியகர்மன் ஆகியோரும் தென்திசையிலிருந்து அர்ச்சுனனுக்கு சவால் விட்டனர்.அர்ச்சுனன் பாஞ்சால நாட்டு மன்னன் துருபதனின் சகோதரன் சத்யஜித்திடம் தருமரை பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு திரிகர்த்த மன்னனையும் அவருடைய சகோதரர்களையும் எதிர்த்துச் சென்றான்.

மும்மரமாக நடைபெற்ற போரில் கண்ணனின் திறமையால் அர்ச்சுனன் தேர் எல்லா இடங்களிலும் சுழன்றது.பகைவர்களும் அவனுடன் 'வெற்றி அல்லது வீரமரணம்' என்று போரிட்டனர்.திரிகர்த்தவேந்தனுக்குத் துணையாக அவனுடன் அவன் சகோதரர்களையும் தவிர்த்து பல்லாயிரக்கணக்கான வீரர்களும் சேர்ந்து போரிட்டனர்.அர்ச்சுனன் வாயுவாஸ்திரத்தை விடுத்து அனைவரையும் வீழ்த்தினான்.சுசர்மன் மட்டும் தப்பினான்.

தென்திசைப்போரை முடித்துக் கொண்டு பார்த்திபன் தருமரைக் காக்கும் பொருட்டுத் துரோணரை எதிர்த்தான்.ஆனால் துரோணரோ தருமரை உயிருடன் பிடிப்பதில் குறியாய் இருந்தார்.அன்றைய போரில் துரோணரின் திறைமையும் அனைத்துப்பேரையும் கவர்ந்தது.துரோணரை முறியடிக்க திருஷ்டத்துய்மன் முயன்றான்.தனது மரணம் இவனால்தான் என்பதை அறிந்த துரோணர் அவனைத் தவிர்க்கப் பார்த்தார்.அப்போது துரியோதனனின் தம்பியருள் ஒருவனான் துர்முகன் திருஷ்டத்துய்மனைத் தாக்கி போரிட்டான்.

அதே நேரத்தில் சத்யஜித் தன் திறமையைக் காட்டி தருமரைக் காக்க முற்பட்டான்.அவனுக்கும், துரோணருக்கும் நடந்த போர் தீவிரமாய் இருந்தது.துரோணர் மீது பல அம்புகளைச் செலுத்தினான் அவன்.அதனால் கோபமுற்ற துரோணர் விட்ட அம்பு ஒன்று அவன் தலையைக் கொய்தது.சத்யஜித்தின் மரணம் கண்ட விராடனின் தம்பி சதானீகன் துரோணரை எதிர்க்க..அவனையும் அவர் கொன்றார்.

துரோணர் தருமரை சிறைப்பிடித்து விடுவாரோ என்னும்பயம் ஏற்பட..பீமன் அங்கு வந்தான்.அவன் மீது பல யானைகளை ஏவினான் துரியோதனன்.அவைகளை பந்தாடினான் பீமன்.அபிமன்யூவும்..பாண்டவர்களின் குமாரர்களும் கௌரவர் படையை எதிர்த்து போராடினர்.

அப்போது ப்ராக்ஜோதிஜ மன்னனான பகதத்தன் சுப்ரதீபம் என்னும் யானையில் வந்து பீமனுடன் போரிட்டான்.அந்த யானை பீமனின் தேரை தகர்த்தது.பின் பீமனை தன் துதிக்கையால் பற்றி தூக்கி எறிய முற்பட்டது.பீமன் அதன் பிடியிலிருந்து தப்பி..அதன் மர்மஸ்தானத்தை தாக்கினான்.அந்த வேதனையிலும் அது பீமனை மிதித்துத் தள்ளப் பார்த்தது.ஆயினும் பீமன் அதனிடமிருந்து தப்பினான்.பின் அந்த யானை அபிமன்யூவின் தேரைத் தூள் தூளாக்கியது.சாத்யகியின் தேரும் அதே நிலையை எட்டியது.யானையின் அட்டகாசத்தை அறிந்த அர்ச்சுனன் விரைந்து வந்தான்..அதனைக் கொல்ல.

அர்ச்சுனன் பகதத்துடன் கடும் போர் புரிந்தான்.அப்போது பீமன் அந்த யானையின் மீது சிங்கம் போல பாய்ந்தான்.அப்போது அர்ச்சுனன் ஒரு அம்பை எய்த ..அது யானையின் கவசத்தைப் பிளந்து மார்பில் ஊடுருவியது.யானை வீழ்ந்து மாண்டது.பின் அர்ச்சுனன் செலுத்திய ஓர் அம்பு மாவீரன் பகதத்தனைக் கொன்று வீழ்த்தியது.

பின்னர் அர்ச்சுனன் திருதிராட்டிர மன்னனின் மைத்துனர்களான அசலன்,விகுஷன் ஆகியோரைக் கொன்றான்.சகோதரர்களின் மரணத்தை அறிந்த சகுனி மாயையால் இருள் பரவச் செய்தான்.அர்ச்சுனன் ஒளிமய கணை ஒன்றால் அந்த இருளைப் போக்கினான்.சகுனி பயந்து வேறிடத்திற்கு நகர்ந்தான்.தருமரை..பிடித்துவிடலாம் என்ற துரோணரின் கனவு தகர்ந்தது.கௌரவர்கள் கலங்க..பாண்டவர்கள் மகிழ அன்றைய போர் முடிவுக்கு வந்தது.

அன்றைய போர் கண்டு சினம் கொண்ட துரியோதனன்..துரோணரிடம் சென்று கடுமையாகப் பேசினான்.'தருமரைப் பிடிக்கும் வாய்ப்பை தவற விட்டீர்கள்.வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டீர்.நீர் சொல்வது ஒன்று..செய்வது ஒன்று'என்றான்.

இதனால் துரோணர் கோபம் அடைந்து'துரியோதனா..உனக்கு பலமுறை சொல்லியுள்ளேன்.அர்ச்சுனனைப் போரில் வெல்ல முடியாது.போர்க்களத்தில் அவன் எப்படி தருமரைப் பாதுகாத்தான் என்று பார்த்தாயா?எப்படியும் நாளை நான் உன்னத போர் முறை ஒன்றைக் கையாளப் போகிறேன்.அர்ச்சுனனை நீ எப்படியாவது வெளியே கொண்டு செல்' என்றார்.

துரோணரின் பேச்சில் நம்பிக்கை வர துரியோதனன் சென்றான்.

Tuesday, October 6, 2009

67-பதினொன்றாம் நாள் போர்

துரோண பருவம்

பத்தாம் நாள் போர் கௌரவர்களுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.பீஷ்மர் வீழ்ச்சிக்குப் பின் யார் தலைமை ஏற்று போர் தொடர்வது என்ற சிந்தனை எழுந்தது.துரோணர் தளபதியாக
நியமிக்கப்பட்டார்.அவரிடம்..துரியோதனன்'எப்படியாவது தருமரை உயிருடன் பிடித்து என்னிடம் ஒப்படையுங்கள்'என வேண்டினான்.

தருமரை உயிருடன் பிடித்து விட்டால்..அவரை மீண்டும் சூதாட வைத்து..தோற்கடித்து..ஆயுட்காலம் முழுதும் வனவாசம் என்று அனுப்பி விடலாம் என்று திட்டமிட்டான் துரியோதனன்.

இந்த் செய்தி ஒற்றர்கள் மூலம் பாண்டவர்களை எட்டியது.அதனால்..தருமருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.துரோணர் சகட வியூகம் வகுத்தார்..பாண்டவர்கள் கிரௌஞ்ச வியூகம் வகுத்தனர்.

அன்றைய போரில் அபிமன்யூவின் கை ஓங்கியது.அவனுக்குத் துணையாக கடோத்கஜன் இறங்கினான்.துரியோதனின் லட்சியத்தை நிறைவேற்ற துரோணர் தருமர் மீதே குறியாக இருந்தார்.இதை உணர்ந்து அர்ச்சுனன் தருமர் அருகே வந்தான்.பீமனும் தருமரை காப்பதில் ஈடுபட்டான்.

அபிமன்யூவின் போர்த்திறன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.அவன் துரியோதனனின் மகன் லட்சுமணனைத் தாக்கி அவனைப் பிடித்துத் தேர்ச் சக்கரத்தில் கட்டிக் கொண்டு திரும்பினான்.இதனை அறிந்த சல்லியன் அபிமன்யூவைத் தடுத்து நிறுத்திப் போரிட்டான்.சல்லியனின் வில்லையும் தேரையும் முறித்தான் அபிமன்யூ.

அர்ச்சுனனின் தாக்குதலைத் துரோணரால் சமாளிக்க முடியவில்லை.கௌரவர்கள் நடுங்க ஆரம்பித்தனர்.துரோணரும் சோர்ந்து போனார்.இந்நிலையில் சூரியன் மறைந்தான்.போர் நின்றது.

Monday, October 5, 2009

66-பத்தாம் நாள் போரும்..பீஷ்மர் வீழ்ச்சியும்

பீஷ்மர் வீழ்ச்சி அடையும் நாள் வந்தது.கௌரவர்கள் அசுர வியூகத்தை அமைக்க...பாண்டவர்கள் தேவ வியூகத்தை அமைத்தனர்.சிகண்டியை முன் நிறுத்திப் பாண்டவர்களின் படை முன்னேறியது.இதுவரை இல்லாத பாதுகாப்பு இன்று பீஷ்மருக்கு இருந்தது.சிகண்டியின் அம்புகள் பீஷ்மர் மார்பில் பாய்ந்தன.விரதப்படி பீஷ்மர் சிகண்டியைத் தாக்கவில்லை.ஆயுதம் ஏதும் கையில் இல்லை.அர்ச்சுனன் அம்பு செலுத்தி..பீஷ்மரின் கவசத்தைப் பிளந்தான்.வில்லை முறித்தான்.அவரின் வேலாயுதத்தையும்,கதாயுதத்தையும் தகர்த்தான்.அர்ச்சுனனின் அம்புகள் பீஷ்மரின் உடலெங்கும் தைத்தன.

தேரிலிருந்து பீஷ்மர் சாய்ந்த போது தேவர்கள் மலர் மழை பொழிந்தனர்.இரு தரப்பாரும் பீஷ்மரின் வீழ்ச்சிக் கண்டு திகைத்தனர்.கீழே வீழ்ந்தவரின் உடல் தரையில் படவில்லை.உடம்பில் தைத்திருந்த அம்புகள்..அவர் உடல் பூமியில் படாது தடுத்தன.அவரைக் கௌரவிக்க..கங்காதேவி..பல ரிஷிகளை அனுப்பினாள்.அன்னப் பறவை வடிவம் தாங்கி அவர்கள் பீஷ்மரிடம் வந்து பணிந்து சென்றனர்.அவர் உத்தராயண புண்ணிய காலம் வரை உயிருடன் இருக்கத் தீர்மானித்திருந்தார்.இப்படி மரணத்தைத் தள்ளிப்போடும் வரத்தை தந்தை சாந்தனுவிடமிருந்து பெற்றிருந்தார்.

அவர் உடல் பூமியில் படவில்லையாயினும்..தலை தொங்கி இருந்தது.அருகில் இருந்தோர் தலயணைக் கொணர்ந்தனர்.ஆனால் அவற்றை விரும்பாத பீஷ்மர் அர்ச்சுனனைப் பார்த்தார்.அர்ச்சுனன் மூன்று அம்புகளை வில்லில் பொருத்தி வானத்தில் செலுத்தினான்.அவை..நுனிப்பகுதி மேலாகவும்,அடிப்பகுதி தரையில் பொருந்துமாறும் அமைந்து பீஷ்மரின் தலையைத் தாங்கின.பீஷ்மர் புன்னகை பூத்தார்.

பீஷ்மருக்கு தாகம் எடுத்தது.பல மன்னர்கள் தண்ணீர் கொணர்ந்தனர்.பீஷ்மர் அர்ச்சுனனை நோக்கினார்.குறிப்புணர்ந்த அர்ச்சுனன்..அம்பு ஒன்றை பூமியில் செலுத்தினான்.கங்கை மேலே பீரிட்டு வந்தது.கங்கை மைந்தன் அந்த நீரைப் பருகினார்.

பீஷ்மர்..பின் துரியோதனனைப் பார்த்து..'அர்ச்சுனனின் ஆற்றலைப் பார்த்தாயா?தெய்வ பலம் பெற்றவன் இவன்.இவனிடம் சிவனின் பாசுபதக் கணையும் உள்ளது.விஷ்ணுவின் நாராயணக் கணையும் உள்ளது.அது மட்டுமின்றி..அனுமனின் ஆற்றலைப் பெற்ற பீமனின் வல்லமையும் உனக்குத் தெரியும்.இப்போதேனும் நீ சமாதானமாய் போய் விடு.அவர்கள் நாட்டை அவர்களிடம் ஒப்படைத்து விடு.இப்போர் என்னுடன் முடியட்டும்' என்றார்.அவரின் அறிவுரையை அவன் ஏற்கவில்லை.

எல்லோரும் பிரிந்து சென்றதும்..நள்ளிரவில் கர்ணன் ஓடிவந்து அவர் பாதங்களில் வீழ்ந்து அழுதான்.;'ராதையின் மைந்தனான நான்..சில சமயங்களில் தங்களுக்கு மரியாதைத் தர த்தவறிவிட்டேன்.என்னை மன்னித்து விடுங்கள்' என்றான்.

அது கேட்ட பீஷ்மர்..'கர்ணா..நீ ராதையின் மகன் அல்ல.குந்தியின் மைந்தன்.சூரிய குமரன்.இதை வியாசர் எனக்குக் கூறினார்.காரணமின்றி நீ பாண்டவர்களை பகைத்ததால்..நானும் உன்னிடம் கோபமாக நடந்துக் கொண்டேன்.பாண்டவர்கள் உன் தம்பியர்.நீ அவர்களுடன் சேர்ந்து தருமத்தைப் போற்று' என்றார்.

கர்ணன் கொள்கையை மாற்றிக் கொள்ளவில்லை.'துரியோதனனுக்கு எதிராகப் போர் புரிவதை எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை.மன்னியுங்கள்' என்றான்.

கர்ணா..அறம் வெல்லும்.நீ விரும்பியப்படியே செய் என்று கூறிவிட்டு நித்திரையில் ஆழ்ந்தார் பிதாமகன்.

Thursday, October 1, 2009

65-ஒன்பதாம் நாள் போர்

பீஷ்மர் சர்வதோபத்ர வியூகம் வகுத்தார்.பாண்டவர்களும் அதற்கேற்ப ஒரு வியூகம் வகுத்தனர்.பார்த்தனின் சண்டைமுன் கௌரவர் படை பரிதாபமாக காட்சி அளித்தது.அபிமன்யூவும் போரில் பல வீரர்களைக் கொன்றான்.திரௌபதியின் புதல்வர்கள் ஐவரும் அபிமன்யூவுடன் சேர்ந்து அவனுக்கு துணை நின்றனர்.அனைவரும் அலம்புசன் என்பவனுடன் போர் புரிந்தனர்.அவனோ மாயப்போர் புரிந்தான்.எங்கும் இருள் சூழும்படி அம்பு மழை பொழிந்தான்.அபிமன்யூ மாற்றுப் படையால் மாயையை விலக்கி அலம்புசனைத் தாக்கினான்.அலம்புசன் போர்க்களம் விட்டு ஓடினான்.

துரோணருக்கும்..அர்ச்சுனனுக்கும் போர் மூண்டது.குருவும் சீடன் என எண்ணவில்லை..சீடனும் குரு என எண்ணவில்லை.பின்..பாண்டவர்கள் ஒன்று கூடிப் பாட்டனாராகிய பீஷ்மரை எதிர்த்தனர்.ஆயினும் பீஷ்மரை அசைக்க முடியவில்லை.

பாண்டவர்கள் முயற்சி..தளர்ச்சி ஆனதை அறிந்து கண்ணன் சக்கரத்தை கையில் ஏந்தினார்.பீஷ்மரை வீழ்த்த எண்ணம் கொண்டார்.தம்மை நோக்கி பரந்தாமன் வருவதுக் கண்டு பீஷ்மர் 'கண்ணா..என் உடலிலிருந்து உயிரைப் பிரித்து அப்புறப்படுத்த வேண்டுகிறேன்.'என வேண்டிக் கொண்டார்.

பரமனைத் தொடர்ந்து ஓடிய பார்த்தன்..'போர்க்களத்தில் ஆயுதம் ஏந்த மாட்டேன்..என்ற கண்ணனின் பிரதிக்ஞையை நினைவூட்டினான்.

சூரியன் சாய..அன்றைய போர் முடிந்தது.

அன்று இரவு பாண்டவர்கள் கண்ணனை வணங்கி..இதுவரை நடைபெற்ற போரில் பீஷ்மரை வெல்ல முடியவில்லையே என்ற கவலையை வெளியிட்டனர்.நீண்ட யோசனைக்குப் பின்..அவரை வெல்வது குறித்து அவரையேக் கேட்க முடிவெடுத்தனர்.பின் பீஷ்மர் இருக்குமிடம் சென்று வணங்கினர்.பீஷ்மர் அனைவரையும் அன்புடன் தழுவிக் கொண்டார்.பின் அர்ச்சுனன்'பிதாமகரே! போர் தொடக்கத்திற்கு முன் "உங்களுக்கு வெற்றி கிடைக்கட்டும்" என வாழ்த்தினீர்கள்.தங்களை வென்றால்தானே எங்களுக்கு வெற்றி?தங்களைத் தோற்கடிப்பது எப்படி?' என்றான்.

அதற்கு பீஷ்மர்..'நான் போரில் புறமுதுகு காட்டி ஓடுபவரோடோ,ஆயுதம் இல்லாதவரோடோ,பெண்ணோடோ,பேடியினிகளிடனோடோ போரிட மாட்டேன்.பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய சிகண்டியை முன் நிறுத்தி நாளை என்னுடன் போரிடு.சிகண்டியின் முன்..என் ஆயுத பலனன்றி போய்விடும்.அப்போது நீ என்னை எதிர்த்துப் போர் செய்.வெற்றி கிட்டும் 'என்றார்.

கங்கை மைந்தன் கூற்றைக் கேட்டு..பாண்டவர்கள் அமைதியாகப் பாசறைக்குத் திரும்பினர்.

அடுத்த பதிவு பீஷ்மர் வீழ்ச்சி

Monday, September 28, 2009

64-ஆறாம் .ஏழாம், எட்டாம் ..நாட்கள் போர்

ஆறாம் நாள் போரில் திருஷ்டத்துய்மன் மகர வியூகம் அமைத்தான்.பீஷ்மர் கிரௌஞ்ச வியூகம் அமைத்தார்.ஒருவருடன் ஒருவர் போர் புரிந்தனர்.பீமன் அன்று சிறப்பாக போரிட்டான்.பகைவர்களக் கொன்று
குவித்தான்.துரியோதனன் பீமனுடன் போர் புரிய நெருங்கினான்.அதைக் கண்ட பீமன் 'துரியோதனா..நீ இங்குத்தான் இருக்கிறாயா?உன்னைப் போர்க் களம் எங்கும் தேடி அலைந்தேன்..இன்றுடன் உன் வாழ்வு முடிந்தது' என்று கூறி அவன் தேர்க் கொடியை அறுத்துத் தள்ளினான்.பெரும் போருக்குப் பின் துரியோதனன் சோர்ந்து வீழ்ந்தான்.சூரியன் மறைய அன்றைய போர் நின்றது.

ஏழாம் நாள் போர்
ஆறாம் நாள் போரில் மயங்கி விழுந்த துரியோதனன் மயக்கம் தெளிந்து பீஷ்மரிடம் முறையிட்டான்.'எனது அச்சமும்..சோர்வும் என்னைவிட்டு அகவில்லை.உங்கள் உதவி இல்லையேல் எப்படி வெற்றி பெறுவேன்'எனக் கெஞ்சிக் கேட்டான்.பீஷ்மர்..தன்னால் முடிந்த அளவிற்கு போரிடுவதாகக் கூறி பாண்டவர்களை எதிர்த்தார்.துரியோதனன்..உடலெங்கும் புண்பட்டு வருந்தினான்.

துரோணருக்கும் விராடன் மைந்தனுக்கும் நடந்த போரில் அம் மைந்தன் மாண்டான்.ஒரு புறம் நகுலனும்,சகாதேவனும் சேர்ந்து சல்லியனை எதிர்த்து போரிட்டனர்.அவன் மயக்கம் அடைந்தான்.பழைய பகையைத் தீர்த்துக் கொள்ளக் கருதிய சிகண்டி பீஷ்மருடன் போரிட்டான்.கடுமையாய் இருந்த போர் ..சூரியன் மறைய முடிவுக்கு வந்தது.அன்று இரவு கிருஷ்ணருடைய வேணுகானம் புண்பட்ட வீரர்க்கு இதமாக இருந்தது.

எட்டாம் நாள் போர்
பீஷ்மர் மகர வியூகம் அமைத்தார்.அது கடல் போல் காட்சி அளித்தது.நாற்சந்தி போன்ற சிருங்கடக வியூகத்தை திருஷ்டத்துய்மன் வகுத்தான்.இது வலுவானது.பகைவரின் வியூகம் எதுவானாலும் அதைச் சிதறச் செய்யும் ஆற்றல் உடையது.பீமன் துரியோதனன் தம்பியர் எண்மரைக் கொன்றான்.அது கண்டு துரியோதனனும்,திருதிராட்டிரனும் வருந்தினர்.கௌரவர்கள் படை தோல்வி மேல் தோல்வி கண்டது.

அன்று நடந்த போரில் பீமன் யனைப் படையை அழித்தான்.கடோத்கஜன் வீரர்கள் பலரைக் கொன்றான்.துரியோதனனை எதிர்த்து கடும் போர் செய்து,,அவன் தேரை அழித்தான்.அவன் மார்பில் அம்புகளைச் செலுத்தினான்.ரத்தம் பீரிட்டது.ஆயினும் துரியோதனன் கலங்காது நின்றான்.கடோத்கஜன் போர் வலிமைக் கண்டு துரோணர் முதலானோர் கடோத்கஜனைத் தாக்கினர்.பீமன் தன் மகனுக்கு உதவிட விரைந்தான்.பீமன் மேலும் துரியோதனன் தம்பியர் எண்மரைக் கொன்றான்.இதுவரை..பீமன் துரியோதனன் தம்பியர் இருபத்தினான்கு பேரைக் கொன்றிருந்தான்.இரவு வர அன்றைய போர் நின்றது.

அடுத்த பதிவு ஒன்பதாம் நாள் போர்.

Friday, September 25, 2009

63-நான்காம்,ஐந்தாம் நாள் போர்

நான்காம் நாள் பீஷ்மர் வியாளம் என்ற வியூகத்தை அமைத்தார்.ஐந்து பனைகளை அடையாளமாக உடைய கொடியுடன் போர் புரிந்தார்.அனுமானைச் சின்னமாகக் கொண்ட கொடியுடன் ..அவ்வனுமானின் பேராற்றலுடன் போரிட்டானர்ச்சுனன்.அபிமன்யு போர் முனைக்கு வந்தான்.அவனைப் பூரிசிரவசு,அஸ்வத்தாமா,சல்லியன் ஆகியோர் எதிர்த்துப் போர் புரிந்தனர்.ஒரு புறம் பீமன்..துரியோதனின் தம்பியர் எண்மரைக் கொன்றான்.தன் கதையால் யானைகளை வீழ்த்தினான்.பீமனின் மைந்தன் கடோத்கஜன் வெற்றி மேல் வெற்றி பெற்றான்.துரியோதனின் வீரர்கள் சோர்ந்து போயினர்.பலர் மாண்டனர்.

தம் மக்கள் மாண்டது குறித்து திருதிராட்டினன் மனம் கலங்கியது.

நான்காம் நாள் போர் நின்றது.பீஷ்மரைக் காணச் சென்ற துரியோதனன்'நீங்களும்,துரோணரும்,கிருபரும் இருந்தும் என் தம்பியர் மாண்டனரே!பல வீரர்கள் உயிர் இழந்தனரே1பாண்டவர்கள் வெற்றியின் ரகசியம் என்ன?'என்றான்.

'இது குறித்து பலமுறை உன்னிடம் சொல்லி இருக்கிறேன்.பாண்டவர்களுடன் சமாதானமாகப் போவதே நன்று என வற்புறுத்தி இருக்கிறேன்.எங்கு கண்ணன் உள்ளாரோ..அங்கு தர்மம் இருக்கிறது. எங்கு தர்மம் இருக்கிறதோ அங்கு வெற்றி இருக்கிறது.இப்போதும் காலம் கடந்து விடவில்லை.போரைக் கைவிட்டு அவர்களுடன் இணை.இல்லையேல் மீளாத்துயரில் ஆழ்வாய்'என்றார் பீஷ்மர்.

துரியோதனன் இணங்கினான் இல்லை.

ஐந்தாம் நாள் போர்

பீஷ்மர் மகர வியூகம் வகுத்தார்.வடிவத்தில் இது முதலைப்போல் இருக்கும்.திருஷ்டத்துய்மன் சியேன வியூகம் அமைத்தான்.இது பருந்து போன்றது.பல ஆயிரம் பேர் மாண்டனர்.துரியோதனன் துரோணரைப் பார்த்து' குருவே நீர் பாண்டவர்களைக் கொல்லும் செயலில் ஈடுபடுங்கள்.உம்மையும்,பீஷ்மரையுமே நான் நம்பியுள்ளேன்' என்றான்.

அதற்கு துரோணர் 'பாண்டவரிடம் பகை வேண்டாம்..என ஏற்கனவே பலமுறை சொல்லியும் நீ கேட்கவில்லை.ஆயினும் என்னால் இயன்ற அளவு போரிடுவேன்' என்றார்.

சாத்யகியும்,பீமனும் துரோணருடன் சண்டையிட..அர்ச்சுனன் அஸ்வத்தாமாவுடன் போரிட்டான்.அபிமன்யூ துரியோதனனின் மகன் லட்சுமணனுடன் போரிட்டான்.கிருபர் தன் தேரை பாதுகாப்பாக வேறிடம் கொண்டு சென்றார்.

சூரியன் மறைய அன்றைய போர் முடிந்தது.

ஆறாம் நாள் போர் அடுத்த பதிவில்..

Wednesday, September 23, 2009

62-மூன்றாம் நாள் போர்

இரண்டாம் நாள் போரில் கௌரவர் கை தாழ்ந்திருந்தது.அதனால் மூன்றாம் நாள் போரை மாற்றி அமைக்க பீஷ்மர் விரும்பினார்.படைகளை கருட வியூகமாக அமைத்தார்.அதன் தலைப்பக்கம் பீஷ்மர்,துரோணர்,கிருபர்,அஸ்வத்தாமா,சல்லியன்,பகதத்தன் ஆகியோர் பொருத்தமான இடத்தில் நின்றனர்.துரியோதனன்..அவ்வியூகத்தின் பின் புறத்தில் நின்றான்.அதை முறியடிக்கும் விதத்தில் பாண்டவர்களின் தளபதியான திருஷ்டத்துய்மன் தன் படைகளை பாதி சக்கர வியூகமாக அமைத்தான்.அவன் வலப்பக்கமாக நின்றான்.அதன் இரண்டு பக்கங்களிலும் பீமனும்,அர்ச்சுனனும் நின்றனர்.தர்மர் இடையில் நின்றார்.மற்றவர்கள் பொருத்தமான இடங்களில் நிறுத்தப்பட்டனர்.

உச்சக்கட்டம் அடைந்தது அன்றைய போர்.அர்ச்சுனன் அம்பு மழை பொழிந்து கௌரவர் படையை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தான்.பீமன் ,துரியோதனன் மார்பில் அம்பை செலுத்தினான்.ரத்தம் பீரிட துரியோதனன் பீஷ்மரிடம் சென்று 'உண்மையில் நீங்கள் முழு பலத்தையும் காட்டி போரிடவில்லை.இது நியாயமா? பாண்டவரிடம் நீங்கள் கருணை காட்டினால்..என்னிடம் முதலிலேயே தெரிவித்திருக்கலாம்' என்றான்.

அது கேட்டு நகைத்த பீஷ்மர்..'உனக்கு நான் பலமுறை சொல்லியுள்ளேன்.பாண்டவர்களை யாரும் கொல்ல முடியாது.என் ஆற்றல் முழுதும்..ஆயினும் உனக்கே தருவேன்..'என்று கூறி போர்க் களம் சென்று சங்கநாதம் செய்தார்.கௌரவர் படை உற்சாகம் அடைந்தது.பாண்டவர் படையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.அர்ச்சுனன் உள்பட அனைவரும்..தளர்ந்து காணப்பட்டனர்.

கண்ணன் அர்ச்சுனனிடம்' அர்ச்சுனா ..என்னவாயிற்று உனக்கு? பீஷ்மரையும்,துரோணரையும் வெல்வேன் என்றாயே..அதை மறந்து விட்டாயா?'என்றார்.

உற்சாகம் அடைந்த அர்ச்சுனன் தனது ஒரு அம்பால்..பீஷ்மரின் வில்லை முறித்தான்.பீஷ்மர் வேறு அம்பை எடுத்தார்.எட்டு திசைகளிலும் அம்புகளைச் செலுத்தி மறைத்தார்.பல அம்புகள் அர்ச்சுனன் மேல் பாய்ந்தன.ஆனால்..அர்ச்சுனனின் திறமை இயல்பாய் இல்லாததை கண்ணன் உணர்ந்தார்.

பீஷ்மர் மீது கொண்ட அன்பினால்..அப்படி இருப்பதாய் எண்ணிய கண்ணன்..தானே பீஷ்மரைத் தாக்க எண்ணி..தேரை நிறுத்தி..ஆயுதம் ஏந்தி அவரை நோக்கி போனார்.சுதர்சன சக்கரத்தைக் கையில் ஏந்தினார்.இதைக் கண்ட பீஷ்மர் ஆனந்தம் அடைந்தார்.''கண்ணன் கையால் மரணமா?அதை வரவேற்கிறேன்' என்று தூய சிந்தனை அடைந்தார்.

அர்ச்சுனன் ..கண்ணனின் செயல் கண்டு மனம் பதறி...ஓடோடி கண்ணனிடம் சென்று..காலைப் பிடித்துக் கொண்டு..'நீங்கள் ஏன் ஆயுதம் ஏந்த வேண்டும்.நான் போரிடேன் என்ற உங்கள் சபதம் என்னவாயிற்று? என்னை உற்சாகப் படுத்த இச் செயலா?அப்படியாயின் இதோ புறப்பட்டேன்..சினம் வேண்டாம்'என வேண்டினான்.

கண்ணனின் ஆவேசம் தணிந்தது.பின் அவனின் காண்டீபம் இடியென முழங்கியது.யானைகள் சாய்ந்தன..குதிரைகள் வீழ்ந்தன..காலாட் படையினர் சரிந்தனர்.

மாலை நெருங்க..அன்றைய போர் முடிவுக்கு வந்தது.

நான்காம் நாள் போர்..அடுத்த பதிவில்..

Sunday, September 20, 2009

61 - முதலாம்..இரண்டாம் நாள் போர்

விதிமுறைகளுக்கு உட்பட்டுப் போர் தொடங்கும் நேரம்..தருமர்..தன் போர்க்கருவிகளைக் கீழே வைத்தார்.போருக்குரிய கவசங்களை நீக்கினார்.எதிரணியிலிருந்த பீஷ்மரை நோக்கிப் போனார்.இதைப் பார்த்தவர்கள் வியந்தனர்.

பீஷ்மர்..முதலியவர்களிடம் ஆசி பெறவே தருமர் செல்வதாக கண்ணன் நினைத்தார்.துரியோதனன் பக்கம் இருந்தவர்கள்..அவர் சரணடைய வருவதாக எண்ணினர்.

ஆனால் தருமர்..பீஷ்மரிடம் சென்று அவரை வணங்கி அவருடன் போரிட அனுமதி வேண்டினார்.அதுபோலவே.துரோணர்,கிருபர் ஆகியோருடனும் அனுமதி வேண்டிப் பெற்றார்.பிறகு தமது இடம் சென்று..போர்க்கோலம் பூண்டார்..

முதலாம் நாள் போர்

முதலாம் நாள் போர் சங்குல யுத்தம் என அழைக்கப் படுகிறது.ஓர் ஒழுங்குக்கு உட்படாமல் முறை கெடப் போரிடல் 'சங்குல யுத்தம்' ஆகும்.இருதிறத்துப் படைகளும் மோதின.வீரர்கள் சிங்கம் போல கர்ஜித்தனர்.யானைப்படையும்..குதிரைப்படையும் மூர்க்கத்தனமாக மோதிக் கொண்டன.அதனால் எழுந்த தூசு விண்ணை மறைத்தது.வீரர்கள் ஈட்டி,கத்தி,கதை,வளைதடி,சக்கரம் முதலியக் கொண்டு போரிட்டனர்.பீஷ்மர் வீராவசத்தோடு போர் புரிந்து..எண்ணற்ற வீரர்களைக் கொன்றார்.சுவேதனுடன் அவர் போர் பயங்கரமாய் இருந்தது.பீஷ்மரால் அவன் கொல்லப்பட்டான்.அவன் மரணம் பாண்டவ வீரர்களை நடுங்க வைத்தது.கௌரவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

இரண்டாம் நாள் போர்

முதலாம் நாள் போரில் உத்தரனும்..சுவேதனும் கொல்லப்பட்டதால்..அதை மனதில் கொண்டு இரண்டாம் நாள் போர் படைகள் திருத்தி அமைக்கப் பட்டன.கிரௌஞ்சப் பறவை வடிவில் படைகளை அமைப்பதால்..அதற்கு கிரௌஞ்ச வியூகம் என்று பெயர்.துருபத மன்னன் அதற்குத் தலையாக நின்றான்.தருமர் பின் புறத்தில் நின்றார்.திருஷ்டத்துய்மனும்,பீமனும் சிறகுகளாக இருந்தனர்.

அந்த வியூகத்தை..எளிதில் உடைத்து உள்ளே சென்று போரிட்டார் பீஷ்மர்.கண்ணபிரான் தேரை ஓட்ட..அர்ச்சுனன்..பாட்டனாரைப் பயங்கரமாக தாக்கினான்.பீஷ்மர் ..அர்ச்சுனன் மீது எழுபத்தேழு அம்புகளை செலுத்தினார்.மற்றொரு புறம்..துரோணரும்,திருஷ்டத்துய்மனும் கடும் போர் புரிந்தனர்.திருஷ்டத்த்ய்மனுக்கு..உதவியாக பீமன் வந்தான்,அவனைத் தடுத்து நிறுத்த துரியோதனன்..கலிங்கப் படையை ஏவினான்.ஆனால் பீமன் ..அப்படையைக் கதிகலங்க வைத்தான்.அப்படைக்கு உதவ பீஷ்மர் வந்தார்.அவரை அபிமன்யூவும்..சாத்யகியும் சேர்ந்து தாக்கினார்.அவர்களது தாக்குதலால்..பீஷ்மரின் தேர்க் குதிரைகள் நிலை குலைந்து தாறுமாறாக ஓடின.இதனால்..அர்ச்சுனனை..எதிர்ப்பார் இல்லை.அவன்..விருப்பம் போல கௌரவ வீரர்களைக் கொன்று குவித்தான்.அவன் யாராலும் வெல்ல முடியாதவனாகக் காட்சியளித்தான்.அப்போது சூரியன் மறைய..அன்றைய போர் முடிவுற்றது.

Sunday, September 13, 2009

60 - கண்ணனின் அறவுரை ( பகவத்கீதையின் ஒரு பகுதி)

அர்ச்சுனன் மனக் கலக்கம் கண்டு கண்ணன் கூறலானார்.
'அர்ச்சுனா..வருந்தாதே..தகுதி இல்லாதவரிடம் இரக்கம் காட்டாதே! ஞானிகள்..இறந்தவர்களுக்காகவோ, இருப்பவர்களுக்காகவோ துயரம் கொள்வதில்லை.இங்கு உள்ளவர்களும் உடல் அழிந்தாலும் இருப்பார்கள்.அவர்கள் உயிர் அழிவதில்லை.இந்தப்பிறவியில் உயிருடன் கூடிய உடம்புக்கு இருக்கும் இளமை,அழகு,முதுமை மீண்டும் மறுபிறப்பிலும் ஏற்படும்.இப்படி தோன்றுவதும்..மறைவதும் உயிர்களின் இயல்பு என்பதை உணர்.இதுவே உலக இயற்கை என்ற தெளிவு பெற்றால்..இன்ப துன்பங்கள் யாரையும் நெருங்காது.இதை உணர்ந்தவர் எதற்கும் கலங்குவதில்லை.

அர்ச்சுனா..உடல் அழிவுக்கு கலங்காதே..உயிர் அழியாது.தனது புண்ணிய பாவ செயல்களுக்கு ஏற்ப மறுபிறவி அடையும்.ஆத்மா கொல்வதும் இல்லை...கொல்லப்படுவதும் இல்லை.ஆகவே கலங்காது..எழுந்து போர் செய்.கடமையை நிறைவேற்று.

ஆத்மாவிற்கு பிறப்பும் இல்லை..இறப்பும் இல்லை.இது எப்போதோ இல்லாதிருந்து பிறகு திடீரென பிறந்ததன்று.இது என்றும் இறவாதது.என்றும் பிறவாதது.அதாவது உடல் கொல்லப்பட்டாலும்..உயிர் கொல்லப்படுவதில்லை.

நைந்து போன ஆடைகளை விடுத்து..புது ஆடைகளை உடுத்துவது போல் உயிர் நைந்து போன உடல்களை விட்டுப் பிரிந்து புதிய உடலைப் பெறுகிறது.எந்த போர்க்கருவியும் உயிரை வெட்டாது.உடலை எரிக்கும் தீ உயிரை எரிப்பதில்லை.வெட்டினாலும்,குத்தினாலும்,தரதர என இழுத்துப் போனாலும் உயிருக்கு ஒரு துன்பமும் இல்லை.ஆகவே மாளப்போகிறவர்களுக்காக நீ ஏன் அழுகிறாய்?அவர்கள் வினைப் பயனை அவர்கள் விதிப்படி அடைவர்.

பிறந்தவர் இறப்பதும்..இறந்தவர் பிறப்பதும் இயல்பு.அதற்காக ஏன் வருத்தம்.இவ்வுலக நியதியை யாராலும் மாற்ற இயலாது.ஆகவே நீ உன் கடமையை ஆற்று.

இந்த ஆன்மாவின் செயல் விந்தையானதுதான் எனினும் மாற்றமுடியா தன்மைத்து.எல்லார் உடம்பிலும் உள்ள ஆத்மாவை யாராலும் கொல்ல முடியாது.ஆகவே ..நீ யாருக்கும் வருந்த வேண்டாம்.தவிர்க்க இயலா போர் வந்து விட்டது.வீரர்களை வரவேற்க சொர்க்கவாசல் தயாராய் விட்டது.சிறந்த வீரர்கள் அங்கு செல்ல உன் கடமையைச் செய்.இது தர்மயுத்தம் என்பதை நினைவில் கொள்.இங்கு நீ தயக்கம் காட்டினால்..புகழை இழப்பாய்.அத்துடன் மட்டுமின்றி..அது உனக்கு பழியும் தரும்.

இரக்கத்தால் நீ போரிடவில்லை என பகைவர்கள் எண்ணமாட்டார்கள்.போரிட அஞ்சுகிறாய் என சிறுமைப்படுத்துவர்.உனக்கு அந்த இழுக்கு வரலாமா?இதைவிடப் பெருந்துன்பம் எதுவுமில்லை.வென்றால் இந்த மண்ணுலகம்..வீர மரணம் அடைந்தால் விண்ணுலகம்.இதனை மறக்காது துணிந்து போர் செய்..

வெற்றி..தோல்வி பற்றியோ..இன்ப துனபம் பற்றியோ..இலாப நஷ்டம் பற்றியோ கருதாமல் ஊக்கத்துடன் போர் செய்.பழி,பாவம் உன்னைச் சாராது.புகழும்,புண்ணியமும் உனக்குக் கிடைக்கும்' என கண்ணன் தமது உரையை முடித்தார்.

கண்ணனின் அறவுரைக் கேட்டதும்..பார்த்தனின் மனக்குழப்பம் தீர்ந்தது.அவன் கண்ணனை வணங்கி..'அச்சுதா..என் மயக்கம் ஒழிந்தது.என் சந்தேகங்கள் தீர்ந்தன.இனி உன் சொல் படி நடப்பேன்' எனக்கூறி போரிடத் தயாரானான்.

**** **** ****

இலட்சக்கணக்கான வீரர்கள் அழிய பாரதப்போர் தொடங்கும் முன் இரு சாராரும் சில விதிமுறைகளைப் பின்பற்ற ஒப்புக் கொண்டனர்.

அவை வருமாறு

போர் பகலில் மட்டுமே நடைபெறும்.
ஆயுதமின்றி இருப்போரிடம் போரிடக் கூடாது
புறமுதுகிடுவோரை தொடர்ந்து சென்று தாக்கக்கூடாது
இரு வீரர்கள் போரிடுகையில்..மூன்றாமவர் இடையே புகுந்து ஒருவரைத் தாக்கக் கூடாது
அடைக்கலம் அடைந்தவர்களைக் கொல்லக்கூடாது
யானைப் படையுடன் யானைப்படையும், தேர்ப் படையுடன் தேர்ப்படையும்,குதிரைப் படையுடன்..குதிரைப் படையும்,காலாட் படையுடன்..காலாட்படையும் போரிட வேண்டும்.

இப்படி ஒரு நியதியை ஏற்படுத்திக் கொண்ட போது..சில நேரங்களில் அதையும் மீறி போரிட நேர்ந்தது.

Sunday, September 6, 2009

59 - அர்ச்சுனனின் மனகலக்கம்

பீஷ்ம பருவம் (பீஷ்மரின் வீழ்ச்சியை உரைப்பது)

குருக்ஷேத்திரத்தில் இரு திறத்துப் படைகளும் அணி வகுத்து நின்றன.தனக்குச் சாரதியாக இருக்கும் கண்ணனை நோக்கி அர்ச்சுனன் 'பரந்தாமா! தேரை விரைவாகச் செலுத்து..என் எதிரில் போர் செய்வது யார் என்பதை தெரிந்து கொள்ள வெண்டும்.துரியோதனனுக்கு துணையாக வந்திருப்போரைக் காணவேண்டும்' என்றான்.

பார்த்தசாரதியும்..தேரினை கௌரவர் படைமுன் செலுத்தினார்.அப்போது பீஷ்மரையும்,துரோணரையும்,துரியோதனனையும்,அவன் தம்பியர்களையும்,நண்பர்களையும்,எண்ணற்ற வீரர்களையும் அர்ச்சுனன் கண்டான்.உள்ளம் கலங்கினான்.'பாட்டனார் பீஷ்மரையா கொல்லப் போகிறேன்..குரு துரோணாச்சாரியாரையா கொல்லப் போகிறேன்..துரியோதனன் முதலியோர் என் பெரியப்பா மகன்கள்..என் சகோதரர்கள் ..இவர்களையா கொல்ல வேண்டும்..இந்த இரக்கமற்ற பழியையையும்..பாவத்தையும் ஏற்கவா பிறந்தேன்?' என்றான்.

'கண்ணா..என் உடல் நடுங்குகிறது..உள்ளம் தளர்கிறது..என்னால் நிற்க முடியவில்லை..கால்கள் நடுங்குகின்றன..காண்டீபம் கை நழுவுகிறது.போரில் சுற்றத்தாரைக் கொன்று பழியுடன் வரும் நாட்டை நான் விரும்பவில்லை...உறவினரையா கொல்வது'

துரியோதனன் பாவிதான்..அவனைக் கொல்வதால் என்ன பயன்..சுற்றத்தைக் கொல்லும் பாதகத்தை என்னால் எண்ண முடியவில்லை.உறவினர்கள் பிணமாகக் கிடக்கும் போது..நாம் இன்பம் காண முடியுமா?என்னால் இந்த போரை ஏற்க முடியவில்லை.'

என்றெல்லாம் கூறியவாறு..கண்ணீர் மல்க ..தேர்த்தட்டில் உட்கார்ந்து விட்டான்..காண்டீபன்.

அர்ச்சுனனின் குழப்பத்தை உணர்ந்த கண்ணபிரான்..'அர்ச்சுனா..இந்த நேரத்திலா கலங்குவது? வீரர்க்கு இது அழகா..பேடியைப் போல நடந்துக் கொள்ளாதே!மனம் தளராதே! எழுந்து நில்' என்றார்.

அர்ச்சுனன்' பீஷ்மரையும்..துரோணரையும் எதிர்த்து எவ்வாறு போரிடுவேன்?அதைவிட பிச்சை எடுத்து வாழலாம்..இவர்களை எல்லாம் இழந்தபின்..ஏது வாழ்வு?அதனால் பெருமை இல்லை..சிறுமைதான்..
எனக்கு எது நன்மையை உண்டாக்கும்..உன்னை சரணடைந்தேன்..நல்வழி காட்ட வேண்டும்' என்றான்.

கண்ணன் அர்ச்சுனனிடம் கூற ஆரம்பித்தார்...

Wednesday, August 26, 2009

58-கண்ணன் தூது (2)

துரியோதனன் பழைய பல்லவியையே திரும்ப பாடினான்.கூர்மையான ஊசி அளவு நிலம் கூட தரமுடியாது என்பதில் உறுதியாய் இருந்தான்.'விதுரர்,பீஷ்மர்,துரோணர் ஆகியோர் எனக்கே அறிவுரை கூறுகின்றனரே..நான் பாண்டவர்க்கு அப்படி என்ன தீது செய்தேன்?'என்றான்.

'துரியோதனா..நீ செய்த தீமை ஒன்றா..இரண்டா.அவர்களை வற்புறுத்தி சூதாடவைத்தாய்..அவையில்..திரௌபதியின் ஆடையை களைய முற்பட்டாய்.வாரணாவதத்தில் தாயுடன் சேர்த்து அவர்களை எரிக்க முயன்றாய்.பீமனைக் கட்டிப் போட்டதும்,விஷம் கொடுத்ததும் ஆகிய கொடுமைகள் செய்தாய்.இப்படி பாவங்களையே செய்த நீ..என்ன தீது செய்தேன் என்கிறாய்..நல்லவன் போல நடிக்கிறாய்.சான்றோர்..உரையையும் நீ மதிக்கவில்லை.சமாதானத்தை விரும்பாத நீ போர்க்களத்தில் அழிவது உறுதி' என்றார் மாதவன்.

இதுகேட்ட..துரியோதனன் கடும் சினம் கொண்டான்.கண்ணனை கைதியாகப் பிடித்துச் சிறையில் வைக்க முயன்றான்.அதைக் கண்டு நகைத்த கண்ணன் தன் விஸ்வரூபத்தை அனைவரும் காணச் செய்தார்.அவரிடமிருந்து எல்லா தேவர்களும் மின்னல் போல் காட்சி அளித்தனர்.எங்கெங்கு நோக்கினும் கண்ணன் தான்.ஒரு கோடி சூரியன் உதயமாயிற்றோ என அனைவரும் திகைத்தனர்.சங்கு,சக்கரம்,கதை,வில்,கலப்பை என எல்லாக் கருவிகளும் அவர் கரங்களில் ஒளி வீசின.

கண்ணனை பீஷ்மர்,விதுரர்,துரோணர்,திருதிராட்டிரன்,அசுவத்தாமா,விகர்ணன் ஆகியோர் கரம் குவித்து வணங்கி வழி அனுப்பினர்.கண்ணன் குந்தியைக் காணச் சென்றார்.அவையில் நடந்தவற்றை அத்தையிடம் கூறினார்.பிறகு கர்ணனைச் சந்தித்து அவனது பிறப்பின் ரகசியத்தைக் கூறினார்.தனது பிறப்பின் ரகசியத்தை..யுத்தத்திற்கு முன் வெளியிட வேண்டாம் என்றான் கண்ணன்.துரியோதனனுடன் ஆன நட்பை யாரும் பிரிக்க முடியாது என்றும் உரைத்தான்.

பின்..தாய் குந்தி தேவி கர்ணனை சந்தித்து..கர்ணன் பிறந்த சூழலை உரைத்தாள்.பின் தாயிடம் கர்ணன்'அர்ச்சுனனைத் தவிர,,மற்ற நால்வருடன் போரிட மாட்டேன்'என உறுதி அளித்தான்.பின்'தாயே!அர்ச்சுனனுடன் ஆன போரில்..யாரேனும் ஒருவர் மடிவோம்..அப்படி நான் மடிந்தால்..என் தலையை தங்கள் மடியில் வைத்து..மகனே எனக் கதறி அழுது..நான் உன் புதல்வன் என்பதை உலகிற்கு உணர்த்து..நான் வெற்றி பெற்றாலும்..என் மூத்த மகன் வென்றான் என உண்மையைத் தெரிவி..ஆனால் எக்காரணம் கொண்டும் போருக்கு முன் என் பிறப்பின் ரகசியத்தை யாருக்கும் அறிவிக்க வேண்டாம் 'என்றான்.

பின்..கண்ணன்..தருமரை சந்தித்து..நடந்த விஷயங்களைக் கூறி..யுத்தத்தை தவிர வேறு வழி இல்லை என்றார்.எல்லாம் விதிப்படி நடக்கும் என்ற தருமர்..தனக்கு துணைக்கு வந்த ஏழு அக்ரோணி படைக்கு..முறையே..துருபதன்,திருஷ்டத்துய்மன்,விராடன்,சிகண்டி,சாத்யகி,சேகிதானன்,திருஷ்டகேது..ஆகியவரை சேனாதிபதியாக நியமித்தார்.அத்தனைப் பேருக்கும் பிரதம தளபதியாக அவர்களில் ஒருவனான திருஷ்டத்துய்யனை நியமித்தார்.

துரியோதனன் சார்பில்..பதினோரு அக்ரோணிப் படைக்கு..கிருபர்,துரோணர்,ஜயத்ரதன்,சல்லியன்,சுதட்சிணன்,கிருதவர்மா,அசுவத்தாமா,கர்ணன்,பூரிசிரவா,சகுனி,பாகுலிகன் ஆகியோர் சேனாதிபதிகளாக நியமிக்கப் பட்டனர்.பிரதம தளபதியாக பீஷ்மர் நியமிக்கப்பட்டார்.

இரு திறத்துப் படைகளும்..அணி வகுத்துக் குருக்ஷேத்ரப் போர்க்களத்தை நோக்கிச் சென்றன.

பலராமர்..முன்னரே..சொன்னபடி..குருக்ஷேத்ரப் போர்க்கால அழிவைப் பார்க்க விரும்பாமல்..தீர்த்தயாத்திரைக்குப் புறப்பட்டார்.

(உத்தியோக பருவம் முற்றும்)....

Monday, August 24, 2009

57-கண்ணன் தூது

சஞ்சயன் தூதாக வந்து சென்றபின்..தருமர்..எதற்கும் துரியோதனனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்து பார்ப்போம் என்றார்.அதற்கு கிருஷ்ணன் தயாரானார்.

ஆனால் பீமன் கொதித்து எழுந்தான்..'சமாதானம் வேண்டாம்..போர்தான் வேண்டும்' என்றான்.அர்ச்சுனன்,நகுலன்,சஹாதேவனும் சமாதான முயற்சியை விரும்பவில்லை.திரௌபதியும்..அழுதவாறே துரியோதனன் சபையில் தான் பட்ட வேதனையை நினைவூட்டினாள்.

கிருஷ்ணர் அஸ்தினாபுரம் செல்லப் புறப்பட்டார்.இதை அறிந்த திருதிராட்டினன்..மகிழ்வது போல நடித்தான்..விதுரரை அழைத்து 'தேர்,யானை,குதிரை ஆகியவற்றையும் ரத்தினக் குவியல்களையும் பகவானுக்கு பரிசுப் பொருள்களாக வழங்க வேண்டும்.என் நூறு புத்திரர்களும் கண்ணனை எதிர்கொண்டு அழைக்க வேண்டும்.வரவேற்பு பிரமாதமாக இருக்க வேண்டும்' என்றெல்லாம் கூறினான்.

அவன் கருத்தை அறிந்த விதுரர்..'இத்தகைய ஆடம்பரங்களை கண்ணன் விரும்ப மாட்டார்' என்றான்.

அஸ்தினாபுரத்தை அடைந்த கண்ணனும்..இவ் வரவேற்புகளை பொருட்படுத்தாது..திருதிராட்டினன் மாளிகைக்கு சென்றார்.விதுரரின் வீட்டிற்குச் சென்றார்.அங்கிருந்த குந்தி அவரை வரவேற்றாள்.

துரியோதனன் கண்ணனை தன் மாளிகைக்கு விருந்தினராக வந்து மகிழ்விக்குமாறு வேண்டினான்.ஆனால் கண்ணன் சம்மதிக்கவில்லை.காரியம் நிறைவேறுவதற்குள்..தூதுவர் பகைவர் வீட்டில் உண்பது வழக்கமில்லை என்றார்.

கௌரவர்,பாண்டவர் இருவருக்கும் நடுநாயகமாக விளங்கும் தாங்கள் ஏன் எங்களை பகைவராய் எண்ணுகிறீர்கள்? என துரியோதனன் கேட்டான்.

அதற்கு கண்ணன்'பாண்டவர்கள் தர்மத்தை போற்றி நடக்கிறார்கள்.நீ..அந்த தர்மவான்களை அழிக்க எண்ணுகிறாய்.நான் எப்போதும் தர்மத்தின் சார்பில் இருப்பவன்.தர்மத்திற்கு எதிரி..எனக்கும் எதிரி.அந்தவகையில்..நீயும் எனக்கு பகைவன்.ஆகவே உன் விருந்தை நான் ஏற்கமாட்டேன்' என்றார்.

துரியோதனனின் விருந்தை கண்ணன் மறுத்தாலும்..அவனது அவைக்கு தூதுவராய் சென்றார்..

திருதிராட்டினனை நோக்கி..துரியோதனனுக்கு அறிவுரைக் கூறி..அவன் அழிவைத் தடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.ஆனால்..திருதிராட்டிரன்..தன் இயலாமையைக் கூறினான்.

பின் கண்ணன் துரியோதனனைப் பார்த்து பேச ஆரம்பித்தார்.

"உனது தந்தையும்,மற்றும் அனைத்து சான்றோரும்..நீ பாண்டவர்களுடன் சேருவதையே விரும்புகின்றனர்.அதைக் கேளாத நீ பெரும் துன்பமடைவாய்.பீமனையும்,அர்ச்சுனனையும் வென்றாலே..உனக்கு உண்மையான வெற்றி கிட்டும்.ஆனால்..அவர்களை வெல்ல உன் பக்கம் யாரும் இல்லை.குலத்தை அழித்த பழி உனக்கு வேண்டாம்.பாண்டவர்களுக்கு பாதி நாட்டைக் கொடுத்துவிட்டு..அவர்களுடன் இணைந்து வாழ்வாயாக' என்றார்.

(கிருஷ்ணன் தூது..அடுத்த பதிவிலும் தொடரும்)

Saturday, August 15, 2009

56-சஞ்சயன் தூது

பின்..திருதிராட்டிரன் கௌரவர்கள் கருத்தை பாண்டவர்களுக்குத் தெரிவிக்க சஞ்சயனை தூதுவனாக பாண்டவர்களிடம் அனுப்பினான்.'இந்திரப்பிரஸ்தத்தை மட்டுமல்ல..ஒரு கையளவு நிலம் கூட பாண்டவர்க்கு தரமுடியாது.போர் வருமேயாயின்..பாண்டவர் தோல்வியைத் தழுவுவர்.' என்றான் சஞ்சயன் பாண்டவர்களிடம்.

போரில் தருமருக்கு விருப்பமில்லை..ஆனாலும்..நாட்டைத் திருப்பித் தராவிடின்..போர் தவிர வேறு வழியில்லை என அறிந்துக்கொண்ட சஞ்சயன் அதை திருதிராட்டிரனிடம் வந்து தெரிவித்தான்.

திருதிராட்டிரன்..விதுரரை அழைத்து அவர் கருத்தைக் கேட்டான்.விதுரர் நீதிகளைக் கூறினார்.பாண்டவர்களை வீரம் மட்டும் காக்கவில்லை..அவர்கள் போற்றும் தர்மம்தான் அவர்களின் உன்னத படை என்றார்.மேலும்..துரியோதனனிடம்..அது இல்லை என்றும்..அவன் மகத்தான துன்பம் அடையப் போகிறான் என்றும் உரைத்தார்.

திருதிராட்டிரன்..விதுரர் கூறியது உண்மை என்பதை அறிந்தாலும்..புத்திரப் பாசத்தால் மதி இழந்து தடுமாறினார்.

அடுத்த நாள் சபையில் இது தெரிவிக்கப் பட்டது.

பீஷ்மர்..'இன்னமும் காலம் கடத்தாமல் பாண்டவர்களின் நாட்டை திருப்பிக் கொடுங்கள்.இல்லையேல் யுத்தத்தில் அனைவரும் மாண்டுவிடுவோம்' என்றார்.

வழக்கம் போல பீஷ்மரை கர்ணன் பழித்தான்.'இவர் நம்முடன் இருந்தாலும்..இவர் மனம் பாண்டவர் வசமே உள்ளது. யுத்தம் வந்தால் நான் ஒருவனே பகைவர்கள் அனைவரையும் அழிப்பேன்' என்றான்.

கர்ணனைக் கண்டித்தார் பீஷ்மர்.'உன் வீரம் அனைவருக்கும் தெரியும்..வெட்டித்தனமாய் பேசாதே' என்றார்.

'எப்போதும்..எனக்கு எதிராய் பேசுவது இவரின் இயல்பு.அர்ச்சுனன் பற்றி இவர் பெரிதாக நினைக்கிறார்.இவர் அர்ச்சுனனிடம் தோல்வி அடையும் வரை நான் போரில் இறங்க மாட்டேன்.பின் அர்ச்சுனனை நான் போரில் கொல்வேன்'என்று கூறிவிட்டு..சபையிலிருந்து வெளியேறினான் கர்ணன்.

துரியோதனனிடம்..பிடிவாதத்தை விடுமாறு திருதிராட்டிரன் கூறியும்..அவன் கேட்கவில்லை.

'தந்தையே! நான் அனைத்து விஷயமும் அறிந்தவன்.இந்த பாண்டவர்கள் சூதாடித்தோற்ற போதே ஏன் போருக்கு கிளர்ந்து எழவில்லை.அவர்களுக்கு மான உணர்ச்சி கிடையாது.சபதம் என்ற பெயரில் வீரவாதம் புரிந்தனர்.தருமர் ஒரு முறை சூதில் தொலைத்தவர்..மீண்டும் இரண்டாம் முறை ஏன் சூதாட வேண்டும்.கிருஷ்ணனின் துணை இப்போது இருப்பதால்..இப்போது போரிடத் தயார் என்கிறார்கள்.போர் தொடங்கட்டும் பார்ப்போம்.என்னிடம் 11 அக்ரோணி படை உள்ளது..அவர்களிடம் 7 மட்டுமே உண்டு.அவர்களுக்கு வெற்றி கிடைக்கும் என நான் எண்ணவில்லை.அதனால்தான் 5 ஊர்கள் போதும் என கெஞ்சிக் கேட்கிறார்கள்.தந்தையே..5 ஊசிமுனை அளவு நிலம் கூட அவர்களுக்கு நான் தரமாட்டேன்' என்று கூறிக் கர்ணனைப் போல் அவனும் அவையை விட்டு வெளியேறினான்.

Saturday, August 8, 2009

55-சல்லியன் யார் பக்கம்

மத்ர தேச மன்னன் சல்லியன் நகுல,சகாதேவர்களின் தாய் மாமன்.பாண்டவர்கள் அவனை தங்கள் பக்கம் இருக்க வேண்டினர்.அவனும் அதையே விரும்பினான்.பெரும் படையுடன்..பாண்டவர்கள் இருக்குமிடம் சென்றான்.

அவன் செல்லும் வழியெல்லாம்..பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.படைவீரர்களுக்கு சிறந்த உணவு தரப்பட்டது.இவை யாவும்..துரியோதனன் ஏற்பாடாகும்.இது அறியா சல்லியன்..இவை த்ருமரால் செய்யப்பட்டது என எண்ணினான்.இது துரியோதனனுக்கு தெரிய வந்தது.அவன் ஓடோடி வந்து..சல்லியனிடம்'எங்கள் வரவேற்பை ஏற்றமைக்கு நன்றி' என்றான்.

துரியோதனின் சூழ்ச்சி வேலை செய்தது.. சல்லியன்'இவ்வளவு உபசரிப்பு அளித்தமைக்கு என்ன கைமாறு செய்வேன்' என்றான்.

வரும் போரில் தாங்கள் எங்களுக்கு உதவிட வேண்டும்..என்றான் துரியோதனன்.சல்லியன் தர்ம சங்கடத்தில் சிக்கிக் கொண்டான்.ஆயினும்..துரியோதனனுக்கு தன் ஆதரவு உண்டு என்றான்.

பாண்டவர்களை திட்டமிட்டபடி சந்தித்த சல்லியன், இடை வழியில் நடந்தவற்றைக் கூறினான்.பாண்டவர்கள் அதிச்சியுற்றனர்.

என்ன செய்வது என அறியாத தருமர்..ஒருவாறு மனம் தேறி, சல்லியனிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.வரவிருக்கும் போரில் கர்ணனுக்கு தேரோட்டும் நிலை ஏற்படின்..அர்ச்சுனனின் பெருமையை..அவ்வப்போது அவனுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதே அவ்வேண்டுகோள்.பதினேழாம் நாள் போரில் சல்லியன் இதை நிறைவேற்றியதை பின் காண்போம்.

பாண்டவர்களின் தூது
-- ---------------------

பாண்டவர்களின் தூதுவன்..பாஞ்சால நாட்டுத் துருபதனின் புரோகிதன் அஸ்தினாபுரம் அடைந்தான்.பாண்டவர்கள் பதின்மூன்று ஆண்டுகள்..காட்டிலும்..நாட்டிலும்..நிபந்தனைப்படி வாழ்ந்து விட்டனர்.அவர்களிடம் நாட்டை ஒப்படைப்பதே சரியான நீதியாகும்.அப்படி அளிக்காவிடின் யுத்தம் தவிர்க்கமுடியாது..என்றான்.

தூதுவன் உரை கேட்டுக் கர்ணன் கோபமுற்றான்.பாண்டவர்களை வெற்றிக் கொள்ளத் த்ன்னால் முடியும் என்றான்.

கர்ணன் சொன்னதை பீஷ்மர் ஏற்கவில்லை.திருதிராட்டிரன் தூதுவனை திரும்பிப் போக பணித்தான்.

Tuesday, August 4, 2009

54-கிருஷ்ணன் யார் பக்கம்

அபிமன்யுவிற்கும் உத்தரைக்கும் திருமணம் நடந்த மறுநாள் பாண்டவர்களுடன்..திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்த மன்னர்கள் வந்திருந்தனர்.தவிர..பலராமர்,கிருஷ்ணர்,துருபதன் ஆகியோரும் இருந்தனர்.எதிர்கால திட்டம் பற்றி கண்ணன் பேசினார்..

'துரியோதனன் வஞ்சனையால் நாட்டை கவர்ந்ததுடன்..பாண்டவர்களுக்கு நிபந்தனை விதித்தான்.அவற்றை பாண்டவர்கள் நிறைவேற்றிவிட்டனர்.இனி துரியோதனன் கருத்து அறிய ஒரு தூதுவனை அனுப்பி..நாட்டில் பாதியை ப் பாண்டவர்க்குத் தர கூற வேண்டும்' என்றார்..

ஆனால்..கண்ணனின் இக்கருத்தை பலராமர் ஏற்கவில்லை.'சூதாட்டத்தில் தோற்ற நாட்டை திரும்பவும் தருமாறு வற்புறுத்துவது நியாயமில்லை.தூதுவன் நயமாக பேசிப்பார்க்கலாம்.கொடுத்தால் பெறலாம்.ஆனால் அதற்காக போர் கூடாது' என்றார்.

'இந்த முக்ய பிரச்னையில் பலராமரின் கருத்து ஏற்றத்தக்கதல்ல.பலநாட்டு மன்னர்களின் உதவி பெற வேண்டும்.முதலில் கேட்போர்க்கே உதவுதல் மன்னரின் இயல்பாகும்.ஆகவே உடன் செயல்பட வேண்டும்.துரியோதனனிடம் செல்லும் தூதுவன் திறை வாய்ந்தவனாய் இருக்க வேண்டும்' என்றார் துருபதன்.

துருபதனின் கருத்து ஏற்கப்பட்டது.

**** *** *** ****

பிற மன்னர்களின் உதவியைப் பெறுவதில்..துரியோதனன் முனைப்புக் காட்டினான்.கண்ணனைப் பார்க்க துவாரகைக்குச் சென்றான்.அதே நேரம் அர்ச்சுனனும் சென்றான்.அப்போது கண்ணன் உறங்கிக் கொண்டிருந்தார்.கண்ணனின் தலைப்பக்கம் துரியோதனனும்,கால் பக்கம் அர்ச்சுனனும் அமர்ந்திருந்தனர்.கண்விழித்துப் பார்த்த பரமன் கண்களில் முதலில் அர்ச்சுனனே தென்பட்டான்.அர்ச்சுனன் பரமனின் உதவியைக் கேட்டான்.துரியோதனனும் அதே சமயம் கேட்டான்.'நானே முதலில் வந்தேன்' என்றான் துரியோதனன்.'ஆனால் நான் பார்த்தனைத்தான் முதலில் பார்த்தேன் என்றார் கண்னன்.ஆயினும் என் உதவி இருவருக்கும் உண்டு.என் உதவியை இரண்டாகப் பிரிக்கிறேன்.ஆயுதம் இல்லா நான் ஒரு பங்கு..ஆயுதம் ஏந்தி கடும் போர் புரியும் அக்குரோணிப்படைகள் ஒரு பங்கு.அர்ச்சுனன் இளையவனாக இருப்பதால்..அவன் விரும்பியது போக எஞ்சியது உனக்கு'என்றார் கண்ணன்.

அர்ச்சுனன் கண்ணன் மட்டுமே போதும் என்றான்.தனக்குக் கிடைத்த படைப் பெருக்கம் குறித்துப் பெரிதும் மகிழ்ந்தான்..துரியோதனன்.

பின்..பலராமரிடம் செண்ரு உதவிக் கோரினான் துரியோதனன்.பலராமரோ'கண்ணனுக்கு எதிராக என்னால் செயல் பட முடியாது.அதே சமயம் நான் பாண்டவர் பக்கம் போக மாட்டேன்.நடுநிலைமை வகிப்பேன்.போர் நடக்கையில் தீர்த்தயாத்திரை செல்வேன்'என்று கூறிவிட்டார்.

Saturday, August 1, 2009

53-விராட பருவம் முடிந்தது

விராட மன்னன்..கங்கருடன் சூதாடிக் கொண்டிருந்த போது..'பீஷ்மர் முதலானோரை வென்ற என் மகன் போல் உம்மை நான் வெல்வேன்' என்ரான்.

ஆனால்..அதற்கு கங்கர் 'பிருகன்னளையின் உதவியால்தான் உன் மகனுக்கு வெற்றி கிடைத்திருக்க வேண்டும்' என்றார்.இதனால்..கோபம் கொண்ட விராடன்..கையில் இருந்த பகடையை கங்கர் மீது வீசினான்.அவர் அவர் நெற்றியிலும்..வலது காதிலும் பட்டு ரத்தம் கொட்டிற்று.அருகில் இருந்த சைரந்தரி..பதறி..தன் மேலாடையால்..அந்த ரத்தத்தைத் துடைத்து..அதனை பிழிந்து ஒரு பாத்திரத்தில் ஏந்தினாள்.அச்செயல் மன்னனுக்கு அருவருப்பை ஏற்படுத்த..உடன் சைரந்தரி'இவர் ஒரு மகான்.இவர் ரத்தம் பூமியில் பட்டால்..மழை பொழியாது..உனக்குக் கேடு வரும்' என்றாள்.

இந்நிலையில்..உத்தரனும்..பிருகன்னளையும் வர 'உத்தரன் மட்டும் வரட்டும்' என்றார் கங்கர்.உள்ளே வந்த உத்தரன் கங்கரைக் கண்டான்.நேற்றியில் இருந்த காயத்தைப் பார்த்து 'இந்த கொடுமையை இழைத்தது யார்? என்றான்.மன்னன் அலட்சியமாக அது தன்னால் நேர்ந்தது என்றான்.

அவரின் காலில் விழுந்து மன்னனை மன்னிப்புக் கேட்கச் சொன்னான் உத்தரன்.பின் அவர்கள் யார் என்பதைக் கூறினான்.

பெரு மகிழ்ச்சியுற்ற மன்னன்..தன்னை மன்னிக்குமாறு கூறினான்..'என் நாட்டையே உங்களுக்குத் தருகிறேன்' என்றான்.அர்ச்சுனனை நோக்கி..'மாவீரனே..என் மகளுக்கு ஆடலும்..பாடலும் கற்பித்தவனே..என் மகள் உத்தரையை உனக்குத் தர விரும்புகிறேன்' என்றான்.

உடன் அர்ச்சுனன் 'மன்னா..ஒராண்டுக் காலம் உம் மகளை என் மகளாகவே நினைத்தேன்..அந்த மனநிலையை என்னால் மாற்ரிக் கொள்ள முடியாது.ஆகவே..என் மகன் அபிமன்யுவிற்கு அவளை மணம் செய்வியுங்கள்' என்றான். மன்னனும் ஒப்புக் கொண்டான்.

அப்போது..அஸ்தினாபுரத்திலிருந்து..துரியோதனனின் ஒற்றன் ஒருவன் வந்தான்.'ஒப்பந்தபடி 13ஆம் ஆண்டு முடிவிற்குள் நாங்கள் அர்ச்சுனனைப் பார்த்து விட்டோம்..ஆகவே நீங்கள் மீண்டும் வனவாசம் போக வேண்டும்' என்ற செய்தியுடன்.

அதற்கு தருமர்..'பதின்மூன்று ஆண்டுகள் மட்டுமின்றி மேலும் 5 மாதங்கள் கழித்தே நாங்கள் வெளிப்பட்டோம்.இக்கணக்கை பீஷ்மரேஉரைத்துள்ளார்' என்ற பதிலை அனுப்பினார்.

பாண்டவர்கள் வெளிப்ப்ட்ட செய்தி கேட்டு கண்ணன்,சுபத்ரை,அபிமன்யு ஆகியொர் விராட நாடு வந்தனர்.

திட்டமிட்டபடி..அர்ச்சுனன் மகன் அபிமன்யுவிற்கும்..உத்தரைக்கும் மணம் நடந்தது.

(விராட பருவம் முற்றும்..இனி உத்தியோக பருவம்)

Tuesday, July 28, 2009

52- கௌரவர்கள் ஓடினர்.

பின் அர்ச்சுனன் ஊர்வசியை நினைத்துத் தனது பேடி உருவம் நீங்கினான்.தேரில் இருந்த சிங்கக் கொடியை இறக்கிக் குரங்கின் சின்னக் கொடியை ஏற்றினான்.

வருவது..அர்ச்சுனன் என்பதை அனைவரும் அறிந்தனர்.'யாரானால் என்ன..போர் தொடரட்டும்' என்றான் துரியோதனன்.

'நானே அர்ச்சுனனைக் கொல்வேன்' என்றான் கர்ணன்.

அர்ச்சுனன் இரண்டு அம்புகளை ஒரே சமயத்தில் செலுத்தினான்.அவற்றுள் ஒன்று..துரோணரின் பாதத்தில் விழுந்து குரு வணக்கம் செலுத்தியது.மற்றொன்று அவர் காதோரம் சென்று..போரிட அனுமதியும், ஆசியும் வேண்டியது.முதல் கடமையாக பசுக்களை மீட்க..சரமாரியாக அம்பெய்தினான்.பேரொலி கேட்ட பசுக்கள் பகைவரின் பிடியிலிருந்து தப்பி ஓடித் தங்கள் பண்ணையை அடைந்தன.கிளர்ந்து எழுந்த கௌரவ வீரர்களைக் கடந்து..கர்ணனைத் தாக்கினான், அர்ச்சுனன்.எதிர் நிற்க முடியாது..போர்க்களத்தை விட்டு கர்ணன் ஓடினான்.பின்னர் துரோணர்..அஸ்வத்தாமன் ,கிருபாச்சாரியார்..ஆகியோர் எதிர்க்கமுடியாது தலைக் குனிந்தனர்.

பின்னர்..பீஷ்மருடன் அர்ச்சுனன் போரிட்டான்.பிதாமரும் சோர்ந்து திரும்பினார்.பின்..துரியோதனனும் சிறிது நேரமே போர் புரிந்தான்.பின் தோற்று ஓடினான்.

துரியோதனா..நில்..நீ ஒரு வீரனா?உனக்கு மானம் இல்லையா? என அவன் மான உணர்ச்சியைத் தூண்டினான் பார்த்திபன்.பின் மோகனாஸ்திரத்தால்..அர்ச்சுனன் அனைவரையும் மயங்கச் செய்தான்.பின் அர்ச்சுனன் பீஷ்மரைத் தவிர மற்றவர்கள் அணிந்திருந்த பட்டுத் துணிகளை கவர்ந்து வருமாறு உத்திரனிடம் கூறினான்.அவனும் அவ்வாறே செய்தான்.

மோகானாஸ்திரத்தால் மயங்கி விழுந்தவர்கள்..மயக்கம் தெளிந்து எழுந்தவர்கள்..தோல்வியால் மனம் உடைந்தனர்.வெட்கத்தோடு அஸ்தினாபுரம் திரும்பினர்.

வெற்றி வீரர்களாக விஜயனும்..உத்தரனும் விராட நகரம் வந்தார்கள்.வரும் வழியில்..முன்பிருந்தபடியே ஆயுதங்களை ஒளித்துவைத்தனர்.அர்ச்சுனன் மீண்டும் பிருகன்னளையாகி தேர் ஓட்டிச்சென்றான்.

தென்திசையில்..திரிகர்த்த மன்னன் சுசர்மாவைத் தோற்கடித்து..வெற்றிவாகை சூடிய மன்னனை வரவேற்க விராட நகரம் தயாராகயிருந்தது.அப்போதுதான் தன் மகன் உத்தரன் காணப்படாததைக் கண்டு..விராட மன்னன் வினவ..அவன் வடதிசையில் கௌரவர்களை எதிர்க்கச் சென்றுள்ளான் என்ற செய்தி கேட்டு மன்னன் திகைத்தான்.'அங்கு மாவீரர்களான பீஷ்மர்,துரோணர்,கர்ணன் ஆகியோரை எப்படி என் மகன் வெல்வான்?' எனக் கவலையுற்றான்.

அப்போதுதான் மகனின் வெற்றிச் செய்தி மன்னனுக்கு எட்டியது.மிகச் சிறந்த வரவேற்புக்கு ஏற்பாடு செய்தான்.

Monday, July 20, 2009

51-அர்ச்சுனன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளல்

துரியோதனன் தனக்குத் துணையாகப் பீஷ்மர்,துரோணர்,கிருபர்,துச்சாதனன்,கர்ணன் ஆகியோரை அழைத்துக் கொண்டு பெரும் படையுடன்..விராட நாட்டின் வடக்குப் பக்கம் இருந்த பசுக்களைக் கவர்ந்தான்.அரண்மனையில் இருந்த அரசகுமாரன் உத்தரனுக்கு செய்தி போயிற்று. 'எனக்கு நல்ல சாரதி கிடைத்தால் அர்ச்சுனனைப் போல் போரிட்டு பகைவனை வெல்வேன்'என்றான்.அதனைக் கேட்ட சைரந்தரி..'பிருகன்னளை ஆடல் பாடலில் மட்டுமல்ல..தேரோட்டுவதிலும் வல்லவள்.இவளை சாரதியாகக் கொண்டு போருக்குப் போகலாம்' என்றாள்.

போருக்கு கிளம்பிய உத்தரன்..கௌரவர் சேனையைக் கண்டு திகைத்தான்.தேரினின்று குதித்து ஓடினான்.அவனை விரைந்து பிடித்த பிருகன்னளை..அவனுக்கு ஊக்கம் பிறக்கும் வண்ணம் உரையாடினாள்.இதை துரோணர் கண்டார்.

'சாரதியாக இருப்பவள்..பேடி அல்ல..அர்ச்சுனன் என நினைக்கிறேன்' என்றார்.கர்ணன் அதை மறுத்தான்.

பிருகன்னளை உத்தரனிடம்..'நீ தேரை செலுத்து..நான் போரிடுகிறேன்..'என்றாள்.உத்தரன் ஒப்புக் கொண்டான்.மரத்தின் பொந்தில் ஒளித்து வைத்திருந்த ஆயுதங்கள் எடுத்துவரச் செய்தாள்.காண்டீபம் என்னும் வில்லை உத்தரனுக்குக் காட்டினாள்.அது அர்ச்சுனனுடையது. அதனால் அவன் தேவாசுரர்களை வென்றான்.

முதன் முதலில் இவ்வில்லை பிரமதேவர் வைத்திருந்தார்.பின்..சிவ பெருமான் வைத்திருந்தார்,பின் சந்திரனிடம் இருந்தது.அதன் பின் வருணன் சில ஆண்டுகள் வைத்திருந்தார்.அவரிடமிருந்து அக்கினி தேவன் கைக்கு வந்தது.அக்கினி தேவன் அர்ச்சுனனுக்கு கொடுத்தான்.மற்ற கருவிகளைப் பற்றியும்..பிருகன்னளை அர்ச்சுனனுக்கு விளக்கினாள்.அவை தருமர்,பீமன்,நகுலன்,சகாதேவன் ஆகியோருக்கு உரியவை என்றார்.

இவற்றைக் கேட்ட உத்திரன்..'பாண்டவர்கள் இப்போது எங்கே?" என்றான்.அப்போது பிருகன்னளை தான் அர்ச்சுனன் என்றும்...மற்றவர்கள் பற்றியும் விளக்கி, 'நாங்கள் ஓராண்டு மறைந்திருக்க வேண்டி..உங்கள் அரண்மனையில் அடைக்கலம் புகுந்தோம்..சில நாட்களில் எங்களை வெளிப்படுத்திக் கொள்வோம்.அது வரை எல்லாம் ரகசியமாக இருக்கட்டும்.உன்னைச் சார்ந்தவர்களீடம் கூட இதை வெளியிடாதே' என்றான்.

உடன் உத்திரன் வியப்படைந்தான்.'இனி நான் யாருக்கும் அஞ்சேன்..நானே உனக்கு பாகன்' என்றான் மகிழ்வோடு.

Wednesday, July 15, 2009

50-விராடப் போர்

பதின்மூன்று ஆண்டுக்காலம் முடியும் நேரம் நெருங்கியதும் துரியோதனன் கலக்கம் அடைந்தான்.எப்படியாவது பாண்டவர்களைக் கண்டுபிடித்தால் அவர்கள் நிபந்தனையை நிறைவேற்றவில்லை என மீண்டும் வனவாசம் அனுப்பி விடலாம் என எண்ணினான்.ஒற்றர்களை அனுப்பினான்..அவர்களாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

மறைந்த சூரியன்போல் பாண்டவர்கள் வருவார்கள்..'என்றார் பீஷ்மர்.

அப்போது ஒரு ஒற்றன் புது செய்தி கொண்டுவந்திருந்தான்.விராட நகரில்..கீசகன் பெண் ஒருத்தியின் காரணமாக கந்தர்வனால் கொல்லப்பட்டான் என்பதே அச்செய்தி.

உடனே துரியோதனன்'அந்தப் பெண்..திரௌபதியே என்றான்.கீசகனைக் கொன்றவன் பீமனாகத்தான் இருக்க வேண்டும் என்றான்.பாண்டவர்கள் மாறு வேடத்தில் விராட நகரிலேதான் இருக்கிறார்கள்.
நாம் விராட நாட்டு மன்னனை முற்றுகையிட்டால்...அவனைக் காக்க பாண்டவர்கள் வருவார்கள்.கண்டுபிடித்து விடலாம்.மீண்டும்..நிபந்தனைப்படி பன்னிரண்டு காலம் வனவாசம் அனுப்பிவிடலாம்' என்றான்.

அப்போது..விராடனிடம் கொண்ட பழைய பகமைத் தீர்த்துக் கொள்ள இதுவே தருணம் என எண்ணிய..திரிகர்த்த நாட்டு மன்னன் சுசர்மா அவர்கள் உதவிக்கு வந்தான்.தெந்திசைத் தாக்குதல் அவனிடம் ஒப்படைக்கப்பட்டது.வடதிசைத் தாகுதலை துரியோதனன் மேற்கொண்டான்.ஏற்கனவே கீசகனை இழந்து விராட நாடு வலுவிழந்திருக்கும் என துரியோதனன் எண்ணினான். முதலில் பசுக்கூட்டத்தை கவர்வது அவன் திட்டம்.அப்போது பசுக்களைக் காக்க பாண்டவர்கள் வருவார்கள் என்பது அவன் கணிப்பு.
போர் தொடங்கியது.

விராடனுக்கு உதவியாக அவனது சகோதரர்கள்..சதானிகன்.மதிராட்சன் ஆகியோரும் புறப்பட்டனர்.கங்கர்..தாமும் வல்லனும்,தாமக்கிரந்தியும்,தந்திரி பாலனும் உதவிக்கு வரலாமா? என்றார்.மன்னன் அனுமதித்தான்.ஆனால் மன்னன் சுசர்மா..விராடனை சிறைப் பிடித்தான்.விராடன் படை வீரர்கள் சிதறி ஓடினர்.அப்போது கங்கர்..வல்லனுக்கு சைகை செய்தார்.பீமன் உடன் ஆவேசத்துடன்..ஒரு மரத்தை வேருடன் பிடுங்கச் சென்றான்.கங்கர்..'இது பச்சை மரம்' என்றார்.(பீமன் தனது இயல்பான போர்முறையைக் காட்டக் கூடாது...சாதாரண வீரனைப் போல் போரிட வேண்டும்.ஏனெனில்..இன்னும் சில தினங்கள் அவர்கள் மறைந்திருக்க வேண்டியிருந்தது).பின் பீமன் ..வேறு முறையில் போரிட்டு சுசர்மனைத் தோற்கடித்தான்.விராடன் மீட்கப்பட்டான்.திரிகர்த்த நாட்டு மன்னனை கங்கர் மன்னித்து விட்டு விட்டார்.

ஆனால்...நாட்டின் வடக்குப் பக்க நிலை வேறாக இருந்தது.

Wednesday, July 8, 2009

49 - கீசகன் வதம்

விராட நாட்டில் விழாக்கள் நடக்கும்.விழாக்காலங்களில் பல விளையாட்டுகள் நடைபெறும்.வடக்கே இருந்து ஜீமுதன் என்ற மல்லன் வந்தான்.அவன் விராட நாட்டு மன்னர்களை எளிதாக வென்றான்.பின்னர்..'என்னுடன் மற்போர் புரிபவர் யாரும் இல்லையா?' என அறைகூவல் விடுத்தான்.

யாரும் வரவில்லை.மன்னன் மனம் வருந்த,கங்கர்..'அரசே..புதிதாக சேர்ந்திருக்கும் வல்லன் என்னும் சமையற்காரன்..போர் புரிவதில் வல்லவன் என நினைக்கிறேன்..அவனை அழையுங்கள்' என்றார்.

மன்னனும் அவ்வாறே செய்ய..வல்லனும்...ஜீமுதனும் மோதினர்.வடநாட்டு மல்லன் தோற்று ஓடினான்.

பத்து மாதங்கள் அஞ்ஞாத வாசம் கழிந்தது.பின் ஒரு நாள்..அரசி சுதேட்சணைக்கு தம்பி ஒருவன் இருந்தான்.அவன் பெயர் கீசகன்.அவன் அந்த நாட்டு படைத்தளபதியும் ஆவான். அவன் ஒரு நாள்..அரசியைக் காண வந்த போது..சைரந்தரியைக் கண்டான்.ஆசைக் கொண்டான்.தன் இச்சைக்கு பணியுமாறு கேட்டான்.

வீண் தொல்லை தராதே! என் கந்தர்வக் கணவர்கள் உன்னை கொன்று விடுவார்கள்' என சைரந்தரி எச்சரித்தாள்.

காதல் மயக்கம் தீராத அவன்..அரசியிடம் சென்று..அவ்வேலைக்காரியை எனக்கு பணியச் சொல் என்றான்.

தம்பி..அவள் அடைக்கலமாய் வந்தவள்..அவளுக்கு தீங்கு இழைத்தால்..அவளின் கந்தர்வக் கணவர்கள் உன்னைக் கொன்றுவிடுவார்கள்' என்றாள்.

ஆனால் அவன் பயப்படவில்லை..காதல் நோயால் மயங்கினான்.வேறு வழி தெரியாத அரசி..சைரந்தரியிடம் கீசகன் வீட்டிற்கு உணவு கொண்டு செல்ல பணித்தாள்.

'நீ தான் போக வேண்டும்" என அரசி கடுமையாக ஆணையிட்டாள்.

சைரந்தரியும் சென்றாள்.அவள் கையைப் பிடித்து இழுத்து..அவளை கீசகன் அணைக்க முயன்றான்.ஓடிய அவளை எட்டி உதைத்தான்.அரசமண்டபத்திற்கு வந்துவிட்டார்கள் அவர்கள்."இந்த அநீதியைக் கேட்பார் இல்லையா?' என கதறினாள்.விராட மன்னன் உட்பட அனைவரும் வாளாயிருந்தனர்.

பீமன் அவளை தனியாக சந்தித்து ஒரு யோசனைக் கூறினான்.அதன்படி சைரந்தரியும்...கீசகன் ஆசைக்கு இணங்குவது போல நடித்து..அவனை நடனசாலைக்கு வரச் சொன்னாள்.

கீசகனும் வந்தான்...கட்டிலில் போர்வை போர்த்தி படுத்திருப்பது அவள்தான் என எண்ணி ஆசையோடு அணைக்கப் போனான்.வீறு கொண்டு எழுந்த பீமன்..அவனைத் தாக்கி காலில் இட்டுத் தேய்த்துக் கொன்றான்.

கீசகன் கொல்லப்பட்ட சேதி கேட்ட அவன் சகோதரர்கள் சைரந்தரியைக் கொல்லவர ..பீமன் அவர்களையும் கொன்றான்.

பொழுது விடிந்ததும்..அவர்களை கந்தர்வர்கள் தான் கொன்றார்கள்..என விராடான் உட்பட அனைவரும் நம்பினர்.

விராடன்..இதற்கெல்லாம் சைரந்தரிதான் காரணம்..என அவளை வெளியேற்றி விடுமாறு அரசியிடம் கூறினான்.

சைரந்தரி, அரசியிடம் இன்னும் ஒரு மாதம் பொறுத்திருக்கக் கூறினாள்.'கந்தர்வர்களால் இனி யாருக்கும் தீங்கு நேராது..நன்மையே நடக்கும்..இது சத்தியம்' என்றாள்.அரசியும் சரி என அனுமதித்தாள்.

Wednesday, July 1, 2009

48 - வேலையில் அமர்ந்தனர்

தருமர்..சாத்திரச் சுவடியும்..தர்ப்பைப் புல்லும் கொண்டு கங்கன் எண்ணும் பெயருடன் விராடனைச் சந்தித்தார்.விராடனும்...அவரது நட்பு தனக்குத் தேவை என அவரை தன்னிடமே இருக்க வேண்டினான்.

பின் பீமன் ஒருநாள் வந்து..தன் பெயர் வல்லன் என்றும்..தனக்கு சமையல் வேலை தெரியும் என்றும்..யுதிஷ்டர் இடத்தில் சமையல்காரனாய் இருந்ததாகவும் கூறினான்.அவன் பேச்சில் நம்பிக்கை ஏற்பட..விராடனும் அவனை..அரண்மனை சமையல்காரர்களுக்கு தலைவனாக இருக்க கட்டளையிட்டான்.

திருநங்கை வடிவில் வந்த அர்ச்சுனனோ..தன் பெயர் பிருகன்னளை என்றும்..தான் ஆடல் பாடல்களில் பயிற்சி பெற்றுள்ளதாகவும்..மன்னரின் மகளுக்கு..நல்லிசையும் , நாட்டியமும் கற்றுத்தத் தயார் என்றான்..வாய்ப்பும் கிட்டியது.

பின் வந்த நகுலன்...'தாமக்கிரந்தி' என்பது தன் பெயர் என்றும்...குதிரைகள் இலக்கணம் தனக்குத் தெரியும் என்றும்...யுதிஷ்டரின் குதிரைகளை அடக்கிய அனுபவம் உண்டு என்றும் கூற...விராடன்..குதிரைகளை காக்கும் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்தான்.

சகாதேவன்..தந்திரிபாலன் என அங்கு வந்தான்.தான் பாண்டவர்களின் பசுக்கூட்டத்தை அக்கறையுடன் கவனித்துக் கொண்ட அனுபவத்தைக் கூற மன்னனும்..அந்தப் பணியை அவனுக்குக் கொடுத்தான்.

திரௌபதியோ...சைரந்திரி என்ற பெயருடன் வந்தாள்.தன்னை ஒரு வேலைக்காரி என்று ராணியார் சுதேட்சணையிடம் அறிமுகம் செய்துக் கொண்டால்.தனக்கு ஐந்து கந்தர்வர்கள் கணவர்கள் என்றும் ஒரு சாபத்தால் பிரிந்திருப்பதாகவும் உரைத்தாள்.இந்த பிரிவு ஓராண்டுகள் மட்டுமே என்றாள்.

ஆனால்..அரசமாதேவியோ 'பெண்ணே!..உன் அழகு..பிற ஆடவரால்..உன் கற்புக்கு பங்கத்தை ஏற்படுத்தி விடுமோ என அஞ்சுகிறேன்..'ஏன்றாள்.

'அரசியாரே!..தாங்கள் கவலைப்பட வேண்டாம்..என் கணவர்கள் வெளித்தோற்றத்திற்கு தெரியமாட்டார்களே தவிர..என்னை உயிர்போல் பாதுகாப்பர்.எவனாவது..என்னிடம் முறைதவறினால் கொல்லப்படுவார்கள்' என திரௌபதி உரைத்தால்.

பாண்டவர் தேவிக்கு..ஒப்பனை செய்த அனுபவம் உண்டு என்றும்..அரசிக்கு அப்பணியை செய்வதாகவும் உரைத்தாள்.

அரண்மனையில் வேலைக்காரர்களாக அனைவரும் இருந்தது..விதியின் கொடுமை என்றாலும்...மேற்கொண்ட பணியை நன்கு செய்து முடித்தார்கள்.

Tuesday, June 23, 2009

47-யார்..யார்..எப்படி..?

ஓராண்டுகால அஞ்ஞாத வாசத்தை எப்படி நிறைவேற்றுவது என ஆலோசித்த பாண்டவர்கள்..அதற்கு விராட நாடே ஏற்றது என முடிவு செய்தனர்.

அப்போது அர்ச்சுனன் தருமரிடம்..'அண்ணா.., தாங்கள் ராஜசூய யாகம் செய்த மன்னர்..அங்கு போய் விராடனுக்கு பணிந்து எப்படி இருக்க முடியும்?'என்றான்.

அப்போது தருமர்..'தம்பி வருந்தாதே..கங்கன் என்னும் பெயருடன் துறவுக் கோலம் பூண்டு..விராட மன்னனுக்கு ஆசி கூறும் உயர் நிலையில் இருப்பேன்' என்றார்.

பின் ஒவ்வொருவரும் எப்படி மாறுவேஷத்தில் இருப்பது எனப் புலப்படுத்தினர்.

தான் சமையல்கலையில் வல்லவன் என்றும்..மடைப்பள்ளியைச் சார்ந்து வல்லன் என்னும் பெயருடன் சுவையான உணவு மன்னனுக்கு அளிக்கும் பணியில் ஈடுபடுவேன்...என்றான் பீமன்.

தான் இந்திரலோகத்தில் பெற்ற சாபத்தை பயன்படுத்திக் கொள்ளப் போகதாகவும்..அதன்படி 'பேடி'வேஷம் தாங்கி..பிருகன்னளை என்ற பெயருடன்..அரசகுமாரிக்கு நடனம், இசை ஆகியவை கற்றுத் தரும் பணியில் ஈடுபடப் போவதாக அர்ச்சுனன் கூறினான்.

தான் குதிரை இலக்கணங்களை அறிந்திருப்பதால்..தாமக்கிரந்தி என்ற பெயரில்..குதிரைகளை பாதுகாப்பாக வளர்க்கும் பணியில் ஈடுபடப் போவதாக நகுலன் கூறினான்.

தான் தந்திரிபாலன் என்ற பெயரில்..மாடுகளைப் பார்த்துக் கொள்ளும் பணியில் ஈடுபடப்போவதாக சகாதேவன் உரைத்தான்.

தான் சைரந்தரி என்னும் பெயருடன் மன்னன் மனைவிக்கு ஒப்பனை
செய்யும் பணியில் ஈடுபடுவேன் என்றாள் திரௌபதி.

பின்...தங்கள் ஆடை..மற்றும் ஆயுதங்களை வைக்க இடம் தேடி..மக்கள் நடமாட்டம் அற்ற ஒரு சுடுகாட்டில்..ஓங்கி வளர்ந்த ஒரு வன்னி மரத்தின்..உச்சியில் இருந்த பொந்தில் அனைவற்றையும் வைத்தனர்.

பின்னர் தருமர் துர்க்கையை நோக்கி தியானம் செய்ய..துர்க்கையும் காட்சி அளித்து..அஞ்ஞாத வாசம் நல்லபடி நடந்தேறும் என்றும்..பின் போரில் வெற்றியும் கிடைக்கும் என்றும் வரம் அளித்து மறைந்தது.

தருமருக்கு..பின் தெய்வீகத் தந்தையின் அருளால் துறவிக் கோலம் தானாகவே வந்தமைந்தது.காவியும்,கமண்டலமும் ஏந்தித் தூய துறவியாகவே காட்சியளித்தார்.

அதைப்போலவே..மற்றவர்கள் தோற்றமும்..அவரவர்கள் நினைத்தபடி மாறின.

Thursday, June 18, 2009

46 - வனபர்வம் முடிந்தது

தருமரின் பதில்களில் திருப்தியடைந்த யட்சன் 'தருமரே..உமது தம்பியரில் யாருக்கேனும் உயிர் தருகிறேன்..யாருக்கு வேண்டும்?' எனக் கேட்க...தருமர்..'நகுலன் உயிர் பெற வேண்டும்' என்றார்.

உன் உடன் பிறந்த மகாவீரர்களான..அர்ச்சுனன், பீமனை விடுத்து..நகுலன் உயிரை ஏன் விரும்புகிறாய்..என்ற யட்சனுக்கு..தருமர்..'என் தந்தைக்கு குந்தி,மாத்ரி என இரு மனையியர்.இருவருமே எங்களுக்கு தாயார்கள் தான்..ஆயினும்..இருவரும் புத்திரர் உள்ளவராக விரும்புகிறேன்' என்றார்.

தருமரின்..பரந்த மனதைப்பாராட்டிய யட்சன்..'எல்லோரும் உயிர் பெறட்டும்' எனக் கூற...உறங்கி எழுவது போல அனைவருமெழுந்தனர்.

பின்னர் தன்னை பல கேள்விகள் கேட்ட யட்சனை தருமர் ஒரு கேள்வி கேட்டார். 'யாராலும் வெற்றி கொள்ள முடியாத...என் தம்பியரை..மாய்த்துப் பின் உயிர் பெறச் செய்த தாங்கள் யார்'என்றார்.

'மகனே! நான் தர்ம தேவதை..நான் உனக்கு தேய்வீகத் தந்தை.நீ உனது கொள்கையில் எவ்வளவு தீவிரமாய் இருக்கிறாய் என பரீட்சித்தேன்..உனக்கு வேண்டும் வரம் கேள்' என்றார்.

'தரும தேவதையே!முனிவருக்கு அரணியுடன் கூடிய கடைகோலை தர வேண்டும்' என்றார் தருமர்.

'மானாக வந்து அதைக் கவர்ந்தது நான்தான்..இந்தா' என தர்ம தேவதை..திருப்பிக் கொடுக்க தருமர் பெற்றுக் கொண்டார்.

'இன்னும்..என்ன வரம் வேண்டும்..கேள்' என்றது தர்ம தேவதை.


'பன்னிரெண்டு ஆண்டுகள் வெற்றிகரமாக முடிந்த வனவாசம் போல..ஓராண்டு அஞ்ஞாதவாசமும் அமைய வேண்டும்' என்றார் தருமர்.

"உங்களை யாரும் கண்டுபிடிக்க முடியாது..நீங்கள் வெற்றி வீரராக திகழ்வீர்கள்' என அருளி தர்ம தேவதை மறைந்தது.

பாண்டவர்கள் பின் ஆச்ரமத்தை அடைந்து..கடைகோலை முனிவரிடம் கொடுத்து வணங்கினர்.

பின் ஓராண்டு அஞ்ஞாத வாசம் பற்றி திட்டமிட்டனர்.வனவாசத்தின் போது உடன் இருந்த முனிவர்களையும், மற்றவர்களையும்...அஞ்ஞாதவாசம் இருக்கும் போது உடன் இருக்க முடியாது என்பதால்....அனைவரும் தருமரின் வேண்டுகோளை ஏற்று பிரிந்து சென்றனர்.இனி அட்சயபாத்திரத்தின் தேவையும் இருக்காது என்றாயிற்று.

வன பர்வம் முற்றியது..

அடுத்த பதிவு முதல்..விராட நாட்டு நிகழ்ச்சிகளைக் கூறும் விராட பர்வம்.

Wednesday, June 10, 2009

45 - யட்சன் கேள்வியும்..தருமர் பதிலும் (தொடர்ச்சி)

யட்சன்-இதயம் இல்லாதது எது

தர்மர்-கல்

உலகம் எங்கும் செல்பவனுக்கு உற்ற துணை எது

கல்வி

வேகம் மிக்கது எது

நதி

நோய் உடையவனின் நண்பன் யார்

மருத்துவர்

உயிர் விடுபவனுக்கு உற்ற துணை யார்

அவன் செய்த நல்லறம்

எது அமிழ்தம்

பால்

வெற்றிக்கு அடிப்படை எது

விடா முயற்சி

புகழ் வாழ்க்கை எதனால் அடையலாம்

இல்லாதவர்க்கு ஒன்றைத் தருவதால்

உலகில் தனியாக உலா வருபவன் யார்

சூரியன்

உலகில் மிகச் சிறந்த தர்மம் எது

கொல்லாமை

உலகெங்கும் நிறந்திருப்பது எது

அஞ்ஞானம்

முக்திக்கு உரிய வழி எது

பற்றினை முற்றும் விலக்குதல்

யாரிடம் கொண்ட நட்பு மேன்மை உடையது

சாதுக்களிடம் கொண்ட நட்பு

நாட்டுக்கு உயிர் போன்றவன் யார்

அரசன்

எது ஞானம்

மெய்ப்பொருளை (கடவுள்) அறிவதே ஞானம்

ஒருவனுக்கு பகையாவது எது

கோபம்

முக்திக்கு தடையாக இருப்பது எது

'நான்' என்னும் ஆணவம்

பிறப்புக்கு வித்திடுவது எது

ஆசை

எப்போதும் நிறைவேறாதது எது

பேராசை

யார் முனிவர்

ஆசை அற்றவர்

எது நல்வழி

சான்றோர் செல்லும் வழி

எது வியப்பானது

நாள்தோறும் பலர் இறப்பதைக் கண்ட போதும்..தனக்கு மரணம் இல்லையென்று மனிதன் கருதுகின்றானே அதுதான் வியப்பானது

மீண்டும் பிறவி வராமல் இருக்க ஒருவர் என்ன செய்ய வேண்டும்

எப்போதும் நல்லறமே செய்தல் வேண்டும்.

Tuesday, June 9, 2009

44 - யட்சன் கேள்வியும்..தருமர் பதிலும்

யட்சன்- சூரியனை உதிக்கச் செய்வது யார்?

தருமர்-பிரம்மா

சூரியன் எதில் நிலைத்து நிற்கிறான்

சத்தியத்தில்

ஒருவன் எதனால் சிறப்படைகிறான்

மன உறுதியால்

சாதுக்களின் தருமம் எது

தவம்

உழவர்களுக்கு எது முக்கியம்

மழை

விதைப்பதற்கு எது சிறந்தது

நல்ல விதை

பூமியைவிட பொறுமை மிக்கவர் யார்

தாய்

வானினும் உயர்ந்தவர் யார்

தந்தை

காற்றினும் விரைந்து செல்லக்கூடியது எது

மனம்

புல்லைவிட அதிகமானது எது

கவலை

ஒரு மனிதனுக்கு உயிர் போன்றவர் யார்

மகன்

மனிதனுக்கு தெய்வத்தால் கிடைத்த நன்மை எது

மனைவி

ஒருவன் விட வேண்டியது எதனை

தற்பெருமையை

யார் உயிர் அற்றவன்

வறுமையாளன்

எது தவம்

மன அடக்கம்

பொறுமை என்பது எது

இன்ப துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுதல்

உயர்ந்தோர் என்பவர் யார்

நல்லொழுக்கம் உடையவர்

மகிழ்ச்சியுடன் வாழ்பவர் யார்

கடன் வாங்காதவர்

தூங்கும் போது கண்களை மூடாமல் இருப்பது எது

மீன்

(மேலும் கேள்வி பதில்கள் அடுத்த பதிவில்)

Thursday, June 4, 2009

43-யட்சன்

பன்னிரண்டு கால வனவாசம் நெருங்கியது.அதற்குள் பாண்டவர்களுக்கு ஒரு சோதனை வந்தது.வேள்விக்கு உதவும்..அரணியுடன் கூடிய கடைகோல் ஒன்றை முனிவர் ஒருவர் இழந்தார்.அது ஒரு மானின் கொம்பில் ஒட்டிக்கொள்ள...மருண்ட மான்..அதனுடன் ஓட்டம் பிடித்தது.தமது வேள்வி தடைபடாமல் இருக்க..அதை மீட்டுத்தரும்படி..பாண்டவர்களை அம்முனிவர் கேட்டார்.

மானைத் தொடர்ந்து..பாண்டவர்களும் ஓடினர்.ஆயினும் மானைப் பிடிக்க இயலவில்லை.மானும் ஓடி மறைந்தது.

முனிவருக்கு உதவ முடியவில்லையே..ஏன் இந்த இழிவு நமக்கு..என பாண்டவர்கள் எண்ணினர்.

பாஞ்சாலியை அவையில் அவமானப் படுத்தினவனை ..அன்றே கொன்றிருக்க வேண்டும்..அதனால்தான் இந்த இழிவு...என்றான் பீமன்.

அன்று நாக்கில் நரம்பின்றி பேசினானே கர்ணன்..அவனை அன்றே கொன்றிருக்க வேண்டும்...அதனால்தான் இந்த இழிவு என்றான் பார்த்தன்.

சகுனி மாயச் சூதாடும்போது..அப்போதே அவனை கொன்றிருக்க வேண்டும்..அதனால் தான் இந்த இழிவு என்றான் சகாதேவன்.

இந்நிலையில் தாகம் ஏற்பட..நகுலனை தண்ணீர் எடுத்துவரக் கூறினார் தருமர்.

தண்ணீரைத் தேடி அலைந்த நகுலன்..வெகு தொலைவில்..ஒரு தோப்புக்கு நடுவே ஒரு குளம் இருப்பதைக் கண்டான். அதன் அருகே சென்று..நீரை மொண்டு பருக ஆரம்பிக்கையில் 'நில்' என்ற குரல் கேட்டது.அதை அலட்சியம் செய்துவிட்டு..நகுலன் நீரைப் பருக அவன் சுருண்டு வீழ்ந்து மாண்டான்.நீண்ட நேரம் ஆகியும் நகுலன் வராததால்..சகாதேவனை..தருமர் அனுப்ப..அவனுக்கும்..நகுலனுக்கு ஆன கதியே ஆயிற்று.

பின்னர் அனுப்பப்பட்ட பார்த்தன்.பீமன் ஆகியோரும் இக்கதிக்கு ஆளாகினர்.

நீண்ட நேரம் எவரும் திரும்பாததால்..தருமர்..அனைவரையும் தேடிச் சென்றார்.

அவர்களுக்கு ஆனக் கதியை எண்ணி..புலம்பி..அழுதார்.நாக்கு வரண்டது.தண்ணீர் அருந்த நினைத்த போது...'நில்' என்றது ஒரு குரல்..இத் தடாகம் என்னுடையது.என் அனுமதியின்றி இவர்கள் இறங்கியதால்..இவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது.என் கேள்விகளுக்கு பதில் தராவிடின்...உன் முடிவும் இப்படித்தான் ஆகும்.நான் கேட்கும் கேள்விகளுக்கு...தகுந்த விடை அளித்தால்...நீ நீர் பருகலாம்' என்றது.

இது யட்சன் குரல் என அறிந்த தருமர்..'கேளுங்கள்..என்னால் இயன்றவரை பதில் தருகிறேன்' என்றார்.

(அடுத்த பதிவு..யட்சன் கேள்வியும்...தருமர் பதிலும்)

Wednesday, May 27, 2009

42-ஜயத்ரதனின் தவம்

காம்யக வனத்தில் தங்கியிருந்த பாண்டவர்கள் ஒருநாள் வேட்டைக்கு சென்றனர்.திரௌபதி சில பணியாளர்களுடன் தனித்து இருந்தாள்.அப்போது சிந்து நாட்டு மன்னன் ஜயத்ரதன் சால்வ தேசத்தை நோக்கி அக்காட்டு வழி சென்றான்.அவனுடன் கோடிகாச்யன் முதலிய அரசர்களும் சென்றனர்.

ஆசிரமத்தின் வெளியே நின்றுக்கொண்டிருந்த திரௌபதியை ஜயத்ரதன் கண்டான்.கண்டதும் காதல் கொண்டான்.அதை அவளிடம் வெளிப்படுத்தினான்.

திரௌபதி ..அது கொடிய செயல் என்றும்..தனது வரலாற்றையும் கூறினாள்.'தருமர் வடக்கேயும்,பீமன் தெற்கேயும்,அர்ச்சுனன் மேற்கேயும்,நகுல,சகாதேவர்கள் கிழக்கேயும் வேட்டைக்குச் சென்றுள்ளனர்.அவர்கள் வருவதற்குள் இந்த இடத்தை விட்டு சென்றுவிடு.இல்லையேல் அவர்களால் உனக்கு ஆபத்து ஏற்படும்.' என்றாள்.

அந்த முரடன் எதையும் கேட்பதாய் இல்லை..காமவயப்பட்ட அவன் அவளை தூக்கிச் செல்ல முயன்றான்.அவளது மேலாடையைப்பற்றி இழுத்து தேர் மீது ஏற்ற நினைத்தான்.

அவன் செயலை, உடன் இருந்தோர் தடுத்தும் கேட்கவில்லை.

வேட்டைக்குச் சென்ற ஐவரும் ஓரிடத்தில் கூடினர்.அப்போது..'ஆச்ரமத்தில் ஏதோ ஆபத்து நேர்ந்ததற்கான அபசகுனம் தோன்றுகிறது' என்றார் தருமர்.

விரைவில் ஐவரும் ஆச்ரமத்திற்கு விரைந்தனர்.ஜயத்ரதன் திரௌபதியை அபகரித்து சென்றுவிட்டதை அறிந்தனர்.தேர் சென்ற சுவடை வைத்து..சென்று..ஜயத்ரதனுடன் போரிட்டனர்.அவனுடன் வந்த அரசர்கள் தோற்று ஓடினர்.ஓட முயன்ற ஜயத்ரதனை பீமன் கடுமையாக தாக்கினான்.அவனை கயிற்றில் கட்டித் தேரில் ஏற்றி தருமரிடம் அழைத்து வந்தான் பீமன்.

'தம்பி..இவனை விட்டு விடு.இவன் நமக்கு மைத்துனன்..துரியோதனின் தங்கையான துச்சலையின் கணவன்' என்றார்.

நாணித்தலைக் குனிந்து திரும்பிய ஜயத்ரதன்..கங்கைக் கரைக்குச் சென்று கடும் தவம் இருந்தான்.

சிவன் காட்சியளித்து..'என்ன வரம் வேண்டும்?' என்றார்.

பாண்டவர்களைக் கொல்லத்தக்க வலிமையை எனக்கு அருள வேண்டும்..என வேண்டினான்.

'கண்ணனின் துணையிருப்பதால்..உன்னால் பாண்டவர்களை வெல்ல முடியாது.ஆனாலும் அவர்களை ஒரு நாள் எதிர்த்து நிற்குமாற்றலை உனக்கு அளிக்கிறேன்.ஆனால்..அதனால் அவர்களை அழித்தொழிக்கமுடியும் என எண்ணாதே..' என்று கூறி மறைந்தார்.

அதுவே போதும் என்ற ஜயத்ரதன்..நகரம் போய்ச் சேர்ந்தான்.இந்த ஜயத்ரதன் தான் 13ம் நாள் போரில் மாவீரன் அபிமன்யுவைக் கொன்றவன்.

Tuesday, May 19, 2009

41-அட்சயபாத்திரம்

பாண்டவர்களது வனவாசம் முடிவுக்கு வரும் காலம் நெருங்குவதை உணர்ந்த துரியோதனன்..அவர்களை எப்படி அழிப்பது என்ற யோசனையில் ஆழ்ந்தான்.அப்போது துர்வாசர் பத்தாயிரம் சீடர்களுடன் துரியோதனன் இருக்கும் இடம் வந்தார்.

துர்வாசரின் மந்திர சக்தி அனைவரும் அறிந்ததே.அவர் அருளிய மந்திர சக்திதான் கன்னிப்பருவத்தில் குந்தி கர்ணனை பெற்று எடுக்க காரணமாய் அமைந்தது.

அவருக்கு அருளும் சக்தியும் உண்டு.பிறரை மருளச் செய்யும் சக்தியும் உண்டு.

தன் சூழ்ச்சிக்கு..துர்வாசரை பயன்படுத்திக் கொள்ள நினைத்தான் துரியோதனன்.அதனால் அவரை நன்கு உபசரித்து வணங்கினான்,அவனது உபசரிப்பைக் கண்டு மகிழ்ந்தவர்..'உனக்கு வேண்டும் வரம் கேள்' என்றார்.துர்வாசர் சினம் கொண்டால் அதைத் தடுத்து நிறுத்தவும் யாராலும் முடியாது.

தவமுனிவரே! நீங்கள் பாண்டவர் இருக்குமிடம் செல்ல வேண்டும்.அங்கு அவர்கள் அனைவரும் உணவு உண்டபின் செல்ல வேண்டும்'' என வேண்டினான்.(எல்லோரும் உணவு உண்டதும் சென்றால்..அட்சயபாத்திரத்தில் உணவு பெருகாது.துர்வாசருக்கு உணவு அளிக்கமுடியாது.அதனால் அவர் சினம் கொண்டு அவர்களுக்கு சாபமிட்டு அழித்து விடுவார் என எண்ணினான்.)

துர்வாசரும்...பாண்டவர் இருக்குமிடம், தன் சீடர்களுடன் சென்றார்.அவர்களை பாண்டவர்கள் முறைப்படி வரவேற்றனர்.நீராடிவிட்டு வருவதாகக் கூறிவிட்டு,சீடர்களுடன் தடாகம் சென்றார் அவர்.

'அட்சயபாத்திரத்தில்..இனி உணவு பெருகாதே' என திரௌபதி கலக்கமுற்றாள்.கண்ணனை பிரார்த்தித்தாள்.கண்ணனும் அவள் முன் தோன்றி..தன் பசியை போக்கக் கோரினார்.திகைத்தாள் திரௌபதி.

கண்ணன் அந்த அட்சயபாத்திரத்தை கொண்டுவருமாறு பணித்தார்.

அதில் ஒன்றும் இல்லை என்றவாறு..அப்பாத்திரத்தை கொணர்ந்தாள் பாஞ்சாலி.ஆனால் அதன் மூலையில்..ஓரத்தில்..ஒரு சோற்று பருக்கை இருந்தது.அதை எடுத்து கண்ணன் வாயில் போட..பாரதம் முழுதும்..பசி அடங்கியது.

நீராட சென்ற முனிவருக்கும்..பரிவாரங்களுக்கும் ..அவர்கள் இதுவரை சுவைத்தறியா..உணவு உண்ட திருப்தி ஏற்பட்டது.

அப்போதுதான்..முனிவரும்..காலமில்லா காலத்தில்..தருமரின் ஆசிரம் சென்று, அவர்களை சோதனைக்கு உட்படுத்தியது தவறு என உணர்ந்தார்.

இப்படியாக..துரியோதனனின் இம் முயற்சி தோல்வி அடைந்தது.

Sunday, May 17, 2009

40-கர்ணன் சபதம்

தருமர் முன் செய்த ராஜசூயயாகம் போல ஒரு யாகம் செய்ய விரும்பிய துரியோதனன் அதை கர்ணனிடம் தெரிவித்தான்.

ராஜசூயயாகம் செய்ய ஒரு நிபந்தனை உண்டு.பல நாட்டு மன்னர்களும் அந்த யாகம் செய்பவரது தலைமையை ஏற்க வேண்டும்.அதன்படி பல நாடுகளுக்குச் சென்று..அம்மன்னர்களை வென்று..உன் தலைமையை ஏற்கச் சொல்கிறேன் என துரியோதனனிடம் கூறிவிட்டு..கர்ணன் புறப்பட்டான்.

அங்கம்,வங்கம்,கலிங்கம் ஆகிய நாடுகளை வென்றான்.துருபதன்,சுகதத்தன் ஆகியோரை அடக்கினான்.நான்கு திசைகளிலும் மன்னர்களை வென்றான்.வெற்றி வீரனாக திரும்பிய கர்ணனை துரியோதனன் ஆரத்தழுவி வரவேற்றான்.

ஆனால் புரோகிதர்கள்..ராஜசூயயாகம் செய்ய ஒப்புக்கொள்ளவில்லை.காரணம் முன்னர் அந்த யாகத்தைச் செய்த தருமர் இன்னமும் இருக்கிறார்.அந்த யாகம் செய்த ஒருவர் உயிருடன் இருக்கையில் வேறு ஒருவர் செய்வது மரபல்ல. மேலும் தந்தை திருதிராட்டினன் முன் மகன் அதைச் செய்யக்கூடாது என்றும் கூறினர்.

ஆனால்..அதற்கு பதிலாக வைஷ்ணவ வேள்வி செய்யலாம்..என்றனர்.பொன் கலப்பையால் நிலத்தை உழுது இயற்றும் வேள்வி அது.இவ் வேள்வியில் கலந்துக் கொள்ள பல மன்னர்களுக்கு அழைப்பு அனுப்பினார்கள்.துரியோதனன் பாண்டவர்களிடமும் தூதுவனை அனுப்பினான்.

பதின்மூன்று ஆண்டுகள் முடிந்த பின்னரே அஸ்தினாபுரம் திரும்புவோம் என தூதுவனிடம் தருமர் உரைத்தார்.

ஆனால்..பீமனோ..'எங்கள் வனவாசம் முடிந்ததும்..நாங்கள் செய்யும் வேள்வியில் துரியோதனன் முதலானோர் ஆஹூதி (வேள்விப்பொருள்) களாகப் பயன்படுவார்கள்' என்றான்.

விதுரர் முதலியோர் கலந்துக் கொள்ள வைஷ்ணவ வேள்வியை சிறப்பாகச் செய்தான் துரியோதனன்.மேலும் அதற்கு கர்ணனே காரணம் என துரியோதனன் எண்ணினான்.

துரியோதனன் கர்ணனை நோக்கி 'கர்ணா..நீ எனக்கு மற்றொரு உதவியும் செய்ய வேண்டும்..பாண்டவர்கள் போரில் மடிந்ததும்..எனக்காக நீ ராஜசூயயாகத்தை நிறைவேற்ற வேண்டும்.அப்போது என் புகழ் மேலும் உயரும்' என்றான்.

கர்ணன் அப்போது ஒரு சபதம் செய்தான்..

'மன்னா..அர்ச்சுனனை கொல்லும் வரை..நான் மது, மாமிசங்களைத் தீண்டமாட்டேன்..இல்லை என்பார்க்கு இல்லை எனக் கூறமாட்டேன்'

கர்ணனின் இந்த சபதம்..தருமர் காதுக்கும் எட்டியது.கவச..குண்டலங்களுடன் பிறந்த கர்ணனை வெல்வது அரிதாயிற்றே..என அவர் கவலையுற்றார்.அப்போது வியாசர் தோன்றி..தான தர்மப் பலன் பற்றி தருமரிடம் விரிவாக எடுத்துரைத்து மறைந்தார்.