Friday, December 31, 2010

135-கோபம் எதனால் தோன்றுகிறது

கோபம் முதலானவை எதனால் தோன்றுகின்றன? எப்படி அழிகின்றன? என்ற வினாவிற்கு பீஷ்மர் தந்த பதில்
கோபம்,மோகம்,காமம்,சோகம், பிறருக்குத் தீங்கு செய்ய எண்ணும் எண்ணம் ஆகியவை உயிர்களுக்குப் பலமான வைரியாகும்.இவை மனிதர்களைச் செந்நாய்கள் போலச் சூழ்ந்து அழிக்கும்.துன்பத்திற்கு இவைதாம் காரணம் என உணர்தல் வேண்டும்.இவை பற்றி விரிவாகக் கூறுகிறேன் கேட்பாயாக..
கோபம் பேராசையில் இருந்து தோன்றுகிறது.பொறுமையால் அது அழியும்.புலனடக்கம் இன்மையால் காமம் உண்டாகிறது.மனிதன் அறிவு பெற்று வெறுப்புக் கொள்வானாயின் அப்போது காமம் அழியும்.மோகம் அறியாமையால் உண்டாகிறது.அறிஞர்களின் அறிவுரைகளை ஏற்று நடப்பதன் மூலம் அது அழியும்.பொருள் மீது கொண்ட ஆசை விலகுமாயின் அப்பொருளை இழத்தலால் ஏற்படும் சோகம் விலகும்.பிறருக்குத் தீங்கு செய்யும் எண்ணம் கோபத்தாலும்,பேராசையாலும் உண்டாகும்.அவற்றுள் கோபத்தால் உண்டாவது உயிர்களிடத்துத் தோன்றும் அன்பால், அருளால் அழியும்.பேராசையால் தோன்றுவது அறிஞரின் தத்துவ உபதேசத்தால் அழியும்' என்றார் பீஷ்மர்.

Wednesday, December 29, 2010

133-அறியாமை பற்றி அறிதல்

தருமர் பீஷ்மரை நோக்கி..'பிதாமகரே! அறியாமை பற்றி அறிய விரும்புகிறேன்' என பணிவிடன் கேட்க பீஷ்மர் சொல்லத் தொடங்கினார்.



"மனிதன் அறியாமையால் பாவம் செய்கிறான்.அதனால் தனக்குத் தகுதியானதை அறிந்து கொள்ளாது சாதுக்களிடம் குறை காண்கிறான்.உலக நிந்தனைக்கு ஆளாகிறான்.தீய கதியாகிய நரகத்திற்கு அறியாமையே காரணம் ஆகிறது.அதனால் ஆபத்தில் சிக்கித் துன்பம் அடைகிறான்.

ஆசை,பகை,காமம்,சினம்,கர்வம்,விருப்பு,வெறுப்பு,பிறர் ஆக்கம் கண்டு பொறாமை கொள்ளுதல் ஆகிய இவை யாவும் அறியாமையால் தோன்றுபவையே! ஆகவே அறியாமையை அகற்றுவாயாக!" என்றார்

உடன் தருமர்..'மேலோனே! தருமம் பலவகையாகக் காணப்படுகிறதே, எது சிறந்த தருமம் எனக் கூற முடியுமா?'என வினவ

'பேரறிவு படைத்த தருமா..மகரிஷிகள் பல வகையான தருமங்களை உபதேசித்து இருக்கிறார்கள்.அவற்றில் மிகச் சிறந்தது புலனடக்கம் ஆகும்.இதுவே முக்திக்குக் காரணமாகும்.புலன் அடக்கம்...,தானம்,யாகம் ஆகியவற்றை விட மேலானது.புலனடக்கம் உடையவனின் முகம் பொலிவுடன் ஒளி வீசும்.புலன் அடக்கம் தரும சிந்தனையை வளர்க்கும்.உயிர்களிடத்து அருளுடைமையைத் தூண்டும்.

புலனடக்கத்திற்கான அடையாளங்களைத் தெரிந்து கொள்.பொறுமை,துணிச்சல்,கொல்லாமை,நன்மை..தீமைகளைச் சமமாக பாவித்தல்,வாய்மை,நேர்மை,நாணம்,சினம் இன்மை,இன்சொல்,யாவரிடத்தும் அன்புடன் பேசுதல்..இவையெல்லாம் புலனடக்கத்தால் ஏற்படும்.புலனடக்கம் உள்ளவனை யாரும் பழிக்க மாட்டார்கள்.அவன் ஆசை அற்றவன்.அற்ப சுகங்களை விரும்பாதவன்.உற்றார், உறவினர் என்ற பந்தங்களினின்றும் அவன் விடுபட்டவன்.பிறருடைய புகழ்ச்சியோ, இகழ்ச்சியோ அவனைப் பாதிப்பதில்லை.சாதுக்களால் பின்பற்றப்பட்ட வழியே அவன் செல்லும் பாதை ஆகும்.புலன் அடக்கம் உள்ளவன் தவம் புரியக் காடு செல்ல வேண்டியதில்லை.அது இல்லாதவன் காடு சென்றும் பயனில்லை.ஆதலால் அவனுக்கு எது வாழும் இடமோ அதுவே காடு..அதுவே ஆஸ்ரமம்' என்றார் பீஷ்மர்.



134-தவத்தின் மேன்மை



இந்த உலகமே தவத்தால் இயங்குகிறது.தவத்தை மேற்கொள்ளாதவனுக்கு ஒரு காரியமும் நடைபெறாது.தவத்தால்தான் பிரமதேவன் இவ்வுலகைப் படைத்தான்.மாமுனிகள் ஞானத்தைப் பெற்றதும் தவத்தால்தான்.மன அடக்கம் உள்ள சித்தர்கள் தவத்தினால் மூவுலகையும் அறிகிறார்கள்.பெறுதற்கு அரியதும் தவத்தால் கூடும்.பாவங்களிலிருந்து விடுபட உதவுவதும் தவம் தான்.

தவம் பல வகை.எனினும் உபவாசத்தை விட உயர்ந்த தவம் இல்லை.கொல்லாமை,வாய்மை,தானம்,புலனடக்கம் ஆகிய இவற்றைவிட மேலானது உண்ணாவிரதம்.

தாய்க்குச் செய்யும் பணிவிடையைக் காட்டிலும் மேலான தவம் இல்லை.முற்றும் துறந்த துறவிகூடத் தாயைப் பாதுகாக்க வேண்டும் என்பது விதி என்றார் பீஷ்மர்.

Monday, December 27, 2010

131-ஞானம்,தவம்,தானம்

தருமர் பீஷ்மரிடம்..'ஞானம்,தவம்,தானம்..இவற்றுள் சிறந்தது எது? என வினவ பீஷ்மர் கூறுகிறார்.

'முன்னொரு காலத்தில் வியாசருக்கும்,மைத்ரேயருக்கும் நடைபெற்ற ஒரு உரையாடலைக் கூறுகிறேன்.ஒரு முறை வியாசர் யாருக்கும் தெரியாமல் மைத்ரேயரை சந்தித்தார்.மாறுவேடத்துடன் வந்த வியாசருக்கு அறுசுவை உணவளித்தார் மைத்ரேயர்.உணவு உண்டு எழுந்திருக்கும் போது வியாசர் நகைத்தார்.அது கண்ட மைத்ரேயர் வியாசரை நோக்கி'தாங்கள் நகைத்தற்குரிய காரணத்தை நான் தெரிந்துக் கொள்ளலாமா? உம்மிடம் தவச்செல்வம் இருக்கிறது.என்னிடம் பொருட் செல்வம் இருக்கிறது.இவற்றின் தன்மைகளை விளக்கவேண்டும்" என்றார்.

வியாசர் சொன்னார் 'தவச் செல்வத்திற்கும் பொருட் செல்வத்திற்கும் சிறிது வேறுபாடு உண்டு.தவச் செல்வம் எல்லா நன்மைகளையும் தருவதனால் எல்லாவற்றையும் விடச் சிறந்ததாகும்.நீ மிகுதியானப் பொருளைச் செலவழித்தாலும் அதிகமாக இன்சொல் கூறியதாலும் எனக்கு நகையுண்டாயிற்று.வேதம் என்ன சொல்கிறது தெரியுமா?பிறருக்குத் தீங்கு இழைக்கக் கூடாது.கொடுக்க வேண்டும்.உண்மையே பேச வேண்டும் என்ற மூன்றையும் வேதம் வற்புறுத்திக் கூறுகிறது.தாகத்துடன் இருப்பவனுக்குத் தன்ணீர் தருவது பெரும் கொடையாகும்.தேவர்களை நீர் வழிபட்டதனால் என் தரிசனம் உமக்குக் கிடைத்தது.

உமது தூய தானத்தினாலும், தவத்தினாலும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.உம்மிடம் இருந்து நல்ல மணம் தூரத்திலும் வீசுகிறது.இது உமது கர்மப் பலன் என்றே கருதுகிறேன்.சந்தன மணம் போன்றதுதான் நல்ல செயல்களால் வீசும் மணமும்.தானம் தான் எல்லாப் புண்ணியங்களையும் விட மேலான புண்ணியம்.மற்றப் புண்ணியங்கள் இல்லாவிடினும் தானமே மிகச் சிறந்ததாகும்.இதில் ஐயம் இல்லை.தானம் செய்பவர்கள் உயிரையும் தரத் தயாராய் இருப்பர்.அவர்களிடத்தில் தான் தருமம் நிலை பெற்றிருக்கிறது.

ஆகமங்களைப் பயில்வதும், துறவு மேற்கொள்வதும், ஐம்பொறிகளை அடக்கித் தவம் செய்வதும் ஆகிய அனைத்தையும் விடத் தானம் மிக உயர்ந்ததாகும்" என்றார்.



132-பாவத்திற்குக் காரணம்..



பாவத்திற்குக் காரணம் யாது என்ற தருமரின் வினாவிற்கு பீஷ்மர் அளித்த பதில்

'தருமா! பெரிய முதலை போன்றது பேராசை.அதுவே பாவத்திற்கு இருப்பிடமாகும்.பேராசையிலிருந்து பாவமும், துன்பமும் உண்டாகின்றன.மேலும் பேராசை இம்சைக்குக் காரணமாகிறது.பேராசையால் சினம் உண்டாகிறது.மடமை, சூழ்ச்சி,மானக்கேடு,பொறாமை,பொருள் நஷ்டம்,பழி ஆகிய அனைத்திற்கும் பேராசையே காரணமாகும்.மக்கள் தம் தீய செயல்களை விடாமல் இருப்பதற்கும் காரணம் பேராசைதான்.எவ்வளவுதான் இன்ப போகங்களை ஒருவன் அனுபவித்தாலும் அவனது ஆசைக்கு அளவே கிடைசாது.பல நதிகள் வந்து விழுந்தாலும் கடல் நிரம்பாதது போல பேராசை உள்ளவனிடம் எவ்வளவு செல்வம் இருந்தாலும் மன நிறைவு ஏற்படாது.தேவர்களும், அசுரர்களும் கூடப் பேராசையின் உண்மைத் தன்மையை உணரவில்லை

அறியாமையையும்,ஐம்பொறிகளையும்,மனத்தையும் வென்ற மனிதன் பேராசையை வெற்றி கொள்ள வேண்டும்.மனதை அடக்காத பேராசைக்காரரிடம் வீண் ஆடம்பரம்,துரோகம், புறங்கூறல்,பொறாமை ஆகியவை இருக்கும்.மிகப் படித்த அறிஞர்கள் ஆகமக் கருத்துக்களை நன்கு மனதில் வைத்திருப்பர்.பல ஐயங்களை விலக்குவர்.ஆனால் பேராசை காரணமாக அவர்கள் அறிவு இழந்து எப்போதும் துன்புறுவர்.அவர்கள் உள்ளம் கொடூரமானது.ஆனால் தேனொழுகப் பேசுவர்.தருமத்தின் பெயரால் அவர்கள் உலகைக் கொள்ளையடிப்பர்.

மன்னனே! நேர்மையானவர்களைப் பற்றிக் கூறுகிறேன்.அவர்கள் மேல் உலகம் இல்லையென்றாலும் ஈதலே கடன் என்று எண்ணுபவர்.விருப்பு வெறுப்பு அற்றவர்.பெரியோர்களின் சொற்களில் சிந்தை செலுத்தும் இயல்பினர்.புலனடக்கம் உடையவர்.வாய்மையைப் போற்றுபவர்.இன்பத்தில் திளைக்க மாட்டார்கள்.துன்பத்தில் மூழ்க மாட்டார்கள்.இரண்டையும் சமமாகக் கருதுவர்.அவர்கள் செய்யும் தருமம் பிறர் பாராட்டுதலுக்கோ புகழுக்கோ அல்ல.பயம்,சினம்,ஆசை ஆகியவை இவர்களிடம் நெருங்கா.இத்தகையோரை நீ போற்றுதல் வேண்டும்.

Friday, December 24, 2010

130-வியாசருக்கும் ஒரு புழுவிற்கும் நடந்த உரையாடல்

தருமர் பீஷ்மரிடம் 'போரில் இறக்க மனமில்லாதவரும், மனம் உள்ளவர்களும் கொல்லப்பட்டனரே! செல்வம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் , இன்பமிருந்தாலும், துன்பம் இருந்தாலும், எந்த நிலையிலும் எந்த ஜீவனும் உயிர் விடத் துணியவில்லையே! எல்லாம் ஆசையோடு வாழவே விரும்புகின்றனவே ஏன்? அதன் காரணத்தைக் கூறுவீராக' என்று கேட்க பீஷ்மர் கூறலானார்.

'தருமா..நல்ல கேள்வி கேட்டாய்.இது தொடர்பாக வியாசருக்கும்,ஒரு புழுவிற்கும் நடந்த உரையாடலை உனக்கு நினைவுப்படுத்துகிறேன்.ஒரு நாள் பாதையில் விரைவாக ஓடும் புழுவைப் பார்த்த வியாசர்..'புழுவே..நீ பயந்தவன் போல இருக்கிறாய்.வேகமாகப் போகிறாய்.உன் இருப்பிடம் எங்கே இருக்கிறது.யாரைக் கண்டு பயப்படுகிறாய்? சொல்' என்று வினவினார்.அதற்குப் புழு, 'பாதைகளில் இரைச்சலுடன் செல்லும் வண்டிகளின் சப்தத்தைக் கேட்டு எனக்கு பயம் உண்டாயிற்று.அது என்னைக் கொன்றுவிடும் என பயந்து விலகிச் செல்கிறேன்.அதிகச் சுமையை இழுத்துக் கொண்டு சாட்டையால் அடிபட்டுப் பெருமூச்சு விட்டுத் துன்புறும் எருதுகளின் ஓசையையும் நான் உணர்கிறேன்.வண்டிகளை ஒட்டுவோர் ஒலியும் கேட்க முடிகிறது.என் போன்ற புழுப் பிறப்பினர் அதைத் தாங்க முடியாது.அந்தப் பயத்தால் விலகிப் போகிறேன்.யாருக்குத்தான் உயிரை விட மனம் வரும்' என பதில் அளித்தது.

அந்தப் புழு அவ்வாறு கூறியதும் வியாசர் அதைப் பார்த்து 'புழுவே..உனக்கு ஏது இன்பம்?விலங்கு பிறப்பாகிய உனது மரணமே இன்பம் பயக்கும் என நினைக்கிறேன்' என்றார்.

அது கேட்ட புழு, 'உயிரானது தான் எடுத்த தேகங்களில் பற்றுடன் இருக்கிறது.இந்தத் தேகத்திலும் எனக்கு இன்பம் இருப்பதை நான் உணர்கிறேன்.ஆகவே..நான் உயிருடன் பிழைத்திருக்கவே விரும்புகிறேன்.எந்தப் பிறவியிலும் உடலுக்கு ஏற்றபடி இன்பத்திற்குரிய பொருள் எல்லாம் உண்டாக்கப்பட்டுள்ளன..நான் மனிதப் பிறவியில் மிகவும் செல்வம் உள்ளவனாகப் பிறந்திருந்தேன்.எனது பேதைமையினால் உயர்ந்தோரைப் பகைத்துக் கொடியவனாக மாறினேன்.விருந்தினருக்கும்,ஏழைகளுக்கும் எதுவும் தராமல் சுவையானவற்றைத் தேர்ந்தெடுத்து நானே எல்லாவற்றையும் சாப்பிட்டேன்.ஏழைகளுக்கு உணவு தரவில்லை.யாராவது கொடுத்தால் அதையும் பறித்துக் கொண்டேன்.பிறருடைய ஆக்கம் கண்டு பொறாமை கொண்டேன்.பிறர் அனுபவிக்கும் இன்ப சுகத்தைக் கண்டு பொறாமை கொண்டேன்.பிறர் அனுபவிக்கும் இன்ப சுகத்தைக் கண்டு முகம் சுளித்தேன்.மற்றவர் பெற்ற நன்மை கண்டு வயிறு எரிந்தேன்.இப்படி முன் பிறவியில் தகாதவற்றை செய்தேன்.அவற்ரையெல்லாம் இப்போது நினைத்து மகனை இழந்தவன் போல துன்புறுகிறேன்.நல்வினை எதையும் செய்ததாகத் தெரியவில்லை.எவ்வளவு கெட்ட குணம் என்னிடம் இருந்த போதிலும் என் தாயை நான் என் கண் போல பாதுகாத்தேன்.ஒருமுறை என் வீட்டிற்கு வந்திருந்த விருந்தினருக்கு உணவு அளித்து உபசரித்தேன்.அந்த ஒரு நற்செய்கையால்தான் நான் இப்பிறவியில் இன்பத்தில் விருப்பம் கொண்டுள்ளேன்.அதனால் முந்தைய பிறவியின் நினைவு என்னை விட்டு அகலாமல் இருக்கிறது.

வியாசரே! அந்த நல்ல செயல்களின் விளைவைப் பற்றி மேலும் விளக்கமாகக் கூறுங்கள்" என்று கேட்டது.

வியாசர்..'புழுவே..நீ முன் பிறவியில் செய்த சில செயல்களால் பண்டைப் பிறவியின் நினைவில் திளைக்கிறாய்.நீ விரும்பினால் மனிதப் பிறவி எடுத்துச் சிறந்த பலன்களை அடையலாம்.ஆயின் பொருளுக்காகவே அலையும் அறிவு கெட்ட மனிதனுக்கு ஒரு நன்மையும் கிடையாது.நீ விரும்பும் குலத்தில் பிறக்கும் பேற்றினைத் தருகிறேன்' என்றார்.

புழு, தனது அடுத்த ஷத்திரியப் பிறவியில் வியாசரைச் சென்று பார்த்து வணங்கியது.'மாமுனிவரே! உம் போதனையைப் பின்பற்றியதால் நான் க்ஷத்திரியனாக..ராஜபுத்திரன் ஆனேன்.இது நான் விரும்பிய பிறவிதான்.என்னுடைய வைபவத்தை எண்ணி நானே வியப்படைகிறேன்.எத்தனை யானைகள் என்னைத் தாங்கிச் செல்கின்றன.எனது தேரை உயர்ந்த காம்போஜ நாட்டுக் குதிரைகள் இழுத்துச் செல்கின்றன.மிகச் சிறந்த ஒட்டகங்களும், கோவேறு கழுதைகளும் எனக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் முன்னே செல்கின்றன.ஏராளமான பேர் என்னை வந்து துதித்துப் போற்றுகின்றனர்.இன்னும் எனக்குப் புழுப் பிறவியின் நினைவு வருகிறது.உமது தவ மஹிமையால்தான் நான் அரச வாழ்வு பெற்றேன்.இனி நான் என்ன செய்ய வேண்டும்..கட்டளையிடுங்கள்' என விரும்பி வேண்டியது.

அதற்கு வியாசர்..'நீ புழுவாகப் பிறந்தாலும்..என்னை வணங்கிப் போற்றியதால் அரச வம்சத்தில் பிறந்திருக்கிறாய்.நீ விரும்பினால் அடுத்த பிறவியில் அறவோராகப் பிறக்கலாம்' என்று ஆசி கூறினார்.

நல்லொழுக்கத்தினால் சிறந்த அறவோனாகப் பிறந்து பின் இறந்து தேவனாகப் பிறந்து தேவ சுகம் அனுபவித்தது புழு.

Thursday, December 23, 2010

129-சரணம் அடைந்தவரைக் காப்பாற்றுவது - புறாவின் கதை

தருமர் பீஷ்மரிடம் 'காப்பவனுக்கு எது தருமம்?' என வினவ பீஷ்மர் சொல்கிறார்...

'தருமா..சரணம்-அடைக்கலம் என வந்தவரைப் பாதுகாப்பது உத்தமமான தருமம் ஆகும்..

சிபி முதலான அமைச்சர்கள் அபயம் என வந்தவரைக் காத்ததன் மூலம் உத்தம கதியை அடைந்தார்கள்.பறவைகளுக்குப் பகைவனான வேடன் ஒருவன் புறாவிடம் சரணடைந்தான்.அதனால் நன்கு உபசரிக்கப் பட்டான்.அது தனது மாமிசத்தையே அவனுக்கு அளித்து மேன்மை அடைந்தது' என்ற பீஷ்மர், முன்னர் பரசுராமரால் முகுந்த மன்னனுக்கு ஒரு கதை சொல்லப் பட்டது.பாவங்கள் அனைத்தையும் போக்க வல்ல அந்தக் கதையை இப்போது உனக்குக் கூறுகிறேன்..கேள்..எனக் கதையை கூறத் துவங்கினார்.

முன்னொரு காலத்தில் வேடன் ஒருவன் கொடிய மனதுடன் காட்டில் அலைந்து திரிந்தான்.பறவைகளைப் பிடிக்க இங்கும் அங்கும் வலைகளை விரித்தான்.வேட்டையாடுவதும், பெண் இன்பமும் தான் அவன் தொழில்.நாட்கள் பல சென்ற பிறகும் தனது அதர்மத்தை அவன் உணரவில்லை.

ஒருநாள் பெரும் சுழல் காற்றில் சிக்கிக் கொண்டான்.காட்டில் இருந்த மரங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் பேரொலியுடன் வீழ்ந்தன.எங்கும் பெரு மழை.வெள்ளக் காடு.கடுங்குளிரில் வேடன் நடுங்கினான்.வீடு செல்ல வழி தெரியவில்லை.பறவைகள் பெரு மழையால் வெளிவர இயலாது மரப் பொந்துகளில் பதுங்கிக் கிடந்தன.காட்டு விலங்குகளான சிங்கங்களும்,புலிகளும் மழையால் துன்புற்றுத் தரையில் வீழ்ந்தன.செல்லவும் முடியாமல், நிற்கவும் இயலாது தவித்துக் கொண்டிருந்த வேடனின் கண்ணில் பட்டது ஒரு பெண் புறா.பாவியான அந்த வேடன் அப்புறாவை எடுத்துத் தனது கூண்டில் போட்டுக் கொண்டு..ஒரு பெரிய மரத்தை அடைந்தான்.பறவைகளின் சரணாலயம் போல அம்மரம் தோற்றம் அளித்தது.

சிறிது நேரத்தில் மழை நின்றது.நீலவானம், நட்சத்திரங்களுடன் பளீச்சென தோற்றமளித்தது.குளிரால் நடுங்கிய வேடன் நேரத்தை யூகித்து அறிந்தான்.வீடு செல்வதற்குரிய நேரம் அல்ல அது.எனவே எஞ்சிய இரவுப் பொழுதை அம்மரத்தடியிலேயே கழிக்க எண்ணினான்.அம் மரத்திற்கு வணக்கம் செலுத்தி விட்டு , இலைகளை பாயாகப் பரப்பினான்.ஒரு கல்லையே தலையணையாகக் கொண்டு படுத்தான்.தூக்கம் வந்தது.

அம்மரத்தின் கிளையில் ஆண்புறா ஒன்று தன் இணையுடன் வாழ்ந்து வந்தது.காலையில் இரை தேடச் சென்ற அப்பெண் புறா இன்னும் திரும்பவில்லை.ஆண் புறா வருத்தத்துடன் 'பெருமழையில் என் பெண் புறாவிற்கு என்ன ஆயிற்றோ எனத் துன்புற்றது.என் மனைவி இல்லா வீடு சுடுகாடு போல தோன்றுகிறது,மகன்,மகள்,பேரன்,பேத்தி ..இப்படி வீட்டில் யார் இருந்து என்ன பயன்? மனைவியில்லையெனில் வாழ்க்கை ஏது?' எனப் புலம்பி அழுதது ஆண் புறா.

இந்த அழுகை ஒலி வேடனின் கூட்டில் அடைபட்டிருக்கும் பெண் புறாவின் காதில் விழுந்தது.'என் கணவர் என் மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளார்.நான் உண்மையில் பாக்கியசாலிதான்.எந்தப் பெண் கணவனால் அன்புடன் நேசிக்கப் படுகிறாளோ, அவள் மகிழ்ச்சியின் எல்லைக்கே போய் விடுகிறாள்.பெண்களுக்கு, எவன் அக்னி சாட்சியாய் மணக்கிறானோ அவன் தான் தெய்வம்.எந்தப் பெண் கணவனால் பாராட்டப் படவில்லையோ அவள் வாழ்க்கை காட்டுத் தீயால் பற்றப்பட்ட பூங்கொத்து சாம்பல் ஆவது போல சாம்பல் ஆகும்' என்று தன் கணவனின் அன்பை எண்ணி மகிழ்ந்தது.அதே நேரத்தில் கூண்டில் அடைப்பட்டுக் கிடப்பதால் துன்புற்றது.அப்படி வேடனால் பிடிக்கப் பட்டு துன்புறும் போதும் அந்தப் பெண் புறா தன் ஆண் புறாவை நோக்கிக் கூறத் தொடங்கியது.

'உமது நலனுக்காக சிலவற்றைக் கூறுகிறேன்.அடைக்கலம் என யார் வந்தாலும் அவர்களை நன்கு உபசரிக்க வேண்டும்.வேடன் ஒருவன் உமது இடம் வந்து குளிராலும், பசியாலும் துன்புற்றுப் படுத்திருக்கிறான்.அவனுக்கு வேண்டிய உதவிகளை நீர் தர வேண்டும்.புறாக்களுக்கு உரிய தருமம் நீர் அறியாததல்ல.இல்லறத்தான் ஒருவன் தன் சக்திக்கு மீறி தர்மம் செய்வான் என்றால், மறுமையில் அளவில்லாத இன்பத்தை அவன் அடைவான்.நீர் உமது உடம்பின் மீது உள்ள பற்றை விட்டு விட்டு, அறத்தின் மீது பற்றுக் கொண்டு இந்த வேடன் மகிழ்ச்சி அடையும்படி செய்யுங்கள்.என்னை நினைத்து வருந்த வேண்டாம்' என்று கூறிய பெண்புறா தலையை உயர்த்தித் தன் கணவனின் செய்கையைக் கூர்ந்து கவனித்தது.

நுணுக்கமாக உபதேசம் செய்த பெண் புறாவின் சொற்களைக் கேட்ட ஆண் புறா மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தது.அந்த வேடனை வணங்கி..'உமது வரவு நல்வரவாகட்டும்.நீர் இப்போது என் விருந்தினர்.விருந்தினரை உபசரிப்பது கடமை.வீட்டிற்கு வந்தவன் பகைவனாய் இருந்தாலும் கூட அவனைக் காப்பதே கடமையாகும்.பெரிய மரமானது, தன்னை வெட்டி வீழ்த்துப்வனுக்கும் நிழல் தரத் தவறுவதில்லை.ஆகவே உமக்கு என்ன வேண்டும் என்று சொல்லவும்.அதை நிறைவேற்றுகிறேன்..' என்றது.வேடனும்..'என்னால் குளிரைத் தாங்க முடியவில்லை..அதனைப் போக்கவும்' என்றான்.

உடனே புறா, உலர்ந்த சுள்ளிகளையும், சரகுகளையும் கொண்டு வந்து குவித்து, தேடி அலைந்து நெருப்பையும் கொணர்ந்து தீ மூட்டியது.வேடன் குளிர் நீங்கியதும்..அவனுக்கு பசிக்க ஆரம்பித்தது.'எனக்கு பசிக்கிறது' என்றான் வேடன்.

புறா வேடனை நோக்கி, 'உன் பசியைப் போக்கத் தக்க செல்வம் என்னிடம் இல்லை.துறவிகளைப் போல நாங்களும் எதையும் சேர்த்து வைப்பதில்லை' என்று கூறி 'உன் பசியை சிறிது நேரம் பொறுத்துக் கொள் என்றுக் கூறி சுள்ளிகளைக் கொண்டு பெருந் தீீயை உண்டாக்கியது.பின் வேடனை நோக்கி..'என்னையே உணவாகக் கொண்டு உன் பசியைப் போக்கிக் கொள்' என்று கூறித் தீயில் வீழ்ந்து உயிர் துறந்தது.அது கண்டு வேடன் திடுக்கிட்டான்.'என்ன கொடுமை செய்து விட்டேன்' என்று புலம்பி அழுதான்.

வேடன் புறாவின் முடிவு கண்டு மனம் பதறினான்...'கொடியவனாகிய நான் என்ன காரியம் செய்து விட்டேன்..இனி நான் வாழ்ந்து என்ன பயன்..தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட இப் புறா மகாத்மா ஆகிவிட்டது.நான் பாவியாகி விட்டேன்.இனி உற்றார், உறவினரை விட்டு உயிர் விடத் தயாராகி விட்டேன்.இதற்கு இந்தப் புறாவே எனக்கு வழிகாட்டி.எல்லாப் போகங்களையும் இன்று முதல் துறந்து விடுகிறேன்.கோடை காலத்துக் குளம் போல என் உடல் வற்றி,துரும்பாகட்டும்.பசி,தாகம்,வெயில்,மழை,பனி இவற்றைப் பொருட்படுத்தாது உபவாசம் இருப்பேன்.மறுமை நோக்கித் தருமம் செய்வேன்.தவம் செய்வேன்' என உறுதி பூண்டான்.கையிலிருந்த வில்லையும், அம்பையும் ,பறவைகள் அடைத்து வைத்திருக்கும் கூண்டையும் தூக்கி எறிந்தான்.கூண்டில் இருந்த பெண் புறாவையும் வெளியே செலுத்தினான்.தானும் புறப்பட்டான்.

வேடன் சென்றதும் அந்தப் பெண் புறா தன் கணவனை நினைத்துத் துயரத்தில் வாடியது.'உம்மிடம் நான் கொண்ட அன்புக்கு குறைவு ஏது? பிள்ளைகள் பலரைப் பெற்ற போதும் கணவனை இழந்த மகளிர் துன்புறுவர்.கணவனை இழந்தோர்க்கு யாரைக் காட்டி ஆறுதல் அளிக்க முடியும். இதுவரை இணை பிரியாது வாழ்ந்தோம்.ஆறுகளிலும்,மலைகளிலும்,மரக் கிளைகளிலும் இன்பமாக பாடித் திரிந்தோம்.இனி அந்த நாட்கள் வருமா?கணவனுக்கு இணையான தெய்வமும் இல்லை..அன்பரே!நீர் இன்றி நான் வாழப்போவதில்லை.கற்பிற் சிறந்த எந்தப் பெண் தன் கணவனை இழந்த பின் உயிர் வாழ்வாள்?" எனக் கூறிக் கொண்டே ஆண் புறா வீழ்ந்த தீயில் தானும் வீழ்ந்து உயிர் நீத்தது.

என்ன வியப்பு!!!

அழகான ஆடை அணிகலங்களை அணிந்ததும், மேலோரால் புகழப்படுவதும் ,விமானத்திலேறிச் சுவர்க்கம் செல்வதுமான தனது கணவனை அப் பெண் புறா அடைந்து சுவர்க்க இன்பத்துடன் வாழ்ந்து வந்தது.

சுவர்க்க பூமியில் மகிழ்வுடன் செல்லும் இரு புறாக்களையும் கண்ட வேடன் மனமாற்றம் அடைந்தான்.தானும் தவத்தை மேற்கொண்டு அந்தப் பறவைகளைப் போல சுவர்க்கம் செல்ல வேண்டும் என் உறுதி கொண்டு, தன் தொழிலை விட்டான்.விரதங்களை மேற் கொண்டான்.

ஒருநாள் செல்லும் வழியில் அழகான குளத்தைக் கண்டான்.அக்குளத்தில் நீர் நிறைந்திருந்தது.பறவைகளின் ஒலி எங்கும் ஒலித்துக் காதுக்கு இனிமையாக இருந்தது.வேடனுக்கு தாகம் இருந்த போதும் குளத்தை நாடவில்லை.கொடிய விலங்குகள் வாழும் காட்டை நோக்கி நடந்தான்.அப்போது பெருங்காற்று வீசியது.மரங்கள் ஒன்றோடொன்று உராய்ந்தன.தீப்பொறி கிளம்பிக் காடே தீப்பற்றி எரிந்தது.விலங்குகள் அஞ்சி ஓடின.ஆயினும் அந்த ஆபத்தினின்றும் தப்பிச் செல்ல வேண்டும் என வேடன் கருத வில்லை.தீயில் எரிந்து பாவத்தைத் தொலைத்துச் சுவர்க்கம் அடைந்தான்.

தருமா...நற்செயலால் ஆண் புறாவும்,பெண் புறாவும் சுவர்க்கம் அடைந்தன.தவற்றினைத் திருத்திக் கொண்டு நல்லொழுக்கத்துடன் வாழ்ந்த வேடனும் சுவர்க்கம் அடைந்தான்.ஆகவே நல்லொழுக்கம் மேற்கொள்க" என்றார் பீஷ்மர்.

Tuesday, December 21, 2010

128-எப்படி இருக்க வேண்டும்..

அரசரோ, பிறரோ பொருளைப் பெறுவது எப்படி? காப்பது எப்படி?பயன்படுத்துவது எப்படி? எனத் தருமர் வினவ பீஷ்மர் உரைக்கிறார்.

தருமா..சௌவீர நாட்டு மன்னன் சத்ருஞ்சனுக்குப் பரத்வாசர் சொன்னதை உனக்குப் பதிலாகச் சொல்கிறேன்



மன்னன் எப்போதும் தண்டனை தரத் தயாராய் இருக்க வேண்டும்.அப்போதுதான் மக்கள் பயத்துடன் தவறு செய்யாமல் இருப்பர்.தண்டனையே ஒரு அரசின் ஆணிவேர் எனத் தகும்.பெரிய மரம் ஆணிவேர் அறுந்தால் கீழே விழும்.அதன் கிளைகள் முறியும்.அது போலவே தண்டனையில்லை எனில் ஆட்சி எனும் மரம் ஆணிவேர் அற்ற மரம் போல சாயும்.அரசின் கிளை போன்ற மக்களும் பாதுகாப்பின்றித் துன்புறுவர்.அறிவு மிக்க அரசன் பகைவனை வேருடன் களைய முற்பட வேண்டும்.பின் அப்பகைவனுக்கு உதவியாக வருபவர்களையும் தொலைக்க வேண்டும்.சொல்லில் பணிவும்,மனதில் பகை போக்கும் எண்ணமும் நிலைத்திருக்க வேண்டும்.

பகைவனுடன் சேர்ந்து ஆற்ற வேண்டிய பணியில் அவனிடம் சமாதானம் செய்து கொள்ள வேண்டும்.அதே நேரம் முழுமையாக அவனை நம்பக் கூடாது.பாம்புடன் பழகுவது போல பகைவனிடம் பயந்தே பழக வேண்டும்.எண்ணம் ஈடேறும் வரை பகைவனைத் தோளில் சுமக்க வேண்டும்.வாய்ப்புக் கிடைக்கும் போது கீழே தள்ளித் தாக்கி வெற்றி காண வேண்டும்.

செல்வத்தை விரும்பும் மனிதன் பணிவுடன் இருக்க வேண்டும்.இன்சொல் கூற வேண்டும்.பிறருக்கு வணக்கம் செலுத்த வேண்டும்.வாழ்கின்ற காலம் குறைவாக இருந்தாலும் மின்னல் போல ஒளி விட வேண்டும்.உமியில் உள்ள தீயைப் போல ஒளியின்றி நெடுங்காலம் புகைந்து கொண்டிருக்கக் கூடாது.மேலும் நன்றி கெட்டவரிடம் கொடுக்கல் வாங்கல் கூடாது.நன்றி கெட்டவர்கள் காரியம் ஆகும் வரை நல்லபடியே இருப்பர்.ஆனதும் நம்மை அவமதிப்பர்.

மன்னன் , குயில், தான் பாதுகாக்க வேண்டியதை வேறொன்றைக் கொண்டு (காகத்தின் மூலம்) பாதுகாப்பது போல், உழவு,வாணிகம் முதலியவற்றில் பிறர் உதவி கோர வேண்டும்.கோரை முதலியவற்றை வேருடன் உண்ணும் பன்றியைப் போல மன்னன் பகையை வேருடன் களைய வேண்டும்.

சோம்பேறிகளும்,தைரியம் அற்றவர்களும், போலிக் கௌரவம் பார்ப்பவ்ர்களும், பிறர் என்ன சொல்வார்களோ எனப் பயப்படுபவர்களும், விட்டு விட்டு முயல்பவர்களும் பொருள்களையடைய மாட்டார்கள்.

ஆமை போல தன் அவயங்களை மறைத்துக் கொள்ள வேண்டும்.கொக்கு போல ஒரே நினைப்பாய் இருக்க வேண்டும்.சிங்கத்தைப் போல பயமின்றித் தன் வலிமையைக் காட்ட வேண்டும்.போகப் பொருள்களை மிதமாக அனுபவிக்க வேண்டும்.சமயத்திற்கேற்ப குருடன் போலவும்,செவிடன் போலவும் நடிக்க வேண்டும்.இடம், காலம் அறிந்து தன் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும்.பகைவரின் வலிமை அறிந்து செயல்பட வேண்டும்.

பயம் வரும் வரை பயந்தவன் போல இருக்க வேண்டும்.பயம் வந்து விட்டாலோ பயம் இல்லாதவன் போல செயல் பட வேண்டும்.

கிடைத்த வாய்ப்பை நழுவ விடுவதும் இன்னொரு வாய்ப்பை எதிர்பார்ப்பதும் அறிவிடையார் செயல் அன்று.

பகைவருடன் ஒப்பந்தம் செய்துக் கொண்டு நிம்மதியாகத் தூங்குபவன் நிலை, மரத்தின் நுனியில் படுத்துத் தூங்கியவன் விழுந்த பின் விழித்துக் கொள்வதைப் போல ஆகும்.தன் நாட்டிலும் அயல் நாட்டிலும் யாரும் அறியாதவாறு ஒற்றர்களை நியமிக்க வேண்டும்.தண்ணீர்ச் சாலைகளில்,தோட்டங்களில்,விளையாடும் இடங்களில் அவர்கள் சென்று ஒற்று அறிதல் வேண்டும்.திருடர்களுக்குச் சரியான தண்டனை அளிக்க வேண்டும்.நன்மை,தீமைகளை அறியாதவரையும், தீய வழியில் செல்பவரையும் மன்னன் தண்டிக்க வேண்டும்.இதமாக பேசினாலும் பகைவரை நம்பக் கூடாது.செல்வத்தை விரும்பும் மன்னன் மக்களைத் தன்வயப்படுத்திக் கொள்ள வேண்டும்.ஒருவனைத் தண்டிக்கும் போதும் அவனுடன் அன்புடன் பேச வேண்டும்.வாளால் பகைவனின் தலையை துண்டாக்கிய போது அவனுக்காக அழவும் வேண்டும்.செல்வத்தை விரும்பும் மன்னன் இன் மொழிகளாலும்,வெகுமதிகளாலும்,பொறுமையாலும் அனைவரையும் தன் வயப் படுத்திக் கொள்ள வேண்டும்.

கடனின் மீதி,நோயின் மீதி,பகையின் மீதி ஆகிய இவை உடனுக்குடன் வளரும் தன்மையுடையவை.வளரும் கடனும்,பகைவன் உயிருடன் இருப்பதும்,நோயின் மீதியும் பயத்தை உண்டாக்கும்.செய்ய வேண்டியவற்றைச் செம்மையாகச் செய்து முடிக்க வேண்டும்.முற்றிலும் எடுக்க படாத முள்ளும் உள்ளேயே இருந்து கொண்டு நீண்ட காலம் தொல்லை தரும்.

ஒவ்வொருவரும் கழுகைப் போல் தொலை நோக்குடனும்,கொக்கைப் போல லட்சியத்தின் மீது குறியுடனும்,நாயைப் போல குரைத்துக் கொண்டும்,சிங்கத்தைப் போல் வீரத்தை வெளிப்படுத்திக் கொண்டும் திகழ வேண்டும்.

அரசன் காலத்திற்கேற்ப மென்மையாக இருக்க வேண்டும்.கடுமையாகவும் இருக்க வேண்டும்.மென்மையால் எதையும் சாதிக்கலாம்.கடுமையாக இருப்பவனை மென்மையாக இருந்து வளைந்து கொடுத்து வெற்றி பெறலாம்.ஆகவே மென்மைத்தன்மை கடுமையைக் காட்டிலும் கூர்மையானது.அறிவாளியுடன் பகை கொண்டவன் 'நெடுந் தொலைவில் இருக்கிறேன்' என இருந்து விடக் கூடாது.ஏனெனில் அறிஞனின் கைகள் மிகவும் நீளமானவை.அவன் ஏதாவது துன்பம் செய்து கொண்டே இருப்பான்.சக்திக்கு மீறிய செயலில் இறங்கக் கூடாது.நன்றாக வேர் ஊன்றிய மரத்தை சாய்த்தல் கடினம்.அதுபோலவே வலிமை வாய்ந்த மன்னனை வீழ்த்துவதும் கடினம்.இது முன்னரே சௌவீர நாட்டு மன்னனான சத்ருஞ்சனுக்கு பரத்வாசரால் சொல்லப்பட்டது" என பீஷ்மர் கூறினார்.

Friday, December 17, 2010

127-தாய்,தந்தை,குரு சிறப்பு

தருமர், பீஷ்மரிடம் 'தருமத்தில் பல இருக்கின்றனவே..எதை, எப்படி கடைபிடிப்பது? இம்மையிலும்,மறுமையிலும் எப்படிப்பட்ட தர்ம பயனை அடைவேன்?' என வினவினார்.
பீஷ்மர் சொன்னார்..'தருமா..தாய்,தந்தை.குருவை வழிபடுவது மிகவும் முக்கியமாகும்.நன்கு வணங்கப் படும் இவர்கள் இடும் கட்டளை எப்படியிருந்தாலும் நிறைவேற்ற வேண்டும்.தருமம் இல்லாத ஒன்றை அவர்கள் கட்டளையிட்டாலும் செய்ய வேண்டும்.
தந்தையை வழிபட்டால் இவ்வுலகையும், தாயை வழிபட்டால் மேல் உலகையும்,குருவை வழிபட்டால் பிரம்ம லோகத்தையும் பெறுவாய்.எனவே தருமா அவர்களை வழிபடு.மூன்று உலகிலும் புகழ் அடவாய்.எப்போதும் அம்மூவருக்கும் சேவை செய்வதே புண்ணியமாகும்.அம் மூவரைப் போற்றாதாரை உலகம் போற்றாது..

நான் எல்லா நற்காரியங்களையும் அவர்களுக்கே அர்ப்பணித்தேன்.அதனால் எனது புண்ணியம் நூறு மடங்காய் உயர்ந்தது.

நல்ல ஆசாரியர்..வேதம் பயின்ற பத்து அந்தணர்களைவிட உயர்ந்தவர்.உபாத்தியாயர் பத்து ஆசாரியரை விட உயர்ந்தவர்.தந்தையோ பத்து உபாத்தியாயரை விட உயர்ந்தவர்.தாயோ தந்தையை விட பல மடங்கு உயர்ந்தவள் ஆவாள்.ஆகவே தாய்க்கு நிகராக யாரையும் கூற முடியாது.

எனவே உபாத்தியாயரையும்,ஆசாரியரையும்,தாய் தந்தையரையும் மனத்தாலும் மாறுபட நினைக்கக் கூடாது.அவர்களைச் சொல்லால் நிந்திக்கக் கூடாது.நிந்தித்தால் பாவம் பெருகும்.துன்பம் கூடும்' என்றார் பீஷ்மர்.

Monday, December 13, 2010

126-பூனை..எலி கதை

தருமர் பீஷ்மரை நோக்கி..'நண்பர், பகைவரிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்?' எனக் கேட்க பீஷ்மர் உரைக்கிறார்
தருமா..ஆபத்துக் காலத்தில் எப்படி தப்பிப்பது என சொல்கிறேன் கேள்.

பகைவனாய் இருப்பவன் சில சமயம் நண்பன் ஆவான்.அதுபோல நண்பனும் சில சமயங்களில் பகைவன் ஆகலாம்.மக்களிடம் பகை,நட்பு ஆகியவை ஒரே மாதிரி இருப்பதில்லை.இடத்திற்கேற்ப, காலத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியவை,செய்ய வேண்டாதவை ஆகியவற்றைப் புரிந்துக் கொண்டு நம்பவும் வேண்டும்..நம்பாது இருக்கவும் வேண்டும்.நம் நலனில் அக்கறை கொண்டவரிடம் எப்போதும் நட்புடன் மனம் மாறாமல் இருக்க வேண்டும்.உயிரைப் பாதுகாத்துக் கொள்ளப் பகைவரிடம் சமாதானம் செய்துக் கொள்ளவும் வேண்டும்.எந்தச் சமயத்திலும் சமாதானத்தை விரும்பாதவன் அறிவாளி அல்லன்.மேலும் அவன் எந்த நன்மையும் பெற மாட்டான்.காரியத்தின் பயனைப் புரிந்துக் கொண்டு பகைவனிடம் நட்பாகலாம்.நண்பனிடம் பகை கொள்ளலாம்.இது தொடர்பாக ஒரு ஆலமரத்தில் பூனைக்கும், எலிக்கும் நடந்த உரையாடலைக் காண்போம்..

ஒரு காட்டில் ஒரு ஆலமரம் இருந்தது.அதில் பலவிதமான பறவைகள் வசித்து வந்தன.அந்த மரத்தடியில் நூறு துவாரங்கள் உள்ள வலையில் பலிதம் என்னும் புத்திசாலி எலி ஒன்று வசித்து வந்தது.அந்த ஆலமரத்தில் இருக்கும் பறவைகளைத் தின்று வாழும் ஒரு பூனையும் அங்கிருந்தது.அதன் பெயர் லோமசம்.

அந்தக் காட்டில் இருந்த வேடன் ஒருவன் நாள்தோறும் மரத்தடியில் பொறி வைத்து பறவைகளைப் பிடித்து தின்று வாழ்ந்துக் கொண்டிருந்தான்.அந்தப் பொறி நரம்புகளால் ஆன சுருக்குக் கயிறுகளைக் கொண்டது.ஒருநாள் அந்தப் பூனை அந்தப் பொறியில் மாட்டிக் கொண்டு தவித்தது.அதைக் கண்ட எலி பயமின்றி இங்கும் அங்கும் ஆனந்தமாக ஓடத் தொடங்கியது.ஒரு மாமிசத் துண்டு பொறியின் மீது இருந்ததை எலி பார்த்தது.அதை எடுத்து தின்றுக் கொண்டிருந்த போது 'அரிண' என்னும் கீரி ஒன்று தன்னை நோக்கி ஓடி வருவதைக் கண்டது.அதே சமயம் ஆலமரத்தின் மீது 'சந்த்ரக' என்னும் கோட்டானையும் பார்த்து..பயப்படத் தொடங்கியது.என்ன செய்யலாம் என சிந்தித்த எலிக்கு ஒரு யோசனத் தோன்றியது.'அறிவுள்ளவன் ஆபத்தைக் கண்டு அஞ்சமாட்டான்' அதிலிருந்து தப்ப வழியைப் பார்ப்பான்.எனவே பகைவனானாலும் பூனையின் உதவியை நாடித் தப்பிக்கலாம்..பூனையும் ஆபத்தில் சிக்கியுள்ளது..அதனால் அதுவும் சமாதானத்திற்கு சம்மதிக்கும்..ஆகவே அதனுடன் ஒரு உடன்படிக்கை செய்துக் கொண்டு உயிரைக் காக்கலாம் என எண்ணியது.

மேலும்..ஆபத்துக் காலத்தில் உதவி செய்பவனே நண்பன்..உதவி செய்யாதவன் பகைவன்..சில சமயம் நண்பன் நழுவி விடுவான்.பகைவன் உதவி செய்வான்.எனவே பகைவனாயிருந்தாலும்..பூனை என்னால் விடுவிக்கப் படுமானால் எனக்கு உதவி செய்யக் கூடும்.எனவே ஒரு யுக்தியுடன் பூனையிடம் சமாதானம் செய்துக் கொள்ள வேண்டும்' என முடிவெடுத்தது.பூனையுடன் சமாதான பேச்சை ஆரம்பித்தது.

'பூனியாரே..நட்பு முறையில் ஒன்று சொல்கிறேன்..நல்ல வேளை பிழைத்தீர்கள்..நீங்கள் தப்பிக்க வேண்டும் என்பது என் எண்ணம்.இதனால் எனக்கும் நன்மை உண்டாகும்.பயம் வேண்டாம்.இப் பேராபத்தை போக்கி விடுகிறேன்.என் கூரிய பற்களால் இப் பொறியைத் துண்டுதுண்டாகக் கடித்து உங்களை வெளியே செல்லச் செய்கிறேன்.நீர் இம்மரத்தின் மேல் வெகுநாட்களாக வாழ்கிறீர், நான் மரத்தடியில் பல நாட்களாக வாழ்ந்து வருகிறேன்.இதனால் நாம் நண்பர்கள் ஆவோம்.

இப்போது கீழே உள்ள கீரி என்னை இன்னும் பார்க்க வில்லை.பார்த்தால் என் கதி அல்லளவுதான்.எனக்குப் பயமாக இருக்கிறது.நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துக் கொண்டு இன்பமாய் வாழலாம் என்றது

பகையான எலியின் வார்த்தைகளில் மகிழ்ந்த பூனை எலிக்கு நன்றி கூறியது.எலியைப் போல பூனையும் வஞ்சனையுடையது.எனவே சாமர்த்தியமாகப் பேசியது.'எலியே..உன் பேச்சு அழகாய் உள்ளது.நீ கூறியபடி என்னைச் சீக்கிரம் விடுதலை செய்.என்னைப் போல நீயும் பெரிதும் துன்புறுகிறாய்.இது எனக்கு வருத்தத்தைத் தருகிறது.நம் காரியம் நிறைவேற ஒரு உடன் பாட்டிற்கு வருவோம்.நான் இதிலிருந்து விடுபட்டால் உனக்கு உதவுவேன்'என்றது.

உடன் எலி 'பூனையாரே! இனி என் பயம் தொலைந்தது.தாங்கள் வலையிலிருந்து விடுபட்டதும் என்னைக் கொன்றுவிடக் கூடாது.தவிர்த்து கோட்டான்,கீரி ஆகியவற்றிடமிருந்தும் என்னைக் காக்க வேண்டும்" என்று கேட்டது.

பூனை 'என் உயிர் நண்பனே..உன்னால்தான் நான் பிழைக்கப் போகிறேன்..இன்னும் என்னால் ஏதேனும் ஆக வேண்டுமாயின் ஆணையிடு.செய்கிறேன்..இனி நான் உன் நண்பன் அல்லவா?' என்றது.

பூனையின் ஆறுதலைக் கேட்ட எலி..நட்புமுறையில் பூனையுடன் பழக ஆரம்பித்தது.அதன் மார்பின் மீது தவழ்ந்து விளையாடத் தொடங்கியது.இது கண்டு கோட்டானும்,கீரியும் தம் எண்ணம் ஈடேறாததால் வேறிடம் சென்றன.

இடம், காலம் தெரிந்த எலி கயிற்றை மெதுவாகக் கடிக்கத் துவங்கியது.பூனையோ..'ஏன் வளையை தாமதமாக அறுக்கிறாய்..சீக்கிரம் அறுத்து விடு' என்றது.உடன் எலோ..'எந்த வேலையை எப்போது செய்ய வேண்டும் என நான் அறிவேன்.இப்போது உம்மை விடுவித்தால்..என்னையேக் கூட கொன்றிடுவீர்.தக்க சமயத்தில்..வலை விரித்தவன் வரும்போது வலையை அறுப்பேன்.அப்போது உடனே நீங்கள் மரத்திற்குத் தாவி போய் விடலாம்,நானும் வளைக்குள் போய் விடுவேன் .அப்படிப்பட்ட அவசரநிலையில் தான் நானும் தப்பிக்க முடியும்.இல்லையேல் உமக்கு பலியாகி விடுவேன்.'என்றது.

இதைக் கேட்டு அந்தப் பூனை வருத்தம் அடைந்தது.தாமதம் செய்த எலியைப் பார்த்து 'உயர்ந்தோர், நண்பர்களுக்கு உதவி செய்வதில் இவ்வளவு தாமதிக்க மாட்டார்கள்.நான் எவ்வளவு விரைவாக உன் துன்பத்தைப் போக்கினேன்.நீ மட்டும் ஏன் தயங்குகிறாய்? பழைய பகையை மனதில் கொண்டு நடக்கிராய்.இது நல்லதல்ல..மேலும் நீ தாமதப் படுத்தினால் என் உயிர் பிரிந்துவிடும்' என்றது.

புத்திசாலியான எலி, வஞ்சக எண்ணம் கொண்ட பூனையை நோக்கி..'நண்பரே! பூனையாரே..சுயநலம் மிக்க உமது எண்ணத்தை அறிந்து கொண்டேன்.பாம்பின் வாயிலிருந்து தப்பிப்பது போல பகைவனிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்பர் பெரியோர்.உலகில் இயற்கையாகவே நண்பர்களோ, பகைவர்களோ தோன்றுவதில்லை.ஒருவன் உதவி செய்யும் போது நண்பன் ஆகிரான்.அவனே தீமை செய்யும் போது பகைவனாகக் கருதப்படுகிறான்.சமயத்திற்கேற்ப பகையும், நட்பும் மாறும்.காரியம் முடிந்த பின் யாரும் யாரையும் கவனிப்பதில்லை.ஆதலால் எந்தச் செயல் ஆனாலும் அதில் கொஞ்சம் மிச்சம் வைத்திருக்க வேண்டும்.உமக்கு வலையை விரித்தவன் வந்ததும் பயந்து என்னைத் தின்னும் எண்ணத்தைக் கைவிட்டு ஓடி விடுவீர்.நானும் தப்பித்து பிழைத்து விடுவேன்.அதிகம் இல்லை அறுபட வேண்டியது ஒரு கயிறு தான்.சற்றுப் பொறுமையுடன் இருங்கள்.அதையும் அறுத்து விடுகிறேன்' என உரைத்தது

அந்த நேரத்தில் சில நாய்களுடன் வந்தான் பொறியை வைத்தவன்.பூனை அவனைக் கண்டு பயந்து..'இப்போது என் நிலையைப் பார்த்து..என்னை விடுவிப்பாயாக' எனக் கெஞ்ச..எலியும் தாமதமின்றி கயிற்றைத் துண்டித்தது.உடன் பூனை விரைவாய் ஓடி மரமேறியது.அவனைக் கண்டு கோட்டானும், கீரியும் கூட ஓடி மறந்தன.எலியும்,தன் பணி முடிந்து வளையில் ஒளிந்துக் கொண்டது.பொறியை வைத்தவன் ஏமாற்றத்துடன் திரும்பினான்.

பின் பூனை எலியை நோக்கி'ஆபத்தில் உதவி செய்தவரே..நானும் எனது உறவினர்களும் உன்னை கௌரவிக்க விரும்புகிறோம்.என் சொத்து உனக்கே உரியது.என்னிடம் உனக்கு பயம் வேண்டாம்.பயப்படாமல் வா' என்றது.

பூனையின் நோக்கத்தைப் புரிந்துக் கொண்ட எலி'உமது பாசமொழிகள் கேட்டு மகிழ்ச்சி.ஆனாலும் ஒன்று சொல்கிறேன்..நண்பர், பகைவர் பற்றி ஆறாய்ந்து அறிந்து கொள்ள வேண்டும் என்பர் சான்றோர்.நண்பர் பகைவர் போலவும், பகைவர் நண்பர் போலவும் தோற்றம் அளிக்கலாம்.இந்த்ப் பகையும், நட்பும் நிலையானது அல்ல.ஏதோ ஒரு நோக்கத்தைக் கொண்டுதான் நட்பும், பகையும் அமைகின்றன.செயலின் நுட்பத்தை அறியாமல் நண்பர்களிடம் அளவு கடந்த நம்பிக்கை கொள்வதும் பகைவரிடம் அளவு கடந்த அவநம்பிக்கை கொள்வதும் ஆபத்தில் முடியும்.

என்னிடம் தாங்கள் பேசும் ஆசை வார்த்தைகளுக்குக் காரணம் உண்டு.மனிதன், ஏதோ ஒரு காரணம் கொண்டே நட்புடன் திகழ்கிறான்.ஒரு காரணத்தால் பகைவன் ஆகிறான்.ஒரு தாய் வயிற்றில் பிறந்தோர் கூடச் சுயநலம் காரணமாக அன்பு செய்வர்.உலகில் காரணம் இன்றி அன்பு இருப்பதாகத் தெரியவில்லை.ஆனால் உடன் பிறந்த சகோதரரும், மனைவியும் ஏதோ ஒரு காரணத்தால் அன்பு கொண்டாலும் நாளாவட்டத்தில் அன்பு உடையவர்களாக ஆவர்.உலகில் ஏதோ காரணத்தால் தான் அன்பு ஏற்படுகிறது.அந்தக் காரணம் மறந்ததும் அன்பும் மறைகிறது.என்னைச் சாப்பிட வேண்டும் என்னும் காரணத்தால்தான் உமக்கு என் மீது அன்பு ஏற்பட்டுள்ளது.ஆகவே உமது பேச்சில் எனக்கு நம்பிக்கை இல்லை.இச் சமயத்தில் உம்மிடம் நட்புக் கொள்வது அறிவுடைமையாகத் தோன்றவில்லை.இயற்கையாகவே தாங்கள் எங்கள் குலத்திற்கு விரோதி ஆவீர்.ஏதோ ஒரு முறை ஏற்பட்ட நட்பை மறந்து விடுக.பகையை மேற் கொள்க.பழம் பகையை மறக்கக் கூடாது.

மேலும் எலி தொடர்ந்தது..'நண்பரே! உபசார வார்த்தைகளால் பயனில்லை.நெடுந்தொலைவில் இருந்தாலும் உம்மைக் கண்டு நான் அஞ்சுகிறேன்.சுயநலமின்றி எந்தக் காரியமும் இல்லை.புத்தியுள்ளவன் எல்லாப்பொருள்களை இழந்தேனும் தன் உயிரை காப்பாற்றிக் கொள்வான்.என்னதான் பகைவன் அன்பு உள்ளத்தோடு பழகினாலும் அவனை சந்தேகக் கண் கொண்டே காண வேண்டும்.

பூனை எவ்வளவோ பேசியது.ஆனாலும் எலி ஏமாறவில்லை.பூனையை நோக்கிக் கூறியது..'நம்பத் தகாதவனை நம்பக் கூடாது.நம்பத் தகுந்தவனையும் அதிகம் நம்பக்கூடாது.அதே நேரத்தில் தன் மீது நம்பிக்கை உண்டாகும் படி செய்ய வேண்டும்.பூனையாரே! உம் போன்ற பகைவரிடமிருந்து எப்போதும் நான் என்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.நீங்களும் உங்களை பிடிக்க பொறி வைப்பவரிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்'

இவ்வாறு பலம் இல்லாததாயினும் அறிவுள்ள ஒரு எலி மிக்க பலமுள்ள பகைவர்களைச் சாமர்த்தியமாக வென்றது.

எனவே தருமா..பலமுள்ள பகைவனாயினும் அவனுடன் சில சமயம் சமாதானம் செய்துக் கொண்டு வெற்றி காண வேண்டும்.

ஒன்றொடொன்று பகையுள்ள எலியும், பூனையும் சங்கடமான நேரத்தில் நட்புக் கொண்டன.அதே நேரத்தில் அவை குரோதத்துடன் இருந்தன.அவற்றில் அறிவிற் சிறந்தது வென்றது.
அதுபோலவே அறிவு மிக்கவனும் விழிப்புடன் இல்லையெனில், அறிவு குறைந்தவனால் வெல்லப்படுவான்.பயம் அற்றவன் போல தோற்றமளிக்க வேண்டும்.ஆனால் பயம் உள்ளவனாக அஞ்சி நடக்க வேண்டும்.நம்பிக்கை உள்ளவன் போல இருக்க வேண்டும்.ஆனால் நம்பிக்கை இல்லாதவனாகவும் இருக்க வேண்டும்.அதாவது எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.இல்லையேல் ஆபத்து நேரிடும்' என்றார் பீஷ்மர்.

Monday, December 6, 2010

125-வர இருக்கும் ஆபத்தை நீக்கும் உபாயம்

வர இருக்கும் ஆபத்தை நீக்கும் உபாயத்தை முன்னமே அறிந்துக் கொள்ளக் கூறப்பட்ட கதை
..பீஷ்மர் தருமருக்கு 'வரவிருக்கும் ஆபத்தை அறிந்து செயல்படுபவன் இன்பமாக வாழ்வான்.மந்த புத்தியுள்ளவன் துன்பம் அடைவான்,இவ்விஷயத்தில் செய்யத் தக்கது,தகாதது ஆகியவற்றை ஆராயாத மந்த புத்தியுள்ளவன் கதையைச் சொல்கிறேன்' என்று சொல்ல ஆரம்பித்தார்.
ஆழமற்ற சிறு குட்டையில் பல மீன்கள் இருந்தன.அவற்றில் மூன்று மீன்கள் நட்புடன் வசித்து வந்தன.அவற்றில் ஒரு மீன் சமயோசித புத்தியுடையது.மற்றொன்று ஆழ்ந்த சிந்தனையையுடையது.மூன்றாவது மந்த புத்திக் கொண்டது.
ஒரு சமயம் வலைஞர்கள் குட்டை நீரைக் கால்வாய் அமைத்துப் பள்ளங்களில் வடிய வைத்தனர்.அது கண்டுபயந்தது ஆழ்ந்த சிந்தனையுள்ள மீன்.மற்ற இரண்டு மீன்களை நோக்கி'ஆபத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க விரைந்து கால்வாய் வழியே வேறிடம் சென்றிடுவோம்' என்றது.
மந்த புத்தியுள்ள மீன்..'இங்கேயே இருக்கலாம்' என்றது.
சமயோசித புத்தி மீன்'சமயம் வரும்போது ஏதாவது யுக்தியைக் கண்டுபிடுத்துத் தப்பித்துக் கொள்ளலாம்.இப்போது போக வேண்டாம்' என்றது.இதைக் கேட்ட ஆழ்ந்த சிந்தனை மீன் கால்வாய் வழியே வெளியேறி ஆழமான குளத்தைச் சேர்ந்தது.
தண்ணீர் வடிந்ததும்..குட்டையை கலக்கி வலைஞர்கள் மீன் பிடிக்கத் தொடங்கினர்.அப்போது மந்த புத்தி மீன் மற்ற மீன்களுடன் வலையில் சிக்கியது. வலை கயிறுகளால் கட்டப்பட்டுத் தூக்கப்படும் போது சமயோசித புத்தியுள்ள மீன் கயிற்றை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருந்தது.எடுத்துச் சென்று வேறு குட்டையில் கழுவும் போது அந்த மீன் விரைந்து தண்ணீருக்குள் நுழைந்து தப்பித்துக் கொண்டது.மந்தபுத்தியுள்ள மீன் வலையில் சிக்கி இறந்தது.
இதுபோல சமயோசித புத்தியில்லாதவன் மந்த புத்தியுடைய மீனைப் போல சீக்கிரம் அழிவான்.வருமுன்னர் தன்னைக் காத்துக் கொள்ளாவிடினும்.சந்தேகமான தயக்க நிலையில் சமயோசித புத்தியுள்ளவன் தன்னைக் காத்துக் கொள்வான்
இதனால், வர இருக்கும் ஆபத்தை முன்னரே அறிந்துக் கொள்பவனும்,சமயோசித புத்தியுள்ளவனும் மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெறுவர் என்பதும்..மந்த புத்தியுள்ளவன் அழிவான் என்று உணர்த்தப் பட்டது.

Tuesday, November 30, 2010

124-நட்புக்குத் துரோகம் செய்யக்கூடாது(4)

அரக்க அரசன் விருபாட்சன் தன் நண்பனான ராஜதர்மா என்ற கொக்கிற்குத் தீ மூட்டித் தகனம் செய்தான்.சிதை தயாரிக்கப் பட்டு ஆடை,அணிகலங்களால் அலங்கரிக்கப்பட்டது.சந்தனக் கட்டைகள் அடுக்கப் பட்டன.சிதைக்குத் தீ மூட்டுகையில், மேலே வந்துக் கொண்டிருந்த தாட்சாயணி சுரபியின் வாயிலிருந்து சிந்திய பாலின் நுரையானது ராஜதர்மாவின் சிதையில் விழுந்தது.அதனால் ராஜதர்மா என்னும் கொக்கு உயிர் பெற்று எழுந்தது.விருபாட்சனுடைய நகரை அடைந்தது.

அந்த நேரத்தில் தேவேந்திரன் அங்கு வந்தான்.அந்த கொக்கு இந்திரனை நோக்கி'தேவேந்திரா..என் நண்பனான கௌதமனையும் பிழைக்கச் செய்ய வேண்டும்'என்றது.இந்திரனும் கௌதமனை உயிர் பிழைக்கச் செய்தான்.

இந்திரன் விருபாட்சனை நோக்கி, ராஜதர்மா, பிரம்மாவிடம் பெற்ற ஒரு சாப வரலாற்றைக் கூறினான்.'அரக்க அரசனே..முன்பு ஒரு காலத்தில் பிரம்மதேவன் மிக்க சினம் கொண்டு ராஜதர்மாவை நோக்கி"நீ எனது சபைக்கு ஒரு முறையேனும் வராத காரணத்தால் தரும குணம் உள்ளதும்,பரம் பொருளை அறியத் தக்கதுமான கொக்காகப் பிறப்பாயாக.பாவச் செயல் புரிபவனும்,நன்றி கெட்டவனுமான ஒரு அந்தணன் உனது இடம் தேடி வருவான்.உன்னைக் கொல்வான்.அப்போது உனக்கு விடுதலைக் கிடைக்கும்.அந்தச் சாபப்படி ராஜதர்மா உத்தமமான பிரம்மாவின் சத்திய உலகத்தை அடையும்.அந்த அந்தணனும் நரகத்தை அடைவான்" என்று கூறி தேவர் உலகை அடந்தான்.

பீஷ்மர் தொடர்ந்தார்..'தருமா..இன் நிகழ்ச்சியை முன்னர் நாரதர் எனக்குக் கூறினார்.நான் உனக்கு உரைத்தேன்.நன்கு நினைவில் வைத்துக் கொள்..

நன்றி கொன்றவனுக்குப் பிராயச்சித்தமே இல்லை.அவனுக்குப் புகழும் இல்லை.இன்பமும் இல்லை.இதுபோலவே நண்பனுக்குத் துரோகம் இழைத்தால் நரகம்தான் கிடைக்கும்.எனவே ஒவ்வொருவரும் நன்றியுடனும்,நண்பரிடம் அக்கறையுடனும் நடந்துக் கொள்ள வேண்டும் 'என்றார்.

Sunday, November 28, 2010

123-நட்புக்குத் துரோகம் செய்யக்கூடாது(3)

அந்தணனை விருந்தினராக ஏற்றுக் கொண்ட அசுரன் அவனது குலம், கோத்திரம் பற்றி விசாரித்தான்.அந்தணன் கூறினான்.

நான் மத்திய நாட்டைச் சேர்ந்தவன்.தற்போது ஒரு வேடன் வீட்டில் தங்கியிருக்கிறேன்.ஏற்கனவே திருமணமான ஒருத்தியை மணந்து வாழ்கிறேன்.

இதைக் கேட்டு அசுரன் சிந்தனையில் மூழ்கினான்.'இவன் பிறப்பால் அந்தணனாக இருந்தும் ஒழுக்கத்தில் அப்படியில்லை.ஆயினும் என் நண்பன் ராஜதர்மா என்னும் பறவையால் அனுப்பப் பட்டவன்.ஆகவே, இவனுக்கு வேண்டியவற்றைத் தருவேன்.மற்ற அந்தணருடன் உணவை இவன் அருந்தட்டும்.இனிச் சிந்திக்க ஏதுமில்லை.மிக்க செல்வத்தை இவனுக்கு அளிப்பேன்' என்னும் முடிவுக்கு வந்தான்.

அந்த நேரத்தில் ஏராளமான அந்தணர்கள் அங்கு வந்து சேர்ந்தனர்.அவர்கள் விரும்பியபடி அசுரன் பொன்னையும், பொருளையும் வாரி வழங்கினான்.மற்றவர்களைப் போல கௌதமனும் நிறைந்த செல்வத்தைப் பெற்றுக் கொண்டு பெரும் பாரத்தைச் சுமப்பது போலச் சுமந்துக் கொண்டு ஆலமரத்தை அடைந்தான்.அவன் பசியாலும் வழி நடந்த களைப்பாலும் சோர்ந்திருந்தான்.

சிறிது நேரத்தில் ராஜதர்மா..அந்தணனை வரவேற்று, தன் சிறகுகளால் வீசி அவன் களைப்பைப் போக்கியது.அப்போது 'இந்த பெருஞ்சுமையைத் தூக்கிக் கொண்டு நெடுந்தூரம் செல்ல வேண்டுமே..வழியில் உண்பதற்கு உணவு ஏதும் இல்லையே' என சிந்தித்தான்.

நன்றி கெட்ட கௌதமன்..இந்தப் பறவை அதிகம் சதைப் பற்றுள்ளதாய் இருக்கிறது..இதனைக் கொன்று இதன் மாமிசத்தை எடுத்துச் சென்றால் தேவைக்கு அதிகமாகவே கிடைக்கும் என்னும் முடிவுக்கு வந்தான்.

சிறந்த பறவையான ராஜதர்மா அதிக ஒளியுள்ள தீயை மூட்டி,கௌதமனின் குளிரைப் போக்கிவிட்டு..அவனிடம் கொண்ட நம்பிக்கையுடன் தூங்கலாயிற்று.கௌதமன் தூங்கிக் கொண்டிருந்த பறவையை தீயில் இட்டுப் பக்குவப்படுத்தி, செல்வங்களையும், பறவையின் மாமிசத்தையும் எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

பறவை அன்று வராததால் அசுரன் கவலைப் பட்டான்..இரண்டு நாட்கள் பொறுத்திருந்து பின் தன் மகனை அழைத்து..'பறவையைக் காணாது மனம் அஞ்சுகிறது.எனக்கு சந்தேகம் வருகிறது.அதன் வீட்டில் தங்கியுள்ள அந்தணன் ஒழுக்கம் கெட்டவன்.இரக்கம் இல்லாதவன்.நீ விரைந்து சென்று ராஜதர்மா உயிருடன் உள்ளதா என பார்த்து வா' என்றான்.

மகனும் உடன் பறவை வசித்த ஆலமரத்தை நோக்கிச் சென்றான்.அங்கே ராஜதர்மா கொல்லப்பட்டு..அதன் எலும்புகள் மரத்தடியில் இருப்பதைக் கண்டான்.கோபம் கொண்டு கௌதமனை பிடித்துவர ஆட்களை அனுப்பினான்.அந்த ஆட்கள் கௌதமனை பிடித்து இழுத்து வர,பறவையின் எலும்புகளையும் எடுத்துக் கொண்டு அசுரனிடம் வந்தான்.அதுகண்டு அசுரன் கதறி அழுதான்.

பின் அவன் தன் மகனை அழைத்து'கௌதமனைக் கொல்ல வேண்டும்.மகாபாவியான அவன் மாமிசத்தை அரக்கர்கள் உண்ணட்டும்' என்றான்.ஆனால் நன்றிக் கெட்டவனின் மாமிசத்தை உண்ண அரக்கர்கள் விரும்பவில்லை.அவனை துண்டு துண்டாக வெட்டி கொள்ளைக் கூட்டத்தாரிடம் அளிக்குமாறு கட்டளையிட்டான்.அவர்களும் அவன் மாமிசத்தை உண்ண முன் வரவில்லை.நன்றிகெட்டவனின் மாமிசத்தை பறவைகளும் உண்ணவில்லை.திருடனுக்கும்,குடிகாரனுக்கும் கூடப் பிராயசித்தம் உண்டு, ஆனால் நன்றி கெட்டவனுக்கு பிராயசித்தம் ஏதுமில்லை (தொடரும்)

Monday, November 22, 2010

122-நட்புக்குத் துரோகம் செய்யக்கூடாது(2)

பொழுது விடிந்து..அவ்விருவரும் ஊரை விட்டுப் புறப்பட்டனர்.பின் அந்தணரிடம் விடைபெற்றிச் சென்ற கௌதமன் வழியில், கடல் யாத்திரை செய்யும் வணிகரை சந்தித்தான்.அப்போது மத யானையால் வணிகக் கூட்டம் தாக்க்கப்பட்டது.அக் கௌதமன் வட திசை நோக்கிப் பயந்தபடியே ஓடினான்.யாருடைய உதவியும் இல்லாததால் காட்டில் தனியாகச் சென்றான்.மரங்கள் நிறைந்த காடு அழகு மிக்கதாய் இருந்தது.பறவைகள் ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன.அந்த இனிய ஒலிகளைக் கேட்டுக்கொண்டே இங்கும் அங்கும் திரிந்துக் கொண்டிருந்தான்.

மணல் பொன் போல் காட்சி அளித்தது.ஓரிடத்தில் பெரிய ஆலமரம் கண்ணில் பட்டது.குடை கவிழ்த்ததுபோல் அதன் கிளைகள் தாழ்ந்து நிழல் கொடுத்தன.மகிழ்ச்சியுடன் கௌதன் அம்மர நிழலில் அமர்ந்தான்.

மிகவும் களைப்புடன் இருந்தவன்..சற்று கண்ணயர்ந்தான்.சூரியன் மறைய, அப்போது பிரம்ம லோகத்தில் இருந்து ஒரு பெரிய கொக்கு அங்கு வந்தடைந்தது.அதி பிரம்மாவிற்கு நண்பன்.காசியபருக்குப் புதல்வன்..கொக்குகளுக்கு அரசன்.அதன் பெயர் நாடீஜங்கன்.அந்த கொக்கின் இருப்பிடம் அந்த ஆலமரம்.அது தேவ கன்னியரிடம் பிறந்ததால் அழகுடன் திகழ்ந்தது.அதன் உடலிலிருந்து எங்கும் ஒளி வீசியது.அந்தக் கொக்கு ராஜ தர்மா என்னும் பெயரையும் பெற்றிருந்தது.

கௌதமன், ஒளி வீசும் அக்கொக்கைக் கண்டு வியப்புற்றான்.பசியுடன் இருந்த அவன் அதைக் கொல்ல நினைத்தான்.ஆனால் அந்தக் கொக்கோ அவனை அன்றிரவு தன் விருந்தினராக இருக்க வேண்டிக் கொண்டது.

அந்தக் கொக்கு அவனிடம் 'ஐயா..நான் காசியபரின் புதல்வன்.என் தாய் தாட்சாயணி.என்று கூரி நல்ல மீன்களைக் கொடுத்து உபசரித்தது.களைப்பைப் போக்க தன் சிறகால் விசிறிற்று.இலைகளால் ஆன படுக்கையையும் அளித்தது.பின் அவன் வருகைக்கான காரணத்தைக் கேட்டு அறிந்தது..பின்..'கவலை வேண்டாம்..திரண்ட செல்வத்துடன் நீ திரும்புவாய்..என்று சொல்லி 'பணம் சேர்க்கும் வழிகள்' எனப் பிரகஸ்பதி சில வழிகளைச் சொல்லியிருக்கிறார்.அவற்றில் நண்பன் மூலம் சேர்த்தல் சிறந்த வழியாகும்.இப்போது உன் நண்பன் நான்.உனக்குத் தேவையான வழியைக் கூறுகிறேன்' என உரைத்தது.

'அழகு மிக்கவனே..இவ்வழியே சென்றால் விருபாட்சன் என்னும் என் நண்பனைக் காண்பாய்.அவன் அசுரர்க்கு அதிபதி.மிகவும் பலம் வாய்ந்தவன்.என் சொல்லைக் கேட்டுப் பெரும் செல்வத்தை உனக்குத் தருவான்' என்றும் உரைத்தது.

கௌதமன் பின், அக் கொக்கு சொன்ன வழிச் சென்றான்.இயற்கைக் காட்சிகளைக் கண்டு களித்தபடியே மனுவ்ரஜம் என்னும் நகரை அடந்தான்.அந்நகரம் கற்களால் ஆன தோரணங்கலைக் கொண்டு கம்பீரமாகக் காட்சியளித்தது.அந்த அந்தணன் தன் நண்பனால் அனுப்பப்பட்டவன் என்பதை உணர்ந்த அசுரன் அவனை விருந்தினனாக உபசரித்தான். (தொடரும்)

Thursday, November 18, 2010

121-நட்புக்குத் துரோகம் செய்யக் கூடாது(1)

'நட்புக்குத் துரோகம் செய்யக்கூடாது'என்பதை தருமருக்கு ஒரு கதை மூலம் விளக்கினார்.

வடக்கே வேதம் அறியா அந்தணன் ஒருவன் இருந்தான்.அவன் யாசகத்திற்காக பொருள் மிக்கவர் நிறைந்திருந்த ஒரு கிராமத்தை அடைந்தான்.அங்கு ஒரு திருடன்.அவனுக்கு அந்தணரிடம் பக்தி அதிகம்.தானம் செய்வதில் விருப்பம் கொண்டவன்.அவனிடம் யாசிக்க அந்தணன் சென்றான்.உண்ண உணவும்,உடுக்க உடையும் ஓராண்டு தங்க இடமும் கொடுத்தான் திருடன்.வாழ்க்கை நடத்த ஒரு நங்கையையும் அளித்தான்.இவற்றைப் பெற்ற அந்த அந்தணன் இன்பமாகக் காலம் கழித்தான்.நன்றியுள்ள அந்த அந்தணன் அந்த நங்கையின் குடும்பத்தையும் காப்பாற்றி வந்தான்.கௌதமன் என்னும் பெயருடைய அவன், வேடர்கள் நிறைந்த அந்த ஓரில் ஓர் ஆண்டு வாழ்ந்தான்.

வேடர்களோடு சேர்ந்த அந்தணன் வேட்டைத் தொழிலில் தேர்ச்சி பெற்றான்.நாள் தோறும் காட்டுப் பறவைகளைக் கொல்வதை வழக்கமாகக் கொண்டான்.இப்படிச் சில நாட்கள் கழிந்தன.

ஒரு நாள் அந்த ஊருக்கு வேறொரு அந்தணர் வந்தார்.மரவுரி தரித்தவர்.வேதம் அறிந்தவர்.ஆசாரம் மிக்கவர்.அவர் ஒரு பிரம்மச்சாரி.கௌதமனின் ஊர்தான் அவர் ஊரும்.கௌதமரின் நண்பரும் கூட.உணவிற்காக மற்றவரிடம் செல்லாமல் ஒரு அந்தணர் வீட்டைத் தேடிக் கடைசியாக கௌதமனின் வீட்டிற்கு வந்தார்.அப்போது கௌதமன் வீடு திரும்பியிருந்தான்.அவனைக் கண்ட அந்தணர்க்கு ஆச்சரியமாய் இருந்தது.அவன் கையில் வில் இருந்தது.தோளில் கொல்லப்பட்ட அன்னப்பறவை இருந்தது.அவரை அப்படிக் கண்ட அந்தணர் வெட்கித் தலை குனிந்தார்.

கௌதமனை நோக்கி 'என்ன காரியம் செய்தாய்? வேடர் தொழிலை எவ்வாறு மேற் கொண்டாய்?உன் பெருமையை மறந்தாயா?நீ கீழான செயலைச் செய்யலாமா?நீ உடனே இங்கிருந்து போய் விடு" என்று கூறினார்.

அந்தணரின் அறிவுரையைக் கேட்ட கௌதமன், துயரத்துடன்,'நான் ஏழை.அந்த வறுமை என்ன இந்த நிலைக்குத் தள்ளிவிட்டது.இப்போது உம்மால் நான் தெளிவு பெற்றேன்.ஓரிரவு மட்டும் இங்குத் தங்கிப் பின் வேறிடம் செல்லலாம் 'என்று கூறினான்.அந்த அந்தணரும் பசியுடன் இருந்த போதும் அவனது வேண்டுகோளை
ஏற்று அங்குத் தங்கினார் .
(தொடரும்)

Wednesday, November 10, 2010

120-முதுமை, இறப்புகளைத் தடுப்பது எப்படி?

முதுமை,இறப்புகளைத் தடுப்பது எப்படி? என தருமர் வினவ பீஷ்மர் சொல்கிறார்

இத்தகைய வினாவை ஜனகர், பஞ்சசிகர் என்னும் முனிவரிடம் ஒரு சமயம் வினவினார்.அதற்கு அம்முனிவர் 'மூப்பையும், மரணத்தையும் யாராலும் தடுக்க இயலாது.எந்த உயிரினமும் இவற்றிலிருந்து தப்ப முடியாது.சென்ற பகல்களும்,இரவுகளும், வாரங்களும்,மாதங்களும், ஆண்டுகளும் திரும்பி வருவதில்லை.நிலையில்லாத காலம் எல்லாவற்றையும் நிலையில்லாததாகச் செய்து விடுகிறது.உயிரினங்கள் வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்படுவது போலக் காலமானது எல்லாவற்றையும் அழித்துவிடுகிறது.

கல்லும், மண்ணும்,மரமும் கூடக் காலப்போக்கில் தம் தன்மையை இழந்து விடுகின்றன.காலமாகிய வெள்ளத்தினின்று யாரும் தப்பிக் கரையேற முடியாது.அழிவைச் சந்தித்தே ஆக வேண்டும்.மனைவியோடும்,மக்களோடும்,உறவினரோடும் உண்டான தொடர்பு ஏதோ வழிப்போக்கரிடம் ஏற்படும் தொடர்பு போன்றது.இத் தொடர்பு பிறவிதோறும் இதே உறவு முறைகளோடு தொடர்வதில்லை.உயிர் எந்த நாட்டிலோ,எந்தக் காட்டிலோ,எந்த நதியிலோ ,எந்த மலையிலோ எத்தகைய பிறவி எடுக்கும் என யாராலும் கூற முடியாது.

கர்மவினைக்கேற்பக் காலம் உயிர்களை பல்வேறு இடங்களில் பல்வேறு பிறப்புகளில் தள்ளிவிடுகிறது.அவற்றின் ஆயுள் முடியும் காலத்தில் மரணம் அவற்றை அழித்துவிடுகிறது.மூப்பும்,மரணமும் செந்நாய்களைப் போல வலிமையுள்ளவற்றையும்,சிறியனவும் பெரியனவுமான எல்லாவகை உயிர்களையும் விழுங்கி விடுகின்றன.எந்த நேரத்திலும் மரணம் என்பது உறுதி.உயிரினங்களின் வாழ்க்கைத் தன்மை இவ்வாறு இருக்கும் போது பிறப்புக்காக மகிழ்ச்சியடைவதும்,இறப்புக்காக வருந்துவதும் ஏன்?

வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்தோர்..வாழ்க்கை இனிது என மகிழவும் மாட்டார்கள்.துன்பமானது என இகழவும் மாட்டார்கள்.உண்மைநிலை இப்படி இருக்க நீ ஏன் மனவருத்தம் கொள்கிறாய்? நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன்?எங்கே செல்லப் போகிறேன்? என்று ஏன் ஏக்கம் கொள்கிறாய்?சுவர்க்கத்தை கண்டவர் யார்?நரகத்தைக் கண்டவர் யார்? அப்படி அவற்றைப் பார்த்தவர்களை நாம் பார்த்ததில்லை.எனவே, வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நல்ல கதி கிடைக்க வேண்டுமாயின் தான தருமங்களை செய்வாயாக' என பஞ்சசிகர் ஜனகரிடம் கூறினார்." என்று பீஷ்மர் தருமரிடம் உரைத்தார்.

Sunday, November 7, 2010

119-அடக்கத்தின் மேன்மை

அடக்கத்தின் மேன்மைப் பற்றி பீஷ்மர் உரைக்கிறார்

ஆகமப் பயிற்சி மிக்க சான்றோர்கள் எல்லாரும் அடக்கம் ஒன்றே மனிதனை நல்ல நிலைக்கு உயர்த்தும் என கூறுகின்றனர்.அடக்கமுள்லவன் தான் செயலின் பயனை அடைய முடியும்.அடக்கம் உடையவனிடத்தில் தான் எல்லா நற்பண்புகளும் நிலையாகத் தங்கியிருக்கின்றன.மன அடக்கமின்றி எப்போதும் அலைபாயும் நெஞ்சத்தவரால் எந்தச் செயலையும் செய்ய முடியாது.எந்த ஒரு நற்பண்பையும் தொடர்ந்து காப்பாற்ற முடியாது.நல்லொழுக்கம் என்பதே அடக்கத்தின் மீது எழுப்பப்படும் மாளிகைதான்.அடக்கம் உடையவனை யாவரும் போற்றுவர்.அடக்கத்தின் மற்றொரு பெயர் தூய்மை.அடக்கம் உள்ளவன் பழி, பாவங்ககுக்கு அஞ்சி நடப்பான்.மன அடக்கம் உடையவனால் எதையும் ஆழ்ந்து சிந்திக்க முடியும்.சிந்தனைக்குப் பிறகு அவன் செய்யும் செயல்களில் பழுது இராது.பயன் இருக்கும்.எதைனும் நினைத்துப் பார்த்துப் பார்த்துச் செய்வதால் செய்யும் செயலில் முழுமை இருக்கும்.வினை முடித்த செம்மல் உள்ளமொடு இரவில் அவனால் நிம்மதியாக உறங்க முடியும்.அவன் உற்சாகத்துடன் கண் விழிப்பான்.
ஒருவன் காக்க வேண்டிய நற்பண்புகளில் அடக்கமே தலை சிறந்தது ஆகும்.அடக்கம் சிதறினால் வேறெந்த நற்பண்புகளையும் ஈட்ட முடியாது.அது மட்டுமன்று..அடக்கம் இல்லாதவனிடத்தில் படிப்படியாக தீய பழக்க வழக்கங்கள் வந்து சேரும்.பொறாமை முதலில் மனதில் குடியேறும்.அந்தப் பொறாமை ஆசையைத் தோற்றுவிக்கும்.அந்த ஆசை நிறைவேறாவிட்டால் மனதில் கோபம் தோன்றும்.கோபம் உள்ளவன் கடும் சீற்றத்திற்கு ஆளாவான்.அவனிடமிருந்து நல்ல சொற்களை எதிர்பார்க்க முடியாது.
மன அடக்கம் இல்லையெனில் நாவடக்கமும் இல்லாமற் போகும்.நாவடக்கம் இல்லையெனில் பகை உருவாகும்.நண்பர்கள் நெருங்க மாட்டார்கள்.காண்பவர் பேய் என ஒதுங்கிச் செல்வர்.மனமும், சொல்லும் அடங்கவில்லை யென்றால் செயலைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.அடக்கமில்லாதவன் செயலில் நன்மையைக் காண முடியாது.
மன அடக்கம் உடையவனிடம் எல்லா நற்பண்புகளும் தேடி வரும்.அவன் எப்போதும் அமைதியாக இருப்பான்.எதிலும் முயற்சி உடையவனாகத் திகழ்வான்.அவனிடம் சினம் இராது.நேர்மை இருக்கும்.அடக்கம் உள்ளவன் பெரும்பாலும் மௌனமாகவே இருப்பான்.சிறிதளவே பேசுவான்.அதுவும் சத்திய வாக்காக இருக்கும்.அடக்கம் உடையவன் ஒரு போதும் பிறரைக் குறை சொல்ல மாட்டான்.பொய் உரைக்க மாட்டான்.பிறரின் புகழை மட்டுமே கூறுவான்.
அடக்கம் உடையவன் தன்னைப் பிறர் பழித்தாலும், பாராட்டி புகழ்ந்தாலும் இரண்டையும் சமமாகவே கருதுவான்.இத்தகைய மனநிலை எளிதில் கிடைப்பதன்று.கிடைத்தால் அவனை யாரும் போற்றி மகிழ்வர்.தேவரும் வந்து பணிவர்.
பெரிய லாபத்தில் மகிழ்ச்சியும்,பெரிய நஷ்டத்தில் வருத்தமும் கொள்ளாமல் இருப்பது அடக்கம் உடையவன் இயல்பாகும்.அடக்கம் உடையவனால் எளிதில் சாத்திர ஞானம் பெறமுடியும்.ஞானவானிடம் பொறுமை,சத்தியம்,கொடைத்தன்மை ஆகியவை வந்து அமையும்.மிகு காமம்,சினம்,தற்புகழ்ச்சி,பொய் ஆகியவை கெட்ட புத்தியுள்ளவரிடம் நிரந்தரமாகக் குடியிருக்கும்.அடக்கம் உடையவன் இவற்றைத் தன்னிடம் நெருங்க விடமாட்டான்.அடக்கம் உடையவன் பூமிக்கு அணிகலன் ஆவான்.அவனிடம் இருந்து எல்லா நற்குணங்களும் ஒளி வீசும்.

Monday, November 1, 2010

118-லட்சுமி அசுரரை விட்டு விலகுதற்குரிய காரணம்..

லட்சுமை அசுரரை விட்டு விலகக் காரணங்களை இந்திரனுக்குக் கூறியதைப் பிஷ்மர் கூறுகிறார்



ஒருமுறை இந்திரன் லட்சுமியைச் சந்தித்தான்.முறைப்படி பூஜைகள் செய்து , பின் பணிவுடன் 'நீங்கள் எவ்விடத்தில் வாசம் செய்வீர்கள்?' என வினவினான்.



லட்சுமி கூறுகிறாள்..



'நான் வெற்றியை விரும்பும் வீரனிடத்தில் எப்போதும் வசிப்பேன்.எப்போதும் பிறர்க்குக் கொடுக்கும் இயல்புள்ள மனிதனிடம் வசிப்பேன்.முன்னர் உண்மையான தருமத்தை அசுரர்கள் மேற்கொண்டதால் அவர்களிடம் சில காலம் தங்கியிருந்தேன்.காலப்போக்கில் அவர்களது போக்கு விபரீதமாக இருந்த காரணத்தால் அவர்களை விட்டு நீங்கி உன்னிடம் வந்தடைந்தேன்



"தேவி எக் குணத்தைக் கண்டு அசுரர்களிடமிருந்து விலகினீர்"



'அறவோரிடத்தும்,துணிவு மிக்கோரிடத்தும்,மோட்ச மார்க்கத்தில் செல்லும் மேலோரிடத்தும் நான் எப்போதும் விரும்பியிருப்பேன்.ஒரு காலத்தில் அசுரர்கள் தான தருமங்களில் சிறந்திருந்தனர்.பெரியோர்களிடம் தொடர்புள்ளவர்களாகவும்,அடக்கம் மிக்கவர்களாகவும் இருந்தனர்.சத்தியம் தவறாதவர்களாகவும்,முயற்சியுடையவர்களாகவும்,சுற்றத்தைக் காப்பவராகவும் இருந்தனர்.அவர்களிடம் பொறாமை இல்லாதிருந்தது.



பிறர் பொருளைக் கவரும் எண்ணம் இல்லாதிருந்தனர்.பிறர் துன்பம் கண்டு மனம் இரங்கி உதவும் எண்ணம் உடையவர்களாக இருந்தனர்.நேர்மை,பக்தி,புலனடக்கம் இவற்றில் சிறந்திருந்தனர்.வேலைக்காரரிடம் அன்பாக இருந்தனர்.அமைச்சர்களின் ஆலோசனையைக் கேட்டுத் தக்கவாறு செயல் பட்டனர்.தகுதியறிந்து தானம் அளித்தனர்.உண்ணாவிரதமும் தியானமும் மேற்கொண்ட தவச்சீலர்களாக விளங்கினர்.இரவில் அதிக நேரம் உறங்குவதில்லை.அதிகாலை எழுந்து விடுவர்.மங்களகரமான பொருளையே முதலில் காண்பார்கள்.



பகலில் ஒரு போதும் அவர்கள் உறங்குவதில்லை.ஆதறவற்றவர்களையும் முதியோர்களையும் கவனமாகப் பார்த்துக் கொண்டனர்.பயத்தால் நடுங்கியவர்களுக்கும்,நோயால் துன்புற்றவர்களுக்கும் ஆறுதல் கூறி ஆதரவு அளித்து வந்தனர்.குரு பக்தி மிகுந்தவர்களாகத் திகழ்ந்தனர்.இது போன்ற நற்குணங்கள் அவர்களிடம் இருந்த வரை நான் அவர்களிடம் இருந்தேன்.



பிறகு படிப்படியாக அவர்களிடம் இந்த நற்குணங்கள் விலகக் கண்டேன்.தரும மார்க்கத்தனின்று அவர்கள் நழுவினர்.காம வயப்பட்டுத் திரிந்தனர்.தரும உபதேசம் செய்யும் சாதுக்களைக் கேலி செய்தனர்.பெரியோர்களை அலட்சியம் செய்தனர்.பிள்ளைகள் தாய் தந்தையரை மதிப்பதில்லை.அவர்களின் பேச்சை மீறினர்.பகைவருக்கு அடிமையாகி வெட்கமின்றி அவர்களைப் புகழ்ந்து பேசலாயினர்.பொருள் மீது ஆசை அதிகமாயிற்று.பேராசை தருமத்தை தகர்த்தெறிந்தது.கணவன் பேச்சை மனைவி கேட்பதில்லை.மனைவியைக் கணவன் பொருட்படுத்தவே இல்லை.அதுமட்டு மின்றி அவர்களை அடித்துத் துன்புறுத்தினர்.



மாதா,பிதா,குரு, சான்றோர் ஆகிய மேலோர்கள் அசுரரின் நிந்தனைக்கு ஆளாயினர்.தான தருமங்களைச் செய்யத் தவறினர்.பசித்தவர்க்கு ஒரு பிடி சோறு வழங்கவும் அவர்கள் தயாராக இல்லை.சிறுவர்களையும், முதியோரையும் காப்பாற்றும் எண்ணம் இல்லாமல் போயிற்று.பசுக்களைக் காப்பாற்றத் தவறினர்.கன்றுகளுக்குத் தேவையான பால் இல்லாமல் எல்லாவற்றையும் அவர்களே கறந்து குடித்தனர்.சோம்பல் மிக்கவராயினர்.சூரியன் உதயமான பின்னரும் அவர்கள் கண் விழிப்பதில்லை.இரவு,பகல் எப்போதும் ஒவ்வொரு வீட்டிலும் கலவரமே காணப்பட்டது.தூய்மை என்பது எங்கும் இல்லை. இந்நிலையில் அந்த அசுரர்களை விட்டு நான் விலகி உன்னிடம் வந்து சேர்ந்தேன்'



லட்சுமியின் இப்பேச்சைக் கொண்டு அந்த மாமகளின் கருணை வேண்டுவோர் எப்படி நடநுக் கொள்ள வேண்டும்..எப்படி நடந்துக் கொள்ளக் கூடாது என்பதை உணரலாம் என்றார் பீஷ்மர்.

Tuesday, October 26, 2010

117- ஆபத்து காலத்தில் மன்னன் நடக்கும் முறை (தொடர்ச்சி)

அரசன் கொக்கைப்போல ஒரே நினைவாக இருந்து காரியத்தை முடிக்க வேண்டும்.சிங்கத்தைப் போல பயமின்றி தன் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும்.ஓநாய் போல் பதுங்கிப் பாய்ந்து பகையை அழிக்க வேண்டும்.அம்பு போல திரும்பாமல் பகைவர் மேல் செலுத்த வேண்டும்.குடி,சூது,வேட்டைபாட்டு,இசை ஆகியவற்றை அளவுடன் அனுபவிக்க வேண்டும்.குருடனாக இருக்க வேண்டிய நேரத்தில் குருடனாக இருக்க வேண்டும்.செவிடனாக இருக்க வேண்டிய நேரத்தில் செவிடனாக இருக்க வேண்டும்.காலம்,இடம் அறிந்து செயல் பட வேண்டும்.பகை வலிமையையும்,தன் வலிமையையும் இருபக்கமும் துணையாவார் வலிமையையும் சீர் தூக்கிப் பார்த்துச் செயல்பட வேண்டும்.

எந்த ரசன் பகைவனைத் தண்டத்தால் அடக்க வில்லையோ அந்த அரசன் அச்வத்ரி என்ற விலங்கு தன் கருவினால் அழிவது போல அழிவான்.(அச்வத்ரி என்னும் விலங்கின் கரு தாயின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வரும்)அரசன் நன்றாகப் பூவுள்ளதாக இருந்தும் கனியில்லாத மரம் போல திகழ வேண்டும்.கனியுள்ளதாக இருந்தும் ஏற முடியாத மரம் போல இருக்க வேண்டும்.பழுக்காமல் இருந்தும் பழுத்தது போல காட்சி தர வேண்டும். பகை வரும்வரை அஞ்சுவது போல காணப்பட வேண்டும்.பகைவர் வந்து விட்டாலோ அஞ்சாமல் போரிட வேண்டும்.வரும் துன்பத்தை முன்னதாக தெரிந்து கொண்டு அகற்ற வேண்டும்.

வந்த நன்மையை இழப்பதும்,வராததற்கு ஏங்குவதும் அரசர்க்கு இயல்பு அன்று.பகைவருடன் சமாதானம் செய்து கொண்டோம் என அரசன் நிம்மதியாக இருக்கக் கூடாதுஅப்படி நிம்மதியாக இருப்பவன், மரத்தின் நுனியில் உறங்குபவன் போல் ஆவான்.அதாவது மரத்தின் நுனியில் இருப்பவன் எந்நேரத்திலும் கீழே விழக்கூடும்.அதுபோலப் பகைவரிடம் அதிக நம்பிக்கைக் கொண்டவனுக்கும் எந்நேரத்திலும் அழிவு ஏற்படக் கூடும்.நண்பனிடத்தில் கூட அளவு கடந்த நம்பிக்கைக் கூடாது.அதிக நம்பிக்கை ஆபத்துக்கு வழி வகுக்கும் என்பதை அரசன் உணர்ந்து கொள்ள வேண்டும்.ஆராய்ந்து பார்க்காமல் யாரிடமும் நம்பிக்கை கொள்ளக் கூடாது.பிறப்பினால் யாரும் நண்பனுமில்லை, பகைவனும் இல்லை.செயல்களால்தான் பகையும் நட்பும் ஏற்படுகின்றன.

ஆணவம் மிக்கவனும் நன்மை தீமை அறியாதவனுமான ஒருவன் உறவினனாய் இருந்தாலும் அரசாங்கத்திற்கு எதிராக நடந்துக் கொள்வானாயின் அவன் தண்டிக்கத் தக்கவன் ஆவான்.பகைவன் இனிக்க இனிக்க பேசினாலும் விட்டுவிடக் கூடாது.இனிமையாக பேசியே அவனை அடிக்க வேண்டும்.அடித்த பின்னரும் அன்புடன் பேச வேண்டும்.கனிவான பேச்சால்,வெகுமதிகளால் பிறரைத் தன்பால் கவர்ந்து கொள்ள வேண்டும்.முன்பு பகையாய் இருந்தவனை எப்போதும் நம்பக் கூடாது.பழம்பகை நட்பாவதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.காரணமின்றி யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது.கைகளால் நீந்திக் கடலை கடந்துவிட முடியாது.ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் என்பதனையும் நினைவில் கொள்ள வேண்டும்.

பகையைத் தொலைக்க முற்படுகையில் பூண்டோடு அழிக்க வேண்டும்.பகையின் மிச்சமும் கடனின் மிச்சமும் தீயின் மிச்சமும் தீங்கையே தரும்.அரசன் கழுகைப் போல நீண்ட பார்வையுடையவனாக இருக்க வேண்டும்.கொக்கைப் போல அசைவற்ற தன்மையுடன் விளங்க வேண்டும்.நாயைப் போல எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.காக்கையைப் போல பிறரின் இங்கிதத்தை அறியும் தன்மையுடன் திகழ வேண்டும்.பாம்பைப் போல செல்லும் வழியைப் பகைவர் உணராதவாறு செயல் பட வேண்டும்.தீரனைப் பணிந்தும், பயந்தவனைப் பிரித்தாளும் சூழ்ச்சியைப் பயன்படுத்தியும்,உலோபியைப் பொருள் கொடுத்தும்,நிகரானவரைப் போரிட்டும் அடக்கி ஒடுக்க வேண்டும்.

மன்னன் மென்மையாக இருந்தால் பிறர் அவமதிப்பர்.கடுமையாக இருந்தால் மிகவும் அஞ்சுவர்.ஆதலாம் அதிக மென்மையும், அளவுக்கு மீறிய கடுமையும் இன்றிச் சமயத்து ஏற்றபடி நடந்து கொள்ள வேண்டும்.அறிஞருடன் விரோதம் கூடாது.ஏனெனில் புத்திசாலிகளின் கைகள் நீண்டிருக்கும்.எந்தச் செயல் செய்ய முடியாது என்று தெரிகிறதோ அந்தச் செயலில் இறங்கக் கூடாது.ஆபத்துக் காலத்தில் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அரசன் ஆட்சி புரிய வேண்டும் என பாரத்துவாஜர் சத்ருந்தபனுக்குக் கூறினார்' எனப் பீஷ்மர் தருமரிடம் உரைத்தார்.

Monday, October 25, 2010

116-ஆபத்து காலத்தில் மன்னன் நடக்கும் முறை

யுக மாறுபாட்டால் தருமம் குன்றித் திருடர்கள் மலிந்து விட்டால், அத்தகைய ஆபத்துக் காலத்தில் மன்னன் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும்? என த்ருமர் வினவ பீஷ்மர் உரைக்கிறார்.



'தருமா..இது பற்றி முன்னொரு காலத்தில் சத்ருந்தபன் என்னும் மன்னனுக்கும், பாரத்வாஜருக்கும் நடந்த உரையாடலை உனக்கு உனக்குச் சொல்கிறேன்..கேள்..



சௌவீர தெச மன்னனான சத்ருருந்தபன் பாரத்வாஜரிடம் சென்று, 'பெற முடியாத ஒரு பொருளைப் பெறுவது எப்படி? பெற்ற பொருளை வளரச் செய்வது எப்படி?வளர்ந்த பொருளைப் பயன்படுத்துவது எப்படி? என வினவினான்.



அது கேட்ட பாரத்வாஜர் அறவுரை அருளினார். மன்னன் தண்டிப்பதில் உறுதியாய் இருக்க வேண்டும்.தண்டனையைக் கண்டு மனிதன் பயப்படுவான்.ஆதலால் அனைவரையும் தண்டனையினாலேயே அடக்கி வைக்க வேண்டும்.அப்போதுதான் நாட்டில் அமைதி நிலவும்.நாட்டில் அமைதி நிலவினால்தான் நல்ல பல திட்டங்களை ஒழுங்காக நிறைவேற்ற முடியும்.ஆகையால்தான் சாம தான பேத தண்டம் ஆகிய நான்கில் தண்டம் முக்கியமானது என அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.பெரிய மரத்தின் வேர் அறுபட்டால் கிளைகள் எங்கனம் இருக்கும்.அது போல பகைவரின் ஆணிவேரை முதலில் அறுக்க வேண்டும்.பின்னர் அவனுக்குத் துணையாக இருப்பவரை அழிக்க வேண்டும்.



ஆபத்துக் காலத்தில் அரசன் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.ஆற்றலுடன் போரிட வேண்டும்.ஆற்றலுடன் பின் வாங்கவும் தயாராய் இருக்க வேண்டும்.பின் வாங்கத் தயங்கக் கூடாது.பணிவான சொற்களைப் பேச வேண்டும்.விருப்பு, வெறுப்புகளுக்கு ஆட்படாமல் செயல் பட வேண்டும்.பகைவனிடம் சமாதானம் செய்துக் கொண்ட போதிலும் அவனிடம் நம்பிக்கைக் கொள்ளக் கூடாது.அப்பகைவனிடம் நட்புடன் நடந்துக் கொண்டாலும் வீட்டில் இருக்கும் பாம்பிடம் இருப்பது போல எப்போதும் பயத்துடன் இருக்க வேண்டும்.செல்வத்தை விரும்புபவன் தாழ்ந்து பணிந்து கண்ணீர் வடித்துக் காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டும்.காரியம் ஆகும்வரை பகைவரைத் தோளில் சுமக்க வேண்டும்.காரியம் முடிந்த உடன் மட்குடத்தைக் கல்லில் போட்டு உடைப்பதுபோல அவனை அழித்துத் தொலைக்க வேண்டும்.



ஒரு நொடிப்பொழுதானாலும் கருங்காலி மரத்தின் தீயைப் போல ஒளி விட்டுப் பிரகாசிக்க வேண்டும்.உமியில் உள்ள தீயைப் போல நீண்ட காலம் புகைந்து கொண்டிருக்கக் கூடாது.நன்றி கெட்டவரிடம் பொருள் தொடர்பு கொள்ளக் கூடாது.அவர்கள் காரியம் முடியும் வரை நல்லபடியே நடந்து கொள்வர்.காரியம் முடிந்தபின் அவமதிப்பர்.ஆதலால் அத்தகையவரின் காரியத்தை முழுதும் முடிக்காமல் மிச்சம் உள்ளதாகவே வைத்திருக்க வேண்டும்.



வேந்தன் விடா முயற்சியுடன் பகைவனுடைய வீட்டுக்குச் செல்ல வேண்டும்.அவன் உடல் நலக் குறைவாய் இருந்தால் உடல் நலன் குறித்து விசாரிக்க வேண்டும்.சோம்பேறிகளும்,தைரியம் இல்லாதவர்களும்,பிறரது பழிச் சொற்களுக்குப் பயப்படுவர்களும்,விடா முயற்சியின்றி விட்டு விட்டு முயல்பவர்களும் பொருளை அடையமுடியாது.ஆமை தன் உறுப்புகளை மறைத்துக் கொள்வது போல் மன்னன் தன் குறைகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.குயில்,பன்றி,மேருமலை,ஒன்றும் இல்லாத வீடு, பாம்பு ஆகியவற்றைப் போல ஒழுக வேண்டும்.



(குயில்-தான் காக்க வேண்டிய முட்டையைக் காக்கையின் கூட்டில் இட்டு அதனைக் காப்பாற்றுமாறு செய்யும்.அதுபோல மன்னன் பயிர்,வாணிபம்,வழி,காடுகள் ஆகிய தனது பொருள்களைப் பிறரைக் கொண்டு காக்குமாறு செய்ய வேண்டும்.

பன்றி-தான் உண்ணும் கோரைப் புற்களை வேருடன் களைந்து உண்ணும்.அது போல மன்னன் பகைவர்களை வேருடன் களைந்துக் கொல்ல வேண்டும்.

மேருமலை-தன்னைத் தாண்டத் தகாதவாறு அசைவற்ரு நிற்கும்.அதைப் போல வேந்தனும் தன்னைப் பகைவர் வெற்றி கொள்ள முடியாதபடி உறுதியுடன் இருக்க வேண்டும்.

ஒன்றும் இல்லாத வீடு-பல பொருள்களை விரும்புவதாக இருக்கும்.அதைப் போலவே அரசனும் எல்லாப் பொருள்களையும் விரும்புபவனாக இருக்க வேண்டும்

பாம்பு-கடும் சினத்துடன் யாரும் நெருங்க முடியாததாக இருக்கும்.அதைப்போல மன்னனும் பகைவரால் நெருங்க முடியாதவனாக இருக்க வேண்டும்)

(தொடரும்)

Thursday, October 7, 2010

115-தருமங்களின் மூலக் காரணம் சீலம்

தருமர்..பீஷ்மரைப் பார்த்து 'எல்லா தருமங்களுக்கும் மூல காரணமான சீலத்தைப் பற்றி கூறவும்..சீலம் என்பது என்ன? அதனை எப்படி பெறுவது?' என வினவினார்.
பீஷ்மர் உரைக்கலானார்...
திரிதிராஷ்டிரன் சொன்ன இந்திரனுக்கும் பிரகலாதனுக்கும் நடைபெற்ற உரையாடலை எடுத்துரைத்தார்..
பீஷ்மர்- 'தருமா..நீ கண்டிப்பாக அறிந்துக் கொள்ள வேண்டியது இது.முன்பு நீ நடத்திய ராஜசூய யாகத்தில் உனது செல்வத்தைக் கண்டு பொறாமைக் கொண்ட துரியோதனன் தந்தையிடம் சென்று புலம்பினான்.அப்போது திருதிராஷ்டிரன் "மகனே! எதற்காக இப்படி சோர்ந்து காணப்படுகிராய்? உனக்கு நேர்ந்த துன்பம் என்ன?" எனவினவினான்.
அதற்கு துரியோதனன்'தந்தையே! தருமனது அரண்மனையில் கல்வியிற் சிறந்த பதினாயிரம் பேர் தங்கப் பாத்திரத்தில் உணவு உட்கொள்கின்றனர்.இந்திரப் பிரஸ்தம் இருக்கிறது.அது கண்டு மனம் புழுங்குகிறது என்றான்.அவன் மன வருத்தத்தை உணர்ந்த திருதிராட்டிரன்..'மகனே நீ சீலத்தைப் போற்றுவாயாக.அதனைப் போற்றினால்..மூவுலக ஆட்சியைக் கூட நீ பெறலாம்.சீலம் உள்ளவர்களால் உலகில் பெறமுடியாதது ஏதும் இல்லை.மாந்தாதா ஒரே இரவிலும்,ஜனமேஜயர் மூன்று நாட்களிலும் நாபகர் ஏழு நாட்களிலும் பூமியைப் பெற்றார்கள்.இவர்கள் சீலத்தைப் போற்றியதால் மாபெரும் புகழையும் அடைந்தார்கள்.
சீலம் என்பது பிற உயிர்க்கு நன்மை செய்தல்..கருணை,தானம் இம்மூன்றும் சேர்ந்த நற்குணம் ஆகும்.இதைப் பற்றி நீ நன்கு உணர்ந்து கொள்ள முன்னர் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறேன் கேள்.முன்னொரு காலத்தில் நாரதரால் சொல்லப்பட்ட சீலத்தை மேற்கொண்ட பிரகலாதன் இந்திர உலகம் முதலான மூன்று உலகங்களையும் பெற்றான்.
நாட்டை பறிகொடுத்த இந்திரன்,பிரகஸ்பதியை(வியாழ பகவான்) அடைந்து உய்யும் வழியை அருளும்படி வேண்டிக் கொண்டான்.பிரகஸ்பதி மோட்ச மார்க்கத்திற்குக் காரணமான ஞானத்தைப் பற்றிக் கூறினார்.இந்திரன் 'இதைவிட மேலானது இருக்கிறதா? இவ்வளவுதானா?' என வினவினான்.'இதைப் பற்றி மேலும் அறிய விரும்பினால் சுக்கிராச்சாரியாரிடம் (வெள்ளி பகவான்) செல்க' என்றார் பிரகஸ்பதி.இந்திரன் அவ்வாறே சுக்கிராச்சாரியாரிடம் சென்று வினவ, அவர் ஆத்ம ஞானத்தைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.அதிலும் மன நிறைவு பெறாத இந்திரன் 'இன்னமும் இதைப் பற்றி அறிய விரும்புகிறேன்' என்றான்.'அப்படியானால் மகா மேதாவியான பிரகலாதனைத்தான் நீ சென்று பார்க்க வேண்டும்' என்றார்.
இந்திரன் அந்தண வடிவத்தோடு பிரகலாதனிடம் சென்றார்.மேன்மைக்குரிய வழியைத் தனக்கு உபதேசிக்குமாறு வேண்டிக் கொண்டார்.அவனோ, தான் மூவுலகிற்கும் வேந்தனான அரச காரியங்களில் ஈடுபட்டிருப்பதால் ஞான உபதேசம் செய்ய நேரமில்லை என்றான்.அந்தணனோ ;'தங்களுக்கு நேரம் இருக்கையில் உபதேசியுங்கள்' என்று கூற , பிரகலாதனும் ஒப்புக் கொண்டான்.
பின்னர் ஒரு நாள்,அவன் பணிவிடையைக் கண்டு மகிழ்ந்த பிரகலாதன் 'நீ வேண்டும் வரம் யாது?' என்றான்.
'உம்மிடம் உள்ள சீலத்தை வரமாக தர வேண்டுகிறேன்' எனக் கூற, பிரகலாதன் திடுக்கிட்டான்.ஆயினும் கொடுத்த வரத்தை மீற முடியாதவனாக ஆகி'அப்பயியே..நீ கேட்ட வரத்தைத் தந்தேன்' என்றான்.உடன் அந்தணன் மறைந்தான்.
பிரகலாதன் தான் வஞ்சிக்கப் பட்டதை எண்ணி வருந்தினான்.
அப்போது பிரகலாதனிடமிருந்து ஒளிமயமான ஒரு உருவம் வெளிப்பட்டது..'நீ யார்?' என அவன் வினவ..'நான்தான் சீலம்.உன்னால் விடப்பட்டு செல்கிறேன்.எங்கே போகிறேன் தெரியுமா? உன்னைடம் ஏவல் புரிந்த அநதணனிடம்' என்று கூறி மறைந்து இந்திரனிடம் சென்றது.
பிரகலாதன் மேனியிலிருந்த் மீண்டும் ஒரு ஒளி..'நீ யார்' என்றான்.'நான் தருமம்..சீலம் எங்கு இருக்கிறதோ..அங்கு நான் இருப்பேன்..ஆகவே நானும் அந்த அந்தணனை நாடிச் செல்கிறேன்' என உரைத்துப் போனது.
பிரகலாதன் உடலிலிருந்து மீண்டும் ஒரு ஒளி..இம்முறை சத்தியம்.எங்கே தருமம் உள்ளதோ..அங்கே நான் இருப்பேன் என தருமத்தைத் தொடர்ந்தது.
மீண்டும் ஒரு ஒளி..அது 'பலம்" சத்தியம் இருக்குமிடத்திதான் நானும் இருப்பேன் எனக் கூறி சத்தியத்தை பலம் பின் தொடர்ந்தது.
பின் பிரகலாதன் மேனியிலிருந்து ஒரு தெய்வ மகள் தோன்றினாள்.நீ யார் என்றான் பிரகலாதன்.
அதற்கு அந்த மகள் 'நான் லட்சுமி..எங்கே பலம் இருக்கிறதோ..அங்கு நான் இருப்பேன்.இப்போது உன்னிடம் பலம் நீங்கிச் சென்றுவிட்டது.எனவே நான் அந்த் பலத்தை நாடிச் செல்கிறேன்.நான் நாடிச் செல்லும் பலம் அந்தணனிடம் உள்ளது."என்றாள்.
'யார் அந்த அந்தணன்' என்றான் பிரகலாதன்.
'அவன் தேவேந்திரன்.அந்தண வேடம் தாங்கி உனக்குப் பணி புரிந்தான்.நீ சீலம் என்னும் நல்லொழுக்கத்தால் மூவுலகை ஆண்டாய்.இதனை உணர்ந்து அவன் உன்னிடம் இருந்த சீலத்தை யாசித்துச் சென்றான்.சீலம் உன்னைவிட்டு பிரிந்து சென்றபின் அதனைத் தொடர்ந்து தருமம்,சத்தியம்,பலம் ஆகியவை உன்னை விட்டு நீங்கின.இறுதியாக நானும் செல்கிறேன்'என்று கூறிவிட்டு லட்சுமி மறைந்தாள்.

ஆகவே..துரியோதனா, சீலம் உள்ள இடத்தில் தான் எல்லா நன்மைகளும் தங்கி இருக்கும் என்பதை உணர்' என திருதிராஷ்டிரன் தன் மகனை நோக்கிக் கூறினார்.
பீஷ்மர் தருமருக்கு இப்படி உரைத்தார்.
(பீஷ்மர் உரைத்தல் தொடரும்)

Wednesday, September 29, 2010

114 - மன்னன் மயில் போல் இருக்க வேண்டும்

மன்னருக்கு உரிய பண்புகள் பற்றி மேலும் அறிய விரும்புவதாக தருமர் கூற பீஷ்மர் உரைக்கலானார்..

'தருமா..எல்லா உயிரினங்களையும் காக்க வேண்டியது மன்னனது கடமை ஆகும்.மன்னன் மயிலைப் போல திகழ வேண்டும்.மயில் தன் பல வண்ணத் தோகையை எவ்விதம் அமைத்துக் கொள்கிறதோ அவ்விதம் தருமம் அறிந்த மன்னன் பலவிதமான வடிவங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.வரி வசூலிக்கும் போது சத்தியத்தையும், நேர்மையையும் மேற்கொண்டு நடுவு நிலையுடன் நடந்துக் கொள்ள வேண்டும்.தண்டனை தரும் போது கடுமையாகவும், உதவி செய்யும் போது அன்புடனும் தோன்ற வேண்டும்.
மயில் சரத் காலத்தில் ஒலி எழுப்பாது இருப்பதைப் போல அரசன் மந்திராலோசனையை வெளியிடாமல் காக்க வேண்டும்.மன்னன் மயிலைப் போல இனிய குரலும்,மென்மையான தோற்றமும் தன் செயலில் ஆற்றலும் உள்ளவனாகத் திகழ வேண்டும்.
மயில் நீரருவிகளில் நாட்டம் உள்ளதாக இருப்பதைப் போல மன்னன் வரவு செலவுகளில் கவனமாக இருக்க வேண்டும்.மயில் மலையில் உள்ள மழை நீரை விரும்பியிருப்பதைப் போல மன்னன் ஆன்றோரைச் சார்ந்திருக்க வேண்டும்.மயில் தன் தலையில் உள்ள சிகையை எப்போதும் தூக்கி வைத்திருப்பதைப் போல மன்னன் தருமக் கொடி கட்டி அடையாளம் காட்ட வேண்டும்.மயில் தன்னைப் பாதுகாத்துக் கொண்டு பாம்பு முதலியவற்றைத் தாக்க எப்போதும் விழிப்புடன் இருப்பதைப் போல மன்னன் தண்ட நீதி வழங்குவதில் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
மயில் தான் இருக்கும் மரத்திலிருந்து செழுமையான மற்றொரு மரத்துக்குச் செல்வது போல, மன்னன் வரவு செலவுகளைக் கண்டு, வரவு அதிகமாகவும் . செலவு குறைவாகவும் உள்ள செயல்களில் ஈடுபட வேண்டும்.மயில் தன் தோற்றத்தினாலேயே காக்கை முதலான பறவைகளின் குறை தோன்றுமாறு இருப்பது போல, மன்னன் தன் நேர்மையினாலேயே பகை மன்னர்களின் குறைகள் வெளிப்படுமாறு இருத்தல் வேண்டும்.மயில் உயர்ந்த வளமான மலையை நாடுவது போல, மன்னன் தன்னைவிட உயர்ந்த மன்னர்களுடன் நல்லுறவு கொள்ள வேண்டும்.மயில் களைத்த போது நிழலை விரும்புவது போல, தளர்ந்த காலத்தில் சுற்றத்தாரிடம் விரும்பிச் செல்ல வேண்டும்.
மயில் வேனிற் காலத்தில் மரத்தில் மறைந்திருப்பது போல அரசன் ரகசியமான இடங்களைச் சார்ந்து இருக்க வேண்டும்.மயில் மழைக்காலத்தில் மகிழ்ந்து இருப்பது போல மன்னன் மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தனிமையில் மகிழ்ந்து இருத்தல் வேண்டும்.மயில் தான் சஞ்சரிக்கும் இடங்களில் தன்னைப் பிடிக்க அமைத்த வலைகளை விலக்கித் தப்பித்துக் கொள்வது போல, மன்னன் பகைவர் விரித்த வலைகளை ஒற்றர்கள் மூலம் அறிந்து அவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும்.மயில் நச்சுத் தன்மை வாய்ந்த பாம்புகளைக் கொல்வது போல அரசன் வஞ்சக மன்னர்களைக் கொல்ல வேண்டும்.
மயில் புழு முதலியவற்றை வெறுக்காது இருப்பது போல, மன்னன் தாழ்ந்தவரைக் கண்டு அருவருப்பு அடையக் கூடாது.மயில் உறுதியான சிறகுகளைக் கொண்டிருப்பதைப் போல, மன்னன் உறுதி மிக்க அமைச்சர்களைப் பெற்றிருக்க வேண்டும்.மயில் தன் சிறகுகளை விருப்பப்படி விரிப்பது போல, மன்னன் தன் சுற்றத்தாரிடம் விரிந்து பரந்த மனதுடன் இருக்க வேண்டும்.எல்லா இடங்களில் இருந்தும் நல்லறிவைப் பெற்று நாட்டை நன்கு ஆட்சி புரிய வேண்டும்' என்றார் பீஷ்மர்.

Tuesday, September 28, 2010

113-அரசர்கள் திறம்பட ஆட்சி செய்வது எப்படி?

113-அரசர்கள் திறம்பட ஆட்சி செய்வது எப்படி?

தருமர் பீஷ்மரை நோக்கி 'வேலைக்காரர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?' எனவும், 'அரசன் தனக்குத் துணையாக யாரைக் கொள்ள வேண்டும்? ' என வினவ பீஷ்மர் கூறலானார்.

.உலகியல் அறிவும் நூலறிவும் மிக்க வேலக்காரர்களைப் பெற்றிருக்கும் அரசன் மேன்மையுற்றவன் ஆவான்.அரசனது நன்மையை விரும்பும் அமைச்சர்கள் நற்குலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.அரசனுக்கு நல்வழி காட்டுபவர்களாக இருக்க வேண்டும்.லஞ்சம் முதலானவற்றால் நெறி கெடாதவராக இருக்க வேண்டும்.எந்த அரசர் வருங்காலத்தை உணர்ந்து செயல்படக்கூடிய அமைச்சர்களைப் பெற்றிருக்கிறாரோ அந்த அரசர் சிறந்த அரசராகத் திகழ்வார்.அரசனுக்குத் துணையாக அமைபவர்கள் இன்ப துன்பங்களைச் சமமாக கருதத் தக்க மனப்பக்குவம் உடையவர்களாக இருக்க வேண்டும்.நாட்டின் பொருளைப் பெருக்குவதில் கண்ணும் கருத்துமாய் செயல் பட வேண்டும்.ஓர் அரசன் செழிப்புடன் திகழ வேண்டுமாயின் அண்டை நாடுகளும் அமைதியுடன் இருக்க வேண்டும்.நாட்டில் பொக்கிஷம் நிறைந்திருக்க வேண்டும்.நாணயம் மிக்கவர்களால் அது நன்கு காப்பாற்றப்படுமாயின் மன்னனின் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கி நிற்கும்.அரசு அதிகாரிகளாக நியமிக்கப் படுபவர்கள் பொருளாசை அற்றவராக இருக்க வேண்டும்.எந்த அரசன் அரசு தருமங்களை நன்குணர்ந்து அரச காரியங்களில் வல்லவர்களை நியமித்து ஆறில் ஒரு பங்கை வரியாகப் பெற்றுக் கொள்கிறானோ அந்த அரசன் தருமத்தின் பயனை அடைந்தவன் ஆவான்' என்றார்.

மன்னருக்குள்ள பண்புகளைப் பற்றி மேலும் அறிய விரும்புவதாக தருமர் கூறப் பீஷ்மர் உரைக்கலானார்.

Monday, September 27, 2010

112-மூடன் தரக் குறைவான வார்த்தையைக் கூறினால்....

தருமர் பீஷ்மரைப் பார்த்து..'பிதாமகரே! சாந்தமும் அறிவும் மிக்க ஒருவன், அவையில் மூடனும், அறிவற்றவனுமான ஒருவனால் நிந்திக்கப் பட்டால் என்ன செய்ய வேண்டும்? என வினவ பீஷ்மர் உரைக்கிறார்.

'தருமரே! அறிவு மிக்கவன் எப்போதும் அற்ப புத்தியுள்ளவனின் தரம் கெட்ட சொற்களை பொறுத்துக் கொள்ள வேண்டும்.ஆத்திரத்துடன் பழிக்கப்படும் மனிதன் பழிக்கும் ஒருவனுடைய புண்ணியத்தைத் தான் அடைந்து, தனது பாவத்தை அவனுக்குக் கொடுத்துத் தன்னைத் தூய்மை செய்து கொள்கிறான்.இகழ்ச்சி செய்பவனை பொருட்படுத்தக் கூடாது.அவன் உலகத்தில் பகையைப் பெற்றுப் பயனற்ற கதியை அடைவான்,போகும் இடமெல்லாம்"இவன் என்னால் இவ்வாறு சொல்லப்பட்டான்.அதனால் வெட்கம் அடைந்து செயலற்றுக் கிடக்கிறான்" எனத் தற்பெருமை பேசும் அற்பனை அடக்கம் உள்ளவன் அலட்சியம் செய்ய வேண்டும். அற்பன் பேசும் பேச்சுக்களைச் சகித்துக் கொள்ள வேண்டும்.

பிறரைப் பழித்துப் பேசி பழக்கப்பட்ட ஒருவன் தன் தாயைப் பற்றிக் கூட அடாத பழி கூறுவான்.மறைக்க வேண்டிய அந்தரங்க உறுப்பை மறைக்காமல் வெளிக்காட்டி ஆடும் மயில் போல அவன் மகிழ்ச்சி அடைவான்.பழி தூற்றும் பேதையிடம் நல்லவர்கள் பேச்சுக் கொடுக்கக் கூடாது.எவன் நேரில் புகழ்ந்தும் மறைவில் குறை கூறியும் பேசுகிரானோஅவன் உலகில் நாய் போன்றவன் ஆவான்.ஞானமும், கல்வியும்,தருமமும் இழந்தவன் ஆவான்.அவனிடம் இருக்கும் சில நல்ல குணங்களும் பிறர் மீது பழி கூறும் இயல்பால் நாசமடைகின்றன.ஆதலால், நல்லறிவுள்ளவன் பாப புத்தியுள்ளவனும்,விலக்கத்தக்கவனுமான அவனை நாயின் மாமிசத்தைப் போல உடனே விலக்க வேண்டும்.

மக்கள் கூட்டத்தில் பிறர் குற்றத்தைச் சொலபவன் பாம்பானது உயர்ந்த படத்தை வெளியிடுவது போலத் தன் குற்றங்களைத் தானே வெளியிடுபவன் ஆவான்.அடக்கமின்றி பிறர் பழி கூறித் திரியும் அவனை மதம் கொண்டு திரியும் யானையைப் போலவும், தெருத் தெருவாகச் சுற்றி அலையும் நாயைப் போலவும் கருதி விலக்க வேண்டும்.நாவடக்கம் இன்றிப் பேசித் திரியும் பழிகாரரை வெறுத்து ஒதுக்க வேண்டும்.உறுதியான மனம் படைத்த சான்றோர், உயர்ந்தோர் தாழ்ந்தோருடன் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறுகின்றனர்.பிறர் பழி கூறும் மூர்க்கர்கள் கோபம் கொண்டால் அடிப்பார்கள்.,கடிப்பார்கள்.,புழுதி வாரி இறைப்பார்கள்.,பல்லைக் காட்டி பயமுறுத்துவார்கள்.

கெட்ட புத்தியுள்ளவன் அவையில் என்னதான் பழித்துப் பேசினாலும் அவனை பொறுத்துக் கொள்பவர்கள் மலையென கலங்கா மனம் படைத்தவர்கள் என போற்றப்படுவார்கள்.ஏசுபவன் பழியேந்திச் செல்வான்.,பொறுத்துக் கொள்பவன் புகழுடன் திகழ்வான்.தருமா..நீ அற்பர் சொல்லைப் பொறுத்துக் கொண்டு புகழ் பெறுவாயாக' என்றார் பீஷ்மர்.

Thursday, September 23, 2010

111-கடினமான துன்பங்களைக் கடக்கும் வழி

தருமர் 'கடினமான துன்பங்களைக் கடப்பது எப்படி?' என பீஷ்மரிடம் வினவ..பீஷ்மர் உரைக்கிறார்.

'யார் மன அடக்கமாய் அற நூலில் சொன்னபடி நடக்கிறாரோ..அவர்..கடினமான துன்பங்களைக் கடக்கிறார்.யார் தருமத்தை ஆடம்பரத்திற்காகச் செய்யாமல் தம் தேவையைக் குறைத்துக் கொண்டு வாழ்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கிறார்.யார் ஐம்புலன்களை அடக்கும் வல்லமை பெற்றவரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் தன்னை பிறர் நிந்தித்தாலும் மறுமொழி கூறாமல் இருக்கின்றாரோ,தமக்குத் துன்பம் செய்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாமல் இருக்கின்றாரோ,யார் பிறருக்குக் கொடுத்துக் கொண்டும் தான் யாரிடமும் யாசிக்காமலும் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் விருந்தினரை நன்கு உபசரிக்கின்றாரோ, யார் வேதம் ஓதுகின்றாரோ,யார் எதற்கும் அருவருப்பு அடையாமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் தருமத்தை உணர்ந்து தாய்,தந்தையைப் போற்றுகின்றாரோ யார் பகலில் உறங்காமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் மனத்தாலும் சொல்லாலும் செயலாலும் பாவத்தை செய்யாமல் இருக்கின்றாரோ, உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் பிறர் பொருளைக் கவராமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் தன் மனைவியிடம் மட்டும் உரிய காலத்தில் சேர்க்கைக் கொண்டு, பிறர் மனைவியைக் கனவிலும் கருதாமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் மரணத்தைக் கண்டு அஞ்சாமல் பயத்தை விலக்கி, போர்க்களத்தில் வெற்றி பெற விரும்புகிறாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் உயிரே போனாலும் பொய் சொல்லாது உண்மையையே பேசுகின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் நிந்திக்கத் தகாத செயல்களை உடையவராக இருக்கின்றாரோ, யார் தம் பொருளைச் சாதுக்களுக்கு வழங்குகின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் இளமையில் பிரம்மச்சரியத்தை மேற்கொண்டு சுறுசுறுப்புடன் கல்வி கற்றுப் பல துறைகளிலும் தேர்ச்சி பெற்றவராக இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் பிறரை அச்சுறுத்துவதில்லையோ, பிறர் அச்சுறுத்தலுக்கு பயப்படுவது இல்லையோ, யார் தம்மைப் போல பிறரையும் கருதுகின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் தான் இன்புறுவது போல் பிறரும் இன்புற வேண்டும் என எண்ணுகிறாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கிறார்.யார் எல்லா தேவர்களையும் வழிபட்டு, எல்லாத் தருமங்களையும் கேட்டு அடக்கம் உடையவராக இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கிறார்.யார் தற்பெருமையை விரும்பாமல் பிறரைப் பெருமைப்படுத்திப் புகழ்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் தம் முன்னோர்களுக்காகத் தூய மனத்துடன் ஒவ்வொரு திதியிலும் சிரார்த்தம் செய்கிறாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் தம் கோபத்தை அடக்கி, பிறரையும் கோபம் அடையாமல் இருக்கச் செய்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் மது, மாமிசம் மகளிர் போகம் இவற்றை விலக்குகின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் உயிர் வாழ்வதற்காக மட்டுமே உணவு உட்கொண்டும்,சந்ததிக்காகவே மனைவியுடன் கூடியும்,உண்மை பேசுவதற்காக மட்டுமே பேச்சையும் கொண்டு வாழ்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் எல்லா உயிர்களுக்கும் நாதனாயிருப்பவரிடம் பக்தி செலுத்துகின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் எல்லாக் கர்மங்களையும் கண்ணனிடம் அர்ப்பணம் செய்துவிட்டு அச்சமின்றி இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் உலகங்களைப் படைத்தவரும் சாதுக்களுக்கு நாதரும் யாகங்களால் வழிபடத்தக்கவருமான பிரம்மனை பக்தியுடன் வழிபடுகிறாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் இந்திரனும்,விஷ்ணுவும்,ருத்திரரும் போற்றும் மாகாதேவரான சிவபெருமானை எப்போதும் துதி செய்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் கடினமான துன்பத்தை கடக்கத்தக்க இந்த உபதேசத்தை படிக்கின்றாரோ, யார் கேட்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

தருமா! மனிதன் இவ்வுலகிலும், மேலுலகிலும் கொடுந் துன்பங்களைக் கடத்தற்காகச் செய்யத்தக்க செயல்களில் சிலவற்றை உனக்கு உபதேசித்தேன்.நீயும் இவ்வாறு நடந்து துன்பங்களைக் களைவாயாக!" என்று கூறி முடித்தார் பிதாமகன்.

(பீஷ்மரின் அறிவுரைகள் தொடரும்)

Thursday, September 2, 2010

110-குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

தருமர் பீஷ்மரை நோக்கி 'ஒருவரோடொருவர் பொறாமை கொண்டுள்ள சுற்றத்தாரைத் தன் வசமாக்கிக் கொள்ளத்தக்க வழிகள் யாவை' என வினவினார்.

அதற்கு பீஷ்மர், 'இந்த விஷயத்தில் நாரதருக்கும், வாசுதேவருக்கும் நடந்த உரையாடலைக் கூறுகிறேன்..கேள்..

கண்ணபிரான்..நாரதரை நோக்கி..'நாரதரே..பண்டிதன் அல்லாத நண்பனும், பண்டிதனாக இருந்தும் அறிவற்ற பகைவனும் ரகசியத்தை அறியத் தக்கவரல்லர்.ஆதலால் உம் மேன்மையை அறிந்துக் கொண்ட நான் உம்மிடம் என் ரகசியத்தைத் தெரிவித்துச் சில உண்மைகளைத் தெரிந்துக் கொள்ள விரும்புகிறேன்.நான் அரசன் என்ற பெயர் உள்ளவனாக இருந்தும் சகோதரர்களுக்கு அடிமைத் தொண்டு செய்து வருகிறேன்.புசிக்கத் தக்கவற்றுள் பாதியை மட்டும் புசிக்கிறேன்.மற்றொரு பாதியைச் சுற்றத்தாருக்குத் தருகிறேன்.அவர்கள் பேசும் சொற்கள் என்னை சுட்டு எரிக்கின்றன.எனக்குத் துணை செய்வார் யாரும் இல்லை.அச் சுற்றத்தாரோடு சேர்ந்திருக்கவும் முடியவில்லை..விட்டு விலகியிருக்கவும் முடியவில்லை.

தான் பெற்றெடுத்த மகன்கள் இருவரும் சூதாடுகையில் தாய்..எந்த மகனின் வெற்றியை விரும்புவாள்? யாருடைய தோல்வியை அவள் விரும்புவாள்? அந்தத் தாய் இரு மகன்களிடையே செயலற்றுத் துன்புறுவது போல நான் துன்புறுகிறேன்.இந்நிலையில் எனக்கும்,என் சுற்றத்தாருக்கும் நன்மை தரத்தக்க ஒரு வழியைத் தெரிவிக்க வேண்டுகிறேன்' என்று கேட்டுக் கொண்டார் .

நாரதர்.."கண்ணா..ஒருவனுக்கு இரண்டு வகையான துன்பங்கள் உண்டு.ஒன்று உட்பகை.மற்றது வெளிப்பகை.சுற்றத்தாரால் வருவது உட்பகை.மற்றோரால் வருவது வெளிப்பகை.வெளிப்பகையை விடக் கொடியது உட்பகை.நீர் உன் சுற்றத்தாரிடம் கொடுத்துவிட்ட நாட்டைத் திரும்ப பெற எண்ணுகிறீர்.கொடுத்துவிட்ட ஒன்றை திரும்பப் பெறுவது உமிழ்ந்த உணவை மீண்டும் எடுத்து உண்ண வி ரும்புவதைப் போன்றது.ஆகவே அவர்களிடமிருந்து விரும் துன்பத்திலிருந்த் தப்பிக்க வழி இழந்த நாட்டை திரும்பிக் கேட்காமல் இருப்பதே ஆகும்.ஆனாலும் அவர்களின் கெட்ட உள்ளத்தை மாற்றும் ஆயுதம் ஒன்று உள்ளது.அது இரும்பினால் செய்யப்பட்டதல்ல.மென்மையானது..மென்மையானதாயினும் அவர்களை அடக்கி விடும்' என்றார்.

கண்ணன் நாரதரைப் பார்த்து 'இரும்பினால் செய்யப்படாத மென்மையான ஆயுதம் எது?' என்று வினவ, நாரதர்,'கண்ணா, அந்த மென்மையான ஆயுதம்...இன்சொல்..'என்றார்.'இனிய சொற்கள் கூர்மையான அரத்தைப் போன்றவை.இனிய நன்மொழியால் சுற்றத்தாரிடம் இனிமையாகப் பேசி அவர்களை அணைத்துச் செல்ல வேண்டும்.வேண்டிய பொருள்களைக் கொடுத்து அவர்களைத் திருப்திப்படுத்த வேண்டும்.

எப்போதும் சுற்றத்தாரைக் காப்பதன் மூலம் ஒருவருடைய பொருளும்,புகழும்,ஆயுளும் பெருகும். எனவே நீர் சுற்றத்தார்க்கு எவ்வித குறையும் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.அனைவரும் உன்னச் சார்ந்தே உள்ளனர்.உயிர்கள் அனைத்துக்கும் நாதரே...நீர் அறியாதது ஏதுமில்லை' என்று முடித்தார்.

இதை எடுத்து உரைத்த பீஷ்மர்..சுற்றந் தழுவுதலின் மேன்மையைத் தருமருக்கு உணர்த்தினார்.

இதன் மூலம் குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என உலகிற்கு உணர்த்தப் பட்டது.

(பீஷ்மரின் உரையாடல் தொடரும்)

(பீஷ்மரின் அறிவுரைகள் தொடரும்)

Sunday, August 29, 2010

109-நண்பன்..பகைவன்..சுற்றம்..

தருமர், பீஷ்மரிடம் 'கங்கை மைந்தா..மனிதன் பிறரின் உதவியின்றி சிறிய செயலையும் செய்வது அரிதாக இருக்கிறது.அப்படியுள்ள போது பிறர் உதவியின்றி அரசாள்வது எப்படி? அரசனுக்கு உதவி செய்யும் மனிதன் எத்தகைய ஒழுக்கம் உள்ளவனாக இருக்க வேண்டும்? அரசன் எப்படிப்பட்டவனுடன் நம்பிக்கை வைக்கலாம்..எவன் நம்பத்தகாதவன்' என்றெல்லாம் வினவினார்.

பீஷ்மர் சொல்கிறார்..'அரசர்களுக்கு சகார்த்தன் (இந்தச் செயலைச் செய்து இதன் பயனை இருவரும் அடைவோம்..என்று பேசிக்கொண்டு சேர்க்கப் பட்டவன்.)பஜமானன் (தகப்பன், பாட்டன் என பரம்பரை..பரம்பரையாய் உதவி செய்பவன்),சகஜன் (உறவினன்), கிருத்திரிமன் (உதவி செய்து ஏற்படுத்தப்பட்டவன்) என நான்கு வகை நண்பர்களுண்டு.நடுவு நிலைமை குன்றாதவன் ஐந்தாம் நண்பன்.அவன் யார் பக்கமும் சாராமல் அறம் உள்ள இடத்தையே சார்ந்திருப்பான்.தருமத்தை விரும்பும் அரசர் அவனை நாடலாம்.ஆனால் அவனுக்குத் தொடர்பில்லா விஷயத்தை அவனிடம் சொல்லக் கூடாது.அரசன் வெற்றி ஒன்றையே குறிக்கோளாக உடையவன்.அவன் சில நேரங்களில் அறம், மறம் இரண்டையுமே கைக் கொள்ள நேரிடும்.நட்பு,பகை என்பவை எப்போதும் ஒருவனிடம் இயற்கையாக அமைந்தவை அல்ல.ஒருவன் உபகாரத்தால் நண்பன் ஆவதும்,அபகாரத்தால் பகைவன் ஆவதும் இயல்பு.மேற்கூறிய நான்கு விதமான நண்பர்களில் இடையில் கூறிய பஜமானனும்,சகஜனும் உத்தமர்கள்.மற்ற இருவரும் சந்தேகத்திற்கு உரியவர்கள்.

அரசன் தானே நேரில் தன் பார்வையிலேயே நடத்தக்கூடிய செயலை மேற்சொன்ன ஐவரை நம்பி ஒப்படைக்கக் கூடாது.நண்பர்களிடம் அரசன் எப்போதும் எச்சரிகையுடன் இருக்க வேண்டும்.கவனக் குறைவாக இருக்கும் அரசனை மக்கள் மதிக்க மாட்டார்கள்.அவமதிப்பார்கள்.மனிதன் எப்போதும் ஒரே குணமுடையவனாக இருக்க மாட்டான்.நல்லவன் கெட்டவன் ஆகலாம்..கெட்டவன் நல்லவனாகலாம்.நண்பன் பகைவன் ஆகலாம்..பகைவன் நண்பன் ஆகலாம்.இது உலக இயல்பு.ஆகவே, அரசன் எப்போதும் யாரிடமும் நம்பிக்கை வைக்கக் கூடாது.முழுமையாக ஒருவனையே நம்பினால் அறம், பொருள்,இன்பம் அனைத்தும் நாசமாகும்.ஆனால் நம்பிக்கை கொள்ளாமலும் இருக்கக் கூடாது.அவநம்பிக்கையும் ஆபத்தைத் தரும்.எனவே நண்பர்கள் இயல்பை அறிந்து அவர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

நல்ல தோற்றமும்,அழகும்,கம்பீரக் குரலும்,பொறுமையும்,நல் ஒழுக்கமும் உடையவன் முதல் அமைச்சனாகும் தகுதியுள்ளவன் ஆவான்.தருமா...அத்தகைய குணங்கள் உள்ளவனையே நீ முதல் அமைச்சனாகக் கொள்ள வேண்டும்.நல்லறிவு படைத்தவர்களையும்,நினைவாற்றல் மிக்கவர்களையும்,நல்ல இயல்பு உள்ளவர்களையும் ,தனக்குரிய மரியாதை கிடைக்காவிட்டாலும் மன வருத்தம் அடையாதவர்களையும் ஆகிய மேலோர்களை நீ உனது அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

புகழ் நோக்கம் உடையவனும்,நீதியை விரும்புபவனும்,காமம்,அச்சம்,சினம் இல்லாதவனும்,அதிகம் பேசாதவனும், தன்னைத் தானே புகழ்ந்துக் கொள்ளாதவனும் ஆகிய ஒருவனிடம் அமைச்சுப் பதவியைத் தர வேண்டும்.அறம்,பொருள் சிதறாமல் பாதுகாக்கும் உத்தமனை நீ தேர்ந்தெடுத்து உன் அருகில் அவனை இருக்கச் செய்ய வேண்டும்.ஒரு தந்தை மகனிடம் காட்டும் அன்பை நீ அவனிடம் செலுத்த வேண்டும்.ஆனாலும்..தருமா..ஒரு காரியத்திற்கு இரண்டு அல்லது மூவரை நியமிக்கக் கூடாது.அப்படி நியமித்தால் அவர்களுக்குள் பொறாமை தோன்றும்.ஒற்றுமையுடன் செயல்பட மாட்டார்கள்.அதனால் காரியம் நிறைவேறாது.

மரணத்திற்கு அஞ்சுவதுபோல் சுற்றத்தாரைக் கண்டு பயப்பட வேண்டும்.அரசனின் பெருமைக் கண்டு சுற்றம் மகிழாது.சுற்றத்தாரால் துன்பமும் உண்டு.இன்பமும் உண்டு.சுற்றம் அல்லாதாரும் துன்பம் தருவர்.ஆனால் மன்னனுக்கு அவமதிப்பு நேர்ந்தால், அவனைச் சார்ந்த சுற்றத்தார் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.ஆதலால் சுற்றத்தாரிடம் குணம், குற்றம் இரண்டும் காணப்படுகின்றன.

சுற்றம் இல்லாதவன் மகிழ்ச்சியும், பெருமையும் அடைய மாட்டான்.எனவே, சுற்றத்தாரைச் சொல்லாலும், செயலாலும் எப்போதும் கௌரவப் படுத்த வேண்டும்.அவர்கள் விரும்புவதைச் செய்ய வேண்டுமேயன்றி வெறுப்பதைச் செய்யக் கூடாது.அவர்களிடம் நம் உள்ளத்தில் நம்பிக்கையில்லாதிருந்தாலும் எப்போதும் நம்பிக்கை உள்ளவன் போல நடந்துக் கொள்ள வேண்டும்.குணமோ,குற்றமோ உறுதியாக அவர்களிடம் தீர்மானிக்க முடியாது.இவ்விதம் பகைவர்,நண்பன்,சுற்றத்தார் ஆகியோரிடம் விழிப்புடன் நடந்துக் கொள்ளும் மன்னன் நீடு புகழ் பெற்று திகழ்வான்' என்று உரைத்தார் பீஷ்மர்.

(பீஷ்மருடன் உரையாடல் தொடரும்)

Friday, August 20, 2010

108-மனக்கவலை மறைய..

தருமர்..'மனதில் கவலை அற்றிருக்கவும்,அறநெறி பிறழாதிருக்கவும் வழி யாது? என வினவ பீஷ்மர் விடை அளிக்கிறார்..

தருமத்தில் நிலை பெற்றிருப்பவர்களும், சாத்திரங்களை அறிந்தவர்களுமான சான்றோர்களை எங்கும் இருக்குமாறு செய்ய வேண்டும்.மேன்மை மிக்க புரோகிதர்களை எங்கும் நியமிக்க வேண்டும்.

நாணயம் மிக்க அறிவாளிகளிடம் அதிகாரத்தை அளிக்க வேண்டும்.மூர்க்கரிடம் அதிகாரத்தைக் கொடுத்தால் குடிகளை வருத்தி வரி வாங்குவார்கள்.பசுவிடம் பாலை கறக்க விரும்பினால் புல்லும்,நீரும் அளித்து பாலைக் கறக்க வேண்டும்.ஒரேயடியாக மடியை அறுத்தால் பாலைப் பெற முடியாது.அதுபோல தக்க உதவிகளைச் செய்து குடி மக்களிடம் வரி வசூலிக்க வேண்டும்.மக்களிடம் அதிக வரிச் சுமை இல்லாது பார்த்துக் கொள்ள வேண்டும்.வரி வசூலிப்பதில் மாலைக் கட்டுபவனைப் போல் இருக்க வேண்டும்.கரி வியாபாரி போல இருக்கக் கூடாது.(மாலை கட்டும் பூந்தோட்டக்காரன் செடி,கொடிகளைப் பக்குவமாக வளர்த்து இதமாக மலர்களை மட்டும் எடுப்பான்.கரி வியாபாரி மரத்தையே வெட்டிச் சாய்த்து விடுவான்)

குடிகள் ஒவ்வொரு வினாடியும் மகிழ்ச்சியோடு இருக்குமாறு பாதுகாக்க வேண்டும்.குடி மக்கள் ஒரு நாள் பயந்தாலும் அரசன் ஆயிரம் ஆண்டுகள் நரகத்தை அனுபவிக்க வேண்டி வரும்.அறநெறி கெடாமல் குடிமக்களைக் காத்த அரசன் அமரர் உலகில் பதினாயிரம் ஆண்டுகள் அந்தப் புண்ணியப் பயனை இன்பமாக அனுபவிப்பான்.யாகம்,தானம்,தவம் ஆகியவற்றைச் செய்தவன் அடையும் நற்கதிகளை ஒரு கணம் நாட்டை பரிபாலித்த அரசன் அடைவான்.இதனால் மன்னன் கவலை இல்லாதவனாக இருப்பான்.தருமா..இத்தகைய ஆட்சியை மேற்கொண்டு கவலையற்று இரு' என்றார் பீஷ்மர்.

(பீஷ்மரின் அறிவுரை தொடரும்)

Saturday, August 7, 2010

107-முப்பத்தாறு குணங்கள்

'தருமா..அறம்..பொருள்..இன்பம்..இம்மூன்றையும் காலத்திற்கேற்றபடி போற்ற வேண்டும்.காலம் அரசனுக்குக் காரணமா..அல்லது அரசன் காலத்துக்குக் காரணமா என்ற சந்தேகம் உனக்கு வரக்கூடாது.அரசன் தண்ட நீதியை நன்றாகச் செலுத்தி வந்தால்...அச்சமயத்தில் கிருதயுகம் நடைபெறுவதாக உணர வேண்டும்.அப்போது மக்கள் மனதிலும் தருமமே நிலைத்திருக்கும்.அதர்மம் தலை காட்டாது. மக்கள் நோயின்றி நீடு வாழ்வர்.மக்களின் குரலும்,நிறமும்,மனமும் தெளிவாக விளங்கும்.அக்காலத்தில் பெண்கள் விதவைகளாக ஆவதில்லை.கொடிய மனிதர்கள் உண்டாக மாட்டார்கள்.உழவு இன்றியே பூமி பயன் தரும்.இவை கிருதயுக தருமம்.அரசன் தண்ட நீதியின் ஒரு பாகத்தைத் தள்ளிவிட்டு மற்ற மூன்று பாகங்களையும் தொடர்ந்து செய்யும்போது திரேதாயுகம் நடைபெறும்.அக் காலத்தில் தருமத்தில் மூன்று பாகமும் அதருமத்தில் ஒரு பாகமும் கலந்து நிற்கும்.அந்தக் காலத்தில் உழுதால்தா பூமி பயனைத் தரும்.

அரசன் தண்ட நீதியின் பாதி பாகத்தை நீக்கிவிட்டுப் பாதி பாகத்தைத் தொடந்து நின்றால் துவாபாரயுகம் நடைபெறும்.அக்காலத்தில் இரண்டு பாகம் புண்ணியமும், இரண்டு பாகம் பாவமும் கலந்து நடைபெறும்.அப்போது உழுது பயிரிட்டாலும் பூமி பாதி பயனைத்தான் தரும்.அரசன் தண்ட நீதியை முழுவதுமாகக் கைவிடின் கலியுகம் நடைபெறும்.கலியுகத்தில் எங்கும் அதர்மமே தலை விரித்து ஆடும்.தருமத்தை காண முடியாது.நான்கு வருண தருமங்கள் சிதறிப் போகும்.வியாதிகள் பெருகும்.ஆடவர் அகால மரணமடைவர்.மகளிர் விதவை ஆவர்.ஆகவே தருமா, நான்கு யுகங்களுக்கும் காரணன் என உணர்ந்து நாட்டை நன்கு காப்பாயாக' என்றார் பீஷ்மர்.



தருமர்..'இம்மையிலும்..மறுமையிலும் அரசனுக்கு நன்மை தரக்கூடிய குணங்கள் யாவை?'என்று பீஷ்மரிடம் கேட்க..

பீஷ்மர் சொல்கிறார்..'ஒரு மன்னன் 36 குணங்களைக் கடை பிடிக்க வேண்டும்.அவை

1) விருப்பு, வெறுப்பு இன்றித் தர்மங்களைச் செய்தல்

2) பரலோகத்தில் விருப்புடன் நட்புப் பாராட்டுதல்

3)அறவழியில் பொருளை ஈட்டுதல்

4)அறம் பொருள்கட்கு அழிவின்றி இன்பத்தைப் பெறுதல்

5)யாருடனும் அன்புடன் பேசுதல்

6)நல்லவர் அல்லாதார்க்குத் தராத கொடையாளியாக இருத்தல்

7)தற்புகழ்ச்சியின்றி இருத்தல்

8)கருணையுடன் இருத்தல்

9)கெட்டவர்களுடன் சேராது நல்லவர்களுடன் சேர்ந்திருத்தல்

10)பகைவன் எனத் தீர்மானித்துப் போரிடல்

11)நற்குணம் அற்றவரிடம் தூதர்களைச் சேராது இருத்தல்

12)பிறர்க்குத் துன்பம் தராது பணி புரிதல்

13)சான்றோரிடம் பயனை அறிவித்தல்

14)பிறரது குணங்களை மட்டுமே கூறுதல்

15)துறவியர் அல்லாதாரிடம் கப்பம் வாங்குதல்

16)தக்காரைச் சார்ந்திருத்தல்

17)நன்கு ஆராயாமல் தண்டனை தராதிருத்தல்

18)ரகசியத்தை வெளியிடாதிருத்தல்

19)உலோபிகள் அல்லாதார்க்குக் கொடுத்தல்

20)தீங்கு செய்பவரை நம்பாதிருத்தல்

21)அருவருப்படையாமல் மனைவியைக் காத்தல்

22)தூய்மையுடன் இருத்தல்

23)பல பெண்களுடன் சேராதிருத்தல்

24)நலம் பயக்கும் சுவைகளை உண்ணுதல்

25)வழிபடத் தக்கவர்களைக் கர்வம் இன்றி வழிபடல்

26)வஞ்சனையின்றிப் பெரியோர்க்குப் பணிவிடை செய்தல்

27)அடம்பரமின்றித் தெய்வ பூஜை செய்தல்

28)பழிக்கு இடமில்லாப் பொருளை விரும்புதல்

29)பணிவுடன் பணி புரிதல்

30)காலம் அறிந்து செயல் படுவதில் வல்லவனாய் இருத்தல்

31)பயனுள்ளவற்றையே பேசுதல்

32)தடை சொல்லாது உதவி புரிதல்

33)குற்றத்திற்கேற்பத் தண்டித்தல்

34)பகைவரைக் கொன்றபின் வருந்தாதிருத்தல்

35)காரணமின்றிச் சினம் கொள்ளாதிருத்தல்

36)தீங்கு செய்தவரிடம் மென்மையாக இராமை

ஆகியவையாகும்..

( பீஷ்மரின் அறிவுரை தொடரும்)

Monday, July 26, 2010

106-அரசாட்சி பற்றிப் பீஷ்மர்

தருமர், பிதாமகாரிடம் 'சிறப்பான மன்னன் செய்ய வேண்டிய செயல்கள் எவை? கிராமங்களைக் காப்பதும்,ஒற்றர்களை ஏவுவதும்,குடிமக்களை அன்புடையவர்களாக இருக்குமாறு செய்வதும் எங்ஙனம்? என்று கேட்டார்.

பீஷ்மர் கூறத் தொடங்கினார்..'அரசன் முதலில் தன்னை வெல்ல வேண்டும்.அதாவது ஐம்பல அடக்கம் வேண்டும்.பிறகு பகைவரை வெற்றி கொள்ள வேண்டும்.தன்னை வென்றவனே பகைவனை வென்றவன் ஆவான்.கோட்டைகள்,நாட்டின் எல்லை,மக்கள் கூடும் இடங்கள்,சோலைகள்,ரகசியமான இடங்கள்,அரண்மனை ஆகியவற்றைப் பாதுகாக்கத் தகுதியுள்ள ஆட்களை நியமிக்க வேண்டும்.நன்றாகச் சோதிக்கப்பட்டவர்களும்,அறிவாளிகளும்,பசி,தாகங்களைப் பொறுத்துக் கொள்ளும் இயல்புடையவர்களும்,சமயத்தில் முட்டாளும்,குருடனும்,செவிடனும் போல நடிக்கத் தெரிந்தவர்களும் ஆகியவர்களையே ரகசிய ஒற்றர்களாக நியமிக்க வேண்டும்.அரசன் எல்லா அமைச்சர்களிடத்தும்,மூவகை நண்பர்களிடத்தும்,மைந்தரிடத்திலும் ,நகரத்திலும்,கிராமத்திலும்,பிற மன்னர்களிடத்திலும் ஒருவரை ஒருவர் அறியா வண்ணம் ஒற்றர்களை இருக்கச் செய்ய வேண்டும்.

கடைகள்,விளையாடும் இடங்கள்,மக்கள் கூடும் இடங்கள்,வீதிகள்,தோட்டங்கள்,பூங்காக்கள்,கல்வி நிலையங்கள்,நீதிமன்றங்கள்,வேலைக்காரர்கள் இருக்கும் இடங்கள், செல்வந்தரின் வீடுகள் ஆகிய இடங்களில் பிற அரசர்களால் அனுப்பப்படும் ஒற்றர்களைத் தன் ஒற்றரைக் கொண்டு தேடி அறிந்து தண்டிக்க வேண்டும்.ஒற்றரைத் தடுப்பதன் மூலம் தீமைகள் தடுக்கப் படும்.

பகை அரசன் தன்னை விடப் பலம் உள்ளவனாக இருந்தால் தூது அனுப்பிச் சமாதானம் செய்துக் கொள்ள வேண்டும்.நூல் அறிவு மிக்க அந்தணர்களையும்,க்ஷத்திரியர்களையும்,வைசியர்களையும் அமைச்சர்களாகக் கொள்ள வேண்டும்.பகைவர்களைக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.தக்க காலம் வரும்போது அவர்களை விரைந்து கொல்ல வேண்டும்.எப்போதும் மூர்க்கத்தனமாக போரையே நாடக் கூடாது.சாமம்,தானம்,பேதம் ஆகிய மூன்று வழிகளில் பெறக் கூடிய பொருள்களை அடைய வேண்டும்.குடிமக்களைக் காக்க வெண்டி அவர்களிடம் இருந்து ஆறில் ஒரு பங்கு வரி வசூல் செய்ய வேண்டும்.குடிமக்களைத் தான் பெற்ற மக்களைப்போல் கருத வேண்டும்.நீதி செலுத்துகையில் நண்பன் என்று பார்க்கக் கூடாது.நேர்மையும்,நடுவு நிலை தவறாமையும் உள்ளவர்களை நீதிபதிகளாக அமர்த்த வேண்டும்.இந்தக் குணங்கள் யாவும் மன்னனிடத்தில் எப்போதும் குடி கொண்டிருக்க வேண்டும்.

பலதுறை வல்லுநர்களை அரசன் எப்போதும் கலந்து ஆலோசிக்க வேண்டும்.தங்கம்,ரத்தினம் ஆகியவற்றை எடுக்கும் இடங்களிலும்,உப்பளத்திலும்,சுங்கச்சாவடிகளிலும் ,யானைக் கூட்டம் உள்ள இடத்திலும்,அமைச்சர்கள் அல்லது நம்பிக்கை உள்ளவர்களை நியமிக்க வேன்டும்.எப்போதும் தண்டநீதி செலுத்தும் அரசனைத் தருமம் வந்தடையும்.தண்டநீதி என்பது அரசனுக்கு உத்தம தருமமாகும்.அரசன் பகைவரிடத்து எப்போதும் விழிப்பாக இருக்க வேண்டும்.அவர்கள் வரக்கூடிய பாலங்களை உடைக்க வேண்டும்.வழியை அடைக்க வேண்டும்.வெகு தொலைவில் இருந்து வரும் பகைப் படைகளைக் கண்காணிப்பதற்குப் புற மதில்களில் அமைக்கப் பட்டுள்ள பிரகண்டி என்னும் இடங்களையும் ,மதில்மீது இருந்து அதைப் பற்ற வரும் பகைப்படை மீது அம்பு செலுத்தும் 'அகாசஜநநீ' என்னும் இடங்களையும் நன்கு பாதுகாக்க வேண்டும்.நால்வகைப் படைகளைப் பற்றிய ரகசியங்களைப் பகைவர் அறியாதவாறு பாதுகாக்க வேண்டும்.ஏராளமான முதலைகளும்,திமிங்கலங்களும் அகழியில் இருக்குமாறு செய்ய வேண்டும்.நாடெங்கும் கிணறுகளை வெட்ட வேண்டும்.முன்னோர்களால் வெட்டப்பட்ட கிணறுகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.கற்களாலும்,செங்கற்களாலும் வீடுகளை அமைக்க வேண்டும்.தேவையான இடங்களில் தண்ணீர்ச் சாலைகளையும் கடைகளையும் ஏற்படுத்த வேண்டும்.சந்தர்ப்பவசத்தால் காரணமின்றி ஒருவரைச் சினம் கொண்டு தண்டித்திருந்தால் அவன் மகிழ்ச்சியடையும்படி நல்ல சொற்களைக் கூறிப் பொருளையும் கொடுத்து அவனது வெறுப்புணர்ச்சியை மாற்ற வேண்டும்'

(பீஷ்மர் மேலும் தொடர்கிறார்)

Monday, July 19, 2010

105-சிறந்தது அரச தருமம்

(பீஷ்மர் தருமருக்கு உரைத்தல்)
பிரமசர்யம் - குருவின் கட்டளைக்கு அடங்கி நடக்க வேண்டும்.அவருக்கு பணிவிடை செய்ய வேண்டும்.வேதம் ஓத வேண்டும்.அடக்கம்,சுறுசுறுப்பு ஆகைய இவை பிரமசர்யம் ஆகும்

கிரகஸ்தம்- இல்லற தருமத்தில் தலையாயது விருந்தோம்பல்.மனைவியுடன் கூடித் தான தருமத்துடன் வாழ்தல் இல்லற தருமமாகும்.

சந்யாசம்-துறவு மேற்கொண்டு பற்றற்று இருப்பது சந்யாசம்.உயிர் வாழ சிறிதே உண்பர் துறவிகள்.ஒரு நாளைக்கு ஒரு வேளை..அதுவும் எட்டுக் கவளமே உண்பர்.ஒரு நாள் தங்கிய ஊரில் மறுநாள் தங்குவதில்லை.புலன் ஐந்தும் அடங்கும் வகையில் தியானம்,தவம் ஆகியவற்றில் ஈடுபட்டிருப்பது சந்யாச தர்மமாகும்.

யாவற்றினும் சிறந்தது அரச தருமம்- யானையின் அடியில் மற்ற விலங்குகளின் அடிகள் அடங்கி விடுவது போல அரச தருமத்தில் அனைத்து தருமங்களும் அடக்கம்.எந்த நாட்டில் அரச தருமம் குன்றுகிறதோ அந்த நாட்டில் அனைத்துத் தருமங்களும் சிதைந்து போகும்.வேதம் ஓதுதல்,ஓதுவித்தல்,தானம்,தருமம் ஆகிய அனைத்துத் தருமங்களும் அரச தருமத்தையே ஆதாரமாகக் கொண்டுள்ளன.ஆதலால் அரச தருமத்தை விட மேலானதாக எந்தத் தருமமும் இல்லை.

மாந்தாதா என்ற மன்னன் அரச தருமங்களை விளக்குமாறு திருமாலிடம் முறையிட வேள்வி செய்தான்.திருமால் இந்திரன் வடிவில் வந்து அரச தருமங்களை விளக்கினார். 'நல்லாட்சி நடத்தும் அரசர்களைத் தேவர்களும் பாராட்டுவர்.உலகில் நடைபெறும் நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனித்து நாடாளும் மன்னன் எல்லோராலும் போற்றப்படுவான்.' என்றார்.'எனவே அரச தருமத்திற்கு மேலான தருமம் எங்கும் , எக்காலத்தும் கிடையாது.எனவே..தருமா..நீயும் அரச தருமத்தில் உறுதியோடு இருப்பாயாக'

தருமா..பகை நட்பு இன்றி அனைவரையும் சம நிலமையில் வைத்து அரசாளும் அரசன் துறவிகள் பெறும் மேலான கதியை அடைவான்.போர்க்களத்தில் வெற்றி அல்லது வீர மரணம் என கடைசி வரை போராடும் மன்னன் துறவிக்கு நிகரானவன்.நீதி தவறாது நாடாளும் அரசனை நாட்டில் இருக்கும் மக்கள் செய்யும் தருமங்களின் புண்ணியப் பலனில் நான்கில் ஒரு பாகம் வந்தடையும்.அதேபோன்று கொடுங்கோல் ஆட்சி புரியும் மன்னனை..நாட்டில் வாழும் மக்கள் செய்யும் பாவத்தில் நான்கில் ஒரு பாகம் வந்து சேரும்.கானகம் சென்று கடுந்தவம் செய்யும் முனிவர்களை விட நாட்டை நன்கு பரிபாலிக்கும் அரசன் நூறு மடங்கு தருமத்தை அடைவான்.நாட்டில் நல்லாட்சி இல்லையெனில் நீர் நிலைகளில் பெரிய மீன் சிறு மீன்களை விழுங்குவதைப்போல வலியோர் மெலியோரை விழுங்கி விடுவர்.

முற்காலத்தில் நாட்டில் அரசன் இல்லாததால் எங்கும் அராஜகம் நிலவியது.மக்கள் பிரமனிடம் சென்று 'நாட்டில் எங்கும் குழப்பம் நிலவுகிறது.நாட்டை நல்வழிப் படுத்தி நல்லாட்சி அமைய ஒரு அரசரை அளித்தால்..அவரை வழிப்படுவோம்' என முறையிட்டனர்.பிரம தேவர் மனுவை அரசனாக இருக்கச் சொன்னார்.நாட்டாட்சி என்பது கடினமான செயல் என மனு தயங்க..மக்கள் ஒத்துழைப்பதாக வாக்களித்தனர்.நல்லாட்சியை மக்களுக்கு மனு வழங்கி, யாவரும் போற்றத்தக்க மேலான கதியை அடைந்தான்.

முன்னொரு சமயம் வசுமனஸ் என்னும் அரசன் தேவ குருவான பிரகஸ்பதியிடம் சென்று தனக்கு ராஜநீதியை அருளும்படிக் கேட்டான்.அவர்'உலகில் தருமம் நிலைத்திருக்க வேண்டுமானால் நல்ல அரசன் இருக்க வேண்டும்.அரசனிடம் கொண்ட அச்சம் காரணமாகத்தான் மக்கள் ஒருவரை ஒருவர் வஞ்சிக்காமல் இருக்கின்றனர்.சூரியனும், சந்திரனும் இல்லையெனில் உலகம் இருளில் மூழ்கிவிடும்.அது போல அரசன் இல்லா நாடும் கெடும்.ஒழுங்காக நாட்டை ஆளும் அரசன் இல்லையெனில் மேய்ப்பவன் இல்லா..பசு மந்தைப் போல நாடு சிதறிப் போகும்.தண்ட நீதியில்லை எனில் நாட்டில் திருடர் பயம் அதிகரிக்கும்.அப்பாவிகள், தருமவான்கள் ஆகியோரை அடித்துத் துன்புறுத்திப் பொருளைக் கவர்ந்து செல்வர்.உத்தமர் ஆட்சியில் மக்கள் கதவைத் திறந்து வைத்து உறங்குவர்.விலை உயர்ந்த அணிகளை அணிந்து மகளிர்..ஆடவர் துணையின்றி அச்சமின்றி வெளியில் சென்று வருவர்.ஒரு நாட்டில் பெண்கள் பயமின்றி வாழ்கிறார்கள் எனில் அது அந்த நாட்டில் நல்லாட்சி நிலவுகிறது என்பதற்கான அடையாளமாகும்.

மன்னன் முறையே அக்கினி,சூரியன்,மிருத்யு,குபேரன்,யமன் ஆகிய ஐந்து தேவர்களின் வடிவமாவான்.எனவே அரசனைப் பெருந் தெய்வமாக வணங்க வேண்டும்.உடன் பிறந்தவனாயினும் ,மகனாயினும்,நண்பனாகினும் அரசனுக்கு துரோகம் இழைத்தால் கடுமையாக தண்டிக்கப்படுவான்.அரசனின் சினத் தீயிலிருந்து யாரும் தப்ப முடியாது.நாடாளும் மன்னன் போஜன்,விராட்,சாம்ராட்.க்ஷத்திரியன்,பூபதி என்றெல்லா, புகழப்படுகிறான்.அரசன் அறிவு மிக்கவரை அமைச்சராக வைத்துக் கொள்ள வேண்டும்.நாட்டு மக்களைக் காப்பது அவனது தலையாய கடமை'என்று கூறினார் பீஷ்மர்.

(அரசாட்சிப் பற்றி பீஷ்மர் கூறியது தொடரும்)

Thursday, July 15, 2010

104-அரச பரம்பரை தோற்றம்

தேவர்கள் திருமாலிடம் சென்று மக்களை அடக்கி ஆளத்தக்க பெருமை மிக்க ஒருவனை தருமாறு வேண்டினர்.திருமால் 'விஜரஸ்' என்னும் புத்திரனை உண்டாக்கினார்.ஆனால் விஜரஸ் மன்னாக விரும்பவில்லை.துறவியானார்.அவருக்கு மகனாகப் பிறந்த கீர்த்திமான் என்பவரும் துறவுக் கோலம் பூண்டார்.அவருக்கு மகனாகக் கர்த்தமர் என்பவர் பிறந்தார்.அவருக்கு மைந்தனாக அனங்கன் பிறந்தார்.அவர் தண்ட நீதியில் வல்லவராக ஆட்சி புரிந்தார்.அனங்கனுக்குப் புதல்வனாக அதிபலன் என்பவன் பிறந்து சிறந்த முறையில் ஆண்டான்.அவன் தருமதேவரின் மகளான சுந்தியை மணந்து காம வயப்பட்டு அவளிடம் மயங்கிக் கிடந்தான்.

அவர்களுக்கு வேனன் பிறந்தான்.அவன் கொடுங்கோலனாகத் திகழ்ந்தான்.தரும நெறி தவறிய அவனை தவ முனிவர்கள் கொன்றனர்.வேனனுக்குப் பிறந்த முதல் மகன் நிஷதன் ஆவான்.குள்ளமாகவும்,கொடூரனாகவும் காணப்பட்ட அவனிடமிருந்து குரூரமான நிஷாதர்கள் தோன்றினர்.அவர்கள் விந்திய மலையை இருப்பிடமாகக் கொண்டனர்.அவர்கள் மிலேச்சர்கள் எனப்பட்டனர்.

வேனனின் இரண்டாவது மகன் பெயர் பிருது.அவன் இந்திரனுக்கு நிகரானவன்.தனுர் வேதத்தில் சிறந்தவன்.உலகிற்கு நன்மை புரிந்து ஆட்சி செய்ததால் உத்தமன் எனப் போற்றப்பட்டவன்.'ஆசை,கோபம்,ஆணவம் இன்றி விருப்பு,வெறுப்பு இல்லாமல் ஆட்சி புரிய வேண்டும் என்றும் தருமம் தவறியவர்களை தண்டிக்கத் தயங்கக் கூடாது'என்று சான்றோர் அவனுக்கு அறிவுரை கூறினர்.அவனும் அவ்வாறே ஆண்டதால்..ஆட்சி பெருமை மிக்கதாய் இருந்தது.உழவுத்தொழில் சிறந்தது.காட்டைத் திருத்தி நாடாக்கினான்.மலைகளை உடைத்து பூமியை சமமாக்கினான்.

பூமிதேவி ரத்தினங்களை அளித்து பிருது மன்னனை வாழ்த்தினாள்.அவன் காலத்தில் நாடே மகிழ்ச்சியாய் இருந்தது.பஞ்சம் எங்கும் இல்லை.வளம் கொழித்தது.கள்வர் பயம் இல்லை.கொடிய விலங்குகள் பற்றிய அச்சமும் மக்களிடம் இல்லை.விஷ்ணு,விரஜஸ்,கீர்த்திமான்,கர்த்தமன்,அனங்கன்,அதிபலன்,வேனன்,பிருது என்ற வரிசைப் படி விஷ்ணுவின் எட்டாவது சந்ததி பிருது மன்னன்.அவனால் தரும நெறி எங்கும் தழைத்தோங்கியது.இவ்வாறு அரச பரம்பரை தோன்றியது.அவன் திருமாலின் அம்சமாகவே கருதப்பட்டான்.உலக பாலர் உருவாய் நின்று உலகம் காத்தலின் இறைவன் என்றும் அழைக்கப்பட்டான்.

நான்கு குலங்கள்-

தருமர் கேட்டார்..'நான்கு குலங்களுக்கும் உள்ள பொதுவான தர்மங்கள் யாவை? சிறப்பானவை யாவை?'

பீஷ்மர் சொல்கிறார்..'சினம் இன்மையும்,சத்தியமும்,நேர்மையும்,தானமும், ஒழுக்கமும் எல்லாச் சாதிகளுக்கும் உள்ள பொது தர்மங்களாகும்..அடக்கம்,வேதம் ஓதுதல்,ஓதுவித்தல்,வேள்வி செய்தல்,செய்வித்தல்,தானத்தையும், யாகத்தையும் செய்வதுடன் கிடைத்ததைக் கொண்டு வாழ்தல்,தனக்கென வாழாது..நாளைக்கு என சேமித்து வைக்காது இருத்தல் ஆகியவை அந்தணர்க்குரிய தருமங்கள் ஆகும்.

யாகம் செய்தல்,வேதம் ஓதுதல்,ஈதல்,திருடர்களை ஒழித்தல்,விடா முயற்சி,போர்க்களத்தில் வீரத்துடன் போர் புரிதல்,தீயவர்களைத் தண்டித்தல்,நல்லவர்களைக் காத்தல் ஆகியவை க்ஷத்திரியர்களின் தருமங்கள் ஆகும்.

நாணயமான முறையில் பொருள் சேர்த்தல்,தானம் புரிதல்,பசுக்களைப் பாதுகாத்தல் முதலியவை வைசியரின் தருமங்களாகும்

மேற்கூறிய மூவகை வருணத்தார்க்கும் தொண்டு செய்வது நான்காம் வருணத்தாரின் தருமமாகும்' என்றார்..

(தொடரும்)

Thursday, June 10, 2010

103-அரசன் என்பது எப்படித் தோன்றியது

(சில வலையுலகப் பிரச்னையால்..சில நாட்கள் எழுதாமல் இருந்தேன்..அதனால் தான் தாமதமாக பதிவு வந்துள்ளது..இனி வார வாரம் தொடரும்..நன்றி)

மறுநாள் காலையில் பாண்டவர்களும் பிறரும் குருஷேத்திரம் சென்று பீஷ்மரை வணங்கி அருகில் அமர்ந்தனர்.தருமர் பீஷ்மரை..'அரசன் தோன்றிய வரலாற்றை விளக்கும்படிக் கேட்டார்.'இன்பம் துன்பம்,பசி தாகம்,பிறப்பு இறப்பு முதலியவை மனிதர்கள் அனைவருக்கும் பொதுவானவை.அப்படி இருக்கையில் எப்படி ஒருவன் மட்டும் அவர்களுக்குத் தலைவனாக இருக்கக்கூடும்?அறிவு ஜீவிகள் பலர் இருக்க அது எப்படி ஒருவன் மட்டும் ஆளத்தக்கவன் ஆவான்? இதற்கான காரணம் சாதாரணமாய் இராது..ஆகவே அது பற்றி விளக்க வேண்டும்' என்றார்.

பீஷ்மர் கூறத் தொடங்கினார்..'ஆதி காலத்தில்..கிருத யுகத்தில் மக்கள் யாவரும் தரும நெறியைப் பின் பற்றி வாழ்ந்தனர்.ஒழுக்கம் தவறாத அக்காலத்தில் மன்னனும் இல்லை, தண்டனையும் இல்லை..காலம் செல்லச் செல்லத் தரும நெறி குன்றியது.அறிவின் குறைவால் ஆசை வயப்பட்ட மனிதர் தம்மிடம் இல்லாது பிறரிடம் உள்ள பொருளைப் பெற விரும்பினர்.அதனால்..திருட்டு,கொலை,சூது,சினம் முதலிய கெட்ட குணங்கள் தலைவிரித்து ஆடத் தொடங்கின.எதைச் செய்வது..எதை செய்யக்கூடாது என வரைமுறை இன்றிப் போயிற்று.காமம் மிகுந்தது..மாதரின் ஒழுக்க நெறியும் குறைந்தது.வேத நெறி பாழ்பட்டது.தரும நெறி சிதைந்தது.இது கண்டு தேவர்கள் கவலையுற்றனர்.பிரம்ம தேவனிடம்சென்று'பகவானே..அருள் புரியுங்கள்..உலகில் தருமம் கெட்டது..அதர்மம் சூழ்ந்துள்ளது.நெறி கெட்ட உலகை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்' என முறையிட்டனர்.

பிரம தேவர் ஒரு லட்சம் அத்தியாயங்கள் கொண்ட நீதி சாத்திரத்தை இயற்றினார்.அதில் அவர் விரிவாக அறம், பொருள், இன்பம் மூன்றையும் விளக்கினார்.இம் மூன்றைக் காட்டிலும் மோட்சம் என்பது வேறானது என்றும்..அதில் கூறப்பட்டுள்ளது.மேலும் அதில் சத்துவம்,ராஜசம்,தாமதம் ஆகியவை பற்றியும்..தேசம்,காலம்,முயற்சியின் பயன்,ஞானம்,கருமம்,மந்திர ஆலோசனை,அரசன்,அமைச்சன்,தூதன்,ஒற்றன் ஆகியோர் இயல்பு பற்றியும்,சந்திவிக்கிரகம்,வெற்றிக்குரிய வழிகள்,நால் வகை படையின் இயல்புகள்,பெற முடியாத பொருளைப் பெறும் உபாயம்,பெற்றதைக் காக்கும் முறை,குற்றங்களுக்கு ஏறபத் தண்டனை ஆகியவை பற்றியும் விரிவாக இந்தத் தண்டனை நூலில் விளக்கப்பட்டுள்ளன.

பிரமதேவர் இயற்றிய இந்த நீதி சாஸ்திரத்தை சிவன் ..மக்கள் ஆயுள் வரவரக் குறைந்து வருவதைக் கண்டு பத்தாயிரம் அத்தியாயங்களாக அமைத்து அதற்கு வைசாலட்சம் என்று பெயரிட்டார்.இந்திரன் இதனை இன்னும் சுருக்கி 'பாஹூதந்தகம்' எனப் பெயரிட்டார்.அதனைப் பிரகஸ்பதி மூவாயிரம் அத்தியாயங்களாக்கி 'பாரஹஸ் பத்தியம்'என்று பெயரிட்டார்.சுக்கிரர் அதனை ஆயிரம் அத்தியாயங்களாகச் சுருக்கினார்.

இவ்விதம் மக்கள் ஆயுள் குறைவைக் கருதி இந்த நீதி சாஸ்திரம் மாமுனிவர்களால் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

(அரச பரம்பரை தோற்றம் அடுத்த பதிவில்)

Tuesday, May 11, 2010

102- பீஷ்மர் தருமங்களைச் சொல்லுதல் (2)

தருமரே! வெளியிடத்தகாத அரசாங்க ரகசியங்களைத் தவிர மற்றவற்றில் உண்மை பேச வேண்டும்..எப்போதும் அரசன் சாந்த குணம் கொண்டவனாக இருக்கக் கூடாது.எப்போதும் சாந்த குணம் கொண்ட அரசனை உலகம் மதிக்காது மீறி நடக்கும்..யானையின் தலையில் மாவுத்தன் ஏறுவது போலத் தாழ்ந்த மனிதனும் பொறுமை உள்ள அரசனை அவமதிக்கும் செயலில் ஈடுபடுவான்.அதற்காக அரசன் எப்போதும் கடுமையாகவும் நடந்து கொள்ளக் கூடாது.கடுமையான அரசனிடம் மக்கள் அன்பு பாராட்ட மாட்டார்கள்.ஆதலால் அரசன் எந்தெந்த நேரத்தில் எப்படி எப்படி நடக்க வேண்டுமோ..அந்தந்த நேரத்தில் அப்படி அப்படி நடந்து கொள்ள வேண்டும்.அதாவது அதிகத் தட்பமும் அதிக வெப்பமும் இல்லா வசந்த காலத்துச் சூரியனிப் போல இருக்க வேண்டும்.

மேலோரிடம் பணிவுடன் நடந்துக் கொள்ள வேண்டும்.இது பொது விதி..ஆயினும் மேலோர் தவறிழைத்தால் அவர்களையும் தண்டிக்கத் தயங்கக் கூடாது.மகரிஷி சுக்கிராச்சாரியார் இது சம்மந்தமாகச் சொன்னதை நினைவில் கொள்ள வேண்டும்..போர்க்களத்தில் தனது தருமத்தை மீறி அந்தணன் ஆயுதம் ஏந்திப் போர் புரிவானாயின் அரசன் அந்த அந்தணனை ஆயுதத்தால் தண்டிக்க வேண்டும்.. அரச தருமம் அனைத்துத் தருமத்தை விடச் சிறந்தது..அரசாங்கத்திற்குத் தீங்கு இழைப்போர் நண்பராக இருந்தாலும்..குருவாக இருந்தாலும் அவர்களைக் கொல்ல வேண்டும்.

அரசன் பதினெட்டுக் குற்றங்களை விலக்க வேண்டும்..இவற்றில் வேட்டை,சொக்கட்டான்,பகல் உறக்கம்,பிறரை நிந்தித்தல்,பெண் மயக்கம்,மதம், வீண் பாட்டு,கூத்து, வாத்தியங்கள்,குடி ஆகிய இப் பத்தும் காமத்தால் உண்டாவன.தெரியாத குற்றத்தை வெளிப்படுத்துவது,குற்றமற்றவனைத் தண்டிப்பது,வஞ்சனையாக ஒருவனைக் கொலை செய்வது,பிறர் புகழ் கண்டு பொறாமை கொள்வது,பிறர் குணங்களைக் குற்றமாகக் கூறுவது,பிறர் பொருளைக் கவர்ந்து கொள்வது ,கடுஞ்சொல் கூறுவது,கடுமையான தண்டனை வழங்குவது..ஆகிய எட்டும் சினத்தால் வருவன.அரசன் இவற்றை அறவே விலக்க வேண்டும்.

அரசன் எப்போதும் கர்ப்பிணியின் தருமத்தில் இருக்க வேண்டும்..கர்ப்பிணி தன் மனதிற்கும், நாவிற்கும் சுவையான உணவு உண்ணாமல்..கர்ப்பத்தை வளர்க்கத் தக்க வழியில் இருப்பது போல , அரசனும் தனக்கு வேண்டும் என்ற செயலைத் தள்ளிவிட்டு உலகுக்கு நன்மை பயக்கும் தரும வழியில் செல்ல வேண்டும்..தைரியமாக நியாயமான தண்ட நீதியைச் செலுத்த வேண்டும்..அப்படி நடந்துக் கொண்டால் யாரும் குறை சொல்ல மாட்டார்கள்.

அரசன் வேலைக்காரருடன் பரிகாசமான வார்த்தைகள் பேசக்கூடாது.பரிகாசமாகப் பேசும் மன்னனை ஏவலர்கள் அவமதிப்பார்கள்.அரசனின் உத்தரவை மீறி நடப்பார்கள்..ரகசியத்தைக் கேட்பார்கள்..அத்துடன் நில்லாது அதனைப் பறை சாற்றுவார்கள்.லஞ்சம் வாங்கி அரச காரியத்தைக் கெடுத்து விடுவார்கள்.அரசன் உத்தரவு எனப் பொய்ச் செய்திகளை பரப்புவர்.அரசன் எதிரில் அநாகரிகமாக நடந்துக் கொள்வர்.நான் சொன்னால் சொன்னபடி அரசன் நடப்பான் என ஆணவத்துடன் உரைப்பர்..ஆகவே வேலைக்காரர்களிடம் விழிப்பாக இருக்க வேண்டும்.

அரசன் எப்போதும் அமைச்சர்களுடன் செய்யும் ஆலோசனைகளைப் பிறர் அறியாவண்ணம் மறைவாகச் செய்ய வேண்டும்.காலையில் அறத்திலும்..மாலையில் பொருளிலும், முன்னிரவில் இன்பத்திலும்,பின்னிரவில் தெய்வ சிந்தனையிலும் ஈடுபட வேண்டும்.அரசன் நான்கு வருணத்தாரின் தர்மங்களையும் காக்க வேண்டும்.எல்லோரையும் நம்பி விடக் கூடாது.நம்பத் தக்கவர்களை மட்டுமே நம்ப வேண்டும்.அவர்களிடமும் அளவு கடந்த நம்பிக்கை கூடாது.

ஓதுவிக்காத ஆசிரியன், ஓதாத ரித்விக், பாதுகாவாத மன்னன், விருப்பம் இல்லாதவற்றைக் கூறும் மனைவி,கிராமத்திலேயே இருக்க விரும்பும் இடையன்,காட்டிலேயே இருக்க விரும்பும் நாவிதன் ஆகிய இந்த அறுவரையும் கடலில் உடைந்த கப்பலைப் போல தள்ளிவிட வேண்டும் என பிராசேதச மனு கூறியுள்ளார்.

நாட்டை நன்கு பாதுகாப்பதை விட மேலான ராஜ தர்மம் வேறேதும் இல்லை.' எனக் கூறி முடித்தார் பீஷ்மர்.அவர் உரையைக் கேட்டுக் கொண்டிருந்த வியாசர்,கண்ணன்,சாத்யகி ஆகியோர் மகிழ்ந்தனர்.

த்ருமர்..கண்களில் கண்ணீருடன் பீஷ்மரை வணங்கி 'மேலும் ஐயங்களை நாளை கேட்பேன்' என்று விடை பெற்றார்.பின்னர் அனைவரும் அஸ்தினாபுரம் அடைந்தனர்.

Thursday, May 6, 2010

101- பீஷ்மர் தருமங்களைச் சொல்லுதல்


தருமர்..கண்ணனையும்..பீஷ்மரையும் வணங்கிவிட்டுத் தம் சந்தேகங்களைக் கேட்கத் தொடங்கினார்..


'ராஜநீதியில் எல்லாத் தருமங்களும் அடங்கியுள்ளன.ராஜநீீதி தவறுமானால் உலகம் துன்புறும்..ஆகவே இந்த ராஜதருமங்களை எனக்கு விரிவாக எடுத்துரைக்க வேண்டும்' என்றார்.

பீஷ்மர்..அதன்படி ராஜதருமங்களைக் கூறத் தொடங்கினார்..

'நாடாளும் மன்னன் எப்போதும் முயற்சியுடன் இருக்க வேண்டும்..முயற்சி இல்லாதவனுக்குத் தெய்வத்தின் உதவி கிடைக்காது.வண்டிக்கு இரு சக்கரங்களைப் போல வாழ்க்கைக்கு இவ்விரண்டும் தேவை.இவ்விரண்டில் முயற்சியே மேலானது.ஒருவேளை உன் முயற்சி வீணாய்ப்போனாலும் அது குறித்து வருந்தக்கூடாது.எப்போதும் விடாமுயற்சி என்பது அரசர்களின் மிகப் பெரிய நீதியாகும்."முயற்சியற்ற மன்னனையும்..வேதம் ஓத வெளியே செல்லாத வேதியனையும் பாம்பு எலிகளை விழுங்குவது போல இப்பூமி விழுங்கிவிடும்" என்று சுக்கிராச்சாரியார் கூறியிருக்கிறார்.

ராஜ தருமத்தில் இரட்சண தருமம் என ஒன்றை அரசன் கவனிக்க வேண்டும்..இந்த இரட்சண தருமத்தை அரச தருமங்களுள் வெண்ணெய் போன்றது எனப் பிரகஸ்பதியும், சுக்கிரரும்,விசாலாட்சாரும், பரத்வாஜரும், கௌரசிரசும், இந்திரனும் போற்றியுள்ளனர்.இந்த இரட்சண தருமம் நிறைவேறும் வகையைக் கூறுகிறேன்...

பொறாமையின்மை,யுக்தியால் வரி வசூலித்தல், உபாயமின்றி வரி வாங்காமை,நல்லவர்களை அணைத்துச் செல்வது ,சூரத்தனம்,சுறுசுறுப்பு,உண்மை,குடிமக்களின் நன்மை,நேராகவும்..கபடமாகவும் பகைவர் பலம் பெறாமல் பார்த்துக் கொள்வது,பழுதான கட்டிடங்களைப் பழுது பார்ப்பது, காலத்திற்கேற்ப உடல் தண்டனை..பொருள் தண்டனை விதிப்பது, படைகளை மகிழ்விப்பது,செயலில் சோர்வின்மை,கருவூலத்தைப் பெருகச் செய்வது,நகரைப் பாதுகாப்பது,காவற்காரரிடம் நம்பிக்கை வைக்காமலிருத்தல்,நண்பர்..பகைவர்..ந்டுநிலையாளர் இவர்களைப் பகுத்தறிதல், வேலைக்காரரைப் பகைவரிடம் சேராதிருக்குமாறு செய்தல்,நகரை வலம் வந்து நேராகப் பார்வையிடுவது, துன்புற்றோர்க்கு ஆறுதல் கூறுவது, பகைவரை அலட்சியப் படுத்தாமை, இழிந்த செயல்களை விலக்குதல், நியாயத்துடன் பொருந்திய விடாமுயற்சி ஆகிய இக்குணங்கள் இரட்சண தருமங்களாகும்.

இந்திரன் விடாமுயற்சியால்தான் அமுதத்தைப் பெற்று அசுரர்களைக் கொன்று இவ்வுலகிலும்..தேவர் உலகிலும் பெரும் புகழ் பெற்றான்..முயற்சியால் சிறந்தவன் கல்வியில் சிறந்த பண்டிதனை விட மேலானவன்.அரசன் அறிவுடையவனாக இருந்தாலும்..அவனிடம் முயற்சியில்லை எனில் அவன் பகைவரால் வெல்லப்படுவான்..அரசன் மிக்க பலமுடையவனாக இருந்தாலும்..பகை சிறிதென்று அலட்சியமாக இருக்கக் கூடாது.நெருப்புச் சிறிதாயினும் சுடும்..நஞ்சு கொஞ்சமாக இருந்தாலும் கொல்லும்..இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு ஆளும் அரசன் இறந்த பிறகும் புகழப்படுவான்.

உன் செயல் அனைத்தும் சத்தியத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்..தவத்தோர்க்கு எப்படிச் சத்தியம் முதற் பொருளாக இருக்கிறதோ அப்படி அதுவே அரசர்க்கும் முதற் பொருளாகும்..நற்குணமும், நல்லொழுக்கமும்,புலனடக்கமும், தெளிவும்,தானமும் உள்ள அரசனை விட்டு ராஜ்யலட்சுமி விலக மாட்டாள்.. (தொடரும்)