Monday, November 14, 2011

190 - முடிவுரை




இன்றுடன் "மகாபாரதம்"பதிவு முடிவடைகிறது.

.முகநூலில் தொடர்ந்து 190 அத்தியாயங்கள் வேறு ஏதும் வந்ததாகத் தெரியவில்லை.இச்சாதனையை நடத்த ஆதரவு அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

மாகாபாரதம் உணர்த்தும் செய்திகள்..

எத்தகையோரும் சில நேரங்களில் அறிந்தோ..அறியாமலோ தவறுகள் செய்யக் கூடும்.ஆனாலும் ஒருவர் செய்யும் தவறுக்கு தண்டனை அடைந்தே தீர வேண்டும் என்பதை தருமரின் வாழ்க்கை மூலம் அறியலாம்.'தருமம் வெற்றி பெறும்' என்பதே மகாபாரதம் சொல்லும் நீதி எனலாம்.ஆயினும் தருமத்தின் வெற்றி அவ்வளவு எளிதல்ல.இந்த உண்மையை உணர்த்தச் சான்றோர் எவ்வளவோ துன்பத்தை பொறுத்திருக்க வேண்டும்.எவ்வளவோ தியாகங்கள் செய்ய வேண்டும் என்னும் செய்திகளையும் மகாபாரதம் உணர்த்துகிறது.இன்ப துன்பங்கள் ஞானிகளை ஒன்றும் செய்ய முடியாது என்பதும் மனிதர்களை அவை ஆட்டிப்படைக்கின்றன என்பதும் மகாபாரதம் உணர்த்தும் செய்திகளாம்..

இனி என்னுரை..

எண்ணற்ற பாத்திரங்களைக் கொண்ட மகாபாரதத்தை எளிய நடையில் அனைவரும் புரிந்துக் கொள்ளும் வகையில் எழுத வேண்டும் என எண்ணினேன்.கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு மேல் ..எந்ததவறும் வந்துவிடக்கூடாதே என் அபலமுறை படித்து..அவற்றை எளிமைப்படுத்தி எழுதினேன்.நண்பர் கே என் சிவராமன்,தி.முருகன் ஆகியோர் கொடுத்த ஊக்கத்தினால் இது, "மினியேச்சர் மகாபாரதம்" எனும் நூலாக சூரியன் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டு பல பத்திரிகைகளின் பாராட்டுகளும்,படித்தோரிடம் இருந்து வாழ்த்துகளும் பெற்றேன். முகநூல் நண்பர்கள் படிக்க . 190 பகுதிகளில் எழுதியுள்ளேன்.மகாபாரதப் போருக்குப் பின் நடந்தவைகளை பலர் அறியமாட்டார்கள்.ஆகவே அதையும் எழுத வேண்டும் என எண்ணினேன்.என் பணி முடிந்தது.


நான் முதலிலேயே குறிப்பிட்டபடி..இதை நம்பியவர்களும்..சரி..நம்பாதவர்களும் சரி  இதிலுள்ள நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கேற்ப ஒத்துழைப்புக் கொடுத்தமைக்கு நன்றி.

இம் மாபெரும் செயலை முடிக்க எனக்கு உறுதுணையாய்  இருந்தது..ராஜாஜி அவர்கள், வாரியார் அவர்கள்,ஸ்ரீசந்திரன் அவர்கள் எழுதியுள்ள புத்தகங்கள்.அவர்களுக்கு நன்றி.

(மகாபாரதம் முற்றும்)

Sunday, November 13, 2011

189-சுவர்க்க ஆரோஹன பருவம் (சுவர்க்கத்தில் ஏற்றம் பெறுவது)




சுவர்க்கத்திற்குச் சென்ற தருமர் கோலாகலமாய் இருந்த ஓர் இடத்தை அடைந்தார்.அங்கு துரியோதனன் ஒரு இருக்கையில் அமர்ந்திருந்ததைக் கண்டார்.பேராசைக்காரன் இருக்கும் இடத்திற்கா வந்துவிட்டேன்...எனத்தன் தலைவிதியை நொந்து கொண்டார்."திரௌபதியை அவைக்கு இழுத்துவரச் செய்து அவமானப்படுத்தியவன் அல்லவா? இவன்.இவனை நான் காண விரும்பவில்லை.என் சகோதரர்கள் இருக்கும் இடத்திற்கே செல்ல விரும்புகிறேன்' என்றார்.

அது கேட்ட நாரதர், 'தருமா! பகையை மண்ணுலகோடு மறந்துவிட வேண்டும்.சுவர்க்கத்திற்கு வந்த பின் மண்ணுலக வாழ்வை ஏன் நினைக்கிறாய்?துரியோதனன் க்ஷத்திரியர்தம் இயல்புக்கு ஏற்ப வீரப்போர் புரிந்து இங்கு வந்து சேர்ந்துள்ளான்.இவனது மேன்மையை இங்குள்ளோர் பாராட்டுகிறார்கள் பார்' என்றார்.

நாரதரின் இந்த விளக்கத்தை ஏற்க தருமர் மறுத்துவிட்டார்.'என் சகோதரர்கள் சுவர்க்கத்தில் எந்த இடத்தில் இருக்கிறார்கள்?கொடை வள்ளல் கர்ணன் எங்கே? அவனையும் காண விரும்புகிறேன்.விராடனையும்,துருபதனையும், வீரப்போர் புரிந்து சுவர்க்கத்திற்கு வந்து இருக்கிறார்களே அவர்களையும் காண விரும்புகிறேன்.வீர அபிமன்யூ வைக் காண வேண்டும்' என்றார்.

முதலில் தனது சகோதரர்களைக் காண விழைந்த தருமருக்குத் தேவதூதன் ஒருவன் வழிகாட்டிச் சென்றான்.செல்லும் வழியெங்கும் துர்நாற்றம் வீசியது.எங்கும் தசையும், ரத்தமும் கலந்த சேறாகக் காணப்பட்டது.அழுகிய பிணங்கள் மீது நடந்துச் செல்ல வேண்டியிருந்தது.பிணங்களை உண்பதற்காகக் கழுகுகளும், காகங்களும் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.அந்தக் கோரமான காட்சியைக் கண்டு தருமர் திடுக்கிட்டார்.தகதக என காய்ச்சப்பட்ட எண்ணெய்க் குடங்களைப் பாவிகளின் தலையில் போட்டு உடைக்கக் கண்டு உள்ளம் பதறினார்.இந்தக் கொடூர வழியில் இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும்.என் சகோதரர்கள் எங்குள்ளனர்? என தூதனை வினவினார்.இந்தத் துயரக் காட்சியின் கொடுமையை நான் மேலும் காண விரும்பவில்லை.திரும்பிச் சென்றுவிடலாம்' என்றார்.

அந்த நேரத்தில், 'தருமரே! இன்னும் கொஞ்ச நேரமாவது நீங்கள் இங்கு இருங்கள்.உங்களால் எங்கள் துன்ப வேதனை குறைந்திருக்கிறது.திரும்பிப் போகாதீர்கள்' என பல குரல்கள் கெஞ்சிக் கேட்டன.வியப்புற்ற தருமர்..அக்குரல்கள் பீஷ்மர்,துரோணர்,கர்ணன், பீமன்,அர்ச்சுனன்,நகுலன், சகாதேவன்,திரௌபதி ஆகியோருடைய குரல்கள் அவை என அறிந்தார்.உடன் மூர்ச்சித்தார்.சிறிது நேரம் கழித்து எழுந்து, சினம் கொண்டு தேவதூதனிடம், "நீ போய் இந்திரனிடம் கூறிவிடு.வாழ்நாளெல்லாம் தீமையே செய்துக் கொண்டிருந்த துரியோதனன் தேவ சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.ஒரு குற்றமும் செய்யாத என் சகோதரர்களும், திரௌபதியும் நரகத்தில் வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்,நல்லது செய்பவர்கள் நரகத்திற்கு செல்ல வேண்டும் என்பதுதான் நீதி எனில் அந்த நரக வேதனையை அனுபவிக்க நான் தயார்' என்றார்.

தேவதூதன்..தருமர் சொன்னதை இந்திரனிடம் கூற, இந்திரன் ,மற்றும் அனைத்துத் தேவர்களும் தருமர் முன் தோன்றினர்.அந்த நேரத்தில் நரகக் காட்சி மறைந்தது.தருமர் கண்ட நரகக் காட்சி வெறும் மாயை என்பதை தருமரின் தெய்வீகத் தந்தையான எமதர்மர் விளக்கினார்.நரகத்தில் சிறிது நேரம் தருமர் தங்க வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது?

அவர் தரும நெறியிலிருந்து வழுவாத வாழ்க்கையை மேற்கொண்டிருந்தாலும், ஒரு உண்மையில் பாதியை மறைத்துக் கூறியது அவரது நெறிக்கு மாறுபட்டது.'அசுவத்தாமன் இறந்தான்' எனத் துரோணர் நம்புமாறு செய்தது தருமர் மனசாட்சிக்கு மாறாக நடந்து கொண்ட செயலாகும்.தம் நெஞ்சு அறிந்த பொய் காரணமாக நரகத் துன்பத்தைசிறிது நேரம் அவர் உணருமாறு ஆயிற்று.

தாமே தருமரை சோதித்ததை எமதர்மர் நினைவுப் படுத்தினார்.முன்பு துவைத வனத்தில் அரணிக் கட்டையைத் தேடிய போது முதல் முறையாகவும்,நாய் வடிவத்துடன் வந்து இரண்டாம் முறையாகவும் சோதித்ததைக் கூறினார்.தற்போது இந்திரனால் தோற்றுவிக்கப்பட்ட நரகக் காட்சியிலும் தருமர் வெற்றி பெற்றார்.உண்மையில் தம் சகோதரர்களும்,திரௌபதியும் சுவர்க்கத்தில்தான் இருக்கின்றனர் என்பதனை உணர்ந்த தருமர் வான கங்கையில் நீராடினார்.மண்ணக மாந்தர்க்கு அணியாக விளங்கிய தருமர் விண்ணகம் அடைந்தார்.தேவர்கள் சூழ்ந்து நின்று அவருக்கு வரவேற்பு அளித்தனர்.அவரது மனதில் இருந்த பகை உணர்ச்சி அடியோடு விலகியது.திருதராட்டிர குமாரர்களும் பாண்டவர்களும் இருக்கும் சுவர்க்கத்தை சென்றடைந்தார்.
சுவர்க்கத்தை அடைந்து சில காலம் தங்கி இன்பம் அனுபவித்த பின் சிலர் பரம்பொருளுடன் ஐக்கியமாயினர்.சிலர் தாங்கள் செய்து புண்ணிய காரியங்களுக்கு ஏற்பப் பல்வேறு தேவர்களாயினர்.

(அடுத்த பதிவுடன் மகாபாரதம் முற்று பெறுகிறது)

Thursday, November 10, 2011

188- மகாபிரஸ்தானிக பருவம் மேலுலகம் எய்தியது.




விருஷ்ணிகளின் அழிவை உணர்ந்த தருமர் தங்களுக்கும் முடிவு காலம் வந்துவிட்டதை உணர்ந்தார்.உலக வாழ்வைத் துறந்து செல்லலாம் என்னும் தமது கருத்தைச் சகோதரிரிடம் தெரிவித்தார்.காலம் எல்லா உயிரினங்களையும் உரிய நேரத்தில் அழிக்கும் சக்தி வாய்ந்தது என்பதை அனைவரும் உணர்ந்தனர்.துறவு மேற்கொள்ள விழந்தனர்.எல்லோரும் தருமரின் கூற்றுக்கு அடி பணிந்தனர்.தருமர் நாட்டை விட்டுப் புறப்படும் முன் சுபத்ரையிடம் கூறினார்..'உன்னுடைய பேரனான பரீட்சித்தை அஸ்தினாபுர அசனாக நியமித்து உள்ளேன்.யாதவர்களில் எஞ்சியுள்ள வஜ்ரன் இந்திரப்பிரஸ்தத்தை ஆள்வான்.நீ எங்களுடன் துறவு மேற்கொண்டு வர வேண்டாம்.இவர்களுக்கு உதவியாக இங்கேயே இரு.குரு வம்சத்தில் எஞ்சியிருக்கும் யுயுத்சு இந்த இரண்டு அரசர்களுக்கும் பாதுகாவலாக இருப்பான்.கிருபாசாரியார் இருவருக்கும் ஆசாரியாராகத் திகழ்வார்'

இவ்வாறு நாட்டில் ஆட்சி நடக்க ஏற்பாடுகளைச் செய்துவிட்டு தருமர் சுவர்க்க லோகம் அடையத் துறவு மேற்கொண்டார்.சகோதரர்களும்,திரௌபதியும் மரவுரி தரித்துத் தருமரைத் தொடர்ந்து சென்றனர்.அவரை பிரிய மனம் இல்லாத மக்கலும் நெடுந் தொலைவு தொடர்ந்து சென்று பின் திரும்பினர்.

பாண்டவர்களும், திரௌபதியும் உண்ணா நோன்பு மேற்கொண்டு கிழக்கு நோக்கிச் சென்றனர்.புண்ணிய நதிகளில் நீராடினர்.புனிதத் தலங்களைத் தரிசித்தனர்.முதலில் தருமரும்,அவருக்குப் பின் பீமனும்,பின்னால் அர்ச்சுனனும்,அவனுக்குப் பின் நகுல, சகாதேவனும் சென்றனர்.அவர்களைத் தொடர்ந்து திரௌபதியும் சென்றாள்.நாய் ஒன்று அவர்களைத் தொடர்ந்து சென்றது.அர்ச்சுனன் காண்டீபம் என்னும் வில்லையும் அம்பறாத் துணிகளையும் விடமுடியாதவனாகச் சுமந்து சென்றான்.

அவர்கள் கடற்கரையை அடைந்த போது, அக்கினி தேவன் தோன்றி,'முன்னர் நான் காண்டவ வனத்தை எரிப்பதற்கு காண்டீபம் என்னும் வில்லையும் இரண்டு அம்பறாத் துணிகளையும் வருணனிடம் இருந்து பெற்று அர்ச்சுனனுக்கு அளித்தேன்.அந்தக் காரியம் நிறைவேறியதோடு வேறு அரிய செயல்களையும் அவற்றைக் கொண்டு நிறைவேற்றினான்.இனி அவற்றால் பயனில்லை.எனவே அவற்றை வருணனிடமே ஒப்படைத்து விடுக' என்று கூறி மறைந்தான். அவ்வாறே அவை கடலில் இடப்பட்டன.

பிறகு பாண்டவர்கள் பூமியை வலம் வருபவரைப் போலத் தெற்கு நோக்கிச் சென்றனர். பின் தென்மேற்காய்ச் சென்றனர்.பின் வடக்கு நோக்கிச் சென்றனர்.இமயமலையைக் கண்டனர்.அதனையும் கடந்து சென்று மலைகளில் சிறந்த மேரு மலையைத் தரிசித்தனர்.சுவர்க்கத்தை நோக்கி அவர்கள் பயணம் தொடர்ந்த போது திரௌபதி சோர்ந்து விழுந்து இறந்து விட்டாள்.

அதிர்ச்சி அடைந்த பீமன், 'இந்த தெய்வமகள் ஏன் இப்படி வீழ்ந்து விட்டாள்?'என வினவினான்.அதற்கு தருமர்,'ஐவரிடமும் சமமான அன்பு வைக்க வேண்டியவள், அர்ச்சுனனிடம் மிகவும் பிரியமாக இருந்தாள்.அதனால் இந்த நிலை ஏற்பட்டது' என்று பதிலுரைத்தார்.பின்னர் திரும்பிக்கூட பார்க்காமல் போய்க்கொண்டிருந்தார். சற்று நேரத்தில் சகாதேவன் மயங்கி வீழ்ந்தான்...'அண்ணா சகாதேவனின் இந்நிலைக்கு என்ன காரணம்?' என்றான்.'தன்னிடம் உள்ள சாத்திர அறிவு வேறு யாரிடமும் இல்லை என்ற ஞானச்செருக்குக் காரணமாக அவனுக்கு இக்கதி ஏற்பட்டது' என்றபடியே தருமர் போய்க்கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில் நகுலன் சாய்ந்தான்.'தன்னைவிட அழகில் சிறந்தவர் யாருமில்லை என்ற அழகுச் செருக்குக் காரணமாகாவன் அப்படி வீழ நேரிட்டது' என்று திரும்பிப் பாராமல் தருமர் விரைந்தார்.அடுத்து அர்ச்சுனன் வீழ்ந்தி இறந்தான்.அதற்கு 'தான் ஒருவனே பகைவரை வெல்ல முடியும் என்ற வீரச் செருக்கே அவனுக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தியது' என்றவாறே தருமர் போய்க் கொண்டிருந்தார்.

பீமனுக்கும் தலை சுற்றியது, 'அண்ணா, இதற்கு என்ன காரணம்?' என்றான் பீமன்.'தன்னைவிட பலமுள்ளவர்கள் யாருமில்லை என்னும் வலிமைச் செருக்குதான் காரணம்'என தருமர் சொல்லி முடிப்பதற்குள்பீமன் உயிர் நீத்தான்.

தருமர் போய்க்கொண்டே இருந்தார்.நாய் மட்டும் அவரைத் தொடர்ந்தது.உயிருக்கு உயிரான அனைவரும் மாண்டபோது தருமர் ஏன் மனக் கலக்கமோ..துயரோ அடையவில்லை? காரணம் அவர் துறவு மேற்கொண்ட போதே பந்த பாசங்கள் மறைந்தன.அவர் எந்த பரபரப்பும் அன்றி போய்க்கொண்டிருந்தார்.

அப்போது அவரை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லத் தேவேந்திரனே விமானத்துடன் வந்து அழைத்தான்.'என் சகோதரர்களும்,திரௌபதியும் இல்லாமல் நான் மட்டும் வர மாட்டேன்' என தருமர் பதில் உரைத்த போது நாய் விமானத்தில் ஏற முற்பட்டது.அப்போது இந்த நாய்க்குச் சுவர்க்கத்தில் இடமில்லை' என்று கூறித் தடுத்தான் இந்திரன்.

தருமர், 'என்னிடம் அடைக்கலம் அடைந்த நாயை விட்டு நான் ஒரு போதும் வர மாட்டேன்.இது நான் மேற்கொண்ட விரதம்' என்றார்.

அப்போது நாய் தன் வடிவத்தை மாற்ரிக்கொண்டு தர்மதேவதையாகக் காட்சியளித்தது."தரும நெறியிலிருந்து பிறழாத உன்னை நான் பாராட்டுகிறேன்.தருமத்தை நீ எந்த அளவு காக்கிறாய் என்பதைக் கண்டறிய முன்பும் நான் நச்சுப் பொய்கையில் சோதித்தேன்.உடன் பிறப்புகளுக்கும், மாற்றாந்தாய் மக்களுக்கும் இடையே வேறுபாடு ஏதும் கருதாத உனது தரும வேட்கையை அன்றும் அறிந்தேன்.இப்பொழு நாயின் மீது கொண்ட கருணையுள்ளத்தால் இந்திரன் தேரில் ஏற மறுத்தது கண்டு பாராட்டுகிறேன்' என்று கூறி நாயாக வந்த தருமதேவதை மறைந்தது.

இந்த அற்புதத்தைக் கண்ட தேவர்கள் வியப்படைந்தனர்.தருமர் ரதத்தில் ஏறிச் சுவர்க்கலோகம் சென்றார்.அங்கு நாரதர் அவரை வரவேற்றுப் பாராட்டினார்.'நல்லொழுக்கத்தை விரதமாகக் கொண்டு வாழ்ந்த புண்ணிய பலத்தினால் நீ உடலோடு இந்த சுவர்க்கத்திற்கு வந்துள்ளாய்.உன்னைத் தவிர இத்தகைய நற்பேறு பெற்றவன் உலகில் வேறு யாருமில்லை' என்று மேலும் புகழ்ந்தார் நாரதர்.

நாரதரின் இப்பாராட்டு தருமர் காதுகளில் விழவில்லை.அவரது கண்கள் அவரது சகோதரர்களையும், திரௌபதியையும் தேடியது.ஆனால் அவர்களைக் காண இயலவில்லை.

(மகாபிரஸ்தானிக பருவம் முற்றிற்று)

Thursday, November 3, 2011

187 - காலம் நெருங்குகிறது




அனாதைகளாகிவிட்ட பெண்களையும், குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அர்ச்சுனன் அஸ்தினாபுரம் சென்றான்.அவர்கள் துவாரகையை விட்டுச் சென்றதும்..துவாரகை கடலில் மூழ்கியது.அர்ச்சுனனும் உடன் சென்ற மகளிரும் செல்லச் செல்ல அவர்கள் நீங்கிய நகரங்களும் கிராமங்களும் கடலால் கொள்ளப்பட்டன.

அர்ச்சுனன் அத்தனை பெண்களையும், குழந்தைகளையும் அழைத்துச் செல்வதைக் கண்ட திருடர்களுக்கு பேராசை உண்டாயிற்று.அவர்கள் ஆயிரக் கணக்கில் அவர்களை வழிமறித்து தாக்கினர்.திருடர்களின் துணிச்சலைக் கண்டு அர்ச்சுனன் நகைத்தான்.'உயிரின் மீது உங்களுக்கு ஆசை இருக்குமாயின் ஓடி விடுங்கள்.இல்லையேல் எனது அம்பினால் கொன்றுவிடுவேன்;' என எச்சரிக்கை செய்தான்.ஆனால் திருடர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை.பெண்களை மறித்துச் சூறையாடினர்.சினம் கொண்ட அர்ச்சுனன் காண்டீபம் என்னும் வில்லை எடுத்து நாண் ஏற்றி அம்பு தொடுக்க விறைந்தான்.ஆனால்...காண்டீபம் செயலிழந்துவிட்டிருந்தது.கற்ற மந்திரங்களும் நினைவுக்கு வரவில்லை.கற்ற கல்வியும் கேள்வியும் கடலில் கரைத்த காயம் போலாகின.'வில்லுக்கு விஜயன்' என்ற பெயர் போய்விட்டதோ என கலங்கினான்.காண்டீபம் செயலிழந்ததும்..அம்பறாத் துணியில் அம்புகளும் இல்லையாகின.யாவும் விதியின் பயன் என உணர்ந்தான்.இந்நிலையில் ஏராளமான பெண்களை திருடர்கள் கவர்ந்து சென்றனர்.பெரு முயற்சி செய்து எஞ்சியவர்களைக் காத்தான்.அவர்களை பொருத்தமான இடத்திலிருக்கச் செய்தான்.ருக்மணி அக்கினிப் பிரவேசம் செய்தாள்.சத்தியபாமையும் வேறு சிலரும் வனம் சென்று தவ வாழ்க்கை மெற்கொண்டனர்.

கண்ணீரும் கம்பலையுமாய் அர்ச்சுனன் வியாசரைக் காணச் சென்றான்.கண்ணனைப் பிரிந்தது..ஐந்து லட்சம் பேர் ஒருவரை ஒருவர் உலக்கையால் அடித்துக் கொண்டு மடிந்தது எல்லாவற்ரையும் கூறி அழுது புலம்பினான்.

வியாசர் அர்ச்சுனனுக்கு ஆறுதல் சொன்னார்..பின்.."அர்ச்சுனா..இறந்து போனவர்களைப் பற்றி கவலைப்படாதே.தெய்வ அம்சம் கொண்ட அவர்கள் கடமை முடிந்தது.அதனால் அவர்கள் ஆயுளும் முடிந்தது.இப்படி நடக்க வேண்டும் என்ற சாபம் அவர்களுக்கு இருந்தது.எல்லோரையும் ரட்சிக்கும் கண்ணன் நினைத்திருந்தால் இந்த அழிவைத் தடுத்து நிறுத்தி இருக்க முடியும்.ஆனால் அவரே இந்த முடிவை அங்கீகரித்து விட்டதாகவே நினை.உன் வாழ்க்கையில் எல்லா நேரங்களிலும் உனக்கு வழிகாட்டிய பரமாத்மாவும் தமது கடமை முடிந்தது எனக் கருதித் தமது உலகை அடைந்து விட்டார்., நீயும் உன் சகோதரர்களும் ஆற்ற வேண்டிய அருஞ்செயலைத் தெய்வ சம்மதத்துடன் செய்து முடித்து விட்டீர்கள். பூமித்தாயின் பாரம் உங்களால் குறைந்தது.கடமையை நிறைவேற்றிய உங்கள் காலமும் முடிவடையும் நேரம் வந்து விட்டது.இந் நில உலக வாழ்க்கையைத் துறந்து நல்ல கதியை அடைய உன் சகோதரருடன் புறப்படுவாயாக.."என்றார்.

கருத்து மிக்க வியாசரின் இந்த நல்லுரையைக் கேட்ட அர்ச்சுனன்..தன் சகோதரர்களிடம் நடந்ததை எல்லாம் எடுத்துரைத்தான்.

(மௌசல பருவம் முற்றும்)

Tuesday, November 1, 2011

186 - மௌசல பருவம் - உலக்கையால் மாண்டது




பாரதப் போர் முடிந்து முப்பத்தாறு ஆண்டுகள் ஆயின.குரு வம்சம் அழிந்ததைப் போலக் கண்ணனின் விருஷ்ணி வம்சமும் அழியும் காலம் வந்தது.அதனை அறிவிப்பது போலத் துர்நிமித்தங்கள் பல தோன்றின.புழுதிக் காற்று உலகையே மூடிவிட்டது போல தோற்றம் அளித்தது.விண்ணிலிருந்து நட்சத்திரங்கள் கரிக்கட்டையாய் விழுந்தன.சூரியன் ஒளிக் குன்றியவனாய்த் தெரிந்தான்.எங்கும் குழப்பமும்,அச்சமுமாய் இருந்தது.ஆடம்பரமும் தற்பெருமையும் கொண்ட விருஷ்ணிகளின் வீழ்ச்சி நெருங்கி விட்டது.

ஒரு சமயம் விஸ்வாமித்திரரும்,கண்வரும்,நாரதரும் துவாரகைக்கு வந்தனர்.விருந்தினராக வந்த அந்த முனிவர்களைப் பக்தி பூர்வமாக வரவேற்று உபசரித்திருக்க வேண்டும்.ஆனால் ஆணவம் தலைக்கேறிய விருஷ்ணிகள் அலட்சியமாக அம்முனிவர்களிடம் நடந்துக் கொண்டனர்.கேலியும், கிண்டலுமாய் அவர்களிடம் பேசினர்.ஓர் ஆடவனுக்கு அழகிய வேடமிட்டு, அம்முனிவர்களிடம் அழைத்துச் சென்று 'இவளுக்கு ஆண் குழந்தை பிறக்குமா? பெண் குழந்தை பிறக்குமா?' எனக் கேட்டு நகைத்தனர்.

கந்தல் துணிகளையும் இரும்புத் துண்டுகளையும் சேர்த்து மூட்டையாக வயிற்றில் கட்டிக் கர்ப்பிணிப் பெண்ணாக காட்சி அளித்த ஆடவனைக் கண்ட அவர்கள் சினம் கொண்டனர்.'இவன் ஒரு இரும்பு உலக்கையைப் பெற்றெடுப்பான்.அந்த உலக்கையால் கண்ணனும், பலராமனும் தவிர விருஷ்ணி குலம் முழுதும் நாசம் அடையும்' எனச் சாபம் இட்டனர்.முனிவர்களின் சாபத்தைக் கேட்ட விருஷ்ணிகள் பயந்து ஓடோடிச் சென்று பலராமனிடமும், கண்ணனிடமும் நடந்ததை கூறினர்.

இரும்புத்துண்டை நன்றாகத் தூள் தூளாக்கிக் கடலில் போடுமாறு பலராமன் அவர்களுக்கு ஆலோசனைக் கூறினார்.விருஷ்ணி இளைஞர்களும் அப்படியேச் செய்தனர்.தங்களுக்கு நேர இருந்த ஆபத்து நீங்கியதாக நினைத்தனர்.ஆனால் கண்ணனின் மனநிலை வேறாக இருந்தது.முன்னொரு சமயம் மக்களை பறி கொடுத்த காந்தாரி தமக்கு இட்ட சாபத்தை நினைத்தார்.'நீ நினைத்திருந்தால் குருகுல நாசத்தைத் தடுத்திருக்கலாம்.ஆனால் நீ அவ்வாறு செய்யவில்லை.எனவே குருவம்சம் அழிந்தது போல உன் விருஷ்ணி வம்சமும் அழியட்டும்' என்று அவள் இட்ட சாபத்தை எண்ணி தமது விருஷ்ணி வம்சமும் அழியும் காலம் வந்துவிட்டதை உணர்ந்தார்.

கண்ணன் வர இருக்கும் ஆபத்தை மாற்ற விரும்பவில்லை.காலத்தின் இயல்பு அது.விருஷ்ணிகளின் ஒழுக்கக்கேடு வரம்பு மீறிச் சென்றது.ஆணவமும்,ஆடம்பரமும் அளவு கடந்து சென்றன.பலராமனையும், கண்ணனையும் தவிர மற்ற எல்லாரையும் அவர்கள் அவமானப் படுத்தினர்.ஐம்புல இன்பங்களில் எல்லை மீறிச் சென்றனர்.குறிப்பாகக் காமக்
களியாட்டத்தில் பெரிதும் ஈடுபட்டனர்.கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் துரோகம் செய்தனர்.

சாபம் பலிக்கும் காலம் வந்து விட்டது.கடலுக்குள் போடப்பட்ட இரும்புத் தூள்கள் கரையோரத்தில் ஒதுங்கி நாணல்களாக வளர்ந்திருந்தன.குடித்து விட்டுக் கேளிக்கைகளில் ஈடுபட்ட விருஷ்ணிகள் அக்குடிவெறியில் ஒருவரோடு ஒருவர் சர்ச்சையில் ஈடுபட்டனர்.ஒருவரை ஒருவர் அடிக்கத் தொடங்கினர்.கடற்கரையில் வளர்ந்திருந்த நாணல்கள் அனைத்தும் முனிவர்கள் இட்ட சாபத்தால் உலக்கைகளாக மாறியிருந்தன.விருஷ்ணிகள் உலக்கையால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர்.தந்தையென்றும்,மகன் என்றும் உறவு என்றும் பாராது கடுமையாக இரும்பு உலக்கையால் அடித்துக் கொண்டு மாண்டனர்.

காலத்தின் போக்கை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார் கண்ணன்.மண்ணுலகில் தன் வேலை முடிந்து விட்டது என எண்ணினார்.பலராமன் தன் உடலை ஒழித்து விட்டுப் பரத்தில் ஐக்கியமானார்.கண்ணனும் தன் உடலை மாய்க்கக் கருதினார்.காந்தாரி முன்னர் இட்ட சாபத்தை நினைத்துப் பார்த்தார்.இப்போது தமது உத்தம உலகை அடையும் நேரம் வந்துவிட்டது என உணர்ந்தார்.கண்ணன் ஐம்புலன்களையும் அடக்கி யோக நித்திரையில் ஆழ்ந்தார்.அதனை உணராது ஏதோ விலங்கு என எண்ணி ஜரன் என்னும் வீரன் அம்பை எய்தினான்.கூரிய முனையை உடைய அந்த அம்பு கண்ணனின் இகலோக வாழ்வை முடிவுக்குக் கொண்டு வந்தது.முனிவர்கள் தொழ..ஜோதி உலகு எங்கும் பரவி ஆகாயம் நோக்கிச் செல்ல தம் உலகை அடைந்தார் கண்ணன்.அவரை அங்கு இந்திரனும்,அஸ்வினி தேவர்களும்,ருத்ரர்களும்,வசுக்களும்,சித்தர்களும்,முனிவர்களும் தாழ்ந்து பணிந்து வரவேற்றனர்.

தாருகன் அஸ்தினாபுரம் சென்று விருஷ்ணிகளும், போஜர்களும்,அந்தகர்களும் மாண்ட செய்தியை தெரிவித்தான்.உலக்கையால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு இறந்தனர் என்ற செய்தி அறிந்து அஸ்தினாபுரம் திடுக்கிட்டது.கண்ணனைக் காணலாம் என்று வந்த அர்ச்சுனன் ஏமாற்றம் அடைந்தான்.அவன் அங்கு வரும் முன் பரமாத்மா தனது உலகமான பரலோகத்தை அடைந்து விட்டார்.துவாரகை மயான பூமியாய் காட்சி அளித்தது.

கண்ணன் இல்லாத துவாரகையையும், கணவனை இழந்து துடிக்கும் பெண்களையும் கண்ட அர்ச்சுனன் மயங்கி வீழ்ந்தான்.பார்த்தனைப் பார்த்த ருக்மணியும் சத்யபாமாவும் 'ஓ'வென கதறி அழுதனர்.மயங்கி வீழ்ந்தவன் மயக்கம் தெளிந்ததும் யாவரும் ஒன்றும் பேசாது மௌனமாக நின்றனர்.அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் கூறிய அர்ச்சுனன் அவர்கள் அனைவரையும் பாதுகாக்கும் பொறுப்பைத் தான் ஏற்றுக் கொண்டான்.பலராமர்,கண்ணன் ஆகியோர் சடலங்களைக் கண்டெடுத்து எரியூட்டி ஈமச் சடங்குகளை முறையாக செய்து முடித்தான்.


Thursday, October 27, 2011

185-ஆஸ்ரம வாசப் பருவம்.(துறவு வாழ்க்கைப் பற்றி)




பிதாமகர் பீஷ்மரையும்,துரோணரையும்,கர்ணனையும்,துரியோதனன் முதலான தம்பியரையும் , எண்ணற்ற வீரர்களையும் யுத்த களத்தில் இழந்த பின் பெற்ற அரசாட்சியில் தருமருக்கு மகிழ்ச்சி ஏதுமில்லை.நாடாளும் மன்னன் என்னும் பெருமிதமும் இல்லை.நாட்டைக் காவல் புரியும் ஒரு காவல்காரனாகவே தம்மைக் கருதி நாட்டை ஆளத் தொடங்கினார்.முப்பத்தாறு ஆண்டுகள் தருமரின் ஆட்சி நீடித்திருந்தது.தரும நெறி எங்கும் தழைத்து ஓங்கியது.

நூறு பிள்ளைகளை பறி கொடுத்த திருதராட்டிரனையும், காந்தாரியையும் தனது இரு கண்களைப் போல் கருதிப் பாதுகாத்து வந்தார்.பிள்ளைகளைப் பறி கொடுத்த தந்தைக்கும்,தாய்க்கும் ஏற்பட்ட வேதனையைக் கண்டு தருமர் மனம் வாடினார்.அவர்களுக்கு மனக்குறை ஏதும் ஏற்படாதவாறு நடந்துக் கொள்ள வேண்டும் எனத் தம்பியரிடம் கூறினார்.துரியோதனன் காலமெல்லாம் தந்தைக்குத் தொல்லை கொடுத்து வந்தான்.ஆனால் தருமரோ..தன் தந்தை பாண்டு இருந்திருந்தால் எப்படி அவரைப் பார்த்துக் கொள்வாரோ அதைவிடப் பல மடங்கு அன்புடன் பெரியப்பாவிடம் நடந்து கொண்டார்.காலப் போக்கில் தன் மக்கள் இல்லாத குறையைத் திருதராட்டிரன் மறக்கும் வண்ணம் தருமர் நடந்துக் கொண்டார்.

தருமரைப் போலவே குந்தியும், திரௌபதியும் திரிதிராட்டினனுக்கும்,காந்தாரிக்கும் மனம் கோணாது பணிவிடை செய்தனர்.

பெரியப்பாவிற்கு மனம் கோணாமல் நடக்க வேண்டும் என தருமர் உரைத்தாலும், பீமன் மட்டும் சிறிது மாறுபாடாகவே நடந்து கொண்டான்.தாங்கள் அனுபவித்த துன்பங்களுக்கு எல்லாம் உடந்தையாக இருந்ததற்காக திருதிராட்டிரன் காதில் விழுமாறு எதையாவது சொல்லிக் கொண்டே இருந்தான்.இவற்றைக் கேட்ட திருதிராட்டிரன் மனம் புண்பட்டாலும்..காலப்போக்கில்..பீமன் சொல்வது உண்மைதானே என நினைத்து பண்பட்டான்.

தருமர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுப் பதினைந்து ஆண்டுகள் கழிந்தன.தருமரின் உபசரிப்பில் திருப்தியாய் இருந்தாலும், திருதிராட்டினன் கானகம் சென்று கடுந் தவம் புரிந்து இவ்வுலக வாழ்க்கையை முடிக்க எண்ணினார்.மனதில் முன்னர் இருந்த ஆசாபாசங்கள் இப்போது இல்லை.பிள்ளைப் பாசத்தால் செய்த கொடுமைகளை எண்ணி எண்ணி மனம் திருந்தியவனாகத் திருதிராட்டினன் காட்சியளித்தான்.

க்ஷத்திரிய வம்சத்தில் பிறந்தவர்கள் போர்க்களத்தில் போர் புரிந்து வீர மரணம் அடைய வேண்டும் அல்லது முதிர்ந்த வயதில் கானக வாழ்க்கை மேற்கொண்டு தவம் இயற்றி உலக வாழ்க்கையை முடிக்க வேண்டும்.போர்க்கள மரணத்திற்கு திருதிராட்டிரனுக்கு வாய்ப்பில்லை.எனவே வனத்திற்குச் செல்ல விரும்பினான்.

ஒருநாள் சான்றோர்களை அழைத்து தனது எண்ணத்தை புலப்படுத்திப் பேசினான்.'அன்புள்ளம் கொண்டவர்களே! கௌரவ வம்சமே வீழ்ச்சி அடைந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள்.அதன் அழிவிற்கு நானும் ஒரு காரணம்தான்.புத்திர பாசத்தால் துரியோதனன் சொன்னவாறெல்லாம் நடந்து கொண்டேன்.பீஷ்மர் போன்ற மேலானவர் கூற்றிற்கு எல்லாம் செவி சாய்க்காது புறக்கணித்தேன்.என் தம்பியரின் புதல்வர்களுக்கு எல்லையற்ற தொல்லை கொடுத்தேன்.தருமனையா பகைத்தேன்...தருமத்தை அல்லவா பகைத்தேன்.

கண்ணனின் பேச்சைக் கேட்காததால் இப்போது துன்பத்தை அனுபவிக்கிறேன்.பாண்டவர்களுக்கு நாடு தராதது மட்டுமல்ல..அவர்களுக்கு மாபாதகக் கொடுமைகளைச் செய்தேன்.நான் செய்த தவறுகள் என் மனதைத் துளைத்துத் துன்புறுத்துகின்றன.இதுவரை கண்ணை மட்டுமா இழந்திருந்தேன்..கருத்தையும் அல்லவா இழந்திருந்தேன்.இப்போதுதான் அறிவுக் கண் திறக்கப் பெற்றேன்.குருக்ஷேத்திர போருக்குப் பின் பாண்டவரின் உபசரிப்பால் அறிவுக் கண் திறந்தேன்.

செய்த தவறுக்கு எல்லாம் பிராயச்சித்தம் தேடுகிறேன்.சில நாட்களாகக் கஞ்சியை மட்டுமே பருகி வருகிறேன்.சுவையான உணவு உட்கொள்வதில்லை.நாள் தோறும் ஜபம் செய்கிறேன்.தர்ப்பைப் புல்லையே படுக்கையாகக் கொண்டு அதில் படுத்துக் கிடக்கிறேன்.இரவில் உறக்கம் இல்லை.காந்தாரியின் நிலையும் இதுவே.நூறு மகன்களை
இழந்த தாயின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்.

இவ்வாறு அவையோரை நோக்கிக் கூறிய திருதிராட்டினன் தருமரைப் பார்த்து,' உனக்கு எல்லா நன்மைகள் உண்டாகட்டும்.உன்னால் நான் நன்கு கவனிக்கப்படுகிறேன்.காந்தாரியும் என்னை நன்கு கவனித்துக் கொள்கிறாள்.திரௌபதிக்கும்,பண்டவர்களான உங்களுக்கும் தீங்கு இழைத்த கொடியவர்கள் அதற்கான தண்டனையைப் பெற்றுவிட்டார்கள்.தற்போது எனக்கும் , உன் தாயான காந்தாரிக்கும் புண்ணியம் அளிக்கும் செயலை நான் செய்ய வேண்டும்.அரசன் என்பவன் மக்களை ஆள்பவன் மட்டுமல்ல.அவன் குடிமக்களுக்கு குரு போன்றவன்.ஒவ்வொருவருடைய ஆன்ம நலனுக்கும் அவன் உதவி செய்ய வேண்டும்.அதனால்..உன்னிடம் ஒன்று கேட்கிறேன்.அதற்கு நீ அனுமதி தர வேண்டும்.காடு செல்ல விரும்புகிறேன்..தருமா...தடை செய்யாதே'

நீ அனுமதி அளித்த பிறகு நானும், காந்தாரியும் காடு செல்வோம்.அங்கு மரவுரி தரிப்போம்.கந்த மூலாதிகளை உண்போம்.கடுந்தவம் செய்வோம்.அந்தத் தவத்தின் பயன் உனக்கும் கிடைக்கும்.மக்கள் செய்யும் பாவ புண்ணியத்தில் ஒரு பகுதி மன்னனைச் சாரும் என சான்றோர் கூறுகின்றனர்.எனவே எனக்கு அனுமதி கொடு' என்றார்.

இதைக் கேட்ட தருமர் வருந்தினார்.'அரசே..உங்கள் துயரை மாற்ற நாங்கள் முயற்சி செய்தோம்.எல்லாம் பயனற்று போயின.காலப்போக்கில் கவலைகளை மறந்திருப்பீர் என எண்ணி ஏமாந்து விட்டோம்.நீர் உணவு கொள்ளாமல் உபவாசம் இருப்பதும், தரையில் படுப்பதும் எங்களுக்குத் தெரியாமல் போயிற்று.நீர் மகிழ்வுடன் இருப்பது போல பாவனை செய்து மனதிற்குள் வேதனையாய் இருந்துள்ளீர்கள்.நீங்கள் படும் வேதனைக் கண்டு, எனக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை.துரியோதனனிடம் எனக்கு கோபம் இல்லை.எல்லாம் விதியின் செயல்.நாங்கள் தங்களையும், பாண்டுவையும் வேறாக பார்க்கவில்லை.அதுபோல காந்தாரியையும் எங்கள் தாய் போலவே கருதுகிறோம்.ஆகவே எங்களை விட்டு காடு செல்ல நீங்கள் விரும்பினால்..நானும் உங்களுடன் வருவேன்..யாரேனும் நாட்டை ஆளட்டும்'என்றார்.

தருமரின் உரையைக் கேட்ட திருதிராட்டினன் மூர்ச்சித்து காந்தாரியின் மடியில் சாய்ந்தான்.தருமர் உடன் குளிர்ந்த நீர் தெளித்துக் கைகளால் வருடினார்.தருமரின் கைப்பட்டதும் திருதிராட்டினன் உணர்வு பெற்றான்.

அப்போது அங்கு தோன்றிய வியாசர் தருமருக்கு அறிவுரை வழங்கினார்.'தருமா..திருதிராட்டினன் விருப்பப்படியே செய்..புத்திரர்களை இழந்த சோகத்தாலும், முதுமையின் தளர்ச்சியாலும் திருதிராட்டினன் மிகவும் துன்புறுகிறான்.எல்லா ராஜரிஷிகளும் கடைசிக் காலத்தில் வனவாசத்தையே விரும்புகிறார்கள்.அவனுக்கும் அந்த எண்ணம் ஏற்பட்டுவிட்டது.தடுக்காதே! ராஜரிஷிகள் யுத்தத்தில் இறக்க வேண்டும் அல்லது கானகம் சென்று தவம் இயற்றிப் பரகதி அடைய வேண்டும்.இது உலக நியதி.எனவே இவனுக்கு அனுமதி கொடு.தவம் புரிய தக்க சமயம்தான் இது' என்ற வியாசரின் அறிவுரையைத் தருமரால் தட்ட இயலவில்லை.

பின்னர் திருதிராட்டினன் மக்களை நோக்கிப் பேசினான்,' என் அன்பு மக்களே..முன்னர் சந்தனு மாமன்னன் இந்நாட்டை சிறப்பாக ஆண்டான்.பின் என் தந்தை விசித்திரவீரியனும்
பிதாமகர் பீஷ்மரால் காப்பாற்றப்பட்டு நல்ல முறையில் ஆட்சிக் காத்தார்.பின் பாண்டுவின் ஆட்சியும் மாட்சியுடன் திகழ்ந்தது.துரியோதனன் பாண்டவர்களுக்குத்தான் தீங்கு இழத்தானே தவிர உங்களுக்கு ஒரு தீமையும் செய்யவில்லை'

இந்த நேரத்தில் உங்களிடம் ஒன்று வேண்டுகிறேன்.நான் உங்களுக்கு ஏதேனும் தீங்கிழைத்திருந்தால் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்.நான் காட்டிற்குச் செல்வதால் வருந்த வேண்டாம்.தருமன் எப்போதும் உங்களுக்கு நன்மையே செய்வான்.தருமன் தருமத்தின் உருவம் என்பதனை நன்கு புரிந்து கொள்ளுங்கள்.நான்கு லோக பாலகர்களுக்கு இடையில் பிரம்ம தேவன் இருப்பது போலப் பீமன், அர்ச்சுனன்,நகுலன் ,சகாதேவன் ஆகியோர் சூழ்ந்திருக்க தருமன் உங்களை நன்கு பாதுகாப்பான்.

பெரியோர்களே! உங்களிடம் இன்னொன்றையும் வேண்டுகிறேன்.நான் பெற்ற மைந்தரில் விகர்ணனைத் தவிர மற்றவர்கள் அறிவுத் தெளிவற்றவர்கள்.சுயநலம் மிக்கவர்கள்.அவர்களால் உங்களுக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்திருக்குமேயாயின் அவர்களை மன்னித்துவிடுங்கள்.எங்கள் இறுதிக்காலத்தில் நாங்கள் மேற்கொள்ளவிருக்கும் தவ வாழ்க்கைக்கு நீங்களும் அனுமதி கொடுங்கள்'என்றான்.

கண் இழந்த மன்னன் பேசியதைக் கேட்டு மக்கள் உள்ளம் உருகினர்.கண்ணீர் விட்டனர்.ஒன்றும் பேசாது, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.கை குவித்து வணங்கிப் பிரியா விடை அளித்தனர்.

திருதிராட்டினையும்,காந்தாரியுயையும் பின் தொடர்ந்து குந்தியும், விதுரரும்,சஞ்செயனும் கானகம் சென்றனர்.நிலையற்ற இவ்வுலக வாழ்க்கையை அவர்கள் அறவே மறந்தனர்.
மறுமை இன்பத்தை வேண்டி நின்றனர்.துன்பம் நிறைந்த உலக வாழ்க்கையை நீத்த அவர்கள்;இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை' என்னும் மேலுலக வாழ்க்கையைப் பெற மூன்றாண்டுகள் துறவு மேற்கொண்டு தியானம்,தவம் ஆகியவற்றில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு சமயம் காட்டுத்தீ எங்கும் பரவியது.தியானத்தில் இருந்த திருதிராட்டினன்,காந்தாரி,குந்தியை அத்தீ இரையாக்கிக் கொண்டது.அவர்கள் உடல்கள் வெந்து கரிந்து சாம்பலாயின.ஆனால் அவர்கள் உயிர்கள் சோதி வடிவமாய் மேலுலகம் நோக்கிச் சென்றன.காட்டித் தீ விதுரரையும்,சஞ்செயனையும் பாதிக்கவில்லை.அவர்கள் தியானத்தை மேற்கொள்ள இமய மலையை நோக்கிச் சென்றனர்.
பின் சில காலம் வாழ்ந்த இவர்களது சீரிய வாழ்வு ஊழி ஊழிக்காலம் போற்றும் வண்ணம் முடிவுற்றது.

(ஆஸ்ரம வாசப் பருவம் முற்றும்)



Tuesday, October 18, 2011

184- கிருஷ்ணர் துவாரகை சென்றார்..




அஸ்வமேத யாகம் முடிவுற்றது.வந்திருந்த மகரிஷிகளும்,மன்னர்களும், மக்களும் கிருஷ்ணரை பணிந்து வணங்கினர்.கண்ணன் அனைவருக்கும் நல்லறக் கருத்துகளைக் கூறி ஆசி வழங்கினார்.பின் கண்ணன் துவாரகைக்குத் திரும்பிச் செல்ல விரும்பினார்.தேவர்களும், பிரம்ம ரிஷிகளும் யோகிகளும் பல்துறை வல்லுநர்களும் இனிக் கண்ணனை துவாரகையில் கண்டு தரிசிப்போம் எனக் கருதினர்.

கண்ணனை பிரிய மனமில்லாத பாண்டவர்கள் வருத்தம் மேலிட, தலை மேல் கை வைத்து வணங்கிக் கண்ணிர் மல்க ஒன்றும் பேசாது மௌனமாய் இருந்தனர்.கண்ணனும் மனம் நெகிழ்ந்தார்.வியாசர், திருதிராட்டிரன்,விதுரர்,காந்தாரி,திரௌபதி ஆகியோரிடம் விடை பெற்றுக் கொண்டு தேரில் புறப்பட்டார் கண்ணன்.அன்பு மேலிட பாண்டவரும் தேரில் ஏறினர்.தருமர் சாரதியாகி குதிரையின் கடிவாளக் கயிறுகளைப் பிடித்தார்.அர்ச்சுனன் தங்க மயமான விசிறி கொண்டு பகவானுக்கு அருகில் இருந்து வீசினான்.பீமன் ஸ்வர்ணமயமான குடையைப் பிடித்தான்.நகுல, சகாதேவன் சாமரம் வீசினர்.தேர் சில காத தூரம் சென்றதும், கண்ணன் தன்னை வணங்கிய பாண்டவர்களுக்கு ஆசி வழங்கி அவர்களை அஸ்தினாபுரத்திற்குச் செல்லும்படி அனுப்பிவிட்டு துவாரகை சென்றார்.

அஸ்தினாபுரம் சென்ற பாண்டவர்கள் கண்ணனை நெஞ்சில் இருத்தி அவரது நினைவாகவே வாழ்ந்த வரலாயினர்.

(அஸ்வமேதிக பருவம் முற்றிற்று)

183- ஒரு பிடி மாவுக்கு ஈடாகுது



கீரி சொல்லத் தொடங்கியது..

நான் கர்வத்தால் பேச வில்லை.உங்களுடைய யாகம் ஒரு பிடி மாவுக்கு ஈடாகாது. என்று கூறினேன்.கவர்ச்சியான அஸ்வமேத யாகத்தைவிட அந்தணன் ஒருவன் அளித்த ஒரு பிடி மாவு எப்படி சிறந்ததாகும் என்பதை விளக்குகிறேன்..கேளுங்கள்..

முன்னொருகாலத்தில் குருக்ஷேத்திரத்தில் அந்தணர் ஒருவர் இருந்தார்.அவர் வயல்களில் விழுந்து சிந்திக் கிடக்கும் தானியங்களைப் பொறுக்கி வந்து மாவாக்கி உயிர் வாழ்ந்து வந்தார்.அவருக்கு ஒரு மனைவியும்,மகனும்,மருமகளும்  உண்டு.இந்த நால்வருடைய ஜீவனும் அந்தணர் கொண்டு வரும் தானியங்களையே சார்ந்திருந்தது.நாள்தோறும் தானியங்களைப் பொறுக்கி வருவதும்,மாவாக்குவதும் வழிபாடு முடிந்த பின் நால்வரும் சமமாக அந்த மாவைப் பகிர்ந்துக் கொள்வதும் நடைமுறை வாழ்க்கையாய் இருந்தது.தெய்வ வழிபாடு, வந்த விருந்தினரை உபசரித்தல் ஆகியவற்றில் அவரது குடும்பம் நிகரற்று விளங்கியது.

கோடைக்காலத்தில் தானியங்கள் கிடைப்பது அரிது.ஆதலால் அக்குடும்பம் சில நாட்களில் அரைவயிறு உண்டும்,முழுப்பட்டினியாயும் கூடக் காலம் தள்ளிற்று.அத்தகைய வரிய நிலையில் இருந்த போது ஒருநாள் மாவை நால்வரும் பகிர்ந்து கொண்டு உணவு கொள்ள உட்கார்ந்த நேரத்தில் விருந்தாளி ஒருவர் வந்தார்.விருந்தினரை உபசரிப்பதை தலையாயக் கடமையாய்க் கொண்டிருந்த அந்தணர் தமக்குரிய பங்கை அந்த அதிதிக்கு அளித்தார்.வந்த விருந்தாளி அதனை ஆர்வத்துடன் உண்டார்.பசி அடங்கவில்லை.இதனைக் கவனித்துக் கொண்டிருந்த அந்தணரின் மனைவி தன் பங்கை அதிதிக்கு அளித்தார்.அதனை உண்டும் அவர் பசி அடங்கவில்லை.அவர் மகனும்,தன்  பங்கை கொடுத்தார்..மருமகளும் தன்பங்கைக் கொடுக்க ..அதனை உண்ட அதிதி பசி அடங்கிற்று.

விருந்தாளியாக, அதிதியாக வந்தது தருமதேவதையே ஆகும்.அங்கு வந்து அந்தணனின் தானத்தின் தன்மையை சோதித்தது.தர்மதேவதை அந்தணனை நோக்கி..

"நீர் நியாயமான வழியில் சேர்த்த பொருளை மனம் உவந்து உம் சக்திக்கு ஏற்றவாறு மனப்பூர்வமாக அளித்தது குறித்து மகிழ்ச்சி.உமது தானத்தை சுவர்க்கத்தில் உள்ள தேவர்களும் புகழ்ந்து பேசுகின்றனர்.விண்ணிலிருந்து அவர்கள் மலர்மாரி பொழிவதைக் காணுங்கள்.பிரமலோகத்தில் உள்ளவர்களும், தேவலோகத்தில் உள்ளவர்களும் உம்மை தரிசிக்க விரும்புகிறார்கள்.ஆகவே நீ சுவர்க்கத்திற்குச் செல்வாயாக.தூய மனத்துடன் நீ அளித்த இந்த எளிய தானத்தால் இந்த நற்கதி உமக்கு வாய்த்தது.ஆராவாரத்துடன் மிகுந்த பொருளை வாரிவாரிக் கொடுப்பது தானமல்ல்...அது வீண் பெருமைதான்.அதனால் ஒரு பயனும் அல்ல.ஆயிரம் கொடுக்க வேண்டிய இடத்தில் உள்ளன்போடு நூறு கொடுத்தால் போதுமானது.நூறு கொடுக்க வேண்டிய இடத்தில் பத்துக் கொடுத்தால் போதும்.பத்துக் கொடுக்க இடத்தில் ஒன்று கொடுத்தால் போதும்.ஒன்றும் கொடுக்க முடியாவிடின், தூய மனத்துடன் கொடுக்கும் தூய நீரே போதும்.

ரத்தி தேவன் என்னும் அரசன் ஒன்றும் இல்லாத சூழலில் தூய மனத்துடன் தூய நீர் மட்டுமே அளித்தான்.அதனாலேயே அவன் சுவர்க்கம் அடைந்தான்.

தருமமானது நியாயமான வழியில் சிறிய அளவில் சம்பாதிக்கப் பட்டாலும் அது பிறருக்குத் தூய மனத்துடன் அளிக்கப்படுவதாகும்.நியாயமில்லாத வழிகளில் பெருஞ்செல்வத்தைத் திரட்டிப் படாடோபமாகச் செய்யப்படுவது தருமம் அன்று.அதனால் மகிழ்ச்சியும் அல்ல.பயனும் அல்ல.

'திருகன் என்னும் மன்னன் ஓராயிரம் பசுக்களைத் தானமகச் செய்தான்.அந்த ஆயிரம் பசுக்களில் ஒரு பசு வேறொருவனுக்குச் சொந்தமானது.ஆயிரத்தில் ஒன்றுதான் அப்படி.
ஆனால் அவன் இதற்காக நரகம் செல்ல நேரிட்டது.நாம் கொடுப்பது எதுவாயினும், எவ்வளவாயினும் அது நல்ல வழியில் வந்ததாக இருக்க வேண்டும்.செல்வம் மட்டுமே புண்ணீயத்திற்குக் காரணமாகாது.அதுபோலவே பலவித யாகங்களால் வரும் புண்ணியமும் நியாயமான வழியில் வந்த பொருளைச் சக்திக்கு ஏற்ற வாறு தானம் செய்து சம்பாதித்த  புண்ணியத்திற்கு ஈடாகாது.ஒருவன் ராஜசூய யாகமோ, அஸ்வமேத யாகமோ செய்து ஏராளமான பொருளை வாரி வாரிக் கொடுத்தாலும் நீர் உமது தானத்தினால் பெற்ற பயனுக்கு நிகரான பயனை அவன் அடையமாட்டான்.நீர் ஒரு பிடி மாவினால் சுவர்க்கத்தை அடையும் புண்ணியம் செய்ததால், உங்கள் அனைவரையும் அழைத்துச் செல்ல அங்கிருந்த அற்புத விமானம்வந்திருக்கிறது.அதில் நீங்கள் நால்வரும் ஏறிச்செல்லுங்கள்.நான் தான் தருமம்.என்னை நங்கு பாருங்கள்' என்று கூறித் தரும தேவதை மறைந்தது.அந்த நால்வரும் சுவர்க்கம் சென்றனர்.

அப்படி தருமதேவதையும் நால்வரும் மறைந்த பிறகு நான் வளையிலிருந்து வந்தேன்.அங்கு சிந்தியிருந்த மாவில் படுத்துப் புரண்டேன்.என் மனம் தவமகிமையுடன் கூடிய மாவின் மீது சென்றதால் என் உடலில் பாதிப் பொன்னிறமாயிற்று.மற்றொரு பக்கம் எப்போது அப்படி பொன்னிறம் ஆகும் எனக் கரிதி யாகசாலைகளில் சுற்றித் திரிந்தேன்.தருமரின் அஸ்வமேத யாகத்தின் சிறப்பை எண்ணி இங்கு வந்து படுத்துப் புரண்டேன்.எனது உடலின் மறு பாதி பொன்னிறமாக மாறவில்லை.ஆதலால்'இந்த யாகம் ஒரு பிடி மாவுக்கு இணையில்லை' என்று கூறினேன்.முன்பு ஒரு பிடி மாவு என் பாடி உடலை பொன்னிறம் ஆக்கியது.இந்த யாகத்தால் அப்படி செய்ய இயலவில்லை.அதனால் இஃது அதற்கு ஈடாகாது என்பது என் கருத்து' என்று கூறி அந்தக் கீரி (தர்மதேவதை)மறைந்தது.

இதனால் நேர்மையான வழியில் பொருளைச் சேர்த்துத் தூய உள்ளத்துடன் செய்யப்படும் சிறிய தானம் கூட ஆரவாரத்துடன் ஆயிரம் ஆயிரமாக வழங்கிக் காண்போரைப் பிரம்மிக்க வைக்கும் அஸ்வமேத யாகத்தை விடச் சிறந்ததாகும்..என்ற உண்மை புலப்படுகிறது.

Friday, October 14, 2011

182- அஸ்வமேதிக பருவம்




பிஷ்மரின் மறைவு தருமரை மிக்கத் துயரத்தில் ஆழ்த்தியது.பாரதயுத்தம் முடிந்த போது ஏற்பட்ட சோகம் மீண்டும் அவரைச் சூழ்ந்தது.தருமருக்கு, திருதிராட்டிரரே ஆறுதல் சொன்னார்..

'மகனே! நீ இவ்வுலகை க்ஷத்திரிய தருமப் படியே வெற்றி கொண்டாய்.இனி நீ துயரப்பட வேண்டாம்.நானும், காந்தாரியும் தான் துயரம் அடைய வேண்டும்.ஏனெனில் எங்களது நூறு பிள்ளைகளும் மறைந்து விட்டனர்.விதுரர் எனக்கு எவ்வளவோ எடுத்துரைத்தார்.அவற்ரையெல்லாம் கேளாததால் இன்று இந்த நிலைக்கு ஆளானேன்.தருமா...நீ வருந்தாதே.நீயும் உன் தம்பிகளும் நாட்டாட்சியை மேற்கொண்டு நன்மை புரிவீராக' என்றார்.ஆனால் தருமர் பதில் ஏதும் உரைக்காது மௌனமாய் இருந்தார்.

அடுத்து, வியாசர் தருமரை நோக்கி.,'தருமா...நீ துயர் கொள்ளாதே..நீ எல்லா ராஜதருமங்களையும் ஆபத்தருமங்களையும் மோட்சதருமங்களையும் பீஷ்மரிடம் கேட்டிருக்கிறாய்.அப்படியிருந்தும் நீ ஏன் மதி மயக்கம் கொண்டாய்.நீ பாவம் செய்தவனாக நினைத்தால் அந்தப் பாவத்தைப் போக்கும் வழியைக் கூறுகிறேன்..கேள்..நீ தசர குமாரனான ராமனைப் போல அஸ்வமேத யாகம் செய்.உனது பாவங்கள் தொலையும்' என்றார்.

வியாசரின் ஆலோசனைப்படி கோலாகலமாகத் தொடங்கப்பட்ட அஸ்வமேத யாகத்தில் பலநாட்டு மன்னர்கள் கலந்து கொண்டனர்.பல்லாயிரக் கணக்கான மக்கள் பல பொருள்களை அரச காணிக்கையாகக் கொண்டு வந்தனர்.அனைவருக்கும் அறுசுவை விருந்து பரிமாரப் பட்டது.

புலவர்கள், அறிஞர்கள், தர்க்க வாதம் புரிந்து அவையோரை மகிழ்ச்சிக் கடலிலாழ்த்தினர்.

யாகம் முடிந்ததும்..பொன்னிறமாக இருந்த ஒரு கீரி அங்கு வந்து  தருமர் செய்த அந்த யாகத்தைவிட ஒரு பிடி மாவின் தானம் மேன்மையுடையது என்று கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.அங்கிருந்த சான்றோர்கள் கீரியின் அருகில் வந்து, 'நீ யார்? எங்கிருந்து வருகிறாய்?சாத்திரப்படி செய்யப்பட்ட இந்த யாகத்தை ஏன் குறை கூறுகிறாய்?உனக்கு எவ்வளவு கர்வம் இருந்தால் வேதங்களை உடைய ரிஷிகளால் போற்றப்படும் இந்த யாகத்தைப் பழித்துப் பேசுவாய்?' என்றனர்.

கீரி பதில் உரைக்க ஆரம்பித்தது..

Monday, October 10, 2011

181- பீஷ்மர் மறைந்தார்....




நல்ல பல அறவுரைகளைக் கதைகள் மூலம் சொல்லி வந்த கங்கை மைந்தன் களைப்புற்றார்.பேச்சை நிறுத்தினார்.யோகத்தில் ஆழ்ந்தார்.தியானத்தில் இருக்கையிலேயே அவரின் உடலில் இருந்த அம்புகள் உதிர்ந்தன.அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அனைத்து அம்புகளும் காணாமற் போயின.அவரது உயிர் சுவர்க்கத்தை நோக்கிச் செல்லலாயிற்று.அது கண்ட கண்ணனும், வியாசரும் வியப்புற்றனர்.தேவ துந்துபிகள் முழங்கின.வானம் மலர் மாரி பொழிந்தது.சித்தர்களும், பிரம ரிஷிகளும் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கினர்.'பிதாமகரே! வருக..என வானுலகோர் வரவேற்றனர்.பெரிய அக்கினி ஜ்வாலை போன்றதோர் ஒளிப்பிழம்பு கங்கை மைந்தரின் தலையிலிருந்து புறப்பட்டு விண்ணுலகைச் சென்று அடைந்தது.பீஷ்மர் இவ்வாறு வசுலோகத்திற்குப் போய்ச் சேர்ந்தார்.

பாண்டவர்களும், விதுரரும்,யுயுத்சுவும் சந்தனக்கட்டைகளாலும் மேலும் பல வாசனைப் பொருள்களாலும் சிதை அமைத்தனர்.திருதிராட்டிரனும்,தருமரும் பிதாமகனின் உடலைப் பட்டுக்களாலும், மாலைகளாலும் போர்த்தி மூடினர்.யுயுத்சு குடை பிடித்தான்.பீமனும்,அர்ச்சுனனும் சாமரங்கள் ஏந்தினர்.நகுல, சகாதேவர்கள் மகுடம் வைத்தனர்.திருதிராட்டினனும், தருமரும் காலருகே நின்றனர்.குருவம்சத்து மாதர்கள் நாற்புறமும் விசிறி கொண்டு வீசினர்.ஈமச்சடங்குகள் சாத்திரப்படி நிறைவேறின.புண்ணியமூர்த்தியின் சிதைக்குத் தீயிடப்பட்டது.அனைவரும் வலம் வந்து தொழுதனர்.எங்கும் சாந்தி நிலவியது.

பின்னர் கண்ணனும், நாரதரும்,வியாசரும்,பாண்டவரும், பரதவம்சத்து பெண்டிரும்,நகர மாந்தரும் புண்ணிய நதியான கங்கைக்கரையை அடைந்தனர்.ஜலதர்ப்பணம் செய்யப்பட்டது.அப்போது கங்காதேவி நீரிலிருந்து எழுந்து வந்து அழுது புலம்பியபடியே....' நான் சொலவதைக் கேளுங்கள்.என் மகன் குலப்பெருமை மிக்கவன்.ஒழுக்கத்தில் சிறந்தவன்.பரத வம்சத்து பெரியோர்களிடம் பெருமதிப்புடையவன்.உலகோர் வியக்கத்தக்க விரதத்தை மேற்கொண்டவன்.பரசுராமராலும் வெல்ல முடியா பராக்கிரம் உடையவன்.காசி மாநகரில் நடைபெற்ற சுயம்வரத்தில் தனியொரு தேராளியாக இருந்து, மன்னர்களை வென்று மூன்று கன்னிகைகளைக் கொண்டு வந்தவன்.வீரத்தில் இவனுக்கு நிகராக உலகில் வேறு யாருமில்லை.அத்தகைய மாவீரன் சிகண்டியினால் கொல்லப்பட்டதை எண்ணுகையில் என் நெஞ்சம் வெடித்துவிடும் போலிருக்கிறது' என்றாள்.

அப்போது கண்ணன்..'தேவி துயரப்படாதே..தைரியத்தை இழக்காதே..உன் மைந்தன் மேலுலகம் சென்றடைந்தார்.இனி அவர் வசுவாக இருப்பார்.ஒரு சாபத்தினால் மானிட வடிவம் தாங்கி மண்ணுலகில் உனக்கு மகனாகப் பிறந்தார் என்பதை நீ அறிவாய்.இப்போது சாப விமோசனம் கிடைத்துவிட்டது.இனி நீ அவரைப் பற்றி கவலைக் கொள்ளத் தேவையில்லை.தேவி..ஒன்றை மட்டும் நன்றாகப் புரிந்து கொள்..அந்த க்ஷத்திரிய வீரன் சிகண்டியினால் கொல்லப்படவில்லை.தனஞ்செயனால் கொல்லப்பட்டார். தேவர்கள் அனைவரும் திரண்டு வந்தாலும் அவரை வெற்றி கொள்ள முடியாது என்பதை நீ அறிவாய்.வசுக்கள் உலகை அடைந்த உன் மைந்தனை எண்ணி நீ பெருமைப் பட வேண்டுமே தவிர..துயரம் கொள்ளக் கூடாது' என்று ஆறுதல் கூறினார்.

கண்ணனின் ஆறுதல் கேட்டுச் சாந்தம் அடைந்த தெய்வமகள் நீரில் இறங்கினாள்.பின் அனைவரும் கங்காதேவியை வணங்கினர்.அத்திருமகள் விடை தர அனைவரும் திரும்பிச் சென்றனர்.

(அனுசாசன பருவம் முற்றிற்று)

Sunday, October 9, 2011

180-தவத்தைவிடச் சிறந்தது




தருமர், பீஷ்மரிடம், 'தவத்தைவிடச் சிறந்தது உண்டா?' என வினவ, பீஷ்மர் சொல்லத் தொடங்கினார்..
'தவத்தைவிட மேலானது உபவாசம்..இதனினும் சிரந்ததாக எதுவும் இல்லை.இது தொடர்பாகப் பிரம்ம தேவனுக்கும்,பகீரதனுக்கும் நடைபெற்ற உரையாடலை நெடுங்காலமாக கூறி வருகின்றனர்.அதைக் கூறுகிறேன்..ஒரு சமயம் பகீரதன் தேவலோகத்தையும், கோலோகத்தையும் கடந்து ரிஷிலோகத்தை அடந்தான்.அப்போது பிரம்மதேவன் பகீரதனைப் பார்த்து, 'அடையமுடியா இந்த ரிஷிலோகத்திற்கு நீ எப்படி வந்தாய்? தேவர்களாயினும், கந்தர்வர்களாயினும், மனிதராயினும் தவம் செய்துதான் இங்கு வர இயலும்.அப்படியிருக்க நீ வந்தது எவ்வாறு?' என வினவினார்.

பகீரதன் அதற்கு. 'பிரம்ம தேவரே! ஒரு லட்சம் பேருக்கு அன்னம் அளித்தேன்.ஆனால் அதன் பலனாக இங்கு நான் வரவில்லை.ஏகாத்ரம் என்னும் யாகங்கள் பத்தும்,பஞ்சராத்ரம் என்னும் யாகங்கள் பத்தும்,ஏகாதசராத்ர யாகங்கள் பதினொன்றும்,ஜோதிஷ்டோமம் என்னும் யோகங்கள் நூறும் செய்தேன்.அவற்றின் பயனாலும் இங்கு நான் வரவில்லை.கங்கைக் கரையில் நூறு வருடம் தவம் செய்தேன்..அங்கே ஆயிரம் கோவேறு கழுதைகளையும், கன்னியரையும் தானம் செய்தேன்.அவற்றின் பயனாலும் இங்கு நான் வரவில்லை.

புஷ்கரஷேத்திரத்தில் நூறாயிரம் குதிரைகளையும்,இரண்டு லட்சம் பசுக்களையும் அந்தணர்க்கு வழங்கினேன்.அவற்றின் பயனாலும் நான் இங்கு வரவில்லை.கோசலம் என்னும் யாகங்களில் ஒவ்வொருவருக்கும் வேறுபாடு கருதாது..பத்துப் பத்து பசுக்களாக நூறு கோடி பசுக்களையும், பால் கறக்கப் போதிய பொன்பாத்திரங்களையும்,வெண்பாத்திரங்களையும் தானம் செய்தேன்.அவற்றின் பயனாலும் நான் இங்கு வரவில்லை.

பாகிலி என்னும் இடத்தில் பிறந்தவையும்,பொன் மாலைகள் அணிந்தவையுமான பதினாயிரம் வெள்ளைக் குதிரைகளை அளித்தேன்.ஒவ்வொரு யாகத்திலும் நாள் தோறும் எட்டுக் கோடி,பத்துக் கோடி என வாரி வாரித் தந்தேன்.அவற்றின் பயனாலும் நான் இங்கு வரவில்லை.பொன் மாலைகளுடன் காது கருத்தவையும் ,பச்சை நிறம் உள்ளவையுமான குதிரைகள் பதினேழு கோடிகளைத் தந்தேன்.பொன்னால் செய்யப்பட்ட, பொன் மாலைகளுடன் கூடிய பதினெட்டாயிரம் தேர்களை அளித்தேன்.அவற்றின் பயனாலும் இங்கு நான் வரவில்லை.

ஆயிரமாயிரம் அரசர்களை வென்று, எட்டு ராஜசூய யாகங்களைச் செய்தேன்.அழகும், பெருங்கொண்டைகளும் உடைய எண்ணாயிரம் வெள்ளைக் காளைமாடுகளையும்,பசுக்களையும்,பொன் குவியலையும், ரத்தினக் குவியல்களையும்,ஆயிரக்கணக்கான கிராமங்களையும் அளித்தேன்.அவற்றின் பயனாலும் நான் இங்கு வரவில்லை.

ஒரு யோசனை நீள அகலமுள்ள மாமரங்கள் நிறைந்த காட்டைக் கொடுத்தேன்.அவற்றின் பயனாலும் இங்கு நான் வரவில்லை.அசுவமேத யாகங்கள் பல செய்தேன்.ஒவ்வொரு நாளும் முப்பது அக்கினிகளில் ஓமம் செய்தேன்.அவற்றின் பயனாலும் நான் இங்கு வரவில்லை.முப்பதாண்டுக் காலம் சினம் தவிர்த்து யாராலும் செய்தற்கரிய துவாரணம் என்னும் யாகத்தை விடாமல் செய்தேன்.எட்டு சர்வமேத யாகங்களும் ஏழு நாமேத யாகங்களும் செய்தேன்.அவற்றின் பயனாலும் நான் இங்கு வரவில்லை.

சரயு நதியிலும், நைமிசாரண்யத்திலும் பத்து லட்சம் பசுக்களைத் தானமாக வழங்கினேன்.அதனாலும் இங்கு வரவில்லை.ஓர் ரகசியம் இந்திரனால் குகைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.அதனை பரசுராமர் தன் தவத்தால் உணர்ந்தார்.அதனைச் சுக்கிரர் மூலமாக நான் அறிந்தேன்.அதன் காரணமாக ஆயிரமாயிரம் அந்தணர்க்குப் பொன்னையும், பொருளையும் தானம் செய்தேன்.அவற்றாலும் நான் இங்கு வரவில்லை.

உபவாசத்தால்தான் நான் இங்கு வந்தேன்.இந்த உபவாசத்தைவிட மேலான தவத்தை நான் எங்கும் அறியவில்லை' என்று கூறி முடித்தான்.

ஆதலால்..தருமா..நீயும் உபவாசத்தை மேற்கொண்டு, நற்கதி அடைவாயாக.." என்று பீஷ்மர் தருமருக்கு உரைத்தார்.

Thursday, October 6, 2011

179-இன்சொல்லின் சிறப்பு




இன்சொல்லின் சிறப்புக் குறித்து பீஷ்மர் தருமருக்கு விளக்குகிறார்..

'தருமா! இன்சொல்லால் ஆகாதது இல்லை.கொடிய விலங்குகளைக் கூட இனிமையான சொற்களால் வசப்படுத்தலாம்.இது சம்பந்தமாக, ஒரு அரக்கனால் பிடிக்கப்பட்ட ஒரு அந்தணன் தன் இனிமையான சொற்களால் விடுபட்டக் கதையைச் சொல்கிறேன்..
முன்னொரு காலத்தில் அறிவுள்ள அந்தணன் ஒருவன் காட்டில் அரக்கனால் பிடிபட்டான்.அரக்கன் தன் உணவிற்காக அந்தணனைப் பிடித்தான்.ஆனால் அவனோ சிறிதும் அச்சமோ,கலக்கமோ அடையவில்லை.இனிய வார்த்தைகளை அரக்கனிடம் பேசினான்.அதனால் வியப்படைந்த அரக்கன் அவனைப் பாராட்டினான்.பின், அரக்கன்,'நான் எதனால் இளைத்திருக்கிறேன்..சொல்' என்றான்.இது கேட்ட அந்தணன் தன் சொல்லாற்றலால் விரிவாகப் பதில் சொன்னான்.

நீ உன் உற்றார் உறவினரைப் பிரிந்து, வேற்று நாட்டில் இருக்கிறாய்..அதனால் நீ இளைத்திருக்கலாம்.

உன்னால் பாதுகாக்கப்பட்டவர் உன்னைக் கைவிட்டுப் போயிருக்க வேண்டும்.அதனால் நீ இளைத்திருக்கலாம்.

வாழ்க்கைக்குத் தேவையானவற்றைப் புறக்கணித்துப் பெரிய ஆசை கொண்டு அதற்காக நீ அலைந்து கொண்டு இருக்கிறாய் போலும்...அதனால் நீ இளைத்திருக்கலாம்.

செல்வமும் அதிகாரமும் உள்ளவர்கள் உன்னை அவமதித்திருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்

உலகில் அறிஞர்களையும் ஞானிகளையும் புறக்கணித்துச் சிலர் அற்பர்களைப் பாராட்டியிருக்க, அது கண்டு நீ வேதனைப் பட்டிருக்க வேண்டும்.அதனால் நீ இளைத்திருக்கலாம்.

அரும்பாடுபட்டு நீ செய்த நன்றியை மறந்து ஒருவன் உன்னிடம் துரோகம் செய்திருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்.

காமம் முதலான தவறான வழிகளில் மக்கள் ஈடுபடுவதுக் கண்டு நீ வருத்தமுறுகிறாய் என எண்ணுகிறேன்..அதனால் நீ இளைத்திருக்கலாம்.

நண்பனைப் போல நடித்து ஒரு பகைவன் உன்னை ஏமாற்றியிருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்.

உன் இனிய நண்பர்கள் சினம் கொண்டிருக்க அவர்களை உன்னால் அமைதிப்படுத்த முடியாமல் நீ வருந்தியிருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்.

யாரோ உன் மீது பழி சுமத்த, அதைக் கேட்டவர்களால் நீ அலட்சியப்படுத்தப் பட்டிருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்..

நல்ல குணங்களையுடைய நீ பிறரால் வஞ்சகன் என்று பழிக்கப் பட்டிருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்..

உனது நல்ல எண்ணங்களைச் சமயம் வரும்போது உன்னால் வெளிப்படுத்த முடியவில்லையே என வருந்தியிருப்பாய்..அதனால் நீ இளைத்திருக்கலாம்..

அற்பர்கள் மத்தியில் உனது சிறந்த கருத்துக்கள் எடுபடாமல் போனது கண்டு நீ மனம் நொந்து போயிருப்பாய் ..அதனால் நீ இளைத்திருக்கலாம்.

ஒழுக்கம் இல்லாத நீ உயர்வடைய வேண்டும் எனக் கருதி ஏமாந்திருப்பாய்..அதனால் நீ இளைத்திருக்கலாம்

உன் பிள்ளை உனக்கு அடங்காமல் போயிருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்

தாய் தந்தையர் பசியால் வாடி இறந்திருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்

உனது பொருள்களைப் பிறர் கவர்ந்து கொள்ள நீ வாழ்க்கைக்கு வேறொருவர் தயவை எதிர்பார்த்திருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்

நீ தகாதவர்களை நண்பர்களாக ஏற்றுக் கொண்டபின் அவர்களை விட முடியாமல் வருந்தியிருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்

உன்னிடம் கல்வி இல்லை..செல்வம் இல்லை..கொடை இல்லை..அப்படியிருந்தும் பெரிய புகழுக்கு நீ ஏங்கி இருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்

நெடுநாள் எதிர்பார்த்த ஒன்று பிறரால் அபகரிக்கப் பட்டிருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்

பாவிகள் நலமுடன் வாழ..நல்லவர்கள் கஷ்டப்படுவது கண்டு நீ தெய்வத்தை பழித்திருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்

அந்தணனின் சொல் வன்மையைக் கண்டு வியப்படைந்த அரக்கன் அவனது இனிய சொற்களைப் பலவாறு பாராட்டி அவனை விடுதலை செய்தான்.

ஆதலால்..தருமா! இன் சொலால் ஆகாதது இல்லை என உணர்ந்து கொள்' என்றார் பீஷ்மர்,

Monday, October 3, 2011

178-இந்திரனுக்கும்..கிளிக்கும் நடந்த உரையாடல்




பீஷ்மர்  இந்திரனுக்கும்,கிளிக்கும் நடந்த உரையாடல் ஒன்றை கதையாக தருமருக்கு உரைத்தார்..
'தருமா! காசி தேசத்தில் ஒரு வேடன் விஷம் தோய்ந்த அம்பையும்,வில்லையும் எடுத்துக் கொண்டு மான் வேட்டைக்குக் காடு நோக்கிச் சென்றான்.மான் கூட்டம் நிறைந்திருப்பதைக் கண்டு மகிழ்ந்த வேடன் உற்சாகத்துடன் அம்பைச் செலுத்தினான்.அது குறி தவறி ஒரு பெரிய ஆலமரத்தில் சென்று பாய்ந்தது.விஷம் தோய்ந்த அம்பானதால் அந்த மரம் பட்டுப் போனது.
மரம் அப்படியான போதும் அந்த மரத்தின் பொந்துகளில் வசித்து வந்த ஒரு கிளி அந்த இடத்தை விட்டு அகலவில்லை.இரை எடுக்கவில்லை.வெளியே போகவில்லை.தான் வசித்து வந்த மரத்திற்கு இப்படியானதே ..என வருந்தியது.
கிளியின் அன்பைக் கண்டு இந்திரன் வியப்புற்றான்.பறவை இனமாய் இருந்தும் மரத்திடம் இப்படி ஒரு அன்பா? என எண்ணி,கிளி இருந்த மரம் நோக்கி வந்தான்..அவன் கிளியிடம்'இந்த மரத்தைவிட்டு ஏன் அகலாமல் இருக்கிறாய்?' என்றான்.
இந்திரன் இப்படிக் கேட்டதும் கிளி அவனை வணங்கி..'தேவேந்திரா! உன்னை என் தவத்தால் அறிந்து கொண்டேன்.உன் வரவு நல்வரவாகட்டும்' என்றது.
தேவேந்திரன் கிளியிடம்,'இலைகளும்,கனிகளும்,கிளைகளும் இன்றி பட்டுப்போன மரத்தில்..நீ மட்டும் இருந்து ஏன் காவல் காக்கிறாய்..இக்காட்டில் உனக்கு வேறு மரமா..இல்லை?'எனக் கேட்டான்.
இந்திரனின் வார்த்தைகளைக் கேட்ட கிளி, மிகுந்த துயரத்துடன்'நற்குணங்களின் இருப்பிடமான இம்மரத்தில் நான் பிறந்தேன்.இளமையில் நன்கு பாதுகாக்கப் பட்டேன்.பகைவர்களும் என்னை ஒன்றும் செய்யவில்லை.தயை,பக்தி இவற்றால் வேறு இடம் நாடாமல் இருக்கும் எனது பிறவியை ஏன் பயனற்றதாக மாற்ற நினைக்கிறாய்?நமக்கு உதவு செய்தவரிடத்தில் தயையுடன் நடந்து கொள்வதுதானே தருமத்தின் இலக்கணம்.தயையே எல்லோருக்கும் திருப்தியை அளிப்பது.தேவர்கள் அனைவரும் தருமத்தின் சிறப்பைப்பற்றி உன்னிடம் அல்லவா கேட்க வருகிறார்கள்..அதனால் அன்றோ தேவர்களுக்கு அதிபதியாய் நீ இருக்கிறாய்..தருமம் அறிந்த நீ, நீண்ட நாட்களாக நான் இருந்த மரத்தை விட்டுவிடச் சொல்லலாமா?ஆதரித்தவர் நல்ல நிலையில் இருந்த போது அடுத்துப் பிழைத்தவன் அவர் கெட்ட நிலைக்கு வந்த போது எப்படி பிரிவது?' என்று கூறியது.
கிளியின் சொல் கேட்டு, இந்திரன் மகிழ்ந்தான்.ஞானிபோல பேசிய அக்கிளியிடம் மிக்க மரியாதை ஏற்பட்டது.அதனிடம், "நீ வேண்டும் வரம் கேள்..தருகிறேன்' என்றான்.
உடன் கிளி.'பட்டுப்போன இம்மரம் முன் போல பூத்துக் குலுங்க வேண்டும்..இதுவே நான் வேண்டும் வரம்'என்றது.
உடன் இந்திரனும் அம் மரத்தின் மீது அமிழ்தத்தைப் பொழிந்தான்.முன்னைவிட பன் மடங்கு பொலிவுடனும்,கம்பீரத்துடனும் ஓங்கி வளர்ந்து நின்றது மரம்.
'தருமரே! கிளியின் பக்தியால் அம்மரம் பழைய நிலையை விட சிறந்து விளங்கியது என்பதுடன் அல்லாது, அக்கிளியும் ஆயுள் முடிவில் இந்திர லோகம் அடைந்தது.பக்தியுள்ளவனைச் சார்ந்தவர் மரம் போல நற்பயனைப் பெறுவர் என உணர்வாயாக' என்றார் பீஷ்மர்.  

177-ஊழ்வினை-முயற்சி எது சிறந்தது?




"ஊழ்வினை,முயற்சி..இவற்றில் எது சிறந்தது?" என்று தருமர் கேட்க பீஷ்மர் உரைக்கிறார்..
'தருமரே! இதற்கு பழைய கதை ஒன்று உண்டு..
ஒரு சமயம் வசிஷ்டர் பிரமதேவரை நோக்கி, "ஊழ்வினை,மனித முயற்சி இவற்றில் எது சிறந்தது" என கேட்டார்.அதற்கு பிரம தேவர் காரண காரியங்களுடன் விளக்கினார்..
'வித்திலிருந்து முளை முளைக்கிறது.முளையிலிருந்து இலை..இலையிலிருந்து காம்பு..காம்பிலிருந்து கிளை..கிளையிலிருந்து மலர்..மலரிலிருந்து கனி..கனியிலிருந்து வித்து..வித்திலிருந்து மறுபடியும் உற்பத்தி ஏற்படுகிறது.வித்து இன்றி ஏதும் தோன்றுவதில்லை.வித்தின்றி கனி இல்லை..வித்திலிருந்து வித்து உண்டாகிறது.வித்தின்றி பயனில்லை.விதைப்பவன் எத்தகைய விதையை விதைக்கின்றானோ அவ்விதமான பயனை அடைகின்றான்.அது போல நல்வினை,தீவினைக்கு ஏற்ப பயனை மனிதன் பெறுகிறான்.நிலமில்லாது விதைக்கும் விதை பயன் தராது, அது போல முயற்சி இல்லா ஊழ்வினையும் பயன் தருவதில்லை.அதாவது செய்வினை பூமியாகவும் ஊழ்வினை விதையாகவும் கருதப்படுகின்றன.நல்வினையால் இன்பமும், தீவினையால் துன்பமும் ஏற்படுகின்றன.
ஒரு செயலை முயற்சியுடன் செய்பவன் அதிர்ஷ்டத்தால் நோக்கப்பட்டு நன்மை அடைகிறான்.முயற்சி செய்யாதவன் மீது அதிர்ஷ்டம் தன் பார்வையை செலுத்துவதில்லை.நட்சத்திரங்களும்,சூரிய சந்திரர்களும், தேவ தேவியரும்,இயக்க இயக்கியவரும் மனிதராய் இருந்து முயற்சியினால் தேவத் தன்மை அடைந்தனர்.செல்வம் முயற்சி இல்லாதவரிடம் எப்போதும் சேர்வதில்லை.தத்தம் செயலுக்குப் பயன் இல்லையாயின், மக்கள் தெய்வத்தையே எதிர்பார்த்துக் கொண்டு ஒன்றும் செய்யாமல் இருந்து விடுவர்.அப்போது எல்லாம் வீணாகும்.ஆனால் முயல்பவனுக்குத் தெய்வம் கைகொடுத்து உதவுகிறது.முயற்சி இல்லையானால் தெய்வம் உதவி செய்யாது.எனவே தானே தனக்கு நண்பன்.தானே தனக்குப் பகைவன்.தனது செயலுக்குத் தானே சாட்சி.செய்யும் செயல் ஒரு வேளை கெடுமாயினும், பெரு முயற்சியால் இன்னொரு சமயம் கூடி வரும்.
புண்ணிய பலத்தினால்தான் தேவலோக வாழ்வு கிடைக்கிறது.நற்செயல் காரணமாகப் பெறும் புண்ணியம் இல்லாதவனைத் தெய்வம் கண்டு கொள்வதில்லை.
தவத்தில் சிறந்த முனிவர்கள் சாபம் கொடுப்பது தெய்வத்தின் அருளால் அல்ல.அரிதின் முயன்ற தவத்தின் வலிமையால்.ஆசையும்,அறிவின்மையும் உள்ள மனிதனுக்குத் திரண்ட செல்வம் கிடைத்தும் காக்கும் முயற்சி இன்மையால் அது அவனை விட்டு விலகி விடுகிறது.தெய்வம் அவனைக் காக்க வருவதில்லை.சிரு நெருப்புப் பொறி காற்றினால் தூண்டப்பட்டுப் பெரிதாக ஆவது போலத் தெய்வம் முயற்சியுடையவனைச் சேர, செல்வம் மிகுதியாகப் பெருகும்.எண்ணெய் வற்ருவதால் தீப ஒளி மங்கிப் போவது போல, முயற்சி குறைவதால் தெய்வம் ஓய்வடைகிறது.மிக்க செல்வத்தையும்,வேண்டிய வசதிகளையும் பெற்றும் முயற்சி இல்லாத மனிதன் அவற்றை அனுபவிக்க முடிவதில்லை.மாறாக விடாமுயற்சியுள்ளவன் அவற்றை நன்கு அனுபவிக்கிறான்' என்று வசிஷ்டருக்கு பிரம தேவர் உரைத்தார்' என தருமருக்கு பீஷ்மர் கூறினார்.

Thursday, September 29, 2011

176- காலத்தின் நியதி - வினையின் பயன்




(13-அனுசாஸன பருவம்)
போர்க்கள அழிவிற்காக தருமர் வருந்துகையில், அவரது துயரத்தைப் போக்க பீஷ்மர் உரைத்த கதை..
தருமர், பீஷ்மரிடம் 'பாவத்திலிருந்து விடுபடுவது எப்படி ? என வினவ பீஷ்மர் கூறலானார்..
'தருமா..எல்லாம் கர்ம பலத்தால் ஏற்படும் என்பதனை எமன்,கௌதமி,வேடன்,பாம்பு,காலம்..இவர்களின் உரையாடல் மூலம் விளக்க விரும்புகிறேன்.
முன்னொரு காலத்தில் கௌதமி என்று ஒரு கிழவி இருந்தாள்.அவளது மகன் பாம்பு கடித்து இறந்தான்.அதைக்கண்ட அர்ச்சுனகன் என்னும் வேடன் சினம் கொண்டு கயிற்றால் பாம்பை சுருட்டிக் கொண்டு கௌதமியிடம் வந்து,'இந்த பாம்பை எப்படிக் கொல்ல வேண்டும் .சொல்' என்றான்.
'இந்த பாம்பைக் கொல்ல வேண்டாம்..என் மகன் சாவு கர்ம பலத்தால் நேர்ந்தது.பாம்பிற்கும், இவன் சாவிற்கும் தொடர்பில்லை.இது விதி.மதியுள்ள யாரும் தன்னைப் பெரியவனாக நினைக்க மாட்டான்.தம் புண்ணியத்தால் மக்கள் உலகில் துன்பமின்றி இனிதாக வாழ்கின்றனர்.பாவம் உள்ளவர்கள் துன்புறுகின்றனர்.இந்தப் பாம்பைக் கொல்வதால் இந்த்க் குழந்தை பிழைக்கவா போகிறது..இதன் உயிரைப் போக்குவதால் உலகில் யார் இறக்காமல் இருப்பர்?' என்று கௌதமி கூறினாள்.
வேடன், 'எப்போதும் யோக நிலையில் இருக்கும் சான்றோர்களுக்கு உலக விஷயம் புரிவதில்லை.மேல் உல்கைப் பற்றிய அவர்கள் உபதேசங்கள் மிக நல்லனவே..எனினும் இப்பாம்பை நான் கொல்லத்தான் போகிறேன்.அமைதியை நாடுபவர்கள் அதற்குரிய காலத்தை நழுவ விடுவார்களா?காரியத்தில் கண்ணாய் இருப்பவர்கள் சமயம் நேரும்போது, அக்காரியத்தை உடனே செய்து துயரத்தை அகற்றுவார்கள்.ஆதலால் இப்பாம்பை நான் கொன்ற பின் நீ உன் துன்பத்தை விட்டுவிடு;' என்றான்.
அது கேட்ட கௌதமி,'எம் போன்றவர்க்கு துயரம் ஏது?நாள்தோறும் துயரப்படுபவர்கள் சிறுவர்கள்!எனக்கு அத்தகைய துயரம் இல்லை.இந்த பாம்பின் மீது சினம் கொல்லாதே.உனது வைராக்கியத்தை போக்கிவிடு' என்றாள்.
வேடன்,'இதைக் கொல்லுவதால் எனக்கு புண்ணியமே உண்டாகும்.இது தேவ பூஜையை விடச் சிறந்ததாகும்.பல காலம் முயன்று பெறக் கூடிய புண்ணியம் இத்தகைய பாவிகளைக் கொல்வதால் உடனே கிடைக்கும்' என்றான்.
கௌதமி வேடனை நோக்கி,'பகைவர்களைக் கொல்வதால் என்ன லாபம் கிடைக்கும்?கையில் அகப்பட்ட பகைவனை விடாமல் இருப்பதால் எத்தகைய மகிழ்ச்சியை அடைவாய்?பாம்பின் விஷயத்தில் நான் ஏன் பொறுமையாக இருக்கிறேன்..?இது முக்திக்கு உரிய சாதனம்.ஆதலால் நான் பொறுமை இழக்கவில்லை' என்றாள்.
வேடன், 'கௌதமி! தேவேந்திரன் விருத்ராசுரனைக் கொன்று மேன்மை அடைந்தான் அல்லவா? சிவபெருமானும் யக்ஞ புருஷனைக் கொன்றார் அல்லவா?தேவர்கள் செய்ததை நாமும் செய்தால் என்ன?விரைந்து பாம்பைக் கொல்வேன்' என்றான்.
என்னதான் வேடன் வற்புறுத்திய போதும் உத்தமியான கௌதமி பாம்பைக் கொல்ல உடன்படவில்லை.சுருக்குக் கயிற்றில் சிக்கித் தவித்த பாம்பு இப்போது பேசத் தொடங்கியது.'அர்ச்சுனகா..அறியாதவனே..இந்தக் குழந்தையைக் கொன்றதில் நான் செய்த பிழை என்ன?எமன் ஏவலின் படி செய்தேன்.இந்தக் குழந்தையிடம் எனக்கு பகை ஒன்றும் இல்லை.இதில் யாராவது பாவம் செய்திருந்தால் அது எமனைச் சாரும்' என்று பாம்பு கூறியது.
வேடன், 'பாம்பே..நீ வேறொருவர் கட்டளைப் படி இதைச் செய்திருந்தாலும், இந்தத் தீமையில் உனக்கும் பங்கு உண்டு.ஆதலால் நீயும் குற்றவாளிதான்.ஒரு மண் பாத்திரம் செய்யத் தடி,சக்கரம் ஆகியவை காரணமாய் அமைவது போல நீயும் காரணமாகிறாய்' என்றான்.
பாம்பு, 'வேடனே..அந்த மண் பாத்திரம் செய்யத் தடி,சக்கரம் ஆகியவை தாமே காரணமாகாது..அது போலத்தான் நானும்.ஆகவே என் மீது குற்றம் காணாதே..குற்றவாளி என என்னைக் கருதித் துன்புறுத்துவது நல்லதல்ல.பிழை உண்டு எனக் கருதினால் அந்தப் பிழை பொதுவானதாகும்.நான் மட்டுமே காரணமில்லை'என்று கூறிற்று.

வேடன், 'பாம்பே..இதற்கு நான் காரணம் இல்லை' என வாதாடுவதால் ஒரு பலனும் இல்லை.இந்தக் கொலையை நீ செய்திருக்கிறாய்.ஆதலால் நீ கொல்லத்தக்கவனே' என்றான்.
பாம்பு, 'வேடனே..உண்மையில் நானும் காரணம் என நீ கருதினால், என்னை இந்தக் காரியத்தில் ஈடுபடுத்திய ஒருவன் இருக்க வேண்டுமல்லவா?இப்படியிருக்க என்னைக் கொல்வதால்  உனக்கு என்ன லாபம்' என்று கேட்டது.
வேடன், 'கெட்ட புத்தியுள்ள பாம்பே..குழந்தையைக் கொன்ற கொலை பாதகனாகிய நீ என்னால் கொல்லத் தக்கவனே..கொலைகாரனான உனக்குப் பேச என்ன தகுதி இருக்கிறது? என்றான்.
பாம்பு, 'வேடனே..யாகத்தில் ஹோமம் செய்கிறவர் எப்படிப் பயனை அடைவதில்லையோ, அப்படியே நானும் இதன் பயனைப் பெறத் தக்கவன் அல்லன்' என்று பதில் கூறியது.
இவ்வாறு பாம்பு சொல்லும் போது எமன் அங்கு வந்து அதனை நோக்கி,'பாம்பே..நான் காலத்தால் ஏவப்பட்டு உனக்குக் கட்டளையிட்டேன்.இந்தக் குழந்தையின் மரணத்திற்கு நீயும் காரணமல்ல.நானும் காரணமல்ல.காலம்தான் காரணம்.நாம் அனைவரும் காலத்திற்கு உட்பட்டவர்கள்.பாம்பே.., விண்ணிலும் மண்ணிலும் உள்ள அசையும் பொருள்களும், அசையாப் பொருள்களும் காலத்தினாலேயே நடத்தப்படுகின்றன.இவ்வுலகம் அனைத்தும் காலத்திற்கு கட்டுப்பட்டே நடக்கின்றது.'பாம்பே! சூரியன்,சந்திரன்,நட்சத்திரம்,இந்திரன்,விஷ்ணு,காற்று,ஆகாயம்,பூமி,மேகம்,அக்னி,வசுக்கள்,நதிகள்,கடல்கள்,அதி தேவதைகள் ஆகியவை எல்லாம் காலத்தால் ஆக்கப்படுகின்றன.அழிக்கப்படுகின்றன.இப்படியிருக்க என்னைக் குற்றவாளியாக நீ கருதுவானேன்..ஒரு வேளை என்னிடம் குற்றம் இருக்குமாயின் நீயும் குற்றவாளியே!'என்று கூறினான்.
பாம்பை எமனை நோக்கி..'உம்மைக் குற்றவாளி என்றோ..குற்றமற்றவர் என்றோ நான் சொல்லவில்லையே..உன் ஏவலால் தான் நான் இதிச் செய்தேன் என்றேன்.இது காலத்தின் குற்றமாயும் இருக்கலாம்.இல்லாமலும் இருக்கலாம்.அதனை தீர்மானிக்கும் அதிகாரம் நம்மிடம் இல்லை.அந்தக் குற்றத்தினின்று நான் விடுபட நினைப்பது போல..நீயும் விடுபட விரும்புவது இயற்கையே' என்று சொல்லியபடியே..பின் ..வேடனை நோக்கி'எமனின் சொல்லைக் கேட்டாயா?நிரபராதி ஆன என்னைக் கொல்வது தகாது' என்றது.
இதற்கு வேடன், 'பாம்பே..உன் பேச்சையும், எமனின் பேச்சையும் கேட்டேன்.என் நிலையில் மாற்றம் இல்லை.இக்குழந்தை இறக்க நீயும் காரணம், எமனும் காரணம்.யாவருக்கும் துன்பத்தைத் தரும் எமன் அனைவராலும் இகழத் தக்கவன்.நீ கொல்லப்பட வேண்டியவன்' என்றான்.
இதற்கு எமன் வேடனிடம்,'நாங்கள் இருவரும் சுதந்திரம் அற்றவர்கள்.எங்கள் கடமை காலம் இட்ட கட்டளையைச் செய்வது தான்.நீ நன்கு ஆராய்ந்து பார்த்தால்,எங்களிடம் குற்றம் இல்லை என்பதை உணர்வாய்' என்றான்.
வேடன், 'எமனே! பாம்பே! நீங்கள் காலத்துக்கு உட்பட்டு நடப்பீராயின் எனக்கு உங்கள் மீது   வருத்தம் உண்டாவதேண்' என்றான்.
எமன் உடன்,'வேடனே..நான் திரும்பச் சொல்கிறேன்..உலகில் எல்லாச் செயலும் காலத்தால் செய்யப்படுகின்றன.ஆகையால் நாங்கள் இருவரும் காலத்திற்குக் கட்டுப்பட்டவர்கள்.எனவே நீ எங்களைக் குற்றவாளியாக நினைக்கக் கூடாது' என்றான்.
இச்சமயத்தில் காலதேவன் நேரில் வந்தான்..பாம்பையும்,எமனையும்,வேடனையும் நோக்கிக் கூற ஆரம்பித்தான்..
'வேடனே..நானும்,எமனும்,பாம்பும் ,இக்குழந்தை மாண்டதற்குக் காரணமில்லை.ஆதலால் நாங்கள் குற்றவாளியில்லை.இந்த குழந்தை செய்த வினைதான் எங்களை தூண்டிற்று.இது இறந்ததற்குக் காரணம் வேறு யாரும் இல்லை.தன் வினைப்பயனாலேயே இக் குழந்தை கொல்லப்பட்டது.இவ்வுலகில் ஒவ்வொருவருக்கும் வினையில் பங்கு உண்டு.இந்த வினையாகிய கர்மங்கள் ஏவுகின்ற படியே நாங்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டளையிடுகிறோம்.கர்மங்களைச் செய்பவன் அவற்ரின் பலனை அடைகிறான்.நிழல் போல ஒருவனைக் கர்மப் பயன் தொடர்ந்து செல்கிறது.ஆதலால் நானோ,எமனோ,பாம்போ,நீயோ,கௌதமியோ யாரும் இக்குழந்தையின் இறப்பிற்குக் காரணம் இல்லை.இக்குழந்தையேக் காரணம்' என்றான்.
காலன் அப்படிச் சொல்கையில், கௌதமி என்னும் அந்த மாது உலகெலாம் கர்மத்தின் வயப்பட்டது எனத் தெளிந்தாள்.வேடனை நோக்கி, 'இது விஷயத்தில் காலம்,பாம்பு,எமன் ஆகிய யாரும் காரணமில்லை.தான் செய்த கர்மத்தாலேயே இக் குழந்தை காலம் வந்த போது இறந்தது.இனிக் காலதேவனும்,எமனும் செல்லலாம்.வேடனே..நீயும் இந்த பாம்பை விட்டுவிடு' என்றாள்.பின் அனைவரும் பிரிந்து சென்றனர்.
'தருமா! இது கேட்டு ஆறுதல் அடைவாயாக! போர்க்களத்தில் ஏராளமானவர் மாண்டதற்கு நீயோ,துரியோதனனோ காரணமல்ல.காலத்தின் செயல் எனத் தெளிவாயாக!'என்று பீஷ்மர் கூறினார்.


Sunday, September 25, 2011

175-முக்தி எப்போது கிடைக்கும்




தருமர், பீஷ்மரிடம்,'முக்தி எப்போது கிடைக்கும்?' என வினவ பீஷ்மர் உரைத்தது..

நாரதர் திரிலோக சஞ்சாரி.தேவர் உலகத்திற்கும், இந்த மண்ணுலகத்திற்கும் போய் வருபவர்.ஒருமுறை நாரதர் தேவ உலகிலிருந்து பூலோகத்திற்கு காட்டு வழியே சென்று கொண்டிருந்தார்.அங்கு ஒரு வாலிப யோகி தியானத்தில் இருப்பதைப் பார்த்தார்.அவரைச் சுற்றி ஒரு புற்றே வளர்ந்திருந்தது.நாரதரின், இறை நாமத்தைக் கேட்டதும் அந்த வாலிப யோகி கண்ணை விழித்து நாரதரைப் பார்த்தார்.
'நாரத பகவானே..எங்கு சென்று கொண்டிருக்கிறீர்' என்றார்.
'நான் சிவபெருமானைப் பார்ப்பதற்காகக் கைலாயத்திற்குச் சென்று கொண்டிருக்கிறேன்' என்றார் நாரதர்.
'கைலாயத்தில் எனக்காக ஒரு காரியம் செய்ய முடியுமா?'
'கட்டாயம் செய்கிறேன்..அங்கு உனக்கு என்ன செய்ய வேண்டும்..கேள்'
'நான் மிக நீண்ட காலமாகச் சிவனை தரிசிப்பதற்காகத் தவம் செய்து கொண்டிருக்கிறேன்.இன்னும் எத்தனை காலம் இப்படித் தொடர்ந்து தவம் செய்ய வேண்டும் என்பதைக் கேட்டுக் கொண்டு வந்து, சொல்வீர்களா?"
கட்டாயம் கேட்டு வருகிறேன்'
நாரதர் அந்தக் காட்டில் கொஞ்ச தூரம் சென்றதும், வேறு ஒரு யோகியைப் பார்த்தார்.
அந்த யோகி,'ஹரே ராமா..ஹரே கிருஷ்ணா' எனப் பாடி ஆடி மகிழ்ந்து கொண்டிருந்தார்.
அந்த யோகி நாரதரைப் பார்த்தார், 'நாரதரே..எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள்?'
'வைகுந்தத்திற்கு'
'வைகுந்தமா..மகிழ்ச்சி.இன்னும் எத்தனைக் காலத்திற்குப் பஜனை செய்து கொண்டிருந்தால் நான் இறைவனை அடையலாம்? என்பதை தெரிந்து கொண்டு வரமுடியுமா?'
கட்டாயம் தெரிந்து கொண்டு வருகிறேன்'
ஆண்டுகள் பல கடந்தன.நாரதர் பூலோகத்திற்கு வந்தார்.
புற்று வளர்ந்து தன்னை மூடிக்கொண்டிருப்பதைக் கூட தெரிந்து கொள்ளாமல் தியானத்திலிருந்த யோகியைப் பார்த்தார்.
'நாரதரே! கைலாயத்திற்குச் சென்றீர்களா?சிவபெருமானைப் பார்த்தீர்களா?நான் சொன்னதை அவரிடம் சொன்னீர்களா? அதற்கு அவர் என்ன பதில் சொன்னார்' என்றார்.
நான் சிவபெருமானைப் பார்த்தேன்..தாங்கள் சொன்னதைச் சொன்னேன்.அதற்கு அவர் நீங்கள் இன்னும் நான்கு பிறவிகள் எடுத்துத் தியானம் செய்ய வேண்டும் என்று சொன்னார்.அதற்கு பின்னரே நீங்கள் கைலாயத்திற்கு வரமுடியுமாம்' என்று நாரதர் சொன்னதும்..வாலிப யோகி 'ஓ' என அலறினார்.புலம்பினார்.கண்ணீர் வடித்தார்.
நாரதர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
'ஹரே ராமா..ஹரே கிருஷ்ணா' யோகியிடம் சென்றார்.அந்த யோகி நாரதர் வந்ததையும் கவனிக்க வில்லை.தற்செயலாக அவரைப் பார்த்ததும்'நாரதரே! வைகுந்தம் சென்றீர்களா? சேதி ஏதேனும் உண்டா" என்றார்,
'உண்டே..அதோ தெரிகிறதே..அந்த மரத்தைப் பாருங்கள்'
'பார்த்தேன்'
'அந்த மரத்தில் உள்ள இலைகளையெல்லாம் எண்ணி விட முடியுமா?"  
'கட்டாயம் எண்ணிவிடமுடியும்.அவற்றை எண்ணுவதற்கு வேண்டிய அளவிற்கு பொறுமை என்னிடம் இருக்கிறது.இப்போதே அம்மரங்களின் இலைகளை எண்ணிச் சொல்லட்டுமா/"
'இப்போதே எண்ண வேண்டும் என்பதில்லை.தங்களுக்கு நேரம் இருக்கும் போது இலைகளை எண்ணினால் போதும்,'
'இது இருக்கட்டும்..என்னுடைய கோரிக்கைக்கு இராம பிரான் அளித்த பதில் என்ன"
'அந்த மரத்தில் எத்தனை இலைகள் உள்ளனவோ அத்தனை பிறவிகள் எடுத்த பிறகு தான் தாங்கள் வைகுண்டத்திற்கு வரமுடியும் என்று இராம பிரான் கூறிவிட்டார்'
'ஓ..இவ்வளவுதானா..ஒரு மரத்தில் இருக்கும் இலைகள் அளவுதானே பிறவி எடுக்க வேண்டும்.இறைவனுக்கு நன்றி.இந்த மரத்தில் மாட்டுமில்ல..இத்தோப்பில் உள்ள மரங்கள் அனைத்திலும் இருக்கும் இலைகளின் அளவுக்கு பிறவி எடுக்கவும் தயார்;'என்று கூறிவிட்டு..'ஹரே ராமா..ஹரே கிருஷ்ணா' என பஜனையில் ஈடுபட்டுவிட்டார் யோகி.
இச் சமயம் வைகுண்டத்திலிருந்து ஒரு ரதம் வந்தது.அதிலிருந்த சாரதி அந்த யோகியைப் பார்த்து,'இந்த ரதத்தில் ஏறிக் கொள்ளுங்கள்.இராம பிரான் உங்களை உடனே வைகுண்டத்திற்கு அழைத்து வருமாறு கட்டளை இட்டுள்ளார் என்றார்.
'நான் இப்போதே வைகுண்டம் போக வேண்டுமா/"
ஆமாம்
'நான் வைகுண்டம் செல்ல பல பிறவி எடுக்க வேண்டும் என நாரதர் இப்போதானே சொன்னார்'
'எத்தனை பிறவி வேண்டுமானாலும் எடுத்து இறைவனை அடைய நீ தயாராய் இருக்கிறாய்.அதில் பொறுமையும்,ஈடுபாடும்,நம்பிக்கையும் உனக்கு இருக்கிறது.அதனால் நீ இனி இங்கு இருக்க வேண்டியதில்லை.இப்பவே நீ வைகுண்டம் செல்லலாம்' என்றார் நாரதர்.
'அந்த வாலிப யோகியின் நிலை என்ன?' எனப் பக்தியுடன் கேட்டார் வைகுண்டம்செல்லும் யோகி
'அவர் நான்கு பிறவிக்குக் கூடத் தயாராக இல்லை.அதனால் அவர் இன்னும் கடுமையாகத் தியானம் செய்த பிறகுதான் தாம் விரும்பும் இடத்தை அடைய முடியும்'என்றார் நாரதர்.
இந்தக் கதை போதிக்கும் உண்மை...
பொறுமையும்,மன உறுதியும் இல்லாமல் சாதனையை எதிர்பார்க்கக் கூடாது.அமைதியில்லாத மனத்தினால் எந்தத் தகுதியையும் அடைய முடியாது.
எனவே எவ்வளவு காலம் தியானத்தில் ஈடுபடுகிறோம் என்பது முக்கியமல்ல.எவ்வளவு பொறுமையும் ஈடுபாடும் நம்பிக்கையும் அதில் அமைந்திருக்கின்றன என்பதே முக்கியமாகும்.
தியானத்தைப் பற்றி விளக்கும் போது பீஷ்மர் தருமருக்கு இவற்றை உணர்த்தினார்.

(சாந்தி பருவம் முற்றிற்று)

Wednesday, September 21, 2011

174-குரு பத்தினியைக் காத்த விபுலர் கதை




பீ ஷ்மர் தருமருக்கு உரைத்தது..
முன்னொரு காலத்தில் தேவசர்மா என்றொரு முனிவர் இருந்தார்.அவருடைய பத்தினியின் பெயர் 'ருசி'.அவளுடைய அழகில் மண்ணுலகம் மட்டுமின்றி, விண்ணுலக தேவர்கள் அனைவரும் மயங்கினர்.தேவேந்திரன் எப்படியும் அவளை அடைய எண்ணினான்.தவ வலிமை மிக்க தேவ சர்மா இந்திரனை தன் மனைவியிடம் நெருங்க முடியாது பாதுகாத்தார்.
ஒரு சமயம், அவர் யாகம் செல்ல வேறிடம் செல்ல நேர்ந்தது.அதுவரை தன் பத்தினியை பாதுகாப்பது எப்படி என சிந்தித்தார்.தவ வலிமை மிக்க தன் சீடர் விபுலரை அழைத்தார்.'நீர்தான் என் துணைவியைக் காக்க வேண்டும்.இந்திரனுக்கு இவளிடம் ஆசை உள்ளது.இவளை அடைய துடித்துக் கொண்டிருக்கிறான்.அவன் எத்தகைய மாய உருவங்களையும் எடுத்து வருவான்.சாதுவாகவும் இருப்பான்.சண்டாளனாகவும் இருப்பான்.புலி போல சீறுவான்.பூனையாயும் இருப்பான்..பறவையாகவும் திரிவான்..அவன் எவ்வடிவத்தில் வருவான் என யாருக்கும் தெரியாது.உன் சாமர்த்தியத்தால் எப்படியேனும் இவளைப் பாதுகாக்க வேண்டும்' என்றார்.
இதைக் கேட்ட விபுலர்,'இவளை எப்படிக் காப்பது?' எனக் கவலை யுற்றார்.யாரையும் அருகே நெருங்கவிடாது காத்தார்.ஆயினும் அச்சம் அவருக்கு இருந்தது.இந்திரன் காற்று வடிவத்தில் கூடக் கதவு இடுக்கில் நுழைந்து விடுவான்.மாயையில் வல்ல அவனைத் தடுக்க ஒரு வழிதான் உண்டு.என் தவத்தின் வலிமையால் இவளைக் காக்க முடியும்.தனது கண் பார்வையால் அவளது கண் பார்வை மூலம் சக்தியை அவள் உடல் எங்கும் செலுத்தி அவளை அசைக்க முடியாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என உறுதி கொண்டார்.
அவ்வாறே தன் பார்வையுடன் அவள் பார்வையையும் கலக்குமாறு செய்து தன் சக்தியை அவள் உடலுக்குள் செலுத்தி, இந்திரன் அவளை அடைய முடியாதவாறு செய்து விட்டார்.
இப்படி விபுலர் தன் குரு வரும் வரை அவருடைய பத்தினியைக் காத்தார்.
இவ்வாறு சீடர் தம் குரு பத்தினியைக் காத்து வரும் நேரம் ஒருநாள் இந்திரன் பேரழகுடன் ஆஸ்ரமத்திற்குள் வந்தான்.'ருசி' யின் அழகுக் கண்டு பரவசமுற்று,இனிய சொற்களைக் கூறினான்.தன்னிடம் வருமாறு வலியுறுத்தினான்.விபுலரின் தவ வலிமையால் குரு பத்தினி கட்டுண்டுக் கிடந்தாள்.இருந்த இடம் விட்டு நகரவும் முடியவில்லை,பேசவும் நா எழவில்லை.விபுலரின் இச் செயல் கண்டும்.அவரது தவ வலிமை கண்டும் இந்திரன் அச்சம் அடைந்தான்."முன்னர் அகலிகை மீது கொண்ட மோகத்தால் அடைந்த அவமானத்தை மறந்துவிட்டாயா?என் குரு வந்து சபிப்பதற்கு முன் போய்விடு'என்று பேரொலி இந்திரன் காதில் விழ, அது விபுலரின் குரல் என இந்திரன் அறிந்தான்.அங்கிருந்து மறைந்தான்.
தேவசர்மா தன் யாகத்தை முடித்துக் கொண்டு ஆசிரமம் திரும்பினார்.விபுலர் அவரை வணங்கி தன்னால் காக்கப்பட்ட குரு பத்தினியை அவரிடம் ஒப்படைத்து..இந்திரன் வந்து போனதைத் தெரிவித்தார்.ஆனால் அவர் எப்படி அவனிடமிருந்து அவளைக் காத்தார் என்னும் விவரத்தைக் கூறவில்லை.பத்தினி பாதுகாப்பாய் இருந்த செய்தி அறிந்த தேவசர்மா மகிழ்ந்தார்.விபுலரைப் பாராட்டி, வேண்டும் வரத்தைக் கேட்குமாறு கூறினார்.விபுலரும், தருமத்தினின்றும் தவறாமல் இருக்கும் வரத்தைக் கேட்டுப் பெற்றார்.
குருவிடம் வரம் பெற்ற விபுலர் தவம் மேற்கொள்ள காடு சென்றார்.கடும் தவஞ் செய்தார்.தவம் ஈடேறியது.மகிழ்ச்சியுடன் எங்கும் சென்று வரலானார்.
ஒரு நாள் ஒரு தெய்வ நங்கை தேவசர்மாவின் ஆசிரமத்திற்கு மேலே ஆகாயத்தில் சென்று கொண்டிருந்தாள்.அப்போது அவள் சூடியிருந்த மண மலர் ஒன்று ஆசிரமத்தின் அருகில் விழுந்தது.அப்படியொரு மலர் தன் சகோதரிக்கு வேண்டும் எனக் குருபத்தினி தேவசர்மாவிடம் தெரிவித்தாள்.அத்தகைய மலரைத் தேடிக் கொண்டு வரும்படி தன் சீடரான விபுலருக்குக் கட்டளையிட்டார்.
குருவின் கட்டளையை ஏற்று விபுலர் காட்டிற்குச் சென்று கஷ்டப்பட்டு அரிதான மணம் மிக்க அம்மலரைப் பெற்றார்.அதை எடுத்துக் கொண்டு ஆசிரமத்திற்குத் திரும்புகையில்..வழியில் இருவர் சக்கரம் போல தங்கள் கைகளைப் பற்றிக்கொண்டு சுற்றிச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தனர்.அப்படி விளையாடுகையில் இருவரும் ஒரு சபதம் எடுத்துக் கொண்டனர்.விளையாட்டில் தோற்பவருக்குப் பொய் சொன்ன விபுலர் பெற இருக்கும் நரக கதிதான் கிடைக்கும் என்று சபதம் ஏற்றனர்.இதைக் கேட்டு விபுலர் நடுங்கினார்..மனம் சோர்ந்தார்.
பின்னர்..அதைவிட பேரதிர்ச்சி தரும் காட்சியைக் கண்டார்.ஆறு பேர் சூதாடிக் கொண்டிருந்தனர்.'நம்மில் பேராசை கொண்டு பொய் சொல்பவர் அந்த விபுலர் போக இருக்கும் நரகத்தையே சென்றடைவர்' என்று கூறிக் கொண்டு சூதாடினர்.விபுலர், இது கேட்டு தீயால் சுடுவது போல துயரம் அடைந்தார்..
'நான் செய்த தவறு என்ன?' என்று பலவாறு ஆராய்ந்து பார்த்தார்.ஒரு வேளை 'குரு பத்தினியைக் காக்கும் முயற்சியில் அவள் கண்ணோடு தன் கண்ணை இணைத்துப் பார்வையால் சக்தியை அவள் உடலில் செலுத்தி அவளைக் காப்பாற்றியதை குருவிடம் சொல்லாமல் மறைத்தது காரணமாக இருக்குமோ?" என எண்ணினார்.இத்தகைய மனக் குழப்பத்துடன் ஆசிரமம் சென்று குருவிடம் மலரைக் கொடுத்து வணங்கினார்.
பின்னர்,தான் கண்ட காட்சிகளை குருவிடம் கூறினார்.மனப்புழுக்கத்தைக் கூறினார்.'அந்த இருவரும் யாவர்?'மற்ற அறுவரும் யாவர்?நான் என்ன பிழை செய்தேன்? ஏன் அவர்கள் அப்படி சபித்தார்கள்?தயவு செய்து விளக்க வேண்டும்..'என்ரார்.
'சீடனே! உன் குழப்பத்தை நான் அறிவேன்.நீ செய்த குற்றம் ஒன்றே ஒன்றுதான்.என் பத்தினியை நீ எவ்வாறு காப்பாற்றினாய் என்ற உண்மையை மறைத்துவிட்டாய்.உண்மையை மறைப்பது கூடப் பொய்தான் என்பதை உணர்வாயாக.ஆயினும் நீ செய்த ரகசியச் செயலைச் சிலர் அறிந்துக் கொண்டனர்.ஒன்றை ஒருவர் அறிந்தால் அது ரகசியம்.இருவர் அறிந்தால் அது பரசியம்.
நீ குறிப்பிட்ட இருவரும் இரவும், பகலும் ஆவர்.அறுவர், பருவ காலங்கள்.பகல்,இரவு,பருவ காலங்கள் இவற்றிற்கு எந்த ரகசியமும் தெரியாமல் இருக்காது.'நாம் செய்தது சரியானதா?' என்னும் அச்சத்தில் தான்..'நீ கண்ணோடு கண்ணினை நோக்கி என் பத்தினியைக் காத்த தன்மையை என்னிடம் கூறாமல் மறைத்து விட்டாய்.நன்மை செய்வதில் கூட ஒரு முறை உண்டு.நீ தவறான எண்ணத்தோடு அப்படிச் செய்யவில்லை என்பதை நான் நம்புகிறேன்.ஆனால் உலகம் அதை அவ்வாறு கருதவில்லை' என்பதை உணர்வாயாக.
ரகசியத்தை யாரும் மறைத்துவிட முடியாது.பிறருக்கு நன்மை செய்யும்போது கூட அது பிறரால் பாராட்டத்தக்கதாக இருக்க வேண்டும்.ஐயத்திற்கு இடம் அளிக்கக் கூடாது என்பவை இக்கதையால் உணர்த்தப்படும் நீதிகளாகும்.

Sunday, September 18, 2011

173-கல்வி..அறம்..பொருள்..இன்பம்..- 8




பார்வதி-மூப்பையும்..மரணத்தையும் விலக்குவது எப்படி?
ஈஸ்வரன்-பிறப்பே இல்லாதிருக்குமாயின் முதுமை இல்லை..மரணமும் இல்லை.இதற்கு ஒரே வழி முக்தி ஒன்றுதான்.தானத்தாலோ,தவத்தாலோ,முதுமையை,மரணத்தைத் தடுக்க முடியாது.முக்தி பெற்ற உயிர் மீண்டும் பிறப்பதில்லை.பிறப்பில்லையெனில் மூப்பு முதலான வியாதி களும் இல்லை,மரணமும் இல்லை.
தனம்,தானம்,ஞானம், பிற நல்ல ஒழுக்கங்கள் அனத்தும் நன்மை தரத்தக்கதுதான்.எனினும் இவற்றாலும் மரணத்தைத் தடுக்க முடியாது.ஆகவே மரணத்தை தடுக்கும் முக்திக்கு உரிய வழிகளை ஒவ்வொரு உயிரும் நாட வேண்டும்.முதுமையையும்,மரணத்தையும் தடுக்கும் வழி முக்தி ஒன்றுதான் எனத் தெளிதல் வேண்டும்.உலகில் எத்தகைய நிலையில் இருப்பாராயினும் சரி, அரசராகவோ,மாபெரும் அறிஞராகவோ, முனிவராகவோ,  அனைவரையும் காலம் அவர்களுக்கு உரிய நேரம் வரும் போது மரணத்தின் பிடியில் சிக்க வைக்கிரது.ஒவ்வொரு நாளும்..ஏண்..ஒவ்வொரு வினாடியும் நம் ஆயுளைக் குறைத்துக் கொண்டிருக்கிறது.காலம்,,..இதன் பிடியிலிருந்து எந்த உயிரினமும் தப்பிக்க முடியாது.மனிதன் விழிப்புடன் இருக்கிறானோ இல்லையோ அவனுக்காக விதிக்கப்பட்ட ஆயுட் காலத்தை முடிப்பதற்கு மரணம் விழிப்புடன் இருக்கிறது.
ஆதலால் செய்ய வேண்டிய நற்காரியங்களை உடனே செய்து முடிக்க வேண்டும்.நாளை செய்ய நினைத்ததை இன்றே..இன்று செய்ய நினைத்ததை இப்பவே செய்துவிட வேண்டும்.இப்போது மழையாக உள்ளது..இப்போது வெயிலாக உள்ளது..இப்போது குளிராக உள்ளது, பிறகு பார்க்கலாம் என்று இருக்கக் கூடாது.இது வேண்டும்..அது வேண்டும் என்று பொருளை நாடித் திரியும் போதே மனிதன் மரணத்தை நெருங்குகிறான்.நரை கூடிக் கிழப் பருவம் அடையும் முன்..இளமை கழியும் முன்னரே மரணம் வரக்கூடும் என்பதை உறுதியாக நம்ப வேண்டும்.
மனைவி,மக்கள்,உற்றார்,உறவினர் அனைவராலும் ஒருவனை மரணத்தினின்று காப்பாற்ற முடியாது.இவர்கள் அனைவருமே ஒரு நாள் மரணத்தைத் தழுவ வேண்டும்.இந்நிலையில் யாருக்கு யார் துணை?நல்லறங்களைச் செய்து அசையாத ஒழுக்கத்தை மேற்கொண்டு ஆத்மத் தியானத்திலேயே திளைத்து முக்தி அடைதல் ஒன்றே மரணத்தை வெல்லும் வழியாகும்.

Thursday, September 15, 2011

172-கல்வி..அறம்..பொருள்..இன்பம்..- 7




பார்வதி- ஞானம் என்பது என்ன? வைராக்கியம் என்பது என்ன?
ஈஸ்வரன்-ஞானம் என்பது முக்திக்குரிய மார்க்கமாகும்.சம்சாரம் என்னும் காட்டை ஞானம் என்னும் தீ சுட்டு எரித்து விடும்.பொருள்களிடத்து பற்றற்ற மன நிலை கொண்டு சம்சாரத்தில் வெறுப்பு ஏற்படுத்தும் முயற்சியே ஞான நல்வழியாகும்.முட்டாள்கள் ஆயிரம் காரணங்களைக் கற்பித்துக் கொண்டு துன்பம் அடைகிறார்கள்.ஆனால் ஞானிகள் துன்பம் என்று எதையும் கருதுவதில்லை.சாதாரண மக்கள் வேண்டியது கிடைத்துவிட்டால் தலை கால் தெரியாமல் குதித்து மகிழ்ச்சி அடைகிறார்கள்.துன்பம் வந்து விட்டாலோ சொல்லவே வேண்டியதில்லை.எல்லாமே தொலைந்தது என பதறுகிறார்கள்.ஒரு இலை அசைந்தாலும் புயல் வந்தது போல பரிதவிக்கிறார்கள்.
மனிதப்பிறவியில் துன்பமும், இன்பமும் மாறி மாறி வருகின்றன.எந்தப் பொருளில் பற்று ஏற்படுகிறதோ அப்போது அதன் நிலையாமையை உணர்தல் வேண்டும்.அழியப் போகிற ஒன்றின் மீது ஏன் இவ்வளவு ஆசை..பற்று என்று ஆழ்ந்து சிந்திக்கும் போது பற்றற்ற தன்மை தோன்றும்.வைராக்கியம் தோன்றும்.
ஆழ்கடலில் வேறு வேறு மூலைகளில் கிடக்கும் நுகத்தடிகள் பல காலம் அலைந்து திரிந்து ஒன்று சேர்ந்து பிரிதல் போல உயிரும் ..உடலும் கலந்து பின் ஒரு கால கட்டத்தில் பிரிகின்றன.பொருள்களின் உண்மைத்தன்மையை..நிலையாமையை அறிந்தவர்கள் அவற்றில் பற்றுக் கொள்ள மாட்டார்கள்.நால்வகைக் கதிகளில் எந்தக் கதியாயினும் அதில் துன்பம் தான்.அழியக் கூடிய..பிரியக் கூடிய அனைத்திலும் துன்பம் தான்.பொருளைச் சேர்க்கும் போதும் துன்பம்..காக்கும் போதும் துன்பம்..இழக்கும் போதும் துன்பம்.பொருள் ஆசை உள்ளவர்க்கு உலகில் உள்ள அனைத்துப் பொருள்களைக் கொண்டு வந்து கொட்டினாலும் அந்த ஆசை நிரம்பாது.விரும்பியவை அனைத்தும் கிடைத்து விட்டால் இன்பம் கிடைக்குமா? எனில் அப்போதும் இன்பம் கிடைக்காது.மேலும்..மேலும் ஆசை வளரும்.ஆனால் ஆசையே இல்லாத போதுதான் இன்பம் ஏற்படும்.இது பொருள்கள் மீது கொள்ளும் வெறுப்பினால்..வைராக்கியத்தால் ஏற்படும்.
அறிவு என்பது ஒப்பற்ற ஆற்றலால்.. யார் ..ஐம்பொறிகளையும் மனத்தையும் அடக்கி ஒரு கட்டுக்குள் வைத்திருக்கிறார்களோ அவர்களை துன்பம் அணுகாது.ஐம்பொறிகளை அடக்க முடியாது கண்டதே காட்சி, கொண்டதே கோலம் எனப் பொறி வழிச் சென்று அலைபவர் ஒரு நாளும் இன்பம் அடையார்.
கொடிது..கொடிது..காமம் கொடிது.அஞ்ஞானிகள் இதன் வலையில் வீழ்ந்து கடைத்தேற முடியாது... துன்புற்று பாவப் படுகுழியில் மீண்டும் மீண்டும் வீழ்கின்றனர்.நெருப்பெனத் தவம் இயற்றும் உண்மைத் துறவிகளை இந்த ஈனக் காமம் நெருங்குவதில்லை.ஐம்பொறிகளையும் நிலைகுலையச் செய்யும் இந்தக் காமத்தை வெற்றி கொள்ளாதார்க்கு நற்கதி இல்லை.
காமவெறி கொண்டு அலைவோர் செய்ய வேண்டிய நற்காரியங்களில் ஒன்றைக் கூட செய்ய இயலாது, மரண காலத்தில் சொல்ல முடியாத கொடிய துன்பத்தில் வீழ்ந்து தத்தளிப்பர்.பொருளே கதி என மயங்கிக் கிடப்போரையும்,காம இன்பமே இன்பம் என மயங்கிக் கிடப்போரையும் சிங்கம் ஒன்று மான் குட்டியைத் தூக்குவது போல எமன் தூக்கிக் கொண்டு செல்லும் போது புலம்பி அழுது என்ன பயன்?

(பார்வதியின் சந்தேகங்களும்..ஈஸ்வரனின் பதில்களும் தொடரும்)

Wednesday, September 14, 2011

171-கல்வி..அறம்..பொருள்..இன்பம்..- 6




பார்வதி- விரதம்..விரதம் என்கிறார்களே..அதை ப்படி கடைப்பிடிப்பது?
ஈஸ்வரன்-மனத்தினால்,சொல்லினால்,செய்கையினால் ஏற்படும் பாவங்களை விட முயல்வது விரதமாகும்.ஆகம விதிப்படி மனத் தூய்மையுடன்,உடல் தூய்மையுடன் பஞ்ச பூதங்களையும் வணங்க வேண்டும்.சூரிய சந்திரர்களை வழிபட வேண்டும்.ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலோ,மரணம் வரையிலோ விரதத்தை மேற்கொள்ளலாம்.கர்மக் காட்டைச் சுட்டெரிக்கும் நெருப்பு என விரதத்தைக் கருத வேண்டும் பூ,காய்,கனி இவற்றைக் கொள்ளும் வகையிலும் விரதம் அமைய வேண்டும்.பிரமசர்ய விரதத்தையும் மேற் கொள்ள வேண்டும்.
பார்வதி-புலால் உண்பதால் ஏற்படும் தீமை யாது? உண்ணாமையால் ஏற்படும் நன்மை யாது?
ஈஸ்வரன்-எல்லாத் தான தருமங்களும் புலால் உண்ணாமையால் ஏற்படும் நன்மைக்கு ஈடாகாது.தன் உயிரைக் காக்கப் பிற உயிரைக் கொல்லக்கூடாது.நம் உடலுறுப்புக்களை அறுக்கும் போது நமக்கு ஏற்படும் துன்பம் போலவே பிற உயிர்களை அறுக்கும் போதும் அவ்வுயிர்களுக்கு துன்பம் ஏற்படுகிறது.நூறு வருடம் தவம் செய்தால் ஏற்படும் பயன் புலால் உண்ணாமையால் ஏற்படும்.தன் உயிரைக் காட்டிலும் ஒருவருக்கு இனிமை பிறிதில்லை.ஆதலால் எல்லா உயிர்களிடத்தும் இரக்கத்துடன் இருந்து அவற்றிற்கு நன்மை செய்ய வேண்டும்.
பார்வதி-எல்லாத் தருமங்களிலும் உயர்ந்த மோட்ச தருமம் எப்படி வர்ணிக்கப்படுகிறது?தோற்றமும், முடிவும் இல்லாத மோட்ச தருமம் எப்படி உயர்ந்ததாக ஆகிறது?
ஈஸ்வரன்-மோட்சத்திற்கு உரிய வழிமுறைகள் எல்லா ஆகமங்களிலும் கூறப்பட்டுள்ளது.தருமத்தின் செயல் எதுவும் வீணாவதில்லை.யார் யார் எந்தெந்தத் தருமங்களில் உறுதியாய் உள்ளனரோ,அந்தநத தருமங்கள் மோட்ச மார்க்கமேயாகும்.மோட்சம் தான் எல்லாத் தருமங்களின் முடிவு.இதனினும் சிறந்த ஓர் உயநிலை வேறு எதுவும் இல்லை.எனவே மோட்ச மார்க்கத்தை அறிந்து கொள்வது அவசியந்தான்.இதைப் பற்றி விளக்குகிறேன்...
மோட்சம் மனதாலும் அறிய முடியா மாண்பு உடையது.மோட்ச ஞானமே உயர்ந்த ஞானமாகும்.மகரிஷிகள் அதை பரமபதம் என கொண்டாடுகிறார்கள்.அழியாததும் அந்தமில்லாததும் இன்பம் தரக்கூடியதுமான அம்மோட்சத்தை நோக்கித் தான் எல்லா உயிர்களும் பயணம் செய்கின்றன.ஆயினும் ஒழுக்கத்தால் உயர்ந்தவரே அதை அடைய முடிகிறது.இந்தப் பிறவியானது துக்க சாகரத்தில் மூழ்கித் துன்புறுகிறது.சம்சாரம் என்பது பிறப்பு,பிணி,மூப்பு என்னும் துக்கத்தால் நிறைந்துள்ளது.இறப்போ..பிறப்புக்கு வித்தாகிறது.ஆகாயத்தில் காணப்படும் விண்மீன்கள் எவ்வாறு மீண்டும்,. மீண்டும் சுற்றுகின்றனவோ அவ்வாரு தான் பிறப்பும் உள்ளது.எறும்பு முதல் யானை வரையிலுமான பல உடல்களில் சென்று உயிர் பல பிறவிகளை எடுக்கிறது.
இந்தப் பிறவியாகிய கடலிலிருந்து கரை ஏற உதவும் படகாக இருப்பதுதான் ஆத்ம ஞானம்.ஆத்ம ஞானம் என்பது உயிரின் உண்மைத் தன்மையை உணர்ந்து கர்மத் தளையிலிருந்து விடுபடும் உபாயம் ஆகும்..

(பார்வதியின் சந்தேகங்களும் ஈஸ்வரனின் பதில்களும் தொடரும் )

Monday, September 12, 2011

170-கல்வி..அறம்..பொருள்..இன்பம்..-5




பார்வதி- இந்த உடல் கொல்லப்பட்டால் ஆத்மா இதனை விட்டுப் போய் விடுகிறதே..அது எதனால்..
ஈஸ்வரன்-மிக நுட்பமான அறிவு படைத்தவரும் இதனை விளக்கமுடியாது துன்புறுவர்.பிறவி  எடுத்து உயிர்களின் கர்மம் முடியும் போது ஏதாவது ஒரு காரணத்தைக் கொண்டு உடலுக்கு இறுதி ஏற்படும்.அதனால் உடல் அழியும் போது ஆத்மா அதன் கருமத்திற்கு ஏற்பப் பயனை அனுபவித்து அந்த உடலை விட்டுப் பிரிந்து சென்று விடுகிறது.உடல் அழிவுக்கான நோய்களினால் ஆத்மா துன்புறுவதில்லை.உடலை வெட்டினாலும், குத்தினாலும்,கொன்றாலும், தர தர என இழுத்துச் சென்றாலும் ஆத்மாவிடத்தில் ஒரு மாறுதலும் ஏற்படாது.அனுபவிப்பது உடல்தான்.கர்மத்தின் பயன் உள்ளவரை உடலில் ஆத்மா தங்கியிருக்கும்.பிரிய வேண்டிய காலம் வரும் போது பிரிந்து விடும்.இதையே உலகோர் மரணம் என்கின்றனர்.
பார்வதி-பிறருக்கு நன்மை செய்பவன் நன்மையை அடைந்து இன்புறுகிரான் என்பது சரி.ஆனால் பிறருக்குத் துன்பம் செய்பவன் எப்படி இன்பத்தை அடைகிறான்? இருள் என்பது என்ன?
ஈஸ்வரன்-பலரது நன்மைக்காக , சமுதாயத்தின் நன்மைக்காக ஒருவனுக்குத் துன்பம் செய்பவன் இன்பம் அடைவான்.அரசன் சமுதாய நன்மைக்காகச் சிலருக்கு தண்டனை விதித்துப் புண்ணியம் அடைகிறான்.வழி தவறி நடக்கும் சீடனுக்குப் பிராயச் சித்தம் முதலான தண்டனைகளால் குரு நற்பயனை அடைகிறார்.மருத்துவர் நோயாளிக்குத் துன்பத்தை அளித்துச் சிகிச்சை செய்து புண்ணியம் பெறுகின்றார்.இப்படி நல்ல எண்ணத்துடன் செயல்படுபவர் புண்ணிய பலனால் தேவர் உலகம் அடைகின்றனர்.தீயவன் ஒருவன் கொல்லப்படுவதன் மூலம் ஒரு சமுதாயமே நன்மை பெறுமானால் அவனைக் கொல்வது கொலையாகக் கருதப்பட மாட்டாது.இது பாவம் அன்று.இதனால் பாவப் பயன் ஏற்படாது.புண்ணிய பலனே ஏற்படும்.
இருளைப் பறிச் சொல்வதானால்..இருள் இருவகைப்படும்.இரவில் தோன்றுவது ஒன்று..மனித மனதில் தோன்றுவது மற்றொன்று.
இருளில் தோன்றும் இருள் ஒளிகளால் மறையும்..விலகும்..ஆனால் உள்ளத்தில் தோன்றும் இருளை உலகில் உள்ள சூரியன், சந்திரன் ஆகிய ஒளிப் பிழம்புகளால் கூடத் தொலைக்க முடியாது.உல உயிர்களைப் படைத்த பிரமதேவன் மக்களின் மன இருளைப் போக்கத் தவம் செய்தார்.அப்படிச் செய்த தவத்தால் வேதமும், உபநிஷதமும் தோன்றின.பிரமதேவர் அதனால் மகிழ்ச்சி அடைந்தார்.மன இருள் அவற்றால் அழியலாயிற்று.நினைக்கத்தக்கது..சொல்லத்தக்கது..செய்யத்தக்கது என்பவற்றை எல்லாம் விளக்கும் ஆகமங்கள் இல்லையென்றால் மன இருளைப் போக்கத் தெரியாமல் மக்கள் அவதியுற்றிருப்பர்.எனவே மன இருளைப் போக்கத் தெரியாமல் மக்கள் அவதியுற்றிருப்பர்.எனவே மன இருள் போக்க உதவும் ஒழுக்க நெறிகளைக் கூறும் ஆகமங்களை மக்கள் போற்றுதல் வேண்டும்.
அது மட்டுமல்லாது, இவ்வுலைகைத் தாங்குவது ஆகமம் என உணட வேண்டும்.இதைத்தவிர உயிர்களுக்கு நன்மை தருவது மூன்று உலகிலும் இல்லை.ஒருவருக்குப் பிறவியிலேயே அமையும் ஞானம் தலை சிறந்தது.கற்பிக்கப்படும் கல்வி இரண்டாவதாகக் கருதப் படுகிறது.இந்த இரண்டும் நிரைந்திருந்தால் தான் நன்மை உண்டாகும்.ஆகமப் பயிற்சி ஒருவனை முழு மனிதனாக ஆக்குகிறது.இந்த ஞானம் உள்ளவன் பொருள்களின் உண்மைத் தன்மையை அறிந்துக் கொள்கிறான்.காமம்,கர்வம்,பயம்,பேராசை ஆகியவை அனைத்தும் காற்றால் மேகம் விலகுவதைப் போல விலகும்.ஆகவே ஆகமக் கல்வி மிகவும் அவசியம் ஆகும்.
பார்வதி-பாவம், புண்ணியம் ஆகிய செயல்களைப் பற்ரி விரிவாகக் கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஈஸ்வரன்-கர்மங்கள் இரண்டுவகைப் படும்.அவை புண்ணிய கர்மம்,பாவ கர்மம்.பாவகர்மம் மூன்று வகையில் உண்டாகிறது.முதலில் மனதிலும், பிறகு சொல்லிலும்,பின் செயலிலும் தோன்றுகிறது.பொறாமை,ஆசை,கெட்ட எண்ணம் ஆகியவை மனத்தே தோன்றும் பாவ கர்மங்களாகும்.பொய்,புறங்கூறல்,கடும் சொல்,பிறர் மனம் புண்படப் பேசுதல்,பிறரைப் பழித்தல் ஆகிய இவை வாக்கினால் ஏற்படும் பாவங்கள்.கூடானட்பு,பிறர் மனை நாடுதல்,பிற உயிரைத் துன்புறுத்துவது,உண்ணத் தகாதவற்றை உண்ணுவது,செய்யத் தகாததைச் செய்வது,,பிறர் செய்யும் கெட்டசெயலுக்குத் துணையாக இருப்பது,புண்ணியத்திற்கு மாறாக செயல்களில் ஈடுபடுவது ஆகிய இச்செயல்கள் பாவங்கள் எனக் கருதப்படுபவை.மனதால் வரும் பாவத்தை விடச் சொல்லால் நேரும் பாவம் அதிகம் ஆகும்.அதைவிட அதிகம் செயலால் வரும் பாவம்.இத்தகைய பாவங்களால் ஒருவன் நரகத் துன்பத்தை அடைவான்.
இனிப் புண்ணியத்தின் பெருமையைக் கேள்..மனம்,சொல்.செயல் இவற்றால் ஏற்படக்கூடிய பாவச் செயல்களை விடுவதாலேயே புண்ணியம் உண்டாகிறது.பாவச் செயல்களை முற்றிலும் விலக்கும் ஒருவன் முனிவன் ஆகிறான்.பாவத்தை விலக்கிய ஆத்மா மேன்மை அடைகிறது.மனதில் மாசற்றுப் பாவத்திற்குப் பயந்த போதே புண்ணியம் உதயமாகிறது.சான்றோர் தொடர்பும்,ஆகமப் பயிற்சியும் ,மன உறுதியும்,மன நிறைவும் புண்ணியம் பெற பெரிதும் உதவுகின்றன.ஒவ்வொருவரும் சத்தியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.சத்தியத்தைக் காட்டிலும் உயர்ந்த தானமும் இல்லை.தவமும் இல்லை.தருமமும் இல்லை.சத்தியம் என்னும் கப்பலைக் கொண்டுதான் சம்சாரம் என்னும் துக்கக் கடலைக் கடக்க முடியும்.

(பார்வதியின் சந்தேகங்களும் ஈசனின் பதிலும் தொடரும்)

Tuesday, September 6, 2011

169-கல்வி..அறம்..பொருள்..இன்பம்..-4



பார்வதி- சிலர் எவ்வளவுதான் முயற்சி உடையவர்களாக இருந்த போதிலும் கல்வி அறிவு பெறாதவராகக் காணப்படுகின்றனரே..அது ஏன்?
ஈஸ்வரன்- அவர்கள், முற் பிறவியில் கல்வியினால் கர்வம் அடைந்திருப்பர்.தங்கள் கல்விப் பெருமையால் பிறரை அலட்சியம் செய்திருப்பர்.இகழ்ந்திருப்பர்.அத்தகையோர் இப்பிறவியில் கிடைத்தற்கரிய மனிதப் பிறவி வாய்த்தும் கல்வி அறிவு இன்றிக் கானப்படுகின்றனர்.
பார்வதி-சிலர் எல்லா நற்குணங்களும் உள்ளவராய் உள்ளனர்.நல்ல மனைவி மக்களுடன் வாழ்கின்றனர்.அவர்கள் வேலைக்காரரும் அவர்கள் சொற்படி நடக்கின்றனர்.செல்வத்தில் திளைக்கின்றனர்.நோயின்றி மகிழ்ச்சியுடன் விளங்குகின்றனர்.ஒரு நாளும் அவர்கலுக்குத் துன்பம் இல்லையே..ஏன்?
ஈஸ்வரன்-முற்பிறவியில் யார் கல்வி அறிவில் சிறந்தவர்களாக..ஒழுக்க சீலராக, தானம் செய்பவர்களாகத் திகழ்கின்றனரோ..யார் கொல்லாமையும் வாய்மையையும் போற்றினரோ, யார் நல்ல நோன்புகளை மேற்கொண்டு பிறர் துன்பத்தைத் தன் துன்பம் போல் கருதினரோ அவர்கள் இப்பிறவியில் எல்லா நன்மைகளும் பெற்று ஒரு குறையும் இன்றி வாழ்கின்றனர்.
பார்வதி-சிலர் பசியினால் வாடி, பிணியால் துன்புற்று, வறுமைப் பிடியில் சிக்கி, யாருக்கும் ஒன்றும் தராமல் இருக்கின்றனரே..மனைவியால் துன்பப்படுகின்றனரே..எப்போதும் ஏதேனும் ஒரு இடையூற்றை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனரே..அது ஏன்?
ஈஸ்வரன்-அவர்கள் முற்பிறவியில் இரக்கமற்றவராக இருந்திருப்பர்.கோபமும், பேராசையும் கொண்டவராக இருந்திருப்பர்.ஒழுக்கம் இல்லாதவராக, பிறரைத் துன்புறுத்துபவராக, உயிர்கலீடத்தில் அன்பு அற்றவராக இருந்திருப்பர்.ஆதலால் இப்பிறவியில் நீ கூறியவாறு உள்ளனர்.
பார்வதி-சிலர் பிறவியிலேயே குருடராய் இருக்கின்றனர்.சிலருக்குப் பிறந்த சில ஆண்டுகலுக்குப் பின் கண் கெட்டுப் போகிறது..ஏன்?
ஈஸ்வரன்-யார் முற்பிறவியில் காமாந்தகாரராகத் திரிந்தனரோ, யார் பிறர் மனைவியை நாடிச் சென்றனரோ அவர்கள் இப்பிறவியில் கண் பார்வைக் கெட்டுத் துன்புறுகின்றனர்
பார்வதி-பார்வதி- சிலர் இளம் வயதிலேயே பல்லை இழந்து,தொண்டையில் நோயுற்றுக் காது கேளாவராக ஆகி, முக விகரமாகத் தோன்றுகின்றனரே! ஏன்?
ஈஸ்வரன்-பொய் பேசுதலையே முற்பிறவியில் தொழிலாகக் கொண்டவரும்,சினத்துடன் விளங்கியவரும், பிறர் செவி கைப்பக் கூறியவரும், பிறர் கேட்டினைக் காதால் கேட்பவரும் ஆகிய இவர்கள் இப்பிறவியில் தொண்டை,காது,பல் முதலியவற்றில் நோய் உண்டாகத் துன்புறுகின்றனர்
பார்வதி-கர்மங்களைத் தோற்றுவைப்பது ஆத்மாவா? இல்லையெனில் வேறு யார்?
ஈஸ்வரன்-ஆத்மா கர்மங்களை உண்டாக்குவதில்லை.ஆனால் கர்மங்களினால் பாதிக்கப் படுகிறது.உடலானது கபம்,வாதம்,பித்தம் ஆகிய மூன்று தாதுக்களால் நிரம்பி இருப்பது போல, சத்துவ குணம்,ரஜோ குணம்,தாமோ குணம் ஆகிய குணங்களைக் கொண்டிருக்கிறது.சத்துவ குணம் உடையவர் எப்போதும் புகழுடன் திகழ்வர்.ரஜோ குணம் துக்கத்திற்குக் காரணம்.தமோ குணம் அறிவின்மைக்கு இடமாகும்.
வாய்மை,தூய்மை,நன்மையில் நாட்டம்,பொறுமை,அடக்கமுடைமை,இன்சொல் கூறல் முதலான நற்பண்புகள் சத்துவ குணத்தால் உண்டாகும்.
செயல்திறன்,சுறு சுறுப்பு,பொருட்பற்று ஆகியவை ரஜோ குணத்தால் ஏற்படும்.பொய்,சோம்பல்,பிடிவாதம்,துக்கம்,தூக்கம்,வீண்பகை,பிறருக்குத் துன்பம் தருதல் முதலிய பாவச்செயல்கள் தமோ குணத்தால் விளையும்.
ஆதலால் நன்மை, தீமை ஆகிய கருமங்கள் குணங்களால் அமைபவை.எனவே ஆத்மா ஆசையற்றது.விகாரமற்றது.தூய்மையானது.
சத்துவகுணம் உள்ளவர் தேவர் உலகில் சென்று பிறப்பர் .
ரஜோ குணம் உள்ளவர் மனிதப் பிறவி எடுப்பர்
தமோ குணம் உள்ளவர் விலங்கு கதி,நரக கதி என்னும் கதிகளில் பிறவி எடுத்து துன்புறுவர்.

(பார்வதியின் சந்தேகங்களும்..ஈசனின் பதில்களும் தொடரும்)

Wednesday, August 31, 2011

168-கல்வி..அறம்..பொருள்..இன்பம்..- 3



பார்வதி தன் சந்தேகத்தைத் தொடர்கிறார்..
பார்வதி-சிலர் என்ன தான் முயன்றாலும் எதுவும் கிடைக்காமல் அவதிப்படுகின்றனரே..ஏ ன் ?
ஈஸ்வரன்-யார் யாசிப்பவர்க்கு ஒன்றும் தராமல் அவர்களை வெறுத்து ஒதுக்கி விடுகிறார்களோ அத்தகையோர் மறுபிறவியில் எவ்வளவு முயன்றாலும் ஓர் இன்பத்தையும் பெற முடிவதில்லை.எதுவும் வித்தின்றி முளைப்பதில்லை.நற்செயல் அன்றி நற்பலன் இல்லை
பார்வதி-சிலர் வயதான காலத்தில், அனுபவிக்க இயலாத முதுமையில் எல்லையற்ற செல்வத்தைப் பெறுகிறார்களே..ஏண்?
ஈஸ்வரன்-அத்தகையோர் செல்வம் உடையவராக இருந்தும் தருமச் செயல்களை வெகுநாள் செய்யாதிருந்து மரணகாலத்தில் நோயால் துன்புறும் போது அறம் செய்ய முற்பட்டவராவர்.அதனால் அனுபவிக்க வேண்டிய காலத்தில் செல்வம் முதலியவற்றைப் பெறாமல் இறுதிக் காலத்தில் (காலம் கடந்து) பெறுகின்றனர்.
பார்வதி-சிலர் திரண்ட செல்வத்தைப் பெற்றிருந்தும் நோயினால் அவதிப்பட்டு அவற்றை அனுபவிக்க முடியாமல் வருந்துகின்றனரே..ஏன்?
ஈஸ்வரன்-அத்தகையோர் முற்பிறவியில் நோயினால் பீடிக்கப்பட்டு இனிப் பிழைக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டபின் தான தருமங்களை செய்தவராவர்.அதனால் அவர்கள் மறுபிறவியில் செல்வத்தைப் பெற்றிருந்த போதிலும் அவற்றை அனுபவிக்க முடியாதவாறு நோயினால் துன்புறுகின்றனர்.
பார்வதி-சிலர் பார்ப்பதற்கு அழகானவராகவும், இனிமையாகவும் இருப்பது எந்தக் கர்மப் பலனால்?
ஈஸ்வரன்-யார் முற்பிறவியில் நாணம் மிக்கவராகவும் இனிமையாக பேசுபவராகவும் தருமம் செய்பவராகவும் விளங்கினார்களோ..அவர்கள் இப்பிறவியில் காண்பதற்கு அழகாகவும் இனிமையாகவும் காட்சியளிக்கின்றனர்
பார்வதி-சிலர் காண்பதற்குக் கவர்ச்சியில்லாது அருவருப்பாக இருக்கின்றனரே..அது எதனால்
ஈஸ்வரன்-முற்பிறவியில் தாங்கள் அழகாக இருக்கிறோம் என்று கர்வத்தினால் பிறரை இகழ்ந்தவர்கள், இப்பிறவியில் பிறர் இகழ அழகில்லாமல் இருக்கின்றனர்
பார்வதி-சிலரிடம் அழகும் இல்லை..செல்வமும் இல்லை..ஆயினும் மனதைக் கவரும் வண்ணம் பேசுகின்றனரே..பெண்களால் கவரப்படுகின்றனரே..அது எந்தக் கர்மத்தால்?
ஈஸ்வரன்-முற்பிறவியில் இனிமையாக பேசுபவராகவும், தம் மனைவியைத் தவிர வேறு பெண்களை எண்ணிப் பாராதவராகவும், தான தருமங்கள் செய்பவராகவும்,மகளிரிடம் காணப்படும் குற்றங்களைப் பொருட்படுத்தாது குணங்களையே பேசுபவராகவும் இருந்தவர்கள் இப்பிறவியில் அழகில்லாவிடினும் அன்புள்ளவராய் இருக்கின்றனர்.தன் அன்பான பேச்சால் அனைவரையும் கவர்கின்றனர்.பெண்களால் விரும்பப்படுகின்றனர்.
பார்வதி-சிலர் கல்வி அறிவும் ,கேள்வி ஞானமும், விடாமுயற்சியும் இருந்தும் வறுமையில் வாடுகின்றனரே..ஏண்?
ஈஸ்வரன்-யார் முற்பிறவியில் கல்வியிலும்,செல்வத்திலும் சிறந்து இருந்த போதும் யாருக்கும் ஒன்றும் தராமல், பசித்தவர்க்குக் கூட உணவு தராமல் இருந்தனரோ, அவர்கள் இப் பிறவியில் அறிவும்,ஞானமும் உள்ளவராய் இருந்தும் வறுமையுடையவர்களாகவே திகழ்கின்றனர்.விதைத்ததுதானே முளைக்கும்.
பார்வதி-உலகில் செல்வம் மிக்கவராக இருந்தும் சிலர் கல்வி அறிவு இல்லாதவர்களாக, மன உறுதி அற்றவர்களாக, முரடர்களாக உள்ளனரே ..ஏன்
ஈஸ்வரன்-முற்பிறவியில் கல்வியில்லாதவர்களாக இருந்த போதிலும் சிலர் ஏழைகளுக்கு உதவி செய்திருப்பர்.அதனால் இப்பிறவியில் அவ்வாறே செல்வந்தராகவும்,கல்வி முதலான சிறப்புகள் அற்றவராகவும் இருக்கின்றனர்.கல்வி இருந்தாலும், இல்லாவிட்டாலும் தானத்தின் பலன் அப்படியே செல்வத்தை உண்டாக்கும்.
பார்வதி- சிலர் புத்திசாலியாகவும்,நினைவாற்றல் உள்ளவராகவும், தெளிவான உச்சரிப்பு உடையவர்களாகவும் இருக்கின்றனரே..அது எந்தக் கர்மப் பயனால்?
ஈஸ்வரன்-அவர்கள் முற்பிறவியில் ஒரு குருவைச் சார்ந்து முறைப்படி கல்வி கற்றவார்கள் ஆவர்.செருக்கு இல்லாதவர் ஆவர்.மன அடக்கம் உள்ளவராக இருந்திருப்பர்.அதனால் அவர்கள் இப்பிறவியில் புத்திசாலித்தனமும்,நினைவாற்றலும் ,தெளிவான உச்சரிப்பும் உடையவர்களாகத் திகழ்கின்றனர்.

(பார்வதியின் சந்தேகங்களும்..ஈஸ்வரனின் பதில்களும் தொடரும்)

Sunday, August 28, 2011

167-கல்வி,அறம்,பொருள்,இன்பம் -2




பார்வதி- எல்லோரையும் படைக்கும் கடவுளான பிரமதேவர் சமமாக படைத்தார் என்றால், சிலர் ஏன் இன்பத்தை அனுபவிக்கிறார்கள்? சிலர் ஏன் துன்பத்தில் வாகுகின்றனர்?
ஈஸ்வரன்-முற்காலத்தில் பிரமதேவர் மனிதர்களைச் சமமாகவே படைத்தார்.அவருக்கு யாரிடத்திலும் வெறுப்பும் இல்லை..விருப்பும் இல்லை.பிறக்கும் போது யாவரும் வேற்றுமையின்றியே பிறந்தனர்.அந்த யுகத்தில் அவர்கள் சமமாகவே இருந்தனர்.காலம் செல்லச் செல்ல, செயல் காரணமாக வேறுபட்டனர்.அதனால் மக்களிடையே பூசல் உண்டாயிற்று.இத்னை உணர்ந்த அறவோர் பிரமதேவனிடம் சென்று முறையிட்டனர்.'உமக்கு ஏன் இந்த மனோபாவம்! நாங்கள் அனைவரும் உம் புத்திரர் அல்லவா? அப்படியிருக்க ஏன் பூசல் தோன்றியது'என வினவினார்.
அதற்கு பிரமதேவர்,'நீங்கள் என் மீது குற்றம் கூறுவதில் அர்த்தம் இல்லை.நீங்கள் உங்கள் செயல்களை நினைத்துப் பாருங்கள்'.
உங்கள் செயல் காரணமாக நீங்கள் நன்மை அல்லது தீமை அடைகிறீர்கள்.ஒருவன் எந்தவிதமான வினையைச் செய்கிறானோ அதற்குரிய பயனைப் பெறுகிறான்.ஒவ்வொருவனும் தன்னுடைய வினைப் பயனைத் தானே அனுபவிக்க வேண்டும்.வேறு யாரும் அதை அனுபவிக்க முடியாது.மற்ற எல்லாவற்றிலும் பங்கு கொள்ளும் உற்றார் உறவினர் கர்மத்தை அனுபவிப்பதில் மட்டும் உதவி செய்ய முடியாது.அவரவர் வினைப் பயனை அவரவரே அனுபவிக்க வேண்டும்.' என்ற அறிவுரையைக் கேட்ட அறவோர் திரும்பச் சென்று நல்ல காரியங்களைச் செய்தனர்.அதன் பயனால் சுவர்க்கம் சென்று இன்பம் அடைந்தனர்.தேவி..பேராசைக்காரர்களும்,அன்பு இல்லாதவர்களும், சுயநலம் உடையவர்களும் தருமத்தில் நாட்டம் கொள்வதில்லை.அத்தகையோர் மறு பிறவியில் துன்பம் மிக அனுபவிக்கின்றனர்' என்றார்.
பார்வதி- மக்களில் சிலர் இன்பத்தை அனுபவிப்பதற்குரிய செல்வமெல்லாம் உடையவராக இருந்தும் இன்பத்தை அனுபவிப்பதில்லையே...ஏன்?
ஈஸ்வரன்-மாந்தரில் சிலர் தூண்டுதலால் தருமம் செய்கின்றனரே யன்றி, தருமம் செய்வது நம் கடமை என்று எண்ணிச் செய்வதில்லை.அத்தகையோர் மறு பிறப்பில் இன்பத்துக்கு ஏதுவான பொருள்களை உடையவராக இருந்தும் இன்பத்தை அனுபவிப்பதில்லை.செல்வத்தைக் காக்கும் காவற்காரனைப் போல இருப்பாரேயன்றி அதனை அனுபவிப்பதில்லை.
பார்வதி-சிலர் செல்வம் இல்லாதிருந்தும் இன்பம் உடையவர்களாக இருக்கிறார்களே..எப்படி..
ஈஸ்வரன்-யார் தருமத்தில் விருப்பம் உடையவர்களாக ..அன்புள்ளவர்களாக-தமது வறுமையிலும் பிறருக்கு உதவ முற்படுவார்களோ அவர்கள் மறுபிறவியில் செல்வம் இல்லாதிருந்த போதிலும் இன்பத்தை அனுபவிக்கிறார்கள்.எனவே பொருள் இல்லையென்றால் கூடத் தான தருமம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருக்க வேண்டும்.
பார்வதி- உலகில் பலவகை மனிதர்களைக் காண்கிறோம்.சிலர் ஓடி ஆடி வேலை செய்யாமல், உழைக்காமல் உட்கார்ந்த இடத்தில் இருந்தவாறே எல்லா அதிகாரத்தையும் திரண்ட செல்வத்தையும் பெற்று இன்பமாக இருக்கின்றனர்.அது எத்தகைய கருமத்தால்..
ஈஸ்வரன்- உனது சந்தேகம் நியாயமானதே..உலகில் யார் தான தருமத்தின் சிறப்பை உணர்ந்து,வெகு தொலைவில் இருந்த போதும் ஊகத்தினாலேயே தானத்திற்கு உரியவர்களை அறிந்து அவர்களைச் சார்ந்து அவர்களது மனம் மகிழுமாறு தானம் முதலானவற்றை செய்கின்றனரோ அவர்கள், சிறிதும் முயற்சியின்றியே அதன் பலனை ,மறுபிறவியில்  பெருகின்றனர்.தமது புண்ணியச் செயலால் விளைந்த இன்பத்தை உட்கார்ந்தவாரே அனுபவிக்கின்றனர்.
பார்வதி-சிலர் மிகவும் முயன்று செல்வத்தைப் பெற்று இன்புறுகின்றனர்..இது ஏன்?
ஈஸ்வரன்-யாசிப்பவர் தம்மை நோக்கிவரும் போது தான தருமம் செய்கின்றனர்.அத்தகையோர் மறுபிறவியில் மிகவும் முயன்று அந்தப் பயனை-இன்பத்தை அனுபவிக்கின்றனர்.
(பார்வதியின் சந்தேகமும்..ஈஸ்வரனின் பதிலும் தொடரும்)

Wednesday, August 24, 2011

166-கல்வி,அறம்,பொருள்,இன்பம்




பார்வதி ஈஸ்வரனை நோக்கிக் கல்வி,அறம்,பொருள், இன்பம் பற்றி விளக்குமாறு வேண்டிக் கொள்ள,ஈஸ்வரன் கூறலானார்.
மனிதப் பிறவி மட்டுமே தொழில் செய்யும் வாய்ப்புப் பெற்றுள்ளது.ஏனைய பிறவிகளுக்கு இவ்வாய்ப்பு இல்லை.இன்பமும்,துன்பமும் மற்ற உயிரினங்களுக்கும் உண்டு.ஒருவன் எத் தொழிலை எப்படிச் செய்ய வேண்டும் என்ற அறிவு அவனுக்குக் கல்வியினாலேயே அமையும்.கல்வியால் அறிவு விரிவடைகிறது.அறிவினால் உண்மையை அறிய முடிகிறது.உண்மையை உணர்ந்தவன் பொறாமை,அவா,சினம் முதலான மாசுகளை அகற்றி மனத்தைத் தூய்மையாய் வைத்துக் கொள்வான்.
கல்வியினால் ஒருவன் எங்குச் சென்றாலும் சிறந்த வாழ்க்கை நடத்த முடியும்.ஆதலால் ஒவ்வொருவரும் கல்வியால் தம்மை உயர்த்திக் கொள்ள வேண்டும்.கல்வி அறிவினால் நன்மை தீமைகளைத் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.மனத்தில் தோன்றும் சினம், ஆசை முதலிய குற்றங்களைப் போக்கி ஆன்மத் தூய்மையுடன் விளங்க வேண்டும்.பெரியோரைப் போற்றி வழிபட வேண்டும்.மனமானது குடும்பத்தில் வழி வழியாய் வரும் ஒழுக்கத்தைப் பற்றும்.ஆதலால் நல்ல குடும்பத்தில் பிறப்பதற்காகத் தான தருமங்கள் முற்காலத்தில் விதிக்கப்பட்டன.ஒருவன் கல்வியின் மூலமாக வாழவேண்டும் என கருதுவானாயின்,ஒரு நல்ல ஆசிரியரிடம் பயிற்சி பெற வேண்டும்.கற்ற கல்வியை மேலும் மேலும் நல்ல நூல்களைப் படித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உழவுத்தொழில் மூலம் ஒருவர் வாழ நினைத்தால் நல்ல நீர்வளம் நிறைந்த இடத்தை நாடி உழவுத்தொழிலை மேற்கொள்ள வேண்டும்.வாணிபத்தை மேற்கொள்வதாயின் காலத்திற்கு ஏற்றவாறு மிக நுணுக்கமாக விலை மாற்றங்களைச் செய்து சாதுர்யமாக வாழ வேண்டும்.பத்து, பதினைந்து பசுக்களை வைத்து பால் வியாபாரம் செய்யலாம்.ஒரு முதலாளியிடம் வேலை செய்யும் தொழிலாளி தான் வாங்கும் பணத்தைவிடப் பல மடங்கு வேலை செய்து முதலாளியின் நன் மதிப்பைப் பெற வேண்டும்.முதலாளியும் அத்தகைய தொழிலாளியிடம் மிகவும் அன்பு கொண்டு தன் குடும்பத்தில் ஒருவனாகக் கருதி அவன் தேவையை நிறைவேற்ற வேண்டும்.அப்போதுதான் நாட்டில் தொழில் பெருகும்,வாணிபம் செழிக்கும்.இடம்,காலம்,மூலதனம்,செய்திறம் ஆகியவற்றை ஆராய்ந்து தெய்வத்தாலோ,மனிதனாலோ இடையூறு நேரா வண்ணம் எண்ணிப்பார்த்து ஒரு தொழிலைத் தொடங்க வேண்டும்.கிடைத்தப் பொருளைக் காப்பாற்ற வேண்டும்.மேலும், மேலும் பெருக்க வேண்டும்.இடைவிடாமல் தொழிலைச் செய்ய வேண்டும்.ஆராய்ந்து பாராமல் இருப்பதே போதும் என்று தொழில் புரியாமல் உண்பவனுடைய செல்வம் மலை அளவு இருந்தாலும் நாளாவட்டத்தில் அழிந்து விடும்.
அறிவுடையவன் தொழிலால் வரும் லாபத்தை ஒழுங்காக வரையறை செய்து கொண்டு செலவிட வேண்டும்.ஒரு பாகத்தைத் தரும காரியங்களுக்காகச் செலவழிக்க வேண்டும்.ஒரு பாகத்தைக் கொண்டு மேலும் செல்வத்தைப் பெருக்க வேண்டும்.பொருள் இல்லாதவரை உலகம் ஒரு நாளும் மதிக்காது. அத்தகைய பொருளைக் கண்ணும் கருத்துமாகப் பெற முயற்சித்தல் முதல் கடமை என உணர்ந்து செயல்பட வேண்டும்.ஒரு பாகத்தைத் திடீரென ஏற்படும் நோய்களையும் ஆபத்துகளையும் போக்கச் செலவிட வேண்டும்.பொருள் இல்லாதவன் இம்மை இன்பங்களையும் மறுமை இன்பங்களையும் இழப்பான்.உண்ணும் உணவினால் எப்படி ஐம்பொறிகளும் செயல் படுகின்றனவோ அப்படியே சேர்க்கும் பொருளால் உலகத்தில் செயல்கள் நடைபெறுகின்றன.உணவு இல்லையேல் ஐம்பொறிகளும் நிலைகலங்கிப் போவது போலப் பொருள் இல்லையேல் வீடும் நாடும் அழிந்தொழியும்.
பொருளை நல்வழியில் சேர்ப்பது, செலவழிப்பது என்பதோடு நில்லாமல் ஒருவன் ஞான மார்க்கத்தில் நிலை பெற வேண்டும்.ஆன்ம முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபட வேண்டும்.நல்ல உணவாலும் நல்ல ஒழுக்கத்தாலும் உடலைக் காப்பாற்ற வேண்டும்.எப்படிப்பட்டவனும் தன் சக்திக்கு ஏற்றவாறு எதையும் செய்ய வேண்டும்.தன் சக்திக்கு ஏற்ற தவம்..சக்திக்கு ஏற்ற தானம்..சக்திக்கு ஏற்ற தியாகம் என்பதை நினைவில் கொண்டு வாழ்க்கையை நெறிப்படுத்திக் கொள்ள வேண்டும்' எனக் கூறி முடித்தார் ஈஸ்வரன்.     (தொடரும்)

Sunday, August 21, 2011

165- போரில் இறப்போர் கதி




போரில் இறப்போர் கதி பற்றி மகேஸ்வரி வினவ..ஈஸ்வரன் சொல்கிறார்..
'போர்க்களத்தில் இரு திறத்துப் படைகளும் மோதும் போதும், யானைப்படை வீரரும்,குதிரைப் படை வீரரும்,தேர்ப்படை வீரரும்,காலாட்படை வீரரும் உற்சாகம் குன்றாமல் போராடுகின்றனர்.வீர வாதம் செய்து போர் புரிகையில் எண்ணற்ற வீரர்கள் இறக்கின்றனர்.போரில் புறமுதுகு காட்டி ஓடும் வீரரைப் பாவம் துரத்திப் பிடித்துக் கொள்ளும்.இப்பாவம் மன்னனைச் சாராது கோழைகளையே பற்றிக் கொள்கிறது.இதுபோலவே கொல்லாமை மேற் கொள்ளும் வீரர் மனம் ஒன்றிப் போரிடவில்லையெனில் அவர்களையும் கொடிய பாவம் பற்றும்.அரசர்கள் நரகத்தை அடைவர்.தன் மன்னனுக்கு வீராவேசம் கொண்டு போரிட்டு உயிர் துறக்கும் வீரன் சுவர்க்கம் அடைவான்.
கருணையுள்ள வீரன் கூடப் பெரு வீரத்துடன் போர் புரிவதில் உற்சாகம் கொள்வான்.இங்கு இரக்கத்திற்கு இடமில்லை.பெரு வீரன் மான் கூட்டத்தைச் சின்னாபின்னப்படுத்தும் சிங்கம் போல கர்ஜித்துப் போரிட வேண்டும்.யுத்தத்தில் யானை மீதிருந்து போரிட்டு மாண்டவன் பிரம லோகத்தை அடைவான்.தேரிலிருந்து போரிட்டு உயிர் துறந்தவன் இந்திரர் லோகத்தை அடைந்து இன்பம் அனுபவிப்பான்.போர்க்களத்தில் கொல்லப்பட்டவர் சுவர்க்கத்தில் தேவர்களால் பாராட்டப்படுவர்.கொன்றவர் இங்கு போற்றப்படுவர்.எனவே..போர்க்களம் செல்லும் வீரன் வெஞ்சமரில் அஞ்சாது போரிட வேண்டும்.ஆயிரமாயிரம் நதிகள் கடலில் கலப்பது போல, ராஜ தர்மத்துடன் பல்வேறு ஒழுக்கங்கள் அவனை சென்று அடையும்.
தொன்று தொட்டு வரும் தருமங்கள் எல்லாவற்றையும் மன்னன் காப்பாற்ற வேண்டும்.தருமத்தை அரசன் கைவிட்டால் , தருமம் அவனை கைவிட்டு விடும்.எந்த நாட்டில் மன்னன் ஆட்சி செம்மையாய் உள்ளதோ அங்கே மழை தவறாது பெய்யும்.நாட்டு மக்கள் பிணி முதலான துன்பங்களின்றி நலமாக வாழ்வர்.
மன்னன் எது நடந்தாலும் பொறுமையாக இருந்தால்,ராஜ தருமம் ஒழுங்காக நடைபெறாது.தீயவர்களைத் தண்டிக்கத் தயங்கக் கூடாது.நல்லவர்களை நன்கு பாதுகாக்க வேண்டும்.மன்னன் ஆறிலொரு பகுதியைத் தீர்வையாகக் கொள்ள வேண்டும்.அப்படிக் கொள்பவன் தன் குடிமக்களைப் பாதுகாக்காமலும், பிற நாட்டைக் கைப்பற்றாமலும் இருத்தல் கூடாது.அத்தகைய மன்னனின் திறமையின்மையைப் பயன்படுத்தி அயல் நாட்டவர் அவன் மீது படையெடுத்து வெற்றி காண்பர்.அந்நிலையில் எதிரி நாட்டுப் பாவமெல்லாம் தோல்வியுற்ற மன்னனை வந்து அடையும்.யுத்தக்களத்தில் வீரத்துடன் போரிட்டு மாண்ட மன்னவன் விமானத்தில் ஏறி வீர சுவர்க்கம் அடைவான்.அவன் உடலில் எத்தனை மயிர்க்கால்கள் உளவோ அத்தனை ஆயிரம் ஆண்டுகள் தேவ சுகம் அனுபவிப்பான்.பின் மண்ணுலகில் மன்னனாகவோ, அறவானாகவோ பிறப்பான்.ஆதலால் மன்னன் விழிப்புடன் நாட்டை ஆள வேண்டும்' என்று முடித்தார் மகேஸ்வரன்.




Thursday, August 18, 2011

164-விதியின் வலிமை




விதியின் வலிமை பற்றி மஹேஸ்வரிக்கு மஹேஸ்வரன் உரைத்தது..

"மரணத்துக்குரிய நேரம் வந்தபோது அதனை யாரும் கடக்க முடியாது என்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.விட்டிற் பூச்சிகள் அழியும் காலம் வரும்போது தாங்களே வந்து எரியும் விளக்கில் வீழ்ந்து மாள்கின்றன.காட்டில் திரியும் மான்களில் எதற்கு முடிவு காலம் வந்ததோ அதுதான் வலையில் அகப்படுகிறது.கொல்வதற்காகக் கொலைக் களத்திற்கு அனுப்பப் படும் விலங்குகளில் ஆயுள் குறைந்ததுதான் முதலில் கொல்லப் படுகிறது.எல்லாமே உடனே கொல்லப்படுவதில்லை.விரைந்து பறந்து செல்லும் பறவைகள் கூட ஆயுள் காலம் முடிந்தால் சுட்டுத் தள்ளப்படுகின்றன.தண்ணீரில் இருக்கும் மீன்கள் அனைத்துமா ஒரே நாளில் வலையில் அகப்படுகின்றன? ஆயுள் குறைந்தவை மட்டுமே வலையில் சிக்குகின்றன.
உழவன் உயிகளைக் கொல்ல வேண்டும் என்றா நிலத்தை உழுகின்றான்.அந்த எண்ணம் அவனுக்கு இல்லை.ஆயினும் ஆயுள் முடிவால் கலப்பை நுனியால் பல உயிர்கள் இறக்கின்றன.யானை நடக்கும்பொழுது சாகும் உயிர்களைவிட மனிதன் நடக்கும் போது இறக்கும் நுண்ணூயிர்கள் அதிகம்.ஒரு நாளைக்கு மனிதன் ஆயிரம் நடை நடக்கிறான்.யானை அப்படி நடப்பதில்லை.எது எப்படியாயினும் இறக்கத்தக்கவைதான் இறக்கின்றன.ஆகவே எந்தப் பிராணியும் விதியை வெல்ல முடியாது.இறக்க தக்கவைதான் இறக்கும்.விடுபடத்தக்கவை விடுபடும்.


 

Tuesday, August 16, 2011

163-கொல்லாமையின் சிறப்பு




உமா மகேஸ்வரன் உமா மகேஸ்வரியைப் பார்த்து, "மக்களுக்கு இன்பத்தைத் தரும் தருமத்தைச் சொல்கிறேன்..கேள்.." என சொல்லத் தொடங்கினார்.
கொல்லாமைதான் அறங்களில் தலையாய அறம்.கடவுள் வழிபாடும், எப்போதும் ஆகமப் பயிற்சியும், மன அடக்கமும் கொல்லாமைக்கு ஈடாகாது.தாய் தந்தையரைப் போற்றுவதும் புண்ணிய நதிகளில் போராடுவதும் கூடக் கொல்லாமைக்கு நிகரில்லை' என்றார்.
'அப்படியானால் ஏன் யாகங்களில் பசுக்களைக் கொல்கின்றனர்?மன்னர்கள் வேட்டையாடச் செல்கின்றனரே! இது என்ன அறம்' என வினவினாள் மகேஸ்வரி.
'தேவி! பாராட்டத்தக்க கேள்வி..இந்த உலகில் கொல்லாதவர் யாருமில்லை.நடக்கையில் நுண்ணுயிர்கள் பல மடிகின்றன.உட்காரும் போதும்,படுக்கும் போதும் கூட இருக்கையிலும், படுக்கையிலும் உள்ள நுண்ணுயிர்கள் இறக்கின்றன.நீரிலும், காற்றிலும் உயிரினங்கள் எண்ணற்றவை இருக்கின்றன.பூமியில் இருக்கும் உயிர்களுக்குக் கணக்கு இல்லை.இப்படி நீரில்,காற்றில்,மண்ணில் உள்ள உயிர்கள் ஒன்று ஒன்றால் கொல்லப்படுகின்றன.
பலம் மிக்க பறவைகளும், மீன்களும் பலம் குறைந்த தம் இனங்களைப் புசித்து வாழ்கின்றன.சிறிய மீனைப் பெரிய மீன் கொல்லுதல் இயல்பாய் உள்ளது.புறா முதலான பறவைகள் புழு, பூச்சிகளை உணவாகக் கொள்கின்றன.ஆயிரக்கணக்கான உயிர்கள் பிற உயிர்களின் மாமிசத்தாலேயே உயிர் வாழ்கின்றன.
ஒருவன் உணவு என்னும் பெயரால் உயிருள்ள பொருள்களைப் பக்குவப்படுத்தி உண்கிறான்.சில நாட்கள் சில தானியங்களை உண்ணாமல் உண்ணாநோன்பு இருப்பவன் கொல்லாதவனாகக் கருதப்படுகின்றான்.உயிர்களைக் கொன்று தின்னாதவன் புண்ணியத்தைப் பெறுகிறான்..
உணவைத் துறப்பதால் உடல் வாடுகிறது.அப்படி உடல் வாடும் போது ஐம்பொறிகளும் கட்டுப் படுத்தப் படுகின்றன.ஐம்பொறிகளையும் மனதையும் அடக்கும் ஆற்றல் பெற்றவன் யாரினும் உயர்ந்தவன் ஆகிறான்.இவ்வாறு உபவாசம் இருப்பது கொல்லாமைக்குக் காரணமாகிறது.இவ்வாறு நடப்பவன் , படுப்பவன்,பிற உயிர்களைக் கொன்று புசிப்பவன் ஆகிய அனைவரும் உயிர்க்குத் துன்பம் தருபவர்கள் என்று அற நூல்கள் கூறுகின்றன.
பிற உயிர்க்குத் துன்பம் செய்யாதவர்களைப் பற்றிக் கூறுகிறேன்.உண்பதற்கு ஏற்ற  கிழங்குகளையும்,கனிகளையும்,இலைகளையும் உண்டு ஓவியம் போல் அசைவற்று இருப்பவன் தான் இம்சை செய்யாதவன்.பொருள்களின் மீதுள்ள பற்றற்று எல்லாவற்றையும் விட்டுவிட்டுத் துறவு பூண்டு, வைராக்கியத்துடன், சாகும் வரை உண்ணாநோன்பு மேற்கொள்பவரே பிற உயிர்க்கு துன்பம் செய்யாதவர் ஆவர்.இத்தகையோர் உலகில் சிலரே.மனதில் எழும் ஆசையை அகற்ற வேண்டும்.இதனால் புண்ணியம் பெருகும்.தருமமும்,அதருமமும் மனதில் எழும் எண்ணங்களாலேயே அமைகின்றன.
ஒரு உயிர் திரும்பத் திரும்ப பிறவி எடுப்பதும், இறுதியில் முக்தி அடைவதும் மனத்தாலேதான்.முன்வினைப் பயன் காரணமாக உயிர்கள் விலங்குகளாகவும்,பறவைகளாகவும்,ஊர்வனவாகவும் பிறக்கின்றன.அவ்வாறு பிறக்கும் உயிர்கள் பல்வேறு வகைப்பட்ட உடல்களுடன் ஆற்றலும் வலிமையும் கொண்டு பிறக்கின்றன.அப்படிப் பிறக்கும் பிராணிகள் தம் வினைக்கு ஏற்ப இன்ப துன்பங்களைப் பெறுகின்றன.மரணமும் அப்படியே.ஒரு உயிர் எப்படி எங்கே எப்போது பிரிய வேண்டும் என்பது விதியால் அமைவதாகும்.மரணத்தை எத்தகைய மகான்களாலும்,அரசகளாலும்,வீரர்களாலும் கூட மாற்றி அமைத்து விட முடியாது.இதுவரை மரணத்தை வென்றவர் இல்லை.விதி மிகவும் விழிப்புடன் உயிர் இனங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறது.அதற்கு நண்பரும் இல்லை.பகைவரும் இல்லை.அதன் கண்ணோட்டத்தில் எல்லோரும் சமமானவர்களே.மந்திரத்தாலோ,மருந்தாலோ,செல்வத்தாலோ,தானத்தாலோ,அரிய தவத்தாலோ,புகழாலோ,அதிகாரத்தாலோ எதனாலும் எமனை ஏமாற்ற முடியாது.எனவே..உமா..உலகில் மாற்ற முடியா மாபெரும் சக்தி மரணம்தான் என்பதைத் தெளிவாக உணர்.ஆதலால் வாழும் காலத்தில் எவ்வுயிர்க்கும் துன்பம் தராது வாழ வேண்டும்' என்றார் மகேஸ்வரன்.


Friday, August 12, 2011

162- சத்தியம் உயர்ந்த தருமம்




பீஷ்மர் தருமரைப் பார்த்து, "தருமா! மேலோர் சத்தியத்தை 13 பிரிவாகப் பிரித்துள்ளனர்.அவை உண்மை,சமதாபாவனை,தமம்,அழுக்காறு இன்மை,அமைதி,பொறுமை,உத்தமப் பொறுமை,வெறுப்பின்மை,தியாகம்,தியானம்,மேன்மை,தைரியம்,அஹிம்சை என்பனவாகும்.
உண்மை என்பது எப்போதும் நிலை பெற்றிருப்பது.அழிவில்லாதது.எல்லா அறங்களுக்கும் அடிப்படையானது.இது யோகத்தால் சாத்தியமாகும்.
சமதாபாவனை என்பது, இன்ப துன்பங்களை ஒரே விதமாக ஏற்றுக் கொள்வது.இது விருப்பு,வெறுப்பு இன்மையால் ஏற்படும்
தமம் என்பது, அச்சம் இன்மையும் சினத்தை அடக்குவதும் ஆகும்.இது ஞானத்தால் உண்டாகும்.
அழுக்காறு இன்மை என்பது பொறாமையின்மை.எப்போதும் உண்மையையே நாடுவதால் இது கைகூடும்.
அமைதி எனப்படுவது மனம்,சொல்,செயல் ஆகியவை சலனமற்று இருப்பது.இது தரும காரியங்களால் அடையப்படும்.
பொறுமை என்பது பொறுக்கக்கூடியவற்றைப் போலவே பொறுக்க முடியாதவற்றையும் பொறுத்துக் கொள்வதாகும்.சத்தியத்தைப் பின்பற்றுவதால் இதனைப் பெற முடியும்.
உத்தமப் பொறுமை என்பது, தருமத்தின் காரணமாகப் பிறர் செய்யும் எல்லாத் தீமைகளையும் பொறுத்துக் கொள்வதாகும்.மேலான பொறுமையாகிய இது மனவலிமையால் பெறக் கூடும்.
வெறுப்பின்மை என்பது பிறர் குற்றம் காணாதிருப்பது.இது ஈகையால் - தானத்தால் அமையும்.
தியாகம் என்பது, மனதில் தோன்றும் கெட்ட எண்ணங்களை - மாசுகளை அறவே துறத்தலாகும்.
தியானம் என்பது, தருமத்தை எப்போதும் சிந்திப்பதாகும்.இது எப்போதும் நல்லவனவற்றை சிந்திப்பதால் உண்டாகும்.
மேன்மை என்பது, எல்லா நற்குணங்களையும் பெற்றிருப்பதாம்.நல்லவனவற்றை ஆய்ந்து ஆய்ந்து செய்வதன் மூலம் ஒருவன் மேன்மை அடையக்கூடும்.
தைரியம் என்பது கீழான சிந்தனைகளை ஒழித்தலாகும்.இது சினத்தை அடக்குவதாலும், அச்சத்தை அகற்றுவதாலும் ஏற்படும்.
அஹிம்சை என்பது மனம்,வாக்கு,செயல் இவற்றால் பிற உயிருக்குத் தீங்கு செய்யாதிருத்தல்.அன்புடைமையாலும் அருளுடைமையாலும் ஒருவர் அஹிம்சையை பின்பற்ற முடியும்.
இப்படி பதின்மூன்று பிரிவாகப் பேசப்படும் சத்தியமே அனைத்து அறங்களுக்கும் ஆதாரமாக இருக்கிறது என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்' என்று உரைத்தார்.