Wednesday, September 29, 2010

114 - மன்னன் மயில் போல் இருக்க வேண்டும்

மன்னருக்கு உரிய பண்புகள் பற்றி மேலும் அறிய விரும்புவதாக தருமர் கூற பீஷ்மர் உரைக்கலானார்..

'தருமா..எல்லா உயிரினங்களையும் காக்க வேண்டியது மன்னனது கடமை ஆகும்.மன்னன் மயிலைப் போல திகழ வேண்டும்.மயில் தன் பல வண்ணத் தோகையை எவ்விதம் அமைத்துக் கொள்கிறதோ அவ்விதம் தருமம் அறிந்த மன்னன் பலவிதமான வடிவங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.வரி வசூலிக்கும் போது சத்தியத்தையும், நேர்மையையும் மேற்கொண்டு நடுவு நிலையுடன் நடந்துக் கொள்ள வேண்டும்.தண்டனை தரும் போது கடுமையாகவும், உதவி செய்யும் போது அன்புடனும் தோன்ற வேண்டும்.
மயில் சரத் காலத்தில் ஒலி எழுப்பாது இருப்பதைப் போல அரசன் மந்திராலோசனையை வெளியிடாமல் காக்க வேண்டும்.மன்னன் மயிலைப் போல இனிய குரலும்,மென்மையான தோற்றமும் தன் செயலில் ஆற்றலும் உள்ளவனாகத் திகழ வேண்டும்.
மயில் நீரருவிகளில் நாட்டம் உள்ளதாக இருப்பதைப் போல மன்னன் வரவு செலவுகளில் கவனமாக இருக்க வேண்டும்.மயில் மலையில் உள்ள மழை நீரை விரும்பியிருப்பதைப் போல மன்னன் ஆன்றோரைச் சார்ந்திருக்க வேண்டும்.மயில் தன் தலையில் உள்ள சிகையை எப்போதும் தூக்கி வைத்திருப்பதைப் போல மன்னன் தருமக் கொடி கட்டி அடையாளம் காட்ட வேண்டும்.மயில் தன்னைப் பாதுகாத்துக் கொண்டு பாம்பு முதலியவற்றைத் தாக்க எப்போதும் விழிப்புடன் இருப்பதைப் போல மன்னன் தண்ட நீதி வழங்குவதில் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
மயில் தான் இருக்கும் மரத்திலிருந்து செழுமையான மற்றொரு மரத்துக்குச் செல்வது போல, மன்னன் வரவு செலவுகளைக் கண்டு, வரவு அதிகமாகவும் . செலவு குறைவாகவும் உள்ள செயல்களில் ஈடுபட வேண்டும்.மயில் தன் தோற்றத்தினாலேயே காக்கை முதலான பறவைகளின் குறை தோன்றுமாறு இருப்பது போல, மன்னன் தன் நேர்மையினாலேயே பகை மன்னர்களின் குறைகள் வெளிப்படுமாறு இருத்தல் வேண்டும்.மயில் உயர்ந்த வளமான மலையை நாடுவது போல, மன்னன் தன்னைவிட உயர்ந்த மன்னர்களுடன் நல்லுறவு கொள்ள வேண்டும்.மயில் களைத்த போது நிழலை விரும்புவது போல, தளர்ந்த காலத்தில் சுற்றத்தாரிடம் விரும்பிச் செல்ல வேண்டும்.
மயில் வேனிற் காலத்தில் மரத்தில் மறைந்திருப்பது போல அரசன் ரகசியமான இடங்களைச் சார்ந்து இருக்க வேண்டும்.மயில் மழைக்காலத்தில் மகிழ்ந்து இருப்பது போல மன்னன் மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தனிமையில் மகிழ்ந்து இருத்தல் வேண்டும்.மயில் தான் சஞ்சரிக்கும் இடங்களில் தன்னைப் பிடிக்க அமைத்த வலைகளை விலக்கித் தப்பித்துக் கொள்வது போல, மன்னன் பகைவர் விரித்த வலைகளை ஒற்றர்கள் மூலம் அறிந்து அவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும்.மயில் நச்சுத் தன்மை வாய்ந்த பாம்புகளைக் கொல்வது போல அரசன் வஞ்சக மன்னர்களைக் கொல்ல வேண்டும்.
மயில் புழு முதலியவற்றை வெறுக்காது இருப்பது போல, மன்னன் தாழ்ந்தவரைக் கண்டு அருவருப்பு அடையக் கூடாது.மயில் உறுதியான சிறகுகளைக் கொண்டிருப்பதைப் போல, மன்னன் உறுதி மிக்க அமைச்சர்களைப் பெற்றிருக்க வேண்டும்.மயில் தன் சிறகுகளை விருப்பப்படி விரிப்பது போல, மன்னன் தன் சுற்றத்தாரிடம் விரிந்து பரந்த மனதுடன் இருக்க வேண்டும்.எல்லா இடங்களில் இருந்தும் நல்லறிவைப் பெற்று நாட்டை நன்கு ஆட்சி புரிய வேண்டும்' என்றார் பீஷ்மர்.

Tuesday, September 28, 2010

113-அரசர்கள் திறம்பட ஆட்சி செய்வது எப்படி?

113-அரசர்கள் திறம்பட ஆட்சி செய்வது எப்படி?

தருமர் பீஷ்மரை நோக்கி 'வேலைக்காரர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?' எனவும், 'அரசன் தனக்குத் துணையாக யாரைக் கொள்ள வேண்டும்? ' என வினவ பீஷ்மர் கூறலானார்.

.உலகியல் அறிவும் நூலறிவும் மிக்க வேலக்காரர்களைப் பெற்றிருக்கும் அரசன் மேன்மையுற்றவன் ஆவான்.அரசனது நன்மையை விரும்பும் அமைச்சர்கள் நற்குலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.அரசனுக்கு நல்வழி காட்டுபவர்களாக இருக்க வேண்டும்.லஞ்சம் முதலானவற்றால் நெறி கெடாதவராக இருக்க வேண்டும்.எந்த அரசர் வருங்காலத்தை உணர்ந்து செயல்படக்கூடிய அமைச்சர்களைப் பெற்றிருக்கிறாரோ அந்த அரசர் சிறந்த அரசராகத் திகழ்வார்.அரசனுக்குத் துணையாக அமைபவர்கள் இன்ப துன்பங்களைச் சமமாக கருதத் தக்க மனப்பக்குவம் உடையவர்களாக இருக்க வேண்டும்.நாட்டின் பொருளைப் பெருக்குவதில் கண்ணும் கருத்துமாய் செயல் பட வேண்டும்.ஓர் அரசன் செழிப்புடன் திகழ வேண்டுமாயின் அண்டை நாடுகளும் அமைதியுடன் இருக்க வேண்டும்.நாட்டில் பொக்கிஷம் நிறைந்திருக்க வேண்டும்.நாணயம் மிக்கவர்களால் அது நன்கு காப்பாற்றப்படுமாயின் மன்னனின் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கி நிற்கும்.அரசு அதிகாரிகளாக நியமிக்கப் படுபவர்கள் பொருளாசை அற்றவராக இருக்க வேண்டும்.எந்த அரசன் அரசு தருமங்களை நன்குணர்ந்து அரச காரியங்களில் வல்லவர்களை நியமித்து ஆறில் ஒரு பங்கை வரியாகப் பெற்றுக் கொள்கிறானோ அந்த அரசன் தருமத்தின் பயனை அடைந்தவன் ஆவான்' என்றார்.

மன்னருக்குள்ள பண்புகளைப் பற்றி மேலும் அறிய விரும்புவதாக தருமர் கூறப் பீஷ்மர் உரைக்கலானார்.

Monday, September 27, 2010

112-மூடன் தரக் குறைவான வார்த்தையைக் கூறினால்....

தருமர் பீஷ்மரைப் பார்த்து..'பிதாமகரே! சாந்தமும் அறிவும் மிக்க ஒருவன், அவையில் மூடனும், அறிவற்றவனுமான ஒருவனால் நிந்திக்கப் பட்டால் என்ன செய்ய வேண்டும்? என வினவ பீஷ்மர் உரைக்கிறார்.

'தருமரே! அறிவு மிக்கவன் எப்போதும் அற்ப புத்தியுள்ளவனின் தரம் கெட்ட சொற்களை பொறுத்துக் கொள்ள வேண்டும்.ஆத்திரத்துடன் பழிக்கப்படும் மனிதன் பழிக்கும் ஒருவனுடைய புண்ணியத்தைத் தான் அடைந்து, தனது பாவத்தை அவனுக்குக் கொடுத்துத் தன்னைத் தூய்மை செய்து கொள்கிறான்.இகழ்ச்சி செய்பவனை பொருட்படுத்தக் கூடாது.அவன் உலகத்தில் பகையைப் பெற்றுப் பயனற்ற கதியை அடைவான்,போகும் இடமெல்லாம்"இவன் என்னால் இவ்வாறு சொல்லப்பட்டான்.அதனால் வெட்கம் அடைந்து செயலற்றுக் கிடக்கிறான்" எனத் தற்பெருமை பேசும் அற்பனை அடக்கம் உள்ளவன் அலட்சியம் செய்ய வேண்டும். அற்பன் பேசும் பேச்சுக்களைச் சகித்துக் கொள்ள வேண்டும்.

பிறரைப் பழித்துப் பேசி பழக்கப்பட்ட ஒருவன் தன் தாயைப் பற்றிக் கூட அடாத பழி கூறுவான்.மறைக்க வேண்டிய அந்தரங்க உறுப்பை மறைக்காமல் வெளிக்காட்டி ஆடும் மயில் போல அவன் மகிழ்ச்சி அடைவான்.பழி தூற்றும் பேதையிடம் நல்லவர்கள் பேச்சுக் கொடுக்கக் கூடாது.எவன் நேரில் புகழ்ந்தும் மறைவில் குறை கூறியும் பேசுகிரானோஅவன் உலகில் நாய் போன்றவன் ஆவான்.ஞானமும், கல்வியும்,தருமமும் இழந்தவன் ஆவான்.அவனிடம் இருக்கும் சில நல்ல குணங்களும் பிறர் மீது பழி கூறும் இயல்பால் நாசமடைகின்றன.ஆதலால், நல்லறிவுள்ளவன் பாப புத்தியுள்ளவனும்,விலக்கத்தக்கவனுமான அவனை நாயின் மாமிசத்தைப் போல உடனே விலக்க வேண்டும்.

மக்கள் கூட்டத்தில் பிறர் குற்றத்தைச் சொலபவன் பாம்பானது உயர்ந்த படத்தை வெளியிடுவது போலத் தன் குற்றங்களைத் தானே வெளியிடுபவன் ஆவான்.அடக்கமின்றி பிறர் பழி கூறித் திரியும் அவனை மதம் கொண்டு திரியும் யானையைப் போலவும், தெருத் தெருவாகச் சுற்றி அலையும் நாயைப் போலவும் கருதி விலக்க வேண்டும்.நாவடக்கம் இன்றிப் பேசித் திரியும் பழிகாரரை வெறுத்து ஒதுக்க வேண்டும்.உறுதியான மனம் படைத்த சான்றோர், உயர்ந்தோர் தாழ்ந்தோருடன் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறுகின்றனர்.பிறர் பழி கூறும் மூர்க்கர்கள் கோபம் கொண்டால் அடிப்பார்கள்.,கடிப்பார்கள்.,புழுதி வாரி இறைப்பார்கள்.,பல்லைக் காட்டி பயமுறுத்துவார்கள்.

கெட்ட புத்தியுள்ளவன் அவையில் என்னதான் பழித்துப் பேசினாலும் அவனை பொறுத்துக் கொள்பவர்கள் மலையென கலங்கா மனம் படைத்தவர்கள் என போற்றப்படுவார்கள்.ஏசுபவன் பழியேந்திச் செல்வான்.,பொறுத்துக் கொள்பவன் புகழுடன் திகழ்வான்.தருமா..நீ அற்பர் சொல்லைப் பொறுத்துக் கொண்டு புகழ் பெறுவாயாக' என்றார் பீஷ்மர்.

Thursday, September 23, 2010

111-கடினமான துன்பங்களைக் கடக்கும் வழி

தருமர் 'கடினமான துன்பங்களைக் கடப்பது எப்படி?' என பீஷ்மரிடம் வினவ..பீஷ்மர் உரைக்கிறார்.

'யார் மன அடக்கமாய் அற நூலில் சொன்னபடி நடக்கிறாரோ..அவர்..கடினமான துன்பங்களைக் கடக்கிறார்.யார் தருமத்தை ஆடம்பரத்திற்காகச் செய்யாமல் தம் தேவையைக் குறைத்துக் கொண்டு வாழ்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கிறார்.யார் ஐம்புலன்களை அடக்கும் வல்லமை பெற்றவரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் தன்னை பிறர் நிந்தித்தாலும் மறுமொழி கூறாமல் இருக்கின்றாரோ,தமக்குத் துன்பம் செய்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாமல் இருக்கின்றாரோ,யார் பிறருக்குக் கொடுத்துக் கொண்டும் தான் யாரிடமும் யாசிக்காமலும் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் விருந்தினரை நன்கு உபசரிக்கின்றாரோ, யார் வேதம் ஓதுகின்றாரோ,யார் எதற்கும் அருவருப்பு அடையாமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் தருமத்தை உணர்ந்து தாய்,தந்தையைப் போற்றுகின்றாரோ யார் பகலில் உறங்காமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் மனத்தாலும் சொல்லாலும் செயலாலும் பாவத்தை செய்யாமல் இருக்கின்றாரோ, உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் பிறர் பொருளைக் கவராமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் தன் மனைவியிடம் மட்டும் உரிய காலத்தில் சேர்க்கைக் கொண்டு, பிறர் மனைவியைக் கனவிலும் கருதாமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் மரணத்தைக் கண்டு அஞ்சாமல் பயத்தை விலக்கி, போர்க்களத்தில் வெற்றி பெற விரும்புகிறாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் உயிரே போனாலும் பொய் சொல்லாது உண்மையையே பேசுகின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் நிந்திக்கத் தகாத செயல்களை உடையவராக இருக்கின்றாரோ, யார் தம் பொருளைச் சாதுக்களுக்கு வழங்குகின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் இளமையில் பிரம்மச்சரியத்தை மேற்கொண்டு சுறுசுறுப்புடன் கல்வி கற்றுப் பல துறைகளிலும் தேர்ச்சி பெற்றவராக இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் பிறரை அச்சுறுத்துவதில்லையோ, பிறர் அச்சுறுத்தலுக்கு பயப்படுவது இல்லையோ, யார் தம்மைப் போல பிறரையும் கருதுகின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் தான் இன்புறுவது போல் பிறரும் இன்புற வேண்டும் என எண்ணுகிறாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கிறார்.யார் எல்லா தேவர்களையும் வழிபட்டு, எல்லாத் தருமங்களையும் கேட்டு அடக்கம் உடையவராக இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கிறார்.யார் தற்பெருமையை விரும்பாமல் பிறரைப் பெருமைப்படுத்திப் புகழ்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் தம் முன்னோர்களுக்காகத் தூய மனத்துடன் ஒவ்வொரு திதியிலும் சிரார்த்தம் செய்கிறாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் தம் கோபத்தை அடக்கி, பிறரையும் கோபம் அடையாமல் இருக்கச் செய்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் மது, மாமிசம் மகளிர் போகம் இவற்றை விலக்குகின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் உயிர் வாழ்வதற்காக மட்டுமே உணவு உட்கொண்டும்,சந்ததிக்காகவே மனைவியுடன் கூடியும்,உண்மை பேசுவதற்காக மட்டுமே பேச்சையும் கொண்டு வாழ்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் எல்லா உயிர்களுக்கும் நாதனாயிருப்பவரிடம் பக்தி செலுத்துகின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் எல்லாக் கர்மங்களையும் கண்ணனிடம் அர்ப்பணம் செய்துவிட்டு அச்சமின்றி இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் உலகங்களைப் படைத்தவரும் சாதுக்களுக்கு நாதரும் யாகங்களால் வழிபடத்தக்கவருமான பிரம்மனை பக்தியுடன் வழிபடுகிறாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் இந்திரனும்,விஷ்ணுவும்,ருத்திரரும் போற்றும் மாகாதேவரான சிவபெருமானை எப்போதும் துதி செய்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் கடினமான துன்பத்தை கடக்கத்தக்க இந்த உபதேசத்தை படிக்கின்றாரோ, யார் கேட்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

தருமா! மனிதன் இவ்வுலகிலும், மேலுலகிலும் கொடுந் துன்பங்களைக் கடத்தற்காகச் செய்யத்தக்க செயல்களில் சிலவற்றை உனக்கு உபதேசித்தேன்.நீயும் இவ்வாறு நடந்து துன்பங்களைக் களைவாயாக!" என்று கூறி முடித்தார் பிதாமகன்.

(பீஷ்மரின் அறிவுரைகள் தொடரும்)

Thursday, September 2, 2010

110-குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

தருமர் பீஷ்மரை நோக்கி 'ஒருவரோடொருவர் பொறாமை கொண்டுள்ள சுற்றத்தாரைத் தன் வசமாக்கிக் கொள்ளத்தக்க வழிகள் யாவை' என வினவினார்.

அதற்கு பீஷ்மர், 'இந்த விஷயத்தில் நாரதருக்கும், வாசுதேவருக்கும் நடந்த உரையாடலைக் கூறுகிறேன்..கேள்..

கண்ணபிரான்..நாரதரை நோக்கி..'நாரதரே..பண்டிதன் அல்லாத நண்பனும், பண்டிதனாக இருந்தும் அறிவற்ற பகைவனும் ரகசியத்தை அறியத் தக்கவரல்லர்.ஆதலால் உம் மேன்மையை அறிந்துக் கொண்ட நான் உம்மிடம் என் ரகசியத்தைத் தெரிவித்துச் சில உண்மைகளைத் தெரிந்துக் கொள்ள விரும்புகிறேன்.நான் அரசன் என்ற பெயர் உள்ளவனாக இருந்தும் சகோதரர்களுக்கு அடிமைத் தொண்டு செய்து வருகிறேன்.புசிக்கத் தக்கவற்றுள் பாதியை மட்டும் புசிக்கிறேன்.மற்றொரு பாதியைச் சுற்றத்தாருக்குத் தருகிறேன்.அவர்கள் பேசும் சொற்கள் என்னை சுட்டு எரிக்கின்றன.எனக்குத் துணை செய்வார் யாரும் இல்லை.அச் சுற்றத்தாரோடு சேர்ந்திருக்கவும் முடியவில்லை..விட்டு விலகியிருக்கவும் முடியவில்லை.

தான் பெற்றெடுத்த மகன்கள் இருவரும் சூதாடுகையில் தாய்..எந்த மகனின் வெற்றியை விரும்புவாள்? யாருடைய தோல்வியை அவள் விரும்புவாள்? அந்தத் தாய் இரு மகன்களிடையே செயலற்றுத் துன்புறுவது போல நான் துன்புறுகிறேன்.இந்நிலையில் எனக்கும்,என் சுற்றத்தாருக்கும் நன்மை தரத்தக்க ஒரு வழியைத் தெரிவிக்க வேண்டுகிறேன்' என்று கேட்டுக் கொண்டார் .

நாரதர்.."கண்ணா..ஒருவனுக்கு இரண்டு வகையான துன்பங்கள் உண்டு.ஒன்று உட்பகை.மற்றது வெளிப்பகை.சுற்றத்தாரால் வருவது உட்பகை.மற்றோரால் வருவது வெளிப்பகை.வெளிப்பகையை விடக் கொடியது உட்பகை.நீர் உன் சுற்றத்தாரிடம் கொடுத்துவிட்ட நாட்டைத் திரும்ப பெற எண்ணுகிறீர்.கொடுத்துவிட்ட ஒன்றை திரும்பப் பெறுவது உமிழ்ந்த உணவை மீண்டும் எடுத்து உண்ண வி ரும்புவதைப் போன்றது.ஆகவே அவர்களிடமிருந்து விரும் துன்பத்திலிருந்த் தப்பிக்க வழி இழந்த நாட்டை திரும்பிக் கேட்காமல் இருப்பதே ஆகும்.ஆனாலும் அவர்களின் கெட்ட உள்ளத்தை மாற்றும் ஆயுதம் ஒன்று உள்ளது.அது இரும்பினால் செய்யப்பட்டதல்ல.மென்மையானது..மென்மையானதாயினும் அவர்களை அடக்கி விடும்' என்றார்.

கண்ணன் நாரதரைப் பார்த்து 'இரும்பினால் செய்யப்படாத மென்மையான ஆயுதம் எது?' என்று வினவ, நாரதர்,'கண்ணா, அந்த மென்மையான ஆயுதம்...இன்சொல்..'என்றார்.'இனிய சொற்கள் கூர்மையான அரத்தைப் போன்றவை.இனிய நன்மொழியால் சுற்றத்தாரிடம் இனிமையாகப் பேசி அவர்களை அணைத்துச் செல்ல வேண்டும்.வேண்டிய பொருள்களைக் கொடுத்து அவர்களைத் திருப்திப்படுத்த வேண்டும்.

எப்போதும் சுற்றத்தாரைக் காப்பதன் மூலம் ஒருவருடைய பொருளும்,புகழும்,ஆயுளும் பெருகும். எனவே நீர் சுற்றத்தார்க்கு எவ்வித குறையும் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.அனைவரும் உன்னச் சார்ந்தே உள்ளனர்.உயிர்கள் அனைத்துக்கும் நாதரே...நீர் அறியாதது ஏதுமில்லை' என்று முடித்தார்.

இதை எடுத்து உரைத்த பீஷ்மர்..சுற்றந் தழுவுதலின் மேன்மையைத் தருமருக்கு உணர்த்தினார்.

இதன் மூலம் குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என உலகிற்கு உணர்த்தப் பட்டது.

(பீஷ்மரின் உரையாடல் தொடரும்)

(பீஷ்மரின் அறிவுரைகள் தொடரும்)