Friday, January 28, 2011

140-சாதலும், பிறத்தலும் இயற்கை



பீஷ்மர் தருமருக்கு உற்றார்,உறவினர் இறப்பின் போது ஆற்றியிருத்தல் எப்படி என்பதை விளக்க எடுத்துக் காட்டாக ஓர் அந்தணனுக்கும்,சேனஜித் என்னும் மன்னனுக்கும் நடைபெற்ற உரையாடலைக் கூறியது..

'முன்னொரு காலத்தில் சேனஜித் என்றொரு மன்னன் இருந்தான்.திடீரென அவன் மகன் இறந்ததால் தாங்க முடியாத துயரத்தில் மூழ்கி இருந்தான்.செய்வதறியாது திகைத்து யாரிடமும் ஒன்றும் பேசாது செயலற்று இருந்தான்.அப்போது அவனது நண்பனான ஒரு அந்தணன் அவனைக் காண வந்தான்.'மன்னனே, ஏன் இப்படி அறிவிழந்து இப்படி துயரப்படுகிறாய்? உண்மையில் உனக்காகவே நீ வருத்தப் பட வேண்டும்.ஏனெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் செத்துக் கொண்டிருக்கிறோம்.உண்மை இவ்வாறிருக்க இன்னொருத்தர் மரணத்திற்காக ஏன் துயரப் பட வேண்டும்?எல்லோரும் எங்கிருந்து வந்தோமோ அங்கேயே போக விரும்புகிறோம்.பிறப்பு எனில் இறப்பு யார்க்கும் உண்டே!' என்று கூறினான்.

உடன் மன்னன்..'நீர் துயரமின்றி இருக்கக் காரணம் என்ன? சாத்திர ஞானமா?தவமா?' என்று வினவினான்.

அந்தணன், 'மன்னனே..இந்த உலகத்தில் ஒழுக்கத்தில் உயர்ந்தவரோ,குறைந்தவரோ,மிகவும் தாழ்ந்தவரோ எந்த நிலையினராயினும் அவரவர் கர்மத்திற்கு ஏற்ப இன்ப துன்பங்களை அனுபவிப்பர்.இந்த உலகத்துப் பொருள்களில் எதுவும் என்னுடையதன்று.அப்படியே பிறருக்கும் உரியவை அல்ல.இந்தத் த்ளிந்த ஞானம் ஏற்பட்டதால், எனக்குத் துன்பமும் இல்லை..இன்பமும் இல்லை.கடலில் எங்கெங்கோ இருக்கும் கட்டைகள் ஒன்று கூடி பிரிவது போன்றது பிறப்பும், இறப்பும்.தாய்,தந்தை,மனைவி,மக்கள் எல்லாரும் இப்படித்தான் ஒன்று கூடுகின்றனர்.பிரிகின்றனர்.எப்படி உன் மகன் பிரிந்தானோஅப்ப்டியே அறிய முடியாமல் இறந்து விட்டான்.துன்பத்தின் இறுதியில் இன்பமும், இன்பம் மாறித் துன்பமும் இயற்கையாக ஒவ்வொருவர் வாழ்விலும் உண்டு.தற்போது துன்பத்தில் இருக்கும் நீ பிறகு இன்பத்தை அடைவாய்.பின் துன்பம்.பின்னர் இன்பம் இப்படி வண்டிச் சக்கரம் போல இன்ப துன்பங்கள் மாறி மாறி வந்துக் கொண்டே இருக்கும்.இன்ப, துன்பங்களுக்கு உடம்பே காரணமாகும்.ஓர் உயிர் எந்த உடலைச் சார்ந்து வினையைச் செய்ததோ அந்த வினையை அடுத்த பிறப்பில் அனுபவித்தே ஆக வேண்டும்.இந்த உயிர் ஓர் உடலைச் சார்ந்து பிறக்கிறது.சுற்றம் என்றும், நட்பு என்றும் சில காலம் சிலரோடு உறவு கொள்கிறது.பொருளாசையில் சிக்கி அந்த ஆசை நிறைவேறாமல் துன்பப்படுகிறது.உயிர் பல விதமான உறவு முறைகளில் சிக்கித் தவிக்கிறது.செக்கில் இடப்பட்ட பொருள் பிழியப் படுவது போலப் பிறவிச் சுழியில் அகப்பட்டுத் துன்புறுகிறது உயிர்.மனிதன் தன் உற்றார்,உறவினரைக் காப்பாற்றத் தகாத காரியங்களிலும் ஏடுபட்டுக் கர்மத்தைப் பெருக்கிக் கொள்கிறான்.அதற்குரிய பயனை அவன் மட்டுமே அனுபவிக்கிறான்.அவனது துன்பத்தை எப்படிப் பிறர் ஏற்க முடிய வில்லையோ அப்படியே அவன் கர்மத்தையும் பிறரால் ஏற்க முடியாது.அதை அவன் மட்டுமே அனுபவிக்க வேண்டும்.ஞானிகள் இதைத் தெளிவாக உணர்ந்து உணர்த்தியிருக்கிறார்கள்.உணராத அஞ்ஞானிகள் சம்சாரம் என்னும் சேற்றில் சிக்கிக் கொண்டு கரையேற முடியாமல் அல்லல் படுகின்றனர்.ஒவ்வொருவரும் புதிதாக கர்மங்களைச் சேர்க்காமலும், உயிரில் கலந்த கர்மத்தை உதிர்த்தும் இன்பம் காண வேண்டும்.சிறந்த அறிஞன் உலகப் படைப்பின் ரகசியத்தை அறிகிறான்.அறிவீனர்கள் இதனை அறிய மாட்டார்கள்.

இன்பமானது அறிஞன்,அறிவிலி,வீரன்,கோழை,ஆற்றல் மிக்கவன்,ஆற்றல் அற்றவன் என்ற பாகுபாடு அறிந்து ஒருவனை அடைவதில்லை.அவரவர் கர்ம வினைக்கு ஏற்ப வினைப் பயனை அடைகின்றனர்.முக்தியை அடைய விரும்புவோர் நன்மை ஒன்றையே செய்து இன்பம் அடைகின்றனர்.முக்திப் பாதையில் நாட்டம் இல்லாதவர் வேறு கர்மங்களைச் செய்து துன்புறுகின்றனர்.பொருள் மீது கொள்ளும் ஆசை துன்பத்திற்குக் காரணம் ஆகிறது.ஆசை அற்றவர்க்குத் துன்பம் இல்லை.மனிதப் பிறப்பில் அடையும் இன்பமும், சுவர்க்கத்தில் பெறும் இன்பமும் ஆசையற்றவன் பெறும் இன்பத்திற்கு ஈடாகா.

முற்பிறப்பில் செய்யப்பட்ட கர்மமானது தீமையோ நன்மையோ எதுவாயினும் செய்தவன் அறிவுள்ளவனோ, அறிவீனனோ எவராயினும் அதன் பயனை நுகர்ந்தே ஆக வேண்டும்.ஆதலால் பொருள் மீது பற்றுப் பாசங்களைத் துறத்தல் வேண்டும்.இல்லையேல் ஆசை பேராசை ஆகி, சினமாகி, பொறாமையாகிக் கடுஞ்சொல்லைத் தோற்றுவித்து, தீய செயலுக்கும் காரணமாகிறது.

ஒரு பொருள் எனது என்னும் எண்ணத்தோடு இருக்கும் போது, அது பிரிய நேர்ந்தால் துன்பம் ஏற்படுகிறது.அதுபோலவே உறவினர் பிரிந்தாலும் தாங்க இயலாத துன்பம் தோன்றுகிறது.நம் உயிர்க்கும் மற்றப் பொருள்களுக்கும் தொடர்பில்லை.நாம் செய்யும் தர்மமே நம்மை (உயிரை)த் தொடர்ந்து வரும்.அதுவே நாம் செல்லும் தேயத்திற்கு உறுதுணையாகும் என்ற தெளிவு பெற்றவர் பிறர் மரணத்திற்காக வருந்த மாட்டார்கள்.சாதலும்,பிறத்தலும் இயற்கை என்ற தெளிவு கொண்டு துயரத்தை விடுவாயாக' என்று அந்தணன் கூறினான்.

அதனைக் கேட்ட சேனஜித் மன்னன் அறிவுத் தெளிவு பெற்று உண்மை மார்க்கத்தை நாடி அமைதி அடைந்தான்" என்றார் பீஷ்மர்.

Monday, January 24, 2011

139-கொல்லாமையைப் பற்றி பீஷ்மர்





தருமர் பீஷ்மரை நோக்கி, 'கொல்லாமை சிறந்த அறம் என்று கூறுகின்றனரே!, எவ்வாறு? என வினவ, பீஷ்மர் விரிவாக விளக்குகிறார்.

கொல்லாமை நான்குவகை எனச் சான்றோர் கூறுவர்.ஒன்று தவறினாலும் அது கொல்லாமை ஆகாது.உலகில் உள்ள அனைத்து தருமங்களும் கொல்லாமையில் அடங்கி விடுகின்றன.மனத்தாலும், சொல்லாலும், செயலாலும் ஒருவனை பாவம் பற்றுகிறது.ஆகவே துன்பங்களை விட வேண்டும்.பிற உயிர்க்குத் துன்பம் செய்யக் கூடாது.இத்தகைய துன்பங்களும் நாங்கு வகை ஆகும்.நினைப்பதாலும்,சொல்வதாலும்,செயலாலும் இது குற்றமாகக் கருதப் படுகிறது.புலால் உண்ணாதவன் இம் மூன்று குற்றங்கள் அற்றவன் ஆகிறான்.மனம், சொல்,ருசி காணும் நாக்கு, இம்மூன்றிலும் இந்தக் குற்றங்கள் நிற்கின்றன என்று வேதம் உணர்ந்தவர்கள் கூறுவர்.அதனால் தவம் இருக்கும் ஞானிகள் புலால் உண்பதில்லை.

புலால் உணவில், தன் மகனது தசை போன்றது என்பது தெரிந்தும் புலாலைப் புசிக்கும் மனிதன் கீழானவனாகக் கருதப்படுகிறான்.தாய் தந்தையர் சேர்க்கையால் மகன் தன் வசம் இல்லாமல் பிறப்பது போல உயிர்க்குத் துன்பம் செய்பவன் தன் இச்சை இலாமலேயே பாவப் பிறவி எடுப்பது உறுதி.எப்போது நாக்கு சுவையை உணர்கிறதோ..அப்போது மனதில் ஆசை தோன்றுகிறது.புலால் உண்ணும் இயல்புடையவர்கள் ஏழிசையை அனுபவிக்க இயலாது.பிறரது செல்வத்தைக் கெடுப்பவரும்,புலாலை விரும்புபவரும் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியாது.புலாலை விரும்பிப் பேசுவது கூட அதனை உண்பது போன்ற குற்றமாகும்.இரக்க குணம் மிக்க சான்றோர் தம் உடலையே பிறர்க்குக் கொடுத்துச் சுவர்க்கம் சென்றனர்.இவ்வாரு கொல்லாமையின் மேன்மை கூறப்பட்டுள்ளது.

பின்னர் தருமர்..'கொல்லாமை என்பது தர்மங்கள் அனைத்திலும் மேலானது என்றீர்..ஆனால் சிரார்த்தங்களில் முன்னோர்க்குப் புலால் விருப்பத்தைத் த்ரும் என்று முன்னர் கூறியுள்ளீர்..இது முரணாக உள்ளதே..புலாலை விடுதல் என்னும் தருமத்தில் எங்களுக்கு ஐயம் உண்டாகிறது.புலால் உண்பதால் ஏற்படும் குற்றம் யாது?புலால் உண்ணாமையால் ஏற்படும் நன்மை யாது?கொன்று உண்பவன், பிறர் கொடுத்ததை உண்பவன்,விலைக்காகக் கொல்பவன்,விலைக்கு வாங்கி உண்பவன் ஆகிய இவர்களுக்கு நேரும் குற்றங்கள் யாவை? இவற்றையெல்லாம் விளக்க வேண்டுகிறேன்' என்றார்.

பீஷ்மர் சொல்லலானார்..'அழகான உடல் உறுப்புகளையும்,நீண்ட ஆயுளையும்,துணிச்சலையும்,ஆற்றலையும்,நினைவாற்றலையும் அடைய விரும்புபவர்கள் புலால் உண்பதைத் தவிர்க்க வேண்டும்.இது குறித்து ரிஷிகளின் முடிவைக் கேள்.'புலால் உண்ணாமலும்,பிற உயிர்களைக் கொல்லாமலும்,கொல்லத் தூண்டாமலும் இருக்கும் ஒருவன் பிராணிகளின் அன்பன்' என்று பதினாங்கு மனுக்களுள் ஒருவரான ஸ்வயம்பு மனு சொல்லியிருக்கிறார்.

புலால் உண்ணாதவனை சாதுக்களும் போற்றுகின்றனர்.'எவன் தன் தசையைக் கொண்டு பிறரை வாழவைக்க நினைக்கின்றானோ,அவன் நம்பத்தக்கவன்' என்று நாரதர் கூறியிருக்கிறார்."ஊனையும் கள்ளையும் விடுபவன் தானம்,தவம்,யாகங்கள் செய்வதால் பெறும் பயனைப் பெறுகிறான்' என்று பிரகஸ்பதி சொல்லியிருக்கிறார்.இட்விடாமல் நூறு ஆண்டுகள் அஸ்வமேத யாகம் செய்வதும்..புலால் உண்ணாமல் இருப்பதும் சமம் என்பது என் கருத்து.

புலால் உண்ணும் பழக்கத்தை எவன் ஒருவன் விட்டு விடுகிறானோ அவன் வேதங்களாலும் யாகங்களாலும் பெற முடியாத நன்மையை அடைவான்.ஏதோ ஒரு காரணத்தால் புலால் உண்ண நேர்ந்தாலும் பிராயச்சித்தமாகக் கடும் தவம் புரிய வேண்டும்.சுவை கண்டவன் புலாலை விடுவது கடினமானது என்பது உண்மையாயினும், எல்லா உயிர்களுக்கும் அபயம் கொடுப்பதாகிய இந்த் புலால் உண்ணாமை என்னும் விரதத்திற்கு இணை ஏதுமில்லை.எவன் எல்லா உயிர்களுக்கும் அபயம் அளிக்கின்றானோஅவன் உலகுக்கே உயிர் அளிக்கிரான் என்பதில் ஐயமில்லை.மேலோர்கள் இதனையே முதன்மையான அறம் என்று போற்றுகின்றனர்.அறிவும், தூய மனமும்உள்ளவன் தன்னைப் போலவே எல்லா உயிர்களையும் நேசிப்பான். எறியப்பட்ட தடியால் புல் அசையும் போதும் அதற்கும் பயம் இருக்கிறது என்றால், விரைவாகக் கொல்லப்படும் உயிர்கள் படும் துன்பத்தைச் சொல்லவா வேண்டும்? ஒரு தீமையும் செய்யாத ஒரு விலங்குக்கு நோய் இல்லாமலேயே புலால் உண்ணும் புல்லர்களால் மரண பயம் இருக்கிறது என்பதை எண்ணுகையில் துக்கம் உண்டாகிறது.எனவே புலால் உண்பதைத் தவிர்த்தல் தருமத்திற்குக் காரணமாகிரது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.கொல்லாமைதான் மிக உயர்ந்த தருமம்..கொல்லாமையே மிக உயர்ந்த தவம்..கொல்லாமையே மிக உயர்ந்த வாய்மை!

புல்லிலிருந்தோ,கல்லிலிருந்தோ,கட்டையிலிருந்தோ புலால் கிடைப்பதில்லை.ஒரு உயிரைக் கொன்றால் தான் கிடைக்கும்.ஆகவே அதை உண்பது பாவம் ஆகும்.புலால் உண்ணாதவனுக்கு அச்சம் இல்லை.அவன் ஏற முடியாத மலை மீது அஞ்சாமல் ஏறுவான்.இரவிலும்,பகலிலும் அவனுக்குப் பயம் இல்லை.பிறர் ஆயிதத்தால் தாக்க வந்தாலும் அவன் அஞ்ச மாட்டான்.அவனைக் கொடிய விலங்குகளும் பாம்பும் ஒன்றும் செய்யாமல் விலகிச் செல்லும்.அவன் அஞ்ச வருவது எதுவும் இல்லை.புலால் உண்ணாமல் இருப்பது செல்வத்தைத் தரும்.புகழைத் தரும்.நீண்ட ஆயுளைத் தரும்.பின் சுவர்க்கத்தைத் தரும்.

புலால் உண்பவன், கொல்பவன் போலவே பாவம் செய்கிறான்.விலைக்கு வாங்குபவன் பொருளால் கொல்கிறான்.சாப்பிடுபவன் உண்பதால் கொல்கிறான்.ஒரு விலங்கைக் கொண்டு வருபவன்,அதனை ஒப்புக் கொள்பவன்,கொல்பவன்,விற்பவன்,வாங்குபவன்,சமைப்பவன்,புசிப்பவன் இவர்கள் அனைவரும் கொலையாளிகள்தாம்.

இறுதியாகக் கொல்லாமையின் சிறப்பை உனக்கு உணர்த்துகிறேன்.கொல்லாமையே உயர்ந்த தானம்.கொல்லாமையே சிறந்த நண்பன்.கொல்லாமையே யாகங்கள் அனைத்திலும் சிறந்தது.கொல்லாமை மேற்கொள்பவன் உலக உயிர்களுக்குத் தாயாக விளங்குகிறான்.தந்தையாகப் போற்றப்படுகிறான்.ஆண்டுகள் பல நூறு ஆனாலும் கொல்லாமையின் பெருமையை முற்றிலும் உரைக்க முடியாது' என்று கூறி முடித்தார் பீஷ்மர்.

Thursday, January 13, 2011

138-சுவர்க்க நரகங்களில் பிறப்பது

தருமர் பீஷ்மரை நோக்கி..'எத்தகைய உயிர் சுவர்க்கத்தை அடைகிறது? எத்தகைய உயிர் நரகத்தை அடைகிறது? உடலைக் கட்டைப் போல போட்டுவிட்டுப் போகும் உயிரைத் தொடர்வது எது? எனக்கு இவற்றைப் பற்றி விளக்க வேண்டும்' எனக் கேட்க.அந்நேரத்தில் பிரகஸ்பதி அங்கு வர, பீஷ்மர் தருமரை நோக்கி 'இந்தக் கடினமான கேள்விக்குப் பிரகஸ்பதி விடையளிப்பார்.உலகில் இவரை விடச் சிறந்த அறிவாளி யார் இருக்கிறார்." என்று சொன்னார்.உடனே தருமர் பிரகஸ்பதியை வணங்கி 'எல்லாம் தெரிந்தவரே! உயிருக்குத் துணை யார்? தந்தையா,தாயா,தாரமா,பிள்ளையா,ஆசாரியரா,சுற்றமா? கட்டைப் போல உடலைப் போட்டுவிட்டு உயிர் பிரியும் போது அதற்குத் துணை யார்?' என்று கேட்டார்.
பிரகஸ்பதி..'மனிதன் ஒருவனாகவே இறக்கிறான்.சுவர்க்கத்திற்கோ,நரகத்திற்கோ போகிறான்.தந்தை,தாய்,சுற்றத்தார் யாரும் அவனைப் பின் தொடர்வதில்லை.தருமம் ஒன்றுதான் அவனுடன் செல்லக் கூடியது.ஆகையால் எப்போதும் ஒருவன் தருமத்தில் நாட்டம் உள்ளவனாக இருக்க வேண்டும்" என்றார்.
தருமர் பிரகஸ்பதியிடம் மேலும் வினவினார்.'ஆன்மா மறைந்து கண்ணில் படாமல் போகிறதே.தருமம் அதை எப்படித் தொடர்கிறது?'
பிரகஸ்பதி..'அப்பு,தேயு,ஆகாயம்,வாயு, பிருதிவி ஆகிய இவை எப்போதும் தருமத்தைப் பார்த்துக் கொண்டுள்ளன.இரவும்,பகலும் சாட்சிகளாக விளங்கிகின்றன.அந்த உயிரை மேலே குறிப்பிட்ட அப்பு முதலானவற்றுடன் தருமமும் பின் தொடர்கிறது.மேலே சொன்னவை தோல்,எலும்பு,ரத்தம்,சுக்கிலம்,சோணிதம் ஆகியவற்றையும் உயிர் பிரிந்த் உடலையும் விட்டு நீங்குகின்றன.அந்த உயிர் தருமத்திற்கு ஏற்பப் 'பிறவி' எடுக்கிறது" என்றார்.
தருமர், 'அறிவில் நிகரற்றவரே! கொல்லாமை,தியானம்,தவம் இவற்றில் சிறந்தது எது?' என வினவ பிரகஸ்பதி கூறுகிறார்.
'இவை மூன்றும் தருமத்தின் வழிகளே!.என்றாலும்கொல்லாமையே அனைத்திலும் சிறந்தாகப் போற்றப்படுகிறது.மற்ற உயிர்களையும் தன் உயிர் போல் கருதுகிற ஒருவன் மறுமை இன்பம் பெறுவான்.தனக்கு எது தீங்கு எனத் தோன்றுகிறதோ அந்தத் தீங்கைப் பிறருக்குச் செய்யக் கூடாது.ஒருவன் மற்றவரிடத்தில் எப்படி நடந்து கொள்கிறானோ அப்படித்தான் மற்றவர்களும் அவனிடத்தில் நடந்து கொள்வார்கள்' என்று கூறி, பிரகஸ்பதி மறைந்தார்.

Tuesday, January 11, 2011

137-பலமுள்ள பகைவன் விரோதமானால்...

தருமர் பீஷ்மரிடம் 'பலமுள்ள பகைவனிடம் விரோதம் கொண்டால், எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என வினவ, பீஷ்மர், இரு இலவ மரத்திற்கும், நாரதருக்கும் நடந்த உரையாடலை எடுத்துக் காட்டாக சொல்ல ஆரம்பித்தார்..

முதலில் பீஷ்மர் இமய மலைக்கும், காற்றுக்கும் நடந்த உரையாடலை விளக்கினார்.

'இமயமலையில் மிகப் பெரிய இலவ மரம் ஒன்று இருந்தது.அது பருத்த அடி மரத்தையும், நிறைந்த கிளைகளையும், தழைத்த இலைகளையும், உறுதி மிக்க வேர்களையும் கொண்டு இருந்தது.அம்மரத்தில் பூக்களும், கனிகலும் மிகுதியாக இருந்தன.அவற்றைத் தின்ன வரும் கிளிகலீன் அழகு அனைவரையும் கவரும்.வழிப்போக்கரும்,வணிகரும் அதன் நிழலில் எப்போதும் தங்கி இருப்பர்.ஒரு நாள் நாரதர் அங்கு வந்தார்.அதன் தோற்றத்தைக் கண்டு மகிழ்ந்தார். அந்த இலவமரத்தை நோக்கி , 'அனைவரையும் கவரும் இலவ மரமே! உன்னைக் கண்டு நான் வியப்படைகிறேன்.பறவைகளும், விலங்குகளும் உன்னை நாடி வருகின்றன.பெருங்காற்றுகூட உன்னை ஒன்றும் செய்ய முடியவில்லை.ஒரு கிளை கூட முறிந்ததில்லையே..வாயு பகவான் உன் நண்பனா? பெரிய பெரிய மலைச் சிகரங்களையும் சிதற அடிக்கும் வாயு உன்னிடம் நெருங்காததற்குக் காரணம் உண்டா/ நீ பூத்துக் குலுங்கும் காலத்தில் யானைகள் கூட்டம் கூட்டமாய் மணம் நாடி வருகின்றன.பல விலங்குகளுக்கு இருப்பிடமான மேரு மலை போல காணப்படுகிறாய்.முற்றும் துறந்த முனிவர்களும் உன்னை நாடி வருகின்றனர்.உனது இடத்தைத் தேவர் உலகத்துக்கு இணையாகக் கருதுகிறேன்' என்று கூறினார்.

நாரதர் மேலும்,'உலகத்திற்கு அச்சம் தரும் வாயு பகவான் உனக்கு உறவினன் அல்லது நண்பன் என்னும் காரணத்தால் உன்னை ஒன்றும் செய்யவில்லை.வாயுவிற்கு நீ எப்போதும் கீழ் படிந்து நடக்கிறாய் என நினைக்கிறேன்.அதனால் தான் வாயு உன்னை மட்டும் ஒன்றும் செய்வதில்லை.ஓ! இலவ மரமே, ஏதோ காரணத்தால் வாயு பகவானால் நீ பாதுகாக்கப் படுகிறாய் என்பதில் ஐயமில்லை.அதனால் தான் தைரியமாக ஓங்கி நிற்கிறாய்' என்றார்.அதற்கு இலவ மரம் மறுப்புத் தெரிவித்தது.

நாரதரே! வாயு என் உறவினனுமில்லை ..நண்பனும் இல்லை.ஆயின் என் ஆற்றல் கண்டு வாயு அஞ்சுகிறது.எனது பலத்தில் சிறு பகுதிக்குக் கூட வாயுவின் பலம் ஈடாகாது.சிறியதும், பெரியதுமான மரங்களை எல்லாம் கொடூரமாக வீழ்த்திக் கொண்டு வரும் வாயுவை நான் என் பலத்தால் அடக்கி விடுகிறேன்.மாமுனிவரே..மிகவும் சினம் கொண்டால் கூட வாயுவினால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என ஆத்திரத்துடன் கூறியது.

உடனே நாரதர் இலவ மரத்தை நோக்கி 'உனது கருத்துச் சரியன்று.பயங்கரமானது.வாயுவின் பலத்துக்கு இணையாக யாருடைய பலமும் இல்லை.எமனும் இந்திரனும் கூட ஆற்றலில் வாயுவுக்கு இணையாகார்.உலகில் உள்ள எல்லாப் பொருள்களுக்கும் அசைவையும், உயைரையும் கொடுக்கும் மகாப் பிரபு ஆகிறான் வாயு.வாயு எங்கும் சஞ்சரித்தால் தான் உயிரினங்கள் எங்கும் உலவ முடியும்.அதனால் வணங்கத் தக்க தெய்வம் வாயு.பணிந்து வணங்குவதற்கு மாறாக இழிவாக அல்லவா பேசுகிறாய்.நீ வலிமை அற்றவன்.பொறாமையுடையவன்.உனது பேச்சு எனக்கே சினத்தை உண்டாக்குகிறது.மிகச் சிறந்த மரங்களான சந்தனம்,தேக்கு,தேவதாரு போன்ற மரங்கள் கூட இப்படி வாயுவை பழித்ததில்லை.இப்போதே சென்று வாயுவிடம் உன்னைப் பற்றிக் கூறுகிறேன்' என்றார்.

சொன்னபடியே வாயு பகவானிடம் 'இமய மலையில் மிகப் பிரம்மாண்டமான இலவ மரம் இருக்கிறது.அது தங்களைக் கேவலமாகப் பேசுகிறது.அது சொன்னதைச் சொல்லக் கூட நா கூசுகிறது.தங்களை விட சிறந்தவர் யாருமில்லை.நீர் சினத்தில் யமனுக்கு இணையாவர்.இதனை நான் அறிந்துள்ளேன்.ஆயினும் இலவ மரம் தங்க்களை இழிவாகப் பேசுவதை நினைக்கும் போதுதான் வருத்தமாக இருக்கிறது' என்று கூறினார்.

இதனைக் கேட்ட வாயு பகவான் கோபமடைந்தார்.விரைந்து இலவ மரத்திடம் சென்று..'இலவமரமே...என்னை யாரென்று நினைத்தாய்.நாரதரிடம் என்னைப் பற்றி இழித்தும் பழித்தும் பேசினாயாமே!உன்னை நான் நன்கு அறிவேன்.நான்முகன் உலகைப் படைத்ததும் உன்னிடம் இளைப்பாறினார்.அதனால் உன்னை அழிக்காமல் விட்டு விட்டேன்.இதோ என் வலைமையைக் காட்டுகிறேன் பார்' என்றார்.

இது கேட்டு மரம் ஏளனமாக சிரித்தது..'வாயுவே ..உன் சினத்தைக் காட்டில் காட்டு.என்னிடம் உன் கோபம் செல்லாது.உன்னைவிடப் பலம் வாய்ந்த நான் ஏன் உன்னைக் கண்டு அஞ்ச வேண்டும்? புத்திமான் பலவானாவான்..என்பது பழமொழி.கேவலம் உடல் பலம் உள்ளவர்களை யாரும் போற்றுவதில்லை' என்றது.

வாயுபகவான், 'உடல் வலைமையை நாளைக் காண்பாய் " என்று கூறிச் சென்றார்.நேரம் ஆக ஆக இலவ மரத்திற்குப் பயம் உண்டாயிற்று.'நாரதரிடம் நான் உரைத்தவை அத்தனையும் பொய்.மற்ற மரங்களை விட நான் ஒன்றும் அதிக பலம் உள்ளவன் அல்ல.புத்தியில் மற்றவரை விடச் சிறந்து விளங்குகிறேன்.இதே புத்தியைக் கொண்டு வாயுவிடம் இருந்து தப்பித்துக் கொள்வேன்' என்று கருதிற்று.

அதன்படி தன் கிளைகளையும்,இலைகளையும் கீழே உதிர்த்துவிட்டது.வாயு எப்போது வரும் என எதிர் நோக்கியிருந்தது.

இந்நிலையில் வாயு பகவான் பேரிரைச்சலுடன் எல்லா மரங்களையும் வீழ்த்திக் கொண்டு இலவ மரம் இருக்கும் இடத்தை அடைந்தார்.இலவ மரத்தின் அவல நிலையைக் கண்டு அதனை நோக்கி,'நான் செய்ய நினைத்ததையெல்லாம் நீயே செய்துக் கொண்டாய்.என்னே உன் அறிவீனம்' என்று எள்ளி நகையாடினார்.

இது கேட்டு இலவ மரம் நாணித் தலை குனிந்து நின்றது.

தருமரே! இது போலவே பலமற்றவர்கள் பலசாலிகளை எதிர்த்தால் இலவ மரத்தின் கதிதான் ஏற்படும்' என்றார் பீஷ்மர்.

Thursday, January 6, 2011

136-பகைவரிடம் விழிப்பாய் இருக்க வேண்டும்

தருமர் பீஷ்மரிடம்.."பிதாமகரே! யாரிடமும் நம்பிக்கை வைக்கக் கூடாது எனக் கூறினீர்..அப்படி இருப்பது எப்படி சாத்தியமாகும்?' என வினவ பீஷ்மர் விளக்கினார்.

'ஒரு காலத்தில் பிரமதத்தன் என்னும் அரசன் ஆட்சி செய்து வந்தான்.அவனது அரண்மனையில் பூஜனி என்னும் குருவி நெடுங்காலமாக இருந்து வந்தது.அது பறவையாக இருந்த போதும் வேடனின் பண்புகளுடன் இருந்து வந்தது.எதேனும் பறவை, எங்கேனும் ஒலி எழுப்பினால், உடனே அது எந்தப் பறவை என்று சொல்லும் அறிவு மிக்கது அது.

அந்தக் குருவி அந்த இடத்திலேயே ஒரு அழகான குஞ்சைப் பெற்றெடுத்தது.அதே சமயம் அரசிக்கும் ஒரு ஆண் குழ்ந்தை பிறந்தது.பூஜனி என்னும் அக்குருவி இரு குழந்தைகளுக்கும் நெடுந்தூரம் சென்று வலிமை தரும் பழங்களைக் கொண்டு வந்து தரும்.அப்பழங்களை உண்டு வளர்ந்த அரசகுமரன் வலிமையுடன் திகழ்ந்தான்.ஒருநாள் அந்தக் குழந்தை, யாரும் இல்லாத போது குருவிக் குஞ்சைக் கொன்று விட்டது.பூஜனிக் குருவி வழக்கம் போல பழங்கலைக் கொண்டு வந்தது.தன் குஞ்சு கொல்லப் பட்டுத் தரையில் கிடந்ததைக் கண்டு கதறித் துடித்தது.'தகாதவரிடத்து நட்புக் கூடாது.அவர்களிடம் அன்பு கிடையாது.நல்ல எண்ணமும் கிடையாது.காரியம் முடிந்ததும் அவர்களைக் கை விட்டு விடுவர்.நன்றி கொன்ற இந்த அரசகுமாரனுக்குச் சரியான பாடம் புகட்டுவேன்.பழி வாங்குவேன்' என்று சபதம் எடுத்துக் கொண்டது.உடனே அரச குமாரனின் கண்களைக் கூரிய நகங்களால் பறித்து எடுத்துக் கொண்டு விண்ணில் பறந்தது.'இவ்வுலகில் செய்கின்ற பாவம் உடனே செய்தவனைச் சாரும்.செய்யப்பட்ட பாவத்தின் பயன் செய்தவனிடத்தில் சிறிதும் காணப்படாமல் போனாலும், அவனது சந்ததியைச் சார்ந்து துன்பத்தைத் தரும்' என்று சொல்லியது பூஜனி.

தன் மைந்தனின் கண் பார்வை குருவியால் பறிக்கப் பட்டதை உணர்ந்த அரசன்,'மைந்தனின் செயலுக்குத் தண்டனை கிடைத்து விட்டதாகக் கருதி, பூஜனியை நோக்கி..'பூஜனி என் மகன் செய்த தீங்குக்கு நீ தக்க தண்டனை வழங்கி விட்டாய்.இரண்டும் சமமாகி விட்டன.நடந்ததை மறந்து இங்கேயே தங்கி விடு' என்றான்.

அது கேட்ட குருவி 'ஒருமுறை தவறு நேர்ந்த பிறகு அங்குத் தங்கி இருப்பதை சான்றோர் ஏற்பதில்லை.எனவே நான் இந்த இடத்தை விட்டுச் செல்வதே பொருத்தமாகும்.வெளிப்படையாக விரோதம் ஏற்பட்ட இடத்தில் நன்மொழிகள் கூறிப் பயனில்லை.இனி நம்பிக்கை ஏற்படாது.பசப்பு வார்த்தைகளால் ஒரு பயனும் இல்லை.நட்பைக் கெடுப்பவரிடம் நம்பிக்கை கொள்ளாது இருப்பதே இன்பமாகும்.உறவினருள் தாயும்,தந்தையும் உயர்ந்தவர் ஆவர்.மகன் விதையைப் போன்றவன்.நம் கையில் பணம் உள்ளவரைதான் நண்பர்கள் நம்மை நாடுவர்.ஆதலால் நமது இன்ப துன்பங்களை அனுபவிப்பது ஆத்மா ஒன்றே! ஒருவருக்கொருவர் பகை கொண்டபின், அறத்தில் நாட்டமுடைய நெஞ்சம் வைராக்கியம் அடைந்தபின் சமாதானம் என்ற எண்ணமே வரக் கூடாது.மறுபடியும் மரியாதைக் கிடைத்தாலும் அந்த இடத்திற்குப் போகக் கூடாது' என்று உரைத்தது.

'குருவியே! ஒருவன் செய்த தீவினைக்குப் பிராயச்சித்தம் செய்வானாகில் அந்தக் குற்றம் அதோடு போயிற்று! எனவே இங்கு தங்கி இரு' என்று கேட்டுக் கொண்டான் அரசன்.அது கேட்ட குருவி மன்னனைப் பார்த்து 'ஒருமுறை தீங்கு நேர்ந்து மனம் மாறிய பின் மீண்டும் ஒன்று பட வாய்ப்பில்லை.இருவர் உள்ளத்திலும் தாம் செய்த தீங்கு உறுத்திக் கொண்டே இருக்கும்' என்று கூறிற்று.

பிரமதத்தன், 'பூஜனி, பழி வாங்கிய பிறகு பகை மாறும்.சாந்தி ஏற்படும்.குற்றம் செய்தவனும் அவன் பாவத்தை அனுபவிக்க நேராது.ஆதலால் இருவருக்கும் நட்பு உண்டாகலாம்' என்றான்.

குருவி 'இப்படிச் சாந்தி ஏற்படாது.எதிரி தன்னை சமாதானப்படுத்தி விட்டான் என்று கருதி அவனை நம்பவே கூடாது.ஆகவே இனி இங்கு நான் என் முகத்தைக் காட்டக் கூட விரும்பவில்லை' என்று கூறிற்று.'ஓ பூஜனியே, நாயைக் கொன்று தின்று வாழும் கீழோன் நாயையே வளர்த்து வருகிறான்.அவனிடம் நாளடைவில் நாய் நட்பாகி விடுகிறது.அதுபோலவே வைராக்கியத்துடன் இருக்கும் இருவர் இணைந்து வாழ்வாரானால் வைராக்கியம் மாறி நாளடைவில் நட்பு நிலைத்து விடும்' என்று கூறினான் பிரமதத்தன்.

இதுகேட்ட பூஜனி "ஓ..மன்னனே..வைராக்கியம் ஐந்து காரணங்களால் ஏற்படும்.ஒன்று-பெண்டிர் காரணமாகத் தோன்றும்.இரண்டு-நிலம்,தோட்டம்,வீடு முதலான பொருள்களூக்காக ஏற்படும்.மூன்று-வாய்ப்பேச்சு காரணமாக எழும்,நான்கு-பிறவியிலேயே தோன்றுவது ஐந்து-எப்போதோ நேர்ந்த குற்றத்திற்காக உண்டாகும்.இவற்றில் எவ்விதத்தில் வைராக்கியம் ஏற்பட்டாலும்-தவறு செய்தவன் மன்னனே ஆனாலும் அவனிடம் நம்பிக்கை வைக்கக்கூடாது.வைராக்கியம் என்னும் தீயை நன்மொழிகளாலோ,சாத்திரத்தாலோ போக்க முடியாது.அத்தீயை யாராலும் அணைக்க முடியாது.ஆகவே இனி உன்னை நம்ப மாட்டேன்" என்றது

அது கேட்ட பிரமதத்தன் பூஜனியை நோக்கி 'குருவியே! எல்லாம் காலத்தின் செயல்கள் தான்.நீயோ,நானோ எதற்கும் காரணமாவதில்லை.மனிதன் காலத்தால் பிறக்கிறான்.காலம் முடிந்ததும் இறக்கிறான்.இதுபோலத் தான் எல்லாம் காலாகாலத்தில் நிகழ்கின்றன.தீயானது விறகை எரிப்பது போலக் காலம் எல்லாவற்றையும் எரிக்கிறது.தோற்றுவிக்கிறது - மறைக்கச் செய்கிறது - மறக்கச் செய்கிறது.எனவே ஒருவருக்கு ஏற்படும் நன்மை தீமைகளுக்கு வேறு யாரும் காரணமில்லை.காலம்தான் காரணம்.இதை புரிந்து கொண்டு நட்போடு இரு.நீ செய்ததை நான் பொறுத்தது போல், என் மகன் செய்ததை நீயும் பொறுத்துக் கொள்' என்றான்.

ஆனால், பூஜனி விடவில்லை.'எல்லாம் காலம்தான் என்றால், எல்லாரும் ஏன் இப்படி தவிக்கிறார்கள்? அனைத்திற்கும் காலமே காரணம் என்பது உண்மையானால் நோய் உற்றவர் ஏன் மருத்துவரை நாட வேண்டும்? காலத்தின் விளைவு என்றால் உற்றார்,உறவினர் இழப்புக்கு ஏன் அழ வேண்டும்? காலமே காரணமானால் புண்ணியம் சம்பாதிக்க யாருக்குத் தான் மனம் வரும்? என் குழந்தையைக் கொன்ற உன் மகனை நான் துன்புறுத்தினேன்.இதற்காக என்னை நீ துன்புறுத்துவாய்..கொல்வாய்..

மனிதர்கள் உணவுக்காகப் பறவைகளைக் கொல்கின்றனர்.இது தவிர வேறு நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை.துக்கம் பிறப்பானாலும் இறப்பானாலும் உண்டாகிறது என வேதங்கள் கூறுகின்றன.எல்லாருக்கும் உயிரின் மீது ஆசை உண்டு.அதுபோலவே மனைவி மக்கள் சுற்றத்தார் ஆகியோரிடமும் ஆசை ஏற்படுகிறது.முதுமை ஒரு துக்கம்.பொருள் இழப்பு ஒரு துக்கம்.வேண்டாத இடத்தில் இருப்பது ஒரு துக்கம்.இதுபோலவே வைராக்கியத்தால் ஏற்படும் துக்கமும், பெண்களால் ஏற்படும் துக்கமும் உண்டு.இறந்த மகனால் உண்டாகும் துக்கத்தை மறக்கவே முடியாது.பிறருக்கு ஏற்படும் துக்கத்தைக் கண்டு நாமும் துக்கப் படுகிறோம்..மன்னா..நீ எனக்கு இழைத்த கொடுமையும் நான் உனக்கு செய்த துன்பமும் நெடுநாள் ஆன பிறகும் அழியா.வைராக்கியம் ஏற்பட்டபின் நெருங்கி வாழ நினைப்பது உடைந்த மட்கலம் ஒன்றாவது போல ஆகும்'

பகைவர் வார்த்தைகளில் நம்பிக்கை கொள்வோர் புற்களால் மூடப்பட்ட குழியில் வீழ்ந்து துன்புறுவது போல் துன்புறுவர்.

ஒருவனுக்கும் கெடுதி செய்யாது இருக்க வேண்டும்.கெடுதி செய்த பின் நம்பிக்கக் கொள்ளக் கூடாது.நம்பினால் அழிவி நிச்சயம்' என்றது பூஜனி.

பிரமதத்தன் 'நம்பிக்கையின்றி உலகில் ஒன்றும் சாதிக்க முடியாது.எந்த செயலையும் செய்ய இயலாது.பொருளையும் சேர்க்க முடியாது.ஒருவன் எப்போதுமொருவிதமான சந்தேகத்தோடும் பயத்தோடும் இருந்தால் அவனை உயிர் வாழ்பவனாகவே கருத முடியாது.அவனை செத்தவனாகவே உலகம் கருதும்.எனவே என்னிடம் நம்பிக்கையோடு வந்திரு' என்றான்.

ஆயினும் பூஜனியின் மனம் மாறவில்லை.'மன்னா..புண்பட்ட காலுக்கு என்னதான் பாதுகாப்பான ஏற்பாடுகளைச் செய்துக் கொண்டு ஓடினாலும் கூட அக்காலுக்கு வலி உண்டாகும்.துன்பம் உள்ள கண்ணால் காற்றை எதிர்த்துப் பார்த்தால் துன்பம் அதிகமாகும்.ஒருவன் அறிவு கெட்டு தீய வழியில் சென்றால் அழிவு நிச்சயம்.தெய்வமும்,முயற்சியும் ஆகிய இரண்டில் ஒருவனுக்கு உதவுவது முயற்சியே!இயல்பாக முயற்சி இல்லாதவன் வாழ்க்கையில் தோல்வியையே சந்திப்பான்.கல்வி,தூய்மை,திறமை,ஆளுமை,வைராக்கியம் ஆகிய ஐந்தும் ஒரு சேரக் கருதத் தக்கன.மனிதனுடைய சொத்துகள் முயற்சியால் வருபவை.முயற்சியுடையவன் இவற்றைப் பெற்று இன்பத்தை அனுபவிக்கிறான்.பிறரைக் கண்டு அவன் பயப்படமாட்டான்.அறிவுடையவன் செல்வன் நாளாவட்டத்தில் பெருகும்.

சிலர் தம் மனைவி,பிள்ளைகள்,உறவினர் ஆகியோரிடத்து மிகுந்த பாசம் கொண்டு துன்புறுவர்.அறிவாளிகள் அதிகம் பாசம் கொள்ளாத காரணத்தால் துன்பமுறுவதில்லை.மேலும் அறிஞர்கள் தீய நெறியிலிருந்தும்,அவமரியாதை உள்ள இடத்திலிருந்தும் விலகியே இருப்பர்.ஆதலால் நான் வேறு இட செல்கிறேன்.இங்கு இருக்க எனக்கு விருப்பமில்லை' என்று கூறி அப்பறவை மன்னனிடம் அனுமதி பெற்றுப் பறந்து சென்றது.