Tuesday, February 24, 2009

22 - ராஜசூயயாகம்

சக்கரவர்த்தியாகிவிட்ட யுதிஷ்டிரர் தலைமையை எல்லோரும் மகிழ்ச்சியுடன் ஏற்றனர்.தம்பியர் நால்வரும்..நான்கு திக்குகளிலும் சென்று மன்னர்களின் நட்பைப் பெற்றனர்.

மாமுனிவர்களும்...பீஷ்மரும்.துரோணரும்,கௌரவரும், இந்திரபிரஸ்தம் வந்தனர்.கண்ணபிரானிடம்..வெறுப்பு கொண்டிருந்த சிசுபாலனும் வந்திருந்தான்.இந்திரபிரஸ்தம்..ஒரு சொர்க்கலோகம் போல
திகழ்ந்தது.

நாரதர்..சொன்னாற்போல..ராஜசூயயாகம் இனிதே நடந்தது.துரியோதனன் மனதில் பொறாமைத் தீ வளர்ந்தது.

வந்தவர்களுக்கு...மரியாதை செய்யும்..நிகழ்ச்சி ஆரம்பித்தது.யாருக்கு முதல் மரியாதை செய்வது என்ற கேள்வி எழுந்தது.பீஷ்மர்..மற்றும் சான்றோர்கள் கூடி ஆலோசித்து..கண்ணனுக்கு..முதல் மரியாதை என்று தீர்மானிக்க...அதன்படி..சகாதேவன் கண்ணனுக்கு பாத பூஜை செய்தான்.

இதையெல்லாம்..பார்த்துக்கொண்டிருந்த சிசுபாலன்...தன் அதிருப்தியைக் காட்ட..கண்ணனை பலவாறு இகழ்ந்தான்.ஆத்திரத்தில் பீஷ்மரையும்,யுதிஷ்டிரரையும் புண்படுத்தினான்.ஆடு..மாடுகளை மேய்க்கும் யாதவர் குலத்தைச் சேர்ந்தவன் என்றும்..இடையன் என்றும் கண்ணனை ஏசினான்.கங்கை மைந்தன் பீஷ்மரை வேசிமகன் என்றான்.(கங்கையில் பலரும் நீராடுவதால்..கங்கையை பொதுமகள் என்று ஏசினான்)

குந்தியின் மந்திர சக்தியால்..யமதர்மனை நினைத்து..பெற்ற மகன் யுதிஷ்டிரர் என்பதால்..அவரும் சிசுபாலனின் தாக்குதலுக்கு ஆளானார்.

சிசுபாலனின் அவமானங்களை பொறுத்துக்கொண்டிருந்த கண்ணன்..ஒரு கட்டத்தில்..அவனைக் கொல்லும் காலம் நெருங்கி வருவதை உணர்ந்து..அவன் மீது சக்கராயுதத்தை செலுத்தினார்.அது சிசுபாலனின் தலையை உடலிலிருந்து அறுத்து வீழ்த்தியது.அவன் மேனியிலிருந்து ஒரு ஒளி புறப்பட்டு..கண்ணனின் பாதங்களில் வந்து சேர்ந்தது.

சிசுபாலன் சாப விமோசனம் பெற்றான்.

Sunday, February 22, 2009

21.ஜராசந்தன் மறைவு

காண்டவவனம் தீப்பற்றி எரிந்து சாம்பல் ஆனாலும்..மயன் என்னும் அசுர சிற்பி மட்டும் தப்பிப்பிழைத்தான்.அவன் அர்ச்சுனனுக்கு தகுந்த கைமாறு செய்ய விரும்பினான்.அர்ச்சுனனும்.கண்ணனும்..செய்யும் உதவிக்கு கைமாற்றாக எதுவும் ஏற்பதில்லை என்றனர்.

மயன்..யுதிஷ்டிரரை அணுகி "தான் ஒரு அசுர சிற்பி என்றும்..தன்னால் உலகமே வியக்கும் ஒரு சபையை நிறுவ முடியும் என்றும்..அதை இந்திரபிரஸ்தத்தில் அமைக்க அனுமதி தர வேண்டும் என்றும் வேண்டினான்.அனுமதி கிடைத்தது.

மயன்..இமயமலைக்கு அப்பால் சென்று..பொன்னையும்,மணியையும்..இரத்தினங்களையும் கொண்டு வந்து சபா மண்டபம் அமைத்தான்.சுவர்களும்,தூண்களும் தங்கத்தால் அமைக்கப்பட்டன.அவற்றுள் இரத்தினங்கள் பதிக்கப்பெற்றன.பளிங்குகற்களால் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டன.தடாகங்களில் தங்கத்தாமரை மலர்கள்..சுற்றிலும்..செய்குன்றுகளும்..நீர்வீழ்ச்சிகளும் காணப்பட்டன.தரை இருக்குமிடம்,நீரிருக்குமிடம் போலவும்...நீர் இருக்குமிடம் தரை போலவும் அமைத்திருந்தான்.பார்த்தவர்கள் அனைவரும் வியந்தனர்.

அம்மண்டபத்தை பார்வையிட்ட நாரதர் "மூவுலகிலும் இதற்கு இணையான மண்டபத்தை பார்க்கவில்லை" என்றார்.மேலும் யுத்ஷ்டிரரிடம் இராஜசூய யாகம் செய்யச்சொன்னார்.

இராஜசூய யாகம் செய்ய சில தகுதிகள் வேண்டும்..பிறநாட்டு மன்னர்..அந்த மன்னனின் தலைமையை ஏற்கவேண்டும்.

அதனால் கிருஷ்ணன் யுதிஷ்டிரரிடம்"மகத நாட்டு மன்னன் ஜராசந்தன்.உன் தலைமையை ஏற்கமாட்டான்.அவன் ஏற்கனவே 86 நாட்டு அரசர்களை வென்று சிறைப்படுத்தியிருக்கிறான்.மேலும்..14 பேரை சிறைப்படுத்தி..அவர்களைக்கொல்வதே அவன் திட்டம்.நீ அவனை வென்றால்..சக்கரவர்த்தி ஆகலாம்:" என்றார்.

மாயாவியான ஜராசந்தனைக் கொல்ல பீமனை அனுப்ப முடிவு செய்யப்பட்டது.இரு வீரர்களும் கடுமையாக மோதினர்.பீமன் ஜராசந்தனை...பனைமட்டையை கிழித்தெறிவதுபோல இறண்டாக கிழித்தெறிந்தான்...மாயக்காரனான ஜராசந்தன்..மீண்டும் உயிர் பெற்று போர்புரிந்தான்.பீமன் களைப்புற்று என்ன செய்வது என அறியாது திகைத்தான்.

கண்ணன்..ஜராசந்தனை இரண்டாக கிழித்து கால்மாடு..தலைமாடாகப் போடுமாறு செய்கை செய்தார்.(மாடு- பக்கம் ) .பீமனும் அவ்வாறே செய்ய ஜராசந்தன் அழிந்தான்.சிறையில் இருந்த மன்னர்கள் விடுதலை அடைந்தனர்.யுதிஷ்டிரர் மன்னாதி மன்னனாக ஆனான்.

Saturday, February 21, 2009

20-அர்ச்சுனன்-சுபத்திரை திருமணம்

ஒரு சமயம்..யுதிஷ்டிரரும்,திரௌபதியும் ஒரு மண்டபத்தில் தனித்து இருந்த போது..நள்ளிரவில்..ஒரு அந்தணன்..'என் பசுக்களை யாரோ களவாடிவிட்டார்கள்..'என் கூவியவாறு அம்மண்டபம் நோக்கி ஒட..அவனை தடுத்த அர்ச்சுனன்..வில்லையும்..அம்பையும் எடுத்துக்கொண்டு ஓடிப்போய்..திருடர்களைப் பிடித்து..பசுக்களை மீட்டு அந்தணனிடம் ஒப்படத்தான்.

யுதிஷ்டிரரும்,திரௌபதியும்..இருந்த மண்டபத்தருகே சென்றபின்..உடன்படிக்கையை மீறிவிட்டதாக..அர்ச்சுனன் எண்ணினான்.யுதிஷ்டிரர் தடுத்தும்..ஒரு ஆண்டு நாட்டைவிட்டு விலகி இருக்க தீர்மானித்தான்.புண்ணியதலங்கள் பலவற்றிற்குச் சென்றான்.தென்திசை வந்து கோதாவரியிலும், காவிரியிலும் புனித நீராடினான்.

பின், துவாரகை சென்று..பிரபாசா என்னும் தலத்தை அடைந்தான்.கிருஷ்ணரின் தங்கை சுபத்திரையை மணக்கும் ஆசை அவனுக்கு இருந்தது.அதற்கு பலராமன் சம்மதிக்காவிடினும்..கண்ணன் உதவி புரிய முன் வந்தார்.

துறவிபோல அர்ச்சுனன்..வேடம் பூண்டு வர..பலராமன் துறவியை வணங்கி..சுபத்திரையை அவருக்கு பணிவிடை செய்ய பணித்தான்.வந்திருப்பது அர்ச்சுனன் என்பதை அறிந்த அவளும்..அவன் மீது காதல் கொண்டாள்.இதை அறிந்த பலராமர்..அர்ச்சுனனுடன் போரிட முயல..கண்ணன் பலராமன் சினத்தை தணித்தார்.

அர்ச்சுனன்..சுபத்திரை திருமணம் இனிதே முடிய..அர்ச்சுனன்..இந்திரபிரஸ்தம் திரும்பினான்.

சில காலத்திற்குப்பின்..சுபத்திரை..அபிமன்யுவை பெற்றாள்.திரௌபதி..தன் ஐந்து கணவர்கள் மூலம் ஐந்து பிள்ளைகளைப் பெற்றாள்.

யமுனை நதிக்கரையில்..காண்டவ வனம் ஒன்று இருந்தது.இந்த பயங்கர காட்டில்..இரக்கமில்லா அரக்கர்களும்..கொடிய விலங்குகளும்,விஷப்பாம்புகளும் இருந்தன.அக்கினித்தேவன் அக்காட்டை அழிக்க நினைத்து தோற்றான்..அவன்..அர்ச்சுனனிடமும்..கண்ணனிடம் வந்து முறையிட்டான்.காட்டை அழிக்க தேவையான கருவிகளையும் அவர்களுக்கு அளித்தான்.அர்ச்சுனனுக்கு..நான்கு வெள்ளை குதிரைகள் பூட்டப்பட்ட தெய்வீக தேர் கிடைத்தது.அதில்..வானரக் கொடி பறந்தது.மேலும்..காண்டீபம் என்னும் புகழ் வாய்ந்த வில்லும்..இரண்டு அம்பறாத்தூணிகளும் கிடைத்தன.

கண்ணனுக்கு..சுதர்சனம் என்ற சக்கர ஆயுதமும்..கௌமோதகி என்னும்..கதாயுதமும் கிடைத்தன.

இவற்றின் உதவியால்...காண்டவ வனம்..தீப் பற்றி..எரிந்தது.அக்காட்டில் இருந்த தீயவை அழிந்தன.அக்கினித்தேவன் மகிழ்ந்தான்.

(ஆதி பருவம் முற்றிற்று இனி சபாபருவம்)

Thursday, February 19, 2009

19 - இந்திரபிரஸ்தம்

திரௌபதி விவகாரத்தில் பாண்டவர் குழப்பம் தீர்ந்தாலும்..துருபதன்..யாரோ ஒரு வாலிபன் பந்தயத்தில் வென்று..திரௌபதியை அழைத்துச் சென்றுவிட்டானே..என கலக்கம் அடைந்து..திட்டத்துய்மனை..அவர்கள் பின்னே..அவர்கள் யார் என அறிந்து வர அனுப்பினான்.சுயம்வரத்தில் வென்றவன் அர்ச்சுனன் என்பதை அறிந்து மகிழ்ந்தவன்..அனைவரையும் அரண்மனைக்கு அழைத்தான்.
ஆனாலும்..ஐவரும் திரௌபதியை மணப்பதில் அவனுக்கு உடன்பாடில்லை.

இச்சிக்கலை..தீர்க்க வியாசர் தோன்றி..'திரௌபதி..ஐவரை மணத்தல் தெய்வக்கட்டளை.அவர்கள் ஐவரும் தெய்வாம்சம் கொண்டவர்கள்.முற்பிறவியில் திரௌபதி..நல்ல கணவன் வேண்டும் என தவம் இருந்து..சிவனை..ஐந்து முறை வேண்டினாள்.அந்த வினைப்பயன் இப்பிறவியில் நிறைவேறுகிறது.இதனால் இவள் கற்புக்கு மாசு இல்லை..என துருபதனிடம் கூற..அவனும் சமாதானமடைந்தான்.

இதனிடையே..பாண்டவர் உயிருடன் இருப்பதை அஸ்தினாபுரத்தில் அனைவரும் அறிந்தனர்.மேலும்..அவர்கள் திரௌபதியை மணந்த செய்தியையும் கேட்டு..பொறாமை அடைந்தான் துரியோதனன்.
திருதிராட்டினனுக்கோ..இது ஒரு பேரிடியாய் இருந்தது.

பீஷ்மர்,விதுரர்..கருத்துக்கு ஏற்ப..பாண்டவர்களுக்கு பாதி ராஜ்யம் அளிக்க ..திருதிராட்டினன் சம்மதித்தான்.விதுரர்..பாண்டவர்களை அழைத்துவர பாஞ்சாலம் சென்றார்.

அஸ்தினாபுரம் திரும்பிய பாண்டவர்கள்..பீஷ்மரையும்..திருதிராட்டினனையும் வணங்கி ஆசி பெற்றனர்.திருதிராட்டினன்..யுதிஷ்டிரனுக்கு..பாதி ராஜ்யம் அளித்து..மன்னனாக முடி சூட்டினான்.

காண்டப்பிரஸ்தம்..அவர்களுக்கு..ஒதுக்கப்பட்டது.பாகப்பிரிவினை சரியாக இல்லையெனினும்..பாண்டவர் இதை ஏற்றனர்.

பாண்டவர்களும்..கௌரவர்களும்..ஒற்றுமையாக இருக்க திருதிராட்டினன் ஆசி கூறினான்.

காண்டப்பிரஸ்தம்..அடைந்தனர் பாண்டவர்கள்..தேவேந்திரன் கட்டளைப்படி..விசுவகர்மா என்னும் தேவசிற்பி மிகச் சிறந்த ஒரு நகரத்தை இவர்களுக்கு உருவாக்கினான்.அதுவே இந்திரபிரஸ்தம் எனப்பட்டது.

பாண்டவர்கள்..இந்திரபிரஸ்தத்தில் இருந்து நாட்டை நன்கு ஆட்சிபுரிந்தனர்.இதனிடையே நாரதர்..திரௌபதி விஷயத்தில்..பாண்டவர்களிடையே ஒரு உடன்பாட்டை ஏற்படுத்தினார்.

பாண்டவர்கள் ஒவ்வொருவரும்..ஆண்டுக்கு ஒருவர் என்ற முறையில்..திரௌபதியுடன் வாழவேண்டும்....அப்படியிருக்கும் போது நால்வரின் குறுக்கீடோ..இன்னலோ இருக்கக்கூடாது.
இந்த உடன்பாட்டை மீறுவோர்..ஓராண்டு நாட்டைவிட்டு விலக வேண்டும்..என்பதே அந்த உடன்பாடு.

Monday, February 16, 2009

18 - திரௌபதியின் சுயம்வரம்

மாறு வேடத்துடன் ஏகசக்கர நகரத்தில் தங்கியிருந்த பாண்டவர்களுக்குப் பாஞ்சாலத்தில் நடைபெற உள்ள திரௌபதியின் சுயம்வரம் பற்றி செய்தி கிடைத்தது.உடன் அவர்கள் பாஞ்சால தலைநகரமான
காம்பிலியாவிற்கு செல்ல நினைத்தனர்.அப்போது..அவர்கள் முன் வியாசர் தோன்றி..'உங்களுக்கு நல்ல காலம் வருகிறது..அந்த நகரத்திற்கு செல்லுங்கள்' என ஆசி கூறி சென்றார்.

குந்தியும் பாண்டவர்களும்..பாஞ்சாலம் சென்று ஒரு குயவன் வீட்டில் தங்கினர்.

சுயம்வரத்தன்று..பல நாட்டு மன்னர்கள் வந்திருந்தனர்.பாண்டவர்கள் அந்தணர்களுக்கான இடத்தில்..தனித் தனியாக அமர்ந்தனர்.கண்ணனும்,பலராமனும் அவையில் இருந்தனர்.

திரௌபதி..மாலையுடன்...தேவதை போல மண்டபத்திற்குள் வந்தாள்.சுயம்வரம் பற்றி..திட்டத்துய்மன் விளக்கினான்.

'அரசர்களே! இதோ..வில்லும்..அம்புகளும் உள்ளன.துவாரத்துடன் கூடிய சக்கரம் மேலே சுழன்றுக் கொண்டிருக்கிறது.அதற்கும் மேலே..மீன் வடிவத்தில் ஒரு இலக்கு இருக்கிறது.அதன் நிழல் கீழே உள்ள
தண்ணீரில் உள்ளது.இந்த நிழலைப் பார்த்தவாறு..மேலே உள்ள மீன் இலக்கை சுழலும் சக்கரத்தின் துவாரம் வழியே..அம்பை செலுத்தி வீழ்த்த வேண்டும்.அப்படி வீழ்த்துவோர்க்கு திரௌபதி மாலையிடுவாள்' என்றான்.

பல அரசர்கள் முயன்று தோற்றனர்.,தோற்றவர் பட்டியலில்..ஜராசந்தன்,சிசுபாலன்,சல்லியன்,கர்ணன்,துரியோதனன்..ஆகியோர் அடங்குவர்.

மன்னர்கள் யாரும் வெற்றிப் பெறாததால்..திட்டத்துய்மன்..நிபந்தனையை தளர்த்தினான்.'போட்டியில்..மன்னர்கள் மட்டுமின்றி..யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம்.'.துருபதன் உள்ளத்தில் அர்ச்சுனன் கலந்துக் கொள்ளமாட்டானா..என்ற ஏக்கம் இருந்தது.(பாண்டவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்கள் என்பது அவன் நம்பிக்கை)

அப்போது அந்தணர் கூட்டத்திலிருந்து ஒரு அந்தணன் எழுந்து நின்றான்.கண்ணன் உடன் அவன் அர்ச்சுனன் என்பதை தெரிந்து கொண்டார்.

அந்த வாலிபன் நேராக வந்து..மீன் வடிவ இலக்கை வீழ்த்த..திரௌபதி அவனுக்கு மாலையிட்டாள்.

திரௌபதியுடன் பாண்டவர்கள் வீடு திரும்பினர்.தாங்கள் கொண்டுவந்த பிட்சைப் பற்றி..வீட்டினுள் இருந்த குந்தியின் காதில் விழுமாறு கூறினர்.

குந்தியும்..கொண்டுவந்ததை..ஐவரும் பகிர்ந்துக் கொள்ளுங்கள் என்றாள்.குந்தி வெளியே வந்து பார்த்த போதுதான்..திரௌபதியைக் கண்டாள்.மனக்குழப்பம் அடைந்தாள்.

யுடிஷ்டிரர்'அர்ச்சுனனே..குந்தியை மணக்கட்டும்' என்றார்.ஆனால்..தாய் சொல்லை தட்டாத அர்ச்சுனன் 'திரௌபதி ஐவருக்கும் உரியவள்' என்றான்.

தாயின் சொல்லையும்..ஊழ்வினையின் பயனையும் எண்ணி..அனைவரும் இதற்கு உடன்பட..குழப்பம் தீர்ந்தது.

Thursday, February 12, 2009

17 - கடோத்கஜன் பிறந்தான்

வாராணாவதத்து மாளிகையிலிருந்து தப்பியவர்கள் காட்டில் அலைந்து திரிந்தனர்.மேலும் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாத நிலையில் குந்தி இருந்தாள்.பீமன் அனைவருக்கும் தண்ணீர் கொண்டுவர..தேடிச் சென்றான்.அவன் தண்ணீரைக் கொண்டு வந்த போது..தாயும்..சகோதரர்களும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால்..பீமன் அவர்களுக்கு காவல் காத்து விழித்துக் கொண்டிருந்தான்.

அவர்கள் தங்கியிருந்த காடு இடிம்பன் என்னும் அரக்கனுக்கு சொந்தமானதாகும்.இடிம்பன் காட்டில்..மனித வாடை வீசுவது அறிந்து..அவர்களைக் கொன்று..தனக்கு உணவாக எடுத்து வரும்படி..தன் தங்கை..இடிம்பைக்கு கட்டளை இட்டான்.

அழகிய பெண் வேடம் போட்டி வந்த இடிம்பை..அங்கு பீமனைக் கண்டு..அவன் மேல் காதல் கொண்டாள்.பீமனோ..தன் தாய்..சகோதரர் அனுமதி இல்லாமல் அவளை மணக்க முடியாது என்றான்.

நேரமானபடியால்..தங்கையைத் தேடி இடிம்பன்..அங்கே வந்தான்.பீமனைக் கண்டதும்..அவனுடன் கடுமையாக மோதினான்.அதில் இடிம்பன் மாண்டான்.

இடிம்பி..பீமனுடன் சென்று..குந்தியிடம்..பீமன் மீது தனக்குள்ள காதலை தெரிவித்தாள்.பின்..குந்தி..மற்ற சகோதரர்கள் சம்மதிக்க..பீமன் அவளை மணந்தான்.அவர்களுக்கு..கடோத்கஜன் என்ற மா வீரன் பிறந்தான்.பின்னால்..நடக்கும் பாரதப்போரில்..இவனுக்கு பெரும் பங்கு உண்டு.

பின்..பீமன்..இடிம்பியிடம்..தன்னைவிட்டு சிலகாலம் அவள் பிரிந்திருக்க வேண்டும் என்று கூற..அவளும் அவ்வாறே..மகனை அழைத்துக் கொண்டு வெளியேறினாள்.

இந்நிலையில்..அவர்கள் முன்..வியாசர் ஒரு நாள் தோன்றி..கஷ்டங்களை சிறிது காலம் பொறுத்து
க் கொள்ள வேண்டும் என்றும்..அவர்கள் அனைவரையும் தவ வேடம் தாங்கிய பிராமணர்கள் போல ..ஏகசக்கர நகரத்தில் தங்கியிருக்க வேண்டும் என்றும்..நல்ல காலம் பிறக்கும் என்றும் நல்லாசி கூறினார்.

பின் பாண்டவர்கள் அந்தணர் வேடம் தாங்கி..ஒரு பிராமணர் வீட்டில் தங்கினர்.பகலில் வெளியே சென்று பிட்சை ஏற்று..கிடைத்ததை உண்டனர்.ஆனால்..அவர்கள் கோலத்தைக் கண்ட ஊரார்..இவர்கள் ஏதோ காரணத்துக்காக இப்படி இருக்கிறார்கள் என அறிந்து..தாராளமாகவே பிட்சை இட்டனர்.

அவர்கள் தங்கியிருந்த வீட்டில் ஒரு நாள்..அழு குரல் கேட்க..அந்த ஊர் மக்கள் பகன் அன்னும் அசுரனால் துன்புறுவதாகவும்..அந்த ஊரில் ஒவ்வொருநாள் ஒரு வீட்டிலிருந்து உணவும்..நரபலியும் கொடுக்க வேண்டும் என்றும் அறிந்தனர் .அன்று அந்த வீட்டிலிருந்து செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

குந்தி..வண்டியில் உணவுடன்..பீமனை அனுப்புவதாகக் கூறி..அவளை அனுப்பினாள்.பீமன் சென்று..பகாசூரனை அழித்து..வண்டியில் அவன் உடலைப் போட்டு..ஊர்வலமாக வந்தான்.

எகசக்கர நகரம்..பகாசூரனின் கொடுமையிலிருந்து காப்பாற்றப்பட்டனர்.

Wednesday, February 11, 2009

16- அரக்கு மாளிகை எரிந்தது

திருதராட்டிரன் யுதிஷ்டிரரை அழைத்து..'வாழ்வதற்கு ஏற்ற இடம் வாரணாவதம்..நீ உன் தாய், தம்பிகளுடன் சென்று, சில காலம் தங்கி விடு' என்றார்.

புத்திசாலியான..யுதிஷ்டிரருக்கு..அவரது எண்ணம் புரிந்தது.பீஷ்மர்,துரோணர்,விதுரர் ஆகியோரிடம் ஆசி பெற்று அவர்கள் செல்லலாயினர்.

பாண்டவர்களுடன் விதுரர்..நெடுந்தூரம் சென்றார்..துரியோதனின் நோக்கத்தை மறைமுகமாக..'காடு தீப் பற்றி.எரியும் போது..எலிகள் பூமிக்குள் உள்ள வளையில் புகுந்து தப்பிவிடும்" என்றார்.இந்த எச்சரிக்கையை பாண்டவர்கள் புரிந்துக் கொண்டனர்.பின் விதுரர் நகரம் திரும்பிவிட்டார்.

வாரணாவதத்து மக்கள்..பாண்டவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.புரோசனன் அவர்களை அணுகி தான் அமைத்திருக்கும் அரக்கு மாளிகையில் தங்குமாறு..வேண்டினான்.பாண்டவர்கள்..ஏதும் அறியாதவர்கள் போல..அங்கு தங்கினர்.

அந்த மாளிகை..அரக்கு,மெழுகு போன்ற பொருள்கள் கொண்டு..எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது.

துரியோதனன் எண்னத்தைப் புரிந்துக்கொண்ட பீமன் 'இப்போதே..அஸ்தினாபுரம் சென்று..துரியோதனனுடன் போர் புரிய வேண்டும் என துடித்தான். 'துரியோதனனின் சூழ்ச்சியை முறியடிப்போம்..பொறுமையாய் இரு' என யுதிஷ்டிரர் கூறினார்.

பகலில் வேட்டையாடச் செல்வது போல..மாளிகையைச் சுற்றி..ரகசிய வழிகளை அடையாளம் கண்டுகொண்டார்கள் அவர்கள்.

விதுரர்..பாண்டவர்கள் இருக்கும் இடத்திற்கு..ஒருவனை அனுப்பினார்.பகல் நேரத்தில்..புரோசனனை அழைத்துக் கொண்டு..காட்டுக்கு அவர்கள் செல்லும் போது..அந்த ஆள் ..மாளிகையிலிருந்து வெளியேற சுரங்கம் ஒன்றை அமைத்தான்.

குந்தியும்,பாண்டவர்களும் தூங்கும் போது..இரவில்..அரக்கு மாளிகையை தீயிட புரோசனன் எண்னினான்.

குந்தியைக் காண..ஒரு வேட்டுவச்சி..தனது..ஐந்து மகன்களுடன் வந்தாள்.அவர்களுடன் விருந்து உண்டு..அங்கேயே அன்றிரவு தங்கினாள்..வேடுவச்சி.

பீமன் நள்ளிரவில்..தாயையும், சகோதரர்களையும்..சுரங்க வழியாக சென்றுவிடுமாறு கூறிவிட்டு..மாளிகையின் அனைத்து பகுதிகளிலும்..தீ வைத்து விட்டு.. தப்பினான்.

பாண்டவர்கள்..குந்தியுடன்..சுரங்கம் வழியே வெளியேறி..ஒரு காட்டை அடைந்தனர்.விதுரரால் அனுப்பப்பட்ட..ஒரு படகோட்டி..அவர்கள் கங்கையைக் கடக்க உதவினான்.பாண்டவர்கள் முன் பின் தெரியாத ஒரு நாட்டை அடைந்தனர்.

இதற்கிடையே..அரக்கு மாளிகை எரிந்து...ஏழு சடலங்களையும் கண்டவர்கள்..குந்தி, பாண்டவர்கள், புரோசனன் ஆகியோர் இறந்தனர் என எண்ணினர்.

பீஷ்மரும் இது கேட்டு பெரிதும் துக்கம் அடைந்தார்.திருதராட்டிரனும் துயருற்றவன் போல நடித்தான்..பாண்டவர்களுக்கு ஈமச் சடங்குகளை செய்து முடித்தனர்.

Monday, February 9, 2009

15 - துரியோதனின் சதி

திருதிராட்டிரன் பார்வையற்றவனாய் இருந்த படியால்...குருகுலத்து ஆட்சியை..பாண்டுவே நடத்தி வந்தான் என்பதால்...பாண்டு புத்திரர்களிடம் மக்களுக்கு நாட்டம் அதிகம் இருந்தது.இச்சமயத்தில் அஸ்தினாபுரத்து அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டன.அரசகுமாரர்களில் யுதிஷ்டிரர் மூத்தவர் ஆனபடியால்...இளவரசர் பட்டத்துக்கு அவரே..உரியவர் ஆனார்.பீஷ்மர்,துரோணர்,விதுரர் ஆகியோர்..யுதிஷ்டிரரை இளவரசர் ஆக்கினர்.

இவர் சத்தியத்திற்கும்,பொறுமைக்கும்..இருப்பிடமாக இருந்தார்.அவரது தம்பிகளும்..நாட்டின் எல்லை விரிவடைய உதவினர்.பாண்டவர்கள் உயர்வு கண்டு...துரியோதனன் மனம் புழுங்கினான்.விரைவில் யுதிஷ்டிரர் நாட்டுக்கு மன்னன் ஆகிவிடுவாரோ என எண்னினான்.தன் மனக்குமுறலை சகுனியிடமும்,துச்சாதனனிடமும்,கர்ணனிடமும் வெளிப்படுத்தினான்.

அதற்கு சகுனி, 'பாண்டவர்களை சூதில் வெல்லலாம்' என்றான்.நீண்ட யோசனைக்குப் பிறகு..எப்படியாவது பாண்டவர்களை அஸ்தினாபுரத்திலிருந்து வெளியேற்ற தீர்மானித்தனர்.

துரியோதனன்..தன் தந்தையிடம் சென்று..'தந்தையே..யுதிஷ்டிரனை..இளவரசனாக நியமித்து..தவறு செய்து விட்டீர்.அதனால்...பாண்டவர் இப்போது..ஆட்சியுரிமைக்கு..முயல்கின்றனர்.ஆகவே
என்மீதும், தம்பியர் மீதும்..உங்களுக்கு அக்கறை இருக்குமேயாயின்,பாண்டவர்களை சிறிது காலமாவது ..வேறு இடம் செல்லக் கூறுங்கள்' என்றான்.

அவன் மேலும் கூறினான்..'கதா யுத்தத்தில்..என்னை பீமன் தாக்கிய போதும், எங்கள் சார்பில் யாரும் பேசவில்லை. பாட்டனாரும்,துரோணரும்,கிருபரும் கூட மனம் மாறி பாண்டவர் பக்கம் போனாலும்
போவார்கள்.விதுரர்..பாண்டவர் பக்கமே..இப்போதே..பாண்டவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.அதன் பின் மக்களை நம் பக்கம் திருப்பி..நம் ஆட்சியை நிலை பெறச் செய்யலாம்' என்றான்.

மகனைப்பற்றி நன்கு அறிந்த திருதிராட்டிரன்..அவனுக்கு பல நீதிகளைக் கூறி..'உனது துரோக எண்ணத்தை விட்டுவிடு' என்று அறிவுரை கூறினான்.

எந்த நீதியும்..துரியோதனன் காதில் விழவில்லை.கடைசியில் மகன் மீது இருந்த பாசத்தால்..பாண்டவர்களை வாரணாவதம் அனுப்ப ஒப்புக்கொண்டான்.துரியோதனன் மூளை குறுக்கு வழியில் வேலை செய்ய ஆரம்பித்தது.

அவன் நாட்டில் சிறந்த சிற்பியும்..அமைச்சனும் ஆன..புரோசனனைக் கொண்டு..வாரணாவதத்தில் ரகசியமாக அரக்கு மாளிகை ஒன்றை அமைக்க தீர்மானித்தான்..அது எளிதில் தீப்பற்றி எறியக்கூடியதாய் இருக்க வேண்டும்.அதில் குந்தியையும்.பாண்டவர்களையும் தங்கச் செய்து..அவர்கள் தூங்கும் போது..அம்மாளிகையை தீயிட்டு கொளுத்தி..அவர்களை சாம்பலாக்க வேண்டும் என்று தீர்மானித்து, புரோசனனைக் கூப்பிட்டு..வேண்டிய பொருள்களைக் கொடுத்து...அரக்கு மாளிகை அமைக்க வாரணாவதம் அனுப்பினான்.

Wednesday, February 4, 2009

14- துரோணர் கேட்ட குருதட்சணை

துரியோதனின் அன்பைக் கண்டு..கர்ணன் மகிழ்ந்தான்.இனி எப்போதும் துரியோதனனை விட்டுப் பிரிவதில்லை என விரதம் மேற்கொண்டான்.கர்ணன் தேரோட்டியின் வளர்ப்பு மகன் என்று அறிந்த
பீமன்..'அர்ச்சுனனுடன் போட்டியிட உனக்கு என்ன தகுதி இருக்கிறது' என ஏசினான்.

உடன் கோபம் அடைந்த துரியோதனன்..பீமனை நோக்கி..'பிறப்புப் பற்றி பேசுகிறாயா? நதிமூலம்,ரிஷிமூலம் பார்க்கக்கூடாது.துரோணர்,கிருபர் ஆகியோர் பிறப்பு பற்றி யாராவது ஆராய்வர்களா? பீமா..உன் தந்தையின் பிறப்பையும்,என் தந்தையின் பிறப்பையும் எண்ணிப்பார்.பிறப்பில் பெருமை இல்லை.செய்யும் தொழிலில் தான் இருக்கிறது.உண்மையில் அர்ச்சுனனிடம் வீரம் இருக்குமேயானால்..கர்ணனிடம் மோதி பார்க்கட்டும்.'என்றான்..ஆனால் போட்டி தொடரவில்லை.

பயிற்சியும்,போட்டியும் முடிந்தபின்..குருவான துரோணருக்கு..அரசகுமாரர்கள் குருதட்சணை தர விரும்பினர்.ஆனால் துரோணர் எதிர்ப்பார்த்த தட்சணை வேறு..பழம் பகை ஒன்றை தீர்த்துக் கொள்ள விரும்பினார்.

அவரது இளமைக்காலத்தில்..அவரது தந்தையான பரத்துவாச முனிவரிடம் பல விதக் கலைகளைக் கற்று வந்தார்.அந்த சமயம்..பாஞ்சால நாட்டு மன்னன் புருஷதனின் மகன் துருபதனும்..பரத்துவாசரி
டம் பயின்று வந்தான்.நாள் ஆக..ஆக..இருவரின் நட்பும் நெருக்கமாக..தான் மன்னனாக ஆனதும் நாட்டில் பாதியை துரோணருக்கு கொடுப்பதாக..துருபதன் வாக்களித்தான்.

பின் துருபதன் மன்னனாக ஆனான்.அந்த சமயம்..துரோணர் வறுமையில் வாடினார்.துருபதனைக் காண அவர் சென்றபோது துருபதன் அவரை அலட்சியப் படுத்தினான்.அரசனுக்கும், ஆண்டிக்கும் நட்பா..என்றான்.துரோணரை அவமானப்படுத்தினான்.துரோணர் அவனை பழிவாங்க காத்திருந்தார்.

இப்போது அதற்கான நேரம் வந்ததாக எண்ணினார்.தன் மாணவர்களை நோக்கி..'பாஞ்சால நாட்டு மன்னனை சிறை எடுத்து..கொண்டு வருக..அதுவே நான் விரும்பும் குருதட்சணை' என்றார்.

துரியோதனன்..படை கொண்டு துருபதனிடம் போரிட்டு தோற்று திரும்பினான்.பின் அர்ச்சுனன் சென்று..அவனை வென்று...சிறைப் படுத்தி...துரோணர் முன் நிறுத்தினான்.

துரோணர்..துருபதனை நோக்கி'செல்வச் செருக்கால் தலை நிமிர்ந்து நின்றாயே..இப்போது உன் நிலையைப் பார்.செல்வம் நில்லாது..என உணர்...ஆணவத்தை விட்டு..அடக்கத்தை கடைப்பிடி.உன் நாட்டின் பாதியை எடுத்துக் கொண்டு..மறு பாதியை உனக்குத் தருகிறேன்..நம் நட்பைத் தொடரலாம்' என்று கூறி அவனை ஆரத் தழுவி..நாட்டுக்கு அனுப்பினார்.

ஆனால்..துருபதன் மனம் மாறவில்லை. துரோணரிடம் முன்னைவிட பல மடங்கு கோபம் கொண்டான்.அவரைக் கொல்ல மாபெரும் வீரனை மகனாகப் பெற வேண்டும் என உறுதி பூண்டான்.பெரும் வேள்வி செய்தான்.அந்த வேள்வியிலிருந்து..அவனுக்கு ஒரு மகனும்..ஒரு மகளும் தோன்றினர்.எதிர்காலத்தில் துரோணரை அழிக்கப் பிறந்த அந்த மகன் பெயர் 'திட்டத்துய்மன்'.மகளின் பெயர்
'திரௌபதி'.

தன் மகளை பார்த்தனுக்கு மணம் முடிக்க சரியான காலத்தை எதிர்நோக்கி காத்திருந்தான் துருபதன்.

Monday, February 2, 2009

13 - கர்ணன் முடி சூட்டப்பட்டான்

ஆரம்பத்தில்..பாண்டவர்கள்,கௌரவர்கள் அனைவரும் ஒற்றுமையாகவே இருந்தனர்.பலப்பல விளையாட்டுகளில் ஈடுபட்டனர்.துரியோதனன் எல்லாவற்றிலும் தானே முதலில் வர வேண்டும் என நினைத்தான்..ஆனால் அர்ச்சுனனும்,பீமனுமே சிறந்து காணப்பட்டனர்.

பீமனது ஆற்றல்..துரியோதனனுக்கு..அச்சத்தையும்..பொறாமையையும் கொடுத்தது.அதுவே..காலப்போக்கில் பாண்டவர் அனைவரையும் வெறுக்கும் நிலைக்கு தள்ளியது.தானே அரசராக வேண்டும்
என துரியோதனன் எண்ணினான்.ஆனால்...யுதிஷ்டிரனே இளவரசுப் பதவிக்கு உரியவன் ஆனான்.மனம் வெதும்பிய துரியோதனன் ..பாண்டவர்களை ஒழிக்க வழி தேடினான்.

ஒரு சமயம்...ஆற்றங்கரையில் அனைவரும் விளையாடிக்கொண்டிருக்கும் போது...பீமனுக்கு விஷம் கலந்த உணவைக் கொடுத்தான் துரியோதனன்.அதனால் மயக்கமுற்றான் பீமன்.துரியோதனன் உடனே அவன் கை..கால்களைக் கட்டி ஆற்றில் எறிந்தான்.விளையாட்டு முடிந்து திரும்பியதில் பீமன் இல்லாது கண்டு குந்தி கவலையுற்றாள்.துரியோதனன் மீது சந்தேகப்பட்டவள்..விதுரரிடம் அதை தெரிவித்தாள்.சந்தேகத்தை வெளிக்காட்டவேண்டாம் என்றும்..தெரிந்தால்..பல இன்னல்கள் விளையும் என விதுரர் எச்சரித்தார்.

ஆற்றில் தூக்கி எறியப்பட்ட பீமன் மீது பல விஷப்பாம்புகள் ஏறி கடித்தன.விஷம்..விஷத்தை முறித்தது.பீமன் எழுந்தான்.பாம்புகளை உதறித் தள்ளினான்.பீமனின் ஆற்றலைக் கண்ட வாசுகி..அவனுக்கு அமிழ்தத்தை அளித்தது.புதுப்பொலிவுடன் பீமன் வீடு திரும்பினான்.

பீஷ்மர் அனைவருக்கும்...விற்பயிற்சி பெற ஏற்பாடு செய்தார். கிருபாசாரியாரும்,துரோணாசாரியாரும்..அப்பொறுப்பை ஏற்றனர்.அனைவரும் வில்வித்தையில் வீரர் ஆயினர்.ஆயினும் அர்ச்சுனன் தலை சிறந்து விளங்கினான்.ஒரு மரம்..அடர்ந்த கிளைகள்..அவற்றின் ஒன்றில் ஒரு குருவி..அதைக் குறி வைத்து அம்பு எய்த வேண்டும்.இச் சோதனையில் சீடர்கள் ..மரம் தெரிகிறது..கிளை தெரிகீறது..இலை தெரிகிறது என்றனர்.ஆனால் அர்ச்சுனன் மட்டும் குருவி தெரிகிறது என்றான்.அதை நோக்கி அம்பெய்தினான்.அர்ச்சுனனின் அறிவுக் கூர்மையை உணர்ந்த ஆசாரியார் அவனுக்கு வில் வித்தையில் எல்லா நுட்பங்களையும் கற்றுத் தந்தார்.

குந்திக்கு சூரியன் அருளால் பிறந்த குழந்தையை பெட்டியில் வைத்து கங்கையில் இட்டாள் அல்லவா? அந்த பெட்டியை..திருதராட்டிரனின் தேர்ப்பாகன் கண்டெடுத்தான்.மகப்பேறற்ற அவன்..அக்குழந்தையை எடுத்து வளர்த்தான்.அவனே கர்ணனாவான்.கௌரவர்,பாண்டவருடன் சேர்ந்து வில்வித்தையைக் கற்றான் கர்ணன்.அர்ச்சுனனுக்கு சமமாக அவன் திகழ்ந்ததால்...துரியோதனனுக்கு அவனிடம் நட்பு ஏற்பட்டது.

ஒரு சமயம் போட்டிகள் நடைப்பெற்றன..போட்டியைக்காண அனைவரும் வந்திருந்தனர்.துரோணரின் கட்டளைப்படி..பீமனும்,துரியோதனனும் கதை யுத்தத்தில் ஈடுபட்டனர்.போட்டி நீண்ட நேரம் நடைப் பெற்ற படியால்..கடைசியில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.விளையாட்டு..வினையாவதை உணர்ந்த துரோணர் போட்டியை நிறுத்தினார்.

அடுத்து..விற்போட்டி.அர்ச்சுனன் தன் திறமையைக் காட்டினான்.உடன் கர்ணன்..அவனை தன்னுடன் போட்டியிட அழைத்தான்.ஆனால்..கிருபாசாரியார்..கர்ணனை அவமானப்படுத்தும் வகையில்..'தேர்ப்பாகன் மகன்..அரசகுமாரனான அர்ச்சுனனுடன் போரிட தகுதியற்றவன்'என்றார்.பிறப்பால் தான் இழிந்தவன் என்ற பேச்ச்க் கேட்டு கர்ணன் நாணி தலை குனிந்தான்.

நண்பனுக்கு..நேர்ந்த அவமானத்தைப் போக்க விரும்பிய துரியோதனன்..அங்கேயே..கர்ணனை அங்க நாட்டுக்கு அதிபதியாக முடிசூட்டினான்.

Sunday, February 1, 2009

12 - பாண்டவர்..கௌரவர் பிறப்பு

அரியணை ஏறிய பாண்டு அஸ்தினாபுரத்திற்கு அடங்கா மன்னர்களை அடக்கி..அவர்களை கப்பம் கட்ட வைத்தான்.நாட்டில் நல்லாட்சி செய்தான்.பாண்டுவின் செயல்களை மக்கள் பாராட்ட..பீஷ்மரும் மகிழ்ந்தார்.

ஒருநாள் வேட்டையாட..பாண்டு தன் மனைவியர்.பரிவாரங்களுடன் காட்டிற்கு சென்றான்.அங்கு புணர்ச்சியில் ஈடுபட்டிருந்த இரு மான்கள் மீது..சற்றும் யோசனையின்றி அம்பு செலுத்தினான்.ஆண்மானாக இருந்த கிந்தமர் என்னும் முனிவர் பாண்டுவிற்கு 'இல்லற இன்பத்தை விரும்பிப் பாண்டு மனைவியுடன் கூடும் போது இறப்பான்" என சாபமிட்டார்.இதனால்..மகப்பேறு இல்லாமல் போகுமே என பாண்டு கவலையுற்றான்.

மன்னனின் கலக்கம் கண்ட குந்தி..தனது இளமைப்பருவத்தில்..துர்வாசர் அருளிய மந்திரத்தைப் பற்றிக் குறிப்பிட்டாள்.அதைக் கேட்டு பாண்டு மகிழ்ந்தான்.

பின்..குந்தி, தர்மதேவதையை எண்ணி மந்திரத்தை ஓத..யுதிஷ்டிரனை பெற்றாள்.வாயு பகவான் அருளால் பீமன் பிறந்தான்..தேவேந்திரன் அருளால் அர்ச்சுனன் பிறந்தான்.

பாண்டுவின் விருப்பப்படி..மாத்ரிக்கு மந்திரத்தை உபதேசிக்க..மாத்ரியும் அம்மந்திரத்தை..இரட்டையர்களான அசுவனி தேவர்களை எண்ணி ஜபித்தாள்.அதனால்..நகுலன்,சகாதேவன்..பிறந்தனர்.

ஐந்து அருமைப் புதல்வரை பாண்டு அடைந்தான்.

அஸ்தினாபுரத்தில்..திருதிராட்டினன்..பாண்டு அடைந்த சாபத்தை எண்ணி..அவனுக்கு மகப்பேறு இல்லை..என மகிழ்வுடன் இருந்தான்.நாடாளும் உரிமை..தன் சந்ததிக்கே என்றிருந்தான்.அப்போது பாண்டு மகப்பேறு அடைந்த விஷயத்தை அறிந்தான்.அப்போது காந்தாரியும் கருத்தரித்திருந்தாள்.குந்திக்கு குழந்தைகள் பெற்ற செய்தி அறிந்து..ஆத்திரத்தில் தன் வயிற்றில் அடித்துக் கொண்டாள்.அதன் விளைவாக..மாமிச பிண்டம் வெளிப்பட்டது.வியாசர் அருளால்...அதிலிருந்து நாளொன்றுக்கு ஒருவர் வீதம்..நூறு ஆண் குழந்தைகளும்..ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.இந்த நூற்றொருவரைப் பெற..நூற்றொரு நாட்கள் ஆயிற்று.காட்டில் பீமன் பிறந்த அன்று அஸ்தினாபுரத்தில் துரியோதனன் பிறந்தான்.

துரியோதனன்..பேராசையும்..பிடிவாதமும் உடையவனாக வளர்ந்தான்.அவனை அடுத்து பிறந்த துச்சாதனன்..தீமையில் அண்னனை மிஞ்சினான்.கடைசி தம்பியான விகர்ணன் தவிர அனைவரும் கொடியவர்களே.

காட்டில் வாழ்ந்து வந்த பாண்டவர் ஐவரும்..ரிஷிகளிடம் கல்வி கற்று..அறிவுத்திறனை வளர்த்துக் கொண்டனர்.

இந்நிலையில்..ஒரு நாள் காமவயப்பட்டு..பாண்டு மாத்ரியை அணுகிய போது...பண்டைய சாபத்தால்...உயிரிழந்தான்.மாத்ரியும் உடன் அவனுடன் இறந்தால்.குந்தியும்...பாண்டவர்களும்..பீஷ்மரிடம் வந்தனர்.திருதிராட்டினனும்..அன்புள்ளவன் போல நடந்துக் கொண்டான்.சத்யவதியும்,அம்பிகையும்,அம்பாலிகையும் தவத்தை நாடிச் சென்றனர்.

குரு வம்சத்திற்குரிய மன்னனை நியமிக்கும் பொறுப்பு பீஷ்மரிடம் வந்தது.