கீரி சொல்லத் தொடங்கியது..
நான் கர்வத்தால் பேச வில்லை.உங்களுடைய யாகம் ஒரு பிடி மாவுக்கு ஈடாகாது. என்று கூறினேன்.கவர்ச்சியான அஸ்வமேத யாகத்தைவிட அந்தணன் ஒருவன் அளித்த ஒரு பிடி மாவு எப்படி சிறந்ததாகும் என்பதை விளக்குகிறேன்..கேளுங்கள்..
முன்னொருகாலத்தில் குருக்ஷேத்திரத்தில் அந்தணர் ஒருவர் இருந்தார்.அவர் வயல்களில் விழுந்து சிந்திக் கிடக்கும் தானியங்களைப் பொறுக்கி வந்து மாவாக்கி உயிர் வாழ்ந்து வந்தார்.அவருக்கு ஒரு மனைவியும்,மகனும்,மருமகளும் உண்டு.இந்த நால்வருடைய ஜீவனும் அந்தணர் கொண்டு வரும் தானியங்களையே சார்ந்திருந்தது.நாள்தோறும் தானியங்களைப் பொறுக்கி வருவதும்,மாவாக்குவதும் வழிபாடு முடிந்த பின் நால்வரும் சமமாக அந்த மாவைப் பகிர்ந்துக் கொள்வதும் நடைமுறை வாழ்க்கையாய் இருந்தது.தெய்வ வழிபாடு, வந்த விருந்தினரை உபசரித்தல் ஆகியவற்றில் அவரது குடும்பம் நிகரற்று விளங்கியது.
கோடைக்காலத்தில் தானியங்கள் கிடைப்பது அரிது.ஆதலால் அக்குடும்பம் சில நாட்களில் அரைவயிறு உண்டும்,முழுப்பட்டினியாயும் கூடக் காலம் தள்ளிற்று.அத்தகைய வரிய நிலையில் இருந்த போது ஒருநாள் மாவை நால்வரும் பகிர்ந்து கொண்டு உணவு கொள்ள உட்கார்ந்த நேரத்தில் விருந்தாளி ஒருவர் வந்தார்.விருந்தினரை உபசரிப்பதை தலையாயக் கடமையாய்க் கொண்டிருந்த அந்தணர் தமக்குரிய பங்கை அந்த அதிதிக்கு அளித்தார்.வந்த விருந்தாளி அதனை ஆர்வத்துடன் உண்டார்.பசி அடங்கவில்லை.இதனைக் கவனித்துக் கொண்டிருந்த அந்தணரின் மனைவி தன் பங்கை அதிதிக்கு அளித்தார்.அதனை உண்டும் அவர் பசி அடங்கவில்லை.அவர் மகனும்,தன் பங்கை கொடுத்தார்..மருமகளும் தன்பங்கைக் கொடுக்க ..அதனை உண்ட அதிதி பசி அடங்கிற்று.
விருந்தாளியாக, அதிதியாக வந்தது தருமதேவதையே ஆகும்.அங்கு வந்து அந்தணனின் தானத்தின் தன்மையை சோதித்தது.தர்மதேவதை அந்தணனை நோக்கி..
"நீர் நியாயமான வழியில் சேர்த்த பொருளை மனம் உவந்து உம் சக்திக்கு ஏற்றவாறு மனப்பூர்வமாக அளித்தது குறித்து மகிழ்ச்சி.உமது தானத்தை சுவர்க்கத்தில் உள்ள தேவர்களும் புகழ்ந்து பேசுகின்றனர்.விண்ணிலிருந்து அவர்கள் மலர்மாரி பொழிவதைக் காணுங்கள்.பிரமலோகத்தில் உள்ளவர்களும், தேவலோகத்தில் உள்ளவர்களும் உம்மை தரிசிக்க விரும்புகிறார்கள்.ஆகவே நீ சுவர்க்கத்திற்குச் செல்வாயாக.தூய மனத்துடன் நீ அளித்த இந்த எளிய தானத்தால் இந்த நற்கதி உமக்கு வாய்த்தது.ஆராவாரத்துடன் மிகுந்த பொருளை வாரிவாரிக் கொடுப்பது தானமல்ல்...அது வீண் பெருமைதான்.அதனால் ஒரு பயனும் அல்ல.ஆயிரம் கொடுக்க வேண்டிய இடத்தில் உள்ளன்போடு நூறு கொடுத்தால் போதுமானது.நூறு கொடுக்க வேண்டிய இடத்தில் பத்துக் கொடுத்தால் போதும்.பத்துக் கொடுக்க இடத்தில் ஒன்று கொடுத்தால் போதும்.ஒன்றும் கொடுக்க முடியாவிடின், தூய மனத்துடன் கொடுக்கும் தூய நீரே போதும்.
ரத்தி தேவன் என்னும் அரசன் ஒன்றும் இல்லாத சூழலில் தூய மனத்துடன் தூய நீர் மட்டுமே அளித்தான்.அதனாலேயே அவன் சுவர்க்கம் அடைந்தான்.
தருமமானது நியாயமான வழியில் சிறிய அளவில் சம்பாதிக்கப் பட்டாலும் அது பிறருக்குத் தூய மனத்துடன் அளிக்கப்படுவதாகும்.நியாயமில்லாத வழிகளில் பெருஞ்செல்வத்தைத் திரட்டிப் படாடோபமாகச் செய்யப்படுவது தருமம் அன்று.அதனால் மகிழ்ச்சியும் அல்ல.பயனும் அல்ல.
'திருகன் என்னும் மன்னன் ஓராயிரம் பசுக்களைத் தானமகச் செய்தான்.அந்த ஆயிரம் பசுக்களில் ஒரு பசு வேறொருவனுக்குச் சொந்தமானது.ஆயிரத்தில் ஒன்றுதான் அப்படி.
ஆனால் அவன் இதற்காக நரகம் செல்ல நேரிட்டது.நாம் கொடுப்பது எதுவாயினும், எவ்வளவாயினும் அது நல்ல வழியில் வந்ததாக இருக்க வேண்டும்.செல்வம் மட்டுமே புண்ணீயத்திற்குக் காரணமாகாது.அதுபோலவே பலவித யாகங்களால் வரும் புண்ணியமும் நியாயமான வழியில் வந்த பொருளைச் சக்திக்கு ஏற்ற வாறு தானம் செய்து சம்பாதித்த புண்ணியத்திற்கு ஈடாகாது.ஒருவன் ராஜசூய யாகமோ, அஸ்வமேத யாகமோ செய்து ஏராளமான பொருளை வாரி வாரிக் கொடுத்தாலும் நீர் உமது தானத்தினால் பெற்ற பயனுக்கு நிகரான பயனை அவன் அடையமாட்டான்.நீர் ஒரு பிடி மாவினால் சுவர்க்கத்தை அடையும் புண்ணியம் செய்ததால், உங்கள் அனைவரையும் அழைத்துச் செல்ல அங்கிருந்த அற்புத விமானம்வந்திருக்கிறது.அதில் நீங்கள் நால்வரும் ஏறிச்செல்லுங்கள்.நான் தான் தருமம்.என்னை நங்கு பாருங்கள்' என்று கூறித் தரும தேவதை மறைந்தது.அந்த நால்வரும் சுவர்க்கம் சென்றனர்.
அப்படி தருமதேவதையும் நால்வரும் மறைந்த பிறகு நான் வளையிலிருந்து வந்தேன்.அங்கு சிந்தியிருந்த மாவில் படுத்துப் புரண்டேன்.என் மனம் தவமகிமையுடன் கூடிய மாவின் மீது சென்றதால் என் உடலில் பாதிப் பொன்னிறமாயிற்று.மற்றொரு பக்கம் எப்போது அப்படி பொன்னிறம் ஆகும் எனக் கரிதி யாகசாலைகளில் சுற்றித் திரிந்தேன்.தருமரின் அஸ்வமேத யாகத்தின் சிறப்பை எண்ணி இங்கு வந்து படுத்துப் புரண்டேன்.எனது உடலின் மறு பாதி பொன்னிறமாக மாறவில்லை.ஆதலால்'இந்த யாகம் ஒரு பிடி மாவுக்கு இணையில்லை' என்று கூறினேன்.முன்பு ஒரு பிடி மாவு என் பாடி உடலை பொன்னிறம் ஆக்கியது.இந்த யாகத்தால் அப்படி செய்ய இயலவில்லை.அதனால் இஃது அதற்கு ஈடாகாது என்பது என் கருத்து' என்று கூறி அந்தக் கீரி (தர்மதேவதை)மறைந்தது.
இதனால் நேர்மையான வழியில் பொருளைச் சேர்த்துத் தூய உள்ளத்துடன் செய்யப்படும் சிறிய தானம் கூட ஆரவாரத்துடன் ஆயிரம் ஆயிரமாக வழங்கிக் காண்போரைப் பிரம்மிக்க வைக்கும் அஸ்வமேத யாகத்தை விடச் சிறந்ததாகும்..என்ற உண்மை புலப்படுகிறது.
No comments:
Post a Comment