Wednesday, August 24, 2011

166-கல்வி,அறம்,பொருள்,இன்பம்
பார்வதி ஈஸ்வரனை நோக்கிக் கல்வி,அறம்,பொருள், இன்பம் பற்றி விளக்குமாறு வேண்டிக் கொள்ள,ஈஸ்வரன் கூறலானார்.
மனிதப் பிறவி மட்டுமே தொழில் செய்யும் வாய்ப்புப் பெற்றுள்ளது.ஏனைய பிறவிகளுக்கு இவ்வாய்ப்பு இல்லை.இன்பமும்,துன்பமும் மற்ற உயிரினங்களுக்கும் உண்டு.ஒருவன் எத் தொழிலை எப்படிச் செய்ய வேண்டும் என்ற அறிவு அவனுக்குக் கல்வியினாலேயே அமையும்.கல்வியால் அறிவு விரிவடைகிறது.அறிவினால் உண்மையை அறிய முடிகிறது.உண்மையை உணர்ந்தவன் பொறாமை,அவா,சினம் முதலான மாசுகளை அகற்றி மனத்தைத் தூய்மையாய் வைத்துக் கொள்வான்.
கல்வியினால் ஒருவன் எங்குச் சென்றாலும் சிறந்த வாழ்க்கை நடத்த முடியும்.ஆதலால் ஒவ்வொருவரும் கல்வியால் தம்மை உயர்த்திக் கொள்ள வேண்டும்.கல்வி அறிவினால் நன்மை தீமைகளைத் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.மனத்தில் தோன்றும் சினம், ஆசை முதலிய குற்றங்களைப் போக்கி ஆன்மத் தூய்மையுடன் விளங்க வேண்டும்.பெரியோரைப் போற்றி வழிபட வேண்டும்.மனமானது குடும்பத்தில் வழி வழியாய் வரும் ஒழுக்கத்தைப் பற்றும்.ஆதலால் நல்ல குடும்பத்தில் பிறப்பதற்காகத் தான தருமங்கள் முற்காலத்தில் விதிக்கப்பட்டன.ஒருவன் கல்வியின் மூலமாக வாழவேண்டும் என கருதுவானாயின்,ஒரு நல்ல ஆசிரியரிடம் பயிற்சி பெற வேண்டும்.கற்ற கல்வியை மேலும் மேலும் நல்ல நூல்களைப் படித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உழவுத்தொழில் மூலம் ஒருவர் வாழ நினைத்தால் நல்ல நீர்வளம் நிறைந்த இடத்தை நாடி உழவுத்தொழிலை மேற்கொள்ள வேண்டும்.வாணிபத்தை மேற்கொள்வதாயின் காலத்திற்கு ஏற்றவாறு மிக நுணுக்கமாக விலை மாற்றங்களைச் செய்து சாதுர்யமாக வாழ வேண்டும்.பத்து, பதினைந்து பசுக்களை வைத்து பால் வியாபாரம் செய்யலாம்.ஒரு முதலாளியிடம் வேலை செய்யும் தொழிலாளி தான் வாங்கும் பணத்தைவிடப் பல மடங்கு வேலை செய்து முதலாளியின் நன் மதிப்பைப் பெற வேண்டும்.முதலாளியும் அத்தகைய தொழிலாளியிடம் மிகவும் அன்பு கொண்டு தன் குடும்பத்தில் ஒருவனாகக் கருதி அவன் தேவையை நிறைவேற்ற வேண்டும்.அப்போதுதான் நாட்டில் தொழில் பெருகும்,வாணிபம் செழிக்கும்.இடம்,காலம்,மூலதனம்,செய்திறம் ஆகியவற்றை ஆராய்ந்து தெய்வத்தாலோ,மனிதனாலோ இடையூறு நேரா வண்ணம் எண்ணிப்பார்த்து ஒரு தொழிலைத் தொடங்க வேண்டும்.கிடைத்தப் பொருளைக் காப்பாற்ற வேண்டும்.மேலும், மேலும் பெருக்க வேண்டும்.இடைவிடாமல் தொழிலைச் செய்ய வேண்டும்.ஆராய்ந்து பாராமல் இருப்பதே போதும் என்று தொழில் புரியாமல் உண்பவனுடைய செல்வம் மலை அளவு இருந்தாலும் நாளாவட்டத்தில் அழிந்து விடும்.
அறிவுடையவன் தொழிலால் வரும் லாபத்தை ஒழுங்காக வரையறை செய்து கொண்டு செலவிட வேண்டும்.ஒரு பாகத்தைத் தரும காரியங்களுக்காகச் செலவழிக்க வேண்டும்.ஒரு பாகத்தைக் கொண்டு மேலும் செல்வத்தைப் பெருக்க வேண்டும்.பொருள் இல்லாதவரை உலகம் ஒரு நாளும் மதிக்காது. அத்தகைய பொருளைக் கண்ணும் கருத்துமாகப் பெற முயற்சித்தல் முதல் கடமை என உணர்ந்து செயல்பட வேண்டும்.ஒரு பாகத்தைத் திடீரென ஏற்படும் நோய்களையும் ஆபத்துகளையும் போக்கச் செலவிட வேண்டும்.பொருள் இல்லாதவன் இம்மை இன்பங்களையும் மறுமை இன்பங்களையும் இழப்பான்.உண்ணும் உணவினால் எப்படி ஐம்பொறிகளும் செயல் படுகின்றனவோ அப்படியே சேர்க்கும் பொருளால் உலகத்தில் செயல்கள் நடைபெறுகின்றன.உணவு இல்லையேல் ஐம்பொறிகளும் நிலைகலங்கிப் போவது போலப் பொருள் இல்லையேல் வீடும் நாடும் அழிந்தொழியும்.
பொருளை நல்வழியில் சேர்ப்பது, செலவழிப்பது என்பதோடு நில்லாமல் ஒருவன் ஞான மார்க்கத்தில் நிலை பெற வேண்டும்.ஆன்ம முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபட வேண்டும்.நல்ல உணவாலும் நல்ல ஒழுக்கத்தாலும் உடலைக் காப்பாற்ற வேண்டும்.எப்படிப்பட்டவனும் தன் சக்திக்கு ஏற்றவாறு எதையும் செய்ய வேண்டும்.தன் சக்திக்கு ஏற்ற தவம்..சக்திக்கு ஏற்ற தானம்..சக்திக்கு ஏற்ற தியாகம் என்பதை நினைவில் கொண்டு வாழ்க்கையை நெறிப்படுத்திக் கொள்ள வேண்டும்' எனக் கூறி முடித்தார் ஈஸ்வரன்.     (தொடரும்)

1 comment:

முனைவர் இரா.குணசீலன் said...

கல்வியினால் ஒருவன் எங்குச் சென்றாலும் சிறந்த வாழ்க்கை நடத்த முடியும்.ஆதலால் ஒவ்வொருவரும் கல்வியால் தம்மை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

நல்லதொரு பதிவு.

தொடர்க.

Post a Comment