Wednesday, February 4, 2009

14- துரோணர் கேட்ட குருதட்சணை

துரியோதனின் அன்பைக் கண்டு..கர்ணன் மகிழ்ந்தான்.இனி எப்போதும் துரியோதனனை விட்டுப் பிரிவதில்லை என விரதம் மேற்கொண்டான்.கர்ணன் தேரோட்டியின் வளர்ப்பு மகன் என்று அறிந்த
பீமன்..'அர்ச்சுனனுடன் போட்டியிட உனக்கு என்ன தகுதி இருக்கிறது' என ஏசினான்.

உடன் கோபம் அடைந்த துரியோதனன்..பீமனை நோக்கி..'பிறப்புப் பற்றி பேசுகிறாயா? நதிமூலம்,ரிஷிமூலம் பார்க்கக்கூடாது.துரோணர்,கிருபர் ஆகியோர் பிறப்பு பற்றி யாராவது ஆராய்வர்களா? பீமா..உன் தந்தையின் பிறப்பையும்,என் தந்தையின் பிறப்பையும் எண்ணிப்பார்.பிறப்பில் பெருமை இல்லை.செய்யும் தொழிலில் தான் இருக்கிறது.உண்மையில் அர்ச்சுனனிடம் வீரம் இருக்குமேயானால்..கர்ணனிடம் மோதி பார்க்கட்டும்.'என்றான்..ஆனால் போட்டி தொடரவில்லை.

பயிற்சியும்,போட்டியும் முடிந்தபின்..குருவான துரோணருக்கு..அரசகுமாரர்கள் குருதட்சணை தர விரும்பினர்.ஆனால் துரோணர் எதிர்ப்பார்த்த தட்சணை வேறு..பழம் பகை ஒன்றை தீர்த்துக் கொள்ள விரும்பினார்.

அவரது இளமைக்காலத்தில்..அவரது தந்தையான பரத்துவாச முனிவரிடம் பல விதக் கலைகளைக் கற்று வந்தார்.அந்த சமயம்..பாஞ்சால நாட்டு மன்னன் புருஷதனின் மகன் துருபதனும்..பரத்துவாசரி
டம் பயின்று வந்தான்.நாள் ஆக..ஆக..இருவரின் நட்பும் நெருக்கமாக..தான் மன்னனாக ஆனதும் நாட்டில் பாதியை துரோணருக்கு கொடுப்பதாக..துருபதன் வாக்களித்தான்.

பின் துருபதன் மன்னனாக ஆனான்.அந்த சமயம்..துரோணர் வறுமையில் வாடினார்.துருபதனைக் காண அவர் சென்றபோது துருபதன் அவரை அலட்சியப் படுத்தினான்.அரசனுக்கும், ஆண்டிக்கும் நட்பா..என்றான்.துரோணரை அவமானப்படுத்தினான்.துரோணர் அவனை பழிவாங்க காத்திருந்தார்.

இப்போது அதற்கான நேரம் வந்ததாக எண்ணினார்.தன் மாணவர்களை நோக்கி..'பாஞ்சால நாட்டு மன்னனை சிறை எடுத்து..கொண்டு வருக..அதுவே நான் விரும்பும் குருதட்சணை' என்றார்.

துரியோதனன்..படை கொண்டு துருபதனிடம் போரிட்டு தோற்று திரும்பினான்.பின் அர்ச்சுனன் சென்று..அவனை வென்று...சிறைப் படுத்தி...துரோணர் முன் நிறுத்தினான்.

துரோணர்..துருபதனை நோக்கி'செல்வச் செருக்கால் தலை நிமிர்ந்து நின்றாயே..இப்போது உன் நிலையைப் பார்.செல்வம் நில்லாது..என உணர்...ஆணவத்தை விட்டு..அடக்கத்தை கடைப்பிடி.உன் நாட்டின் பாதியை எடுத்துக் கொண்டு..மறு பாதியை உனக்குத் தருகிறேன்..நம் நட்பைத் தொடரலாம்' என்று கூறி அவனை ஆரத் தழுவி..நாட்டுக்கு அனுப்பினார்.

ஆனால்..துருபதன் மனம் மாறவில்லை. துரோணரிடம் முன்னைவிட பல மடங்கு கோபம் கொண்டான்.அவரைக் கொல்ல மாபெரும் வீரனை மகனாகப் பெற வேண்டும் என உறுதி பூண்டான்.பெரும் வேள்வி செய்தான்.அந்த வேள்வியிலிருந்து..அவனுக்கு ஒரு மகனும்..ஒரு மகளும் தோன்றினர்.எதிர்காலத்தில் துரோணரை அழிக்கப் பிறந்த அந்த மகன் பெயர் 'திட்டத்துய்மன்'.மகளின் பெயர்
'திரௌபதி'.

தன் மகளை பார்த்தனுக்கு மணம் முடிக்க சரியான காலத்தை எதிர்நோக்கி காத்திருந்தான் துருபதன்.

1 comment:

virutcham said...

நான் சமீபத்தில் பாலகுமாரனின் என் அன்பு மந்திரம் நாவல் படித்தேன். அது துரோணர், துருபதன் நட்பை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை.
அதில் துரோணர் துருபதனை குறு தட்சிணையாக தன மாணவர்களாகிய பாண்டவர்களை வைத்து சிறை பிடித்து வந்தார் என்பது சொல்லப் பட்டு இருந்தது. ஆனால் ராஜ்யத்தில் பாதியை அப்போதும் பெற்றுக் கொள்ளவில்லை என்றே இருந்தது.

இதில் எது சரி?


இந்தக் கதையை மைய்யமாக வைத்து நான் எழுதிய கட்டுரைகள் இங்கே, http://www.virutcham.com/

Post a Comment