Tuesday, August 2, 2011

158-தரும வியாதர் உரைத்த நீதிகள் -3



மேலும் தருமவியாதர் கூறலானார்..
நான் செய்யும் தொழில் பாராட்டத்தக்கது அல்ல.உண்மையில் இதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை.முற்பிறப்பில் செய்த தீவினையினால் இப்பிறப்பில் இத் தொழிலைச் செய்கிறேன்.விதி வலிமை மிக்கது.யாராலும் அதை அடக்க முடியாது.பிறப்புக் காரணமாக இத் தொழிலை செய்துக் கொண்டிருக்கிறேன்.அறவோரை போற்றி வணங்குகிறேன்.தருமத்தில் பற்றுடையவனாக இருக்கின்றேன்.எப்போதும் நான் செருக்குக் கொள்வதில்லை.நான் அதிகமாகப் பேசுவதுமில்லை.நான் பயிர்த் தொழிலை மேலானதாகக் கருதுகின்றேன்.அதிலும் ஜீவஹிம்சை உள்ளது.கலப்பைக் கொண்டு உழுகையில் பூமியில் உள்ள உயிர்கள் நாசம் அடைகின்றன..
மனிதர்களில் சிலர் பிற உயிர்களைக் கொல்கின்றனர்.நடக்கையில் பல உயிர்கள் மிதிப்பட்டு இறக்கின்றன.உட்கார்ந்திருப்பவர்களும்,படுத்திருப்பவர்களும் தங்கள் உடல் அசைவினால் பல உயிர்களைத் தாங்கள் அறியாமலேயே கொல்கின்றனர்.
உயிர்களைக் கொல்லக் கூடாது என்பது உயரிய தருமம்தான்.ஆனால் உலகம் முழுதும் பிராணிகளைக் கொன்று ஜீவிக்கும் பிராணிகள் தான் அதிகம் உள்ளன.கொல்லாமையே உயர்ந்தது என்னும் சாதுக்கள் கூடத் தம்மை அறியாமல் பிற உயிர்கலுக்குத் துன்பம் விளைவிக்கின்றனர்.உலகில் பலவகை மனிதர்கள் உள்ளனர்.உறவினர்கள் செல்வம் உடைய உறவைப் பார்த்து மகிழ்வதில்லை.செருக்கு மிக்கவர்கள் குருவையே அவமதிக்கின்றனர்.தருமத்துடன் பல செயல்கள் நடைபெறுகின்றன.அதே சமயம் தருமமும் அதருமமும் கலந்த நிகழ்வுகலும் நிகழ்கின்றன.எவன் ஒருவன் தன் தொழிலை நேர்மையுடன் செய்கிறானோ அவன் சுவர்க்கம் செல்வது உறுதி' என்றார் வியாதர்..
பின்னர் தரும வியாதர் முயற்சியை விட விதியைப் புகழ்ந்து பேசினார்.நன்மை, தீமைகளே இன்ப துன்பங்களுக்குக் காரணம் என்றார்.
தருமத்தின் சூட்சுமத்தைச் சுலபமாக யாராலும் உணரமுடியாது.அது பல நேரங்களில் பல வகையாகக் காட்சியளிக்கிறது.பொய் சொல்வதால் நன்மை ஏற்படுமாயின் அந்தப் பொய் பழிக்கப்படாது.அதனால் பாவமும் நேராது.அந்தப் பொய் உண்மையாகவே எண்ணப்படும்.சில நேரங்களில் உண்மை பேசுவதால் பொய்யால் நேரும் பாவம் உண்டாகக்கூடும். ஆதலால் 'எந்தப் பேச்சு உயிருக்கு இன்பம் தருமோ அந்தப் பேச்சு சத்தியமானது.' என்று சான்றோர் அறம் கூறினர்.அது உண்மையா பொய்யா என்பதல்ல, முக்கியம்.அது பிற உயிருக்கு நன்மை தருமா, தராதா என்பதே முக்கியம்.உயிருக்கு உண்மை தராத உண்மைப் பேச்சு அதருமம் எனக் கருதப்படும்.
யாராக இருந்தாலும் நன்மை தீமைகளை அனுபவித்தே ஆக வேண்டும்.இதில் ஐயமில்லை.மனிதன் கெட்ட நிலையை அடைந்தால் செல்வத்தைப் பழிக்கிறான்.அது தனது கர்மப் பலன் என உணர்வதில்லை.
ஊழ்வினை என ஒன்று இல்லையானால், மக்கள் இறக்கமாட்டார்கள்.முதுமை அடைய மாட்டார்கள்.அவரவர் விரும்பியதைப் பெற்று மகிழ்ச்சியடைவர்.ஒவ்வொருவரும் மற்றவரைவிட உயர்வாகவே இருக்க விரும்புகின்றனர்.முயல்கின்றனர்.ஆனால் எண்ணம் போல ஏதும் நடப்பதில்லை.ஆன்மா என்பது தோன்றுவதும் இல்லை..அழிவதும் இல்லை.எல்லா உயிர்களின் உடலும் அழியக் கூடியவை.உடல் கொல்லப்படுமாயின் அந்த உடலுக்கு மட்டுமே அழிவு ஏற்படுகிறது.உயிரோ முன் செய்த புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப, மீண்டும் ஓர் உடலை அடைகிறது.
அவன் இறந்தான்..அவன் பிறந்தான் என பேசப்படுவது எல்லாம் உயிரைப் பற்றி அன்று.அழிவு உடலுக்குத்தான்.உயிருக்கு அல்ல.உடல் அழிகையில் உயிர் பிரிகிறது என்பதெல்லாம் தவறு.உயிர் இப்போதுள்ள உடலைவிட்டு வேறோரு உடலை அடைவதையே மரணம் என்கிறார்கள்.இவ்வுலகில் ஒருவர் செய்த வினைப்பயனை இன்னொருவன் அனுபவிப்பதில்லை.அவரவர் செய்த புண்ணிய பாவங்களை அவரவரே அனுபவிக்கின்றனர்.அதனால் நல்லோர் நல் செயல்களையே செய்கின்றனர்.தீயோர் தீய செயல்களையே செய்கின்றனர்.இவ்வுலகில் புண்ணிய பாவங்களுக்கு ஏற்பப் பிறவி ஏற்படுகிறது.அவன் மனிதனாகத்தான் பிறக்கின்றான் என்பதில்லை.வினைக்கு ஏற்ப நாயாகவோ,பூனையாகவோ,ஈயாகவோ,எறும்பாகவோ,மரமாகவோ,தேவனாகவோ பிறக்கிறான்' என்றார் தரும வியாதர்.
பின் அவரை நோக்கி கௌசிகன், 'தருமமுணர்ந்தவரே! உயிர் எவ்வாறு பிறப்பை அடைகிறது? எப்படி புண்ணிய பாவ கர்மங்களின் சம்பந்தத்தை அடைகிறது' என வினவ தரும வியாதர் சொன்னது அடுத்த பதிவில்..
(தொடரும்)

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

தருமத்தின் சூட்சுமத்தைச் சுலபமாக யாராலும் உணரமுடியாது.அது பல நேரங்களில் பல வகையாகக் காட்சியளிக்கிறது.//

சூட்சுமம் உரைக்கும் அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

Keezhappatti said...

அருமையான கருத்துள்ள பதிவு

Post a Comment