Thursday, July 28, 2011

157-தரும வியாதர் உரைத்த நீதிகள் -2

"என் மூதாதையர் காலத்திலிருந்தே இத் தொழிலை என் குடும்பம் செய்து வருகிறது.என் பெற்றோரைக் காப்பது ஒன்றே என் கடமையாய் செய்து வருகிறேன்.இத் தொழிலைப் பற்றி நான் கவலைப்படவில்லை.என் வாழ்வில் சில நெறி முறைகளை பின் பற்றி வருகிறேன்.சத்தியம் தவறுவதில்லை.உண்மையே பேசுகிறேன்.வினைப் பயனை நம்புகிறேன்.யாரையும் இழிவாகக் கருதுவதில்லை.இன்ப துன்பங்களை சமமாய் எண்ணுகிறேன்.நாட்டில் நல்லாட்சி நடைகிறது.ஜனக மாமன்னன் நீதி தவறாது ஆட்சி செய்கிறான்.
நானாக எதையும் கொல்வதில்லை.பிறரால் கொல்லப்பட்ட மாட்டிறைச்சிகளை விற்கிறேன்.ஆனால் நான் புலால் உண்பதில்லை.நோன்பு நோற்கிறேன்.பிறரது புகழ்ச்சியையும்,இகழ்ச்சியையும் சமமாகக் கருதுகிறேன்.ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த அளவிற்கு தானம் செய்ய வேண்டும்.காமத்தாலோ, பயத்தாலோ தருமத்தை விட்டுவிடக்கூடாது.அரிய காரியங்களைச் செய்ய தளர்ச்சியடையக் கூடாது.நல்ல செயல்கலையே எப்போதும் செய்ய வேண்டும்.ஒரு பாவி தன் பாவச்செயலால் அழிந்துப் போகிறான்.தூயோரைப் பழிப்பதும்,தருமத்தில்பற்றின்மையும் அழிவைத் தருகின்றன.நல்லோர்கள் அனைவரிடமும் பணிவுடன் இருப்பர்.அடக்கம் இல்லாதவர்கள் தற்புகழ்ச்சியில் ஈடுபட்டுத் தாழ்வடைகின்றனர்.தவறுசெய்பவர் அத் தவறை உணர்ந்து வருந்துவாராயின் அவர்களைப் பாவ கர்மம் பற்ருவதில்லை.ஒருவன் தவறான செயல்களைச் செய்து விட்டு 'நான் அப்படிச் செய்யவில்லை' என சாதித்தாலும் அவன் பாவ கர்மத்தினின்றும் தப்ப முடியாது.
எவன் தன் குற்றம் உணராது பிறர் குற்றம் காண்கின்றானோ அவனுக்கு நற்கதி கிடைக்காது.அவன் மறுமையிலும் துன்புறுவான்.நற்செயல்கள் செய்வதால் ஒருவன் எல்லாப் பாவங்களையும் தொலைத்துவிடுகின்றான்., பேராசையுள்ளவர்கள் பாவப்படுகுழியில் வீழ்வர்.' என்றார் தரும வியாதர்.
கௌசிகன் தக்கோரின் மேலான ஒழுக்கங்களைக் கூறுமாறு கேட்க,வியாதர் பதில் உரைத்தார்..

'மேலான ஒழுக்கங்களில் தானம்,தவம்,யாகம்,ஆகமம்,சத்தியம் ஆகிய ஐந்தும் குறிப்பிடத்தக்கன.ஆகமத்தின் அடிப்படை சத்தியம்.சத்தியத்தின் அடிப்படை புலனடக்கம்.புலனடக்கத்தின் அடிப்படை போகங்களைத் துறத்தல்.இவை எப்போதும் மேலான ஆசாரங்களில் நிலை பெற்றுள்ளன.எப்போதும் உண்மையையே உரைத்து, தருமத்தைச் செய்து, நிதானத்துடன் ஆகமக் கருத்துகளைக் கவனமாக கற்று உணர்ந்து அறம்,பொருள்,இன்பங்களை அடைபவர்கள் மேலான ஒழுக்க சீலர் ஆவர்.
ஐம்பொறிகளையும் அடக்கி வென்றவர்கள் மோட்சத்தை அடைவர்.அல்லாதார் துன்பக் கடலில் மூழ்குவர்.கொல்லாமை,வாய்மை, எல்லா உயிரிடத்தும் அன்புடன் இருத்தல் ஆகிய மூன்றும் உயர்ந்த தருமம் ஆகும்.இம்மூன்றில் கொல்லாமை மிக உயர்ந்த தருமம்.அது வாய்மையில் நிலை பெறுகிறது.சாதுக்களின் தருமம் என்பது மேலான ஒழுக்கமாகும்.நியாயத்துடன் பொருந்தியது தருமம் என்றும்,அநியாயத்துடன் கூடியது பாவம் என்றும் சொல்லப்படுகிறது.யாரிடம் கோபம்,செருக்கு,வஞ்சனை முதலிய கெட்ட பண்புகள் இல்லையோ அவர்கள் ஒழுக்கம் உள்ளவராய் கருதப்படுவர்.
நல்வினை, தீவினைகளின் பயனான இன்ப, துன்பங்களை அனுபவிப்பதன் மூலம் வினைகள் கெடுகின்றன என எண்ணுபவர்கள் மேலோராவர்.தானம் செய்வதில் நாட்டமுடையவர்கள் இன்பத்தை அடைவார்கள்.மேலான ஒழுக்கம் உடையவர் தமது குடும்பங்களின் சௌகரியங்களைக் குறைத்துக் கொண்டு சாதுக்களுக்கு உதவி செய்வர்.அறவோர் ஞானமாகிய உயர்நிலையில் நின்று புத்தி மயங்கிக் கிடக்கும் மக்களை நல்வழிப்படுத்த நினைப்பர்' என்று கௌசிகனுக்கு மேலோரின் பண்புகள் பற்றிக் கூறினார் தருமவியாதர்.
அவர் மேலும் கூறியது அடுத்த பதிவில்.

No comments:

Post a Comment