Thursday, August 11, 2011

161-கணவனை வயப்படுத்தும் வழி




கணவனை வயப்படுத்தும் வழி யாது? என்று வினவிய சத்யபாமாவிற்கு திரௌபதி உரைத்தது..

நீண்ட நாட்களுக்குப் பின் சத்யபாமாவும் திரௌபதியும் சந்தித்தனர்.கண்ணனின் மனைவியான சத்யபாமா திரௌபதியை நோக்கி..'புகழ் மிக்க பாண்டவர்களை நீ எவ்வாறு வயப்படுத்தினாய்? இதற்குக் காரணம் உனது விரதமா?தவமா? மந்திரமா? வயப்படுத்தும் மை ஏதேனும் வைத்துள்ளாயா?பாண்டவர் ஐவரும் உன்னைக் கண்டு மயங்கிக் கிடக்கிறார்களே, அதற்கு என்ன காரணம்? கண்ணபிரான் எப்போதும் என் வயப்பட்டு இருக்க வேண்டும்.இவற்றையெல்லாம் எனக்கு சொல்' என்றாள்.
'சத்யா..கெட்ட பெண்களின் நடத்தைப் பற்றி நான் ஏதும் கூற மாட்டேன்.நல்ல மாதர்களின் ஒழுக்கத்தைப் பற்றி மட்டும் உரைக்கின்றேன்.மந்திரத்தாலோ,மாயையாலோ, மூலிகையாலோ தன்னை வயப்படுத்தும் மனைவியைக் காணும் கணவன் பாம்பைக் கண்டு அஞ்சுவது போல அஞ்சுவான்.மனைவிக்கு பயப்படும் கணவனுக்கு மன அமைதி இல்லை.அமைதியில்லை என்றால் இன்பம் ஏது!"கெட்ட நடத்தையுள்ள பெண்கள்  கணவனுக்கு தீங்கிழைக்கின்றனர்.கணவனுக்கு விருப்பமில்லா எதையும் மனைவி செய்யக் கூடாது..
நான் என் கணவர்களிடம் நடந்துக் கொள்ளும் முறை பற்றிச் சொல்கிறேன்.என்னிடம் சிறிதும் கர்வமில்லை.ஆசையும் இல்லை.சினமும் இல்லை.பொறாமை என்பது கிஞ்சித்தும் இல்லை.என் மனதைக் கட்டுப்பாடுடன் வைத்துள்ளேன்.தகாத சொற்களைச் சொல்வதில்லை.அதிகமாகவும் ஏதும் கூறுவதில்லை.கணவரின் மனம் அறிந்து நடக்கிறேன்.சூரிய, சந்தரருக்கு இணையான என் கணவர்களை எண்ணிப் பெருமைப்படுகிறேன்.கணவரைத் தவிர மற்றவரை அவர்கள் எவ்வளவு உயரிய நிலையில் இருந்தாலும் நினைத்துக் கூட பார்க்க மாட்டேன்.கணவர் உணவின்றி இருந்தாலும் நானும் அவ்வாறே பட்டினி கிடப்பேன்.வெளியேயிருந்து கணவர் வீடு திரும்பியதும் தக்கவாறு உபசரிப்பேன்.தூய உணவை உரிய காலத்தில் அளிக்கிறேன்.எப்போதும் வீட்டைச் சுத்தமாக வைத்திருக்கிறேன்.சோம்பல் என்பது என்னிடம் துளியும் இல்லை.
கணவர் வெளிநாடு சென்றிருக்கும் போது நான் என்னை அழகு படுத்திக் கொள்வதில்லை.நீராடேன்..பூச்சூடேன்.பூமி போன்ற பொறையுடைய என் மாமியாரை மிகுந்த மரியாதையுடன் கவனித்துக் கொள்கிறேன்.என் கணவர் சத்தியம் தவறாதவர்.நானும் அவ்வாறே உண்மையைக் கடைப்பிடிக்கிறேன்.குடும்பத்தின் வரவு செலவுகளையும் நானே கவனித்துக் கொள்கிறேன்.பின் தூங்கி முன் எழுவேன்..இப்படித்தான் என் கணவரை நான் வயப்படுத்தித் திருப்தி செய்கிறேன்.இது போலவே நீயும் நடந்துக் கொள்வாயாயின் உன் கணவரான கண்ணன் உன்னை விட்டுப் பிரியவே மாட்டார்.' என்றாள் பாஞ்சாலி.
சத்யபாமா திரௌபதியின் சொல் கேட்டு, வாழ்த்தி விடை பெற்றாள்.

No comments:

Post a Comment