Tuesday, March 15, 2011

146-பொருள் ஆசை துக்ககரமானது





பொருள்களின் மீது தோன்றும் வைராக்கியமே உண்மையான இன்பத்திற்குக் காரணம் என்பதை விளக்கும் கதை

பீஷ்மர் தருமரிடம், 'தருமா..வாய்மை,வைராக்கியம்,இன்ப துன்பங்களைச் சமமாகக் கருதுதல்,பற்றில்லாமல் செயலில் ஈடுபடுதல்,வீணாகக் கஷ்டப் படாமலிருத்தல் ஆகிய ஐந்துமே அமைதிக்குக் காரணமாகும்.துறவிகள் இந்த ஐந்தையுமே உத்தம இன்பமாகவும், உத்தம தருமமாகவும் கருதுவர்.இது தொடர்பாக மங்கி என்பவரின் கதையைச் சொல்கிறேன்' என்றபடி தொடர்ந்தார்.

எத்தனையோ தொழில்களைச் செய்தும் பொருள் சேர்க்க இயலாமையால் மங்கி என்பவர் சோர்ந்து போனார்.அவரிடம் சிறிதளவு பணம் இருந்தது.இதுதான் இறுதி என, அப்பணத்தைக் கொண்டு இரு கன்றுக் குட்டிகளை வாங்கினார்.அவற்றை உழவுத் தொழிலுக்கு பழக்குவதற்காக ஒரு நுகத்தடியில் பூட்டி ஓட்டிக் கொண்டு போனார்.பயிற்சி இல்லாக் காரணத்தால் கன்றுக் குட்டிகள் மிரண்டு ஓடின.அப்படி ஓடும் போது, ஒட்டகம் ஒன்று வழியில் படுத்திருந்தது.ஒட்டகம் மத்தியில் இருக்க, இரு புறமும் இரு கன்றுக் குட்டிகள் ஓட..ஒட்டகத்தின் தலை மீது நுகத்தடி உராய்ந்து சென்றது.அது கண்டு ஆத்திரமடைந்த ஒட்டகம் திடீரென எழுந்தது.இரு கன்றுக் குட்டிகளையும் நுகத்தடியுடன் தூக்கிக் கொண்டு விரந்து சென்றது.கன்றுகள் உயிர் போவது போலத் துடித்தன.மங்கி மனம் தளர்ந்து..

மனிதனிடம் ஆற்றலிருந்தாலும், அதிர்ஷ்டம் இல்லையெனில் பொருள் சேர்க்க இயலாது.இறைவனின் அருள் இருந்தால் தான் முயற்சியும் கை கூடும்.அலை கடலையும்,பல மலைகளையும் கடந்து முயன்றாலும் முயற்சி இல்லையெனில் பொருள் இல்லை .எவ்வளவோ முயற்சிகளில் ஈடு பட்டேன்..பயன் இல்லை.ஆயினும் விடாமுயற்சியுடன் இரு கன்றுகளை, ஏரில் பழக்கலாம் என நுகத்தடியில் பூட்டி ஓட்டினேன்.ஒட்டகம் ஒன்று கன்றுகளை நுகத்தடியுடன் தூக்கிச் சென்று விட்டது.கன்றுகளை எவ்வளவு முயன்றும் ஒட்டகத்தின் பிடியிலிருந்து மீட்க முடியவில்லை.அந்த ஒட்டகத்தின் இரு புறமும் கட்டித் தொங்கவிடப்பட்ட மணிகள் போல கன்றுக் குட்டிகள் தொங்குகின்றன.

தெய்வ சம்மதம் இல்லா முயற்சியில் என்ன பயன்.உண்மையான இன்பம் என்பது பொருள் ஆசையைத் துறப்பதுதான். ஆசையை நிறைவேற்றுவது இன்பமல்ல.ஆசையே இல்லாமல் இருப்பதுதான் நிலையான இன்பம் பொருள் பெருகப் பெருக ஆசையும் பெருகிக் கொண்டே போகும்.

என் ஆசை நிறைவேறிவிட்டது என நிம்மதியுடன் இருக்கும் மனிதனைக் காண்பது அரிது.பேராசைக் கொண்ட மனம்..வைராக்கியம் கொண்டு பொருள் பற்றினின்று விலக வேண்டும்.பொருள் சேர்க்க சேர்க்க அது அழிந்துக் கொண்டிருக்கக் கண்டும் மீண்டும் அதன் மீது நாட்டம் ஏன்' என பலவாறு சிந்தித்தார் மங்கி.

பின் உறுதி கொண்டு எழுந்தார்.'இப்போது என் மனம் உறுதி மிக்கதாய் ஆகிவிட்டது.காமமே..உன்னை மட்டும் நான் விட்டு விடுவேனா..உன்னையும் வேருடன் களைந்து எறிந்து விட்டேன்.பொருள் ஆசை துக்ககரமானது என்பதை அறிந்துக் கொண்ட நான், காமத்தை மட்டும் வளர விடுவேனா?இனி நான் எனக்கு உண்டாகும் துன்பங்கள் அனைத்தையும் பொறுத்துக் கொள்வேன்.பிறர் எனக்குத் துன்பம் தந்தாலும் நான் அவர்க்கு துன்பம் தர மாட்டேன்.

காமமே..இனி எனக்கு எது கிடைக்கிறதோ அதைக் கொண்டு மன நிறைவு கொள்வேன்.பழைய வாழ்க்கை இனி இல்லை.வைராக்கியம் மேலிடுகிறது.இன்பம்,மன நிறைவு,புலனடக்கம்,வாய்மை,பொறுமை ஆகிய அனைத்தும் இப்போது என்னிடம் இருக்கின்றன.காமமே! நீ ரஜோ குணத்திலிருந்து பிறந்தாய்.உன்னை ஒழிக்க வேண்டுமானால் முதலில் ரஜோ குணத்தைத் தொலைக்க வேண்டும்.குளிர்ந்த நீரில் இறங்கித் தாகத்தை போக்கிக் கொள்வது போல, பரம்பொருளைச் சார்ந்து கர்மங்களை ஒழிப்பேன்.ஆசையை அறவே துறப்பதால் ஏற்படும் இன்பம், அதைப் பெறுவதால் ஏற்படும் இன்பத்தை விடப் பல மடங்கு உயர்ந்ததாகும்.ஆன்மாவை அலைக்கழிப்பதில் பொறாமை,வஞ்சனை ஆகிய இவற்றைக் காட்டிலும் காமமே மிகவும் சக்தி வாய்ந்தது.இவை அனைத்தையும் வைராக்கியம் என்னும் வாளால் வெட்டி வீழ்த்திப் பரமானந்தத்தில் திளைக்கப் போகிறேன்' என்றார் மங்கி.

தருமா..இவ்வாறு மங்கி வைராக்கியம் மேலிட, எல்லா ஆசைகளையும் துறந்து அஞ்ஞானத்தை வேரறுத்து முடிவில் பிரமபதத்தை அடைந்து பேரானந்தம் அடைந்தார்.

Thursday, March 10, 2011

145-செல்வமாகக் கருத வேண்டியவை எவை?





ஞானம்,சத்தியம்,ஆசை,தியாகம் அகியவற்றின் தன்மையை விளக்குமாறு கேட்டுக் கொண்ட தருமருக்கு பீஷ்மர் சொல்லத் தொடங்கினார்.

'தருமா..இது சம்பந்தமாக ஒரு தந்தைக்கும் மகனுக்கும் நடைபெற்ற உரையாடலைத் தருகிறேன்.

வேதம் ஓதுவதையே தமது வாழ்க்கையின் முக்கியமாகக் கருதினார் ஒரு அந்தணர்.அவருக்கு மேதாவி என்றொரு மகன் இருந்தான்.பெயருக்கு ஏற்ப அவன் மேதாவியாக விளங்கினான்.முக்தியைப் பற்றிய அறிவும் அவனிடம் இருந்தது.அவன் தந்தையிடம்,'தந்தையே! மனிதனின் ஆயுள் மிகக் குறைவாக இருக்கிறதே..இந்தக் குறைந்த ஆயுளில் நிறைந்த புண்ணியத்தைப் பெறுவது எப்படி?'என வினவினான்.

தந்தை பதில் உரைத்தார்..'மகனே..முதலில் பிரமசர்யத்தில் இருந்த் கொண்டு வேதம் ஓதுதல் வேண்டும்.பிறகு இல்லறத்தில் ஈடுபட்டுச் சிரார்த்தம் முதலான நற்காரியங்களுக்காக மைந்தர்களைப் பெற வேண்டும்.பின் மூன்று அக்கினிகளை உண்டாக்கி, முறைப்படி யாகம் செய்ய வேண்டும்.இறுதியில் காட்டுக்குச் சென்று தவம் இயற்றி முக்திப் பேற்றை அடைய வேண்டும்.'

தந்தையின் இந்தப் பதிலில் திருப்தியடையவில்லை மகன்.அவனது நல்லறக் கருத்துகள் வேறு விதமாய் இருந்தன.'உலகத்தின் இயல்பை நீ நன்கு அறிந்துக் கொள்ளவில்லை போலும்.உலகத்தின் எல்லாப் பக்கங்களிலும் கிழத்தன்மை சூழ்ந்திருக்கிறது.இந்த நிலையில் எமன் விழிப்பாக உயிர் இனங்களைக் கவனித்து வருகிறான்.இதை எண்ணிப் பார்க்க பயமாய் இருக்கிறது.எமன் உலகத்தை ஒவ்வொரு வினாடியும் அழித்துக் கொண்டிருக்கிறான்.இரவும்,பகலும் ஒருவரின் ஆயுளை சிறிது சிறிதாகக் குறைத்துக் கொண்டிருக்கின்றன.இந்நிலையில் மரணவலையில் சிக்கியிருக்கும் துன்பத்தை இன்பமாக மாற்ருவது எப்படி என சிந்திக்கிறேன்.எவன் ஒரு நாளில் எந்த நல்ல செயலையும் செய்யவில்லையோ அந்த நாள் பயனற்ற நாள் என அவன் தெளிதல் வேண்டும்.நமது லட்சியங்கள் நிறைவேறுவதற்கு முன்னரே எமன் நம்மை தொடருகிறான்.

ஒவ்வொருநாளும்,நம் வாழ்நாள் குறைந்து கொண்டே வருகிரது.ஆழமற்ற நீர்நிலையில் வாழும் மீன் இன்பத்தை அடையாதது போல மக்கள் இன்பத்தைப் பெற முடிவதில்லை.நிம்மதியாகப் புல்லை மேய்ந்து கொண்டிருக்கும் ஆட்டைச் செந்நாய் கவர்ந்து செல்வது போல மனிதனை எமன் கவர்ந்து செல்கிறான்.ஆதலால் செய்ய வேண்டிய நல் அறங்களை இப்போதே செய்து விட வேண்டும்.ஏன் எனில் 'இந்த நல்ல காரியம் முடியவில்லையே, பாவம்.. என எமன் காத்துக் கொண்டிருக்க மாட்டான்.எப்போது நம் வாழ்நாள் முடியும் என யாராலும் சொல்ல முடியாது.ஆகவே எப்போதும் நல்ல செயல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

புண்ணியச் செயல்களால் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் உண்டாகும்.எப்போதும் தன் குடும்பம்..தன் குடும்பம் என அலைந்து திரிபவன் தகாத செயல்களிலும் ஈடுபடுவான்.குடும்ப நலன் கருதிக் காலப் போக்கில் பாவத்தை செய்யவும் தயங்க மாட்டான்.அத்தகைய அறக் கேடனை, உறங்கும் விலங்கைப் புலி கவர்ந்து செல்வது போல எமன் கவர்ந்து செல்வான்.வீடு,மனை,தோட்டம்,செல்வம் என அவற்றைச் சேர்ப்பதிலேயே கவனம் செலுத்தும் மன்னன் அவற்றை அனுபவிப்பதற்கு முன்னமே எமனால் கவரப் படுகிறான்.அறிஞன்-அறிவிலி.வீரன்-கோழை,மன்னன்-சாதாரண மனிதன் என எவ்வித பாகுபாடுமின்றி எல்லோரையும் அவர்கள் செயல் முடிவதற்குள், அவர்கள் ஆயுளை முடித்து விடுகிறான் எமன்.

பிற உயிர்க்கு துன்பம் செய்யாதவனை எந்த உயிரும் துன்புறுத்துவதில்லை.பசி,மூப்பு,பிணி ஆகிய இவை எமனின் படை வீரர்கள் என்பதை உணர வேண்டும்.இப் படை வீரர்களைத் தடுக்கும் சிறந்த கருவி சத்தியம் என்னும் வாய்மையாகும்.வாய்மை அல்லாதவற்ரை விலக்க வேண்டும்.முக்தி என்பது வாய்மையிலேயே நிலைத்துள்ளது.ஐம்புலன்களையும் அடக்கி வாய்மையை போற்றும் ஒருவனாலேயே எமனை எதிர்த்து நிற்க முடியும்.

வாய்மையைப் போற்றுபவன் இன்ப துன்பங்களைச் சமமாகக் கருதுவான்.விரதம்,தவம்,தியானம் இவற்றால் மனம்,சொல்,செயல் ஆகியவை தூய்மை அடையும்.தவத்திற்கு இணையானது வாய்மை.கண்ணுக்கு இணையானது கல்வி.தனித்து இருத்தல்,இன்பதுன்பங்களைச் சமமாக பாவித்தல்,ஒழுக்கம்,பணிவுடைமை,கொல்லாமை ஆகியவற்றையே ஒவ்வொருவரும் செல்வமாகக் கருத வேண்டும்.பிற செல்வங்கள் செல்வமே அல்ல.

ஞானம் தான் கண்!

சத்தியம் தான் மேலான தவம்!

ஆசைதான் மிகப் பெரிய துன்பம்!

தியாகம் தான் அழிவில்லாத இன்பம்!



மேலும், தாய்,தந்தை,தாரம்,மக்கள்,உறவினர்,நண்பர் யாராலும் ஒரு பயனும் இல்லை.தருமம் ஒன்றே துணையாகும்.ஆகவே மனக் குகையில் அடைபட்டிருக்கும் ஆன்மாவைக் கண்டு ஆராதனை செய்ய வேண்டும்.' என்று தந்தைக்கு உபதேசம் செய்தான் மேதாவி என்னும் மகன்.

பீஷ்மர் தருமரை நோக்கி,'மைந்தனின் பேச்சைக் கேட்ட தந்தை வாய்மையைப் போற்றி மேன்மை அடைந்தான்.நீயும் வாய்மையைப் போற்றி உயர்வாயாக' என்றார்.

Monday, February 14, 2011

144-நாணலும்..கடலும்..கதை





பலம் வாய்ந்த பகைவனிடம் பணிவாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் நாணலும் கடலும் பற்றிய கதையைப் பீஷ்மர் கூறுகிறார்.

தருமரே! ஒரு சமயம் அசுரர்களின் இருப்பிடமும் நதிகளின் புகலிடமுமான கடலுக்கு ஒரு ஐயம் வந்தது.அது ஆறுகளை நோக்கி 'நதிகளே..உங்கள் வேகமான பிரவாகத்தின் போது பலம் மிக்க வேர்களை வேரோடும், கிளையோடும் கொண்டு வருகிறீர்கள்.ஆனால் நாணலை மட்டும் ஏன் நீங்கள் கொண்டு வருவதில்லை?அது அற்பத்தனமான புல்தானே என்ற அலட்சியத்தால்,அந்த நாணலை விட்டு விடுவீர்களா?உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்' என்றது.அதற்கு கங்கை ஆறு பதில் அளித்தது.

'இந்த மரங்கள் எல்லாம் கொஞ்சமும் பணிவின்றி நிமிர்ந்து நிற்கன்றன.வேகமாக வரும் எங்களைச் சிறிதும் மதிப்பதில்லை.பணிவுடன் வணங்குவதில்லை.அதனால் பலனை அனுபவிக்கின்றன.தம் இடத்தை விட்டுப் பெயர்ந்து தலைகுப்பற எங்கள் பிரவாகத்தில் வீழ்ந்து, அடித்து வரப்பட்டு தங்களை அடைகின்றன.ஆனால் நாணலின் கதையே வேறு..பெரியாரைப் பணிதல் என்பது அதன் தனிக் குணம்.எங்களைக் கண்டு பணிந்து வணங்குகின்றது.அதனால் எங்கள் சினத்திற்கு ஆளாவதில்லை.நாங்கள் வரும் போது வளைந்து கொடுத்துப் பின் நிமிர்ந்து நிற்கின்றது.அது சமய சந்தர்ப்பத்திற்கேற்றவாறு எங்களுக்கு அடங்கி எங்கள் தலைமையை ஏற்றுக் கொள்கிறது.அதனால் அதன் இடத்திலேயே இருக்கின்றது.இங்கு வருவதில்லை.எந்தச் செடியாயினும் கொடியாயினும் மரமாயினும் எங்கள் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாது.ஆதலால் பணிந்து போவது மட்டும் நிலைத்து வாழ்கிறது.பணிவுடைமையை அறியாது விறைத்து நிற்பவை நிலைத்து நிற்காது எங்களால் அடித்து வரப்பட்டு இங்கே நிலை குலைந்து வீழ்கின்றன.'

'கங்கையின் இந்தக் கூற்றிலிருந்து தருமரே! ஒன்றைத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.அரசர்க்கு இக்கதை நல்ல பாடம்.பகைவனின் பேராற்றலின் முன் நிற்க முடியாது என்று தெரிந்தால் அந்த நேரத்துக்குப் பணிதல் வேண்டும்.பின் நாணலைப் போல நிலைத்து வாழலாம்.பகைவரின் ஆற்றலை உணர்த்தும் பணிவின்றி சேண் உயர் தேக்கு போல் நிமிர்ந்து நின்றால் முறிந்து விழ வேண்டியதுதான் என்ற தெளிவு யாவர்க்கும் வேண்டும்' என்றார் பீஷ்மர்.

Friday, February 11, 2011

143-ஒட்டகத்தின் கதை



சோம்பல் அழிவுக்குக் காரணமாகும் என்பதை உணர்த்த பீஷ்மர் சொன்ன ஒட்டகத்தின் கதை

ஒட்டகத்தின் கதையை அனைவரும் அறிவர்.அந்த ஒட்டகம் போல யாரும் சோம்பலாக இருக்கக்கூடாது.முற்பிறப்பைப் பற்றிய ஞானம் உள்ள ஒரு ஒட்டகம் காட்டில் தவம் மேற்கொண்டிருந்தது.அந்தத் தவத்தின் பெருமையை உணர்த்த ப்ரம்ம தேவர் ஒட்டகத்திற்குக் காட்சியளித்தார்.'என்ன வரம் வேண்டும்?' என்று கேட்டார்.

'இருந்த இடத்தில் இருந்த படியே..உணவைப் பெரும் வகையில் என் கழுத்து நீண்டதாக இருக்க வேண்டும்.அந்த நீளமான கழுத்தோடு நான் காட்டில் உலா வர வேண்டும்' என்று கேட்டது.அவ்வாறே ப்ரம்ம தேவர் வரமளித்தார்.அந்த வரத்தைப் பெற்ற பின் ஒட்டகம் உணவிற்காக அதிகம் முயற்சிக்கவில்லை.நீண்ட கழுத்துடன் எங்கும் திரிந்தது.உணவு எளிதாகக் கிடைத்தது.இதனால் சோம்பல் உற்றது ஒட்டகம்.

ஒருநாள் ஒட்டகம் அப்படி உலவிக் கொண்டிருந்த போது பெருங்காற்று வீசியது.மழை பெய்தது.அறிவற்ற அந்த ஒட்டகம் தன் தலையை ஒரு குகையில் நீட்டிக் கொண்டிருந்தது.அந்த நேரத்தில் மழைக்குப் பயந்து தன் மனைவியுடன் ஒரு நரி அந்த்க் குகைக்குள் நுழைந்தது.குளிராலும் பசியாலும் வாடிய நரித் தம்பதியர்க்கு மிகப் பெரிய வாய்ப்பாக - உணவாக அமைந்தது, ஒட்டகத்தின் கழுத்து.ஒட்டகத்தின் இருபுறமும் இருந்துக் கொண்டு நரிகள் ஒட்டகத்தின் கழுத்தைக் கடித்து வேண்டிய அளவு மாமிசத்தைப் புசித்தன.

தனக்கு நேர்ந்த ஆபத்தை உணர்ந்த ஒட்டகம் தனது கழுத்தை சுருக்க முயற்சித்தது.நீண்ட கழுத்தைச் சுருக்க அரும்பாடு பட்டது.அதற்குள் நரிகள் ஒட்டகத்தின் கழுத்துப் பகுதி முழுதும் சாப்பிட்டு விட்டன.ஒட்டகம் மாண்டு போயிற்று.

சோம்பல் உள்ளவன் வர பலம் பெற்றும் பயனில்லை என்று கூறினார் பீஷ்மர்.

Thursday, February 10, 2011

142-நல்லதை விரும்பாதோரும் உண்டு



நல்லதை விரும்புவோரும் உண்டு என்பதை விளக்க பீஷ்மர் சொன்ன கதை

முன்னொரு காலத்தில் புரிகை என்னும் நகரில் பௌரிகன் என்னும் மன்னன் இருந்தான்.முற்பிறவியில் செய்த கர்மப் பயனால் அடுத்த பிறவியில், ஒரு சுடுகாட்டில் நரியாகப் பிறந்தான்.நரி தன் முற்பிறவியைப் பற்றி எண்ணி வருத்தம் கொண்டது.அது பிறர் தரும் மாமிசத்தை உண்பதில்லை.பிற உயிர்களுக்குத் துன்பம் தருவதில்லை.வாய்மையே பேசி வந்தது.விரதம் நியமங்களைத் தவறாமல் நிறைவேற்றி வந்தது.மரத்திலிருந்து தாமே உதிர்ந்த கனிகள்தாம் அதற்கு உணவு.அது விலங்காகப் பிறந்திருந்தாலும் ஒழுக்கத்தில் சாதுக்களைப் போல் விளங்கிற்று.தான் பிறந்த சுடுகாட்டை விட்டு வேறிடம் சென்று வசிக்க அது விரும்பவில்லை.

இந்த நரியின் போக்கைக் கண்ட மற்ற நரிகள், நரிகளுக்கு உள்ள பொதுவான வாழ்க்கை முறையையே அது மேற்கொள்ள வேண்டும் என வற்புறுத்திக் கூறின.சாதுக்களுக்கு விதிக்கப் பட்ட ஒழுக்கத்தை விட்டுவிட்டு நீ நரிக்குரிய பண்புடன் நடந்துக் கொள்ள வேண்டும்.மயானத்தில் இருந்துக் கொண்டு மாமிசத்தை வெறுக்கக் கூடாது.நாங்கள் உண்பதை உனக்குத் தருகிறோம்.சாதியின் இயல்புக்கு ஏற்ப நடந்துக் கொள்' என்றன. மன அடக்கமும் பொறுமையும் உள்ள அந்த நரி இனிய சொற்களால் பதில் உரைத்தது.'பிறப்புக்காரணமாக நான் நரிகளுக்கு விதிக்கப் பட்ட வாழ்க்கை முறையை மேற்கொள்ள மாட்டேன்.எந்தக் குலமாய் இருந்தாலும் ஒழுக்கத்தை போற்ற வேண்டும்.எதைச் செய்தால் நம் இனத்தின் புகழ் பெருகுமோ அதையே நான் செய்ய விரும்புகிறேன்.சுடுகாட்டில் நான் வசிப்பது குற்றமாகாது.ஆத்மாதான் நல்ல செயல்களுக்குக் காரணமாக இருக்கிறது.ஒருவர் வாழும் இடத்திற்கும் ஒழுக்கத்திற்கும் தொடர்பு இல்லை.பிறப்பு ஒருவருடைய ஒழுக்கத்திற்குக் காரணம் அன்று.ஒழுக்கம் தான் குலத்தை உயர்த்துகிறது.ஆத்மாதான் நல்ல காரியங்கலையும் கெட்ட காரியங்களையும் செய்யத் தூண்டுகிறது.வசிக்கும் இடம் அன்று.ஆசிரமத்தில் இருக்கும் ஒருவன் அடாத செயல் புரிகிறான்.ஆசிரமத்தில் இல்லாத ஒருவன் அறம் செய்கிறான்.ஆகவே இருக்குமிடம் முக்கியமில்லை.நரியாகப் பிறந்ததால்-சுடுகாட்டில் வசிப்பதால்- மாமிசம் உண்ண வேண்டும் என்பதில்லை.ஆதலால் உங்கள் ஆலோசனைகளை என்னால் ஏற்கமுடியாது' என்று கூறிற்று.

அந்த நரியின் ஒழுக்கம் மிக்க வாழ்க்கை காடெங்கும் உள்ள விலங்குகளால் பாராட்டப்பட்டது.ஒரு அரசப் புலி அந்த நரியைப் பற்றிக் கேள்விப்பட்டு வியப்புற்றது.அதகைய ஞானம் நிறைந்த நரியை அமைச்சராக ஏற்க விரும்பியது.நரியை நோக்கி, 'நண்பனே! உன் புகழை நான் அறிவேன்,என்னுடன் இருந்து விடு.எனக்கு நல்வழி காட்டு.உனக்கு என்ன வேண்டுமோ அதை உண்ணலாம்.நான் பிறந்த புலி ஜாதி கொடூரமானது.ஆயினும் நீ என் இதயத்தில் இடம் பெற்று விட்டாய்.என் சொல்லை மறுக்காமல் ஏற்றுக் கொள்' என்று கேட்டுக் கொண்டது.

வலிமை மிக்க புலியை நோக்கி நரி பணிவுடன்..'வேந்தனே! உன் பெருமைக்கு ஏற்ப பேசினாய்.தருமத்தில் விருப்பம் உள்ளவரை நீ தேர்ந்தெடுப்பது நியாயமானதே!நீதியில் அன்பும் தருமத்தில் பற்றும் நன்மையில் விருப்பமும் உள்ளவர்களை நீ கண் போல போற்ற வேண்டும்.தந்தையைப் போல கருத வேண்டும்.உன்னுடைய செல்வத்தில் திளைத்து இன்பம் பெற நான் விரும்பவில்லை.என்னுடைய போக்கு உன்னுடைய சேவகர்களுக்குப் பிடிக்காது.அவர்கள் கொடுமை செய்பவர்கள்.நம்மிடையே மோதலை உண்டாக்குவார்கள்.நீ நல்ல மனம் கொண்டு பாவிகளைக் கூட மன்னித்து விடுகிறாய்.எல்லா நன்மைகளும் உன்னிடம் இருக்கின்றன.ஆனால் என் நிலைமையில் நான் திருப்தியடைகிறேன்.எனக்குப் பதவி ஆசையில்லை.அரச சேவையையும் நான் அறியேன். அரச சேவையில் இருப்போர் பலவகையான நிந்தனைகளுக்கு ஆளாக நேரிடும்.காட்டில் வசிப்பது விரத நியமங்களுக்கு ஏற்றதாக இருக்கிறது.எனது வாழ்க்கை இனிமையாக இருக்கிறது.நல்ல தண்ணீர்,நல்ல காய்,கனி,கிழங்கு ஆகியவற்றை உண்டு விரதமேற்றிருக்கும் எனக்கு அச்சத்துடன் கூடிய அரச வாழ்வு வேண்டாம்.அரச சேவையில் ஈடுபட்டு வீண் அபவாதத்திற்கு ஆளாகி நாசம் அடைந்தோர் பலர்.எனக்கு அந்தப் பதவி வேண்டாம்" என்றது நரி.

ஆனால் புலியோ வற்புறுத்தி வேண்டிக் கொண்டது.அதனால் நரி ஒரு நிபந்தனை விதித்தது.புலியை நோக்கி,'நீ உரிய மரியாதையை என்னைச் சார்ந்தவருக்குத் தர வேண்டும்.எனது வாழ்க்கைமுறையை நான் தொடர்ந்து மேற்கொள்ள என்னை அனுமதிக்க வேண்டும்.நான் யாரிடமும் கலந்து ஆலோசிக்க மாட்டேன்.காரணம் பொறாமை உள்ளவர்கள் என் ஆலோசனையைத் திரித்துக் கூறுவார்கள்.உன் இனத்தாரின் நடவடிக்கை பற்றி என்னிடம் நீ கேட்காமல் இருக்க வேண்டும்.என் யோசனைகளைப் புறக்கணிக்கும் அமைச்சர்களை நீ தண்டிக்கக் கூடாது.அதுபோலவே சினம் கொண்டு என்னைச் சார்ந்தவர்களையும் நீ எதுவும் செய்யக் கூடாது' என்று கூறியது நரி.புலி, நரி விதித்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டது.பின்னர் நரி அமைச்சர் பதவியை ஏற்றது.

அமைச்சர் அவையில் இடம் பெற்ற நரி புகழத்தக்க செயல்களைச் செய்து வந்தது.அதனால் அமைச்சர் அவையில் இருந்த மற்ற புலிகள் பொறாமையில் புழுங்கின.கொஞ்சம், கொஞ்சமாக நரியின் செயல்களைக் குறை கூறத் தொடங்கின.உள்ளத்தில் பகையும், உதட்டில் நட்பும் கொண்டு பழகத் தொடங்கின.எப்படியேனும் நரியின் செல்வாக்கைக் குறைக்க வேண்டும் எனக் கருதிய அவை பலப்பல கதைகளைக் கூறிப் பொருள் ஆசை காட்டி மனத்தை மாற்ற முயற்சி செய்தன.முடியவில்லை.எப்படியும் நரியைத் தீர்த்துக் கட்டுவது என்ற முடிவுக்கு வந்தன.

அவை விலங்குகளுக்கு அரசனான புலிக்குத் தயாரித்து வைக்கப் பட்டிருந்த மாமிசத்தைத் தந்திரமாக நரியின் வீட்டில் வைத்து விட்டன.அதனால் பசியுடன் இருந்த அரசனுக்கு உரிய நேரத்தில் மாமிச உணவு கிடைக்க வில்லை.அரசப் புலியும் திருடனைத் தேடி வருமாறு ஆணை பிறப்பித்தது.அந்த நேரத்தில் நரியின் புகைப் புலிகள் அதன் மீது பழியைச் சுமத்தின.மாமிச உணவை, மிகச் சிறந்த மேதாவி என்று தன்னைக் கருதிக் கொண்டிருக்கும் உம் அமைச்சனான நரி திருடிக் கொண்டுப் போய்த் தன்னிடத்தில் வைத்துக் கொண்டது என்று கூறின.நரியின் திருட்டுச் செயல் கேட்ட அரசப் புலி சினம் கொண்டது.உடன் நரியின் பகைப் புலிகள்'இத்தகைய அற்பத்தனமான திருட்டு நரி எதைத்தான் செய்யாது?நீங்கள் நினைப்பது போல அந்த நரி அறிவு மிக்கது அல்ல.நாணயமானதும் அல்ல.தருமம் என்னும் பெயரில் அதருமம் செய்வதில் வல்லமை மிக்க நரியை எப்படித்தான் அமைச்சராக தேர்ந்தெடுத்தீரோ!.தங்களுக்குரிய மாமிசத்தைத் தன் வீட்டில் ஒளித்து வைத்திருக்கும் அந்த நரிக்கு விரதம் ஒரு கேடா?அந்த நரிதான் மாமிசத்தைத் திருடியது என்பதை நிரூபிக்க இப்போதே போய் அதனைக் கொண்டு வருகிறோம்' என்று கூறி அப்படியே கொண்டு வந்தன.அது கண்ட அரசப் புலி நரியைக் கொல்லத் தீர்மானித்தது.

இதனை அறிந்த புலியின் தாய் தன் மகனை நோக்கி..'மகனே..நன்கு ஆலோசித்துப் பார்.வஞ்சனையாளர்களின் பேச்சை நம்பாதே..ஒரு வேலையைச் செய்பவரிடையே பொறாமை ஏற்படும்.அந்தப் பொறாமை படிப்படியாகக் குரோத எண்ணத்தை வளர்க்கும்.அதன் விளைவுதான் இப்போது நடப்பதும்.நன்கு யோசித்துப் பார்.விரத சீலமுள்ள நரியா மாமிச உணவை நாடும்..திருடும்..பொய்,மெய் போலவும், மெய் பொய் போலவும் சில சமயங்களில் தோற்றம் அளிக்கும்.அவற்றை ஆராய்ந்து அறிதல் மன்னனின் கடமை.ஆகாயம் கவிழ்ந்த வாணலியின் உள்பாகம் போலக் காட்சியளிக்கும்..மின்மினிப் பூச்சிகள் நெருப்புப் பொறிகள் போல் தோன்றும்.உண்மையில் ஆகாயத்தில் வாணலியின் தோற்றமும் இல்லை.மின்மினிப் பூச்சிகளிடம் நெருப்பும் இல்லை.எதையும் எண்ணிப் பார்த்து உண்மையைக் காண வேண்டும்.அரசன் தன் மக்களில் யாரையும் கொல்ல முடியும்.இது பெரிய காரியம் அன்று.உண்மை காண்பதுதான் பெரிய செயல்.உண்மையைக் கண்டுபிடி.பாவிகளான மற்ற அமைச்சர்கலீன் பேச்சைக் கேட்காதே..பழுது எண்ணும் மந்திரிகளின் பேச்சைக் கேட்டால் உனக்கு அழிவு நிச்சயம் ஏற்படும்.மேலான நரியை பகைக்காதே' என்று கூறிற்று.

அரசப் புலி ஆலோசித்துப் பார்த்தது.நரியின் மீது பழி சுமத்துதல் தவறு என உணர்ந்து கொண்டது.நரியை அணைத்துக் கொண்டது.

நீதி நெறி உணர்ந்த நரிக்கு மான உணர்வு மிகுந்தது.பழிக்குப் பின் இனியும் உயிர் வாழ விரும்பவில்லை.உண்ணா நோன்பு இருந்து உயிர் துறக்க விருப்பம் கொண்டது.ஆனால் புலி நட்பு முறையில் கண்ணீர் பெருக்கி நரியை அவ்வாறு செய்யாமல் தடுக்க முயன்றது.ஆனால் நரியோ தான் கொண்ட கொள்கையில் உறிதியாய் இருந்தது.அது புலியை நோக்கி.."ஆரம்பத்தில் நீ என்னை நன்கு மதித்தாய்.பிறகு பிறரின் சொல் கேட்டுப் பழி சுமத்தி அவமானப்படுத்தினாய்.பதவியிலிருந்து நீக்கினாய்.மீண்டும் பதவி பெற்றால் என் மீது உனக்கு எப்படி நம்பிக்கை ஏற்படும்?நானும் எப்படி பழையபடி நம்பிக்கை கொள்ளமுடியும்?முதலில் பாராட்டி பதவியில் அமர்த்திய பின் குறை கண்டு பழி சுமத்துதல் அரச நீதி ஆகாது.இனிமேல் நீயும் என்னிடம் பழையபடி இருக்க முடியாது.நானும் மனம் கலந்து பழக முடியாது.நண்பர்களும் ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள்.பிளவு ஏற்பட்ட பிறகு ஒன்று கூடுதல் கடினம்' என்பன போன்ற நீதிகளைக் கூறியபின் புலியிடம் விடை பெற்றுச் சென்றது நரி.ஆயினும் மன நிம்மதி இழந்து, உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்து சுவர்க்கம் அடைந்தது' என்று கூறினார் பீஷ்மர்.






Thursday, February 3, 2011

141--நன்மை யாருக்குச் செய்ய வேண்டும்..



நன்மை செய்யும் போதும் பண்பு அறிந்து செய்ய வேண்டும் என்பதை விளக்கும் கதை

மனித நடமாட்டம் அற்ற காட்டில் ஒரு முனிவர் தவம் செய்துக் கொண்டிருந்தார்.கிழங்கு வகைகளையும்,காய்களையும்,கனியையுமே உண்டு முனிவருக்குரிய நியமங்களுடன் திகழ்ந்தார்.கொடிய விலங்குகள் கூட அவர் தவ வலிமை அறிந்து அவருக்கு அருகில் அமைதியாகவே இருந்து விட்டுச் செல்லும்.சிங்கம், புலி, கரடி போன்றவை கூட அவர் தவத்தை வியந்து அன்புடன் நடந்துக் கொள்ளும்.

இந்நிலையில் ஒரு நாய் மட்டும் அவரைப் பிரிய மனமின்றி அவருடனே இருந்தது.முனிவரிடம் பக்தியுடன் நடந்துக் கொண்டது.அவருக்கு எது உணவோ அதுவே நாய்க்கும் உணவு.முனிவரிடம் அந்த நாய் சிநேக பாவத்துடன் நடந்துக் கொண்டது.அப்போது பசியும்,தாகமும் ரத்த வெறியும் பிடித்த ஒரு சிறுத்தைப் புலி அந்த நாயை நோக்கிப் பாய்ந்து வந்தது.அது கண்டு அஞ்சிய நாய் முனிவரைத் தஞ்சம் அடைந்தது.'மா..முனியே! தாங்கள் தான் என்னை இந்தப் புலியிடமிருந்து காப்பாற்ற வேண்டும்' என வேண்டிக் கொண்டது.

முனிவர் அந்த நாயைப் பார்த்து, 'அஞ்சாதே! நீ இந்தப் புலியிடமிருந்து தப்பிப் பிழைக்க ஒரு வழி சொல்கிறேன்.சற்று நேரத்தில் நீ ஒரு சிறுத்தைப் புலியாக மாறுவாய்' என்று கூறினார்.உடன் நாய் புலியாக மாறியது.சீறி வந்த சிறுத்தைப் புலி இது கண்டு விலகிச் சென்றது.

சிறிது நேரம் கழித்து..பெரும் புலி ஒன்று இந்தச் சிறுத்தைப் புலியைக் கண்டு கொல்ல வந்தது.பெரும் புலியைக் கண்ட அஞ்சிய சிறுத்தை முனிவரிடம் சென்று முறையிட்டது.உடன் முனிவர் அச் சிறுத்தைப் புலியை பெரும் புலியாக ஆக்கி அதன் அச்சத்தைப் போக்கினார்.நாயாக இருந்து, சிறுத்தைப் புலியாகி பின் பெரும் புலியாக மாறியதும் அந்நாய் மாமிசத்தை உணவாக உட்கொண்டது.காய் கனிகளை அறவே விலக்கியது.அசல் கொடிய விலங்காய் மாறியது.உணவுக்காக வெளியில் சென்று விலங்குகளைக் கொன்று தின்று பசியாறிய பிறகு முனிவரின் ஆசிரமத்திற்குத் திரும்பி வந்து தூங்கிக் கொண்டிருந்தது.

அப்போது ஒரு யானை ஆசிரமத்தை நோக்கி வந்துக் கொண்டிருந்தது.அது கண்டு புலி மீண்டும் முனிவரிடம் முறையிட்டது.கருணை கொண்ட அவரும் அதனை வலிமை மிக்க யானையாக்கினார்.வந்த யானை இதைக் கண்டு திரும்பியது.ஆனால் யானையான நாயோ அஞ்சாமல் காடு முழுதும் உல்லாசமாக திரிந்து வந்தது.அப்படியிருக்கையில் ஒரு நாள் சிங்கம் ஒன்று மலைக்குகையில் இருந்து காடு நடுங்குமாறு கர்ஜனையுடன் வெளிப்பட்டது.சிங்கத்தைக் கண்ட யானை முனிவரை நாடியது.இப்போது மாமுனிவர் யானையை சிங்கமாக மாற்றினார்.இந்த சிங்கத்தைக் கண்ட வந்த சிங்கம் திரும்பியது.புதிய சிங்கம் காட்டு விலங்குகளுக்கு அச்சத்தை உண்டாக்கியது.அதைக் கண்டு அஞ்சிய விலங்குகள் அந்த ஆசிரமத்தின் பக்கமே வருவதில்லை.

ஆனால் வனவிலங்குகளில் வலிமை மிக்க சரபம் என்னும் மிருகம் ஆசிரமத்தின் அருகே வந்தது.அதனை எதிர்க்கும் ஆற்றல் சிங்கத்துக்குக் கூட கிடையாது.எட்டுக் கால்களுடன் நடை போட்டு அது வரும் போது அனைத்து மிருகங்களும் பயந்து ஓடும்.நாயாக இருந்து சிங்கமாக மாறிய விலங்கையும் பயம் விடவில்லை.சரபத்தைக் கண்டதும் அது மீண்டும் முனிவரை நாடியது.முனிவரும் அதையும் வலிமை மிக்க சரபமாக்கினார்.புதிய சரபம் புதுத் தோற்றத்துடன் நிகரற்று திகழ்ந்தது.ரத்த வேட்டையாடியது.அதைக் கண்டு அனைத்து விலங்குகளும் பயந்து ஓடின.

புதுப்பிறவி எடுத்த சரபம் ,திடமான ஒரு முடிவுக்கு வந்தது.இறுமாப்புடன் தன்னையே ஒருமுறை சுற்றிப் பார்த்துக் கொண்டது.அந்தக் காட்டில் தன்னை யாரும் அசைக்க முடியாது என்று கருதிய அதற்கு ஒரு ஐயம் எழுந்தது.ஐயம் வஞ்சனையானது.வஞ்சனை கொடுமையானது.'இந்த முனிவரின் கருணையால் பல ஆபத்துகளிலிருந்து தப்பினேன்.நாயாக இருந்து படிப்படியாக சரபமாக மாறினேன்.இப்போது என்னைவிட பலம் மிகுந்த விலங்கு இல்லை.இந்த முனிவர் கருணை மிக்கவர்.இந்தக் கருணையே எனக்கு ஆபத்தாக முடியலாம்.இரக்கம் உள்ள இவர் மற்ற விலங்குகள், பறவைகளைக் கூட என்னைப்போல மாற்றலாம்.அப்போது எனக்கு அதிக எதிரிகள் உண்டாவார்கள்.அப்படி ஏற்பாமல் இருக்க ஒரே வழி..இந்த முனிவரை தீர்த்துக் கட்ட வேண்டியது தான்.இவரைக் கொல்வது தவிர வேறு வழியில்லை..என்று நினைத்தது.

சரபத்தின் வஞ்ச எண்ணத்தை தன் தவ வலிமையால் முனிவர் அறிந்தார்.அந்த சரபத்தை நோக்கி 'தவத்தால் உயர்ந்த என் ஆற்றலை நீ உணர மாட்டாய்.அனைத்து உலகும் என்னைக் கண்டு அச்சம் கொள்ளும்.தரும நெறியிலிருந்து விலகும் யாரையும் நான் அழித்து விடுவேன்.நாயாகக் கிடந்த நீ, சிறுத்தைப் புலியாக,பெரும் புலியாக,யானையாக,சிங்கமாக,சரபமாக மாறினாயே..அதெல்லாம் நானெல்லவா மாற்றி உன்னை ஆபத்திலிருந்து காத்தேன்.கொஞ்சமும் நன்றியின்றி என்னைக் கொலை செய்யத் தீர்மானித்தாயே! நீ மீண்டும் நாயாவாய்' என்று சபித்தார்.சரபம் மீண்டும் நாயானது.

ஒருவரைப் புரிந்துக் கொள்ளாமல் அவருக்கு நன்மை செய்யும் போது கூடத் தவறு நேரிடலாம்.

Friday, January 28, 2011

140-சாதலும், பிறத்தலும் இயற்கை



பீஷ்மர் தருமருக்கு உற்றார்,உறவினர் இறப்பின் போது ஆற்றியிருத்தல் எப்படி என்பதை விளக்க எடுத்துக் காட்டாக ஓர் அந்தணனுக்கும்,சேனஜித் என்னும் மன்னனுக்கும் நடைபெற்ற உரையாடலைக் கூறியது..

'முன்னொரு காலத்தில் சேனஜித் என்றொரு மன்னன் இருந்தான்.திடீரென அவன் மகன் இறந்ததால் தாங்க முடியாத துயரத்தில் மூழ்கி இருந்தான்.செய்வதறியாது திகைத்து யாரிடமும் ஒன்றும் பேசாது செயலற்று இருந்தான்.அப்போது அவனது நண்பனான ஒரு அந்தணன் அவனைக் காண வந்தான்.'மன்னனே, ஏன் இப்படி அறிவிழந்து இப்படி துயரப்படுகிறாய்? உண்மையில் உனக்காகவே நீ வருத்தப் பட வேண்டும்.ஏனெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் செத்துக் கொண்டிருக்கிறோம்.உண்மை இவ்வாறிருக்க இன்னொருத்தர் மரணத்திற்காக ஏன் துயரப் பட வேண்டும்?எல்லோரும் எங்கிருந்து வந்தோமோ அங்கேயே போக விரும்புகிறோம்.பிறப்பு எனில் இறப்பு யார்க்கும் உண்டே!' என்று கூறினான்.

உடன் மன்னன்..'நீர் துயரமின்றி இருக்கக் காரணம் என்ன? சாத்திர ஞானமா?தவமா?' என்று வினவினான்.

அந்தணன், 'மன்னனே..இந்த உலகத்தில் ஒழுக்கத்தில் உயர்ந்தவரோ,குறைந்தவரோ,மிகவும் தாழ்ந்தவரோ எந்த நிலையினராயினும் அவரவர் கர்மத்திற்கு ஏற்ப இன்ப துன்பங்களை அனுபவிப்பர்.இந்த உலகத்துப் பொருள்களில் எதுவும் என்னுடையதன்று.அப்படியே பிறருக்கும் உரியவை அல்ல.இந்தத் த்ளிந்த ஞானம் ஏற்பட்டதால், எனக்குத் துன்பமும் இல்லை..இன்பமும் இல்லை.கடலில் எங்கெங்கோ இருக்கும் கட்டைகள் ஒன்று கூடி பிரிவது போன்றது பிறப்பும், இறப்பும்.தாய்,தந்தை,மனைவி,மக்கள் எல்லாரும் இப்படித்தான் ஒன்று கூடுகின்றனர்.பிரிகின்றனர்.எப்படி உன் மகன் பிரிந்தானோஅப்ப்டியே அறிய முடியாமல் இறந்து விட்டான்.துன்பத்தின் இறுதியில் இன்பமும், இன்பம் மாறித் துன்பமும் இயற்கையாக ஒவ்வொருவர் வாழ்விலும் உண்டு.தற்போது துன்பத்தில் இருக்கும் நீ பிறகு இன்பத்தை அடைவாய்.பின் துன்பம்.பின்னர் இன்பம் இப்படி வண்டிச் சக்கரம் போல இன்ப துன்பங்கள் மாறி மாறி வந்துக் கொண்டே இருக்கும்.இன்ப, துன்பங்களுக்கு உடம்பே காரணமாகும்.ஓர் உயிர் எந்த உடலைச் சார்ந்து வினையைச் செய்ததோ அந்த வினையை அடுத்த பிறப்பில் அனுபவித்தே ஆக வேண்டும்.இந்த உயிர் ஓர் உடலைச் சார்ந்து பிறக்கிறது.சுற்றம் என்றும், நட்பு என்றும் சில காலம் சிலரோடு உறவு கொள்கிறது.பொருளாசையில் சிக்கி அந்த ஆசை நிறைவேறாமல் துன்பப்படுகிறது.உயிர் பல விதமான உறவு முறைகளில் சிக்கித் தவிக்கிறது.செக்கில் இடப்பட்ட பொருள் பிழியப் படுவது போலப் பிறவிச் சுழியில் அகப்பட்டுத் துன்புறுகிறது உயிர்.மனிதன் தன் உற்றார்,உறவினரைக் காப்பாற்றத் தகாத காரியங்களிலும் ஏடுபட்டுக் கர்மத்தைப் பெருக்கிக் கொள்கிறான்.அதற்குரிய பயனை அவன் மட்டுமே அனுபவிக்கிறான்.அவனது துன்பத்தை எப்படிப் பிறர் ஏற்க முடிய வில்லையோ அப்படியே அவன் கர்மத்தையும் பிறரால் ஏற்க முடியாது.அதை அவன் மட்டுமே அனுபவிக்க வேண்டும்.ஞானிகள் இதைத் தெளிவாக உணர்ந்து உணர்த்தியிருக்கிறார்கள்.உணராத அஞ்ஞானிகள் சம்சாரம் என்னும் சேற்றில் சிக்கிக் கொண்டு கரையேற முடியாமல் அல்லல் படுகின்றனர்.ஒவ்வொருவரும் புதிதாக கர்மங்களைச் சேர்க்காமலும், உயிரில் கலந்த கர்மத்தை உதிர்த்தும் இன்பம் காண வேண்டும்.சிறந்த அறிஞன் உலகப் படைப்பின் ரகசியத்தை அறிகிறான்.அறிவீனர்கள் இதனை அறிய மாட்டார்கள்.

இன்பமானது அறிஞன்,அறிவிலி,வீரன்,கோழை,ஆற்றல் மிக்கவன்,ஆற்றல் அற்றவன் என்ற பாகுபாடு அறிந்து ஒருவனை அடைவதில்லை.அவரவர் கர்ம வினைக்கு ஏற்ப வினைப் பயனை அடைகின்றனர்.முக்தியை அடைய விரும்புவோர் நன்மை ஒன்றையே செய்து இன்பம் அடைகின்றனர்.முக்திப் பாதையில் நாட்டம் இல்லாதவர் வேறு கர்மங்களைச் செய்து துன்புறுகின்றனர்.பொருள் மீது கொள்ளும் ஆசை துன்பத்திற்குக் காரணம் ஆகிறது.ஆசை அற்றவர்க்குத் துன்பம் இல்லை.மனிதப் பிறப்பில் அடையும் இன்பமும், சுவர்க்கத்தில் பெறும் இன்பமும் ஆசையற்றவன் பெறும் இன்பத்திற்கு ஈடாகா.

முற்பிறப்பில் செய்யப்பட்ட கர்மமானது தீமையோ நன்மையோ எதுவாயினும் செய்தவன் அறிவுள்ளவனோ, அறிவீனனோ எவராயினும் அதன் பயனை நுகர்ந்தே ஆக வேண்டும்.ஆதலால் பொருள் மீது பற்றுப் பாசங்களைத் துறத்தல் வேண்டும்.இல்லையேல் ஆசை பேராசை ஆகி, சினமாகி, பொறாமையாகிக் கடுஞ்சொல்லைத் தோற்றுவித்து, தீய செயலுக்கும் காரணமாகிறது.

ஒரு பொருள் எனது என்னும் எண்ணத்தோடு இருக்கும் போது, அது பிரிய நேர்ந்தால் துன்பம் ஏற்படுகிறது.அதுபோலவே உறவினர் பிரிந்தாலும் தாங்க இயலாத துன்பம் தோன்றுகிறது.நம் உயிர்க்கும் மற்றப் பொருள்களுக்கும் தொடர்பில்லை.நாம் செய்யும் தர்மமே நம்மை (உயிரை)த் தொடர்ந்து வரும்.அதுவே நாம் செல்லும் தேயத்திற்கு உறுதுணையாகும் என்ற தெளிவு பெற்றவர் பிறர் மரணத்திற்காக வருந்த மாட்டார்கள்.சாதலும்,பிறத்தலும் இயற்கை என்ற தெளிவு கொண்டு துயரத்தை விடுவாயாக' என்று அந்தணன் கூறினான்.

அதனைக் கேட்ட சேனஜித் மன்னன் அறிவுத் தெளிவு பெற்று உண்மை மார்க்கத்தை நாடி அமைதி அடைந்தான்" என்றார் பீஷ்மர்.