1)தரும வியாதன்
கௌசிகன் என்னும் முனிவன் காட்டில் தவம் செய்து கொண்டிருந்தான்.அப்போது அவன் அமர்ந்திருந்த மரத்தின் மேலிருந்த கொக்கு ஒன்று எச்சமிட அது முனிவனின் மீது விழுந்தது.அவனது தவம் கலைய அந்தக் கோபத்தில் கொக்கை அவன் பார்க்க கொக்கு இவனது கோப நெருப்பில் வெந்து சாம்பலானது.
தன் தவம் கலைந்தாலும், தனது தவ வலைமை கொக்கை எரித்ததைக் கண்ட முனிவனுக்கு அகங்காரம் உண்டானது.பக்கத்திலிருந்த ஒரு கிராமத்திற்கு அவன் பிச்சைக்காகச் சென்றான்.
ஒரு வீட்டின் முன் நின்று"தாயே! பிச்சையிடுங்கள்" என்றான்.இப்படிக் கூவியும், வீட்டிலிருந்து எந்த பதிலும் வரவில்லை.அந்த வீட்டுப் பெண் அப்போது தனது கணவனுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தாள்.முனிவன் மீண்டும் குரல் கொடுக்க, வீட்டினுள்ளிருந்து "இதோ வருகிறேன் சற்றுப் பொறு'' என்ற குரல் கேட்டது..
பின், அந்த வீட்டிலிருந்து உணவுத் தட்டோடு வீட்டின் தலைவி வந்தாள்.தனது தவ வலைமைத் தெரியாமல் இவள் நம்மைக் காக்க வைத்து விட்டாளே என சற்றுக் கோபத்துடன் முனிவன் அவளைப் பார்த்தான். அவளோ, அவனை சட்டை செய்யாமல் "கொக்கென்று நினைத்தாயோ கொங்ககணவா?" என்றாள்.
உடனே முனிவனுக்கு ஆச்சரியம்.தன் மீது எச்சமிட்ட கொக்கை தான் எரித்தது இவளுக்கு எப்படித் தெரியும்? என வியந்தான்.அவனின் முகக்குறிப்பை உணர்ந்த அப்பெண் "முனிவரே! நீர் தவம் பற்றி தெரிந்து கொண்ட அளவிற்குத் தருமத்தைப் பற்றி அறியவில்லை.தருமம் பற்றி அறிய, மிதிலை நகர் சென்று அங்கு வாழும் தருமவியாதனிடம் போகவும்" என்றாள்.
முனிவரும், மிதிலை நகருக்குச் சென்றார் .அங்கு தருமம் பற்றி தனக்கு போதிப்பவன் ஒரு தவசியாய் இருப்பான் என எணணினார்.ஆனால், தருமவியாதனோ ஒரு கசாப்புக் கடையில் இறைச்சி வியாபாரம் செய்து வந்தான்.இவன் திகைப்பைப் பார்த்த தருமவியாதன்"தருமத்தைப் பற்றி அறிய அப்பெண் உன்னை அனுப்பினாளா? " எனக் கேட்டான்.முனிவனின் திகைப்பு இப்போது வியப்பாய் மாறியது. அப்பெண் என்னிடம் சொன்னது இவனுக்கு எப்படித் தெரிந்தது என வியந்தான்.ஆனால் முனிவனின் வியப்பிற்கு விடை தருமவியாதன் வீட்டில் கிடைத்தது.
தருமவியாதன், முனிவனை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவனை ஒரு பக்கமாக அமரச் செய்து விட்டு, தனது வயதான தாய் தந்தையரைக் குளிப்பாட்டி, அவர்களுக்கு உணவளித்து, ஓய்வு கொள்ள செய்து விட்டு முனிவனிடம் வந்தான்.முனிவன் அவன் சொல்ல வருவதை
க் கேட்காமல், வீட்டில் தான் விட்டு விட்டு வந்த தாய், தந்தையரைக் காண ஓடினான்.
உலகில் தவத்தினும் மேலான தருமம், தாய், தந்தையரைப் பேணுதல் என்று இதன் மூலம் அறியலாம்.
2 comments:
Nice
வருகைக்கு நன்றி செந்தில்
Post a Comment