Sunday, March 22, 2015

மகாபாரதக் கதைகள் - 3 முற்பகல் செய்யின்



நாம் யாருக்கேனும் தீங்கிழித்தோமாயின்..அதற்கான பலனை பின்னாளில் நாமே அனுபவிக்க வேண்டியிருக்கும்.

கர்ணன் வாழ்க்கையிலும் அப்படி நடந்தது,அதுவே இக்கதையாகும்.

முனிவர் ஒருவர் காட்டில் தியானம் செய்து கொண்டிருந்தார்.அவரது ஆசிரமத்தைச் சேர்ந்த பசுவும், கன்றும் அருகே புல்லை மேய்ந்து கொண்டிருந்த நேரத்தில், கன்றின் மீது அம்பு ஒன்று பாய்ந்தது.அக்கன்று துடிதுடித்து இறந்தது..இறக்கும் தறுவாயில் அக்கன்றின் வேதனைக் கத்தல் கேட்டு முனிவர் தியானம் கலைந்தது.

அவர், இறந்த கன்றையும், தாய்ப்பசு கண்ணீருடன் நிற்பதையும் பார்த்தார்.

அம்பு எய்தி பசுவைக் கொன்றவனைத் தேடினார். அப்போது ஒரு வீரன் கையில் வில்லுடன் அங்கு வந்தான்.அவன்தான் அம்பை எய்திருக்க வேண்டும் என முனிவர் எண்ணினார்.அவரது கோபம் அந்த வீரன் மீது சாபமாக அமைந்தது.

"சிறு கன்றின் மீது அம்பு எய்தி கொன்றவனே! உனக்கு முடிவுகாலம் வருகையில், உன் தேரில் நின்று நீ போர் புரிகையில், தேரின் சக்கரங்கள் மண்ணுக்குள் புதையும்.அந்த நேரமே உனக்கு மரண நேரமாய் அமையும் என்பதை உணர்வாயாக!" என்றார்.

அந்த வீரன் தான் கர்ணன்.

கன்றைக் கொன்ற தன் செயலால் வருந்தினான் கர்ணன்.ஆனாலும் விதியின் செயல் இது என தன்னை தேற்றிக் கொண்டான்.

அந்த முனிவர் சாபப்படியே பாரதப் போரில் கர்ணன் மரணம் நிகழ்ந்தது. .

1 comment:

Unknown said...

Nalla Seithi - Keep it up

Post a Comment