Sunday, March 29, 2009

32- வனவாசம் கிளம்புதல்

பீமன் எழுந்தான். 'விண்ணவர் மேல் ஆணை..பராசக்தி ஆணை..கண்ணன் மேல் ஆணை..எங்கள் மனைவி திரௌபதியை...தொடை மீது உட்கார் என்று கூறிய துரியோதனனை போர்க்களத்தில் தொடையைப் பிளந்து உயிர் மாப்பேன். சேலை பிடித்து இழுத்த துச்சாதனனின் தோள்களைப் பிளப்பேன்' என்று சபதம் செய்தான்.

அர்ச்சுனன் எழுந்து 'பாஞ்சாலியின் சேலையை அகற்றச் சொன்ன கர்ணனை போரில் மடிப்பேன்..இது கண்ணன் மீதும்...திரௌபதி மீதும் ..காண்டீபம் என்னும் என் வில் மீதும் ஆணை' என்று சபதம் செய்தான்.

பாரதப்போரில் சகுனியின் மகனான உலூகனைக் கொல்வேன் என்றான் நகுலன்.

சகுனியின் தலையை துண்டிப்பேன் என்றான் சகாதேவன்.

பாஞ்சாலியோ...துச்சாதனன், துரியோதனன் இவர்கள் ரத்தத்தை கூந்தலில் தடவி குளித்து பின்னரே கூந்தல் முடிப்பேன்..என்றாள்.

அவளது சூளுரையைக் கேட்டு ..விண்ணகம் மலர் மாரி பொழிந்தது.மண்னகம் அதிர்ந்தது. திருதிராட்டிரன் நடுங்கினான்.

பின்..திருதிராட்டிரன் துரியோதனனையும், துச்சாதனனையும் கண்டித்தான்.பின் திரௌபதியிடம் வேண்டும் வரம் தருவதாகக் கூறினான்.

தருமரையும்...எனைய சகோதரர்களையும் விடுதலை செய்ய வேண்டும்' என்றாள் திரௌபதி.

சரி என்று அவர்களை விடுவித்த திருதிராட்டிரன்..நடந்தவற்றை கெட்டக் கனவாகக் கருதி மறந்துவிடச் சொன்னான்.இந்திரப்பிரஸ்தத்தைப் பாண்டவர்களுக்கு திருப்பி அளித்தான்.அனைவரும் இந்திரப்பிரஸ்தம் திரும்பினர்.

துரியோதனன் தந்தையின் முடிவுக் கண்டு அதிர்ச்சியுற்றான். 'எப்படியும் பாண்டவர்கள்..தங்களை பலப்படுத்திக் கொண்டு நம்மை அழிப்பர்..ஆதலால் அவர்களை மீண்டும் சூதாட அழைக்க வேண்டும்' என திருதிராட்டிரனிடம் புலம்பினான்.

அவன் கூற்றில் உண்மை இருக்கக்கூடும் என எண்ணிய..திருதிராட்டிரன்...பாண்டவர்களை மீண்டும் சூதாட அழைக்க ஒப்புக் கொண்டான்.

துரியோதனன் ..பாண்டவர்களிடம் சென்று..இதைத் தெரிவித்து...தருமரை மீண்டும் சூதாட ஒப்புக் கொள்ளவைத்தான்.

விதி...இது விதியின் செயல் என்றுதான் கூற வேண்டும்.

துரியோதனன் இம்முறை ஒரு சூழ்ச்சி செய்தான். 'சூதாட்டத்தில் தோற்பவர்..துறவு பூண்டு 12 ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டும்.ஒரு வருடம் அஞ்ஞாத வாசம் (மறைந்து வாழுதல்) செய்ய வேண்டும்' என்றும்..'இந் நிபந்தனையை நிறைவேற்றிய பின்னரே தோற்றவர்க்கு நாடு திருப்பி அளிக்கப் படும்' என்றும், நிபந்தனை தவறினால் மீண்டும் 13 ஆண்டுகள் இதே முறையில் செல்ல வேண்டும்' என்றும் கூறினான்.

இம்முறையும் சகுனி வெல்ல..நாடு, நகரங்களை இழந்த பாண்டவர்கள்..பீஷ்மர் முதலியவர்களிடம் விடைபெற்று காடு செல்ல தீர்மானித்தனர்.வயதாகி விட்டதால் குந்தி விதுரர் வீட்டில் தங்கினாள்.

பாண்டவர் வனவாச சேதி அறிந்து..அஸ்தினாபுர மக்கள் அழுது..துடித்தனர்..அவர்களுடன் காடு செல்லவும் முயன்றனர்.தருமர் அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு கிளம்பினார்.

(சபா பருவம் முற்றும்...இனி அடுத்து வனபருவம்)

No comments:

Post a Comment