Wednesday, March 4, 2009

24- தருமபுத்திரர் முடிவு

துரியோதனன் பேச்சைக்கேட்டு திருதிராட்டினன் துயரத்துடன் சொன்னான்.. 'மகனே..உன் செயலை வீரர்கள் ஒரு போதும் செய்யார்.உலகில் பிறர் செல்வத்தைக்கவர விரும்புவோர் பதரினும்..பதராவர்.வஞ்சனையால் பிறர் பொருளைக் கவரக்கூடாது. இதெல்லாம் உனக்குத் தெரியவில்லை.பாண்டவரும் எனக்கு உயிராவர்.உன் எண்ணத்தை மாற்றிக்கொள்'

ஆனால்...துரியோதனன் மனம் மாறவில்லை..'வெற்றிதான் என் குறிக்கோள்..அது வரும் வழி நல்வழியா...தீய வழியா என்ற கவலை எனக்கில்லை.என் மாமன் சகுனி சூதாட்டத்தில் நாட்டைக் கவர்ந்து தருவான்...தந்தையே...நீ அவர்களை இங்கு அழைக்கவில்லையெனில்..என் உயிரை இங்கேயே போக்கிக்கொள்வேன்'என்றான்.

'விதி...மகனே..விதி..இதைத்தவிர வேறு என்ன சொல்ல...உன் கொள்கைப்படியே..பாண்டவர்களை அழைக்கிறேன்' என்றான் திருதிராட்டினன்.

தந்தையின் அனுமதி கிடைத்ததும்...துரியோதனன் ஒரு அற்புதமான மண்டபத்தை அமைத்தான்.

திருதிராட்டினன்...விதுரரை அழைத்து..'நீ பாண்டவர்களை சந்தித்து..துரியோதனன் அமைத்திடும்..மண்டபத்தைக் கண்டு களிக்க திரௌபதியுடன் வருமாறு..நான் அழைத்ததாக கூறுவாயாக..பேசும்போதே..சகுனியின் திட்டத்தையும்..குறிப்பால் உணர்த்துவாயாக' என்றான்.

விதுரரும்..துயரத்துடன் இந்திரபிரஸ்தம் சென்று பாண்டவரை சந்தித்து..'அஸ்தினாபுரத்தில்..துரியோதனன் அமைத்துள்ள மண்டபத்தைக் காண வருமாறு வேந்தன் அழைத்தான்.சகுனியின் யோசனைப்படி துரியோதனன் விருந்துக்கும் ஏற்பாடு செய்துள்ளான்..விருந்துக்குப்பின் ..சூதாடும் எண்ணமும் உண்டு..'என்றார்.

இதைக்கேட்டு தருமர் மனம் கலங்கினார்.'துரியோதனன் நமக்கு நன்மை நினைப்பவன் இல்லை.முன்பு எங்களை கொல்லக் கருதினான்.இப்போது சூதாட்டமா? இது தகாத செயலல்லவா? என்றார்.

துரியோதனனிடம்..சூதாட்டத்தின் தீமைப் பற்றி..எடுத்துக் கூறியும்..அவன் மாறவில்லை.திருதிராட்டினனும்..கூறினான்..பயனில்லை..என்றார் விதுரர்.

தருமரோ'தந்தை மண்டபம் காண அழைத்துள்ளார். சிறிய தந்தை நீங்கள் வந்து அழைத்துள்ளீர்கள்.எது நேரிடினும்..அங்கு செல்வதே முறையாகும்' என்றார்.

இதைக்கேட்ட ..பீமன்..அர்ச்சுனனை நோக்கி ' அந்தத் தந்தையும்...மகனும் செய்யும் சூழ்ச்சியை முறியடிப்போம்..அழிவு காலம் வரும் வரை ஒரு சிறிய கிருமியைக் கூட உலகில் யாரும் அழிக்க முடியாது.இப்போது அவர்களின் அழியும் காலம் வந்துவிட்டது.எனவே அவர்களுடன் போரிடுவோம்.அவர்கள் செய்யும் தீமையை எத்த்னைக் காலம்தான் பொறுப்பது? ' என்றான்.

விஜயனும்..மற்ற தம்பிகளும்..இது போலவே உரைக்க..தம்பியரின் மனநிலையை உணர்ந்த தருமர் புன்னகையுடன்..'முன்பு துரியோதனன் செய்ததும்..இன்று மூண்டிருக்கும் தீமையும்..நாளை நடக்க இருப்பதும் நான் அறிவேன்..சங்கிலித் தொடர் போல விதியின் வழியே இது.நம்மால் ஆவது ஒன்றுமில்லை...தந்தையின் கட்டளைப்படி..இராமபிரான் காட்டுக்கு சென்றது போல..நாமும் நம் தந்தையின் கட்டளைப்படி நடப்போம்' என்றார்.

2 comments:

தமிழ் மதுரம் said...

இதனை நான் சின்னனிலை என்னுடைய பாட்டனார் சொல்ல ரசித்துக் கேட்டிருக்கிறேன்.. நல்ல முறையில் எழுதுகிறீர்கள்.. தொடருங்கோ..

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கமல்

Post a Comment