Tuesday, March 17, 2009

27-சூதாட்டத்தில் அனைவரையும் இழத்தல்

ஆட்டம் தொடர்ந்தது.சகாதேவனைப் பணயம் வைத்தார் தருமர்.இழந்தார்.பின் நகுலனையும் இழந்தார்.

இருவரையும் இழந்ததும்..வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல 'நகுலனும்..சகாதேவனும்..வேறொரு தாய்க்கு பிறந்தவர்கள் என்பதால்..அவர்களை வைத்து ஆடினாய் போலும்..ஏன் பார்த்தனையும், பீமனையும் வைத்து ஆடவில்லை?' என சகுனி தருமனைத் தூண்டினான்.

'சூதாட்டத்தில் நாட்டை இழந்தாலும்...எங்கள் ஒற்றுமையை யாரும் குலைக்க முடியாது' என்ற தருமர்..அடுத்தடுத்து அர்ச்சுனனையும், பீமனையும் இழந்தார்.

துரியோதனனோ மகிழ்ச்சி ஆரவாரம் செய்தான்.சகுனி தருமரை நோக்கி..'வேறென்ன பந்தயப் பொருள்?' எனக் கேட்க..தருமரோ தம்மைத் தாம் பணயம் என்றார்.மீண்டும் சகுனி வென்றார்.

துரியோதனனின் மகிழ்ச்சியைக் கண்ட சகுனி தந்திரத்துடன்..அவனிடம்..'துரியோதனா..புண்ணை கோல் கொண்டு குத்தாதே...அவர்களே நொந்துப் போய் உள்ளனர்.இவர்கள் உன் சகோதரர்கள்.அவர்கள் நாணும் படி பேச வேண்டாம்.இவர்கள் வெற்றி பெற இன்னும் வாய்ப்பு இருக்கிறது...கடைசியாக ஒரு பொருள் இவர்களிடம் இருக்கிறது.அதை வைத்து ஆடினால்...தோற்ற பொருள் அனைத்தும் மீண்டும் பெறலாம்..'என திரௌபதியை வைத்து ஆட தருமரைத் தூண்டினார்.

துரியோதனனும்...'இந்த யோசனை அருமை' என மகிழ்ந்தான்.

சிறிதும்..சிந்தனையின்றித் திரௌபதியை அந்த கொடியவர் அவைக்களத்தில் பணயமாக வைத்தார் தருமர்.

திரௌபதியும் சூதில் வீழ்ந்தாள்.கௌரவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

ஆணவத்துடன்..துரியோதனன்..விதுரரைப் பார்த்து..'திரௌபதியிடம் சென்று..நம் மனையில் பணி புரிய அழைத்து வருக' என கட்டளையிட்டான்.

விதுரர் சினம் கொண்டு 'மூடனே! பாண்டவர் நாளை பழி தீர்த்துடுவர். தரை மீது மாண்டு நீ கிடப்பாய். தனக்குத்தானே அழிவைத் தேடுவதுதான் ஆண்மையா? நொந்தவர் மனம் வருந்த சொல்லும் சொல்..அவர் நெஞ்சில் நீண்ட நாட்கள் அகலாது..அது நம்மை நரகத்தில் சேர்த்துவிடும். உன் நன்மைக்கே இதைச் சொல்கிறேன்' என்றார். 'கௌரவர்களே! பேராசை கொண்டு பிழைகள் பல செய்கி
றீர்.பாண்டவர் பாதம் பணிந்து..அவர்கள் இழந்ததை அவரிடமே கொடுத்து விடுங்கள்.இதனை நீங்கள் மேற்கொள்ளவில்லையெனில் மகாபாரதப்போர் வரும்..நீங்கள் அனைவரும் அழிந்து போவீர்" என்றும் கூறினார்.

விதுரர் சொல் கேட்டு துரியோதனன் 'ஏப்போதும் எம்மை சபித்தல் உம் இயல்பு.' என்று கூறிவிட்டு...தேர்ப்பாகனை கூப்பிட்டு..'நீ பாஞ்சாலி இருக்குமிடம் சென்று, எமது ஆணையைக் கூறி..அவளை இங்கு அழைத்து வா..' என்றான்.

No comments:

Post a Comment