Wednesday, January 14, 2009

தேவவிரதன்....அத்தியாயம்-3

'மன்னா..வருணனின் புதல்வனான வசிஷ்டர் முனிவர்களில் சிறந்தவர்.மேருமலைச் சாரலில் தவம் செய்துக் கொண்டிருந்தார்.அவரிடம் நந்தினி என்ற பசு ஒன்று இருந்தது.ஒரு நாள் தேவர்களாகிய இந்த எட்டு வசுக்களும் தத்தம் மனையியருடன் அங்கு வந்தனர்.அப்போது பிரபாசன் என்னும் வசுவின் மனைவி நந்தினியைக் கண்டு..தனக்கு அது வேண்டும் என்றாள்.

மனைவியின்..கருத்தை அறிந்த பிரபாசன்..'இது வசிஷ்ட மகரிஷிக்கு சொந்தமானது.இது தெய்வத்தன்மை வாய்ந்தது..இதன் பாலைப்பருகும் மனிதர்கள் இளமைக் குன்றாமல், அழகு குறையாது..நீண்ட நாள் வாழ்வார்கள்' என்றான்.

உடனே அவன் மனைவி'மண்ணுலகில் எனக்கு ஜிதவதி என்ற தோழி இருக்கிறாள்.அவள் அழகும், இளமையும் கெடாமலிருக்க..இப்பசுவை அவளுக்குத் தர விரும்புகிறேன்'என்றாள்.

மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற பிரபாசன்..மற்ற வசுக்களுடன் காமதேனுவை கன்றுடன் பிடித்துக் கொண்டு வந்தான்.

வசிஷ்டர் ஆசிரமத்திற்கு வந்து பார்த்த போது..பசுவும்..கன்றும் களவாடப்பட்டிருப்பதைக் கண்டார்.'என் பசுவையும்,கன்றையும் களவாடிய வசுக்கள்..மண்ணில் மானிடராகப் பிறக்கட்டும் என சபித்தார்.

வசிஷ்டரின் சாபத்தை அறிந்த வசுக்கள் ஓடோடி வந்து..பசுவையும்,கன்றையும் திருப்பிக் கொடுத்து விட்டு..அவர் காலில் விழுந்து மன்னிக்க வேண்டினர்.

'பிரபாசனைத் தவிர மற்றவர்கள் உடனே சாப விமோசனம் அடைவர்.பிரபாசன் மட்டும் நீண்ட காலம் மண்ணுலகில் வாழ்வான்.அவன் பெண் இன்பத்தைத் துறப்பான்.சந்ததியின்றி திகழ்வான்.சாத்திரங்களில் வல்லவனாக திகழ்வான்,,எல்லோருக்கும் நன்மை செய்வான்' என்றார் வசிஷ்டர்.

வசிஷ்டரின் சாபத்தை சொன்ன கங்காதேவி..'பிரபாசன்..என்னும் வசுவாகிய இவனை..நான் என்னுடன் அழைத்துச் செல்கிறேன்.பெரியவன் ஆனதும் தங்களிடம் ஒப்படைக்கிறேன்..நானும் தாங்கள் அழைக்கும் போது வருகிறேன்'என்று கூறிவிட்டு மறைந்தாள்.

தேவவிரதன் என்றும், காங்கேயன் என்றும் பெயர் கொண்ட அவன்..மேலான குணங்களுடன் வளர்ந்தான்.

மனைவியையும், மகனையும் இழந்த சந்தனு பெரிதும் துன்ப வேதனையுற்றான்.

பின்..மீண்டும் நாட்டாட்சியில் நாட்டம் செலுத்த ஆரம்பித்தான்.அஸ்தினாபுரத்தை தலைநகராய்க் கொண்டு அனைவரும் போற்றும் விதமாய் அரசாண்டான்.

இந்திரனுக்கு..இணையானவனாகவும்..சத்தியம் தவறாதவனாகவும்..விருப்பு..வெறுப்பு அற்றவனாகவும்..வேகத்தில் வாயுக்கு இணையாகவும், சினத்தில் எமனுக்கு இணையாகவும் ..அறநெறி ஒன்றையே வாழும் நெறியாகக் கொண்டு ஆட்சி நடத்தி வந்தான்

No comments:

Post a Comment