தருமர் பீஷ்மரிடம் 'பலமுள்ள பகைவனிடம் விரோதம் கொண்டால், எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என வினவ, பீஷ்மர், இரு இலவ மரத்திற்கும், நாரதருக்கும் நடந்த உரையாடலை எடுத்துக் காட்டாக சொல்ல ஆரம்பித்தார்..
முதலில் பீஷ்மர் இமய மலைக்கும், காற்றுக்கும் நடந்த உரையாடலை விளக்கினார்.
'இமயமலையில் மிகப் பெரிய இலவ மரம் ஒன்று இருந்தது.அது பருத்த அடி மரத்தையும், நிறைந்த கிளைகளையும், தழைத்த இலைகளையும், உறுதி மிக்க வேர்களையும் கொண்டு இருந்தது.அம்மரத்தில் பூக்களும், கனிகலும் மிகுதியாக இருந்தன.அவற்றைத் தின்ன வரும் கிளிகலீன் அழகு அனைவரையும் கவரும்.வழிப்போக்கரும்,வணிகரும் அதன் நிழலில் எப்போதும் தங்கி இருப்பர்.ஒரு நாள் நாரதர் அங்கு வந்தார்.அதன் தோற்றத்தைக் கண்டு மகிழ்ந்தார். அந்த இலவமரத்தை நோக்கி , 'அனைவரையும் கவரும் இலவ மரமே! உன்னைக் கண்டு நான் வியப்படைகிறேன்.பறவைகளும், விலங்குகளும் உன்னை நாடி வருகின்றன.பெருங்காற்றுகூட உன்னை ஒன்றும் செய்ய முடியவில்லை.ஒரு கிளை கூட முறிந்ததில்லையே..வாயு பகவான் உன் நண்பனா? பெரிய பெரிய மலைச் சிகரங்களையும் சிதற அடிக்கும் வாயு உன்னிடம் நெருங்காததற்குக் காரணம் உண்டா/ நீ பூத்துக் குலுங்கும் காலத்தில் யானைகள் கூட்டம் கூட்டமாய் மணம் நாடி வருகின்றன.பல விலங்குகளுக்கு இருப்பிடமான மேரு மலை போல காணப்படுகிறாய்.முற்றும் துறந்த முனிவர்களும் உன்னை நாடி வருகின்றனர்.உனது இடத்தைத் தேவர் உலகத்துக்கு இணையாகக் கருதுகிறேன்' என்று கூறினார்.
நாரதர் மேலும்,'உலகத்திற்கு அச்சம் தரும் வாயு பகவான் உனக்கு உறவினன் அல்லது நண்பன் என்னும் காரணத்தால் உன்னை ஒன்றும் செய்யவில்லை.வாயுவிற்கு நீ எப்போதும் கீழ் படிந்து நடக்கிறாய் என நினைக்கிறேன்.அதனால் தான் வாயு உன்னை மட்டும் ஒன்றும் செய்வதில்லை.ஓ! இலவ மரமே, ஏதோ காரணத்தால் வாயு பகவானால் நீ பாதுகாக்கப் படுகிறாய் என்பதில் ஐயமில்லை.அதனால் தான் தைரியமாக ஓங்கி நிற்கிறாய்' என்றார்.அதற்கு இலவ மரம் மறுப்புத் தெரிவித்தது.
நாரதரே! வாயு என் உறவினனுமில்லை ..நண்பனும் இல்லை.ஆயின் என் ஆற்றல் கண்டு வாயு அஞ்சுகிறது.எனது பலத்தில் சிறு பகுதிக்குக் கூட வாயுவின் பலம் ஈடாகாது.சிறியதும், பெரியதுமான மரங்களை எல்லாம் கொடூரமாக வீழ்த்திக் கொண்டு வரும் வாயுவை நான் என் பலத்தால் அடக்கி விடுகிறேன்.மாமுனிவரே..மிகவும் சினம் கொண்டால் கூட வாயுவினால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என ஆத்திரத்துடன் கூறியது.
உடனே நாரதர் இலவ மரத்தை நோக்கி 'உனது கருத்துச் சரியன்று.பயங்கரமானது.வாயுவின் பலத்துக்கு இணையாக யாருடைய பலமும் இல்லை.எமனும் இந்திரனும் கூட ஆற்றலில் வாயுவுக்கு இணையாகார்.உலகில் உள்ள எல்லாப் பொருள்களுக்கும் அசைவையும், உயைரையும் கொடுக்கும் மகாப் பிரபு ஆகிறான் வாயு.வாயு எங்கும் சஞ்சரித்தால் தான் உயிரினங்கள் எங்கும் உலவ முடியும்.அதனால் வணங்கத் தக்க தெய்வம் வாயு.பணிந்து வணங்குவதற்கு மாறாக இழிவாக அல்லவா பேசுகிறாய்.நீ வலிமை அற்றவன்.பொறாமையுடையவன்.உனது பேச்சு எனக்கே சினத்தை உண்டாக்குகிறது.மிகச் சிறந்த மரங்களான சந்தனம்,தேக்கு,தேவதாரு போன்ற மரங்கள் கூட இப்படி வாயுவை பழித்ததில்லை.இப்போதே சென்று வாயுவிடம் உன்னைப் பற்றிக் கூறுகிறேன்' என்றார்.
சொன்னபடியே வாயு பகவானிடம் 'இமய மலையில் மிகப் பிரம்மாண்டமான இலவ மரம் இருக்கிறது.அது தங்களைக் கேவலமாகப் பேசுகிறது.அது சொன்னதைச் சொல்லக் கூட நா கூசுகிறது.தங்களை விட சிறந்தவர் யாருமில்லை.நீர் சினத்தில் யமனுக்கு இணையாவர்.இதனை நான் அறிந்துள்ளேன்.ஆயினும் இலவ மரம் தங்க்களை இழிவாகப் பேசுவதை நினைக்கும் போதுதான் வருத்தமாக இருக்கிறது' என்று கூறினார்.
இதனைக் கேட்ட வாயு பகவான் கோபமடைந்தார்.விரைந்து இலவ மரத்திடம் சென்று..'இலவமரமே...என்னை யாரென்று நினைத்தாய்.நாரதரிடம் என்னைப் பற்றி இழித்தும் பழித்தும் பேசினாயாமே!உன்னை நான் நன்கு அறிவேன்.நான்முகன் உலகைப் படைத்ததும் உன்னிடம் இளைப்பாறினார்.அதனால் உன்னை அழிக்காமல் விட்டு விட்டேன்.இதோ என் வலைமையைக் காட்டுகிறேன் பார்' என்றார்.
இது கேட்டு மரம் ஏளனமாக சிரித்தது..'வாயுவே ..உன் சினத்தைக் காட்டில் காட்டு.என்னிடம் உன் கோபம் செல்லாது.உன்னைவிடப் பலம் வாய்ந்த நான் ஏன் உன்னைக் கண்டு அஞ்ச வேண்டும்? புத்திமான் பலவானாவான்..என்பது பழமொழி.கேவலம் உடல் பலம் உள்ளவர்களை யாரும் போற்றுவதில்லை' என்றது.
வாயுபகவான், 'உடல் வலைமையை நாளைக் காண்பாய் " என்று கூறிச் சென்றார்.நேரம் ஆக ஆக இலவ மரத்திற்குப் பயம் உண்டாயிற்று.'நாரதரிடம் நான் உரைத்தவை அத்தனையும் பொய்.மற்ற மரங்களை விட நான் ஒன்றும் அதிக பலம் உள்ளவன் அல்ல.புத்தியில் மற்றவரை விடச் சிறந்து விளங்குகிறேன்.இதே புத்தியைக் கொண்டு வாயுவிடம் இருந்து தப்பித்துக் கொள்வேன்' என்று கருதிற்று.
அதன்படி தன் கிளைகளையும்,இலைகளையும் கீழே உதிர்த்துவிட்டது.வாயு எப்போது வரும் என எதிர் நோக்கியிருந்தது.
இந்நிலையில் வாயு பகவான் பேரிரைச்சலுடன் எல்லா மரங்களையும் வீழ்த்திக் கொண்டு இலவ மரம் இருக்கும் இடத்தை அடைந்தார்.இலவ மரத்தின் அவல நிலையைக் கண்டு அதனை நோக்கி,'நான் செய்ய நினைத்ததையெல்லாம் நீயே செய்துக் கொண்டாய்.என்னே உன் அறிவீனம்' என்று எள்ளி நகையாடினார்.
இது கேட்டு இலவ மரம் நாணித் தலை குனிந்து நின்றது.
தருமரே! இது போலவே பலமற்றவர்கள் பலசாலிகளை எதிர்த்தால் இலவ மரத்தின் கதிதான் ஏற்படும்' என்றார் பீஷ்மர்.
Tuesday, January 11, 2011
137-பலமுள்ள பகைவன் விரோதமானால்...
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
:)
Post a Comment