Thursday, January 13, 2011

138-சுவர்க்க நரகங்களில் பிறப்பது

தருமர் பீஷ்மரை நோக்கி..'எத்தகைய உயிர் சுவர்க்கத்தை அடைகிறது? எத்தகைய உயிர் நரகத்தை அடைகிறது? உடலைக் கட்டைப் போல போட்டுவிட்டுப் போகும் உயிரைத் தொடர்வது எது? எனக்கு இவற்றைப் பற்றி விளக்க வேண்டும்' எனக் கேட்க.அந்நேரத்தில் பிரகஸ்பதி அங்கு வர, பீஷ்மர் தருமரை நோக்கி 'இந்தக் கடினமான கேள்விக்குப் பிரகஸ்பதி விடையளிப்பார்.உலகில் இவரை விடச் சிறந்த அறிவாளி யார் இருக்கிறார்." என்று சொன்னார்.உடனே தருமர் பிரகஸ்பதியை வணங்கி 'எல்லாம் தெரிந்தவரே! உயிருக்குத் துணை யார்? தந்தையா,தாயா,தாரமா,பிள்ளையா,ஆசாரியரா,சுற்றமா? கட்டைப் போல உடலைப் போட்டுவிட்டு உயிர் பிரியும் போது அதற்குத் துணை யார்?' என்று கேட்டார்.
பிரகஸ்பதி..'மனிதன் ஒருவனாகவே இறக்கிறான்.சுவர்க்கத்திற்கோ,நரகத்திற்கோ போகிறான்.தந்தை,தாய்,சுற்றத்தார் யாரும் அவனைப் பின் தொடர்வதில்லை.தருமம் ஒன்றுதான் அவனுடன் செல்லக் கூடியது.ஆகையால் எப்போதும் ஒருவன் தருமத்தில் நாட்டம் உள்ளவனாக இருக்க வேண்டும்" என்றார்.
தருமர் பிரகஸ்பதியிடம் மேலும் வினவினார்.'ஆன்மா மறைந்து கண்ணில் படாமல் போகிறதே.தருமம் அதை எப்படித் தொடர்கிறது?'
பிரகஸ்பதி..'அப்பு,தேயு,ஆகாயம்,வாயு, பிருதிவி ஆகிய இவை எப்போதும் தருமத்தைப் பார்த்துக் கொண்டுள்ளன.இரவும்,பகலும் சாட்சிகளாக விளங்கிகின்றன.அந்த உயிரை மேலே குறிப்பிட்ட அப்பு முதலானவற்றுடன் தருமமும் பின் தொடர்கிறது.மேலே சொன்னவை தோல்,எலும்பு,ரத்தம்,சுக்கிலம்,சோணிதம் ஆகியவற்றையும் உயிர் பிரிந்த் உடலையும் விட்டு நீங்குகின்றன.அந்த உயிர் தருமத்திற்கு ஏற்பப் 'பிறவி' எடுக்கிறது" என்றார்.
தருமர், 'அறிவில் நிகரற்றவரே! கொல்லாமை,தியானம்,தவம் இவற்றில் சிறந்தது எது?' என வினவ பிரகஸ்பதி கூறுகிறார்.
'இவை மூன்றும் தருமத்தின் வழிகளே!.என்றாலும்கொல்லாமையே அனைத்திலும் சிறந்தாகப் போற்றப்படுகிறது.மற்ற உயிர்களையும் தன் உயிர் போல் கருதுகிற ஒருவன் மறுமை இன்பம் பெறுவான்.தனக்கு எது தீங்கு எனத் தோன்றுகிறதோ அந்தத் தீங்கைப் பிறருக்குச் செய்யக் கூடாது.ஒருவன் மற்றவரிடத்தில் எப்படி நடந்து கொள்கிறானோ அப்படித்தான் மற்றவர்களும் அவனிடத்தில் நடந்து கொள்வார்கள்' என்று கூறி, பிரகஸ்பதி மறைந்தார்.

No comments:

Post a Comment