Thursday, January 6, 2011

136-பகைவரிடம் விழிப்பாய் இருக்க வேண்டும்

தருமர் பீஷ்மரிடம்.."பிதாமகரே! யாரிடமும் நம்பிக்கை வைக்கக் கூடாது எனக் கூறினீர்..அப்படி இருப்பது எப்படி சாத்தியமாகும்?' என வினவ பீஷ்மர் விளக்கினார்.

'ஒரு காலத்தில் பிரமதத்தன் என்னும் அரசன் ஆட்சி செய்து வந்தான்.அவனது அரண்மனையில் பூஜனி என்னும் குருவி நெடுங்காலமாக இருந்து வந்தது.அது பறவையாக இருந்த போதும் வேடனின் பண்புகளுடன் இருந்து வந்தது.எதேனும் பறவை, எங்கேனும் ஒலி எழுப்பினால், உடனே அது எந்தப் பறவை என்று சொல்லும் அறிவு மிக்கது அது.

அந்தக் குருவி அந்த இடத்திலேயே ஒரு அழகான குஞ்சைப் பெற்றெடுத்தது.அதே சமயம் அரசிக்கும் ஒரு ஆண் குழ்ந்தை பிறந்தது.பூஜனி என்னும் அக்குருவி இரு குழந்தைகளுக்கும் நெடுந்தூரம் சென்று வலிமை தரும் பழங்களைக் கொண்டு வந்து தரும்.அப்பழங்களை உண்டு வளர்ந்த அரசகுமரன் வலிமையுடன் திகழ்ந்தான்.ஒருநாள் அந்தக் குழந்தை, யாரும் இல்லாத போது குருவிக் குஞ்சைக் கொன்று விட்டது.பூஜனிக் குருவி வழக்கம் போல பழங்கலைக் கொண்டு வந்தது.தன் குஞ்சு கொல்லப் பட்டுத் தரையில் கிடந்ததைக் கண்டு கதறித் துடித்தது.'தகாதவரிடத்து நட்புக் கூடாது.அவர்களிடம் அன்பு கிடையாது.நல்ல எண்ணமும் கிடையாது.காரியம் முடிந்ததும் அவர்களைக் கை விட்டு விடுவர்.நன்றி கொன்ற இந்த அரசகுமாரனுக்குச் சரியான பாடம் புகட்டுவேன்.பழி வாங்குவேன்' என்று சபதம் எடுத்துக் கொண்டது.உடனே அரச குமாரனின் கண்களைக் கூரிய நகங்களால் பறித்து எடுத்துக் கொண்டு விண்ணில் பறந்தது.'இவ்வுலகில் செய்கின்ற பாவம் உடனே செய்தவனைச் சாரும்.செய்யப்பட்ட பாவத்தின் பயன் செய்தவனிடத்தில் சிறிதும் காணப்படாமல் போனாலும், அவனது சந்ததியைச் சார்ந்து துன்பத்தைத் தரும்' என்று சொல்லியது பூஜனி.

தன் மைந்தனின் கண் பார்வை குருவியால் பறிக்கப் பட்டதை உணர்ந்த அரசன்,'மைந்தனின் செயலுக்குத் தண்டனை கிடைத்து விட்டதாகக் கருதி, பூஜனியை நோக்கி..'பூஜனி என் மகன் செய்த தீங்குக்கு நீ தக்க தண்டனை வழங்கி விட்டாய்.இரண்டும் சமமாகி விட்டன.நடந்ததை மறந்து இங்கேயே தங்கி விடு' என்றான்.

அது கேட்ட குருவி 'ஒருமுறை தவறு நேர்ந்த பிறகு அங்குத் தங்கி இருப்பதை சான்றோர் ஏற்பதில்லை.எனவே நான் இந்த இடத்தை விட்டுச் செல்வதே பொருத்தமாகும்.வெளிப்படையாக விரோதம் ஏற்பட்ட இடத்தில் நன்மொழிகள் கூறிப் பயனில்லை.இனி நம்பிக்கை ஏற்படாது.பசப்பு வார்த்தைகளால் ஒரு பயனும் இல்லை.நட்பைக் கெடுப்பவரிடம் நம்பிக்கை கொள்ளாது இருப்பதே இன்பமாகும்.உறவினருள் தாயும்,தந்தையும் உயர்ந்தவர் ஆவர்.மகன் விதையைப் போன்றவன்.நம் கையில் பணம் உள்ளவரைதான் நண்பர்கள் நம்மை நாடுவர்.ஆதலால் நமது இன்ப துன்பங்களை அனுபவிப்பது ஆத்மா ஒன்றே! ஒருவருக்கொருவர் பகை கொண்டபின், அறத்தில் நாட்டமுடைய நெஞ்சம் வைராக்கியம் அடைந்தபின் சமாதானம் என்ற எண்ணமே வரக் கூடாது.மறுபடியும் மரியாதைக் கிடைத்தாலும் அந்த இடத்திற்குப் போகக் கூடாது' என்று உரைத்தது.

'குருவியே! ஒருவன் செய்த தீவினைக்குப் பிராயச்சித்தம் செய்வானாகில் அந்தக் குற்றம் அதோடு போயிற்று! எனவே இங்கு தங்கி இரு' என்று கேட்டுக் கொண்டான் அரசன்.அது கேட்ட குருவி மன்னனைப் பார்த்து 'ஒருமுறை தீங்கு நேர்ந்து மனம் மாறிய பின் மீண்டும் ஒன்று பட வாய்ப்பில்லை.இருவர் உள்ளத்திலும் தாம் செய்த தீங்கு உறுத்திக் கொண்டே இருக்கும்' என்று கூறிற்று.

பிரமதத்தன், 'பூஜனி, பழி வாங்கிய பிறகு பகை மாறும்.சாந்தி ஏற்படும்.குற்றம் செய்தவனும் அவன் பாவத்தை அனுபவிக்க நேராது.ஆதலால் இருவருக்கும் நட்பு உண்டாகலாம்' என்றான்.

குருவி 'இப்படிச் சாந்தி ஏற்படாது.எதிரி தன்னை சமாதானப்படுத்தி விட்டான் என்று கருதி அவனை நம்பவே கூடாது.ஆகவே இனி இங்கு நான் என் முகத்தைக் காட்டக் கூட விரும்பவில்லை' என்று கூறிற்று.'ஓ பூஜனியே, நாயைக் கொன்று தின்று வாழும் கீழோன் நாயையே வளர்த்து வருகிறான்.அவனிடம் நாளடைவில் நாய் நட்பாகி விடுகிறது.அதுபோலவே வைராக்கியத்துடன் இருக்கும் இருவர் இணைந்து வாழ்வாரானால் வைராக்கியம் மாறி நாளடைவில் நட்பு நிலைத்து விடும்' என்று கூறினான் பிரமதத்தன்.

இதுகேட்ட பூஜனி "ஓ..மன்னனே..வைராக்கியம் ஐந்து காரணங்களால் ஏற்படும்.ஒன்று-பெண்டிர் காரணமாகத் தோன்றும்.இரண்டு-நிலம்,தோட்டம்,வீடு முதலான பொருள்களூக்காக ஏற்படும்.மூன்று-வாய்ப்பேச்சு காரணமாக எழும்,நான்கு-பிறவியிலேயே தோன்றுவது ஐந்து-எப்போதோ நேர்ந்த குற்றத்திற்காக உண்டாகும்.இவற்றில் எவ்விதத்தில் வைராக்கியம் ஏற்பட்டாலும்-தவறு செய்தவன் மன்னனே ஆனாலும் அவனிடம் நம்பிக்கை வைக்கக்கூடாது.வைராக்கியம் என்னும் தீயை நன்மொழிகளாலோ,சாத்திரத்தாலோ போக்க முடியாது.அத்தீயை யாராலும் அணைக்க முடியாது.ஆகவே இனி உன்னை நம்ப மாட்டேன்" என்றது

அது கேட்ட பிரமதத்தன் பூஜனியை நோக்கி 'குருவியே! எல்லாம் காலத்தின் செயல்கள் தான்.நீயோ,நானோ எதற்கும் காரணமாவதில்லை.மனிதன் காலத்தால் பிறக்கிறான்.காலம் முடிந்ததும் இறக்கிறான்.இதுபோலத் தான் எல்லாம் காலாகாலத்தில் நிகழ்கின்றன.தீயானது விறகை எரிப்பது போலக் காலம் எல்லாவற்றையும் எரிக்கிறது.தோற்றுவிக்கிறது - மறைக்கச் செய்கிறது - மறக்கச் செய்கிறது.எனவே ஒருவருக்கு ஏற்படும் நன்மை தீமைகளுக்கு வேறு யாரும் காரணமில்லை.காலம்தான் காரணம்.இதை புரிந்து கொண்டு நட்போடு இரு.நீ செய்ததை நான் பொறுத்தது போல், என் மகன் செய்ததை நீயும் பொறுத்துக் கொள்' என்றான்.

ஆனால், பூஜனி விடவில்லை.'எல்லாம் காலம்தான் என்றால், எல்லாரும் ஏன் இப்படி தவிக்கிறார்கள்? அனைத்திற்கும் காலமே காரணம் என்பது உண்மையானால் நோய் உற்றவர் ஏன் மருத்துவரை நாட வேண்டும்? காலத்தின் விளைவு என்றால் உற்றார்,உறவினர் இழப்புக்கு ஏன் அழ வேண்டும்? காலமே காரணமானால் புண்ணியம் சம்பாதிக்க யாருக்குத் தான் மனம் வரும்? என் குழந்தையைக் கொன்ற உன் மகனை நான் துன்புறுத்தினேன்.இதற்காக என்னை நீ துன்புறுத்துவாய்..கொல்வாய்..

மனிதர்கள் உணவுக்காகப் பறவைகளைக் கொல்கின்றனர்.இது தவிர வேறு நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை.துக்கம் பிறப்பானாலும் இறப்பானாலும் உண்டாகிறது என வேதங்கள் கூறுகின்றன.எல்லாருக்கும் உயிரின் மீது ஆசை உண்டு.அதுபோலவே மனைவி மக்கள் சுற்றத்தார் ஆகியோரிடமும் ஆசை ஏற்படுகிறது.முதுமை ஒரு துக்கம்.பொருள் இழப்பு ஒரு துக்கம்.வேண்டாத இடத்தில் இருப்பது ஒரு துக்கம்.இதுபோலவே வைராக்கியத்தால் ஏற்படும் துக்கமும், பெண்களால் ஏற்படும் துக்கமும் உண்டு.இறந்த மகனால் உண்டாகும் துக்கத்தை மறக்கவே முடியாது.பிறருக்கு ஏற்படும் துக்கத்தைக் கண்டு நாமும் துக்கப் படுகிறோம்..மன்னா..நீ எனக்கு இழைத்த கொடுமையும் நான் உனக்கு செய்த துன்பமும் நெடுநாள் ஆன பிறகும் அழியா.வைராக்கியம் ஏற்பட்டபின் நெருங்கி வாழ நினைப்பது உடைந்த மட்கலம் ஒன்றாவது போல ஆகும்'

பகைவர் வார்த்தைகளில் நம்பிக்கை கொள்வோர் புற்களால் மூடப்பட்ட குழியில் வீழ்ந்து துன்புறுவது போல் துன்புறுவர்.

ஒருவனுக்கும் கெடுதி செய்யாது இருக்க வேண்டும்.கெடுதி செய்த பின் நம்பிக்கக் கொள்ளக் கூடாது.நம்பினால் அழிவி நிச்சயம்' என்றது பூஜனி.

பிரமதத்தன் 'நம்பிக்கையின்றி உலகில் ஒன்றும் சாதிக்க முடியாது.எந்த செயலையும் செய்ய இயலாது.பொருளையும் சேர்க்க முடியாது.ஒருவன் எப்போதுமொருவிதமான சந்தேகத்தோடும் பயத்தோடும் இருந்தால் அவனை உயிர் வாழ்பவனாகவே கருத முடியாது.அவனை செத்தவனாகவே உலகம் கருதும்.எனவே என்னிடம் நம்பிக்கையோடு வந்திரு' என்றான்.

ஆயினும் பூஜனியின் மனம் மாறவில்லை.'மன்னா..புண்பட்ட காலுக்கு என்னதான் பாதுகாப்பான ஏற்பாடுகளைச் செய்துக் கொண்டு ஓடினாலும் கூட அக்காலுக்கு வலி உண்டாகும்.துன்பம் உள்ள கண்ணால் காற்றை எதிர்த்துப் பார்த்தால் துன்பம் அதிகமாகும்.ஒருவன் அறிவு கெட்டு தீய வழியில் சென்றால் அழிவு நிச்சயம்.தெய்வமும்,முயற்சியும் ஆகிய இரண்டில் ஒருவனுக்கு உதவுவது முயற்சியே!இயல்பாக முயற்சி இல்லாதவன் வாழ்க்கையில் தோல்வியையே சந்திப்பான்.கல்வி,தூய்மை,திறமை,ஆளுமை,வைராக்கியம் ஆகிய ஐந்தும் ஒரு சேரக் கருதத் தக்கன.மனிதனுடைய சொத்துகள் முயற்சியால் வருபவை.முயற்சியுடையவன் இவற்றைப் பெற்று இன்பத்தை அனுபவிக்கிறான்.பிறரைக் கண்டு அவன் பயப்படமாட்டான்.அறிவுடையவன் செல்வன் நாளாவட்டத்தில் பெருகும்.

சிலர் தம் மனைவி,பிள்ளைகள்,உறவினர் ஆகியோரிடத்து மிகுந்த பாசம் கொண்டு துன்புறுவர்.அறிவாளிகள் அதிகம் பாசம் கொள்ளாத காரணத்தால் துன்பமுறுவதில்லை.மேலும் அறிஞர்கள் தீய நெறியிலிருந்தும்,அவமரியாதை உள்ள இடத்திலிருந்தும் விலகியே இருப்பர்.ஆதலால் நான் வேறு இட செல்கிறேன்.இங்கு இருக்க எனக்கு விருப்பமில்லை' என்று கூறி அப்பறவை மன்னனிடம் அனுமதி பெற்றுப் பறந்து சென்றது.

1 comment:

Anonymous said...

//
சிலர் தம் மனைவி,பிள்ளைகள்,உறவினர் ஆகியோரிடத்து மிகுந்த பாசம் கொண்டு துன்புறுவர்.அறிவாளிகள் அதிகம் பாசம் கொள்ளாத காரணத்தால் துன்பமுறுவதில்லை//

I understand and reading the timing post!
Nice and advisable!

Post a Comment