தருமரின் வைராக்கியம் பற்றி அறிந்த அர்ச்சுனன் வருத்தத்துடன் தருமரைப் பார்த்து...
நாட்டை விட்டு நீங்கி பிச்சை ஏற்கத் துணிந்த ஜனகரைப் பற்றி ஆவர் மனைவி கூறியதை உலகு அறியும்.பொன்னையும், பொருளையும், மனைவி மக்களையும், நண்பரையும் பிரிந்து ஒன்றும் இல்லாதவராய்ப் பிச்சைத் தொழிலை மேற்கொண்டவராய்த் திரிந்த ஜனக மாமன்னரை அவர் மனைவி யாரும் இல்லாத போது நெருங்கி பேசினாள்..
'மாபெரும் அரசைத் துறந்து..ஓடெடுத்து ஒரு பிடி அரிசி எப்போது கிடைக்கும் என ஏன் எதிர்ப்பார்க்கிறீர்? ஆயிரமாயிரம் விருந்தினரை உபசரித்த நீர் ஏன் இப்படி வயிறு வளர்க்க பிச்சை எடுக்கிறீர்..உம் தாய் இப்போது மகனை இழந்து காணப்படுகிறாள்.பெற்ற தாயையும்..உற்ற தாரத்தையும் தவிக்க விட்டு இப்படிச் செல்வது முறையா? அரசர் பலர் உம்மை சுற்றிச் சுற்றிப் போற்றி வழிபட்டு மகிழ்ச்சியுடன் இருந்தார்களே, அவர்களை எல்லாம் துன்பத்தில் ஆழ்த்திவிட்டு நீர் எந்த உலகை அடையப் போகிறீர்..
நாட்டையே சோகக்கடலில் தள்ளிவிட்டுச் செல்லத் துணிந்த உமக்கு..நிச்சயமாக முக்தி கிடைக்காது..உண்மையிலேயே நீர் சினத்தை விட்டு விட்டீரா? துறவுக் கோலத்தின் சின்னமாக விளங்கும் இந்தத் தண்டத்தையும்..காஷாயத்தையும் ஒருவன் பிடுங்கினால் உமக்கு சினம் வராதா? யாவற்ரையும் விட்டுத் தொலைத்த உமக்கு ஒரு பிடி அரிசியின் மீது மட்டும் ஆசையில்லையா?
ஒன்றை புரிந்துக் கொள்ளுங்கள்..துறவிகளுக்கு உணவளிக்கும் இல்லற வாழ்வே மேலானது.அதுதான் உலகில் நிலையானது.உணவு அளிக்கும் அரசன் இல்லாவிடின் மோட்சத்தை விரும்பும் துறவிகளும் தங்கள் துறவு வாழ்க்கையில் நிலை குலைந்து போவர்.துறவறம் சிறப்படைவதே இல்லறத்தால் தான்.உயிரானது உணவால் நிலை பெற்றுள்ளது.ஆகவே உணவு அளிப்பவன் உயிர் அளப்பவன் ஆவான்.(உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் ஆவர்.)
துறவுக் கோலத்தில் இருப்பவரும்..உணவுக்காக இல்லறத்தாரை சார்ந்தே இருக்க வேண்டியுள்ளது.துறந்தோர் என்பவர் முற்றும் துறந்தவராய் இருக்க வேண்டும்..சிலவற்றை துறக்க மறந்தவராய் இருக்கக் கூடாது.
எனவே..முழுத் துறவுதான் துறவிகளின் இலக்கணம்.தலையை மொட்டையடித்து, காஷாயம் பூண்டு, சில நூல்களை கையில் ஏந்தி, திரிதண்டம்,கமண்டலம் தாங்கி இருப்பது துறவாகாது.இத்தகைய போலித் துறவைத் துறந்து இல்லறத்தில் நாட்டம் கொள்வீர்.எவன் ஒருவன் ஆசையுள்ளவன் போல் காணப்பட்டாலும்..ஆசையற்றவனாக இருக்கின்றானோ, பகைவரிடத்தும்..நண்பரிடத்தும் சமமாக நடந்துக் கொள்கின்றானோ அவனே உண்மைத் துறவி ஆவான்.அவனே உண்மையில் முக்தி மார்க்கத்தில் செல்பவன்.இத்தகைய மன நிலையைப் பெற்று இல்லறத்திலே இருந்துக் கொண்டு ராஜரிஷி போல் வாழ்ந்து உண்மைத் துறவிகளைப் போற்றி மனத்தை வெல்வீராக' என்று ஜனகரின் மனைவி கூறினாள்.
எனவே நீங்களும் உங்களது விவேகமற்ற மன நிலையிலிருந்து விடுபட்டு உயிரினங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.சான்றோரையும்..தவத்தோரையும் வழிபட்டு உலகை நன்முறையில் காப்பீராக.நற்கதி பெற இதுவே நன்னெறி ஆகும்' என்றான் அர்ச்சுனன் தருமரை நோக்கி.
Monday, March 1, 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நல்ல கருத்துக்கள். கடைசி வரிகளில் வரும் துறவு வரிகள் உண்மையானவை. மிக்க நன்றி.
Post a Comment