Saturday, February 27, 2010

88-தருமர் பீமனுக்கு மறுமொழி

பிமனுக்கு தருமர் பதிலுரைக்கத் தொடங்கினார்..

'அரசாட்சி..அரசாட்சி என அலைகிறாயே..நன்கு சிந்தித்துப் பார்.இந்த உலகின் நிலைமையைப் புரிந்துக் கொள்..கானகத்தில் வேட்டையாடும் வேடனுக்கு வயிறு ஒன்றுதான்..இந்த பூமி முழுதும் அரசனாக இருந்து ஆட்சி புரியும் மன்னனுக்கும் வயிறு ஒன்று தான்.காதல்,அன்பு,சினம் போன்ற எல்லா உணர்ச்சிகளும் அப்படியே ஒரே தன்மையாக இருக்கின்றன.ஒரு நாளென்ன..ஒரு மாதம் என்ன..ஆயுள் முழுதும் முயன்றாலும் மனித ஆசை நிறைவேறாது.மகிழ்ச்சியையும்..செல்வத்தையுமே நீ பெரிதாக எண்ணுகிறாய்..போரிட்டுப் பெற்ற அரச பாரத்தைச் சுமக்க வேண்டும் என்னும் பேராசை உன்னிடம் உள்ளது..

இப் பெரிய சுமையை தூக்கி எறிந்து விட்டு தியாகம் என்னும் துறவை மேற்கொள்வாயாக..புலியானது தன் வயிற்றுக்காக எவ்வளவு இம்சையில் ஈடுபடுகிறது? அதுபோலவே தீயவர் பலர் இம்சையில் ஈடுபடுகின்றனர்.பொருள்கள் மீதான பற்றை விட்டுத் துறவறத்தை மேற் கொள்பவர் சிலரே..அறிவின் வேறுபாடு எப்படி உள்ளது பார்! இந்த பூமி முழுதும் எனக்கே சொந்தம்..யாருக்கும் பங்கு இல்லை என ஆட்சி செய்யும் மன்னனை விட, அனைத்தும் துறந்த துறவி மேலானவர்.

அருமைத் தம்பி..உலக இயல்பை சிந்தி..பொருள் மீது ஆசை கொள்பவன் துன்பம் அடைகிறான்.ஆசை அற்றவன் இன்பம் அடைகிறான்.ஆகவே நாடாள்வதும்..தியாகமே என்ற பொய் வாதத்தை விட்டு விட்டு இவ்வுலக வாழ்க்கையை துறப்பாயாக..எல்லாப் பற்றையும் துறந்த ஜனகர் ஒருமுறை சொல்கிறார்..'எனது செல்வம் அளவற்றது..ஆனால் எனக்கு என்று ஏதுமில்லை..ஆதலால் மிதிலை பற்றி எரிந்த போது என்னுடையது ஏதும் எரியவில்லை.பொருள் பற்று இல்லாததால் அதன் அழிவு கவலையைத் தருவதில்லை..ஞானம் என்னும் குன்றில் நிற்பவன்..துயருறும் மக்கள் கண்டு துயரடைய மாட்டான்.அறிவற்றவன் மலை மீது இருந்தாலும், பூமியில் இருந்தாலும் பொருளின் உண்மைத் தன்மையை உணர மாட்டான்.ஆசையற்ற ஞானி பரம பதத்தை அடைவான்..ஞானம் அற்றவன் அதனை அடைய முடியாது' என பீமனுக்கு தருமர் கூறினார்.

ஜனகருக்கும்..அவரது மனைவிக்கும் நடந்த உரையாடலை அர்ச்சுனன் தருமருக்கு சொல்ல எழுந்தான்.

No comments:

Post a Comment