Wednesday, March 24, 2010

94-கண்ணன் தருமருக்கு உரைத்தல்

இப்போது கண்ணன் தருமரை நோக்கி..'நீ கவலைப்படுவதில் அர்த்தம் ஒன்றுமில்லை.மனதைக் கொன்றழிக்கும் கவலையிலிருந்து மீள்வாயாக.போர்க்களத்தில் மாண்டவர் அனைவரும் வீரப்போர் புரிந்து மாண்டவரே! யாரும் கோழைகளாக புறமுதுகு காட்டி ஓடுகையில் கொல்லப் படவில்லை.அவர்கள் தங்கள் கடமைகளை முடித்துக் கொண்டு சுவர்க்கம் சென்றனர்.அவர்களைக் குறித்து நீ புலம்புவதில் நியாயம் இல்லை.

புத்திரனை இழந்த சோகத்தால் பீடிக்கப்பட்ட சிருஞ்சிய மன்னனுக்கு நாரதர் சொன்ன ஒரு வரலாற்றை உனக்கு நான் சொல்கிறேன்.சிருஞ்சியனை நோக்கி நாரதர் 'வேந்தே...இறந்து போன மாமன்னர்களின் வரலாற்றைக் கேட்டபின் உனது துன்பம் தொலையும் என எண்ணுகிறேன்.முன்னொரு காலத்தில் மருத்தன் என்னும் மன்னன் ஒருவன் இருந்தான்..இந்திரன்,வருணன்,பிரகஸ்பதி முதலானோர் வந்து சிறப்புச் செய்யும் அளவிற்கு யாகம் செய்த பெருமை மிக்கவன் அவன்.அம்மருத்தனது ஆட்சியில் வித்தின்றியே விளைவு மிகுந்திருந்தது.உழவு முதலியன இன்றியே தானியங்கள் எங்கும் குவிந்து கிடந்தன.தேவர்களுக்கும்..கந்தர்வர்களுக்கும் அவன் அளித்த அளவிற்கு வேறு யாரும் தானம் அளித்ததில்லை.உன்னையும், உன் மகனையும் விட அம்மருத்தன் ஞானம்,தருமம்,செல்வம்,வைராக்கியம் ஆகிய நான்கினும் சிறந்து விளங்கினான்.அத்தகையவனே இறந்து விட்டான் எனில்..உன் மகன் இறந்து போனது குறித்து நீ ஏன் கவலைப்படுகிறாய்?

சுகோத்திரன் என்னும் மன்னனும் இறந்து விட்டான்..அவன் என்ன சாதாரண மன்னனா? அவனது மேன்மையை அறிந்த இந்திரன் அவன் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு வருடம் பொன் மாரி பெய்வித்தான்.ஆறுகளில் பொன்னீர் ஓடிற்று.அவற்றில் மீன்,நண்டு,ஆமை கூட பொன்னிறமாய்க் காட்சி அளித்தது.பல யாகங்களில் பொன்னையும், பொருளையும் அனைவருக்கும் வாரி வாரி வழங்கினான்.அத்தகைய மன்னனும் மாண்டு விட்டான் எனில்..ஒரு யாகமும் செய்யா உன் மகன் இறந்ததற்கு ஏன் அழுகிராய்.

அங்க தேசத்து அரசன் பிரகத்ரதன்..அவன் செய்த யாகத்தின் போது லட்சக்கணக்கான யானைகளையும்,குதிரைகளையும்,பசுக்களையும்,காளைகளையும் பிராமணர்களுக்குத் தானமாக அளித்தான்.அளவற்ற செல்வங்களை வாரி வாரி வழங்கினான்.கொடை வள்ளலான அந்த பிரகத்ரதனும் இறந்து போனான்

சிபி என்னும் அரசன் உலகம் அனைத்தும் ஒரே குடையின் கீழ் ஆண்டவன்.அவன் தன் நாட்டில் உள்ள பசுக்களை மட்டுமின்றி..காட்டில் உள்ள பசுக்களையும் யாகத்தின் போது தானம் செய்து உயர்ந்திருந்தான்.பிரம தேவரே அவனது பெருமையைக் கண்டு பெருமிதம் அடைந்தார்.அத்தகைய பெருமை மிக்கவனும் இறந்து விட்டான்.

செல்வங்களைக் குவியல்..குவியலாய் பெற்றவன் பரதன் என்னும் மன்னன்.ஆயிரம் அசுவமேத யாகங்களையும்..நூறு ராஜசூய யாகங்களையும் செய்த பெருமை மிக்கவன்.அந்த பரதன் செய்த செயற்கரிய செயல்களை தம்மால் செய்ய முடியவில்லையே என அக்கால மன்னர் எல்லாம் ஏங்கினர்.யாகத்தின் போது அம்மாமன்னன் கோடிக்கணக்கான பசுக்களை தானம் செய்தான்.உன்னையும்..உன் மகனையும் விட சிறந்தவன் இறந்து விட்டான்.

ராமரைவிட சிறந்தவரை காணமுடியுமா?உலக உயிர்களில் அவர் காட்டிய அன்பிற்கு ஈடு உண்டா..அந்தப் புண்ணியரின் ஆட்சியில் மக்கள் நோய்த் துன்பமின்றி வாழ்ந்தனர். மாதம் மும்மாரி பெய்தது.மக்கள் பயமின்றி மகிழ்வுடன் வாழ்ந்தனர்.பதினாங்கு ஆண்டு கால வனவாசத்திற்குப் பிறகு பல அசுவமேத யாகங்களைச் செய்தார்.அயோத்தியில் ராம ராஜ்யம் நீடித்திருந்தது,..அந்த ராமனும் மரணமடைந்தான்.

பகீரதன் பற்றி அறியாதார் இல்லை..அவன் ஆயிரம்..ஆயிரம் குதிரைகளையும்,யானைகளையும்,தேர்களையும்,பசுக்களையும்,ஆடுகளையும் தானம் செய்தவன்.அவன் மடியில் கங்கை ஒரு குழந்தைப் போல அமர்ந்திருந்தாள்.அதனால் கங்கை அவனுக்கு மகளானாள்...உம்மையும்..உம் மகனையும் விட சிறந்த அந்த பகீரதனும் மரணம் அடைந்தான்..

(கண்ணன் மேலும் கூறுவது தொடரும்)

5 comments:

சசிகுமார் said...

நல்ல தேடல் நண்பா, ஆனால் ஒரு சின்ன அறிவுரை ஏற்று கொள்ளுங்கள். உங்கள் தளத்தில் எழுத்துக்கள் மிகவும் சிறியதாக வுள்ளது சற்று பெரியதாக இருந்தால் படிப்பதற்கு சுலபமாக இருக்கும். நடுநடுவே படங்களை சேர்த்தால் படிப்பதற்கு சுலபமாக இருக்கும். நல்ல தகவல் நண்பா

சசிகுமார் said...

உங்கள் தளத்தில் WORD VERIFICATION கேட்டு தொந்தரவு செய்கிறது அதை நீக்கி விடவும்.தேவைபட்டால் இந்த லிங்கில் சென்று எப்படி நீக்குவது என்று பார்த்துக்கொள்ளவும் http://vandhemadharam.blogspot.com/2010/03/blog-post_5216.html

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சசிகுமார்

பனித்துளி சங்கர் said...

நல்ல பதிவு!
பகிர்வுக்கு நன்றி!!
தொடருங்கள்!!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சங்கர்

Post a Comment