அர்ச்சுனனின் சொல் கேட்ட தருமர்..அவனுக்கு தன் வைராக்கியத்தை புலப்படுத்தச் சொல்கிறார்..
'தம்பி..பல கோணங்களில் பார்க்கையில்..சாத்திரங்கள் முரண்பட்டதாய் தோன்றும்.ஆயினும் துறவறத்தின் மேன்மையை..உண்மைத் தன்மையை நான் அறிவேன்..நீ சாத்திரத்தை மேற்போக்காக படித்தவன்.அதனை ஆழ்ந்து நோக்காதவன்.உண்மையான சாத்திர ஞானம் உள்ளவன் உன்னைப் போல பேச மாட்டான்.உடன்பிறப்பே..இந்த அளவாவது..நீ சாத்திரத்தை அறிந்திருப்பது கண்டு மகிழ்ச்சி.நீ ஒரு போர் வீரன்.உனக்கு இணையாக போர் புரிபவன்..உலகில் யாரும் இல்லை.போர்க் கருவிகளை உன்னைப் போல யாரால் அவ்வளவு அற்புதமாகப் பயன்படுத்த முடியும்?உனக்கு இணையானவன் மூவுலகிலும் இல்லை.அதற்காக நான் பெருமிதம் அடைகிறேன்.ஆயினும் தம்பி, நீ சாத்திரம் பற்றிப் பேசாதே..
செல்வம் பெரிது என்கிறாய்..அதிலும் மண்ணாள் செல்வம் யாருக்கு வாய்க்கும் என்கிறாய்.செல்வம் நிலையற்றது.இதனை உணர்ந்து தவம் மேற்கொள்பவர் நிலையான முக்தி இன்பம் அடைவர்.எல்லாவற்றையும் தியாகம் செய்பவன் எவனோ..அவனே நற்கதி அடைகிறான்.
தியாகம் என்பது நம்மிடம் உள்ள பொருட்களைப் பிறருக்கு தருவது மட்டும் அன்று.உள்ளத்தில் தோன்றும் தீய எண்ணங்கள் அனைத்தும் விட்டு விடுவதும் தியாகம் தான்.நற் பண்புகளை எடுத்து உரைக்கும் ஆகமங்களைக் கற்பவர் இந்த உணமையை அறிவர்.
கண்களால் காணமுடியாததும்..வார்த்தைகளால் வருணிக்க முடியாததும் ஆன ஆன்மா தான் செய்யும் கர்ம வினைகளுக்கு ஏற்பப் பல்வேறு பிறவிகளில் உழன்று வருகிறது.அஞ்ஞானத்தால் ஏற்படும்..இந்த கர்ம வினைகளை நல்ல ஞானத்தால் அழித்து விட்டு மோட்ச மார்க்கத்தில் செல்ல வேண்டும்.தம்பி, துறவிகளால் போற்றப் பட்ட இம் முக்திப் பாதையை விட்டு..பல துன்பங்களுக்குக் காரணமான செல்வத்தை நீ ஏன் விரும்புகிறாய்? வினையின் கொடுமையை நன்கு உணர்ந்த ஆகம அறிவு மிக்கவர்..பொருளைப் பெரிதென ஒரு நாளும் பாராட்ட மாட்டார்கள்.தருமம் தெரிந்தவர்களோ..வைராக்கிய சிந்தை உடையவர்களாகிப் பொருள் மீதுள்ள பற்றை அறவே விலக்கிப் பரமபதத்தை அடைகின்றனர்.ஆகவே, அர்ச்சுனா..இது குறித்து நீ அதிகம் பேச வேண்டாம்' என்று கூறி..தருமர் தன் கருத்தில் உறுதியாக இருந்தார்.
Tuesday, March 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment