Monday, February 8, 2010

85- சகாதேவன், திரௌபதி தருமரிடம் உரையாடுதல்

நகுலனின் பேச்சுத் துறவறத்தில் உள்ள துன்பத்தை விவரிக்கவும், அரசரின் கடமையை நினைவுபடுத்துவதாகவும் அமைய சகாதேவன் தருமரைப் பார்த்து'எனக்குத் தாயும், தந்தையும், குருவும் நீங்கள்தான்.உம் மீது உள்ள பக்தியால் இதை உரைக்கிறேன்.தவறாயின் மன்னிக்கவும்.உற்றார், உறவினர், நண்பர்கள் ஆகியோரையோ நண்பர்களையோ, வீடு முதலானவற்றையோ துறப்பது துறவு ஆகாது.இவை எல்லாம் புறப் பொருள்கள்.புறத்துறவு உண்மைத் துறவன்று.உள்ளத்தில் தோன்றும் அழுக்காறு அவா வெகுளி காமம் முதலிய தீய நினைவுகலைத் துறப்பதுதான் உண்மைத் துறவாகும்.இதனை அகத்துறவு என்பர்.

காலமெல்லாம் க்ஷத்திரிய சிந்தனையுடன் வாழ்ந்த உமக்கு எப்படி இந்த துறவு எண்ணம் வந்தது.துறவு என்பது ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகே தோன்ற வேண்டும்.துக்கத்தில் தோன்றுவது துறவாகாது.சாது தருமத்தில் சிறிது தவறு நேரினும்..அடுத்த பிறவி பெரும் துன்பம் தரும் பிறவியாகி விடும்.அப்பிறவியிலிருந்து அடுத்தடுத்து நேரும் பிறவிகள் எப்படி யிருக்கும் என யாரால் சொல்ல முடியும்.ஆகவே நம் முன்னோர்கள் செல்லும் வழியிலேயே நாமும் செல்ல வேண்டும்.மற்ற யுகங்களைக் காட்டிலும் திரேதாயுகம் மிகச் சிறந்த யுகமாகும்.அந்த யுகத்திலே தோன்றிய அரசர்கள் இந் நில உலகில் நன்கு ஆட்சி புரிந்தனர்.தீமையை ஒழித்து நன்மையை நிலை நிறுத்தினர்.இதைவிட அரச தருமம் வேறென்ன உண்டு.எனவே..நீரும் நம் முன்னோர் சென்ற வழியில் நாடாள வேண்டும்' என்றான்.

தம்பியரின் உரைகள் தருமரை மாற்றவில்லை..இந்நிலையில் திரௌபதி தருமரை நோக்கி..

உம் தம்பியர் உமது துயர் கண்டு வருந்துகின்றனர்.அவர்களை மகிழ்ச்சி அடைய செய்ய வேண்டியது உமது கடமை.முன்னர் காட்டில் வாழ்ந்த போது தாங்கள் கூறியது என்ன.'என் அருமை தம்பியரே! பொறுங்கள்..நம் துன்பங்கள் விரைவில் தீரும்.நாம் கொடியவனான துரியோதனனைக் கொன்று நாட்டை மீட்போம்.' என்று கூறினீர்கள்.எனக்கு ஆறுதல் சொன்னீர்.அப்படிப் பேசிய நீங்கள் தற்போது ஏன் எங்கள் அனைவருக்கும் துன்பம் தரும் சொற்களைக் கூறுகிறீர்.

தைரியம் இல்லாதவரால் நாட்டை ஆள முடியாது.நீதி தெரியா அரசர் புகழ் பெற முடியாது.அவரது நாட்டு குடி மக்களும் நிம்மதியாக வாழ முடியாது.நல்ல அரசன் உலகில் சூரிய சந்திரர்களின் ஆற்றலைப் பெற்றவன்.நெருப்பு நெருங்கிய பொருளைத்தான் சுடும்.ஆனால் அரச தண்டனையோ தீமை எங்கிருந்தாலும் அழித்துவிடும்.உமது சினத் தீ திருதிராட்டிரனின் குலத்தையே சுட்டெரித்து விட்டது.

உலகம் தூங்குகையில் அரச நீதி விழித்துக் கொண்டிருக்கும்.அப்படி நீதி செலுத்தும் அரசனைத் தேவரும் போற்றுவர்.அரசன் தண்டிப்பான் என்பதாலேயே தீமை செய்வோர் அடங்கியுள்ளனர்.அரசரிடத்தில் அச்சம் இல்லையெனில் அனைத்து நாட்டு நன்மைகளும் சிதறிப் போகும்.குற்றம் செய்பவர் தப்பிக்க முடியாது என்ற அச்சம் ஒவ்வொருத்தர் உள்ளத்திலும் இருக்க வேண்டும்.இந்த உணர்வு அல்லாதார் தண்டிக்கப் படுவர்.

தருமத்தை விட்டு விலகியதால் தான் திருதிராட்டினனின் புதல்வர்கள் கொல்லப்பட்டனர்.அதனால் நீர் வருந்த வேண்டாம்.தீயவர்களை தண்டிப்பதும்..நல்லவர்களைக் காப்பதும் ,போர்க்களத்திலிருந்து ஓடாமல் இருப்பதும் முக்கிய தருமங்கள் ஆகும்.இந்நாட்டை ஆளும் உரிமையை யாரிடமும் யாசித்துப் பெறவில்லை.

குந்திதேவியார் அன்று சொன்னது என்ன 'திரௌபதி உனக்கும் நல்ல காலம் வரும்.என் மகன் தருமன் உன் துயரைத் தீர்க்கப் போகிறான்.' என்றாரே..அது பொய் ஆகுமா?உலகில் உள்ள பெண்கள் அனைவரினும் நான் கீழானவள்.திருதிராட்டிரனனின் மகன்களால் அடைந்த அவமானத்தைத் தாங்கிக் கொண்டு இன்னும் உயிருடன் இருக்கின்றேனே..இதைவிடக் கீழ்மை என்ன இருக்கப் போகிறது.அந்த மா பாவிகளை கொன்றதில் என்ன தவறு.

தற்கொலை செய்து கொள்பவன்,தன் பொருளை அழிப்பவன்.உறவினனைக் கொல்பவன்,விஷம் வைப்பவன்,காரணமின்றி பிறரைக் கொல்பவன்,பிறன் மனைவியை இழுப்பவன் ஆகிய இந்த அறுவரும் ஆததாயிகள் எனப்படுவர்.இவர்களைக் கொல்வது கொலைக் குற்றமாகாது..என்று பிரம தேவர் பார்க்கவரிடம் சொன்னதை மறந்து விட்டீரா? அரசவையில் என்னை இழுத்து வந்து மானபங்கம் செய்த பாவிகளைக் கொன்றது குற்றமல்ல.அதற்கான தண்ட நீதியை செலுத்திய நீர் கோழைகளைப் போல் நடந்துக் கொள்ளக் கூடாது.கவலையை விட்டொழித்துத் தம்பியருடன் நல்லாட்சி செய்வீராக.." என்று அரச நீதியை நினைவுப் படுத்தினாள்.

1 comment:

பித்தனின் வாக்கு said...

very good sir. today i read it other parts also
nice thanking you.

Post a Comment