அர்ச்சுனனின் பேச்சைக் கேட்டதும்..உற்சாகமானான் பீமன்.அவன் தருமரை நோக்கி 'உம்மை விட அரச நீதி உணர்ந்தார் யாவரும் இலர்.உங்களிடமிருந்தே நாங்கள் அனைத்து நீதியும் கற்றோம்.ஆயினும் அவற்றை எங்களால் கடைபிடிக்க இயலவில்லை.ஆனால்..எல்லாம் உணர்ந்த நீங்கள் இப்போது ஏன் தடுமாறுகிறீர்கள்? நீங்கள் ஏன் சாதாரண மனிதரைப் போல சோகத்துடன் உள்ளீர்.
உலகில் நல்லது, கெட்டது அனைத்தும் நீர் அறிவீர்.எதிர்காலம் பற்றியும் உமக்குத் தெரியும்.ஆதலால் நான் சொல்வதை சற்றுக் கேளும்..உலகில் உடலைப் பற்றியும்..மனதுப் பற்றியும் இரு வகை நோய்கள் உள்ளன..இவற்றில் ஒன்றிலிருந்து மற்றொன்று உருவாகிறது.உடல் நோயால்..மன நோயும்..மன நோயால் உடல் நோயும் உண்டாகின்றன.உடல்,மனம் இந்த நோய்களைக் குறித்து எவன் சோகம் அடைகின்றானோ.அவன் அந்த சோகத்தால்..துக்கத்தையும் அடைகிறான்.இந்தச் சோகமும் துக்கமும் அவனை ஆட்டிப் படைக்கின்றன.
மகிழ்ச்சியில் இருக்கும் மனிதர்கள்..தங்கள் அறியாமையால்..துக்கத்தை தாங்களாகவே வரவழித்துக் கொள்கிறார்கள்.அப்படிப்பட்டவர்களைப் போலவே..நீங்கள் இப்போது நடக்கிறீர்கள்.மிகவும் மகிழ்வுடன் இருக்க வேண்டிய நேரத்தில் துக்கத்தை அடைந்துள்ளீர்.நாம் கடந்து வந்த பாதையை சற்று எண்ணிப் பாரும்.நம் கண்ணெதிரிலேயே, வீட்டு விலக்காக ஒற்றை ஆடையில் இருந்த திரௌபதியை அவையில் இழுத்து வந்தானே கொடியவன்..அந்தக் கொடுமையை எப்படி மறந்தீர்? நாட்டைவிட்டுச் சென்று காட்டில் நாம் அடைந்த வேதனையை மறந்து விட்டீரா..அஞ்ஞாத வாசத்தில் திரௌபதியை கீசகன் காலால் உதைத்தானே..அந்தத் துயரக் காட்சியை எப்படி மறந்தீர்?
பீஷ்மர்,துரோணர் ஆகிய புறப் பகையை வெற்றிக் கொண்ட நீர் அகப் பகையை வெல்ல முடியாது தவிப்பது ஏன்?இந்த மனப் போராட்டத்தில் வில்லும்,அம்பும் வாளும் உறவினரும் நண்பரும் ஒன்றும் செய்வதற்கில்லை.இம்மனத்தை அடக்கும் முயற்சியில் நீரே தான் ஈடுபட வேண்டும்.தெளிவற்ற குழம்பிய நிலையில் உள்ள மனம் ஒரு நிலையில் நிற்காது.உமது மனப் போராட்டம் வீணானது.நீர் ஈனக்கவலையை விட்டொழித்து ..நீதி நெறி வழுவாமல் அரச பாரத்தை ஏற்பீராக! தெய்வ பலத்தாலும்..திரௌபதியின் அதிர்ஷ்டத்தாலும் துரியோதனன் இனத்தோடு அழிந்தான்.இனியும் சிந்திக்க என்ன உள்ளது? விதிப்படி அஸ்வமேத யாகம் செய்வீர்.நாங்களும், கண்ணபிரானும் இருக்கும் வரை உமக்கு என்ன குறை? ' என்றான்.
Wednesday, February 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
இப்ப எங்களுக்கும் மகாபாரதம் கதை தெரியும்னு சொல்வோம் . மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி !
Post a Comment