Monday, February 15, 2010

86-அர்ச்சுனன் மீண்டும் தருமருக்கு உரைத்தல்

அண்ணலே! தீயோரை அடக்கி மக்களைக் காப்பது அரச நீதியாகும்.மன்னன் உறங்கினாலும் அரச நீதி எப்போதும் விழித்துக் கொண்டே இருக்கும்.அறம், பொருள்,இன்பம் ஆகியவற்றைக் காப்பது அரசநீதி யாகும்.மக்களில் சிலர் மன்னன் தண்டிப்பான் என்றே தவறு செய்யாமல் இருக்கிறார்கள்.சிலர் மரண தண்டனைக்குப் பயந்தும், செத்த பிறகு நரகம் போக வேண்டியிருக்கும் எனப் பயந்தும் குற்றம் புரியாமல் இருக்கின்றனர்.அரச தண்டனை என்பது செங்கோலின் ஒரு பகுதி என்பதை மறக்கக் கூடாது.தண்டனைக்குப் பயந்துதான் ஒருவரை ஒருவர் துன்புறுத்தாது உள்ளனர்.குற்றத்திற்கு சரியான தண்டனை வழங்காவிடின்..உலகம் காரிருளில் மூழ்கிவிடும்.அடங்காமல் இருப்பவரை அடக்குவதும்..தவறு செய்பவரைத் தண்டிப்பதும் நீதியாகும்.கொடியவர்களைக் கொல்லத் துணியாத வேந்தனுக்கு புகழும் இல்லை..செல்வமும் இல்லை.

விருத்தன் என்னும் அசுரனைக் கொன்றுதான் இந்திரன் மகேந்திரன் ஆனான்.பிற உயிரைக் கொல்லாமல் எந்த பிராணியும் உயிரோடு இருப்பதில்லை.கீரி எலியைக் கொன்று தின்கிறது.கீரியைப் பூனைக் கொல்கிறது..பூனையை நாய் கொல்கிறது, நாயைப் புலி கொல்கிறது.புலிகளையும் பிறவற்றையும் மனிதன் கொல்கிறான்.இப்படி ஒவ்வொரு உயிரும் பிற உயிரின் உணவாகின்றது.

உயிரினங்களின் படைப்பின் ரகசியத்தைப் புரிந்துக் கொள்ளுங்கள்.எல்லா உயிர்களும் ஒவ்வொரு தன்மையுடன் படைக்கப் பட்டுள்ளன.நான்குவகை வருணத்தவரின் வாழ்வு நிலையை புரிந்துக் கொள்ளுங்கள்.க்ஷத்திரியர்களின் தன்மையுடன் நடந்துக் கொள்ளுங்கள்.க்ஷத்திரியன் அறிவின்மையால் சினத்தையும் மகிழ்ச்சியையும் துறந்து காடு சென்று கடுந்தவம் புரிந்தாலும் காய், கிழங்குகள் இன்றி காலம் தள்ள முடியாது.நீரிலும், பூமியிலும், பழங்களிலும் பல உயிர்கள் இருக்கின்றன.நாம் கண் இமைத்தலால் உயிர் இழக்கத் தக்க நுண் உயிர்கள் காற்றில் ஏராளமாக இருக்கின்றன.உலகில் அவற்றைக் கொல்லாமல் யார் இருக்கின்றனர்.

ஆகவே உயிர்க்கொலை என்பது நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.அரசனாக இருப்பவன் சில கொலைகளைச் செய்தே ஆக வேண்டும்.இல்லையெனில் பகைவர்களை அடக்க முடியாது.அது மட்டுமின்றி, சரியான தண்டனை இல்லையெனில்..யாரும் கல்வி கற்க மாட்டார்கள்.வண்டியில் கட்டிய மாடுகள் கூட தண்டனை இல்லாவிடின் வண்டியை இழுக்காது.பகைவரை அழிக்கும் திறன் உள்ள நாட்டில்தான் பொய்யும்,திருட்டும்,வஞ்சனையும் இருக்க வழியில்லை.ஆகவே..ஐயோ..கொலை நேர்ந்து விட்டதே என புலம்புவதில் பயன் இல்லை.பசுக்கூட்டத்தைக் கொல்லவரும் புலியை கொல்வது பாவம் என்றால் பசுக்களைக் காப்பாற்ற முடியாது.இங்கு புலியைக் கொல்லுதல் நியாயம் ஆகிறது..அதுவே தருமம்.கொல்லத் தகாத உயிர்களைத்தான் கொல்லக் கூடாது.கொல்லத் தகுந்ததைக் கொன்றே தீர வேண்டும்.அதுபோல அழிக்க வரும் அரசனை அழிப்பது அரச நீதி ஆகும்.எனவே இந்தப் பகைவரின் அழிவு குறித்துச் சோகப்பட வேண்டாம்.தரும நீதி இதுவென உணர்ந்து அரசாட்சி மேற்கொள்ளுங்கள்' என்று தருமரிடம் கூறிவிட்டு அமர்ந்தான் அர்ச்சுனன்.

2 comments:

பித்தனின் வாக்கு said...

நல்ல கருத்துக்கள் அய்யா. மிகச் சரியான கூற்றுக்கள். தருமரின் கழிவிரக்கமும். சகோதர்களின் ஆதரவு வார்த்தைகளும் நன்று. மிக்க நன்றி.

பனித்துளி சங்கர் said...

இப்ப நாங்களும் சொல்லுவோம் எங்களுக்கும் புராணம் தெரியும் . பகிர்வுக்கு நன்றி நண்பரே !

Post a Comment