Sunday, July 3, 2011

154-நல்ல அறிவுதான் இன்பத்திற்குக் காரணம்



'மனிதனுக்குச் செல்வம் என்று போற்றத் தக்கது அறிவுதான்.அறிவு உடையவன் செல்வம் உடையவன் ஆவான்.சுவர்க்கம் கூட அறிவினால் கிடைக்கும் என்பது மேலோர் கருத்து.பிரகலாதன், மங்கி போன்றவர்கள் செல்வத்திற்கு அழிவு நேர்ந்த போது அதனை அறிவாலேயே திரும்பப் பெற்றுள்ளனர்.அத்தகைய அறிவைவிடச் சிறந்தது ஏதுமில்லை.இது தொடர்பாக காஸ்யபருக்கும் இந்திரனுக்கும் நடைபெற்ற உரையாடலைச் சொல்கிறேன்' என பீஷ்மர் தருமருக்குக் கூறலானார்.

கர்வமும் மிகுந்த செல்வமும் உடைய வணிகன் ஒருவன் இருந்தான்.ஒருநாள் காஸ்யபர் என்னும் இளம் துறவி நடந்து சென்று கொண்டிருந்தார்.செருக்கு மிக்க அந்த வணிகனின் தேர் காஸ்யபரின் மீது மோத அவர் கீழே விழுந்தார்.கடும் சினம் கொண்டார்.ஆயின் என் செய்வது..'பொருள் அற்றோர் நிலை இதுதான்.இதைவிடச் செத்துத் தொலையலாம் என மனம் கலங்கிச் செயலற்றுக் கிடந்தார்.அந்த நேரத்தில் இந்திரன் நரி உருவம் தாங்கி அங்கு வந்து இளம் துறவியை நோக்கிக் கூறினான்.

பிறவிகளில் உயர் பிறவி மனிதப் பிறவியே.மேலான இப் பிறவியை அடைந்தும் ஏன் இதனைப் பாழாக்குகிறாய்? ஏன் சாக எண்ணுகிறாய்?இவ்வுலகில் கை உள்ளவர்களைப் பேறு பெற்றவர்களாகக் கருதுகிறேன்.உன்னைப் போன்ற மனிதருக்குப் பொருளில் ஆசை உள்ளதைப் போல என்னைப் போன்ற விலங்குகளுக்குக் கைகளைப் பெற ஆசை உள்ளது.கைகள் இல்லாததால் காலில் தைக்கும் முள்ளைக் கூட அகற்ற முடியாது.தொல்லை தரும் ஈ, எறும்பைக் கூட எங்களால் அகற்ற இயலவில்லை.கைகள் இருந்தால் இத்தகைய தொல்லைகளை அகற்றலாம்.கையில்லாததால் சரியாக உணவைக் கூட உண்ண முடியவில்லை.உடை உடுத்த முடியவில்லை.கை உள்ளவர்கள் எல்லாவற்றையும் எளிதாக அனுபவிக்கிறார்கள்.உன்னுடைய புண்ணியத்தால் நாயாகவோ,நரியாகவோ,கீரியாகவோ,எலியாகவோ, பாம்பாகவோ நீ பிறக்கவில்லை.உனது மேலான மனிதப் பிறவியைப் பற்றிப் பெருமைப்படு.இந்த கிடைத்தற்கரிய மானிடப்பிறவியை நல்வழிகளில் பயன்படுத்து.மனிதப் பிறவி தேவப்பிறவியை விடச் சிறந்தது.எந்தப் பிறவியாயினும் ஆசையை விட்டொழிக்க வேண்டும்.தேவன் தேவேந்திரனாக ஆசைப் படலாம்.அப்படி ஆனாலும் ஆசை அடங்காது.ஒரு பொருளை விரும்பி அது கிடைத்துவிட்டால், அதனாலேயே ஆசை அடங்கி விடுவதில்லை.மனம் வேறு ஒரு பொருளை நாடும்.ஆசை கொள்ளும்.அப்படி ஒவ்வொன்றாகத் தாவிச் செல்லும் மனதை அடக்குதல் மனிதப் பிறவியில் மட்டுமே கூடும்.மனதை அடக்கி அதன் மூலம் இன்பம் அடைவதும், மனதை அடக்காமல் அது போனபடியே சென்று துன்பம் அடைவதும் உன்னிடத்திலேயே இருக்கிறது.ஐம்பொறிகளையும் ஆமை போல் அடக்குபவனுக்குத் துன்பம் இல்லை.

ஒரு முறை ருசி கண்டவர்க்கு மேலும் மேலும் அப்பொருளைப் பெற வேண்டும் என்ற ஆசை உண்டாகும்.ஆசையை உண்டாக்கும் பொருளைப் பற்றிப் பிறர் பேசக் கேட்காமல் இருக்க வேண்டும்.அப்பொருளைப் பார்க்காமல் இருக்க வேண்டும்.தொடாமல் இருக்க வேண்டும்.

மனிதரில் சிலர் கல்வியிற் சிறந்தவராயும்,வலிமை மிக்கவராகவும்,அனுபவம் உள்ளவர்களாக இருந்தும் பாவ காரியங்களில் ஈடுபடுகின்றனர்.யாராய் இருந்தாலும் அப்பிறவியாயினும் யாரும் உயிரை விட விரும்புவதில்லை.அந்தந்த பிறவியில் அததற்குரிய இன்பம் ஒன்று இருக்கிறது.எனவே தான் எந்த உயிரும் அந்த இன்பத்தை அனுபவிக்க விரும்புகிறதே ஒழிய இறக்க விரும்புவதில்லை.

உடற்குறையுள்ள மனிதர் பலர் உள்ளனர்.கை இல்லாதவர்களும்,கால் இல்லாதவர்களும், ஒரு பக்கம் செயல் இழந்தவர்களும் ஆக இப்படி ஊனத்துடன் விளங்குவோர் பலர்.நீயோ உடற் குறை ஏதுமின்றி நோயும் இன்றி இருக்கிறாய்.உனக்குக் கெட்ட பெயரும் இல்லை.இந்நிலையில் கிடைத்தற்கு அரிய உயிரை விடுதல் நல்லதன்று.எனவே உற்சாகத்துடன் எழுந்திரு.தருமம் செய்.தானம் செய்.மனத்தை அடக்கு.சக்திக்கு ஏற்றாற் போல தியாகம் செய்.நற்கதி அடைவாய்.இப்பிறவியில் நல்லது செய்தால் அதன் பயனை அடுத்த பிறவியில் நன்கு அனுபவிப்பாய்.

நான் சென்ற பிறவியில் நல்லது செய்யவில்லை.ஆகமங்களை பழித்தேன்.விதண்டாவாதம் பேசினேன்.அறவோரை பழித்தேன்.ஒன்றும் அறியா நான் மேதாவி போல நடந்து கொண்டேன்.அதனால் நரியாக பிறவியெடுக்க நேர்ந்தது.இந்த இழி பிறவியிலிருந்து விடுபட்டு எனக்கு மனிதப் பிறவி கிடைக்குமா? அப்படிக் கிடைத்தால் அதிலாவது மன நிம்மதியுடன் இருப்பேனா?' என தனது விலங்குப் பிறவி குறித்து இரங்கிக் கூறி முடித்தது.

அது கேட்டு இளந்துறவி வியப்புற்று எழுந்தான்.அறிவு மிக்க நரியின் சொல்லைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தான்.அது நரியன்று என தன் ஞானக் கண்ணால் உணர்ந்தான்.நரி வடிவில் வந்து நன்னெறி காட்டியவன் இந்திரன் என்பதை உணர்ந்தான்.பின் அறநெறியில் வாழ்ந்தான்' என பீஷ்மர் தருமருக்கு நல் அறிவுதான் இன்பத்திற்குக் காரணம் என்பதை இக்கதை மூலம் தெரிவித்தார்.
 

2 comments:

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

அருமையான தகவல் ஐயா,

அறிவே இன்பம் என்னும் கருத்தை அழகாக விளக்கியிருக்கிறீர்கள்.

நன்றி..

சிவயசிவ
http://sivaayasivaa.blogspot.com

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

Post a Comment