அனைத்து கலைகளிலும் சிறந்து விளங்கிய அர்ச்சுனன் ஆன்ம பலத்திலும் சிறந்தவன் ஆனான்.
அவன் மன வலிமையைச் சோதிக்கக் கருதிய சித்திரசேனன் ஊர்வசியை அனுப்பி அவனை மயக்குமாறு கட்டளையிட்டான். ஆனால் அழகிய அந்த தெய்வமங்கையின் சாகசம் அர்ச்சுனனிடம் எடுபடவில்லை.அவளால் அவனை வசப்படுத்த முடியவில்லை.
அதனால் ஆத்திரமடைந்த அவள்..'பேடியாகப் போவாய்' என சாபமிட்டாள்.தனக்கு நேர்ந்த துர்பாக்கிய நிலையை இந்திரனிடம் கூறிப் புலம்பினான் அர்ச்சுனன்.
ஊர்வசியின் சாபத்தை முழுவதுமாக விலக்க முடியாது என அறிந்த இந்திரன்..அதில் சிறிது மாற்றம் செய்தான்.அந்த சாபம் ஓராண்டுக்கு மட்டும் நிலைத்திருக்கும்.அதனை அர்ச்சுனன்
தன் நன்மைக்காக அஞ்ஞாத வாசத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறினான்.
தீமையும் நன்மையே என அமைதியானான் அர்ச்சுனன்.
அர்ச்சுனன் அங்கு இருந்த போது கடல் நடுவே வசித்துவந்த அசுரர்கள் மூன்று கோடி பேர் தேவர்களுக்கு ஓயாத தொல்லை கொடுத்து வந்தனர்.அவர்களை அழிக்குமாறு இந்திரன் அர்ச்சுனனுக்குக் கட்டளையிட்டான்.மாதலி தேர் செலுத்த அசுரர்களுடன் போரிட்டான்அர்ச்சுனன். அசுரர்கள் விஷம் போன்ற கருவிகளை அர்ச்சுனன் மேல் பொழிய ..அவன் எதிர்த்து நின்றான்.
தனி மனிதனாக அத்தனை பேரையும் கதி கலங்கச் செய்தான்.அசுரர்கள் இப்போது மாயப்போரில் ஈடுபட்டனர்.ஆனால் தனஞ்சயனோ அனைவரையும் அழித்தான்.
நிவாத கலசர்களான அந்த அசுரர்களை வென்று வெற்றியுடன் திரும்புகையில் ..விண்ணகத்தே ஒரு நகரத்தை கண்டான்.மாதலியை அதுபற்றி வினவினான்.
'பூலோமை,காலகை என்னும் அரக்கியர் இருவர் கடும் தவம் செய்து பிரமதேவன் அருளால் வரம் பெற்றனர்.அந்த வர பலத்தால் பிறந்த புதல்வர்களான காலகேயர்கள் இந்த நகரத்தில் வாழ்கின்றனர்.இதன் பெயர் இரணியபுரம் என்பதாகும்.இந்த காலகேயர்களால் தேவர்கள் மிகவும் துன்பம் அடைகின்றனர்' என்றான் மாதலி.
அர்ச்சுனன் அவர்களை ..அவர்களது நகரத்துடன் பாசுபதக் கணையை ஏவி அழித்தான்.
வெற்றி வீரனான மகனை இந்திரன் ஆரத்தழுவினான்.யாராலும் பிளக்க மிடியா கவசத்தையும்,மணிமகுடத்தையும்,தேவதத்தம் எனும் சங்கையும் பரிசாக அளித்தான்.
இந்நிலையில்..காட்டில் மற்ற சகோதரர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.
Wednesday, April 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment