Sunday, January 24, 2010

84-நகுலனின் பேச்சு

அர்ச்சுனனின் பேச்சைத் தொடர்ந்து நகுலன் தருமரிடம் கூறலானான்

"இல்லறக் கடமைகளை ஒழுங்காகச் செய்ததால்தான் தேவர்களுக்கு அந்த பிறப்புக் கிடைக்கிறது.இன்றும் அவர்களுக்கு மண்ணில் வாழ்வோர் மீது உள்ள அக்கறையைப் பாருங்கள்.இங்கு இருக்கும் உயிர்களின் உணவிற்காக மழையைத் தருகிறார்கள்.அதுபோல உலக உயிர்களுக்கு தொண்டு செய்ய வேண்டும்.அர்ச்சுனனால் கூறப்பட்ட அந்தப் பிராமணர்கள் வேத நெறியைக் கைவிட்ட நாத்திகர்கள்.வேதத்தில் கூறப்பட்ட இல்லறக் கடைமைகளைத் துறந்து விட்டு யாரும் பிரமலோகத்தை அடைய முடியாது.இல்லற தருமம் மற்றெல்லா தருமத்தையும் விட சிறந்தது என உயர்ந்தோர் சொல்கின்றனர்.இல்லறம் துறந்து காடு செல்பவன்..வேறு ஒரு சமயத்தில் வீட்டைப் பற்றி எண்ணுவானானால் அவனை விட வேடதாரி இல்லை எனலாம்.

அறவழியில் பெற்ற செல்வத்தைப் பல யாகங்கள் மூலம் தானம் செய்பவனே..உண்மையில் மனதை வென்றவன்.அவனே உண்மையான தியாகி.இல்லற தருமம் என்னும் இத் தருமத்தில் தான் அறம்,பொருள்,இன்பம் என்னும் மூவகைப் பயனும் உண்டு.

ஆகவே..அரசே..இந்திரனுக்கு இணையான நீர் ராஜசூயம்,அசுவமேதம் முதலான யாகங்களைச் செய்வீராக.நாடெங்கும் திருடர்களால் துன்பம் அடையும் மக்களைக் காக்காத வேந்தன் சனியின் வடிவம் என பழிக்கப்படுவான்.நாட்டாட்சியை நல்ல முறையில் செயல்படுத்தாத நாம் துன்பத்தைத்தான் அடைவோமே தவிர ஒரு போதும் இன்பம் அடைய மாட்டோம்.

எனவே..கிடைத்த வாய்ப்பை விட்டு துறவை மேற்கொள்வீராயின் இம்மை மறுமை ஆகிய இருமையும் இழந்து மேலும் துன்பம் அடைய நேரிடும்.போர்க்களத்தை நாம் வலிமையினால் வென்றோம்..இனி நல்லாட்சி தருவது நம் கடமை ஆகும்.ஆகவே..அரச தருமப்படி நாட்டை ஆண்டு மேலான பதத்தை அடைய வேண்டிய நீர் இப்படிச் சோகத்தில் மூழ்குவது நன்றன்று'

இவ்வாறு நகுலன் தன் கருத்தைக் கூற..அவனைத் தொடர்ந்து சகாதேவன் கூறலானான்.

1 comment:

malarvizhi said...

pathivu nanraaga ullathu.

Post a Comment