Wednesday, December 16, 2009

81- தருமருக்கு அர்ச்சுனனின் பதில்

தருமரின் மொழிகளைக் கேட்ட அர்ச்சுனன் பதில் கூற ஆரம்பித்தான்..

'செயற்கரிய செயலை முடித்து..அதனால் பெற்ற செல்வத்தை இழக்கக்கூடாது.உமது துயரம் என்னை வியக்க வைக்கிறது.பகைவரைக் கொன்று தருமத்தால் கிடைத்த பூமியை எப்படி விட்டுப் போவது?அஃது அறிவீனம்.பயமும்,சோம்பலும் உடையவர்க்கு ஏது அரச செல்வம்?உலகில் ஒன்றும் இல்லாதவன் தான் பிச்சை எடுத்து உண்பான்.அவன் முயற்சியால் செல்வத்தை பெற மாட்டான்.மிகப் பெரிய அரச செல்வத்தை விட்டு விட்டு பிச்சை எடுத்து தவம் மேற்கொள்ளப் போகிறேன் என்ற உமது பேச்சை யாரேனும் ஏற்றுக் கொள்வார்களா? எல்லா நம்மைகளையும் விட்டு விட்டு அறிவிலி போல் ஏன் பிச்சை எடுக்க வேண்டும்?அரும்பாடு பட்டு வெற்றி கொண்ட பின் ஏன் காடு நோக்கி செல்ல வேண்டும்?ஒன்றும் இல்லாமல் இருப்பது சாதுக்களுக்கு தருமம்.ஆனால் அரச தருமம் அல்ல.அரச தருமம் என்பது பொருளால் நடைபெறுவது.அரச தருமம் மட்டுமல்ல சாது தருமம் கூட பொருள் இல்லாது போனால் நிலைகுலைந்து விடும்.சாதுக்கள் சாது தருமத்தைக் காக்க இல்லறத்தார் துணை செய்வர்.பொருள் இல்லையெனில் இல்லறத்தாரால் எவ்வாறு சாதுக்களுக்கு உதவ முடியும்.எனவே உலகில் பொருள் இல்லாமை பாவம் ஆகும்.பல்வேறு வகைகளில் திரட்டப் படும் செல்வமே எல்லா நன்மைகளும் பெருக காரணமாகிறது.அண்ணலே..பொருளிலிருந்து இம்மை இன்பம் கிடைக்கிறது.தருமம் பிறக்கிறது.இறுதியில் மறுமை இன்பமும் கிடைக்கிறது.

உலக வாழ்க்கை பொருள் இல்லாது மேன்மையுறாது.பொருளற்றவனின் முயற்சி கோடைகால நீர்நிலை போல் வற்றிப் போகும்.ஒரு பயனும் தராது.எவனிடம் பொருள் உண்டோ அவனிடம் நண்பர்கள் இருப்பார்கள்.எவனிடம் பொருள் இருக்கிறதோ அவனுடன் நெருங்கிய சுற்றத்தார்கள் இருப்பர்.எவனிடம் பொருள் இருக்கிறதோ அவனே சிறந்த அறிஞன்.அவனே தலைவன்.ஆகவே..யானையைக்கொண்டு யானையைப் பிடிப்பது போலப் பொருளைக் கொண்டு பொருளை சேர்க்க வேண்டும்.மலையிலிருந்து நதிநீர் பெருகுவதுப் போல பொருளில் இருந்து தான் தருமம் பெருகுகிறது.உண்மையில் உடல் இளைத்தவன் இளைத்தவன் அல்ல.பொருளற்றவனே இளைத்தவன் ஆவான்.

பகை அரசரின் நாட்டைக் கவர்வது அரச நீதி.அரச வம்சத்தை ஆராய்ந்தால் இதன் உண்மை விளங்கும்.ஒரு காலத்தில் இந்தப் பூமி திலீபனுடையதாக இருந்தது.பின் நகுஷன் கைக்குப் போனது.பின் அம்பரீஷனுடையதாகியது.பின் மாந்தாவுக்குச் சொந்தம் ஆனது.தற்போது உம்மிடம் உள்ளது.எனவே முன்னோர்களைப் போல அரச நீதி உணர்ந்து நீர் ஆட்சி புரிய வேண்டுமேயன்றிக் காட்டுக்குப் போகிறேன்..என்று சொல்லக் கூடாது'

என்று அர்ச்சுனன் சொல்லி முடித்தான்.

2 comments:

aambalsamkannan said...

'ஒவ்வொறு மதங்களும் தன் மக்கள் சிறப்பான சுயமரியாதை வாழ்வை வாழ அனுமதிக்கின்றன மற்றும் போதிக்கின்றன,ஆனால்,,,

The untouchable country -யாகவா தொடரவேண்டும் என் பாரத தேசம்?

தாங்களுடைய விமர்சனத்தை எதிர்பார்க்கும் புதியவுரவு.

பித்தனின் வாக்கு said...

அர்ச்சுனனின் வாதம் அவன் பங்கில் மிகவும் சரியானது. தருமரின் மறுமொழிகளைப் படிக்க ஆவலாக உள்ளேன். நன்றி.

Post a Comment