Sunday, May 2, 2010

100-உபதேசிக்க பீஷ்மர் சம்மதம்

கண்ணன் பீஷ்மரின் வினாவிற்கு பதிலளித்தார்..

'வேதம் உள்ள அளவும் உம் புகழ் மேன் மேலும் விரிவடைய வேண்டும்..இந்தப் பூமி உள்ள காலம் வரை உம் புகழ் அழிவற்றதாக இருக்க வேண்டும்..அதற்காகவே இவ்வுபதேசத்தை நீரே அருளுமாறு கூறினேன்..நீர் தருமருக்குச் சொல்லப்போகும் உபதேச மொழிகள் வேதப் பொருளாக உறுதி பெறப் போகின்றன.உமது தெய்வீக உரையைக் கேட்கும் மக்கள் உயிர் துறந்த பின் புண்ணியங்களின் பயனை அடையப் போகின்றனர்.

கங்கை மைந்தரே! இவ்வாறு உம் புகழ் மிகப் பேசப்பட வேண்டும் என்பதற்காகவே உமக்கு மேலான ஞானத்தை அருளினேன்..போரில் கொல்லப்படாமல் இருக்கும் அரசர்கள் யாவரும்..பல தருமங்களையும் கேட்க விருப்பத்துடன் உம்மைச் சூழ்ந்து அமர்ந்திருக்கின்றனர். தர்மங்களை உம்மைவிட அறிந்தவர் எவருமில்லை..உலகில் குறை இல்லாதவரைக் காண முடியாது.ஆனால் உமது பிறப்பு முதல் பாவம் என்பதை உம்மிடம் சிறிதுக் கூடக் காணவில்லை.குறையொன்றும் இல்லாதவரே..ஒரு தந்தை மகற்கு உரைப்பது போல நீர் உபதேசம் புரிவீராக..தர்மம் தெரிந்தவர்கள் அதைத் தெரியாதவர்களுக்கு அதைத் தெரிவிக்க வேண்டும்..அவ்வாறு உபதேசிக்காவிடின் பாவம் வந்து சேரும்..ஆதலால் ஞானக்கடலே..உமது உபதேசம் ஆரம்பமாகட்டும்..' என்றார்.

அது கேட்டு பீஷ்மர்..'கண்ணா..உமது அருளால் நான் பெற்ற ஞான நல்லறத்தை..தருமத்தை உமது தாள் பணிந்து இப்போது சொல்லத் தொடங்குகிறேன்..தருமத்தை விரும்பும் தருமர் என்னிடம் அனைத்து தருமங்களையும் கேட்க விரும்பினால்..நான் மகிழ்ச்சியுடன் சொல்கிறேன்..தருமத்தைப் போற்றும் யார் அரசராக இருப்பதை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்களோ அந்தத் தருமர் என்னைக் கேட்கட்டும்..துணிவும், பொறுமையும், தருமமும், வீரமும், பெருமையும் ஆகிய இக்குணங்கள் எப்போதும் எவரிடம் நிலை பெற்றிருக்கின்றனவோ அந்தத் தருமர் என்னைக் கேட்கட்டும்..சத்தியம், தானம், தவம், சுறுசுறுப்பு, பரபரப்பின்மை ஆகிய நற்குணங்கள்..எவரிடம் குடி கொண்டிருக்கின்றனவோ அந்தத் தருமர் என்னைக் கேட்கட்டும்..ஆசையாலோ..அவசரத்தாலோ,பயத்தாலோ, பொருள் கிடைக்கும் என்னும் காரணத்தாலோ..அத் தருமத்திடம் அணுகா தரும சிந்தையுள்ளவர் எவரோ அந்தத் தருமர் என்னைக் கேட்கட்டும்..நான் தருமங்களை தருமருக்குக் கூறுகிறேன்' என்றார் பீஷ்மர்.

அதற்குக் கண்ணன் ' தருமர்..வெட்கத்தாலும்..சாபம் வருமோ என்னும் அச்சத்தாலும் நடுங்குகிறார்.வழிபடத்தக்க பெரியோர்களைப் போர்க் களத்தில் கொன்றதற்காகச் சோகமும், வெட்கமும் கொண்டுள்ளார்.சகோதரர்கள் கொல்லப்பட்டதற்காகப் பெரிதும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளார்.தாம் செய்த தீங்கிற்காக என்ன நேருமோ என பயந்து உமது அருகில் வராது இருக்கிறார்' என்றார்.

அதனை உணர்ந்த பீஷ்மர்..'கண்ணா, போர்க்களத்தில் உயிர் துறத்தல் க்ஷத்திரியர் கடமையாகும்..தந்தையும், பாட்டனும், ஆசாரியரும் உறவினரும் கெட்ட எண்ணத்துடன் போரிட வருவார்களேயாயின் அவர்களைக் கொல்லுதல் க்ஷத்திரிய தர்மம்தான்.க்ஷத்திரியனுக்கு உரிய இத்தகைய போர்த் தருமம் என்றும் மண்ணுலகம் விண்ணுலகம் இரண்டிலும் நற்கதிக்குக் காரணம் என மனு கூறியுள்ளார்' என்றார்.

பிதாமகரின் இவ்வுரையைக் கேட்டதும், தருமர் மிகவும் பணிவுடன் அவரை நெருங்கி அவர் பாதங்களைத் தொட்டு வணங்கினார்.வில்லாற்றல் மிக்க பீஷ்மர் மிகவும் மகிழ்ந்து தருமரை அமருமாறு பணித்தார்.பின்னர் சந்தேகங்களைக் கேட்குமாறு பணித்தார்.

(இதுவரை மகாபாரதம் 100 இடுகைகள் முடிந்துவிட்டன..இவ்வலைப்பூவிற்கு வருபவர் எண்ணிக்கைக்கான விட்ஜிட்டை நான் இணைக்கவில்லை..காரணம்..படிப்பவர் எண்ணிக்கை குறைவு எனில்..தொடரை தொடரும் எண்ணம் வராது என்பதால்...இருப்பினும்..இத் தொடரை படிப்பவர் அனைவருக்கும் நன்றி..பீஷ்மரின் உபதேசம்..கிட்டத்தட்ட 100 இடுகைகள் வரலாம்..உங்கள் ஒத்துழைப்புடன் இவை தொடரும்..நன்றி)

3 comments:

Vidhoosh said...

சார்.
அம்புப் படுக்கையில் இருக்கும் பீஷ்மரை பார்த்து திரௌபதி சிரிப்பதாகவும், தர்மம் பற்றி பேச அருகதை அற்றவர் என்றும் உரைப்பதாக இருக்கிறது. பின்பு அதை பற்றிய விளக்கம் ஒன்றையும் தான் தற்போது தர்மம் உரைக்க தகுதியானவன் என்றும் பீஷ்மர் உரைக்கிறார். அந்த காட்சிகள் வரும் நேரத்தில் அதைப் பற்றி விரிவாக பேசுங்களேன்.

நன்றாக இருக்கிறது உங்கள் உரை. நூறுக்கு வாழ்த்துக்கள். ரொம்ப ரசித்து படிக்கிறேன்.

Karthikeyan said...

சதம் கணடமைக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து படித்து வருகிறேன். நடை அருமை. தொடர்ந்து எழுதுங்கள்.

Unknown said...

Really nice writings. Very interest to read.

Thank u so much for this writing

Post a Comment