Tuesday, March 24, 2009

30-பீஷ்மர் உரை....திரௌபதி மறுப்பு

பீஷ்மர் எழுந்து திரௌபதிக்கு கூற ஆரம்பித்தார்.'தருமன் சூதாட்டத்தில் உன்னை இழந்து விட்டான்..நீயோ அவன் செய்கையை மறுக்கின்றாய்..சூதிலே சகுனி தருமனை வென்றான்.பின் உன்னை பந்தயமாக்கி தருமன் இழந்தான்.அப்படி தருமன் தன்னை இழந்தபின் உன்னை வைத்து ஆடியது குற்றம் என்கிறாய்.விதிப்படி அது நியாயம்.ஆனால் பழைய காலத்தில் ஆணுக்குப் பெண் நிகரானவள் என்றே கருதினர்..ஆனால் பிற்காலத்தில் அக்கருத்து மாறிவிட்டது.

'இப்போதுள்ள நீதி சாஸ்திரங்களை நோக்குகையில் ..ஆணுக்கு இணையாகப் பெண்ணை கருதமுடியாது.ஒருவன் தன் தாரத்தை தானம் என வழங்கிடலாம்.தருமன் தன்னை அடிமை என விற்ற பின்னும் உன்னை பிறர்க்கு அடிமையாக்க உரிமையுண்டு.சாத்திரத்தில் சான்று உள்ளது..ஆனால் உண்மையில் இது அநீதி தான் .ஆனாலும் நீதி சாத்திரத்தில் இதற்கு இடமிருக்கிறது.உன் சார்பில் சாத்திரம் இல்லை.தையலே..முறையோ என நீ முறையிட்டதால் ..இதனை நான் சொன்னேன்..இன்று தீங்கை தடுக்கும் திறமில்லாதவனாக இருக்கிறேன்'என்று கூறி தலை கவிழ்ந்தார்.

'பிதாமகரே தர்ம நெறியை நன்கு உரைத்தீர்.ராவணன் சீதையை அசோகவனத்தில் வைத்தபின் ..சான்றோர் நிறைந்த சபையில் அச்செய்தியைக் கூறியபோது ..'நீ செய்தது சரி என்றனராம்.அதைப்போலவே இருக்கிறது இந்த அவை.பேய் ஆட்சி செய்தால்,பிணத்தைத் தின்பதை போற்றும் சாத்திரங்கள்.

என் கணவரை சூதாட வற்புறுத்தியது தவறல்லவா.அது நேர்மையா..திட்டமிட்ட சதி அல்லவா..மண்டபம் ஒன்று அமைத்து அதைக்காண அழைத்து..நாட்டைக்கவர நினைப்பது முறையா? பெண்களுடன் பிறந்த உங்கள் செய்கை பெண்பாவம் அல்லவா' என்று கையெடுத்து கும்பிட்டு அழுது துடித்தாள் பாஞ்சாலி.

அழும் பாஞ்சாலியை நோக்கி,துச்சாதனன் தகாதா வார்த்தைகளை உரைத்தான்.அவள் ஆடை குலைய நின்றாள்.துச்சாதனன் அவள் குழல் பற்றி இழுத்தான்.

இது கண்டு பீமன் கோபம் அடைந்தான்.தருமரை நோக்கி'அண்ணா..மாதர்குல விளக்கை ஆடி இழந்துவிட்டாய்.தருமத்தை கொன்றுவிட்டாய்.சக்கரவர்த்தி என்ற மேலான நிலை பெற்ற நம்மை ..ஒரு கணத்தில் தொலைத்துவிட்டாய்.துருபதன் மகளையும் ..அடிமையாக்கினாய்..'என்று கனல் கக்க பேசி..தம்பி சகாதேவா
'எரி தழல் கொண்டுவா-அண்ணன்
கையை எரித்திடுவோம்' என்றான்.

பீமன் உரையை மறுத்தான் பார்த்தன்..'சினம் என்னும் தீ உன்அறிவை சுட்டெரிக்கிறது.

'தருமத்தின் வாழ்வுதனைஸ் சூது கவ்வும்
தருமம் மறுபடி வெல்லும்..'என்றும்
கட்டுண்டோம்..பொறுத்திருப்போம்.காலம் மாறும்
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்'
என்றும் பீமனிடம் கூறினான் பார்த்தன்.

No comments:

Post a Comment