Friday, December 31, 2010

135-கோபம் எதனால் தோன்றுகிறது

கோபம் முதலானவை எதனால் தோன்றுகின்றன? எப்படி அழிகின்றன? என்ற வினாவிற்கு பீஷ்மர் தந்த பதில்
கோபம்,மோகம்,காமம்,சோகம், பிறருக்குத் தீங்கு செய்ய எண்ணும் எண்ணம் ஆகியவை உயிர்களுக்குப் பலமான வைரியாகும்.இவை மனிதர்களைச் செந்நாய்கள் போலச் சூழ்ந்து அழிக்கும்.துன்பத்திற்கு இவைதாம் காரணம் என உணர்தல் வேண்டும்.இவை பற்றி விரிவாகக் கூறுகிறேன் கேட்பாயாக..
கோபம் பேராசையில் இருந்து தோன்றுகிறது.பொறுமையால் அது அழியும்.புலனடக்கம் இன்மையால் காமம் உண்டாகிறது.மனிதன் அறிவு பெற்று வெறுப்புக் கொள்வானாயின் அப்போது காமம் அழியும்.மோகம் அறியாமையால் உண்டாகிறது.அறிஞர்களின் அறிவுரைகளை ஏற்று நடப்பதன் மூலம் அது அழியும்.பொருள் மீது கொண்ட ஆசை விலகுமாயின் அப்பொருளை இழத்தலால் ஏற்படும் சோகம் விலகும்.பிறருக்குத் தீங்கு செய்யும் எண்ணம் கோபத்தாலும்,பேராசையாலும் உண்டாகும்.அவற்றுள் கோபத்தால் உண்டாவது உயிர்களிடத்துத் தோன்றும் அன்பால், அருளால் அழியும்.பேராசையால் தோன்றுவது அறிஞரின் தத்துவ உபதேசத்தால் அழியும்' என்றார் பீஷ்மர்.

Wednesday, December 29, 2010

133-அறியாமை பற்றி அறிதல்

தருமர் பீஷ்மரை நோக்கி..'பிதாமகரே! அறியாமை பற்றி அறிய விரும்புகிறேன்' என பணிவிடன் கேட்க பீஷ்மர் சொல்லத் தொடங்கினார்."மனிதன் அறியாமையால் பாவம் செய்கிறான்.அதனால் தனக்குத் தகுதியானதை அறிந்து கொள்ளாது சாதுக்களிடம் குறை காண்கிறான்.உலக நிந்தனைக்கு ஆளாகிறான்.தீய கதியாகிய நரகத்திற்கு அறியாமையே காரணம் ஆகிறது.அதனால் ஆபத்தில் சிக்கித் துன்பம் அடைகிறான்.

ஆசை,பகை,காமம்,சினம்,கர்வம்,விருப்பு,வெறுப்பு,பிறர் ஆக்கம் கண்டு பொறாமை கொள்ளுதல் ஆகிய இவை யாவும் அறியாமையால் தோன்றுபவையே! ஆகவே அறியாமையை அகற்றுவாயாக!" என்றார்

உடன் தருமர்..'மேலோனே! தருமம் பலவகையாகக் காணப்படுகிறதே, எது சிறந்த தருமம் எனக் கூற முடியுமா?'என வினவ

'பேரறிவு படைத்த தருமா..மகரிஷிகள் பல வகையான தருமங்களை உபதேசித்து இருக்கிறார்கள்.அவற்றில் மிகச் சிறந்தது புலனடக்கம் ஆகும்.இதுவே முக்திக்குக் காரணமாகும்.புலன் அடக்கம்...,தானம்,யாகம் ஆகியவற்றை விட மேலானது.புலனடக்கம் உடையவனின் முகம் பொலிவுடன் ஒளி வீசும்.புலன் அடக்கம் தரும சிந்தனையை வளர்க்கும்.உயிர்களிடத்து அருளுடைமையைத் தூண்டும்.

புலனடக்கத்திற்கான அடையாளங்களைத் தெரிந்து கொள்.பொறுமை,துணிச்சல்,கொல்லாமை,நன்மை..தீமைகளைச் சமமாக பாவித்தல்,வாய்மை,நேர்மை,நாணம்,சினம் இன்மை,இன்சொல்,யாவரிடத்தும் அன்புடன் பேசுதல்..இவையெல்லாம் புலனடக்கத்தால் ஏற்படும்.புலனடக்கம் உள்ளவனை யாரும் பழிக்க மாட்டார்கள்.அவன் ஆசை அற்றவன்.அற்ப சுகங்களை விரும்பாதவன்.உற்றார், உறவினர் என்ற பந்தங்களினின்றும் அவன் விடுபட்டவன்.பிறருடைய புகழ்ச்சியோ, இகழ்ச்சியோ அவனைப் பாதிப்பதில்லை.சாதுக்களால் பின்பற்றப்பட்ட வழியே அவன் செல்லும் பாதை ஆகும்.புலன் அடக்கம் உள்ளவன் தவம் புரியக் காடு செல்ல வேண்டியதில்லை.அது இல்லாதவன் காடு சென்றும் பயனில்லை.ஆதலால் அவனுக்கு எது வாழும் இடமோ அதுவே காடு..அதுவே ஆஸ்ரமம்' என்றார் பீஷ்மர்.134-தவத்தின் மேன்மைஇந்த உலகமே தவத்தால் இயங்குகிறது.தவத்தை மேற்கொள்ளாதவனுக்கு ஒரு காரியமும் நடைபெறாது.தவத்தால்தான் பிரமதேவன் இவ்வுலகைப் படைத்தான்.மாமுனிகள் ஞானத்தைப் பெற்றதும் தவத்தால்தான்.மன அடக்கம் உள்ள சித்தர்கள் தவத்தினால் மூவுலகையும் அறிகிறார்கள்.பெறுதற்கு அரியதும் தவத்தால் கூடும்.பாவங்களிலிருந்து விடுபட உதவுவதும் தவம் தான்.

தவம் பல வகை.எனினும் உபவாசத்தை விட உயர்ந்த தவம் இல்லை.கொல்லாமை,வாய்மை,தானம்,புலனடக்கம் ஆகிய இவற்றைவிட மேலானது உண்ணாவிரதம்.

தாய்க்குச் செய்யும் பணிவிடையைக் காட்டிலும் மேலான தவம் இல்லை.முற்றும் துறந்த துறவிகூடத் தாயைப் பாதுகாக்க வேண்டும் என்பது விதி என்றார் பீஷ்மர்.

Monday, December 27, 2010

131-ஞானம்,தவம்,தானம்

தருமர் பீஷ்மரிடம்..'ஞானம்,தவம்,தானம்..இவற்றுள் சிறந்தது எது? என வினவ பீஷ்மர் கூறுகிறார்.

'முன்னொரு காலத்தில் வியாசருக்கும்,மைத்ரேயருக்கும் நடைபெற்ற ஒரு உரையாடலைக் கூறுகிறேன்.ஒரு முறை வியாசர் யாருக்கும் தெரியாமல் மைத்ரேயரை சந்தித்தார்.மாறுவேடத்துடன் வந்த வியாசருக்கு அறுசுவை உணவளித்தார் மைத்ரேயர்.உணவு உண்டு எழுந்திருக்கும் போது வியாசர் நகைத்தார்.அது கண்ட மைத்ரேயர் வியாசரை நோக்கி'தாங்கள் நகைத்தற்குரிய காரணத்தை நான் தெரிந்துக் கொள்ளலாமா? உம்மிடம் தவச்செல்வம் இருக்கிறது.என்னிடம் பொருட் செல்வம் இருக்கிறது.இவற்றின் தன்மைகளை விளக்கவேண்டும்" என்றார்.

வியாசர் சொன்னார் 'தவச் செல்வத்திற்கும் பொருட் செல்வத்திற்கும் சிறிது வேறுபாடு உண்டு.தவச் செல்வம் எல்லா நன்மைகளையும் தருவதனால் எல்லாவற்றையும் விடச் சிறந்ததாகும்.நீ மிகுதியானப் பொருளைச் செலவழித்தாலும் அதிகமாக இன்சொல் கூறியதாலும் எனக்கு நகையுண்டாயிற்று.வேதம் என்ன சொல்கிறது தெரியுமா?பிறருக்குத் தீங்கு இழைக்கக் கூடாது.கொடுக்க வேண்டும்.உண்மையே பேச வேண்டும் என்ற மூன்றையும் வேதம் வற்புறுத்திக் கூறுகிறது.தாகத்துடன் இருப்பவனுக்குத் தன்ணீர் தருவது பெரும் கொடையாகும்.தேவர்களை நீர் வழிபட்டதனால் என் தரிசனம் உமக்குக் கிடைத்தது.

உமது தூய தானத்தினாலும், தவத்தினாலும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.உம்மிடம் இருந்து நல்ல மணம் தூரத்திலும் வீசுகிறது.இது உமது கர்மப் பலன் என்றே கருதுகிறேன்.சந்தன மணம் போன்றதுதான் நல்ல செயல்களால் வீசும் மணமும்.தானம் தான் எல்லாப் புண்ணியங்களையும் விட மேலான புண்ணியம்.மற்றப் புண்ணியங்கள் இல்லாவிடினும் தானமே மிகச் சிறந்ததாகும்.இதில் ஐயம் இல்லை.தானம் செய்பவர்கள் உயிரையும் தரத் தயாராய் இருப்பர்.அவர்களிடத்தில் தான் தருமம் நிலை பெற்றிருக்கிறது.

ஆகமங்களைப் பயில்வதும், துறவு மேற்கொள்வதும், ஐம்பொறிகளை அடக்கித் தவம் செய்வதும் ஆகிய அனைத்தையும் விடத் தானம் மிக உயர்ந்ததாகும்" என்றார்.132-பாவத்திற்குக் காரணம்..பாவத்திற்குக் காரணம் யாது என்ற தருமரின் வினாவிற்கு பீஷ்மர் அளித்த பதில்

'தருமா! பெரிய முதலை போன்றது பேராசை.அதுவே பாவத்திற்கு இருப்பிடமாகும்.பேராசையிலிருந்து பாவமும், துன்பமும் உண்டாகின்றன.மேலும் பேராசை இம்சைக்குக் காரணமாகிறது.பேராசையால் சினம் உண்டாகிறது.மடமை, சூழ்ச்சி,மானக்கேடு,பொறாமை,பொருள் நஷ்டம்,பழி ஆகிய அனைத்திற்கும் பேராசையே காரணமாகும்.மக்கள் தம் தீய செயல்களை விடாமல் இருப்பதற்கும் காரணம் பேராசைதான்.எவ்வளவுதான் இன்ப போகங்களை ஒருவன் அனுபவித்தாலும் அவனது ஆசைக்கு அளவே கிடைசாது.பல நதிகள் வந்து விழுந்தாலும் கடல் நிரம்பாதது போல பேராசை உள்ளவனிடம் எவ்வளவு செல்வம் இருந்தாலும் மன நிறைவு ஏற்படாது.தேவர்களும், அசுரர்களும் கூடப் பேராசையின் உண்மைத் தன்மையை உணரவில்லை

அறியாமையையும்,ஐம்பொறிகளையும்,மனத்தையும் வென்ற மனிதன் பேராசையை வெற்றி கொள்ள வேண்டும்.மனதை அடக்காத பேராசைக்காரரிடம் வீண் ஆடம்பரம்,துரோகம், புறங்கூறல்,பொறாமை ஆகியவை இருக்கும்.மிகப் படித்த அறிஞர்கள் ஆகமக் கருத்துக்களை நன்கு மனதில் வைத்திருப்பர்.பல ஐயங்களை விலக்குவர்.ஆனால் பேராசை காரணமாக அவர்கள் அறிவு இழந்து எப்போதும் துன்புறுவர்.அவர்கள் உள்ளம் கொடூரமானது.ஆனால் தேனொழுகப் பேசுவர்.தருமத்தின் பெயரால் அவர்கள் உலகைக் கொள்ளையடிப்பர்.

மன்னனே! நேர்மையானவர்களைப் பற்றிக் கூறுகிறேன்.அவர்கள் மேல் உலகம் இல்லையென்றாலும் ஈதலே கடன் என்று எண்ணுபவர்.விருப்பு வெறுப்பு அற்றவர்.பெரியோர்களின் சொற்களில் சிந்தை செலுத்தும் இயல்பினர்.புலனடக்கம் உடையவர்.வாய்மையைப் போற்றுபவர்.இன்பத்தில் திளைக்க மாட்டார்கள்.துன்பத்தில் மூழ்க மாட்டார்கள்.இரண்டையும் சமமாகக் கருதுவர்.அவர்கள் செய்யும் தருமம் பிறர் பாராட்டுதலுக்கோ புகழுக்கோ அல்ல.பயம்,சினம்,ஆசை ஆகியவை இவர்களிடம் நெருங்கா.இத்தகையோரை நீ போற்றுதல் வேண்டும்.

Friday, December 24, 2010

130-வியாசருக்கும் ஒரு புழுவிற்கும் நடந்த உரையாடல்

தருமர் பீஷ்மரிடம் 'போரில் இறக்க மனமில்லாதவரும், மனம் உள்ளவர்களும் கொல்லப்பட்டனரே! செல்வம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் , இன்பமிருந்தாலும், துன்பம் இருந்தாலும், எந்த நிலையிலும் எந்த ஜீவனும் உயிர் விடத் துணியவில்லையே! எல்லாம் ஆசையோடு வாழவே விரும்புகின்றனவே ஏன்? அதன் காரணத்தைக் கூறுவீராக' என்று கேட்க பீஷ்மர் கூறலானார்.

'தருமா..நல்ல கேள்வி கேட்டாய்.இது தொடர்பாக வியாசருக்கும்,ஒரு புழுவிற்கும் நடந்த உரையாடலை உனக்கு நினைவுப்படுத்துகிறேன்.ஒரு நாள் பாதையில் விரைவாக ஓடும் புழுவைப் பார்த்த வியாசர்..'புழுவே..நீ பயந்தவன் போல இருக்கிறாய்.வேகமாகப் போகிறாய்.உன் இருப்பிடம் எங்கே இருக்கிறது.யாரைக் கண்டு பயப்படுகிறாய்? சொல்' என்று வினவினார்.அதற்குப் புழு, 'பாதைகளில் இரைச்சலுடன் செல்லும் வண்டிகளின் சப்தத்தைக் கேட்டு எனக்கு பயம் உண்டாயிற்று.அது என்னைக் கொன்றுவிடும் என பயந்து விலகிச் செல்கிறேன்.அதிகச் சுமையை இழுத்துக் கொண்டு சாட்டையால் அடிபட்டுப் பெருமூச்சு விட்டுத் துன்புறும் எருதுகளின் ஓசையையும் நான் உணர்கிறேன்.வண்டிகளை ஒட்டுவோர் ஒலியும் கேட்க முடிகிறது.என் போன்ற புழுப் பிறப்பினர் அதைத் தாங்க முடியாது.அந்தப் பயத்தால் விலகிப் போகிறேன்.யாருக்குத்தான் உயிரை விட மனம் வரும்' என பதில் அளித்தது.

அந்தப் புழு அவ்வாறு கூறியதும் வியாசர் அதைப் பார்த்து 'புழுவே..உனக்கு ஏது இன்பம்?விலங்கு பிறப்பாகிய உனது மரணமே இன்பம் பயக்கும் என நினைக்கிறேன்' என்றார்.

அது கேட்ட புழு, 'உயிரானது தான் எடுத்த தேகங்களில் பற்றுடன் இருக்கிறது.இந்தத் தேகத்திலும் எனக்கு இன்பம் இருப்பதை நான் உணர்கிறேன்.ஆகவே..நான் உயிருடன் பிழைத்திருக்கவே விரும்புகிறேன்.எந்தப் பிறவியிலும் உடலுக்கு ஏற்றபடி இன்பத்திற்குரிய பொருள் எல்லாம் உண்டாக்கப்பட்டுள்ளன..நான் மனிதப் பிறவியில் மிகவும் செல்வம் உள்ளவனாகப் பிறந்திருந்தேன்.எனது பேதைமையினால் உயர்ந்தோரைப் பகைத்துக் கொடியவனாக மாறினேன்.விருந்தினருக்கும்,ஏழைகளுக்கும் எதுவும் தராமல் சுவையானவற்றைத் தேர்ந்தெடுத்து நானே எல்லாவற்றையும் சாப்பிட்டேன்.ஏழைகளுக்கு உணவு தரவில்லை.யாராவது கொடுத்தால் அதையும் பறித்துக் கொண்டேன்.பிறருடைய ஆக்கம் கண்டு பொறாமை கொண்டேன்.பிறர் அனுபவிக்கும் இன்ப சுகத்தைக் கண்டு பொறாமை கொண்டேன்.பிறர் அனுபவிக்கும் இன்ப சுகத்தைக் கண்டு முகம் சுளித்தேன்.மற்றவர் பெற்ற நன்மை கண்டு வயிறு எரிந்தேன்.இப்படி முன் பிறவியில் தகாதவற்றை செய்தேன்.அவற்ரையெல்லாம் இப்போது நினைத்து மகனை இழந்தவன் போல துன்புறுகிறேன்.நல்வினை எதையும் செய்ததாகத் தெரியவில்லை.எவ்வளவு கெட்ட குணம் என்னிடம் இருந்த போதிலும் என் தாயை நான் என் கண் போல பாதுகாத்தேன்.ஒருமுறை என் வீட்டிற்கு வந்திருந்த விருந்தினருக்கு உணவு அளித்து உபசரித்தேன்.அந்த ஒரு நற்செய்கையால்தான் நான் இப்பிறவியில் இன்பத்தில் விருப்பம் கொண்டுள்ளேன்.அதனால் முந்தைய பிறவியின் நினைவு என்னை விட்டு அகலாமல் இருக்கிறது.

வியாசரே! அந்த நல்ல செயல்களின் விளைவைப் பற்றி மேலும் விளக்கமாகக் கூறுங்கள்" என்று கேட்டது.

வியாசர்..'புழுவே..நீ முன் பிறவியில் செய்த சில செயல்களால் பண்டைப் பிறவியின் நினைவில் திளைக்கிறாய்.நீ விரும்பினால் மனிதப் பிறவி எடுத்துச் சிறந்த பலன்களை அடையலாம்.ஆயின் பொருளுக்காகவே அலையும் அறிவு கெட்ட மனிதனுக்கு ஒரு நன்மையும் கிடையாது.நீ விரும்பும் குலத்தில் பிறக்கும் பேற்றினைத் தருகிறேன்' என்றார்.

புழு, தனது அடுத்த ஷத்திரியப் பிறவியில் வியாசரைச் சென்று பார்த்து வணங்கியது.'மாமுனிவரே! உம் போதனையைப் பின்பற்றியதால் நான் க்ஷத்திரியனாக..ராஜபுத்திரன் ஆனேன்.இது நான் விரும்பிய பிறவிதான்.என்னுடைய வைபவத்தை எண்ணி நானே வியப்படைகிறேன்.எத்தனை யானைகள் என்னைத் தாங்கிச் செல்கின்றன.எனது தேரை உயர்ந்த காம்போஜ நாட்டுக் குதிரைகள் இழுத்துச் செல்கின்றன.மிகச் சிறந்த ஒட்டகங்களும், கோவேறு கழுதைகளும் எனக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் முன்னே செல்கின்றன.ஏராளமான பேர் என்னை வந்து துதித்துப் போற்றுகின்றனர்.இன்னும் எனக்குப் புழுப் பிறவியின் நினைவு வருகிறது.உமது தவ மஹிமையால்தான் நான் அரச வாழ்வு பெற்றேன்.இனி நான் என்ன செய்ய வேண்டும்..கட்டளையிடுங்கள்' என விரும்பி வேண்டியது.

அதற்கு வியாசர்..'நீ புழுவாகப் பிறந்தாலும்..என்னை வணங்கிப் போற்றியதால் அரச வம்சத்தில் பிறந்திருக்கிறாய்.நீ விரும்பினால் அடுத்த பிறவியில் அறவோராகப் பிறக்கலாம்' என்று ஆசி கூறினார்.

நல்லொழுக்கத்தினால் சிறந்த அறவோனாகப் பிறந்து பின் இறந்து தேவனாகப் பிறந்து தேவ சுகம் அனுபவித்தது புழு.

Thursday, December 23, 2010

129-சரணம் அடைந்தவரைக் காப்பாற்றுவது - புறாவின் கதை

தருமர் பீஷ்மரிடம் 'காப்பவனுக்கு எது தருமம்?' என வினவ பீஷ்மர் சொல்கிறார்...

'தருமா..சரணம்-அடைக்கலம் என வந்தவரைப் பாதுகாப்பது உத்தமமான தருமம் ஆகும்..

சிபி முதலான அமைச்சர்கள் அபயம் என வந்தவரைக் காத்ததன் மூலம் உத்தம கதியை அடைந்தார்கள்.பறவைகளுக்குப் பகைவனான வேடன் ஒருவன் புறாவிடம் சரணடைந்தான்.அதனால் நன்கு உபசரிக்கப் பட்டான்.அது தனது மாமிசத்தையே அவனுக்கு அளித்து மேன்மை அடைந்தது' என்ற பீஷ்மர், முன்னர் பரசுராமரால் முகுந்த மன்னனுக்கு ஒரு கதை சொல்லப் பட்டது.பாவங்கள் அனைத்தையும் போக்க வல்ல அந்தக் கதையை இப்போது உனக்குக் கூறுகிறேன்..கேள்..எனக் கதையை கூறத் துவங்கினார்.

முன்னொரு காலத்தில் வேடன் ஒருவன் கொடிய மனதுடன் காட்டில் அலைந்து திரிந்தான்.பறவைகளைப் பிடிக்க இங்கும் அங்கும் வலைகளை விரித்தான்.வேட்டையாடுவதும், பெண் இன்பமும் தான் அவன் தொழில்.நாட்கள் பல சென்ற பிறகும் தனது அதர்மத்தை அவன் உணரவில்லை.

ஒருநாள் பெரும் சுழல் காற்றில் சிக்கிக் கொண்டான்.காட்டில் இருந்த மரங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் பேரொலியுடன் வீழ்ந்தன.எங்கும் பெரு மழை.வெள்ளக் காடு.கடுங்குளிரில் வேடன் நடுங்கினான்.வீடு செல்ல வழி தெரியவில்லை.பறவைகள் பெரு மழையால் வெளிவர இயலாது மரப் பொந்துகளில் பதுங்கிக் கிடந்தன.காட்டு விலங்குகளான சிங்கங்களும்,புலிகளும் மழையால் துன்புற்றுத் தரையில் வீழ்ந்தன.செல்லவும் முடியாமல், நிற்கவும் இயலாது தவித்துக் கொண்டிருந்த வேடனின் கண்ணில் பட்டது ஒரு பெண் புறா.பாவியான அந்த வேடன் அப்புறாவை எடுத்துத் தனது கூண்டில் போட்டுக் கொண்டு..ஒரு பெரிய மரத்தை அடைந்தான்.பறவைகளின் சரணாலயம் போல அம்மரம் தோற்றம் அளித்தது.

சிறிது நேரத்தில் மழை நின்றது.நீலவானம், நட்சத்திரங்களுடன் பளீச்சென தோற்றமளித்தது.குளிரால் நடுங்கிய வேடன் நேரத்தை யூகித்து அறிந்தான்.வீடு செல்வதற்குரிய நேரம் அல்ல அது.எனவே எஞ்சிய இரவுப் பொழுதை அம்மரத்தடியிலேயே கழிக்க எண்ணினான்.அம் மரத்திற்கு வணக்கம் செலுத்தி விட்டு , இலைகளை பாயாகப் பரப்பினான்.ஒரு கல்லையே தலையணையாகக் கொண்டு படுத்தான்.தூக்கம் வந்தது.

அம்மரத்தின் கிளையில் ஆண்புறா ஒன்று தன் இணையுடன் வாழ்ந்து வந்தது.காலையில் இரை தேடச் சென்ற அப்பெண் புறா இன்னும் திரும்பவில்லை.ஆண் புறா வருத்தத்துடன் 'பெருமழையில் என் பெண் புறாவிற்கு என்ன ஆயிற்றோ எனத் துன்புற்றது.என் மனைவி இல்லா வீடு சுடுகாடு போல தோன்றுகிறது,மகன்,மகள்,பேரன்,பேத்தி ..இப்படி வீட்டில் யார் இருந்து என்ன பயன்? மனைவியில்லையெனில் வாழ்க்கை ஏது?' எனப் புலம்பி அழுதது ஆண் புறா.

இந்த அழுகை ஒலி வேடனின் கூட்டில் அடைபட்டிருக்கும் பெண் புறாவின் காதில் விழுந்தது.'என் கணவர் என் மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளார்.நான் உண்மையில் பாக்கியசாலிதான்.எந்தப் பெண் கணவனால் அன்புடன் நேசிக்கப் படுகிறாளோ, அவள் மகிழ்ச்சியின் எல்லைக்கே போய் விடுகிறாள்.பெண்களுக்கு, எவன் அக்னி சாட்சியாய் மணக்கிறானோ அவன் தான் தெய்வம்.எந்தப் பெண் கணவனால் பாராட்டப் படவில்லையோ அவள் வாழ்க்கை காட்டுத் தீயால் பற்றப்பட்ட பூங்கொத்து சாம்பல் ஆவது போல சாம்பல் ஆகும்' என்று தன் கணவனின் அன்பை எண்ணி மகிழ்ந்தது.அதே நேரத்தில் கூண்டில் அடைப்பட்டுக் கிடப்பதால் துன்புற்றது.அப்படி வேடனால் பிடிக்கப் பட்டு துன்புறும் போதும் அந்தப் பெண் புறா தன் ஆண் புறாவை நோக்கிக் கூறத் தொடங்கியது.

'உமது நலனுக்காக சிலவற்றைக் கூறுகிறேன்.அடைக்கலம் என யார் வந்தாலும் அவர்களை நன்கு உபசரிக்க வேண்டும்.வேடன் ஒருவன் உமது இடம் வந்து குளிராலும், பசியாலும் துன்புற்றுப் படுத்திருக்கிறான்.அவனுக்கு வேண்டிய உதவிகளை நீர் தர வேண்டும்.புறாக்களுக்கு உரிய தருமம் நீர் அறியாததல்ல.இல்லறத்தான் ஒருவன் தன் சக்திக்கு மீறி தர்மம் செய்வான் என்றால், மறுமையில் அளவில்லாத இன்பத்தை அவன் அடைவான்.நீர் உமது உடம்பின் மீது உள்ள பற்றை விட்டு விட்டு, அறத்தின் மீது பற்றுக் கொண்டு இந்த வேடன் மகிழ்ச்சி அடையும்படி செய்யுங்கள்.என்னை நினைத்து வருந்த வேண்டாம்' என்று கூறிய பெண்புறா தலையை உயர்த்தித் தன் கணவனின் செய்கையைக் கூர்ந்து கவனித்தது.

நுணுக்கமாக உபதேசம் செய்த பெண் புறாவின் சொற்களைக் கேட்ட ஆண் புறா மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தது.அந்த வேடனை வணங்கி..'உமது வரவு நல்வரவாகட்டும்.நீர் இப்போது என் விருந்தினர்.விருந்தினரை உபசரிப்பது கடமை.வீட்டிற்கு வந்தவன் பகைவனாய் இருந்தாலும் கூட அவனைக் காப்பதே கடமையாகும்.பெரிய மரமானது, தன்னை வெட்டி வீழ்த்துப்வனுக்கும் நிழல் தரத் தவறுவதில்லை.ஆகவே உமக்கு என்ன வேண்டும் என்று சொல்லவும்.அதை நிறைவேற்றுகிறேன்..' என்றது.வேடனும்..'என்னால் குளிரைத் தாங்க முடியவில்லை..அதனைப் போக்கவும்' என்றான்.

உடனே புறா, உலர்ந்த சுள்ளிகளையும், சரகுகளையும் கொண்டு வந்து குவித்து, தேடி அலைந்து நெருப்பையும் கொணர்ந்து தீ மூட்டியது.வேடன் குளிர் நீங்கியதும்..அவனுக்கு பசிக்க ஆரம்பித்தது.'எனக்கு பசிக்கிறது' என்றான் வேடன்.

புறா வேடனை நோக்கி, 'உன் பசியைப் போக்கத் தக்க செல்வம் என்னிடம் இல்லை.துறவிகளைப் போல நாங்களும் எதையும் சேர்த்து வைப்பதில்லை' என்று கூறி 'உன் பசியை சிறிது நேரம் பொறுத்துக் கொள் என்றுக் கூறி சுள்ளிகளைக் கொண்டு பெருந் தீீயை உண்டாக்கியது.பின் வேடனை நோக்கி..'என்னையே உணவாகக் கொண்டு உன் பசியைப் போக்கிக் கொள்' என்று கூறித் தீயில் வீழ்ந்து உயிர் துறந்தது.அது கண்டு வேடன் திடுக்கிட்டான்.'என்ன கொடுமை செய்து விட்டேன்' என்று புலம்பி அழுதான்.

வேடன் புறாவின் முடிவு கண்டு மனம் பதறினான்...'கொடியவனாகிய நான் என்ன காரியம் செய்து விட்டேன்..இனி நான் வாழ்ந்து என்ன பயன்..தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட இப் புறா மகாத்மா ஆகிவிட்டது.நான் பாவியாகி விட்டேன்.இனி உற்றார், உறவினரை விட்டு உயிர் விடத் தயாராகி விட்டேன்.இதற்கு இந்தப் புறாவே எனக்கு வழிகாட்டி.எல்லாப் போகங்களையும் இன்று முதல் துறந்து விடுகிறேன்.கோடை காலத்துக் குளம் போல என் உடல் வற்றி,துரும்பாகட்டும்.பசி,தாகம்,வெயில்,மழை,பனி இவற்றைப் பொருட்படுத்தாது உபவாசம் இருப்பேன்.மறுமை நோக்கித் தருமம் செய்வேன்.தவம் செய்வேன்' என உறுதி பூண்டான்.கையிலிருந்த வில்லையும், அம்பையும் ,பறவைகள் அடைத்து வைத்திருக்கும் கூண்டையும் தூக்கி எறிந்தான்.கூண்டில் இருந்த பெண் புறாவையும் வெளியே செலுத்தினான்.தானும் புறப்பட்டான்.

வேடன் சென்றதும் அந்தப் பெண் புறா தன் கணவனை நினைத்துத் துயரத்தில் வாடியது.'உம்மிடம் நான் கொண்ட அன்புக்கு குறைவு ஏது? பிள்ளைகள் பலரைப் பெற்ற போதும் கணவனை இழந்த மகளிர் துன்புறுவர்.கணவனை இழந்தோர்க்கு யாரைக் காட்டி ஆறுதல் அளிக்க முடியும். இதுவரை இணை பிரியாது வாழ்ந்தோம்.ஆறுகளிலும்,மலைகளிலும்,மரக் கிளைகளிலும் இன்பமாக பாடித் திரிந்தோம்.இனி அந்த நாட்கள் வருமா?கணவனுக்கு இணையான தெய்வமும் இல்லை..அன்பரே!நீர் இன்றி நான் வாழப்போவதில்லை.கற்பிற் சிறந்த எந்தப் பெண் தன் கணவனை இழந்த பின் உயிர் வாழ்வாள்?" எனக் கூறிக் கொண்டே ஆண் புறா வீழ்ந்த தீயில் தானும் வீழ்ந்து உயிர் நீத்தது.

என்ன வியப்பு!!!

அழகான ஆடை அணிகலங்களை அணிந்ததும், மேலோரால் புகழப்படுவதும் ,விமானத்திலேறிச் சுவர்க்கம் செல்வதுமான தனது கணவனை அப் பெண் புறா அடைந்து சுவர்க்க இன்பத்துடன் வாழ்ந்து வந்தது.

சுவர்க்க பூமியில் மகிழ்வுடன் செல்லும் இரு புறாக்களையும் கண்ட வேடன் மனமாற்றம் அடைந்தான்.தானும் தவத்தை மேற்கொண்டு அந்தப் பறவைகளைப் போல சுவர்க்கம் செல்ல வேண்டும் என் உறுதி கொண்டு, தன் தொழிலை விட்டான்.விரதங்களை மேற் கொண்டான்.

ஒருநாள் செல்லும் வழியில் அழகான குளத்தைக் கண்டான்.அக்குளத்தில் நீர் நிறைந்திருந்தது.பறவைகளின் ஒலி எங்கும் ஒலித்துக் காதுக்கு இனிமையாக இருந்தது.வேடனுக்கு தாகம் இருந்த போதும் குளத்தை நாடவில்லை.கொடிய விலங்குகள் வாழும் காட்டை நோக்கி நடந்தான்.அப்போது பெருங்காற்று வீசியது.மரங்கள் ஒன்றோடொன்று உராய்ந்தன.தீப்பொறி கிளம்பிக் காடே தீப்பற்றி எரிந்தது.விலங்குகள் அஞ்சி ஓடின.ஆயினும் அந்த ஆபத்தினின்றும் தப்பிச் செல்ல வேண்டும் என வேடன் கருத வில்லை.தீயில் எரிந்து பாவத்தைத் தொலைத்துச் சுவர்க்கம் அடைந்தான்.

தருமா...நற்செயலால் ஆண் புறாவும்,பெண் புறாவும் சுவர்க்கம் அடைந்தன.தவற்றினைத் திருத்திக் கொண்டு நல்லொழுக்கத்துடன் வாழ்ந்த வேடனும் சுவர்க்கம் அடைந்தான்.ஆகவே நல்லொழுக்கம் மேற்கொள்க" என்றார் பீஷ்மர்.

Tuesday, December 21, 2010

128-எப்படி இருக்க வேண்டும்..

அரசரோ, பிறரோ பொருளைப் பெறுவது எப்படி? காப்பது எப்படி?பயன்படுத்துவது எப்படி? எனத் தருமர் வினவ பீஷ்மர் உரைக்கிறார்.

தருமா..சௌவீர நாட்டு மன்னன் சத்ருஞ்சனுக்குப் பரத்வாசர் சொன்னதை உனக்குப் பதிலாகச் சொல்கிறேன்மன்னன் எப்போதும் தண்டனை தரத் தயாராய் இருக்க வேண்டும்.அப்போதுதான் மக்கள் பயத்துடன் தவறு செய்யாமல் இருப்பர்.தண்டனையே ஒரு அரசின் ஆணிவேர் எனத் தகும்.பெரிய மரம் ஆணிவேர் அறுந்தால் கீழே விழும்.அதன் கிளைகள் முறியும்.அது போலவே தண்டனையில்லை எனில் ஆட்சி எனும் மரம் ஆணிவேர் அற்ற மரம் போல சாயும்.அரசின் கிளை போன்ற மக்களும் பாதுகாப்பின்றித் துன்புறுவர்.அறிவு மிக்க அரசன் பகைவனை வேருடன் களைய முற்பட வேண்டும்.பின் அப்பகைவனுக்கு உதவியாக வருபவர்களையும் தொலைக்க வேண்டும்.சொல்லில் பணிவும்,மனதில் பகை போக்கும் எண்ணமும் நிலைத்திருக்க வேண்டும்.

பகைவனுடன் சேர்ந்து ஆற்ற வேண்டிய பணியில் அவனிடம் சமாதானம் செய்து கொள்ள வேண்டும்.அதே நேரம் முழுமையாக அவனை நம்பக் கூடாது.பாம்புடன் பழகுவது போல பகைவனிடம் பயந்தே பழக வேண்டும்.எண்ணம் ஈடேறும் வரை பகைவனைத் தோளில் சுமக்க வேண்டும்.வாய்ப்புக் கிடைக்கும் போது கீழே தள்ளித் தாக்கி வெற்றி காண வேண்டும்.

செல்வத்தை விரும்பும் மனிதன் பணிவுடன் இருக்க வேண்டும்.இன்சொல் கூற வேண்டும்.பிறருக்கு வணக்கம் செலுத்த வேண்டும்.வாழ்கின்ற காலம் குறைவாக இருந்தாலும் மின்னல் போல ஒளி விட வேண்டும்.உமியில் உள்ள தீயைப் போல ஒளியின்றி நெடுங்காலம் புகைந்து கொண்டிருக்கக் கூடாது.மேலும் நன்றி கெட்டவரிடம் கொடுக்கல் வாங்கல் கூடாது.நன்றி கெட்டவர்கள் காரியம் ஆகும் வரை நல்லபடியே இருப்பர்.ஆனதும் நம்மை அவமதிப்பர்.

மன்னன் , குயில், தான் பாதுகாக்க வேண்டியதை வேறொன்றைக் கொண்டு (காகத்தின் மூலம்) பாதுகாப்பது போல், உழவு,வாணிகம் முதலியவற்றில் பிறர் உதவி கோர வேண்டும்.கோரை முதலியவற்றை வேருடன் உண்ணும் பன்றியைப் போல மன்னன் பகையை வேருடன் களைய வேண்டும்.

சோம்பேறிகளும்,தைரியம் அற்றவர்களும், போலிக் கௌரவம் பார்ப்பவ்ர்களும், பிறர் என்ன சொல்வார்களோ எனப் பயப்படுபவர்களும், விட்டு விட்டு முயல்பவர்களும் பொருள்களையடைய மாட்டார்கள்.

ஆமை போல தன் அவயங்களை மறைத்துக் கொள்ள வேண்டும்.கொக்கு போல ஒரே நினைப்பாய் இருக்க வேண்டும்.சிங்கத்தைப் போல பயமின்றித் தன் வலிமையைக் காட்ட வேண்டும்.போகப் பொருள்களை மிதமாக அனுபவிக்க வேண்டும்.சமயத்திற்கேற்ப குருடன் போலவும்,செவிடன் போலவும் நடிக்க வேண்டும்.இடம், காலம் அறிந்து தன் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும்.பகைவரின் வலிமை அறிந்து செயல்பட வேண்டும்.

பயம் வரும் வரை பயந்தவன் போல இருக்க வேண்டும்.பயம் வந்து விட்டாலோ பயம் இல்லாதவன் போல செயல் பட வேண்டும்.

கிடைத்த வாய்ப்பை நழுவ விடுவதும் இன்னொரு வாய்ப்பை எதிர்பார்ப்பதும் அறிவிடையார் செயல் அன்று.

பகைவருடன் ஒப்பந்தம் செய்துக் கொண்டு நிம்மதியாகத் தூங்குபவன் நிலை, மரத்தின் நுனியில் படுத்துத் தூங்கியவன் விழுந்த பின் விழித்துக் கொள்வதைப் போல ஆகும்.தன் நாட்டிலும் அயல் நாட்டிலும் யாரும் அறியாதவாறு ஒற்றர்களை நியமிக்க வேண்டும்.தண்ணீர்ச் சாலைகளில்,தோட்டங்களில்,விளையாடும் இடங்களில் அவர்கள் சென்று ஒற்று அறிதல் வேண்டும்.திருடர்களுக்குச் சரியான தண்டனை அளிக்க வேண்டும்.நன்மை,தீமைகளை அறியாதவரையும், தீய வழியில் செல்பவரையும் மன்னன் தண்டிக்க வேண்டும்.இதமாக பேசினாலும் பகைவரை நம்பக் கூடாது.செல்வத்தை விரும்பும் மன்னன் மக்களைத் தன்வயப்படுத்திக் கொள்ள வேண்டும்.ஒருவனைத் தண்டிக்கும் போதும் அவனுடன் அன்புடன் பேச வேண்டும்.வாளால் பகைவனின் தலையை துண்டாக்கிய போது அவனுக்காக அழவும் வேண்டும்.செல்வத்தை விரும்பும் மன்னன் இன் மொழிகளாலும்,வெகுமதிகளாலும்,பொறுமையாலும் அனைவரையும் தன் வயப் படுத்திக் கொள்ள வேண்டும்.

கடனின் மீதி,நோயின் மீதி,பகையின் மீதி ஆகிய இவை உடனுக்குடன் வளரும் தன்மையுடையவை.வளரும் கடனும்,பகைவன் உயிருடன் இருப்பதும்,நோயின் மீதியும் பயத்தை உண்டாக்கும்.செய்ய வேண்டியவற்றைச் செம்மையாகச் செய்து முடிக்க வேண்டும்.முற்றிலும் எடுக்க படாத முள்ளும் உள்ளேயே இருந்து கொண்டு நீண்ட காலம் தொல்லை தரும்.

ஒவ்வொருவரும் கழுகைப் போல் தொலை நோக்குடனும்,கொக்கைப் போல லட்சியத்தின் மீது குறியுடனும்,நாயைப் போல குரைத்துக் கொண்டும்,சிங்கத்தைப் போல் வீரத்தை வெளிப்படுத்திக் கொண்டும் திகழ வேண்டும்.

அரசன் காலத்திற்கேற்ப மென்மையாக இருக்க வேண்டும்.கடுமையாகவும் இருக்க வேண்டும்.மென்மையால் எதையும் சாதிக்கலாம்.கடுமையாக இருப்பவனை மென்மையாக இருந்து வளைந்து கொடுத்து வெற்றி பெறலாம்.ஆகவே மென்மைத்தன்மை கடுமையைக் காட்டிலும் கூர்மையானது.அறிவாளியுடன் பகை கொண்டவன் 'நெடுந் தொலைவில் இருக்கிறேன்' என இருந்து விடக் கூடாது.ஏனெனில் அறிஞனின் கைகள் மிகவும் நீளமானவை.அவன் ஏதாவது துன்பம் செய்து கொண்டே இருப்பான்.சக்திக்கு மீறிய செயலில் இறங்கக் கூடாது.நன்றாக வேர் ஊன்றிய மரத்தை சாய்த்தல் கடினம்.அதுபோலவே வலிமை வாய்ந்த மன்னனை வீழ்த்துவதும் கடினம்.இது முன்னரே சௌவீர நாட்டு மன்னனான சத்ருஞ்சனுக்கு பரத்வாசரால் சொல்லப்பட்டது" என பீஷ்மர் கூறினார்.

Friday, December 17, 2010

127-தாய்,தந்தை,குரு சிறப்பு

தருமர், பீஷ்மரிடம் 'தருமத்தில் பல இருக்கின்றனவே..எதை, எப்படி கடைபிடிப்பது? இம்மையிலும்,மறுமையிலும் எப்படிப்பட்ட தர்ம பயனை அடைவேன்?' என வினவினார்.
பீஷ்மர் சொன்னார்..'தருமா..தாய்,தந்தை.குருவை வழிபடுவது மிகவும் முக்கியமாகும்.நன்கு வணங்கப் படும் இவர்கள் இடும் கட்டளை எப்படியிருந்தாலும் நிறைவேற்ற வேண்டும்.தருமம் இல்லாத ஒன்றை அவர்கள் கட்டளையிட்டாலும் செய்ய வேண்டும்.
தந்தையை வழிபட்டால் இவ்வுலகையும், தாயை வழிபட்டால் மேல் உலகையும்,குருவை வழிபட்டால் பிரம்ம லோகத்தையும் பெறுவாய்.எனவே தருமா அவர்களை வழிபடு.மூன்று உலகிலும் புகழ் அடவாய்.எப்போதும் அம்மூவருக்கும் சேவை செய்வதே புண்ணியமாகும்.அம் மூவரைப் போற்றாதாரை உலகம் போற்றாது..

நான் எல்லா நற்காரியங்களையும் அவர்களுக்கே அர்ப்பணித்தேன்.அதனால் எனது புண்ணியம் நூறு மடங்காய் உயர்ந்தது.

நல்ல ஆசாரியர்..வேதம் பயின்ற பத்து அந்தணர்களைவிட உயர்ந்தவர்.உபாத்தியாயர் பத்து ஆசாரியரை விட உயர்ந்தவர்.தந்தையோ பத்து உபாத்தியாயரை விட உயர்ந்தவர்.தாயோ தந்தையை விட பல மடங்கு உயர்ந்தவள் ஆவாள்.ஆகவே தாய்க்கு நிகராக யாரையும் கூற முடியாது.

எனவே உபாத்தியாயரையும்,ஆசாரியரையும்,தாய் தந்தையரையும் மனத்தாலும் மாறுபட நினைக்கக் கூடாது.அவர்களைச் சொல்லால் நிந்திக்கக் கூடாது.நிந்தித்தால் பாவம் பெருகும்.துன்பம் கூடும்' என்றார் பீஷ்மர்.

Monday, December 13, 2010

126-பூனை..எலி கதை

தருமர் பீஷ்மரை நோக்கி..'நண்பர், பகைவரிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்?' எனக் கேட்க பீஷ்மர் உரைக்கிறார்
தருமா..ஆபத்துக் காலத்தில் எப்படி தப்பிப்பது என சொல்கிறேன் கேள்.

பகைவனாய் இருப்பவன் சில சமயம் நண்பன் ஆவான்.அதுபோல நண்பனும் சில சமயங்களில் பகைவன் ஆகலாம்.மக்களிடம் பகை,நட்பு ஆகியவை ஒரே மாதிரி இருப்பதில்லை.இடத்திற்கேற்ப, காலத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியவை,செய்ய வேண்டாதவை ஆகியவற்றைப் புரிந்துக் கொண்டு நம்பவும் வேண்டும்..நம்பாது இருக்கவும் வேண்டும்.நம் நலனில் அக்கறை கொண்டவரிடம் எப்போதும் நட்புடன் மனம் மாறாமல் இருக்க வேண்டும்.உயிரைப் பாதுகாத்துக் கொள்ளப் பகைவரிடம் சமாதானம் செய்துக் கொள்ளவும் வேண்டும்.எந்தச் சமயத்திலும் சமாதானத்தை விரும்பாதவன் அறிவாளி அல்லன்.மேலும் அவன் எந்த நன்மையும் பெற மாட்டான்.காரியத்தின் பயனைப் புரிந்துக் கொண்டு பகைவனிடம் நட்பாகலாம்.நண்பனிடம் பகை கொள்ளலாம்.இது தொடர்பாக ஒரு ஆலமரத்தில் பூனைக்கும், எலிக்கும் நடந்த உரையாடலைக் காண்போம்..

ஒரு காட்டில் ஒரு ஆலமரம் இருந்தது.அதில் பலவிதமான பறவைகள் வசித்து வந்தன.அந்த மரத்தடியில் நூறு துவாரங்கள் உள்ள வலையில் பலிதம் என்னும் புத்திசாலி எலி ஒன்று வசித்து வந்தது.அந்த ஆலமரத்தில் இருக்கும் பறவைகளைத் தின்று வாழும் ஒரு பூனையும் அங்கிருந்தது.அதன் பெயர் லோமசம்.

அந்தக் காட்டில் இருந்த வேடன் ஒருவன் நாள்தோறும் மரத்தடியில் பொறி வைத்து பறவைகளைப் பிடித்து தின்று வாழ்ந்துக் கொண்டிருந்தான்.அந்தப் பொறி நரம்புகளால் ஆன சுருக்குக் கயிறுகளைக் கொண்டது.ஒருநாள் அந்தப் பூனை அந்தப் பொறியில் மாட்டிக் கொண்டு தவித்தது.அதைக் கண்ட எலி பயமின்றி இங்கும் அங்கும் ஆனந்தமாக ஓடத் தொடங்கியது.ஒரு மாமிசத் துண்டு பொறியின் மீது இருந்ததை எலி பார்த்தது.அதை எடுத்து தின்றுக் கொண்டிருந்த போது 'அரிண' என்னும் கீரி ஒன்று தன்னை நோக்கி ஓடி வருவதைக் கண்டது.அதே சமயம் ஆலமரத்தின் மீது 'சந்த்ரக' என்னும் கோட்டானையும் பார்த்து..பயப்படத் தொடங்கியது.என்ன செய்யலாம் என சிந்தித்த எலிக்கு ஒரு யோசனத் தோன்றியது.'அறிவுள்ளவன் ஆபத்தைக் கண்டு அஞ்சமாட்டான்' அதிலிருந்து தப்ப வழியைப் பார்ப்பான்.எனவே பகைவனானாலும் பூனையின் உதவியை நாடித் தப்பிக்கலாம்..பூனையும் ஆபத்தில் சிக்கியுள்ளது..அதனால் அதுவும் சமாதானத்திற்கு சம்மதிக்கும்..ஆகவே அதனுடன் ஒரு உடன்படிக்கை செய்துக் கொண்டு உயிரைக் காக்கலாம் என எண்ணியது.

மேலும்..ஆபத்துக் காலத்தில் உதவி செய்பவனே நண்பன்..உதவி செய்யாதவன் பகைவன்..சில சமயம் நண்பன் நழுவி விடுவான்.பகைவன் உதவி செய்வான்.எனவே பகைவனாயிருந்தாலும்..பூனை என்னால் விடுவிக்கப் படுமானால் எனக்கு உதவி செய்யக் கூடும்.எனவே ஒரு யுக்தியுடன் பூனையிடம் சமாதானம் செய்துக் கொள்ள வேண்டும்' என முடிவெடுத்தது.பூனையுடன் சமாதான பேச்சை ஆரம்பித்தது.

'பூனியாரே..நட்பு முறையில் ஒன்று சொல்கிறேன்..நல்ல வேளை பிழைத்தீர்கள்..நீங்கள் தப்பிக்க வேண்டும் என்பது என் எண்ணம்.இதனால் எனக்கும் நன்மை உண்டாகும்.பயம் வேண்டாம்.இப் பேராபத்தை போக்கி விடுகிறேன்.என் கூரிய பற்களால் இப் பொறியைத் துண்டுதுண்டாகக் கடித்து உங்களை வெளியே செல்லச் செய்கிறேன்.நீர் இம்மரத்தின் மேல் வெகுநாட்களாக வாழ்கிறீர், நான் மரத்தடியில் பல நாட்களாக வாழ்ந்து வருகிறேன்.இதனால் நாம் நண்பர்கள் ஆவோம்.

இப்போது கீழே உள்ள கீரி என்னை இன்னும் பார்க்க வில்லை.பார்த்தால் என் கதி அல்லளவுதான்.எனக்குப் பயமாக இருக்கிறது.நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துக் கொண்டு இன்பமாய் வாழலாம் என்றது

பகையான எலியின் வார்த்தைகளில் மகிழ்ந்த பூனை எலிக்கு நன்றி கூறியது.எலியைப் போல பூனையும் வஞ்சனையுடையது.எனவே சாமர்த்தியமாகப் பேசியது.'எலியே..உன் பேச்சு அழகாய் உள்ளது.நீ கூறியபடி என்னைச் சீக்கிரம் விடுதலை செய்.என்னைப் போல நீயும் பெரிதும் துன்புறுகிறாய்.இது எனக்கு வருத்தத்தைத் தருகிறது.நம் காரியம் நிறைவேற ஒரு உடன் பாட்டிற்கு வருவோம்.நான் இதிலிருந்து விடுபட்டால் உனக்கு உதவுவேன்'என்றது.

உடன் எலி 'பூனையாரே! இனி என் பயம் தொலைந்தது.தாங்கள் வலையிலிருந்து விடுபட்டதும் என்னைக் கொன்றுவிடக் கூடாது.தவிர்த்து கோட்டான்,கீரி ஆகியவற்றிடமிருந்தும் என்னைக் காக்க வேண்டும்" என்று கேட்டது.

பூனை 'என் உயிர் நண்பனே..உன்னால்தான் நான் பிழைக்கப் போகிறேன்..இன்னும் என்னால் ஏதேனும் ஆக வேண்டுமாயின் ஆணையிடு.செய்கிறேன்..இனி நான் உன் நண்பன் அல்லவா?' என்றது.

பூனையின் ஆறுதலைக் கேட்ட எலி..நட்புமுறையில் பூனையுடன் பழக ஆரம்பித்தது.அதன் மார்பின் மீது தவழ்ந்து விளையாடத் தொடங்கியது.இது கண்டு கோட்டானும்,கீரியும் தம் எண்ணம் ஈடேறாததால் வேறிடம் சென்றன.

இடம், காலம் தெரிந்த எலி கயிற்றை மெதுவாகக் கடிக்கத் துவங்கியது.பூனையோ..'ஏன் வளையை தாமதமாக அறுக்கிறாய்..சீக்கிரம் அறுத்து விடு' என்றது.உடன் எலோ..'எந்த வேலையை எப்போது செய்ய வேண்டும் என நான் அறிவேன்.இப்போது உம்மை விடுவித்தால்..என்னையேக் கூட கொன்றிடுவீர்.தக்க சமயத்தில்..வலை விரித்தவன் வரும்போது வலையை அறுப்பேன்.அப்போது உடனே நீங்கள் மரத்திற்குத் தாவி போய் விடலாம்,நானும் வளைக்குள் போய் விடுவேன் .அப்படிப்பட்ட அவசரநிலையில் தான் நானும் தப்பிக்க முடியும்.இல்லையேல் உமக்கு பலியாகி விடுவேன்.'என்றது.

இதைக் கேட்டு அந்தப் பூனை வருத்தம் அடைந்தது.தாமதம் செய்த எலியைப் பார்த்து 'உயர்ந்தோர், நண்பர்களுக்கு உதவி செய்வதில் இவ்வளவு தாமதிக்க மாட்டார்கள்.நான் எவ்வளவு விரைவாக உன் துன்பத்தைப் போக்கினேன்.நீ மட்டும் ஏன் தயங்குகிறாய்? பழைய பகையை மனதில் கொண்டு நடக்கிராய்.இது நல்லதல்ல..மேலும் நீ தாமதப் படுத்தினால் என் உயிர் பிரிந்துவிடும்' என்றது.

புத்திசாலியான எலி, வஞ்சக எண்ணம் கொண்ட பூனையை நோக்கி..'நண்பரே! பூனையாரே..சுயநலம் மிக்க உமது எண்ணத்தை அறிந்து கொண்டேன்.பாம்பின் வாயிலிருந்து தப்பிப்பது போல பகைவனிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்பர் பெரியோர்.உலகில் இயற்கையாகவே நண்பர்களோ, பகைவர்களோ தோன்றுவதில்லை.ஒருவன் உதவி செய்யும் போது நண்பன் ஆகிரான்.அவனே தீமை செய்யும் போது பகைவனாகக் கருதப்படுகிறான்.சமயத்திற்கேற்ப பகையும், நட்பும் மாறும்.காரியம் முடிந்த பின் யாரும் யாரையும் கவனிப்பதில்லை.ஆதலால் எந்தச் செயல் ஆனாலும் அதில் கொஞ்சம் மிச்சம் வைத்திருக்க வேண்டும்.உமக்கு வலையை விரித்தவன் வந்ததும் பயந்து என்னைத் தின்னும் எண்ணத்தைக் கைவிட்டு ஓடி விடுவீர்.நானும் தப்பித்து பிழைத்து விடுவேன்.அதிகம் இல்லை அறுபட வேண்டியது ஒரு கயிறு தான்.சற்றுப் பொறுமையுடன் இருங்கள்.அதையும் அறுத்து விடுகிறேன்' என உரைத்தது

அந்த நேரத்தில் சில நாய்களுடன் வந்தான் பொறியை வைத்தவன்.பூனை அவனைக் கண்டு பயந்து..'இப்போது என் நிலையைப் பார்த்து..என்னை விடுவிப்பாயாக' எனக் கெஞ்ச..எலியும் தாமதமின்றி கயிற்றைத் துண்டித்தது.உடன் பூனை விரைவாய் ஓடி மரமேறியது.அவனைக் கண்டு கோட்டானும், கீரியும் கூட ஓடி மறந்தன.எலியும்,தன் பணி முடிந்து வளையில் ஒளிந்துக் கொண்டது.பொறியை வைத்தவன் ஏமாற்றத்துடன் திரும்பினான்.

பின் பூனை எலியை நோக்கி'ஆபத்தில் உதவி செய்தவரே..நானும் எனது உறவினர்களும் உன்னை கௌரவிக்க விரும்புகிறோம்.என் சொத்து உனக்கே உரியது.என்னிடம் உனக்கு பயம் வேண்டாம்.பயப்படாமல் வா' என்றது.

பூனையின் நோக்கத்தைப் புரிந்துக் கொண்ட எலி'உமது பாசமொழிகள் கேட்டு மகிழ்ச்சி.ஆனாலும் ஒன்று சொல்கிறேன்..நண்பர், பகைவர் பற்றி ஆறாய்ந்து அறிந்து கொள்ள வேண்டும் என்பர் சான்றோர்.நண்பர் பகைவர் போலவும், பகைவர் நண்பர் போலவும் தோற்றம் அளிக்கலாம்.இந்த்ப் பகையும், நட்பும் நிலையானது அல்ல.ஏதோ ஒரு நோக்கத்தைக் கொண்டுதான் நட்பும், பகையும் அமைகின்றன.செயலின் நுட்பத்தை அறியாமல் நண்பர்களிடம் அளவு கடந்த நம்பிக்கை கொள்வதும் பகைவரிடம் அளவு கடந்த அவநம்பிக்கை கொள்வதும் ஆபத்தில் முடியும்.

என்னிடம் தாங்கள் பேசும் ஆசை வார்த்தைகளுக்குக் காரணம் உண்டு.மனிதன், ஏதோ ஒரு காரணம் கொண்டே நட்புடன் திகழ்கிறான்.ஒரு காரணத்தால் பகைவன் ஆகிறான்.ஒரு தாய் வயிற்றில் பிறந்தோர் கூடச் சுயநலம் காரணமாக அன்பு செய்வர்.உலகில் காரணம் இன்றி அன்பு இருப்பதாகத் தெரியவில்லை.ஆனால் உடன் பிறந்த சகோதரரும், மனைவியும் ஏதோ ஒரு காரணத்தால் அன்பு கொண்டாலும் நாளாவட்டத்தில் அன்பு உடையவர்களாக ஆவர்.உலகில் ஏதோ காரணத்தால் தான் அன்பு ஏற்படுகிறது.அந்தக் காரணம் மறந்ததும் அன்பும் மறைகிறது.என்னைச் சாப்பிட வேண்டும் என்னும் காரணத்தால்தான் உமக்கு என் மீது அன்பு ஏற்பட்டுள்ளது.ஆகவே உமது பேச்சில் எனக்கு நம்பிக்கை இல்லை.இச் சமயத்தில் உம்மிடம் நட்புக் கொள்வது அறிவுடைமையாகத் தோன்றவில்லை.இயற்கையாகவே தாங்கள் எங்கள் குலத்திற்கு விரோதி ஆவீர்.ஏதோ ஒரு முறை ஏற்பட்ட நட்பை மறந்து விடுக.பகையை மேற் கொள்க.பழம் பகையை மறக்கக் கூடாது.

மேலும் எலி தொடர்ந்தது..'நண்பரே! உபசார வார்த்தைகளால் பயனில்லை.நெடுந்தொலைவில் இருந்தாலும் உம்மைக் கண்டு நான் அஞ்சுகிறேன்.சுயநலமின்றி எந்தக் காரியமும் இல்லை.புத்தியுள்ளவன் எல்லாப்பொருள்களை இழந்தேனும் தன் உயிரை காப்பாற்றிக் கொள்வான்.என்னதான் பகைவன் அன்பு உள்ளத்தோடு பழகினாலும் அவனை சந்தேகக் கண் கொண்டே காண வேண்டும்.

பூனை எவ்வளவோ பேசியது.ஆனாலும் எலி ஏமாறவில்லை.பூனையை நோக்கிக் கூறியது..'நம்பத் தகாதவனை நம்பக் கூடாது.நம்பத் தகுந்தவனையும் அதிகம் நம்பக்கூடாது.அதே நேரத்தில் தன் மீது நம்பிக்கை உண்டாகும் படி செய்ய வேண்டும்.பூனையாரே! உம் போன்ற பகைவரிடமிருந்து எப்போதும் நான் என்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.நீங்களும் உங்களை பிடிக்க பொறி வைப்பவரிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்'

இவ்வாறு பலம் இல்லாததாயினும் அறிவுள்ள ஒரு எலி மிக்க பலமுள்ள பகைவர்களைச் சாமர்த்தியமாக வென்றது.

எனவே தருமா..பலமுள்ள பகைவனாயினும் அவனுடன் சில சமயம் சமாதானம் செய்துக் கொண்டு வெற்றி காண வேண்டும்.

ஒன்றொடொன்று பகையுள்ள எலியும், பூனையும் சங்கடமான நேரத்தில் நட்புக் கொண்டன.அதே நேரத்தில் அவை குரோதத்துடன் இருந்தன.அவற்றில் அறிவிற் சிறந்தது வென்றது.
அதுபோலவே அறிவு மிக்கவனும் விழிப்புடன் இல்லையெனில், அறிவு குறைந்தவனால் வெல்லப்படுவான்.பயம் அற்றவன் போல தோற்றமளிக்க வேண்டும்.ஆனால் பயம் உள்ளவனாக அஞ்சி நடக்க வேண்டும்.நம்பிக்கை உள்ளவன் போல இருக்க வேண்டும்.ஆனால் நம்பிக்கை இல்லாதவனாகவும் இருக்க வேண்டும்.அதாவது எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.இல்லையேல் ஆபத்து நேரிடும்' என்றார் பீஷ்மர்.

Monday, December 6, 2010

125-வர இருக்கும் ஆபத்தை நீக்கும் உபாயம்

வர இருக்கும் ஆபத்தை நீக்கும் உபாயத்தை முன்னமே அறிந்துக் கொள்ளக் கூறப்பட்ட கதை
..பீஷ்மர் தருமருக்கு 'வரவிருக்கும் ஆபத்தை அறிந்து செயல்படுபவன் இன்பமாக வாழ்வான்.மந்த புத்தியுள்ளவன் துன்பம் அடைவான்,இவ்விஷயத்தில் செய்யத் தக்கது,தகாதது ஆகியவற்றை ஆராயாத மந்த புத்தியுள்ளவன் கதையைச் சொல்கிறேன்' என்று சொல்ல ஆரம்பித்தார்.
ஆழமற்ற சிறு குட்டையில் பல மீன்கள் இருந்தன.அவற்றில் மூன்று மீன்கள் நட்புடன் வசித்து வந்தன.அவற்றில் ஒரு மீன் சமயோசித புத்தியுடையது.மற்றொன்று ஆழ்ந்த சிந்தனையையுடையது.மூன்றாவது மந்த புத்திக் கொண்டது.
ஒரு சமயம் வலைஞர்கள் குட்டை நீரைக் கால்வாய் அமைத்துப் பள்ளங்களில் வடிய வைத்தனர்.அது கண்டுபயந்தது ஆழ்ந்த சிந்தனையுள்ள மீன்.மற்ற இரண்டு மீன்களை நோக்கி'ஆபத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க விரைந்து கால்வாய் வழியே வேறிடம் சென்றிடுவோம்' என்றது.
மந்த புத்தியுள்ள மீன்..'இங்கேயே இருக்கலாம்' என்றது.
சமயோசித புத்தி மீன்'சமயம் வரும்போது ஏதாவது யுக்தியைக் கண்டுபிடுத்துத் தப்பித்துக் கொள்ளலாம்.இப்போது போக வேண்டாம்' என்றது.இதைக் கேட்ட ஆழ்ந்த சிந்தனை மீன் கால்வாய் வழியே வெளியேறி ஆழமான குளத்தைச் சேர்ந்தது.
தண்ணீர் வடிந்ததும்..குட்டையை கலக்கி வலைஞர்கள் மீன் பிடிக்கத் தொடங்கினர்.அப்போது மந்த புத்தி மீன் மற்ற மீன்களுடன் வலையில் சிக்கியது. வலை கயிறுகளால் கட்டப்பட்டுத் தூக்கப்படும் போது சமயோசித புத்தியுள்ள மீன் கயிற்றை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருந்தது.எடுத்துச் சென்று வேறு குட்டையில் கழுவும் போது அந்த மீன் விரைந்து தண்ணீருக்குள் நுழைந்து தப்பித்துக் கொண்டது.மந்தபுத்தியுள்ள மீன் வலையில் சிக்கி இறந்தது.
இதுபோல சமயோசித புத்தியில்லாதவன் மந்த புத்தியுடைய மீனைப் போல சீக்கிரம் அழிவான்.வருமுன்னர் தன்னைக் காத்துக் கொள்ளாவிடினும்.சந்தேகமான தயக்க நிலையில் சமயோசித புத்தியுள்ளவன் தன்னைக் காத்துக் கொள்வான்
இதனால், வர இருக்கும் ஆபத்தை முன்னரே அறிந்துக் கொள்பவனும்,சமயோசித புத்தியுள்ளவனும் மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெறுவர் என்பதும்..மந்த புத்தியுள்ளவன் அழிவான் என்று உணர்த்தப் பட்டது.