Friday, December 25, 2009

82-தருமரின் உறுதி

அர்ச்சுனன் கூறிய காரணங்களை கேட்டும் தருமர் மனம் மாறவில்லை.துறவு மேற்கொள்ள இருக்கும் தன் முடிவில் மாற்றமில்லை என்றார்.அவர் அர்ச்சுனனிடம்..'நான் சொல்வதை உன் ஐம்புலன்களையும் ஒருமுகப் படுத்தி நான் சொல்வதைக் கேள்.அப்போது நான் சொல்வதில் உள்ள நியாயம் உனக்குப் புரியும்.முனிவர்கள் சேர்க்கையால் நான் மேலான நிலைமையை அடையப் போகிறேன்.நீ சொல்வதால் அரசாட்சியை நான் மேற்கொள்ளப் போவதில்லை.நான் காட்டுக்குச் செல்லப் போவது உறுதி.கானகம் சென்று கடுந்தவம் இருக்கப் போவது உறுதி.தவிர்க்க இயலாது.உலகப் பற்று நீங்கி முனிவர்களுடன் கூடி ஆத்ம சிந்தனையில் திளைப்பேன்.உடலை சாத்திரப்படி உண்ணாவிரதத்தால் இளைக்கச் செய்வேன்.இரண்டு வேளையும் நீராடுவேன்.காட்டில் உள்ள பறவை,விலங்குகளின் இனிய ஒலிகளைக் கேட்டு மனம் மகிழ்வேன்.தவம் செய்வோர் மேற்கொள்ளும் சாத்திர விதிப்படி பின்பற்றுவேன்.விருப்பு,வெறுப்பு,இன்ப துன்பம்,மான அவமானம் ஆகியவற்றிலிருந்து விலகி எப்போதும் தியானத்தில் இருப்பேன்.எனக்கு இனி நண்பரும் இல்லை..பகைவரும் இல்லை.

வாள் கொண்டு ஒருவர் கையை அறுத்தாலும் சரி,சந்தனத்தால் ஒருவர் அபிசேகம் செய்தாலும் சரி இருவருக்குமே தீங்கையோ, நன்மையையோ நினைக்க மாட்டேன்.இவ்வளவு நாள் இந்த புத்தி இல்லாமல்தான் சகோதரர்களைக் கொன்றேன்.பிறப்பு,இறப்பு,மூப்பு,நோய்,வேதனை இவைகளால் பீடிக்கப் படும் மனித வாழ்க்கையில் ஒரு பயனும் இல்லை.நிலையில்லா உலகில் தோன்றும் அற்ப ஆசைகளால் ஒரு அரசன் மற்ற அரசனைக் கொல்கிறான்.இவ்வளவு நாட்கள் அறிவு தெளிவற்றுக் கிடந்த நான் இப்போது தெளிந்த ஞானத்துடன் ஒரு முடிவிற்கு வந்து விட்டேன்..என்றும் நிலைத்து நிற்கக் கூடிய முக்தியை அடையத் துணிந்து விட்டேன்' என்றார்.

பீமன் சத்திரியர் துறவு மேற்கொள்ளக்கூடாது என்றும் தருமர் அரசாட்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்திக் கூறியவை அடுத்த பதிவில்...

Wednesday, December 16, 2009

81- தருமருக்கு அர்ச்சுனனின் பதில்

தருமரின் மொழிகளைக் கேட்ட அர்ச்சுனன் பதில் கூற ஆரம்பித்தான்..

'செயற்கரிய செயலை முடித்து..அதனால் பெற்ற செல்வத்தை இழக்கக்கூடாது.உமது துயரம் என்னை வியக்க வைக்கிறது.பகைவரைக் கொன்று தருமத்தால் கிடைத்த பூமியை எப்படி விட்டுப் போவது?அஃது அறிவீனம்.பயமும்,சோம்பலும் உடையவர்க்கு ஏது அரச செல்வம்?உலகில் ஒன்றும் இல்லாதவன் தான் பிச்சை எடுத்து உண்பான்.அவன் முயற்சியால் செல்வத்தை பெற மாட்டான்.மிகப் பெரிய அரச செல்வத்தை விட்டு விட்டு பிச்சை எடுத்து தவம் மேற்கொள்ளப் போகிறேன் என்ற உமது பேச்சை யாரேனும் ஏற்றுக் கொள்வார்களா? எல்லா நம்மைகளையும் விட்டு விட்டு அறிவிலி போல் ஏன் பிச்சை எடுக்க வேண்டும்?அரும்பாடு பட்டு வெற்றி கொண்ட பின் ஏன் காடு நோக்கி செல்ல வேண்டும்?ஒன்றும் இல்லாமல் இருப்பது சாதுக்களுக்கு தருமம்.ஆனால் அரச தருமம் அல்ல.அரச தருமம் என்பது பொருளால் நடைபெறுவது.அரச தருமம் மட்டுமல்ல சாது தருமம் கூட பொருள் இல்லாது போனால் நிலைகுலைந்து விடும்.சாதுக்கள் சாது தருமத்தைக் காக்க இல்லறத்தார் துணை செய்வர்.பொருள் இல்லையெனில் இல்லறத்தாரால் எவ்வாறு சாதுக்களுக்கு உதவ முடியும்.எனவே உலகில் பொருள் இல்லாமை பாவம் ஆகும்.பல்வேறு வகைகளில் திரட்டப் படும் செல்வமே எல்லா நன்மைகளும் பெருக காரணமாகிறது.அண்ணலே..பொருளிலிருந்து இம்மை இன்பம் கிடைக்கிறது.தருமம் பிறக்கிறது.இறுதியில் மறுமை இன்பமும் கிடைக்கிறது.

உலக வாழ்க்கை பொருள் இல்லாது மேன்மையுறாது.பொருளற்றவனின் முயற்சி கோடைகால நீர்நிலை போல் வற்றிப் போகும்.ஒரு பயனும் தராது.எவனிடம் பொருள் உண்டோ அவனிடம் நண்பர்கள் இருப்பார்கள்.எவனிடம் பொருள் இருக்கிறதோ அவனுடன் நெருங்கிய சுற்றத்தார்கள் இருப்பர்.எவனிடம் பொருள் இருக்கிறதோ அவனே சிறந்த அறிஞன்.அவனே தலைவன்.ஆகவே..யானையைக்கொண்டு யானையைப் பிடிப்பது போலப் பொருளைக் கொண்டு பொருளை சேர்க்க வேண்டும்.மலையிலிருந்து நதிநீர் பெருகுவதுப் போல பொருளில் இருந்து தான் தருமம் பெருகுகிறது.உண்மையில் உடல் இளைத்தவன் இளைத்தவன் அல்ல.பொருளற்றவனே இளைத்தவன் ஆவான்.

பகை அரசரின் நாட்டைக் கவர்வது அரச நீதி.அரச வம்சத்தை ஆராய்ந்தால் இதன் உண்மை விளங்கும்.ஒரு காலத்தில் இந்தப் பூமி திலீபனுடையதாக இருந்தது.பின் நகுஷன் கைக்குப் போனது.பின் அம்பரீஷனுடையதாகியது.பின் மாந்தாவுக்குச் சொந்தம் ஆனது.தற்போது உம்மிடம் உள்ளது.எனவே முன்னோர்களைப் போல அரச நீதி உணர்ந்து நீர் ஆட்சி புரிய வேண்டுமேயன்றிக் காட்டுக்குப் போகிறேன்..என்று சொல்லக் கூடாது'

என்று அர்ச்சுனன் சொல்லி முடித்தான்.

Tuesday, December 8, 2009

80-தருமரின் துயரம்

போர்க்களத்தில் ஏற்பட்ட உயிர்ச் சேதங்களை எண்ணி தருமர் சோகமாகக் காணப்பட்டார்.சகோதரர்களையும்,சுற்றத்தாரையும் இழந்து பெற்ற பயன் என்ன என ஏங்கினார்.அர்ச்சுனனைக் கூப்பிட்டு தருமர் சொல்ல ஆரம்பித்தார்.

'நாம் காட்டிலேயே இருந்திருந்தால் துயரம் இருந்திருக்காது. நம் சகோதரர்களைக் கொன்றதால் என்ன நன்மை..வனத்தில் இருந்த போது நம்மிடம் பொறுமை இருந்தது.அடக்கம் இருந்தது,அஹிம்சை இருந்தது.இவையே தருமம்.அறிவின்மையாலும்,ஆணவத்தினாலும்,பொருளாசையாலும் அரசாட்சியில் உள்ள கஷ்டத்தை விரும்பி துயரத்தை அடைந்தோம்.எல்லோரையும் கொன்றுவிட்டு கேவலமாக உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.நம்மால் கொல்லப்பட்டவர்கள் மரணம் என்னும் வாயிலில் புகுந்து யமனின் மாளிகையை அடைந்து விட்டார்கள்.நன்மைகளை விரும்பும் தந்தைகள் அறிவுள்ள மக்களைப் பெற விரும்புகின்றனர்.தாய்மார்கள் விரதங்களும், தெய்வ வழிபாடுகளிலும் ஈடுபடுகின்றனர்.மகனையோ,மகளையோ பெற்று அவர்கள் நல்லபடியாக கௌரவத்துடனும்,செயல்திறனுடனும் புகழுடன் வாழ்வார்களாயின் தமக்கு இம்மையிலும்,மறுமையிலும் நற்பேறு கிட்டும் என பெற்றோர் எண்ணுகின்றனர்.இங்கே அவர்கள் நனவு கனவாயிற்று.அவர்கள் வாழ்க்கையும் பாலைவனம் போல் ஆயிற்று.அவர்களின் பிள்ளைகள் நம்மால் கொல்லப்பட்டார்கள்.அவர்கள் தாய் தந்தையர்க்கு ஆற்ற வேண்டிய கடமை நம்மால் தடுக்கப்பட்டது.

ஆசையும், சினமும் மிக்கவர்கள் வெற்றியின் பயனை அடைய முடியாது.இதில் கௌரவர்களும்..நாமும் ஒன்றுதான்.இந்த பூமியின் பயனை அவர்களால் அனுபவிக்க முடியவில்லை.ஆசைவயப்பட்ட நம்மால் மட்டும் இதன் பயனை அனுபவிக்க முடியுமா?எண்ணிப்பார்த்தால் துரியோதனனால் அலைக்கழிக்கப்பட்ட நாமே இந்த உலகின் அழிவுக்கும் காரணமானோம்.நம்மிடம் பகைக் கொண்டு நம்மை அழிப்பதே அவன் லட்சியமாக இருந்தது.நமது பெருமையைக் கண்டு பொறாமை கொண்ட அவன் உடல் வெளுத்துக் காணப்பட்டான்.இதை சகுனியே திருதிராட்டிரனிடம் சொல்லி இருக்கிறான்.துரியோதனன் மீது கொண்ட பாசத்தால் யார் பேச்சையும் கேட்காமல் துரியோதனன் மனம் போனபடி போக வழிவிட்டார்.பீஷ்மரின் பேச்சையும் விதுரருடைய பேச்சையும் கேளாமல் மகனின் மனம் போல செயல்பட்டார்.

கெட்ட புத்தியுள்ள துரியோதனன் பழிபட செயல் புரிந்து உடன்பிறந்தவர்களைக் கொல்வித்தான்.தாய்,தந்தையரைச் சோகத்தில் ஆழ்த்தினான்.கண்ணனை கடுஞ்சொற்களால் ஏசினான்.

யார் செய்த பாவமோ..நாடு அழிந்தது.பல்லாயிரம் வீரர்கள் மடிந்ததும்..நம் கோபம் அகன்றது.ஆனால் இப்போது சோகம் வாள் கொண்டு பிளக்கிறது.நாம் செய்த பாவம்தான்..சகோதரர்கள் அழிவுக்குக் காரணமோ என அஞ்சுகிறேன்.இந்தப் பாவம் தவத்தினால் போகக்கூடியது என ஆகமங்கள் கூறுகின்றன.ஆதலால் நான் தவக்கோலம் பூண்டு காட்டிற்குச் செல்ல விரும்புகிறேன்.இல்லறத்தில் இருந்துக் கொண்டு நாம் செய்யும் செயல்கள் மீண்டும் பிறப்பு, இறப்புக் காரணம் என அற நூல்கள் கூறுகின்றன.ஆகவே சுக துக்கங்களைத் துறந்து சோகமில்லா ஓரிடத்தை நாடிச் செல்ல விழைகிறேன்.தவம் ஒன்றே நம் பாவங்களை சுட்டெரிக்கும் என உணர்கிறேன்.ஆகவே அர்ச்சுனா..இந்த பூமியை நீயே ஆட்சி செய்..எனக்கு விடை கொடு..' என்றார்.

இதற்கு அர்ச்சுனனின் பதில் அடுத்த பதிவில்.

Friday, December 4, 2009

79-இரும்புப் பதுமைத் தூண்

வியாசரும்..திருதிராட்டிரனுக்கு ஆறுதல் கூறினார்.ஆயினும் அவன் சினம் அடங்கவில்லை.கண்ணன் தருமரை அறிமுகப் படுத்த சாதாரணமாக தழுவிக் கொண்ட திருதிராட்டிரன்..பீமனைத் தழுவும்போது அறிவிழந்தான்.அவன் மனநிலையை அறிந்திருந்த கண்ணன் பீமனைப் போன்ற இரும்பாலான ஒரு பதுமையைக் காட்டினார்.திருதிராட்டிரன் அந்த இரும்பு பதுமையை இறுகத் தழுவி பொடியாக்கினான்.'இன்னுமா உன் வெறுப்பு தீரவில்லை? இந்த கெட்ட எண்ணமே உன் குலநாசம் அடையக் காரணம்' எனக் கண்ணன் கூற நாணித் தலைக் குனிந்தவன், மனம் தெளிந்து பீமன்,அர்ச்சுனன்,நகுலன்,சகாதேவன் ஆகியோரை தழுவிக் கொண்டான்

பாண்டவர்கள் காந்தாரியைக் காணச் சென்றனர்.காந்தாரியின் சினம் கண்ட வியாசர் 'நீ கோபப்படுவதால் பயன் இல்லை.நீ போருக்கு முன் துரியோதனனிடம் கூறியது என்ன..தருமம் உள்ள இடத்தில் வெற்றி நிச்சயம் என்றாய்..பாண்டவர்கள் பக்கம் தருமம் இருந்ததால் அவர்கள் வெற்றி பெற்றனர்.அவர்களை வாழ்த்துவாயாக..'என்றார்.

'பாண்டவர்களும் என் மக்கள் தான்..ஆயினும் பீமன் மீது எனக்குக் கோபம் உண்டு.நெறிகெடத் துரியோதனனை தொடையில் அடித்து வீழ்த்தினான்.துச்சாதனனின் ரத்தத்தைக் குடித்தான்.இந்த கொடுமைகளை எப்படி மன்னிப்பேன்?' என்ற காந்தாரிக்கு பீமன் பதிலளித்தான்.

'தாயே! துரியோதனன் எங்களுக்கு இழைத்த கொடுமைகளை நீங்கள் அறிவீர்கள்.உச்சக் கட்டமாக..பாஞ்சாலியைத் தன் தொடைமீது வந்து அமரும்படிக் கூறினான்.துச்சாதனன் அவளின் ஆடையைக் களைய முற்பட்டான்..ஆனாலும் நான் மேற்கொண்ட சபதப்படி அவன் ரத்தத்தைக் குடிக்கவில்லை.பல்லுக்கும்,உதட்டுக்கும் கீழே செல்லவில்லை ரத்தம்.அதனை உமிழ்ந்து விட்டேன்.விகர்ணனைப் பொறுத்தவரை நான் எவ்வளவோ..கேட்டுக் கொண்டும் அதனை செவி சாய்க்காமல் போரிட்டு மாண்டான்' என்றான்.

பின் காந்தாரியின் அருகில் வந்து தருமர் வணங்கினார்.கட்டியிருக்கும் துணி வழியே தருமரின் கால் விரல்களின் நகங்களைக் கண்டாள்.அவை சினத் தீயால் கருத்து விகாரம் அடைந்தன.அது கண்டு அர்ச்சுனன் அச்சம் கொண்டான்.பின் ஒருவாறு காந்தாரி சாந்தம் அடைந்தாள்.

பாண்டவர்கள் பின் பெற்ற தாயான குந்தியைக் காணச் சென்றனர்.

வியாசரின் அருளால் காந்தாரி இருந்த இடத்திலிருந்து போர்க்களத்தைக் கண்டாள்.துரியோதனன் தரைமீது மாண்டுக் கிடப்பதுக் கண்டு..கதறி அழுதாள்.கண்ணனைப் பார்த்து..'உன்னால்தான் எல்லாம்..சகோதரர்களிடையே பூசலை அவ்வப்போது தடுத்து நிறுத்தியிருந்தால் பேரழிவு ஏற்பட்டிருக்காது..என் குலம் நாசம் அடைந்தாற் போல உன் குலமும் நாசம் அடைவதாக' என சபித்தாள்.அவளுக்கு நல்லுணர்வு ஏற்படுமாறு கண்ணன் ஆறுதல் அளித்தார்.

இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்யும் நேரம் வர..குந்தி..கர்ணன் தன் மூத்த மகன் என்ற ரகசியத்தை வெளிப்படுத்தினாள்.

பின்..முறைப்படி ஈமச் சடங்குகள் நடை பெற்றன.

ஸ்திரீ பருவம் முற்றிற்று..அடுத்து சாந்தி பருவம்..தருமரின் மனக்குழப்பமும்,தெளிவும்,பீஷ்மரின் உபதேசமும்..அடுத்து வரும் பதிவுகளில்..