Tuesday, November 30, 2010

124-நட்புக்குத் துரோகம் செய்யக்கூடாது(4)

அரக்க அரசன் விருபாட்சன் தன் நண்பனான ராஜதர்மா என்ற கொக்கிற்குத் தீ மூட்டித் தகனம் செய்தான்.சிதை தயாரிக்கப் பட்டு ஆடை,அணிகலங்களால் அலங்கரிக்கப்பட்டது.சந்தனக் கட்டைகள் அடுக்கப் பட்டன.சிதைக்குத் தீ மூட்டுகையில், மேலே வந்துக் கொண்டிருந்த தாட்சாயணி சுரபியின் வாயிலிருந்து சிந்திய பாலின் நுரையானது ராஜதர்மாவின் சிதையில் விழுந்தது.அதனால் ராஜதர்மா என்னும் கொக்கு உயிர் பெற்று எழுந்தது.விருபாட்சனுடைய நகரை அடைந்தது.

அந்த நேரத்தில் தேவேந்திரன் அங்கு வந்தான்.அந்த கொக்கு இந்திரனை நோக்கி'தேவேந்திரா..என் நண்பனான கௌதமனையும் பிழைக்கச் செய்ய வேண்டும்'என்றது.இந்திரனும் கௌதமனை உயிர் பிழைக்கச் செய்தான்.

இந்திரன் விருபாட்சனை நோக்கி, ராஜதர்மா, பிரம்மாவிடம் பெற்ற ஒரு சாப வரலாற்றைக் கூறினான்.'அரக்க அரசனே..முன்பு ஒரு காலத்தில் பிரம்மதேவன் மிக்க சினம் கொண்டு ராஜதர்மாவை நோக்கி"நீ எனது சபைக்கு ஒரு முறையேனும் வராத காரணத்தால் தரும குணம் உள்ளதும்,பரம் பொருளை அறியத் தக்கதுமான கொக்காகப் பிறப்பாயாக.பாவச் செயல் புரிபவனும்,நன்றி கெட்டவனுமான ஒரு அந்தணன் உனது இடம் தேடி வருவான்.உன்னைக் கொல்வான்.அப்போது உனக்கு விடுதலைக் கிடைக்கும்.அந்தச் சாபப்படி ராஜதர்மா உத்தமமான பிரம்மாவின் சத்திய உலகத்தை அடையும்.அந்த அந்தணனும் நரகத்தை அடைவான்" என்று கூறி தேவர் உலகை அடந்தான்.

பீஷ்மர் தொடர்ந்தார்..'தருமா..இன் நிகழ்ச்சியை முன்னர் நாரதர் எனக்குக் கூறினார்.நான் உனக்கு உரைத்தேன்.நன்கு நினைவில் வைத்துக் கொள்..

நன்றி கொன்றவனுக்குப் பிராயச்சித்தமே இல்லை.அவனுக்குப் புகழும் இல்லை.இன்பமும் இல்லை.இதுபோலவே நண்பனுக்குத் துரோகம் இழைத்தால் நரகம்தான் கிடைக்கும்.எனவே ஒவ்வொருவரும் நன்றியுடனும்,நண்பரிடம் அக்கறையுடனும் நடந்துக் கொள்ள வேண்டும் 'என்றார்.

Sunday, November 28, 2010

123-நட்புக்குத் துரோகம் செய்யக்கூடாது(3)

அந்தணனை விருந்தினராக ஏற்றுக் கொண்ட அசுரன் அவனது குலம், கோத்திரம் பற்றி விசாரித்தான்.அந்தணன் கூறினான்.

நான் மத்திய நாட்டைச் சேர்ந்தவன்.தற்போது ஒரு வேடன் வீட்டில் தங்கியிருக்கிறேன்.ஏற்கனவே திருமணமான ஒருத்தியை மணந்து வாழ்கிறேன்.

இதைக் கேட்டு அசுரன் சிந்தனையில் மூழ்கினான்.'இவன் பிறப்பால் அந்தணனாக இருந்தும் ஒழுக்கத்தில் அப்படியில்லை.ஆயினும் என் நண்பன் ராஜதர்மா என்னும் பறவையால் அனுப்பப் பட்டவன்.ஆகவே, இவனுக்கு வேண்டியவற்றைத் தருவேன்.மற்ற அந்தணருடன் உணவை இவன் அருந்தட்டும்.இனிச் சிந்திக்க ஏதுமில்லை.மிக்க செல்வத்தை இவனுக்கு அளிப்பேன்' என்னும் முடிவுக்கு வந்தான்.

அந்த நேரத்தில் ஏராளமான அந்தணர்கள் அங்கு வந்து சேர்ந்தனர்.அவர்கள் விரும்பியபடி அசுரன் பொன்னையும், பொருளையும் வாரி வழங்கினான்.மற்றவர்களைப் போல கௌதமனும் நிறைந்த செல்வத்தைப் பெற்றுக் கொண்டு பெரும் பாரத்தைச் சுமப்பது போலச் சுமந்துக் கொண்டு ஆலமரத்தை அடைந்தான்.அவன் பசியாலும் வழி நடந்த களைப்பாலும் சோர்ந்திருந்தான்.

சிறிது நேரத்தில் ராஜதர்மா..அந்தணனை வரவேற்று, தன் சிறகுகளால் வீசி அவன் களைப்பைப் போக்கியது.அப்போது 'இந்த பெருஞ்சுமையைத் தூக்கிக் கொண்டு நெடுந்தூரம் செல்ல வேண்டுமே..வழியில் உண்பதற்கு உணவு ஏதும் இல்லையே' என சிந்தித்தான்.

நன்றி கெட்ட கௌதமன்..இந்தப் பறவை அதிகம் சதைப் பற்றுள்ளதாய் இருக்கிறது..இதனைக் கொன்று இதன் மாமிசத்தை எடுத்துச் சென்றால் தேவைக்கு அதிகமாகவே கிடைக்கும் என்னும் முடிவுக்கு வந்தான்.

சிறந்த பறவையான ராஜதர்மா அதிக ஒளியுள்ள தீயை மூட்டி,கௌதமனின் குளிரைப் போக்கிவிட்டு..அவனிடம் கொண்ட நம்பிக்கையுடன் தூங்கலாயிற்று.கௌதமன் தூங்கிக் கொண்டிருந்த பறவையை தீயில் இட்டுப் பக்குவப்படுத்தி, செல்வங்களையும், பறவையின் மாமிசத்தையும் எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

பறவை அன்று வராததால் அசுரன் கவலைப் பட்டான்..இரண்டு நாட்கள் பொறுத்திருந்து பின் தன் மகனை அழைத்து..'பறவையைக் காணாது மனம் அஞ்சுகிறது.எனக்கு சந்தேகம் வருகிறது.அதன் வீட்டில் தங்கியுள்ள அந்தணன் ஒழுக்கம் கெட்டவன்.இரக்கம் இல்லாதவன்.நீ விரைந்து சென்று ராஜதர்மா உயிருடன் உள்ளதா என பார்த்து வா' என்றான்.

மகனும் உடன் பறவை வசித்த ஆலமரத்தை நோக்கிச் சென்றான்.அங்கே ராஜதர்மா கொல்லப்பட்டு..அதன் எலும்புகள் மரத்தடியில் இருப்பதைக் கண்டான்.கோபம் கொண்டு கௌதமனை பிடித்துவர ஆட்களை அனுப்பினான்.அந்த ஆட்கள் கௌதமனை பிடித்து இழுத்து வர,பறவையின் எலும்புகளையும் எடுத்துக் கொண்டு அசுரனிடம் வந்தான்.அதுகண்டு அசுரன் கதறி அழுதான்.

பின் அவன் தன் மகனை அழைத்து'கௌதமனைக் கொல்ல வேண்டும்.மகாபாவியான அவன் மாமிசத்தை அரக்கர்கள் உண்ணட்டும்' என்றான்.ஆனால் நன்றிக் கெட்டவனின் மாமிசத்தை உண்ண அரக்கர்கள் விரும்பவில்லை.அவனை துண்டு துண்டாக வெட்டி கொள்ளைக் கூட்டத்தாரிடம் அளிக்குமாறு கட்டளையிட்டான்.அவர்களும் அவன் மாமிசத்தை உண்ண முன் வரவில்லை.நன்றிகெட்டவனின் மாமிசத்தை பறவைகளும் உண்ணவில்லை.திருடனுக்கும்,குடிகாரனுக்கும் கூடப் பிராயசித்தம் உண்டு, ஆனால் நன்றி கெட்டவனுக்கு பிராயசித்தம் ஏதுமில்லை (தொடரும்)

Monday, November 22, 2010

122-நட்புக்குத் துரோகம் செய்யக்கூடாது(2)

பொழுது விடிந்து..அவ்விருவரும் ஊரை விட்டுப் புறப்பட்டனர்.பின் அந்தணரிடம் விடைபெற்றிச் சென்ற கௌதமன் வழியில், கடல் யாத்திரை செய்யும் வணிகரை சந்தித்தான்.அப்போது மத யானையால் வணிகக் கூட்டம் தாக்க்கப்பட்டது.அக் கௌதமன் வட திசை நோக்கிப் பயந்தபடியே ஓடினான்.யாருடைய உதவியும் இல்லாததால் காட்டில் தனியாகச் சென்றான்.மரங்கள் நிறைந்த காடு அழகு மிக்கதாய் இருந்தது.பறவைகள் ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன.அந்த இனிய ஒலிகளைக் கேட்டுக்கொண்டே இங்கும் அங்கும் திரிந்துக் கொண்டிருந்தான்.

மணல் பொன் போல் காட்சி அளித்தது.ஓரிடத்தில் பெரிய ஆலமரம் கண்ணில் பட்டது.குடை கவிழ்த்ததுபோல் அதன் கிளைகள் தாழ்ந்து நிழல் கொடுத்தன.மகிழ்ச்சியுடன் கௌதன் அம்மர நிழலில் அமர்ந்தான்.

மிகவும் களைப்புடன் இருந்தவன்..சற்று கண்ணயர்ந்தான்.சூரியன் மறைய, அப்போது பிரம்ம லோகத்தில் இருந்து ஒரு பெரிய கொக்கு அங்கு வந்தடைந்தது.அதி பிரம்மாவிற்கு நண்பன்.காசியபருக்குப் புதல்வன்..கொக்குகளுக்கு அரசன்.அதன் பெயர் நாடீஜங்கன்.அந்த கொக்கின் இருப்பிடம் அந்த ஆலமரம்.அது தேவ கன்னியரிடம் பிறந்ததால் அழகுடன் திகழ்ந்தது.அதன் உடலிலிருந்து எங்கும் ஒளி வீசியது.அந்தக் கொக்கு ராஜ தர்மா என்னும் பெயரையும் பெற்றிருந்தது.

கௌதமன், ஒளி வீசும் அக்கொக்கைக் கண்டு வியப்புற்றான்.பசியுடன் இருந்த அவன் அதைக் கொல்ல நினைத்தான்.ஆனால் அந்தக் கொக்கோ அவனை அன்றிரவு தன் விருந்தினராக இருக்க வேண்டிக் கொண்டது.

அந்தக் கொக்கு அவனிடம் 'ஐயா..நான் காசியபரின் புதல்வன்.என் தாய் தாட்சாயணி.என்று கூரி நல்ல மீன்களைக் கொடுத்து உபசரித்தது.களைப்பைப் போக்க தன் சிறகால் விசிறிற்று.இலைகளால் ஆன படுக்கையையும் அளித்தது.பின் அவன் வருகைக்கான காரணத்தைக் கேட்டு அறிந்தது..பின்..'கவலை வேண்டாம்..திரண்ட செல்வத்துடன் நீ திரும்புவாய்..என்று சொல்லி 'பணம் சேர்க்கும் வழிகள்' எனப் பிரகஸ்பதி சில வழிகளைச் சொல்லியிருக்கிறார்.அவற்றில் நண்பன் மூலம் சேர்த்தல் சிறந்த வழியாகும்.இப்போது உன் நண்பன் நான்.உனக்குத் தேவையான வழியைக் கூறுகிறேன்' என உரைத்தது.

'அழகு மிக்கவனே..இவ்வழியே சென்றால் விருபாட்சன் என்னும் என் நண்பனைக் காண்பாய்.அவன் அசுரர்க்கு அதிபதி.மிகவும் பலம் வாய்ந்தவன்.என் சொல்லைக் கேட்டுப் பெரும் செல்வத்தை உனக்குத் தருவான்' என்றும் உரைத்தது.

கௌதமன் பின், அக் கொக்கு சொன்ன வழிச் சென்றான்.இயற்கைக் காட்சிகளைக் கண்டு களித்தபடியே மனுவ்ரஜம் என்னும் நகரை அடந்தான்.அந்நகரம் கற்களால் ஆன தோரணங்கலைக் கொண்டு கம்பீரமாகக் காட்சியளித்தது.அந்த அந்தணன் தன் நண்பனால் அனுப்பப்பட்டவன் என்பதை உணர்ந்த அசுரன் அவனை விருந்தினனாக உபசரித்தான். (தொடரும்)

Thursday, November 18, 2010

121-நட்புக்குத் துரோகம் செய்யக் கூடாது(1)

'நட்புக்குத் துரோகம் செய்யக்கூடாது'என்பதை தருமருக்கு ஒரு கதை மூலம் விளக்கினார்.

வடக்கே வேதம் அறியா அந்தணன் ஒருவன் இருந்தான்.அவன் யாசகத்திற்காக பொருள் மிக்கவர் நிறைந்திருந்த ஒரு கிராமத்தை அடைந்தான்.அங்கு ஒரு திருடன்.அவனுக்கு அந்தணரிடம் பக்தி அதிகம்.தானம் செய்வதில் விருப்பம் கொண்டவன்.அவனிடம் யாசிக்க அந்தணன் சென்றான்.உண்ண உணவும்,உடுக்க உடையும் ஓராண்டு தங்க இடமும் கொடுத்தான் திருடன்.வாழ்க்கை நடத்த ஒரு நங்கையையும் அளித்தான்.இவற்றைப் பெற்ற அந்த அந்தணன் இன்பமாகக் காலம் கழித்தான்.நன்றியுள்ள அந்த அந்தணன் அந்த நங்கையின் குடும்பத்தையும் காப்பாற்றி வந்தான்.கௌதமன் என்னும் பெயருடைய அவன், வேடர்கள் நிறைந்த அந்த ஓரில் ஓர் ஆண்டு வாழ்ந்தான்.

வேடர்களோடு சேர்ந்த அந்தணன் வேட்டைத் தொழிலில் தேர்ச்சி பெற்றான்.நாள் தோறும் காட்டுப் பறவைகளைக் கொல்வதை வழக்கமாகக் கொண்டான்.இப்படிச் சில நாட்கள் கழிந்தன.

ஒரு நாள் அந்த ஊருக்கு வேறொரு அந்தணர் வந்தார்.மரவுரி தரித்தவர்.வேதம் அறிந்தவர்.ஆசாரம் மிக்கவர்.அவர் ஒரு பிரம்மச்சாரி.கௌதமனின் ஊர்தான் அவர் ஊரும்.கௌதமரின் நண்பரும் கூட.உணவிற்காக மற்றவரிடம் செல்லாமல் ஒரு அந்தணர் வீட்டைத் தேடிக் கடைசியாக கௌதமனின் வீட்டிற்கு வந்தார்.அப்போது கௌதமன் வீடு திரும்பியிருந்தான்.அவனைக் கண்ட அந்தணர்க்கு ஆச்சரியமாய் இருந்தது.அவன் கையில் வில் இருந்தது.தோளில் கொல்லப்பட்ட அன்னப்பறவை இருந்தது.அவரை அப்படிக் கண்ட அந்தணர் வெட்கித் தலை குனிந்தார்.

கௌதமனை நோக்கி 'என்ன காரியம் செய்தாய்? வேடர் தொழிலை எவ்வாறு மேற் கொண்டாய்?உன் பெருமையை மறந்தாயா?நீ கீழான செயலைச் செய்யலாமா?நீ உடனே இங்கிருந்து போய் விடு" என்று கூறினார்.

அந்தணரின் அறிவுரையைக் கேட்ட கௌதமன், துயரத்துடன்,'நான் ஏழை.அந்த வறுமை என்ன இந்த நிலைக்குத் தள்ளிவிட்டது.இப்போது உம்மால் நான் தெளிவு பெற்றேன்.ஓரிரவு மட்டும் இங்குத் தங்கிப் பின் வேறிடம் செல்லலாம் 'என்று கூறினான்.அந்த அந்தணரும் பசியுடன் இருந்த போதும் அவனது வேண்டுகோளை
ஏற்று அங்குத் தங்கினார் .
(தொடரும்)

Wednesday, November 10, 2010

120-முதுமை, இறப்புகளைத் தடுப்பது எப்படி?

முதுமை,இறப்புகளைத் தடுப்பது எப்படி? என தருமர் வினவ பீஷ்மர் சொல்கிறார்

இத்தகைய வினாவை ஜனகர், பஞ்சசிகர் என்னும் முனிவரிடம் ஒரு சமயம் வினவினார்.அதற்கு அம்முனிவர் 'மூப்பையும், மரணத்தையும் யாராலும் தடுக்க இயலாது.எந்த உயிரினமும் இவற்றிலிருந்து தப்ப முடியாது.சென்ற பகல்களும்,இரவுகளும், வாரங்களும்,மாதங்களும், ஆண்டுகளும் திரும்பி வருவதில்லை.நிலையில்லாத காலம் எல்லாவற்றையும் நிலையில்லாததாகச் செய்து விடுகிறது.உயிரினங்கள் வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்படுவது போலக் காலமானது எல்லாவற்றையும் அழித்துவிடுகிறது.

கல்லும், மண்ணும்,மரமும் கூடக் காலப்போக்கில் தம் தன்மையை இழந்து விடுகின்றன.காலமாகிய வெள்ளத்தினின்று யாரும் தப்பிக் கரையேற முடியாது.அழிவைச் சந்தித்தே ஆக வேண்டும்.மனைவியோடும்,மக்களோடும்,உறவினரோடும் உண்டான தொடர்பு ஏதோ வழிப்போக்கரிடம் ஏற்படும் தொடர்பு போன்றது.இத் தொடர்பு பிறவிதோறும் இதே உறவு முறைகளோடு தொடர்வதில்லை.உயிர் எந்த நாட்டிலோ,எந்தக் காட்டிலோ,எந்த நதியிலோ ,எந்த மலையிலோ எத்தகைய பிறவி எடுக்கும் என யாராலும் கூற முடியாது.

கர்மவினைக்கேற்பக் காலம் உயிர்களை பல்வேறு இடங்களில் பல்வேறு பிறப்புகளில் தள்ளிவிடுகிறது.அவற்றின் ஆயுள் முடியும் காலத்தில் மரணம் அவற்றை அழித்துவிடுகிறது.மூப்பும்,மரணமும் செந்நாய்களைப் போல வலிமையுள்ளவற்றையும்,சிறியனவும் பெரியனவுமான எல்லாவகை உயிர்களையும் விழுங்கி விடுகின்றன.எந்த நேரத்திலும் மரணம் என்பது உறுதி.உயிரினங்களின் வாழ்க்கைத் தன்மை இவ்வாறு இருக்கும் போது பிறப்புக்காக மகிழ்ச்சியடைவதும்,இறப்புக்காக வருந்துவதும் ஏன்?

வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்தோர்..வாழ்க்கை இனிது என மகிழவும் மாட்டார்கள்.துன்பமானது என இகழவும் மாட்டார்கள்.உண்மைநிலை இப்படி இருக்க நீ ஏன் மனவருத்தம் கொள்கிறாய்? நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன்?எங்கே செல்லப் போகிறேன்? என்று ஏன் ஏக்கம் கொள்கிறாய்?சுவர்க்கத்தை கண்டவர் யார்?நரகத்தைக் கண்டவர் யார்? அப்படி அவற்றைப் பார்த்தவர்களை நாம் பார்த்ததில்லை.எனவே, வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நல்ல கதி கிடைக்க வேண்டுமாயின் தான தருமங்களை செய்வாயாக' என பஞ்சசிகர் ஜனகரிடம் கூறினார்." என்று பீஷ்மர் தருமரிடம் உரைத்தார்.

Sunday, November 7, 2010

119-அடக்கத்தின் மேன்மை

அடக்கத்தின் மேன்மைப் பற்றி பீஷ்மர் உரைக்கிறார்

ஆகமப் பயிற்சி மிக்க சான்றோர்கள் எல்லாரும் அடக்கம் ஒன்றே மனிதனை நல்ல நிலைக்கு உயர்த்தும் என கூறுகின்றனர்.அடக்கமுள்லவன் தான் செயலின் பயனை அடைய முடியும்.அடக்கம் உடையவனிடத்தில் தான் எல்லா நற்பண்புகளும் நிலையாகத் தங்கியிருக்கின்றன.மன அடக்கமின்றி எப்போதும் அலைபாயும் நெஞ்சத்தவரால் எந்தச் செயலையும் செய்ய முடியாது.எந்த ஒரு நற்பண்பையும் தொடர்ந்து காப்பாற்ற முடியாது.நல்லொழுக்கம் என்பதே அடக்கத்தின் மீது எழுப்பப்படும் மாளிகைதான்.அடக்கம் உடையவனை யாவரும் போற்றுவர்.அடக்கத்தின் மற்றொரு பெயர் தூய்மை.அடக்கம் உள்ளவன் பழி, பாவங்ககுக்கு அஞ்சி நடப்பான்.மன அடக்கம் உடையவனால் எதையும் ஆழ்ந்து சிந்திக்க முடியும்.சிந்தனைக்குப் பிறகு அவன் செய்யும் செயல்களில் பழுது இராது.பயன் இருக்கும்.எதைனும் நினைத்துப் பார்த்துப் பார்த்துச் செய்வதால் செய்யும் செயலில் முழுமை இருக்கும்.வினை முடித்த செம்மல் உள்ளமொடு இரவில் அவனால் நிம்மதியாக உறங்க முடியும்.அவன் உற்சாகத்துடன் கண் விழிப்பான்.
ஒருவன் காக்க வேண்டிய நற்பண்புகளில் அடக்கமே தலை சிறந்தது ஆகும்.அடக்கம் சிதறினால் வேறெந்த நற்பண்புகளையும் ஈட்ட முடியாது.அது மட்டுமன்று..அடக்கம் இல்லாதவனிடத்தில் படிப்படியாக தீய பழக்க வழக்கங்கள் வந்து சேரும்.பொறாமை முதலில் மனதில் குடியேறும்.அந்தப் பொறாமை ஆசையைத் தோற்றுவிக்கும்.அந்த ஆசை நிறைவேறாவிட்டால் மனதில் கோபம் தோன்றும்.கோபம் உள்ளவன் கடும் சீற்றத்திற்கு ஆளாவான்.அவனிடமிருந்து நல்ல சொற்களை எதிர்பார்க்க முடியாது.
மன அடக்கம் இல்லையெனில் நாவடக்கமும் இல்லாமற் போகும்.நாவடக்கம் இல்லையெனில் பகை உருவாகும்.நண்பர்கள் நெருங்க மாட்டார்கள்.காண்பவர் பேய் என ஒதுங்கிச் செல்வர்.மனமும், சொல்லும் அடங்கவில்லை யென்றால் செயலைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.அடக்கமில்லாதவன் செயலில் நன்மையைக் காண முடியாது.
மன அடக்கம் உடையவனிடம் எல்லா நற்பண்புகளும் தேடி வரும்.அவன் எப்போதும் அமைதியாக இருப்பான்.எதிலும் முயற்சி உடையவனாகத் திகழ்வான்.அவனிடம் சினம் இராது.நேர்மை இருக்கும்.அடக்கம் உள்ளவன் பெரும்பாலும் மௌனமாகவே இருப்பான்.சிறிதளவே பேசுவான்.அதுவும் சத்திய வாக்காக இருக்கும்.அடக்கம் உடையவன் ஒரு போதும் பிறரைக் குறை சொல்ல மாட்டான்.பொய் உரைக்க மாட்டான்.பிறரின் புகழை மட்டுமே கூறுவான்.
அடக்கம் உடையவன் தன்னைப் பிறர் பழித்தாலும், பாராட்டி புகழ்ந்தாலும் இரண்டையும் சமமாகவே கருதுவான்.இத்தகைய மனநிலை எளிதில் கிடைப்பதன்று.கிடைத்தால் அவனை யாரும் போற்றி மகிழ்வர்.தேவரும் வந்து பணிவர்.
பெரிய லாபத்தில் மகிழ்ச்சியும்,பெரிய நஷ்டத்தில் வருத்தமும் கொள்ளாமல் இருப்பது அடக்கம் உடையவன் இயல்பாகும்.அடக்கம் உடையவனால் எளிதில் சாத்திர ஞானம் பெறமுடியும்.ஞானவானிடம் பொறுமை,சத்தியம்,கொடைத்தன்மை ஆகியவை வந்து அமையும்.மிகு காமம்,சினம்,தற்புகழ்ச்சி,பொய் ஆகியவை கெட்ட புத்தியுள்ளவரிடம் நிரந்தரமாகக் குடியிருக்கும்.அடக்கம் உடையவன் இவற்றைத் தன்னிடம் நெருங்க விடமாட்டான்.அடக்கம் உடையவன் பூமிக்கு அணிகலன் ஆவான்.அவனிடம் இருந்து எல்லா நற்குணங்களும் ஒளி வீசும்.

Monday, November 1, 2010

118-லட்சுமி அசுரரை விட்டு விலகுதற்குரிய காரணம்..

லட்சுமை அசுரரை விட்டு விலகக் காரணங்களை இந்திரனுக்குக் கூறியதைப் பிஷ்மர் கூறுகிறார்ஒருமுறை இந்திரன் லட்சுமியைச் சந்தித்தான்.முறைப்படி பூஜைகள் செய்து , பின் பணிவுடன் 'நீங்கள் எவ்விடத்தில் வாசம் செய்வீர்கள்?' என வினவினான்.லட்சுமி கூறுகிறாள்..'நான் வெற்றியை விரும்பும் வீரனிடத்தில் எப்போதும் வசிப்பேன்.எப்போதும் பிறர்க்குக் கொடுக்கும் இயல்புள்ள மனிதனிடம் வசிப்பேன்.முன்னர் உண்மையான தருமத்தை அசுரர்கள் மேற்கொண்டதால் அவர்களிடம் சில காலம் தங்கியிருந்தேன்.காலப்போக்கில் அவர்களது போக்கு விபரீதமாக இருந்த காரணத்தால் அவர்களை விட்டு நீங்கி உன்னிடம் வந்தடைந்தேன்"தேவி எக் குணத்தைக் கண்டு அசுரர்களிடமிருந்து விலகினீர்"'அறவோரிடத்தும்,துணிவு மிக்கோரிடத்தும்,மோட்ச மார்க்கத்தில் செல்லும் மேலோரிடத்தும் நான் எப்போதும் விரும்பியிருப்பேன்.ஒரு காலத்தில் அசுரர்கள் தான தருமங்களில் சிறந்திருந்தனர்.பெரியோர்களிடம் தொடர்புள்ளவர்களாகவும்,அடக்கம் மிக்கவர்களாகவும் இருந்தனர்.சத்தியம் தவறாதவர்களாகவும்,முயற்சியுடையவர்களாகவும்,சுற்றத்தைக் காப்பவராகவும் இருந்தனர்.அவர்களிடம் பொறாமை இல்லாதிருந்தது.பிறர் பொருளைக் கவரும் எண்ணம் இல்லாதிருந்தனர்.பிறர் துன்பம் கண்டு மனம் இரங்கி உதவும் எண்ணம் உடையவர்களாக இருந்தனர்.நேர்மை,பக்தி,புலனடக்கம் இவற்றில் சிறந்திருந்தனர்.வேலைக்காரரிடம் அன்பாக இருந்தனர்.அமைச்சர்களின் ஆலோசனையைக் கேட்டுத் தக்கவாறு செயல் பட்டனர்.தகுதியறிந்து தானம் அளித்தனர்.உண்ணாவிரதமும் தியானமும் மேற்கொண்ட தவச்சீலர்களாக விளங்கினர்.இரவில் அதிக நேரம் உறங்குவதில்லை.அதிகாலை எழுந்து விடுவர்.மங்களகரமான பொருளையே முதலில் காண்பார்கள்.பகலில் ஒரு போதும் அவர்கள் உறங்குவதில்லை.ஆதறவற்றவர்களையும் முதியோர்களையும் கவனமாகப் பார்த்துக் கொண்டனர்.பயத்தால் நடுங்கியவர்களுக்கும்,நோயால் துன்புற்றவர்களுக்கும் ஆறுதல் கூறி ஆதரவு அளித்து வந்தனர்.குரு பக்தி மிகுந்தவர்களாகத் திகழ்ந்தனர்.இது போன்ற நற்குணங்கள் அவர்களிடம் இருந்த வரை நான் அவர்களிடம் இருந்தேன்.பிறகு படிப்படியாக அவர்களிடம் இந்த நற்குணங்கள் விலகக் கண்டேன்.தரும மார்க்கத்தனின்று அவர்கள் நழுவினர்.காம வயப்பட்டுத் திரிந்தனர்.தரும உபதேசம் செய்யும் சாதுக்களைக் கேலி செய்தனர்.பெரியோர்களை அலட்சியம் செய்தனர்.பிள்ளைகள் தாய் தந்தையரை மதிப்பதில்லை.அவர்களின் பேச்சை மீறினர்.பகைவருக்கு அடிமையாகி வெட்கமின்றி அவர்களைப் புகழ்ந்து பேசலாயினர்.பொருள் மீது ஆசை அதிகமாயிற்று.பேராசை தருமத்தை தகர்த்தெறிந்தது.கணவன் பேச்சை மனைவி கேட்பதில்லை.மனைவியைக் கணவன் பொருட்படுத்தவே இல்லை.அதுமட்டு மின்றி அவர்களை அடித்துத் துன்புறுத்தினர்.மாதா,பிதா,குரு, சான்றோர் ஆகிய மேலோர்கள் அசுரரின் நிந்தனைக்கு ஆளாயினர்.தான தருமங்களைச் செய்யத் தவறினர்.பசித்தவர்க்கு ஒரு பிடி சோறு வழங்கவும் அவர்கள் தயாராக இல்லை.சிறுவர்களையும், முதியோரையும் காப்பாற்றும் எண்ணம் இல்லாமல் போயிற்று.பசுக்களைக் காப்பாற்றத் தவறினர்.கன்றுகளுக்குத் தேவையான பால் இல்லாமல் எல்லாவற்றையும் அவர்களே கறந்து குடித்தனர்.சோம்பல் மிக்கவராயினர்.சூரியன் உதயமான பின்னரும் அவர்கள் கண் விழிப்பதில்லை.இரவு,பகல் எப்போதும் ஒவ்வொரு வீட்டிலும் கலவரமே காணப்பட்டது.தூய்மை என்பது எங்கும் இல்லை. இந்நிலையில் அந்த அசுரர்களை விட்டு நான் விலகி உன்னிடம் வந்து சேர்ந்தேன்'லட்சுமியின் இப்பேச்சைக் கொண்டு அந்த மாமகளின் கருணை வேண்டுவோர் எப்படி நடநுக் கொள்ள வேண்டும்..எப்படி நடந்துக் கொள்ளக் கூடாது என்பதை உணரலாம் என்றார் பீஷ்மர்.