Wednesday, May 27, 2009

42-ஜயத்ரதனின் தவம்

காம்யக வனத்தில் தங்கியிருந்த பாண்டவர்கள் ஒருநாள் வேட்டைக்கு சென்றனர்.திரௌபதி சில பணியாளர்களுடன் தனித்து இருந்தாள்.அப்போது சிந்து நாட்டு மன்னன் ஜயத்ரதன் சால்வ தேசத்தை நோக்கி அக்காட்டு வழி சென்றான்.அவனுடன் கோடிகாச்யன் முதலிய அரசர்களும் சென்றனர்.

ஆசிரமத்தின் வெளியே நின்றுக்கொண்டிருந்த திரௌபதியை ஜயத்ரதன் கண்டான்.கண்டதும் காதல் கொண்டான்.அதை அவளிடம் வெளிப்படுத்தினான்.

திரௌபதி ..அது கொடிய செயல் என்றும்..தனது வரலாற்றையும் கூறினாள்.'தருமர் வடக்கேயும்,பீமன் தெற்கேயும்,அர்ச்சுனன் மேற்கேயும்,நகுல,சகாதேவர்கள் கிழக்கேயும் வேட்டைக்குச் சென்றுள்ளனர்.அவர்கள் வருவதற்குள் இந்த இடத்தை விட்டு சென்றுவிடு.இல்லையேல் அவர்களால் உனக்கு ஆபத்து ஏற்படும்.' என்றாள்.

அந்த முரடன் எதையும் கேட்பதாய் இல்லை..காமவயப்பட்ட அவன் அவளை தூக்கிச் செல்ல முயன்றான்.அவளது மேலாடையைப்பற்றி இழுத்து தேர் மீது ஏற்ற நினைத்தான்.

அவன் செயலை, உடன் இருந்தோர் தடுத்தும் கேட்கவில்லை.

வேட்டைக்குச் சென்ற ஐவரும் ஓரிடத்தில் கூடினர்.அப்போது..'ஆச்ரமத்தில் ஏதோ ஆபத்து நேர்ந்ததற்கான அபசகுனம் தோன்றுகிறது' என்றார் தருமர்.

விரைவில் ஐவரும் ஆச்ரமத்திற்கு விரைந்தனர்.ஜயத்ரதன் திரௌபதியை அபகரித்து சென்றுவிட்டதை அறிந்தனர்.தேர் சென்ற சுவடை வைத்து..சென்று..ஜயத்ரதனுடன் போரிட்டனர்.அவனுடன் வந்த அரசர்கள் தோற்று ஓடினர்.ஓட முயன்ற ஜயத்ரதனை பீமன் கடுமையாக தாக்கினான்.அவனை கயிற்றில் கட்டித் தேரில் ஏற்றி தருமரிடம் அழைத்து வந்தான் பீமன்.

'தம்பி..இவனை விட்டு விடு.இவன் நமக்கு மைத்துனன்..துரியோதனின் தங்கையான துச்சலையின் கணவன்' என்றார்.

நாணித்தலைக் குனிந்து திரும்பிய ஜயத்ரதன்..கங்கைக் கரைக்குச் சென்று கடும் தவம் இருந்தான்.

சிவன் காட்சியளித்து..'என்ன வரம் வேண்டும்?' என்றார்.

பாண்டவர்களைக் கொல்லத்தக்க வலிமையை எனக்கு அருள வேண்டும்..என வேண்டினான்.

'கண்ணனின் துணையிருப்பதால்..உன்னால் பாண்டவர்களை வெல்ல முடியாது.ஆனாலும் அவர்களை ஒரு நாள் எதிர்த்து நிற்குமாற்றலை உனக்கு அளிக்கிறேன்.ஆனால்..அதனால் அவர்களை அழித்தொழிக்கமுடியும் என எண்ணாதே..' என்று கூறி மறைந்தார்.

அதுவே போதும் என்ற ஜயத்ரதன்..நகரம் போய்ச் சேர்ந்தான்.இந்த ஜயத்ரதன் தான் 13ம் நாள் போரில் மாவீரன் அபிமன்யுவைக் கொன்றவன்.

Tuesday, May 19, 2009

41-அட்சயபாத்திரம்

பாண்டவர்களது வனவாசம் முடிவுக்கு வரும் காலம் நெருங்குவதை உணர்ந்த துரியோதனன்..அவர்களை எப்படி அழிப்பது என்ற யோசனையில் ஆழ்ந்தான்.அப்போது துர்வாசர் பத்தாயிரம் சீடர்களுடன் துரியோதனன் இருக்கும் இடம் வந்தார்.

துர்வாசரின் மந்திர சக்தி அனைவரும் அறிந்ததே.அவர் அருளிய மந்திர சக்திதான் கன்னிப்பருவத்தில் குந்தி கர்ணனை பெற்று எடுக்க காரணமாய் அமைந்தது.

அவருக்கு அருளும் சக்தியும் உண்டு.பிறரை மருளச் செய்யும் சக்தியும் உண்டு.

தன் சூழ்ச்சிக்கு..துர்வாசரை பயன்படுத்திக் கொள்ள நினைத்தான் துரியோதனன்.அதனால் அவரை நன்கு உபசரித்து வணங்கினான்,அவனது உபசரிப்பைக் கண்டு மகிழ்ந்தவர்..'உனக்கு வேண்டும் வரம் கேள்' என்றார்.துர்வாசர் சினம் கொண்டால் அதைத் தடுத்து நிறுத்தவும் யாராலும் முடியாது.

தவமுனிவரே! நீங்கள் பாண்டவர் இருக்குமிடம் செல்ல வேண்டும்.அங்கு அவர்கள் அனைவரும் உணவு உண்டபின் செல்ல வேண்டும்'' என வேண்டினான்.(எல்லோரும் உணவு உண்டதும் சென்றால்..அட்சயபாத்திரத்தில் உணவு பெருகாது.துர்வாசருக்கு உணவு அளிக்கமுடியாது.அதனால் அவர் சினம் கொண்டு அவர்களுக்கு சாபமிட்டு அழித்து விடுவார் என எண்ணினான்.)

துர்வாசரும்...பாண்டவர் இருக்குமிடம், தன் சீடர்களுடன் சென்றார்.அவர்களை பாண்டவர்கள் முறைப்படி வரவேற்றனர்.நீராடிவிட்டு வருவதாகக் கூறிவிட்டு,சீடர்களுடன் தடாகம் சென்றார் அவர்.

'அட்சயபாத்திரத்தில்..இனி உணவு பெருகாதே' என திரௌபதி கலக்கமுற்றாள்.கண்ணனை பிரார்த்தித்தாள்.கண்ணனும் அவள் முன் தோன்றி..தன் பசியை போக்கக் கோரினார்.திகைத்தாள் திரௌபதி.

கண்ணன் அந்த அட்சயபாத்திரத்தை கொண்டுவருமாறு பணித்தார்.

அதில் ஒன்றும் இல்லை என்றவாறு..அப்பாத்திரத்தை கொணர்ந்தாள் பாஞ்சாலி.ஆனால் அதன் மூலையில்..ஓரத்தில்..ஒரு சோற்று பருக்கை இருந்தது.அதை எடுத்து கண்ணன் வாயில் போட..பாரதம் முழுதும்..பசி அடங்கியது.

நீராட சென்ற முனிவருக்கும்..பரிவாரங்களுக்கும் ..அவர்கள் இதுவரை சுவைத்தறியா..உணவு உண்ட திருப்தி ஏற்பட்டது.

அப்போதுதான்..முனிவரும்..காலமில்லா காலத்தில்..தருமரின் ஆசிரம் சென்று, அவர்களை சோதனைக்கு உட்படுத்தியது தவறு என உணர்ந்தார்.

இப்படியாக..துரியோதனனின் இம் முயற்சி தோல்வி அடைந்தது.

Sunday, May 17, 2009

40-கர்ணன் சபதம்

தருமர் முன் செய்த ராஜசூயயாகம் போல ஒரு யாகம் செய்ய விரும்பிய துரியோதனன் அதை கர்ணனிடம் தெரிவித்தான்.

ராஜசூயயாகம் செய்ய ஒரு நிபந்தனை உண்டு.பல நாட்டு மன்னர்களும் அந்த யாகம் செய்பவரது தலைமையை ஏற்க வேண்டும்.அதன்படி பல நாடுகளுக்குச் சென்று..அம்மன்னர்களை வென்று..உன் தலைமையை ஏற்கச் சொல்கிறேன் என துரியோதனனிடம் கூறிவிட்டு..கர்ணன் புறப்பட்டான்.

அங்கம்,வங்கம்,கலிங்கம் ஆகிய நாடுகளை வென்றான்.துருபதன்,சுகதத்தன் ஆகியோரை அடக்கினான்.நான்கு திசைகளிலும் மன்னர்களை வென்றான்.வெற்றி வீரனாக திரும்பிய கர்ணனை துரியோதனன் ஆரத்தழுவி வரவேற்றான்.

ஆனால் புரோகிதர்கள்..ராஜசூயயாகம் செய்ய ஒப்புக்கொள்ளவில்லை.காரணம் முன்னர் அந்த யாகத்தைச் செய்த தருமர் இன்னமும் இருக்கிறார்.அந்த யாகம் செய்த ஒருவர் உயிருடன் இருக்கையில் வேறு ஒருவர் செய்வது மரபல்ல. மேலும் தந்தை திருதிராட்டினன் முன் மகன் அதைச் செய்யக்கூடாது என்றும் கூறினர்.

ஆனால்..அதற்கு பதிலாக வைஷ்ணவ வேள்வி செய்யலாம்..என்றனர்.பொன் கலப்பையால் நிலத்தை உழுது இயற்றும் வேள்வி அது.இவ் வேள்வியில் கலந்துக் கொள்ள பல மன்னர்களுக்கு அழைப்பு அனுப்பினார்கள்.துரியோதனன் பாண்டவர்களிடமும் தூதுவனை அனுப்பினான்.

பதின்மூன்று ஆண்டுகள் முடிந்த பின்னரே அஸ்தினாபுரம் திரும்புவோம் என தூதுவனிடம் தருமர் உரைத்தார்.

ஆனால்..பீமனோ..'எங்கள் வனவாசம் முடிந்ததும்..நாங்கள் செய்யும் வேள்வியில் துரியோதனன் முதலானோர் ஆஹூதி (வேள்விப்பொருள்) களாகப் பயன்படுவார்கள்' என்றான்.

விதுரர் முதலியோர் கலந்துக் கொள்ள வைஷ்ணவ வேள்வியை சிறப்பாகச் செய்தான் துரியோதனன்.மேலும் அதற்கு கர்ணனே காரணம் என துரியோதனன் எண்ணினான்.

துரியோதனன் கர்ணனை நோக்கி 'கர்ணா..நீ எனக்கு மற்றொரு உதவியும் செய்ய வேண்டும்..பாண்டவர்கள் போரில் மடிந்ததும்..எனக்காக நீ ராஜசூயயாகத்தை நிறைவேற்ற வேண்டும்.அப்போது என் புகழ் மேலும் உயரும்' என்றான்.

கர்ணன் அப்போது ஒரு சபதம் செய்தான்..

'மன்னா..அர்ச்சுனனை கொல்லும் வரை..நான் மது, மாமிசங்களைத் தீண்டமாட்டேன்..இல்லை என்பார்க்கு இல்லை எனக் கூறமாட்டேன்'

கர்ணனின் இந்த சபதம்..தருமர் காதுக்கும் எட்டியது.கவச..குண்டலங்களுடன் பிறந்த கர்ணனை வெல்வது அரிதாயிற்றே..என அவர் கவலையுற்றார்.அப்போது வியாசர் தோன்றி..தான தர்மப் பலன் பற்றி தருமரிடம் விரிவாக எடுத்துரைத்து மறைந்தார்.

Sunday, May 10, 2009

39-கௌரவர் மானபங்கம்

அந்தணன் கூற்றைக்கேட்ட திருதிராட்டிரன்...பாண்டவர்கள் மேன்மேலும் சிறப்புறுவது நல்லதல்ல..என எண்ணினான்.வெளிப்பார்வைக்கு பாண்டவர் நன்மையை விரும்புவது போல பேசினாலும்..உள்ளத்தால் வெறுத்தான்.

காட்டில் பாண்டவர் நிலை அறிந்த துரியோதனன் கவலையுற்றான்.பதின்மூன்று ஆண்டுகளில் செயலிழந்து போவார்கள் என எண்ணியது தவறு என எண்ணினான்.

சகுனி..துரியோதனனிடம்..'நாமும் காட்டிற்குச் சென்று பாண்டவர் நிலையறிந்து..நம் செல்வச் சிறப்பையும் காட்டி வருவோம்' என்றான்.

திருதிராட்டினனிடம்..'பசுக்குலங்கள் காட்டில் கொடிய மிருகங்களால் அவதிப்படுகின்றன.அவற்றைக் காக்க கானகம் போகிறோம்'என்றான் துரியோதனன்.

பின் துரியோதனன் முதலானோர்..மனைவி மக்களுடன்..உயர்தர ஆடை..அணிகலன்கள்..அணிந்து பாண்டவர் இருக்குமிடம் அருகே கூடாரம் அமைத்து தங்கினர்.

அருகில் இருந்த தடாகத்தில்..கூட்டம் கூட்டமாக கந்தர்வர்கள் வந்து நீராடுவது..கௌரவர்களுக்கு இடையூறாக இருக்க..கந்தர்வர்களை உடனடியாக விலகுமாறு..துரியோதனன் கட்டளையிட்டான்.

இதனால்..கந்தர்வர்களுக்கும்...துரியோதனன் கூட்டத்திற்கும் இடையே போர் மூண்டது.சித்திர சேனன் தலைமையில்..கந்தர்வர்கள் போரிட..சித்திரசேனனும் மாயப்போரில் ஈடுபட..கர்ணனின் தேர் உடைந்தது.அவன் போர்க்களத்தை விட்டு ஓடினான்.துரியோதனின் தம்பியரும் புறமுதுகிட்டனர்.எஞ்சிய..துரியோதனன்..மற்றும் சிலரை..கைகளைக் கட்டி இழுத்துச் சென்றனர் கந்தர்வர்கள்.

கௌரவர்களின் எஞ்சிய வீரர்கள் சிலர்..தர்மரிடம் வந்து..'துரியோதனனைக் காப்பாற்றுங்கள்' என முறையிட்டனர்.ஆனால் பீமனோ 'அவர்கள் தீவினையின் பலனை அனுபவிக்கிறார்கள்..அனுபவிக்கட்டும்' என்றான்.

தம்பி..ஆபத்தில்..யார் இருந்தாலும் உதவ வேண்டுவது உலக இயல்பு..மேலும் இப்போது நம் சகோதரர்கள் ஆபத்தில் சிக்கியுள்ளனர். அவர்களை உடனே காப்பாற்ற வேண்டும்..என்றார் தருமர்.

இப்படி..இவர்கள் பேசிக்கொண்டிருந்த போது...துரியோதனனின்..அபயக் குரல் கேட்டது..'சகோதரர்களே..எங்களையும்..எங்கள் மனைவியரையும்..கந்தர்வர்கள் கட்டி இழுத்துச் செல்கிறார்கள்..உடனேவந்து காப்பாற்றுங்கள்'

உடன்...பாண்டவர்கள்..கந்தர்வர்களை தடுத்தி நிறுத்தி..பலரை அழித்தனர்.அப்போது...அர்ச்சுனனுக்கு...சித்திரசேனன்..தனக்கு..இந்திர லோகத்தில்..பல நுணுக்கங்களை போதித்தவன் என்ற உணர்வு வர..அவன் பாதம் பணிந்து...நடந்த விவரங்களை அறிந்தான்.

'அர்ச்சுனா...இந்த துரியோதனன்..உங்களை அவமானப் படுத்த வந்தான்.அதை அறிந்த தேவர்கோமான்...அவன் கூட்டத்தை கட்டி இழுத்துவர என்னைப் பணித்தான்' என்றான் சித்திரசேனன்.

பின்னர் தருமர் கேட்டுக்கொண்டதற்கிணங்க..துரியோதனன் கூட்டம் விடுவிக்கப்பட்டது.

போரில்..இறந்த கந்தர்வர்களை..இந்திரன் மீண்டும் உயிர் பிழைக்க வைத்தான்.நாணித் தலைக்குனிந்திருந்த துரியோதனனை நோக்கி தருமர் 'நகரம் சென்று நல்லாட்சி செய்வாயாக' என்றார்.

புறங்கொடாப் போர் வீரன் என்ற பெருமித வாழ்வு பறிப்போக..கர்ணனிடம் துரியோதனன் புலம்பினான்.பின்..துச்சாதனனை நோக்கி'தம்பி..நீ ஆட்சியை மேற்கொள்..நான் உயிர் துறக்கப்போகிறேன்' என்றான்.

பதிலுக்கு, கர்ணன்'இதுவா க்ஷத்திரியர் இயல்பு..நாம் இப்போது சந்தித்தது..இறுதிப்போர் அல்ல' என்றான்.

கர்ணன்..மேலும் துரியோதனனுக்கு..உற்சாகம் ஊட்டினான்.போரில்..அர்ச்சுனனை தான் கொல்வேன் என்றான்.

அசுரர்களும்...போரில்..தேவர்கள் பாண்டவர்களுக்கு உதவினால்..அசுரர்கள் துரியோதனனுக்கு உதவுவதாகக் கூறினர்.

இதனால்...துரியோதனன் மனம் மாறி..அஸ்தினாபுரம் வந்தான்.

காட்டில்..நடந்தவற்றை அறிந்த பீஷ்மர்..துரியோதனனிடம்..'இனியும் கர்ணனைப் போன்றோரை நம்பாதே.தான் தப்பித்தால் போதும் என கந்தர்வப் போரில் உன்னை விட்டு ஒடியவன் அவன்..அர்ச்சுனனே உன்னை வந்து காத்தான்' என்றார்.

ஆனால்...துரியோதனன்..அவர் பேச்சை புறக்கணித்தான்.