Thursday, July 28, 2011

157-தரும வியாதர் உரைத்த நீதிகள் -2

"என் மூதாதையர் காலத்திலிருந்தே இத் தொழிலை என் குடும்பம் செய்து வருகிறது.என் பெற்றோரைக் காப்பது ஒன்றே என் கடமையாய் செய்து வருகிறேன்.இத் தொழிலைப் பற்றி நான் கவலைப்படவில்லை.என் வாழ்வில் சில நெறி முறைகளை பின் பற்றி வருகிறேன்.சத்தியம் தவறுவதில்லை.உண்மையே பேசுகிறேன்.வினைப் பயனை நம்புகிறேன்.யாரையும் இழிவாகக் கருதுவதில்லை.இன்ப துன்பங்களை சமமாய் எண்ணுகிறேன்.நாட்டில் நல்லாட்சி நடைகிறது.ஜனக மாமன்னன் நீதி தவறாது ஆட்சி செய்கிறான்.
நானாக எதையும் கொல்வதில்லை.பிறரால் கொல்லப்பட்ட மாட்டிறைச்சிகளை விற்கிறேன்.ஆனால் நான் புலால் உண்பதில்லை.நோன்பு நோற்கிறேன்.பிறரது புகழ்ச்சியையும்,இகழ்ச்சியையும் சமமாகக் கருதுகிறேன்.ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த அளவிற்கு தானம் செய்ய வேண்டும்.காமத்தாலோ, பயத்தாலோ தருமத்தை விட்டுவிடக்கூடாது.அரிய காரியங்களைச் செய்ய தளர்ச்சியடையக் கூடாது.நல்ல செயல்கலையே எப்போதும் செய்ய வேண்டும்.ஒரு பாவி தன் பாவச்செயலால் அழிந்துப் போகிறான்.தூயோரைப் பழிப்பதும்,தருமத்தில்பற்றின்மையும் அழிவைத் தருகின்றன.நல்லோர்கள் அனைவரிடமும் பணிவுடன் இருப்பர்.அடக்கம் இல்லாதவர்கள் தற்புகழ்ச்சியில் ஈடுபட்டுத் தாழ்வடைகின்றனர்.தவறுசெய்பவர் அத் தவறை உணர்ந்து வருந்துவாராயின் அவர்களைப் பாவ கர்மம் பற்ருவதில்லை.ஒருவன் தவறான செயல்களைச் செய்து விட்டு 'நான் அப்படிச் செய்யவில்லை' என சாதித்தாலும் அவன் பாவ கர்மத்தினின்றும் தப்ப முடியாது.
எவன் தன் குற்றம் உணராது பிறர் குற்றம் காண்கின்றானோ அவனுக்கு நற்கதி கிடைக்காது.அவன் மறுமையிலும் துன்புறுவான்.நற்செயல்கள் செய்வதால் ஒருவன் எல்லாப் பாவங்களையும் தொலைத்துவிடுகின்றான்., பேராசையுள்ளவர்கள் பாவப்படுகுழியில் வீழ்வர்.' என்றார் தரும வியாதர்.
கௌசிகன் தக்கோரின் மேலான ஒழுக்கங்களைக் கூறுமாறு கேட்க,வியாதர் பதில் உரைத்தார்..

'மேலான ஒழுக்கங்களில் தானம்,தவம்,யாகம்,ஆகமம்,சத்தியம் ஆகிய ஐந்தும் குறிப்பிடத்தக்கன.ஆகமத்தின் அடிப்படை சத்தியம்.சத்தியத்தின் அடிப்படை புலனடக்கம்.புலனடக்கத்தின் அடிப்படை போகங்களைத் துறத்தல்.இவை எப்போதும் மேலான ஆசாரங்களில் நிலை பெற்றுள்ளன.எப்போதும் உண்மையையே உரைத்து, தருமத்தைச் செய்து, நிதானத்துடன் ஆகமக் கருத்துகளைக் கவனமாக கற்று உணர்ந்து அறம்,பொருள்,இன்பங்களை அடைபவர்கள் மேலான ஒழுக்க சீலர் ஆவர்.
ஐம்பொறிகளையும் அடக்கி வென்றவர்கள் மோட்சத்தை அடைவர்.அல்லாதார் துன்பக் கடலில் மூழ்குவர்.கொல்லாமை,வாய்மை, எல்லா உயிரிடத்தும் அன்புடன் இருத்தல் ஆகிய மூன்றும் உயர்ந்த தருமம் ஆகும்.இம்மூன்றில் கொல்லாமை மிக உயர்ந்த தருமம்.அது வாய்மையில் நிலை பெறுகிறது.சாதுக்களின் தருமம் என்பது மேலான ஒழுக்கமாகும்.நியாயத்துடன் பொருந்தியது தருமம் என்றும்,அநியாயத்துடன் கூடியது பாவம் என்றும் சொல்லப்படுகிறது.யாரிடம் கோபம்,செருக்கு,வஞ்சனை முதலிய கெட்ட பண்புகள் இல்லையோ அவர்கள் ஒழுக்கம் உள்ளவராய் கருதப்படுவர்.
நல்வினை, தீவினைகளின் பயனான இன்ப, துன்பங்களை அனுபவிப்பதன் மூலம் வினைகள் கெடுகின்றன என எண்ணுபவர்கள் மேலோராவர்.தானம் செய்வதில் நாட்டமுடையவர்கள் இன்பத்தை அடைவார்கள்.மேலான ஒழுக்கம் உடையவர் தமது குடும்பங்களின் சௌகரியங்களைக் குறைத்துக் கொண்டு சாதுக்களுக்கு உதவி செய்வர்.அறவோர் ஞானமாகிய உயர்நிலையில் நின்று புத்தி மயங்கிக் கிடக்கும் மக்களை நல்வழிப்படுத்த நினைப்பர்' என்று கௌசிகனுக்கு மேலோரின் பண்புகள் பற்றிக் கூறினார் தருமவியாதர்.
அவர் மேலும் கூறியது அடுத்த பதிவில்.

Saturday, July 23, 2011

156-தருமவியாதர் உரைத்த நீதிகள்
'
கௌசிகன் என்பவன் சிறந்த அந்தணன்.வேதத்தில் வல்லவன்.எப்போதும் தவத்தை மேற்கொண்டிருப்பவன்.ஒருநாள் வேத மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு மரத்தடியில் அமர்ந்திருந்தான்.அப்போது மரத்தின் மீது அமர்ந்திருந்த ஒரு கொக்கு அவன் மீது எச்சமிட்டது.அதனால் கோபம் கொண்ட அந்தணன் அந்தக் கொக்கை தீ உமிழும் கண்களால் நோக்க அந்த வெம்மையைத் தாங்காது அக்கொக்கு எரிந்து தரையில் விழுந்தது.அந்தணன் பறவையின் முடிவு கண்டு வருந்தினான்.
பிறகு பிட்சைக்காகக் கிராமத்தை அடைந்தான்
.ஒரு வீட்டின் வாயிலில் நின்றவாறு 'தாயே..பிட்சை தருக' என்றான்.அவ்வீட்டுப் பெண்மணி சிறிது நேரம் பொறுத்திருக்கக் கூறினாள்.பசியுடன் வீட்டிற்கு வந்த கணவனைக் கவனிப்பதில் ஈடு பட்டாள்.கணவனையே தெய்வமாகக் கொண்ட அந்தப் பெண் சொல்லாலும்,செயலாலும் எப்போதும் கணவருக்கு மகிழ்ச்சியையே தருவாள்.
பிட்சைக் கேட்டு வந்த அந்தணனை நீண்ட நேரம் காக்க வைத்தற்கு வருந்தினாள்
.'பெண்ணே..என்னை வேறிடத்திற்குச் செல்லமுடியாதவாறு செய்து விட்டாயே' என சீறினான்.
கௌசிகனின் சினம் கண்டு வருந்தியவள்
, 'கணவனுக்கு பணிவிடை செய்துவர நேரமாகிவிட்டது.மன்னிக்கவும்.' என்றாள்.
அந்தணனும் கோபத்துடன்
'உனக்கு உன் கணவனைத் தவிர வேறு யாரும் உயர்வில்லை போலும்.தேவாதி தேவனே எங்களைப் போற்றுகிறான்.நீ எம்மாத்திரம்.வேதவித்தாகத் திகழும் என் பெருமையை நீ அறியாய்..அந்தணர்கள் சரியாக மதிக்கப் படாவிடின் எரித்து விடுவர்' என்றான்.
உடன் அவள் கூறினாள்
'மாமுனியே! சினத்தை அடக்குவாயாக.என்னை சுட்டு எரிக்க நான் கொக்கு அல்ல.காலம் தாழ்த்தி வந்தமைக்கு மன்னியுங்கள்.நான் உத்தமர்களை என்றும் பழித்ததில்லை.தவவலிமை மிக்க பலரை நான் அறிவேன்.வாதாபியை அடக்கிய அகத்தியர் முதலியவர்களை நான் போற்றுகின்றேன்.உமது சினத்தை நீர் அடக்குவீராக.என்னைப் பொறுத்தவரை கணவரை விட உயரானவர் யாருமில்லை.அதனால் ஏற்படும் பயனும் நான் அறிவேன்.நீர் சினம் கொண்டு கொக்கை எரித்ததை எனது பதிவிரதத் தன்மையால் அறிந்தேன்.நீர் சினத்தால் அக்கொக்கை எரித்தது போல என்னை ஒன்றும் செய்யமுடியாது' என்றாள்.
மேலும் கூறத்தொடங்கினாள் அந்தப் பத்தினி
,'அந்தணர் என்பவர் யார் தெரியுமா?கோபத்தை விடுபவர் அந்தணர்.பிறரால் துன்புறுத்தப் பட்டாலும் அப்பிறர்க்குத் துன்பம் செய்யாதவரே அந்தணர்.யார் ஆகமப் பயிற்சியுள்ளவரோ அவரே அந்தணர்.யார் இன்ப துன்பங்களைச் சமமாகக் கருதுகின்றனரோ அவரே அந்தணர்.'யான்' எனும் செறுக்கு அற்றவர் யாரோ அவரே அந்தணர்..தருமத்தை அறிதல் எளிதன்று.நீர் தருமத்தை நங்கு அறிதல் வேண்டும்.மிதிலையில் தரும வியாதர் என்றொருவர் இருக்கிறார்.அவரிடம் சென்று தருமம் பற்றி உணர்வீர்களாக..நன்மை தீமை உணர்ந்த யாரும் பெண்களைப் பழிக்கவோ..துன்புறுத்தவோ மாட்டார்கள்' என்றாள்.
இதைக் கேட்ட கௌசிகன் வியப்புற்றான்
.'என்னிடம் இருந்த கோபம் விலகியது.மிதிலை சென்று தரும வியாதரிடம் தருமங்கள் பற்றி அறிய விரும்புகிறேன்' என்று சொல்லிவிட்டு கௌசிகன் மிதிலைக்குப் புறப்பட்டான்.
வீட்டிலிருக்கும் போதே கொக்கு எரிக்கப்பட்டதை உணர்ந்து பேசியவளின் பேச்சுகளை எண்ணி வியந்தான்
. தரும வியாதரிடம் மேலும் தருமங்களை அறிய மிதிலையை நோக்கி விரைந்தான்.அறத்தின் பொலிவுடன் இருந்தது அந்நாடு.உணவு தானியங்கள் நிறைந்திருந்தன.மக்கள் நிம்மதியுடன் இருந்தனர்.கௌசிகன் தரும வியாதர் இருக்குமிடம் சென்றான்.அப்போது விலங்குகளைக் கொல்லும் இடத்தில், மாட்டிறைச்சியையும்,மானிறைச்சியையும் விற்பனை செய்துக் கொண்டிருந்தார்,தரும வியாதர்.ஜனநெருக்கடியாய் இருந்ததால் கௌசிகன் தனியான ஓரிடத்தில் அமர்ந்தான்.தருமவியாதர், அவனிடம் சென்று,'உம்மை ஒரு பதிவிரதை மிதிலைக்குப் போகுமாறு பணித்ததை நான் அறிவேன்..உனக்கு வேண்டியது யாது? என்றார்.
கௌசிகனுக்கு
இது இரண்டாவது வியப்பு,'இவ்விடத்தில் நீர் இருப்பது தவறு.என் வீட்டிற்குப் போகலாம்'என தருமவியாதர் அழைக்க கௌசிகன் மகிழ்ந்தான்.
தருமவியாதர்
தன் வீட்டில் கௌசிகனுக்கு தக்க உபசாரம் செய்தார்.கௌசிகனும் மகிழ்ந்து'தருமவியாதரே..நீர் செய்யும் தொழில் உமக்கு ஏற்றதன்று' என்றான். .
Monday, July 11, 2011

155-அகஸ்தியர்-இல்வலன்-வாதாபி பற்றிய கதை

பாண்டவர்கள் தீர்த்த யாத்திரையின் போது மணிமதி என்னும் நகரத்தில் தங்கி இருந்தனர்.அப்போது யுதிஷ்டிரர் லோமசரை நோக்கி, 'இல்வலனையும், வாதாபியையும் அகத்தியர் ஏன் அழித்தார்?" என வினவ முனிவர் சொல்லலானார்.

இல்வலன் என்னும் அசுரன் மணிமதி நாட்டை ஆண்டு வந்தான்.அவன் தம்பியின் பெயர் வாதாபி.இல்வலனுக்கு மகப்பேறு இல்லை.அவன் தவ வலிமை மிக்க அந்தணன் ஒருவனை அடைந்து, 'இந்திரனுக்கு இணையான பிள்ளையை நான் பெற வேண்டும்.அதற்கான ஆசி அருள வேண்டும்' என்றான்.அவனது செருக்கை உணர்ந்த அந்தணர், 'எனது ஆசி உனக்கு இல்லை' என்றார்.

கடும் சினம் கொண்ட இல்வலன், அன்று முதல் அந்தணர்களை கொல்ல முடிவெடுத்தான்.மாயையில் வல்ல அவன் தன் தம்பி வாதாபியை ஆடாக உருமாறச் செய்தான்.இல்வலன் அந்த ஆட்டை சமைத்து அந்தணர்களுக்கு அளித்து அவர்களை கொல்ல நினைத்தான்.இல்வலனிடம் அபூர்வ ஆற்றல் ஒன்று இருந்தது.ஒருவன் இறந்து விட்டாலும் அவனைப் பெயரிட்டு கூப்பிட்ட அளவில் உயிர் பெற்று வந்துவிடுவான்.

அந்தணர்கள் இல்வலன் படைக்கும் ஆட்டுக்கறியை உண்ட பின் அவன் 'வாதாபி' என்று குரல் கொடுத்துத் தம்பியை அழைப்பான்.உடன் வாதாபி அந்தணர் வயிற்றைக் கிழித்துக் கொண்டு உடன் வெளியே வந்துவிடுவான்.இப்படி பல அந்தணர்களைக் கொன்றான்.

அச்சமயத்தில் அகத்திய முனிவர் தம் மூதாதையர் பள்ளத்தாக்கில் தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதற்கான காரணத்தைக் கேட்டார்.

'நாங்கள் உன் முன்னோர்கள்.உனக்கு ஒரு புதல்வன் பிறக்க வேண்டும் என்று வேண்டி, இங்கு இப்படித் தொங்குகிறோம்! உனக்கு ஒரு மகன் பிறந்தால் எங்களுக்கு நற்கதி கிடைக்கும்' என்றனர்.அகத்தியரும் தனக்குப் பொருத்தமான பெண் எங்கிருக்கிறாள் என்பதை தன் எதிர்கால உறவால் கண்டறிந்தார்,

விதர்ப்பநாட்டு மன்னனுக்கு ஒரு பெண் பிறக்குமாறு செய்தார்.லோபமுத்திரைஎனப் பெயர் பெற்ற அவளுக்குரிய கணவனை ஆராய்ந்தான் மன்னன்.அகத்தியருக்கி அஞ்சி யாரும் அவளை மணமுடிக்க வரவில்லை.

அகத்தியர் அப்பெண்ணை தனக்குத் தருமாறு மன்னனைக் கேட்டார்.பெரும் தவசிக்குப் பெண் கொடுக்க விருப்பமில்லா மன்னன் தன் மனைவியிடம் இது குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்தான்.அப்போது அங்கு வந்த லோபமுத்திரை, 'தந்தையே..நீங்கள் கவலைப்பட வேண்டாம்.என்னை அம் முனிவருக்கே மணமுடியுங்கள்' என்றாள்.

அகத்தியருக்கும்,லோபமுத்திரைக்கும் திருமணம் முடிந்தது.முனிவர் தன் மனைவியிடம்,'இனி நீ ஆஸ்ரம விதிப்படி நடந்து கொள்ளவேண்டும்.விலை உயர்ந்த ஆடை,அணிகளை விலக்கி மரவுரிகளைத் தரித்துக் கொள்ள வேண்டும்' என்றார்.அவ்வாறே லோபமுத்திரையும் செய்து வந்தாள்.அவளது தூய தன்மையையும்,அடக்கத்தையும் கண்டு அகத்தியர் மகிழ்ந்தார்.ஒருநாள் லோபமுத்திரையின் அழகுக் கண்டு, அவளுடன் இன்பம் அடைய விரும்பினார்.தன் கருத்தை அவளிடம் தெரிவித்த போது அவளோ தவக்கோலத்தில் புணர்ச்சியை விரும்பவில்லை.உயர்ந்த ஆடை அணிகலன்களை இருவரும் அணிந்து இன்பம் அனுபவிப்போம் என்றாள்.உடன் முனிவர்,'எனக்கேது உயர் ஆடைகளும், அணிகலன்களும் என்றார்.

'உம் தவ வலிமையால் அவற்றை அடையலாம்' என்றாள் லோபமுத்திரை.ஆனால் தவத்தை தவறான வழியில் பயன்படுத்த விரும்பாத முனிவர் மன்னனிடம் சென்று பொருள் பெற விழைந்தார்.

அகத்தியர் முதன் முதலாய் ஸ்ருதர்வா என்ற மன்னனிடம் சென்றார்.பெரும் செல்வத்தை நாடி வந்திருப்பதைத் தெரிவித்தார்.மன்னனோ..'முனிவரே! நாட்டில் வரவும் செலவும் சரியாய் உள்ளது.நான் பெரும் செல்வத்திற்கு எங்கு போவேன்..' என வருந்தினான்.குடிகளைத் துன்புறுத்தி வரி வசூலித்துத் தருவதானால் அச் செல்வம் தனக்கு வேண்டாம் என்ற முனிவர் ..அம்மன்னனையும் அழைத்துக் கொண்டு பிரத்நஸ்வன் என்னும் மன்னனை சந்தித்தார்.அம்மன்னனும் கையை விரித்துவிட , அவ்விருவரையும் அழைத்துக் கொண்டு திரஸதஸ்யு என்ற மன்னனைச் சந்தித்தார்.அவனும் வருவாய்க்கும், செலவிற்கும் சரியாகிவிடுகிறது என உரைக்க, அனைவரும் வேறு என்ன செய்வது என ஆலோசித்தனர்.பின், மன்னர்களின் யோசனைப்படி இல்வலன் என்னும் அசுரனைக் காணச் சென்றனர்.

அவர்களைக் கண்ட அசுரன் பெரும் வரவேற்பளித்தான்.

வாதாபியை ஆட்டுக் கறியாக்கி அவன் விருது படைக்கப் போகிறான் என அனைவரும் அறிந்துக் கொண்டனர்.மன்னர்கள் அஞ்சினர்.அவர்களிடம் அகத்தியர்,'வாதாபியை ஜீரணித்து விடுகிறேன்.கவலை வேண்டாம்' என ஆறுதல் கூறினார்.

அனைவரும் உணவுக்காக அமர்ந்தனர்.இல்வலன் மகிழ்ச்சியில் இருந்தான்.ஆட்டுக்கறியை மேலும்..மேலும் கேட்டு அகத்தியரே சாப்பிட்டார்.உடன் இல்வலன்'வாதாபி..இம்முனிவர் உன்னை ஜீரணிப்பதற்குள் வெளியே வா என கூக்குரலிட்டான்.ஆனால் அகத்தியரோ..'வாதாபி..உலக நன்மையின் பொருட்டு உன்னை நான் ஜீரணிக்கிறேன்' என்று கூறி மூன்று முறை தன் வயிறை தடவிக் கொடுத்தார்.இல்வலனோ..'வாதாபி வா..வா..' என்றான்.அகத்தியரோ..'இல்வலா! இனி வாதாபி வர மாட்டான்.அவன் கதை முடிந்தது.அவனை நான் ஜீரணித்து விட்டேன்' என்று கூறினார்.தம்பியின் மரணம் அறிந்த இல்வலன் வருந்தினான்.

பின் அவன் அகத்தியரை நோக்கி, 'முனிவரே! உங்களுக்கு என்ன வேண்டும்? என்ன வேண்டி நீங்கள் அனைவரும் வந்துள்ளீர்கள்?' என்றான்.

'அசுரா..உன்னிடம் அதிகம் செல்வம் இருப்பதாய் அறிந்தோம்..செல்வத்தால் ஆக வேண்டிய காரியம் ஒன்று இருக்கிறது..ஆகவே..மிக்க செல்வத்தைத் தருவாயாக' என்று கேட்டார்.

அதற்கு இல்வலன், 'நீங்கள் விரும்பியதைக் கேளுங்கள்' என்றான் செருக்குடன்.

'இவர்கள் ஒவ்வொருவருக்கும் பதினையாயிரம் பொன் நாணயமும்,பதினையாரிரம் பசுக்களும் கொடு. எனக்கு முப்பதாயிரம் பசுக்களும், முப்பதாயிரம் பொன்னும், மற்றும் விரைந்து செல்ல இரண்டு குதிரைகளையும், பொன் தேரையும் கொடு' என்றார் அகத்தியர்.

'முனிவரே!தாங்கள் கேட்டது போல பசுக்களும் பொன்னும் தருகிறேன்.பொன் தேர் ஏதும் என்னிடம் இல்லை' என்றான் இல்வலன்.

'போய் நன்றாகப் பார்.பொன் தேர் இருக்கிறது' என்றார் அகத்தியர்.

சென்று பார்த்த அசுரன் பொன் தேர் இருப்பதைப் பார்த்தான்.பின் , முனிவர் கேட்ட அனைத்தையும் வழங்கினான்.அகத்தியர் ஆஸ்ரமம் திரும்பினார்.இல்வலணோ மன அமைதி இழந்தான்.அகத்தியரை கொல்ல நினைத்தான்..தகவல் அறிந்த அகத்தியர் அவனைப் பார்வையாலேயே அழித்தார்.உடன் வந்த மன்னர்கள் அகத்தியரிடம் விடை பெற்று நாடு திரும்பினர்.

முனிவர் தன் மனைவியை அழைத்து செல்வங்களைக் காட்டினார்.லோபமுத்திரை மகிழ்ச்சி அடைந்தாள்.பின் அகத்தியர் அவளிடம் 'உனக்கு எத்தனை மகன்கள் வேண்டும்? ஆயிரமா..அல்லது அத்துணை வன்மை பொருந்திய நூறு பிள்ளைகள்..அல்லது நூறு பிள்ளைகளுக்கு இணையான பத்துப் பிள்ளைகள்..அல்லது அத்துணை வன்மையும் மிக்க ஒரு பிள்ளை வேண்டுமா? உன் விருப்பத்தைத் தெரிவி' என்றார்.

அனைத்துச் சிறப்பும் பொருந்திய ஒரு மகன் போதும் என்றாள் லோபமுத்திரை.

அவளுக்கு..வேதங்களையும், உபநிஷதங்களையும் ஓதிய படியே ஒரு மகன் பிறந்தான்.அக்குழந்தைக்கு த்ருடஸ்யு என்ற பெயர் இட்டனர்.பிறந்ததுமே பலவானாகத் திகழ்ந்த அக்குழந்தை தந்தையின் ஹோமத்திற்காக வேண்டிய ஸமித்தினைச் சுமை சுமையாகக் கோணர்ந்தது.இதனால் இத்மவாஹன் என்னும் பெயர் பெற்றான்.

மகனின் ஆற்றலையும் அறிவையும் கண்டு அகத்தியர் மகிழ்ந்தார்.அவரது முன்னோர்கள் அனைவரும் விரும்பிய சுவர்க்கம் அடைந்தனர்.அப்புத்திரனால் அகத்தியர் ஆஸ்ரமமும் உலகப் பிரசித்தி அடைந்தது...என லோமசர் கூறி முடித்தார்.

இக்கதையினால்..செருக்கும் அடக்கமின்மையும் குலத்தைக் கெடுத்துவிடும் என உணரலாம்.

Sunday, July 3, 2011

154-நல்ல அறிவுதான் இன்பத்திற்குக் காரணம்'மனிதனுக்குச் செல்வம் என்று போற்றத் தக்கது அறிவுதான்.அறிவு உடையவன் செல்வம் உடையவன் ஆவான்.சுவர்க்கம் கூட அறிவினால் கிடைக்கும் என்பது மேலோர் கருத்து.பிரகலாதன், மங்கி போன்றவர்கள் செல்வத்திற்கு அழிவு நேர்ந்த போது அதனை அறிவாலேயே திரும்பப் பெற்றுள்ளனர்.அத்தகைய அறிவைவிடச் சிறந்தது ஏதுமில்லை.இது தொடர்பாக காஸ்யபருக்கும் இந்திரனுக்கும் நடைபெற்ற உரையாடலைச் சொல்கிறேன்' என பீஷ்மர் தருமருக்குக் கூறலானார்.

கர்வமும் மிகுந்த செல்வமும் உடைய வணிகன் ஒருவன் இருந்தான்.ஒருநாள் காஸ்யபர் என்னும் இளம் துறவி நடந்து சென்று கொண்டிருந்தார்.செருக்கு மிக்க அந்த வணிகனின் தேர் காஸ்யபரின் மீது மோத அவர் கீழே விழுந்தார்.கடும் சினம் கொண்டார்.ஆயின் என் செய்வது..'பொருள் அற்றோர் நிலை இதுதான்.இதைவிடச் செத்துத் தொலையலாம் என மனம் கலங்கிச் செயலற்றுக் கிடந்தார்.அந்த நேரத்தில் இந்திரன் நரி உருவம் தாங்கி அங்கு வந்து இளம் துறவியை நோக்கிக் கூறினான்.

பிறவிகளில் உயர் பிறவி மனிதப் பிறவியே.மேலான இப் பிறவியை அடைந்தும் ஏன் இதனைப் பாழாக்குகிறாய்? ஏன் சாக எண்ணுகிறாய்?இவ்வுலகில் கை உள்ளவர்களைப் பேறு பெற்றவர்களாகக் கருதுகிறேன்.உன்னைப் போன்ற மனிதருக்குப் பொருளில் ஆசை உள்ளதைப் போல என்னைப் போன்ற விலங்குகளுக்குக் கைகளைப் பெற ஆசை உள்ளது.கைகள் இல்லாததால் காலில் தைக்கும் முள்ளைக் கூட அகற்ற முடியாது.தொல்லை தரும் ஈ, எறும்பைக் கூட எங்களால் அகற்ற இயலவில்லை.கைகள் இருந்தால் இத்தகைய தொல்லைகளை அகற்றலாம்.கையில்லாததால் சரியாக உணவைக் கூட உண்ண முடியவில்லை.உடை உடுத்த முடியவில்லை.கை உள்ளவர்கள் எல்லாவற்றையும் எளிதாக அனுபவிக்கிறார்கள்.உன்னுடைய புண்ணியத்தால் நாயாகவோ,நரியாகவோ,கீரியாகவோ,எலியாகவோ, பாம்பாகவோ நீ பிறக்கவில்லை.உனது மேலான மனிதப் பிறவியைப் பற்றிப் பெருமைப்படு.இந்த கிடைத்தற்கரிய மானிடப்பிறவியை நல்வழிகளில் பயன்படுத்து.மனிதப் பிறவி தேவப்பிறவியை விடச் சிறந்தது.எந்தப் பிறவியாயினும் ஆசையை விட்டொழிக்க வேண்டும்.தேவன் தேவேந்திரனாக ஆசைப் படலாம்.அப்படி ஆனாலும் ஆசை அடங்காது.ஒரு பொருளை விரும்பி அது கிடைத்துவிட்டால், அதனாலேயே ஆசை அடங்கி விடுவதில்லை.மனம் வேறு ஒரு பொருளை நாடும்.ஆசை கொள்ளும்.அப்படி ஒவ்வொன்றாகத் தாவிச் செல்லும் மனதை அடக்குதல் மனிதப் பிறவியில் மட்டுமே கூடும்.மனதை அடக்கி அதன் மூலம் இன்பம் அடைவதும், மனதை அடக்காமல் அது போனபடியே சென்று துன்பம் அடைவதும் உன்னிடத்திலேயே இருக்கிறது.ஐம்பொறிகளையும் ஆமை போல் அடக்குபவனுக்குத் துன்பம் இல்லை.

ஒரு முறை ருசி கண்டவர்க்கு மேலும் மேலும் அப்பொருளைப் பெற வேண்டும் என்ற ஆசை உண்டாகும்.ஆசையை உண்டாக்கும் பொருளைப் பற்றிப் பிறர் பேசக் கேட்காமல் இருக்க வேண்டும்.அப்பொருளைப் பார்க்காமல் இருக்க வேண்டும்.தொடாமல் இருக்க வேண்டும்.

மனிதரில் சிலர் கல்வியிற் சிறந்தவராயும்,வலிமை மிக்கவராகவும்,அனுபவம் உள்ளவர்களாக இருந்தும் பாவ காரியங்களில் ஈடுபடுகின்றனர்.யாராய் இருந்தாலும் அப்பிறவியாயினும் யாரும் உயிரை விட விரும்புவதில்லை.அந்தந்த பிறவியில் அததற்குரிய இன்பம் ஒன்று இருக்கிறது.எனவே தான் எந்த உயிரும் அந்த இன்பத்தை அனுபவிக்க விரும்புகிறதே ஒழிய இறக்க விரும்புவதில்லை.

உடற்குறையுள்ள மனிதர் பலர் உள்ளனர்.கை இல்லாதவர்களும்,கால் இல்லாதவர்களும், ஒரு பக்கம் செயல் இழந்தவர்களும் ஆக இப்படி ஊனத்துடன் விளங்குவோர் பலர்.நீயோ உடற் குறை ஏதுமின்றி நோயும் இன்றி இருக்கிறாய்.உனக்குக் கெட்ட பெயரும் இல்லை.இந்நிலையில் கிடைத்தற்கு அரிய உயிரை விடுதல் நல்லதன்று.எனவே உற்சாகத்துடன் எழுந்திரு.தருமம் செய்.தானம் செய்.மனத்தை அடக்கு.சக்திக்கு ஏற்றாற் போல தியாகம் செய்.நற்கதி அடைவாய்.இப்பிறவியில் நல்லது செய்தால் அதன் பயனை அடுத்த பிறவியில் நன்கு அனுபவிப்பாய்.

நான் சென்ற பிறவியில் நல்லது செய்யவில்லை.ஆகமங்களை பழித்தேன்.விதண்டாவாதம் பேசினேன்.அறவோரை பழித்தேன்.ஒன்றும் அறியா நான் மேதாவி போல நடந்து கொண்டேன்.அதனால் நரியாக பிறவியெடுக்க நேர்ந்தது.இந்த இழி பிறவியிலிருந்து விடுபட்டு எனக்கு மனிதப் பிறவி கிடைக்குமா? அப்படிக் கிடைத்தால் அதிலாவது மன நிம்மதியுடன் இருப்பேனா?' என தனது விலங்குப் பிறவி குறித்து இரங்கிக் கூறி முடித்தது.

அது கேட்டு இளந்துறவி வியப்புற்று எழுந்தான்.அறிவு மிக்க நரியின் சொல்லைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தான்.அது நரியன்று என தன் ஞானக் கண்ணால் உணர்ந்தான்.நரி வடிவில் வந்து நன்னெறி காட்டியவன் இந்திரன் என்பதை உணர்ந்தான்.பின் அறநெறியில் வாழ்ந்தான்' என பீஷ்மர் தருமருக்கு நல் அறிவுதான் இன்பத்திற்குக் காரணம் என்பதை இக்கதை மூலம் தெரிவித்தார்.