Monday, March 9, 2009

25-சூதாட்டம் தொடங்கியது

தம்பிகள் கோபம் தணிந்து ..தருமரின் அறிவுரைப்படி அனைவரும் அஸ்தினாபுரம் அடைந்தனர்.அஸ்தினாபுரத்தில் பாண்டவர்களைக் காண..சந்திகள்,வீதிகள்,சாலைகள் என எத்திசை
நோக்கினும் மக்கள் சூழ்ந்தனர்.

அவர்கள் அரண்மனை அடைந்து திருதிராட்டினனையும்,பீஷ்மரையும்,கிருபாசாரியாரையும்,துரோணாசாரியாரையும் அவர் மகன் அசுவத்தாமனனையும் கர்ணனையும்,துரியோதனனையும் உள்ளன்போடு வாழ்த்தி வணங்கினர்.மாயச்சகுனியை மகிழ்வுடன் தழுவினர்...குந்தியும்,திரௌபதியும் அனைவருடனும் அளவளாவினர்.

அவை கூடியது..அப்போது சகுனி தருமரை நோக்கி.. 'தருமரே....உமது குலப்பெருமையை உயர்த்தியுள்ளீர்..இப்போது சூதாட்டத்தில் உங்கள் ஆற்றலைக் காண்போமா?' என்றார்.

தருமரோ...'சதி செய்து என்னை சூதுக்கு அழைத்தீர்..இதில் பெருமையுண்டா..? அறம் உண்டா? வீரம் உண்டா? எங்கள் நல்வாழ்வை நீ விரும்பவில்லை என நான் அறிவேன்.இச்சூதாட்டம் மூலம் எங்களை அழிக்க நினைக்கிறாய்' என்றார்.

உடன் சகுனி சிரித்தான். 'உன்னை மாமன்னன் என்று அழைத்து விட்டேன்.பண்டை மன்னர்கள் சூதாடவில்லையா...அச்சம் கொள்ளாதே...நீ சூதாட்டத்தில் வெல்வாய்..வெற்றி பெறுவது உன் இயல்பு..வா ஆடுவோம்..'என்றான்.

தருமர் பதிலுக்கு ..'சான்றோர் சூதாட்டத்தை விஷம் என கண்டித்துள்ளனர்...ஆதலின் இந்த சூதினை வேண்டேன்...என்னை வஞ்சித்து..என் செல்வத்தைக்கொள்வோர் எனக்கு துன்பம் தருபவர் அல்லர்,,நான்கு வேதங்களையே அழித்தவர் ஆவர்...பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்..வேண்டாம் சூது ...' என்றார்.

மன்னர் பலர் கூடியுள்ள இம்மாபெரும் சபையில் மறுத்து பேசுதல் அழகோ...வல்லவனே வெல்வான்..அல்லாதவன் தோற்றிடுவான்.வருவதானால் வா..மனத்துணிவில்லையெனில் செல்'என்றான் சகுனி..

விதியின் வலிமையை உணர்ந்த தருமர் ..'மதியினும் விதி பெரிது..பிறர் செய்யும் கர்மப்பயனும் நம்மை வந்து அடைவதுண்டு.ஆகவே விதி இச்செயலுக்கு என்னை தூண்டுமானால் அதைத்தடுக்க என்னால் முடியுமா?'என்று சூதுக்கு இணங்கினார்.

சூதாட்டம் தொடங்கியது.தாயம் உருட்டப்பட்டது.விதுரரைப்போன்றோர் மௌனியானார்.

'பந்தயம் என்ன?'என்றார் தருமர்.

'அளவிலா செல்வம் என்னிடம் உண்டு..ஒரு மடங்கு நீ வைத்தால் ஒன்பது மடங்கு நான் வைப்பேன்'என்றான் துரியோதனன்...

'ஒருவர் ஆடப் பணயம்' வேறொருவர் வைப்பதா..'என்றார் தருமர்.

'மாமன் ஆடப் பணயம்..மருமகன் வைக்கக்கூடாதா..?இதில் என்னததவறு..?'என எதிவாதம் புரிந்தான் சகுனி...

பரபரப்பான ஆட்டத்தில்...படிப்படியாக ஏராளமான பொருட்களை இழந்தார் தருமர்.

மாடிழந்தார் மந்தை மந்தையாக

ஆடிழந்தார்..

ஆளிழந்து விட்டார்..


நாடிழைக்கவில்லை தருமா..நாட்டை வைத்து ஆடு...என்று தூண்டினான் சகுனி

2 comments:

வால்பையன் said...

//மாடிழந்தார் மந்தை மந்தையாக
ஆடிழந்தார்..
ஆளிழந்து விட்டார்..
நாடிழைக்கவில்லை தருமா..நாட்டை வைத்து ஆடு...என்று தூண்டினான் சகுனி//

ஆனந்தவிகடனில் வாலி எழுதிவந்தார்!
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் வாலியின் மொழி நடைக்காக அதை விரும்பி படித்தேன். அதே போன்று மொழி நடை இறுதியில்!

கலக்குங்க!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வால்பையன்

Post a Comment