Sunday, April 19, 2009

38-மார்க்கண்டேயர் வருகை

அர்ச்சுனனை பிரிந்த சகோதரர்கள் அவரை மீண்டும் எப்போது காண்போம் என்றிருந்தனர்.அப்போது ..இந்திர உலகத்திலிருந்து ஒரு தேர் வந்தது.அதில் வந்திறங்கிய அர்ச்சுனன் ...தன் தேவலோக அனுபவங்களை ...சிவபெருமானிடம் பாசுபதக்கணை பெற்றது...நிவாத கவசர்களைக் கொன்றது..காலக்கேயர்களை அழித்தது என எல்லாவற்றையும் சொன்னான்.அனைவரும் மகிழ்ந்தனர்.

இந்நிலையில் வனவாசம் பத்து வருடங்கள் ஓடிவிட்டது..மீதம் இரண்டு ஆண்டுக்காலம் அவர்கள் காம்யகம் முதலிய வனங்களில் சஞ்சரித்தனர்.

அப்போது அவர்களைச் சந்திக்க சத்திய பாமாவுடன் கண்ணன் வந்தார்.அனைவரும் வணங்கி மகிழ்ந்தனர்.பாண்டவர்கள்..பாஞ்சால நாட்டில் இருக்கும் உப பாண்டவர்களின் நலனையும்..துவாரகையில் இருக்கும் சுபத்திரை...அபிமன்யு நலத்தையும் கிருஷ்ணரிடம் கேட்டு அறிந்தனர்.

அத்தருணத்தில் ...தவ முனிவர் மார்க்கண்டேயர் வந்தார்...தொடர்ந்து நாரதரும் வந்தார்.

மார்ககண்டேயர் புண்ணியக்கதைகளைக் கூறினார்.'ஒவ்வொரு உயிரும் தான் செய்த நல்வினை ...தீவினைப் பயன்களை அனுபவிக்கின்றன.வினையின் பிடியிலிருந்து யாருமே தப்பிக்க இயலாது..எத்தனை பிறவி எடுத்தாலும் வினைப்பயன் தொடர்ந்து வந்து பயனைத் தரும்.

வரும் காலத்தில் பன்னிரு சூரியர்களின் வெப்பத்தைத் தாங்காது உயிரினங்கள் துன்புறும்.கடல் நீர் நிலைகள்..அனைத்தும் வற்றிவிடும்.புல் பூண்டு ..மரம் ஆகியவை அனைத்தும் தீயால் கருகி விடும்.ஓயாது மழை பொழியும்..ஊழிக்காற்று எழுந்து பிரளயத்தை ஏற்படுத்தும்...உலகு அழியும்.பின் கண்ணபிரான் மீண்டும் உலகையும் உயிரினங்களையும் படைப்பார்..காப்பார்.

மறுபடியும் ஒரு ஊழிக்காலத்தில் உலகை அழிப்பார்.இப்படிப் படைப்பதும்..காப்பதும்..அழிப்பதும் நடைபெற்றுக் கொண்டிருக்கும்.இதுதான் இறைவனின் மகிமை'என பல கதைகளைக் கூறினார்.

எல்லாவற்றையும் கேட்டு அனைவரும் இன்பம் அடைந்தனர்.எல்லோரும் அறநெறியில் நிற்கவேண்டும் என மார்க்கண்டேயர் எடுத்துரைத்தார்.

காம்யக வனத்தில் பல நாட்கள் தங்கியிருந்தபின் கிருஷ்ணர் ..பாண்டவர்க்கு நல்லாசி வழங்கிச் சத்தியபாமாவுடன் துவாரகை திரும்பினார்.மார்க்கண்டேயரும் விடைபெற்றார்.

பல திருத்தலங்களுக்குச் சென்று திரும்பிய அந்தணன் ஒருவன்...காம்யக வனத்தில் பாண்டவர்களை சந்தித்து அவர்களது நிலைமையை அறிந்தான்.அவன் அஸ்தினாபுரம் சென்று திருதிராட்டினனைக் கண்டு பாண்டவர்களின் மேன்மையைக் கூறினான்.

Wednesday, April 15, 2009

37-பீமனும் மலைப்பாம்பும்

தம்மைப் பிரிந்து சென்ற பீமன் வராததால் தருமர் கவலையில் மூழ்கினார்.பீமனின் மகன் கடோத்கஜனை நினைக்க அவன் தருமர் முன் தோன்றினான்.'உன் தந்தை இருக்குமிடத்திற்கு எங்களையும் அழைத்துப் போ'என்று அவர் கூற..கடோத்கஜன் அனைவரையும் தன் தந்தை இருக்குமிடம் தூக்கிச்சென்றான்.தம்பியைக் கண்ட தருமர் அமைதியானார்.

அவர்களைக் காண குபேரன் தானே மலர்களுடன் வந்து சேர்ந்தான்.

பின் அனைவரும் பத்ரிகாச்ரமத்திற்குத் திரும்பினர்.சடாசரன் என்னும் அரக்கன் திரௌபதியைக் கவரும் எண்ணத்துடன் அவர்களிடம் வந்தான்.ஒரு சமயம் பீமன் வெளியே சென்றபோது..அவ்வரக்கன் தன் சுயரூபத்தை எடுத்துக்கொண்டு தருமர்,நகுலன்,சகாதேவன்,திரௌபதி ஆகியோரைத் தூக்கிக் கொண்டு ஓடினான்.அப்போது வந்த பீமன் இது கண்டு அவனுடன் போர் புரிந்து அவைத் தூக்கித்தரையில் எறிந்து தேய்த்துக் கொன்றான்.

சடாசுரனை வதைத்தபின்..பாண்டவர்கள்..முனிவர்களுடன் இமய உச்சியை அடைந்தனர்.அங்கு சாரணர்,சித்தர் ஆகியவர்களைக் கண்டு வணங்கினர்.அப்போது ஐந்து நிறமுடைய அழகிய மலரை திரௌபதி கண்டாள்.இது போன்று மலர் வேண்டும் என்று கேட்க ..இதுவும் குபேரனின் நாட்டில்தான் கிடைக்கும் கொண்டுவருகிறேன்'என பீமன் புறப்பட்டான்.

அங்கு மணிமான் என்ற யட்சத்தளபதியுடன் போரிட்டு...மணிமானை வீழ்த்தினான்.தம்பியைக் கண்டு தருமர் குபேரன் பகை தேவையற்றது எனக் கூறினார்.

இதற்கிடையே மானுடன் ஒருவனால் மணிமான் கொல்லப்பட்ட செய்தியறிந்து குபேரன் அங்கு வர..அவரை வணங்கிய தருமரைக்கண்டு குபேரன் சீற்றம் தணிந்தான்.'மணிமான் மரணம் பண்டை சாபத்தால் நேர்ந்தது 'என அறிந்த குபேரன் தருமருக்கு பல பரிசுபொருட்களைக் கொடுத்து வழி அனுப்பினான்.

பீமன் ஒருநாள் காட்டுக்குச்சென்றான்.புதர்களைக் காலால் மிதித்து அழித்தான்.அப்போது ஒரு மலைப்பாம்பு பீமனைப் பற்றிஸ் சுற்றிக்கொண்டது.பீமனால் விடுபட முடியவில்லை.

பராசுராமனையும்,இடும்பனையும் ஜராசந்தனனையும் கிர்மீரனையும்,மணிமானையும் வீழ்த்தியவனுக்கு அப்போதுதான் தெளிவு பிறந்தது,மனிதனின் ஆற்றலை விட விதியின் வலிமை புரிந்தது.

அப்போது பீமனைத் தேடி வந்த தருமர்..பீமன் இருக்கும் நிலை கண்டார்...பின் பாம்பினை நோக்கி'நீ யார்..? தேவனா? அசுரனா? என்றார்.

உடன் பாம்பு...'நான் நகுஷன் என்னும் மன்னன்.அகஸ்தியரின் சாபத்தால் பாம்பாகியுள்ளேன்.நீ என்னுடன் விவாதம் செய்..அதுவே என் சாப விமோசனம்'என்றது.

தன் முன்னோருள் ஒருவர் தான் நகுஷன் என அறிந்த தருமர் அப்பாம்பை வணங்க...சாப விமோசன நேரமும் வந்ததால் .நகுஷன் தருமரை ஆசீர்வதித்துவிட்டு விண்ணுலகு சென்றார்.

பீமன் ..தருமருடன்..மனித வாழ்க்கை அனுபவங்களைப்பேசிய படியே தங்கும் இடம் வந்து சேர்ந்தான்.

Tuesday, April 14, 2009

36- பீமன்...அனுமன் சந்திப்பு

தருமர் தன் மூத்த சகோதரர்களுடன் நான்கு திசைகளிலும் தீர்த்த யாத்திரையை மேற்கொண்டார்.'கடத்தற்கரிய வழியில் அனைவரையும் நான் தூக்கிச் செல்வேன்' என்றான் பீமன்.

ஆனாலும்...நடைப்பயணத்திலேயே ..கந்தமாதன மலை மேல் அவர்கள் சென்றபோது இடியும்,மின்னலும், மழையும் படாதபாடு படுத்தின.

திரௌபதி மயங்கி விழுந்தாள்.அப்போது கடோத்கஜன் தோன்றி திரௌபதியை தூக்கிச் சென்றான்.கடோத்கஜனுடன் வந்த மற்ற அசுரர்கள்...தருமர்,நகுலன்,சகாதேவனை தூக்கி உரிய இடத்தில் சேர்த்தனர்.

அனைவரும் கயிலைமலை சென்று கடவுளை வணங்கினர்.பத்ரிகாச்ரமத்தை அடைந்து...சித்தர்களை சந்தித்து ஆசி பெற்றனர்.அப்போது ஒருநாள் திரௌபதி அங்கு காணப்பட்ட ஆயிரம் இதழ்களுடன் கூடிய மணம் மிக்க 'சௌகந்திகம்' என்ற மலரின் எழிலில் மனத்தை பறிகொடுத்தாள்.அது போன்ற மலர்கள் வேண்டும் என பீமனிடம் வேண்டினாள்.அம்மலர்கள் குபேரன் நாட்டில் மட்டுமே உள்ளது என அறிந்து பீமன் குபேரபுரி நோக்கி நடந்தான்.

பீமன் செல்லும் வழியில் குரங்கு ஒன்று பெரிய உருவத்துடன் வாழை மரங்களிடையே படுத்திருப்பதைக் கண்டான்.அதை எழுப்ப பேரொலி செய்தான்..கண் விழித்த குரங்கு 'இங்கு தேவர்களும் வர அஞ்சுவர்.இதற்குமேல் உன் பயணத்தைத் தொடராது திரும்பிப் போ' என்றது.

இது கேட்ட பீமன் 'என்னையா..திரும்பிப்போகச் சொல்கிறாய்...நான் பாண்டுவின் மைந்தன்...உன் வாலை மடக்கி..எனக்கு வழி விடு' எனக் கூச்சலிட்டான்.

உடன் குரங்கு..'உன் ஆணவப் பேச்சை நிறுத்து..உனக்கு வலிமை இருந்தால்..என்னைத் தாண்டிச் செல்' எனக்கூற...'முதியோரை அவமானப்படுத்த நான் விரும்பவில்லை' என்றான் பீமன்.

அப்படியானால்..என் வாலை ஒரு புறமாக நகர்த்தி விட்டுப் போ..என்றது குரங்கு.

ஆனால்...பிமனால்...குரங்கின் வாலை அசைக்க முடியவில்லை. பீமன் தன் இயலாமையை எண்ணி வருந்தினான்...'என்னைத் தோல்வியுறச் செய்த நீர் யார்? சர்வ வல்லமை படைத்த நாராயணனா? அல்லது சிவபெருமானா?' என பீமன் கேட்டான்.

விரைந்து எழுந்த மாருதி...பீமனை ஆரத்தழுவி...'தம்பி...நானும் வாயுவின் குமரந்தான்..' என அனுமன் தன்னைப் பற்றிக் கூறினான்.

ராமாவதாரக் காலத்தில்..அஞ்சனைக்குப் பிறந்த வாயுமகன் அனுமன்...தன் தம்பி முறையான பீமனை தழுவிக் கொண்டான்.பீமன் புதியதோர் ஆற்றல் பெற்றான்.

'உன் எதிரிகளால்..உன்னை ஒன்றும் செய்ய முடியாது.' என்று அனுமன் ஆசி கூற பீமன் மலர்களுக்கான பயணத்தைத் தொடர்ந்து...குபேரனது தோட்டத்தில் அம்மலர்களைக் கண்டு..அதைப் பறிக்க முயன்ற போது...அங்கிருந்த அரக்கர்கள் அவனை தடுக்க...அனைவரையும் பீமன் தோற்கடித்தான்.

குபேரனுக்கு தகவல் பறந்தது.

Wednesday, April 8, 2009

35.பார்த்தனின் ஆன்ம பலம்

அனைத்து கலைகளிலும் சிறந்து விளங்கிய அர்ச்சுனன் ஆன்ம பலத்திலும் சிறந்தவன் ஆனான்.

அவன் மன வலிமையைச் சோதிக்கக் கருதிய சித்திரசேனன் ஊர்வசியை அனுப்பி அவனை மயக்குமாறு கட்டளையிட்டான். ஆனால் அழகிய அந்த தெய்வமங்கையின் சாகசம் அர்ச்சுனனிடம் எடுபடவில்லை.அவளால் அவனை வசப்படுத்த முடியவில்லை.

அதனால் ஆத்திரமடைந்த அவள்..'பேடியாகப் போவாய்' என சாபமிட்டாள்.தனக்கு நேர்ந்த துர்பாக்கிய நிலையை இந்திரனிடம் கூறிப் புலம்பினான் அர்ச்சுனன்.

ஊர்வசியின் சாபத்தை முழுவதுமாக விலக்க முடியாது என அறிந்த இந்திரன்..அதில் சிறிது மாற்றம் செய்தான்.அந்த சாபம் ஓராண்டுக்கு மட்டும் நிலைத்திருக்கும்.அதனை அர்ச்சுனன்
தன் நன்மைக்காக அஞ்ஞாத வாசத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறினான்.

தீமையும் நன்மையே என அமைதியானான் அர்ச்சுனன்.

அர்ச்சுனன் அங்கு இருந்த போது கடல் நடுவே வசித்துவந்த அசுரர்கள் மூன்று கோடி பேர் தேவர்களுக்கு ஓயாத தொல்லை கொடுத்து வந்தனர்.அவர்களை அழிக்குமாறு இந்திரன் அர்ச்சுனனுக்குக் கட்டளையிட்டான்.மாதலி தேர் செலுத்த அசுரர்களுடன் போரிட்டான்அர்ச்சுனன். அசுரர்கள் விஷம் போன்ற கருவிகளை அர்ச்சுனன் மேல் பொழிய ..அவன் எதிர்த்து நின்றான்.

தனி மனிதனாக அத்தனை பேரையும் கதி கலங்கச் செய்தான்.அசுரர்கள் இப்போது மாயப்போரில் ஈடுபட்டனர்.ஆனால் தனஞ்சயனோ அனைவரையும் அழித்தான்.

நிவாத கலசர்களான அந்த அசுரர்களை வென்று வெற்றியுடன் திரும்புகையில் ..விண்ணகத்தே ஒரு நகரத்தை கண்டான்.மாதலியை அதுபற்றி வினவினான்.

'பூலோமை,காலகை என்னும் அரக்கியர் இருவர் கடும் தவம் செய்து பிரமதேவன் அருளால் வரம் பெற்றனர்.அந்த வர பலத்தால் பிறந்த புதல்வர்களான காலகேயர்கள் இந்த நகரத்தில் வாழ்கின்றனர்.இதன் பெயர் இரணியபுரம் என்பதாகும்.இந்த காலகேயர்களால் தேவர்கள் மிகவும் துன்பம் அடைகின்றனர்' என்றான் மாதலி.

அர்ச்சுனன் அவர்களை ..அவர்களது நகரத்துடன் பாசுபதக் கணையை ஏவி அழித்தான்.

வெற்றி வீரனான மகனை இந்திரன் ஆரத்தழுவினான்.யாராலும் பிளக்க மிடியா கவசத்தையும்,மணிமகுடத்தையும்,தேவதத்தம் எனும் சங்கையும் பரிசாக அளித்தான்.

இந்நிலையில்..காட்டில் மற்ற சகோதரர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

Wednesday, April 1, 2009

34.அர்ச்சுனன் தவம்

தருமர் சமாதானம் செய்து கொண்டிருந்த போது ..வியாசர் அங்கு தோன்றினார்.

பாரதத்தில் சிக்கல் தோன்றும் போதெல்லாம் வியாசர் தோன்றி அதனை விலக்கியுள்ளார்.

அதுபோல இப்பவும் வந்து சில ஆலோசனைகளைக் கூறினார்.

'இந்தப் பதிமூன்று ஆண்டுக்காலத்தில் துரியோதனன் தன் பலத்தைப் பெருக்கிக்கொள்வான்.ஏற்கனவே ..பீஷ்மர்,துரோணர்,கர்ணன் முதலியோர் அவன் பக்கம் இருக்கிறார்கள். இந்நிலையில் வெறும் தவக்கோலம் பூண்டு காட்டில் இருப்பதால் பயன் இல்லை.நீங்களும் உங்களைப் பலப்படுத்திக் கொள்ளவேண்டும்.நான் 'பிரதிஸ்மிருதி' என்னும் மந்திரத்தை சொல்லித் தருகிறேன்.அர்ச்சுனன் இமயம் சென்று..இம் மந்திரத்தை உச்சரித்துச் சிவபெருமானையும்,தேவேந்திரனையும், திக்குப் பாலகர்களையும் வேண்டித் தவம் செய்வானாக.சிவபெருமான் பாசுபதக்கணையை நல்குவார்.அவ்வாறே பிறரும் சக்தி வாய்ந்த கருவிகள் பலவற்றை அளிப்பார்கள்'என்று கூறி மறைந்தார்.

உடன் அர்ச்சுனன்...இமயமலையில் இருக்கும் இந்திரகிலம் பகுதியை அடைந்து தவம் மேற்கொண்டான்.அவனைச் சுற்றி புற்று வளர்ந்தது....ஆனாலும் அவன் அசையாது தவத்தில் இருந்தான்.

அவனது தவத்தின் கடுமை அறிந்த சிவன் உமாமகேஸ்வரியிடம் 'அர்ச்சுனன் தவத்தை அறிந்துக்கொண்ட துரியோதனன் அதை குலைக்க மூகாசுரனை ஏவுவான்.அந்த அசுரனை..என் ஒருத்தனால் மட்டுமே கொல்ல இயலும்.
அந்த அசுரன் காட்டுபன்றி வடிவம் தாங்கி..அர்ச்சுனனை கொல்ல வருவான்...நான் வேடனாகப்போய் அவனைக் காப்பாற்றுவேன்'என்றார்.

அதே போல மூகாசுரன் காட்டு பன்றியாய் வந்தான்.

அர்சுனன் மீது அக்காட்டுப் பன்றி மோதியது.அர்ச்சுனன் தவக்கோலம் நீங்கி தற்காப்புக்காக ஒரு அம்பு கொண்டு அவ்விலங்கை தாக்கினான்.அப்போது ஒரு வேடன் தன் அம்பை அந்த பன்றியின் மேல் செலுத்த பன்றி வீழ்ந்தது.யாருடைய அம்பால் அப்படி நேர்ந்தது என்று சர்ச்சை எழ..இருவரும் விற்போரில் ஈடுபட்டனர்.அர்ச்சுனன் தோற்றான்.உடன் மண்ணால் ஒரு சிவலிங்கத்தை அமைத்து பூமாலை ஒன்றை அணிவித்து பூஜித்தான்.ஆனால் அம்மாலை வேடன் கழுத்தில் இருப்பதை அறிந்த அர்ச்சுனன் வேடனாக வந்தது சிவனே என்று அறிந்து வணங்கினான்.சிவனும் அவனுக்கு பாசுபதக் கணையை வழங்கினார்.அந்த அற்புதக் காட்சியைக் கண்ட தேவர்கள் பல்வேறு கருவிகளை அர்ச்சுனனுக்கு அளித்தனர்,

தன் மைந்தனின் பெருமை அறிந்த தேவேந்திரன் அவனைத் தேவர் உலகத்திற்கு அழைத்தான்.இந்திரன் கட்டளையால் அவனது சாரதி மாதலி அர்ச்சுனனை தேரில் நட்சத்திர மண்டலங்களைக் கடந்து ..அமராவதி நகருக்கு அழைத்துச் சென்றான்.

இந்திரன் ..தன் மகனை அரியணையில் அமர்த்தி சிறப்பு செய்தான்.தெய்வீகக்கருவிகளைப் பயன்படுத்தும் முறை பற்றி அறிய ஐந்து ஆண்டுகள் தங்கியிருக்கவேண்டும் என கட்டளையிட்டான்.

இந்திரன் ..நுண்கலைகளான நடனம்,இசை ஆகியவற்றிலும் அர்ச்சுனன் ஆற்றல் பெற அவனைசித்திரசேனனிடம் அனுப்பி வைத்தான்.

அனைத்துக் கலைகளிலும் பயிற்சி பெற்று நிகரற்று விளங்கினான் தனஞ்செயன்.