Monday, March 30, 2015

மகாபாரதக் கதைகள் - 4 பெண்களிடம் ரகசியம் தங்கலாகாதுபோரில் இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகளை, விதுரர்,தௌமியர்,யுயுத்சு ஆகியோர் தர்மர் கூறியபடிக்கு ஏற்பாடு செய்தனர்.ஆதரவற்றவர்களுக்காக தருமர் தர்ப்பணம் செய்தார்.

அப்போது குந்திதேவி அங்கு வந்தாள். அவள், தேரோட்டி மகன் என இகழப்பட்டவனும், துரியோதனனின் நம்பிக்கைக்கு ஏற்றவனாகத் திகழ்ந்தவனுமாகிய , அர்ச்சுனனால் போரில் கொல்லப்பட்ட கர்ணன் பாண்டவர்கள் ஐவருக்கும் மூத்தவன் என்றும், தனக்கு சூரியனின் அருளால் பிறந்த மகன் என்றும் கூறினாள்.

தாயின் கூற்றைக் கேட்ட பாண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டனர்.பின் தருமர் தாயினிடம் "வீரர்களில் சிறந்தவனும், ஒளிமிக்கவனுமான கர்ணன் மூத்தவன் என்ற உண்மையை மறைத்ததால் ஏற்பட்ட விளைவுகளை நீங்கள் அறிவீர்களா?" என்றார்.பாஞ்சாலர்களையும், அபிமன்யூவையும் இழந்த துக்கத்தை விட அதிக துக்கம் அடைந்துள்ளதாகக் கூறினார்.இவ்வளவு நாள் இந்த ரகசியத்தை ஏன் மறைத்தீர்கள்?என்றார்.

பின் கர்ணனின் மனைவியுடன் அவனுக்குச் செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளைச் செய்தார் தருமர்.

பின், "இனி எந்த ரகசியமும் பெண்களிடம் தங்கலாகாது" என்றார் உள்ளக் கொதிப்புடன் '

Sunday, March 22, 2015

மகாபாரதக் கதைகள் - 3 முற்பகல் செய்யின்நாம் யாருக்கேனும் தீங்கிழித்தோமாயின்..அதற்கான பலனை பின்னாளில் நாமே அனுபவிக்க வேண்டியிருக்கும்.

கர்ணன் வாழ்க்கையிலும் அப்படி நடந்தது,அதுவே இக்கதையாகும்.

முனிவர் ஒருவர் காட்டில் தியானம் செய்து கொண்டிருந்தார்.அவரது ஆசிரமத்தைச் சேர்ந்த பசுவும், கன்றும் அருகே புல்லை மேய்ந்து கொண்டிருந்த நேரத்தில், கன்றின் மீது அம்பு ஒன்று பாய்ந்தது.அக்கன்று துடிதுடித்து இறந்தது..இறக்கும் தறுவாயில் அக்கன்றின் வேதனைக் கத்தல் கேட்டு முனிவர் தியானம் கலைந்தது.

அவர், இறந்த கன்றையும், தாய்ப்பசு கண்ணீருடன் நிற்பதையும் பார்த்தார்.

அம்பு எய்தி பசுவைக் கொன்றவனைத் தேடினார். அப்போது ஒரு வீரன் கையில் வில்லுடன் அங்கு வந்தான்.அவன்தான் அம்பை எய்திருக்க வேண்டும் என முனிவர் எண்ணினார்.அவரது கோபம் அந்த வீரன் மீது சாபமாக அமைந்தது.

"சிறு கன்றின் மீது அம்பு எய்தி கொன்றவனே! உனக்கு முடிவுகாலம் வருகையில், உன் தேரில் நின்று நீ போர் புரிகையில், தேரின் சக்கரங்கள் மண்ணுக்குள் புதையும்.அந்த நேரமே உனக்கு மரண நேரமாய் அமையும் என்பதை உணர்வாயாக!" என்றார்.

அந்த வீரன் தான் கர்ணன்.

கன்றைக் கொன்ற தன் செயலால் வருந்தினான் கர்ணன்.ஆனாலும் விதியின் செயல் இது என தன்னை தேற்றிக் கொண்டான்.

அந்த முனிவர் சாபப்படியே பாரதப் போரில் கர்ணன் மரணம் நிகழ்ந்தது. .

Saturday, March 21, 2015

மகாபாரத நீதிக்கதைகள்- 2 ..கிளியின் நன்றிபாரதப் போர் நிகழ்ந்து முடியும் நிலையில், பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்தவாறே பல நீதிகளை தருமருக்கு எடுத்துரைத்தார்.இவை பெரும்பாலும் நீதிக்கதைகள் ஆகும்.

தருமர், நன்றி பற்றிக் கேட்க பீஷ்மர் சொல்லலானார்.

வேடன் ஒருவன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான்.விஷம் தோய்ந்த அம்பு ஒன்றை விலங்கின் மீது அவன் செலுத்த அது குறிதவறி.ஒரு பெரிய ஆலமரத்தை அடிப்பாகத்தைத் தைத்தது.அம்பில் இருந்த விஷத்தினால் மரம் பட்டுப் போனது.இலைகள் உதிர்ந்து காட்சியளித்தது.மரம் பட்டுப்போனாலும், அம்மரத்தில் வாழ்ந்திருந்த கிளி ஒன்று அங்கேயே தங்கி இருந்தது.இது கண்டு இந்திரன் அங்கு வந்து கிளியைப் பார்த்து, "காட்டில் எவ்வளவோ மரங்கள் இருக்கின்றன.அங்கு செல்லாமல் பட்டுப்போன இம்மரத்திலேயே ஏன் இருக்கிறாய் " என்றான்.

கிளி சொல்லியது..

"இம்மரத்தில் தான் நான் பிறந்து,பறந்து, ஒடியாடி மகிழ்ந்து வளர்ந்தேன்.இம்மரம் பூத்துக் குலுங்கி எனக்கு, காய்களும், கனிகளையும் தந்தது.அவற்றை உண்டு நான் வளர்ந்தேன்.என் வளர்ச்சிக்கு பெரிய உதவி செய்த இம்மரத்தை விட்டு விட்டு என்னால் செல்ல முடியாது. இம்மரம் நல்ல நிலையில் இருந்த போது அதன் பலன்களை அனுபவித்த நான்..இம்மரத்திற்கு கஷ்டநிலை ஏற்பட்டபோது அதை விட்டு பிரிவது நியாயமில்லை.அது செய் நன்றி மறப்பதற்கு ஒப்பாகும்' என்றது.

கிளியின் வார்த்தைகளைக் கேட்ட வேடன் மனம் மகிழ்ந்து, கிளிக்கு வேண்டிய வரத்தைக் கேட்கச் சொன்னான்.

கிளி உடனே.."பட்டுப்போன் இம்மரம் மீண்டும் தழைக்க வேண்டும்.பசுமையோடு..காய், கனிகளுடன் இருக்க வேண்டும்" என்றது.

இந்திரனும் அது போல வரமளிக்க, ஆலமரம் மீண்டும் துளிர்த்து பசுமையுடன் காட்சி தந்த.து.

எந்த ஒரு செயலை நாம் செய்ய மறந்தாலும்...ஒருவர் நமக்குச் செய்த நன்றியை மறவாது இருப்பதுடன்..உதவி செய்தவருக்கும் நம்மாலான சேவைகளை செய்ய வேண்டும். 

Friday, March 20, 2015

மகாபாரதக் கதைகள்-11)தரும வியாதன்

கௌசிகன் என்னும் முனிவன் காட்டில் தவம் செய்து கொண்டிருந்தான்.அப்போது அவன் அமர்ந்திருந்த மரத்தின் மேலிருந்த கொக்கு ஒன்று எச்சமிட அது முனிவனின் மீது விழுந்தது.அவனது தவம் கலைய அந்தக் கோபத்தில் கொக்கை அவன் பார்க்க கொக்கு இவனது கோப நெருப்பில் வெந்து சாம்பலானது.

தன் தவம் கலைந்தாலும், தனது தவ வலைமை கொக்கை எரித்ததைக் கண்ட முனிவனுக்கு அகங்காரம் உண்டானது.பக்கத்திலிருந்த ஒரு கிராமத்திற்கு அவன் பிச்சைக்காகச் சென்றான்.

ஒரு வீட்டின் முன் நின்று"தாயே! பிச்சையிடுங்கள்" என்றான்.இப்படிக் கூவியும், வீட்டிலிருந்து எந்த பதிலும் வரவில்லை.அந்த வீட்டுப் பெண் அப்போது தனது கணவனுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தாள்.முனிவன் மீண்டும் குரல் கொடுக்க, வீட்டினுள்ளிருந்து "இதோ வருகிறேன் சற்றுப் பொறு'' என்ற குரல் கேட்டது..

பின், அந்த வீட்டிலிருந்து உணவுத் தட்டோடு வீட்டின் தலைவி வந்தாள்.தனது தவ வலைமைத் தெரியாமல் இவள் நம்மைக் காக்க வைத்து விட்டாளே என சற்றுக் கோபத்துடன் முனிவன் அவளைப் பார்த்தான். அவளோ, அவனை சட்டை செய்யாமல் "கொக்கென்று நினைத்தாயோ கொங்ககணவா?" என்றாள்.

உடனே முனிவனுக்கு ஆச்சரியம்.தன் மீது எச்சமிட்ட கொக்கை தான் எரித்தது இவளுக்கு எப்படித் தெரியும்? என வியந்தான்.அவனின் முகக்குறிப்பை உணர்ந்த அப்பெண் "முனிவரே! நீர் தவம் பற்றி தெரிந்து கொண்ட அளவிற்குத் தருமத்தைப் பற்றி அறியவில்லை.தருமம் பற்றி அறிய, மிதிலை நகர் சென்று அங்கு வாழும் தருமவியாதனிடம் போகவும்" என்றாள்.

முனிவரும், மிதிலை நகருக்குச் சென்றார் .அங்கு தருமம் பற்றி தனக்கு போதிப்பவன் ஒரு தவசியாய் இருப்பான் என எணணினார்.ஆனால், தருமவியாதனோ ஒரு கசாப்புக் கடையில் இறைச்சி வியாபாரம் செய்து வந்தான்.இவன் திகைப்பைப் பார்த்த தருமவியாதன்"தருமத்தைப் பற்றி அறிய அப்பெண் உன்னை அனுப்பினாளா? " எனக் கேட்டான்.முனிவனின் திகைப்பு இப்போது வியப்பாய் மாறியது. அப்பெண் என்னிடம் சொன்னது இவனுக்கு எப்படித் தெரிந்தது என வியந்தான்.ஆனால் முனிவனின் வியப்பிற்கு விடை தருமவியாதன் வீட்டில் கிடைத்தது.

தருமவியாதன், முனிவனை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவனை ஒரு பக்கமாக அமரச் செய்து விட்டு, தனது வயதான தாய் தந்தையரைக் குளிப்பாட்டி, அவர்களுக்கு உணவளித்து, ஓய்வு கொள்ள செய்து விட்டு முனிவனிடம் வந்தான்.முனிவன் அவன் சொல்ல வருவதை
க் கேட்காமல், வீட்டில் தான் விட்டு விட்டு வந்த தாய், தந்தையரைக் காண ஓடினான்.

உலகில் தவத்தினும் மேலான தருமம், தாய், தந்தையரைப் பேணுதல் என்று இதன் மூலம் அறியலாம்.