Friday, January 30, 2009

11 - சகோதரர்கள் திருமணம்

திருதராட்டிரன், பாண்டு, விதுரர் மூவரையும்.. பீஷ்மர் தந்தை போல் இருந்து கவனித்துக் கொண்டார்.போர் பயிற்சிகளையும்,சாத்திரக் கல்வியையும் அளித்தார்.அரசு காரியங்களை பீஷ்மரே கவனித்துக் கொண்டதால்..நாட்டில் நல்லாட்சியும், அமைதியும் நிலவியது.

மைந்தர்கள் மூவரும்..மணப்பருவம் அடைய... பீஷ்மர் திருதராட்டினனுக்கு காந்நார நாட்டு மன்னன் சுபவனுடைய மகளான காந்தாரியை மணமுடித்தார்.கணவன் குருடனாக இருந்ததால், காந்தாரியும்...வாழ்நாள் முழுவதும்..கண்களை துணியால் கட்டிக்கொண்டு தானும் குருடு போலவே இருந்தாள்.(காந்தாரியின் இவ்விரதம்...பீஷ்மரின் விரதம் போன்றது).காந்தாரியின் பத்து சகோதரிகளும் திருதராட்டிரனை மணந்துக் கொண்டனர்.கௌரவ வம்ச அழிவுக்குக் காரணமான சகுனி..காந்தாரியின் சகோதரன் ஆவான்.

யது வம்சத்தில் சூரசேனன் என்னும் மன்னன் இருந்தான்..அவனுக்கு பிரிதா..என்ற மகளும், வசுதேவன் என்னும் மகனும் பிறந்தனர்.(இந்த வசுதேவனே...கிருஷ்ணனின் தந்தை ஆகும்)சூரசேனன் தன் மகளை குந்திராஜனுக்கு..வளர்ப்பு மகனாகக் கொடுத்தான்.இதனால் பிரிதாவிற்கு..குந்தி என்ற பெயர் உண்டானது.ஒரு சமயம்....மகரிஷி துர்வாசருக்கு...குந்தி பணிவிடை செய்ய...அதனால் மனம் மகிழ்ந்த ரிஷி..அவளுக்கு ஒரு மந்திரத்தை அருளினார்.அதை உச்சரித்தால்...வேண்டிய தெய்வம் தோன்றி அருள் பாலிக்கும் என்றார்.

மந்திரத்தை சோதிக்க எண்ணிய குந்தி...ஒருநாள் சூரியனை நினைத்து அம்மந்திரத்தை ஓத...சூரியனும் தோன்றி..அவளுக்கு மகப்பேறு அளித்தான்.இந்நிகழ்ச்சிக்குப்பின் அஞ்சி அக்குழந்தையை..ஒரு பெட்டியில் வைத்து கங்கை ஆற்றில் விட்டு விட்டாள் குந்தி.பின் சூரிய பகவான் அருளால் மீண்டும் கன்னியானாள்.இந்த ரகசியம் யாருக்கும் தெரியாது..ஆற்றில் விடப்பட்ட குழந்தையே பின்னர் கர்ணன் என புகழப்பட்டவன்.

கண்பார்வை இல்லாததால்..திருதராட்டிரன்..அரசாளும் தகுதியை இழந்தான்.பின் பீஷ்மர் பாண்டுவை அரியணையில் அமர்த்தி..அவனுக்கு முடி சூட்னார்.திருதிராட்டிரன் பெயரளவில் மன்னனாய் இருந்தான்.பாண்டுவிற்கு...மணம் முடிக்க நினைத்தார் பீஷ்மர்..குந்தியின் சுயம்வரத்தில்..குந்தி பாண்டுவிற்கு மாலை சூட்டினாள்.

சில காலத்திற்குப் பிறகு..மந்திர நாட்டு மன்னன் மகளும், சல்லியனின் தங்கையுமான மாத்ரி என்பவள் பாண்டுவிற்கு இரண்டாம் மனைவி ஆனாள்.

விதுரர்...தேவகன் என்னும் மன்னனின் மகளை மணம் புரிந்தார்.

இவ்வாறு..மூன்று சகோதரர்களுக்கும் திருமணம் நிறைவேறியது.

Thursday, January 29, 2009

10 - வியாசர் வந்தார்

பீஷ்மரும்..குலத்துக்கு அனுகூலம் என்பதாலும், தர்மசாத்திரத்திற்கு இதனால் கேடில்லை என்பதாலும்..சத்யவதி கூறியதற்கு தடையேதும் சொல்லவில்லை.உடனே சத்யவதி வியாசரை நினைக்க..மகரிஷி தாய் முன்னே தோன்றினார்.

அன்னையே..என்னை அழைத்தது ஏன்? என அவர் வினவ..சத்யவதியும்..'தவத்தோனே..நீ எனக்கு மூத்த மகனாய்..உண்டாக்கப்பட்டிருக்கிறாய்...விசித்திர வீரியன்..எனது இளைய மகன்.பீஷ்மரும் உனக்கு அண்ணனாவார்.பீஷ்மர்..குல சந்ததி விருத்திக்கு..அவரது பிரமசரிய விரதத்தால் உதவ முடியாதவராக இருக்கிறார்.ஆகவே நீ என் கோரிக்கையை ஏற்று...உன் இளைய சகோதரனின் மனைவி
யர்தேவமகளிர் போன்றவர்கள்..அவர்களிடம் நீ சந்ததியை உருவாக்க வேண்டும்' என்றாள்.

அதற்கு வியாசர், தாயே!. புத்திரதானத்தை..சாத்திரங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன.ஆனால் நான் சந்ததியைத் தர வேண்டுமென்றால்..அம்மகளிர் இருவரும்..என் விகாரத் தோற்றத்தைக் கண்டு..அருவருப்புக் கொள்ளக்கூடாது.என் உடலிலிருந்து வீசும்..துர்நாற்றத்தைப் பொருட்படுத்தக் கூடாது.அப்படி அம்பிகை என்னுடன் கூடுவாளாயின்..அவளுக்குப் பிறக்கும் மகன்..நூறு மகன்களைப் பெறுவான்' என்று கூறினார்.

சத்யவதி...அம்பிகையை அழைத்து 'நீ ஒரு மகானுடன் கூடிப் புத்திரனைப் பெற வேண்டும்..இது அரச தர்மம்தான். மறுக்காதே!"என்றாள்.அம்பிகையும் நாட்டின் நலன் கருதி..இதற்கு சம்மதித்தாள்.

அன்றிரவு...வியாசர் அம்பிகையின் அறையில் நுழைந்தார்...அவரது, செம்பட்டையான சடை முடி,விகாரமான தோற்றம்..நாற்றம்..எல்லாம் பார்த்து..அம்பிகை கண்களை மூடிக்கொண்டாள்.அச்சம் காரணமாக கண்களைத் திறக்கவே இல்லை.வியாசர் அம்பிகையுடன் கலந்தார்.

பின் தாயிடம் வந்தவர் 'தாயே! வீரமிக்க மகன் பிறப்பான்..ஆனால்..அம்பிகை கண்களை மூடிக்கொண்டிருந்த படியால்..பிறக்கும் மகன் குருடனாய் இருப்பான்' என்றார்.

மகனே, குரு வம்சத்தில்..குருடனாக இருப்பவன்..அரசாள தகுதியற்றவன்.அதனால்..சிறந்த மகனை அம்பாலிகையுடன் கூடி பெற்றுத்தர வேண்டும் என்றாள்..சத்யவதி.
வியாசர் கூறியபடி..அம்பிகைக்கு ஒரு குருட்டுக் குழந்தை பிறந்தது..அதுவே..'திருதிராட்டினன்'.

பின்..வியாசரை அழைத்தாள் சத்யவதி.வியாசரும் அம்பாலிகையுடன் சேர்ந்தார்.ஆனால் அம்பாலிகை..வியாசரின் கோரத்தோற்றம் கண்டு..பயந்து..உடல் வெளுத்தாள்.உடன் வியாசர்.'.உனக்குப் பிறக்கும் மகனும் வெண்மை நிறத்துடன் இருப்பான்.பாண்டு அவன் பெயர்..அவனுக்கு 5 பிள்ளைகள் பிறப்பர்' என்றார்.அம்பிகையும் அதுபோல மகனை பெற்றெடுத்தாள்.

இரு குழந்தைகளும்..குறைபாடுடன் இருந்ததால்..'அம்பிகைக்கு..இன்னொரு மகனைத் தர வேண்டும்' என சத்யவதி வேண்டினாள்.

ஆனால்..அம்பிகை அவருடன் மீண்டும் சேர மனமில்லாது..ஒரு பணிப்பெண்ணை அனுப்பினாள்.பணிப்பெண்ணும்..வியாசரும்..மன மகிழ்சியுடன் கூடினர். பின் வியாசர்..'பணிப்பெண்ணின் அடிமைத் தன்மை நீங்கியது என்றும்..அவளுக்கு பிறக்கும் குழந்தை..சிறந்த ஞானியாய் விளங்குவான் என்றும் கூறி..அவன் பெயர் விதுரன் என்று சொல்லி மறைந்தார்.

வியாசர் மூலமாக..அம்பிகை,அம்பாலிகை,பணிப்பெண் ஆகியோருக்கு..திருதிராட்டினன்,பாண்டு,விதுரன் ஆகியோர் பிறந்தனர்.

Tuesday, January 27, 2009

9. சத்யவதியின் கதை

அம்பை வெளியேறியபின் பீஷ்மர்..விசித்திர வீரியனுக்கு..அம்பிகை,அம்பாலிகையை மணம் செய்வித்தார்.இவர்களுடன் ஏழு ஆண்டுகள் வாழ்ந்த விசித்திர வீரியன்..காச நோயால் இறந்தான்.

நாட்கள் சில சென்றதும்..சத்யவதி..பீஷ்மரிடம் 'மகனே! உன் தம்பி மக்கள் பேறின்றி இறந்தான்.சந்தனுவின் குலம் தழைக்க வேண்டும்.தருமசாத்திரம் தெரிந்தவன் நீ...புத்திரர் இல்லா குலம் எப்படி தழைக்கும்..ஆகவே..நீ அம்பிகை..அம்பாலிகையுடன் கூடிப் புத்திர சந்ததியை உண்டாக்கு..' என்றாள்.

ஆனால்..பீஷ்மரோ..'அன்னையே! நீங்கள் உரைத்தது..மேலான தர்மமே...ஆனாலும் என் சபதத்தை நான் மீறமாட்டேன்..'என உறுதியாக உரைத்தார்.

அதற்கு சத்யவதி..'ஆபத்துக் காலங்களில்..சாத்திரம் பார்க்க வேண்டியதில்லை..நெருக்கடியான நேரங்களில் ..தர்மத்தில் இருந்து..விலகுதல் பாவம் இல்லை.ஆகவே நான் சொல்வது போல செய்..' என்றாள்.

ஆனால் பீஷ்மரோ..'அன்னையே..நம் குலம் தழைக்க ..வேறு ஏதேனும் யோசியுங்கள்..'என்றார்.பின் சத்யவதி பீஷ்மரிடம்..தன் கதையைக் கூறலானாள்...

'கங்கை மைந்தனே! இன்று ஒரு உண்மையை உன்னிடம் தெரிவிக்கிறேன்.அது ரகசியமாகவே இருக்கட்டும். முன்பு வசு என்ற மன்னனின் வீரியத்தை.ஒரு மீன் தன் வயிற்றில்..கர்ப்பமாக தாங்கியிருந்தது.அந்த மீன் வயிற்றில் வளர்ந்தவள் நான்தான்.ஒருநாள் ஒரு செம்படவன்..அம்மீனை தன் வீட்டிற்கு கொண்டுபோனான்.அங்கு நான் பிறந்தேன்.அவர் பின் என்னை தன் மகளாய் வளர்த்தார்.நானும் வளர்ந்து கன்னிப்பருவம் எய்தினேன்.யமுனை ஆற்றில் பரிசல் ஓட்ட ஆரம்பித்தேன்.

அப்போது ஒரு நாள்..பராசர முனிவர் என் படகில் ஏறினார்.என்னைப் பார்த்து காமவயப் பட்டார்.ஆனால் நானோ பயந்தேன்.அப்போது அவர்..'நான் செம்படவப் பெண் இல்லை என்று உணர்த்தினார்.உடன் நான் இந்த பகல் நேரத்திலா ..என்றேன்.அவர் உடனே சூரியனை மறைத்து இருளாக்கினார்.

என் உடலில் மீன் நாற்றம் வீசுகிறதே..என்றேன்..உடன் என் உடலில் நறுமணம் வீச வைத்தார்.

இந்த நதிக்கரையிலேயே..நீ கர்ப்பம் அடைந்து...குழந்தை பிறந்து மீண்டும் கன்னியாகி விடுவாய்..என்றார்.

பின்..அவர் என்னைச் சேர்ந்து..ஒரு மகனை உண்டாக்கிவிட்டார்.

எனக்குப் பிறந்த அந்த மகன்..'த்வைபாயனன்' என்றழைக்கப்பட்டான்.அவன் யோக சக்தியால்..மகரிஷி ஆனான்.வேதங்களை நான்காக வகுத்தான்..அதனால் வேதவியாசன் என்ற பெயர் பெற்றான்.

நீ சம்மதித்தால்..நான் அவனுக்கு கட்டளை இடுகிறேன்..உடன் அந்த மகரிஷி..இங்கு தோன்றி..அம்பிகை,அம்பாலிகைக்கு புத்திர பாக்கியம் அளிப்பான்.'..என்றாள்.

Monday, January 26, 2009

8- சிகண்டி

மறுபிறவி எடுக்க நினைத்த அம்பை உடனே தீயில் விழுந்து மாண்டு போனாள்.துருபதனின் மகளாக பிறந்தாள்.சிகண்டி என்ற பெயர் தாங்கினாள்..ஒருநாள் அரண்மணை வாயிலில் மாட்டப்பட்டிருந்த ..அந்த அழகிய தாமரை மாலையைக் கண்டு..அதை எடுத்து அணிந்துக் கொண்டாள்.இதை அறிந்த துருபதன்..பீஷ்மருக்கு பயந்து..தன் மகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பினான்.

பின் சிகண்டி தவ வாழ்க்கை மேற்கொண்டாள்.இஷிகர் என்னும் முனிவருக்கு பணிவிடை செய்யும் போது அம்முனிவர்..'கங்கை ஆற்றின் உற்பத்தி இடத்தில்..விபஜனம்..என்னும் விழா நடை பெறப்போகிறது..அதற்கு வரும் தும்புரு என்னும் மன்னனுக்கு பணிவிடை செய்தால்..உன் எண்ணம் ஈடேறும்'என்றார்.

சிகண்டி அங்குப் போனாள்.அங்கு பல கந்தர்வர்கள் இருந்தனர்.அவர்களில் ஒருவன் சிகண்டியைப்பார்த்து 'நாம் இருவரும் உருவத்தை மாற்றிக்கொள்ளலாமா? அதாவது..உன் பெண் வடிவத்தை எனக்குத் தா..நான் என் ஆண் வடிவத்தை உனக்குத் தருகிறேன்' என்றான்.

சிகண்டியும்..அதற்கு சம்மதித்து ஆணாக மாறினாள்.

பின் போர் பயிற்சிகளில் ஈடுபட்டு..நிகரற்ற வீரனாக திகழ்ந்தாள். பாஞ்சாலத்திற்கு திரும்பச் சென்று..தந்தை..துருபதனை சந்தித்து..நடந்த விஷயங்களைக் கூறி.'இனி பீஷ்மருக்கு பயப்பட வேண்டாம்'என்றாள்.

துருபதனும்..மகிழ்ந்து அவனை(ளை) ஏற்றுக்கொண்டான்.

Sunday, January 25, 2009

7. அம்பையின் தவம்

சால்வனை சந்தித்த அம்பை..'மன்னா..நாம் முன்னரே உள்ளத்தால் கலந்துள்ளோம்..இப்போது முறைப்படி மணம் செய்துக்கொள்வோம்' என்றாள்.

அதற்கு சால்வன் 'பெண்ணே..மன்னர் பலர் இருந்த அவையிலிருந்து பலந்தமாக பீஷ்மர் உன்னைக் கவர்ந்து சென்றார்.மற்றவரால் கவரப்பட்டு..பின் அவர் வீட்டிலிருந்து அனுப்பப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய மாட்டேன்.நீ திரும்ப செல்' என்றான்.

சால்வனின் இந்த முடிவினால்..என்ன செய்வது என்று அறியாத அம்பை..மீண்டும் அஸ்தினாபுரம் சென்றாள்..பீஷ்மரை நோக்கி..'சுயம்வர மண்டபத்திலிருந்து என்னை கவர்ந்து வந்த நீரே தர்மசாத்திரப் படிஎன்னை மணம் புரிய வேண்டும்' என்றாள்.

ஆனால்..பீஷ்மரோ 'நான் பிரமசரிய விரதம் பூண்டுள்ளேன்' எனக்கூறி மறுத்தார்.

மாறி மாறி கண்ணீருடன்..சால்வனிடமும், பீஷ்மரிடமும் முறையிட்டபடியே ஆறு வருடங்களைக் கழித்தாள் அம்பை.பின் இமயமலை சாரலை அடைந்து, அங்குள்ள பாகூத நதிக்கரையில்..கட்டை விரலை ஊன்றி நின்று..கடுந் தவம் செய்தாள் பன்னிரெண்டு ஆண்டுகள்.

முருகப்பெருமான்..அவளுக்குக் காட்சி அளித்து..அழகிய மாலை ஒன்றை கொடுத்து..'இனி உன் துன்பம் தொலையும்.அழகிய இந்த தாமரை மாலையை அணிபவனால்..பீஷ்மர் மரணமடைவார்' என்று கூறி மறைந்தார்.

பின் அம்பை..பல அரசர்களிடம் சென்று 'இந்த மாலை அணிபவர் பீஷ்மரைக் கொல்லும் வல்லமை பெறுவார்..யார் பீஷ்மரைக் கொல்கிறார்களோ..அவருக்கு நான் மனைவி ஆவேன்..யாராவது இம்மாலையை வாங்கிக் கொள்ளுங்கள்' என வேண்டினாள்.

பீஷ்மரின் பேராற்றலுக்கு பயந்து யாரும் முன் வரா நிலையில்...ஆண்டுகள் பல கடந்தன.ஆனாலும் அம்பை தன் முயற்சியைக் கைவிடவில்லை.பாஞ்சால அரசன் துருபதனை சந்தித்து'துயரக்கடலில் மூழ்கி யுள்ள..என்னை கை தூக்கி விடுங்கள்' என்றாள்.

அவனும்..பீஷ்மருடன் போராடும் ஆற்றல் எனக்கில்லை' என்று ஒதுங்கினான்.இனி ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில்..அம்மாலையை அம்மன்னனின் மாளிகையில் போட்டுவிட்டு..'பெண்ணே!மாலை எடுத்துச் செல்' என்று கூறிய மன்னனின் வார்த்தைகளையும் புறக்கணித்து வெளியேறினாள் அம்பை.

துருபதனும்..அம்மாலையை காத்து வந்தான்.அம்பை பின் ஒரு காட்டிற்குச் சென்று..அங்கு தவமிருந்த ஒரு முனிவரை சந்தித்தாள்.அவர்..அவளை பரசுராமரைப் பார்க்கச் சொன்னார்.

அம்பையும்..பரசுராமரை சந்தித்து..தன் நிலமையை சொன்னாள்.பரசுராமர் பீஷ்மரை சந்தித்து..அம்பையை மணக்கச்சொல்ல பீஷ்மர் இணங்கவில்லை.ஆகவே இருவருக்குள் போர் மூண்டது.

இருவரும் வல்லமை மிக்கவர்கள் ஆனதால்..யார் வெற்றிப் பெறுவார்..எனக் கூற இயலாத நிலையில்..பரசுராமர் விலகிச் சென்றார்.

மீண்டும்..தோல்வியுற்ற.அம்பை..சிவனை நோக்கி தவமிருந்தாள்.சிவன் அவளுக்கு காட்சி அளித்து'பெண்ணே! உன் கோரிக்கை இப்பிறவியில் நிறைவேறாது.அடுத்த பிறவியில் அது நடக்கும்..உன்னைக் காரணமாகக் கொண்டு பீஷ்மருக்கு மரணம் எற்படும்'என்றார்

Friday, January 23, 2009

6. அம்பை..அம்பிகை..அம்பாலிகை..

பெரியோர்கள் ஆசியோடு செம்படவப் பெண் சத்தியவதியை அழைத்துக்கொண்டு சந்தனுவிடம் வந்தார் பீஷ்மர்.அவரின் சபதத்தை கேள்விப்பட்டு சந்தனு வருத்தமுற்றான்.பின் மகனுக்கு ஒரு வரம் அளித்தான் "இம்மண்ணுலகில் எவ்வளவு காலம் நீ உயிருடன் இருக்க விரும்புகிறாயோ அவ்வளவு காலம் வாழ்வாய்..எமன் உன்னை அணுகமாட்டான்" என்றான்.

சத்தியவதி உண்மையில் சேதி நாட்டு அரசனான உபரிசரஸ் என்னும் மன்னனின் மகள்.செம்படவ அரசனால் வளர்க்கப்பட்டவள்.

சந்தனுவிற்கும்,அவளுக்கும் முதலில் சித்திராங்கதன் என்னும் மகன் பிறந்தான்.பின் விசித்திர வீரியன் பிறந்தான்.சந்தனு மரணம் அடைந்ததும் பீஷ்மர் சித்திராங்கதனை அரசனாக்கினார்.ஒருசமயம் அவன் ..கந்தர்வ நாட்டு அரசனுடன் போர் செய்ய நேர்ந்தது.அந்த கந்தர்வ அரசன் பெயரும் சித்திராங்கதன்" உன் பெயரை மாற்றிக்கொள்" என்றான் கந்தர்வ மன்னன்.:இல்லாவிட்டால் போரிட வா" என சவால் விட்டான்.போரில் சந்தனுவின் மகன் மரணம் அடைந்தான்.

பீஷ்மர் அடுத்து..விசித்திர வீரனை அரசனாக்கினார்.அவனுக்கு மணம் முடிக்க எண்ணினார்.அந்த சமயம் காசி நாட்டு மன்னன் அவனது மூன்று மகளுக்கும் சுயம்வரம் நடத்துவது அறிந்து,பீஷ்மர் காசியை அடைந்தார்.

சுயம்வரத்தில் பல அரசர்கள் கூடியிருந்தனர்.அம்பை,அம்பிகை,அம்பாலிகை என்பது அவர்களது பெயர்.பீஷ்மரின் வயது கண்டு அவர்கள் விலகினர்.சில மன்னர்கள் பீஷ்மரை பார்த்து"நரை கூடிய கிழப்பருவத்தில் திருமண ஆசையா...உன் பிரம்மசரிய விரதம் என்னவாயிற்று" என்று சிரித்தனர்.

பீஷ்மர் கடும் கோபம் அடைந்தார்.மூன்று பெண்களையும் பலவந்தமாக..தேரில் ஏற்றிக்கொண்டு வந்தார்.மன்னர்கள் முறியடிக்கப் பார்த்து தோற்றனர்.

ஆயினும்,சௌபல நாட்டு மன்னன் சால்வன்..கடும் போர் செய்து..தோற்று ஓடினான்.

பின்..பீஷ்மர்..மூன்று பெண்களையும்..தன்..மகள் போல..மருமகள்கள் போல அழைத்துக் கொண்டு அஸ்தினாபுரம் வந்தார்.அப்பெண்களை விசித்திர வீரியனுக்கு திருமணம் செய்யும்..முயற்சியில் ஈடுபட்டார்.அப்போது அப்பெண்களில் மூத்தவள் அம்பை..'என் மனம் சௌபல நாட்டு மன்னன் சால்வனிடம் சென்றுவிட்டது.அவனையே மணாளனாக அடைவேன்'என்றாள்.

உடன் பீஷ்மரும்'பெண்ணே! உன் மனம் அவனை நாடினால்..தடையேதும் இல்லை...இப்பொழுதே நீ அவனிடம் செல்லலாம்'என்றார்.

அம்பையும்..சௌபல நாடு நோக்கி சென்றாள்.

Tuesday, January 20, 2009

5.பீஷ்மர்

தந்தையை எண்ணி..சிந்தனை வயப்பட்டான் தேவவிரதன்.பின் எப்படியாவது..அந்த பெண்ணை தன் தந்தைக்கு மணமுடிக்க எண்ணினான்.யமுனைக் கரையை நோக்கி விரைந்தான்.

செம்படவ அரசன்...தேவவிரதனை மிக்க மரியாதையுடன் அழைத்துச் சென்றான்.

தேவவிரதன் தான் வந்த நோக்கத்தைச் சொன்னான்..

செம்படவ மன்னனோ..தன் நிபந்தனையை மீண்டும் வலியுறுத்தினான்.'என் மகளுக்குப் பிறக்கும் மகனே...சந்தனுக்குப் பின் அரசுரிமை பெறவேண்டும் ' என்றான்.

உடனே..தேவவிரதன் 'இவளுக்குப் பிறக்கும் மகனே..அரசுரிமை ஏற்பான்.வேறு யாருக்கும் அந்த உரிமை இல்லை' என்று உறுதியாகக் கூறினான்.'நீங்கள் திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டும்'என்றான்.

செம்படவ அரசன்..'தேவவிரதனே..அரச குலத்தில் பிறந்தவன்...கூறாததை நீர் கூறினீர்...நீர் சொல்வதை உம்மால் காப்பாற்ற இயலும்..நீங்கள் சத்தியம் தவறாதவர் என்பதில்..எனக்கு துளியும் சந்தேகம்
கிடையாது. ஆனால் உமக்கு உண்டாகும் சந்ததிப் பற்றி..எனக்கு சந்தேகம் உண்டு.நீங்கள் இப்போது தரும் வாக்குறுதியை..உம் சந்ததியினர் மீறலாம் இல்லையா?'என வினவினான்.

உடன் தேவவிரதன் கூறுகிறான்...

'செம்படவ அரசே! எனது சபதத்தை கேளுங்கள்.இங்குள்ள புலனாகாத..பூதங்களும்..பலர் அறிய வீற்றிருப்போரும்..இந்த சபதத்தை கேட்கட்டும்.அரசுரிமையை சற்றுமுன் துறந்து விட்டேன்..சந்ததியையும் துறக்க நான் மேற்கொள்ளும் சபததைக் கேளுங்கள்...இன்று முதல்..பிரமசரிய விரதத்தை மேற்கொள்கிறேன்.நான் பொய் சொன்னதில்லை.என் உயிர் உள்ளவரை..புத்திர உற்பத்தி செய்யேன்.இது சத்தியம்.என் தந்தைக்காக இந்த தியாகம் செய்கிறேன்..இனியாவது சந்தேகம் இல்லாமல்..உம் மகளை என் தந்தைக்கு திருமணம் செய்து கொடுங்கள்'

தேவவிரதனின் இந்த சபதத்தைக் கேட்டு..செயற்கரிய சபதம் செய்த அவன் மன உறுதியை அனைவரும் புகழ்ந்தனர்.அனைவரும் அவரை பீஷ்மர் (யாவரும் அஞ்சத்தக்க சபதம் மேர்கொண்டவர்) எனப்
போற்றினர்.

Sunday, January 18, 2009

4.மகனைக் கண்ட மன்னன்

சந்தனு..காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த போது..கங்கை நதியைக் கண்டான்..இந்த நதியில் நீர் ஏன் குறைவாக ஓடுகிறது..பெருக்கெடுத்து ஓடவில்லை..என்று எண்ணியபடியே நின்றான்.

அப்போது ஒரு வாலிபன், தன் அம்பு செலுத்தும் திறமையால்..கங்கை நீரை தடுத்து நிறுத்துவதைக் கண்டான்.உடன் கங்காதேவியை அழைத்தான்.கங்காதேவி, தன் மகனை கைகளில் பிடித்தபடி,மன்னர் முன் தோன்றினாள்.

'மன்னா..இவன் தான் நமது எட்டாவது மகன்.இவன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன்.வசிஷ்டரின் வேதங்களையும்,வேத அங்கங்களையும் கற்றவன்.தேவேந்திரனுக்கு இணையான இவனை..இனி உன்னிடம் ஒப்படைக்கிறேன்' என்று கூறிவிட்டு கங்காதேவி மறைந்தாள்.

தன் மகனுக்கு..சந்தனு, இளவரசு பட்டம் சூட்டினான்.தன் மகனுடன்..நான்கு ஆண்டுகள் கழித்த நிலையில்..மன்னன் யமுனை கரைக்கு சென்ற போது..ஒரு அழகிய பெண்ணைக் கண்டான்.'பெண்ணே..நீ யார்?யாருடைய மகள்?என்ன செய்கிறாய்?' என்றான்.

அதற்கு அவள்,'நான் செம்படவப் பெண்..என் தந்தை செம்படவர்களின் அரசன்..நான் ஆற்றில் ஓடம் ஓட்டுகிறேன்' என்றாள்.

அவள் அழகில் மயங்கிய அரசன்..அவளுடன் வாழ விரும்பி..அப்பெண்ணின் தந்தையைக் காணச்சென்றான்.

செம்படவன்..மன்னனை நோக்கி'இவளை உங்களுக்கு மணம் முடிக்க ஒரு நிபந்தனை.அதை நிறைவேற்றுவதாக இருந்தால்..மணம் முடித்துத் தருகிறேன்' என்றான்.

அந்த நிபந்தனை..என்ன? நிறைவேற்ற முடியாததாக இருந்தால் வாக்கு தரமாட்டேன்..என்றான் மன்னன்.

'மன்னா..என் மகளுக்கு பிறக்கும்..மகனே..உன் நாட்டை ஆள வேண்டும்' என்றான் செம்படவன்.

நிபந்தனையை ஏற்க மறுத்த மன்னன் ஊர் திரும்பினான்.ஆனாலும் அவனால் அப்பெண்ணை மறக்க முடியவில்லை.உடலும் உள்ளமும் சோர்ந்து காணப்பட்டான்.

தந்தையின் போக்கைக் கண்ட தேவவிரதன்..அவனிடம் போய்..'தந்தையே தங்களின் துயரத்துக்கான காரணம் என்ன?'என்றான்.

மகனிடம், தன் நிலைக்கான காரணத்தைச் சொல்ல..நாணிய மன்னன்..மறைமுகமாக'மகனே..இக்குல வாரிசாக நீ ஒருவனே இருக்கிறாய்..யாக்கை நிலையாமை என்பதை நீ அறிவாயா?நாளை திடீரென உனக்கு ஏதேனும் நேர்ந்தால்..நம் குலம் சந்ததி அற்றுப் போகும்.ஒரு மகன் இறந்தால்..குலத்திற்கு அழிவு ..என சாத்திரங்கள் கூறுகின்றன.அதனால் சந்ததி எண்ணிி மனம் ஏங்குகிறேன்' என்றான்.செம்படவப் பெண் பற்றிக் கூறவில்லை.

மன்னன் ஏதோ மறைக்கிறான் என தேவவிரதன் உணர்ந்தான்.

மன்னனின்..தேரோட்டியைக் கேட்டால், உண்மை அறியலாம் என..தேரோட்டியைக் கூப்பிட்டு விவரம் கேட்டான்.

தேரோட்டி'உங்கள் தந்தை ஒரு செம்படவப் பெண்ணை விரும்புகிறார்.அவளை மணந்தால்..அவளுக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கு முடி சூட்டப் படவேண்டும் என்று நிபந்தனை போடுகிறார்கள்.அதற்கு மன்னன் இணங்கவில்லை.அந்தப் பெண்ணையும் அவரால் மறக்க முடியவில்லை'என்றான்.

Wednesday, January 14, 2009

தேவவிரதன்....அத்தியாயம்-3

'மன்னா..வருணனின் புதல்வனான வசிஷ்டர் முனிவர்களில் சிறந்தவர்.மேருமலைச் சாரலில் தவம் செய்துக் கொண்டிருந்தார்.அவரிடம் நந்தினி என்ற பசு ஒன்று இருந்தது.ஒரு நாள் தேவர்களாகிய இந்த எட்டு வசுக்களும் தத்தம் மனையியருடன் அங்கு வந்தனர்.அப்போது பிரபாசன் என்னும் வசுவின் மனைவி நந்தினியைக் கண்டு..தனக்கு அது வேண்டும் என்றாள்.

மனைவியின்..கருத்தை அறிந்த பிரபாசன்..'இது வசிஷ்ட மகரிஷிக்கு சொந்தமானது.இது தெய்வத்தன்மை வாய்ந்தது..இதன் பாலைப்பருகும் மனிதர்கள் இளமைக் குன்றாமல், அழகு குறையாது..நீண்ட நாள் வாழ்வார்கள்' என்றான்.

உடனே அவன் மனைவி'மண்ணுலகில் எனக்கு ஜிதவதி என்ற தோழி இருக்கிறாள்.அவள் அழகும், இளமையும் கெடாமலிருக்க..இப்பசுவை அவளுக்குத் தர விரும்புகிறேன்'என்றாள்.

மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற பிரபாசன்..மற்ற வசுக்களுடன் காமதேனுவை கன்றுடன் பிடித்துக் கொண்டு வந்தான்.

வசிஷ்டர் ஆசிரமத்திற்கு வந்து பார்த்த போது..பசுவும்..கன்றும் களவாடப்பட்டிருப்பதைக் கண்டார்.'என் பசுவையும்,கன்றையும் களவாடிய வசுக்கள்..மண்ணில் மானிடராகப் பிறக்கட்டும் என சபித்தார்.

வசிஷ்டரின் சாபத்தை அறிந்த வசுக்கள் ஓடோடி வந்து..பசுவையும்,கன்றையும் திருப்பிக் கொடுத்து விட்டு..அவர் காலில் விழுந்து மன்னிக்க வேண்டினர்.

'பிரபாசனைத் தவிர மற்றவர்கள் உடனே சாப விமோசனம் அடைவர்.பிரபாசன் மட்டும் நீண்ட காலம் மண்ணுலகில் வாழ்வான்.அவன் பெண் இன்பத்தைத் துறப்பான்.சந்ததியின்றி திகழ்வான்.சாத்திரங்களில் வல்லவனாக திகழ்வான்,,எல்லோருக்கும் நன்மை செய்வான்' என்றார் வசிஷ்டர்.

வசிஷ்டரின் சாபத்தை சொன்ன கங்காதேவி..'பிரபாசன்..என்னும் வசுவாகிய இவனை..நான் என்னுடன் அழைத்துச் செல்கிறேன்.பெரியவன் ஆனதும் தங்களிடம் ஒப்படைக்கிறேன்..நானும் தாங்கள் அழைக்கும் போது வருகிறேன்'என்று கூறிவிட்டு மறைந்தாள்.

தேவவிரதன் என்றும், காங்கேயன் என்றும் பெயர் கொண்ட அவன்..மேலான குணங்களுடன் வளர்ந்தான்.

மனைவியையும், மகனையும் இழந்த சந்தனு பெரிதும் துன்ப வேதனையுற்றான்.

பின்..மீண்டும் நாட்டாட்சியில் நாட்டம் செலுத்த ஆரம்பித்தான்.அஸ்தினாபுரத்தை தலைநகராய்க் கொண்டு அனைவரும் போற்றும் விதமாய் அரசாண்டான்.

இந்திரனுக்கு..இணையானவனாகவும்..சத்தியம் தவறாதவனாகவும்..விருப்பு..வெறுப்பு அற்றவனாகவும்..வேகத்தில் வாயுக்கு இணையாகவும், சினத்தில் எமனுக்கு இணையாகவும் ..அறநெறி ஒன்றையே வாழும் நெறியாகக் கொண்டு ஆட்சி நடத்தி வந்தான்

Saturday, January 10, 2009

மகாபாரதம்..

அத்தியாயம்-2...சந்தனு

பிரதீப மன்னன் கங்கைக்கரையில் தியானத்தில் இருந்தான்.அப்போது கங்காதேவி,,நீரிலிருந்து கரையேறி மன்னன் முன் நின்றாள்'மன்னா..உங்களுக்கு பிறக்கப் போகும் மகனுக்கு..மனைவியாக விரும்புகிறேன்' என்றாள்.

மன்னனும், 'அவ்வாறே ஆகட்டும்..' என்றான்.

பிரதிபனின் மனைவிக்கு ஒரு மகன் பிறந்தான்.அது..பிரம்ம தேவன் சாபப்படி பிறந்த மகாபிஷக் ஆகும்.அவனுக்கு சந்தனு எனப் பெயரிட்டனர்.

சந்தனு...வாலிபப்பருவம் அடைந்ததும்...அனைத்துக் கலைகளிலும் வல்லவன் ஆனான்.ஒரு நாள் மன்னன் அவனை அழைத்து, 'மகனே! முன்னர் ஒரு பெண் என் முன்னே தோன்றினாள்.தேவலோகத்துப் பெண்ணான அவள்..என் மருமகளாக விரும்புவதாகக் கூறினாள்.அவள்..உன்னிடம் வரும் போது..அவள் யார் என்று கேட்காதே! அவளை அப்படியே ஏற்றுக்கொள்! இது என் கட்டளை' என்றான்.

பின்னர், பிரதீபன்..அவனுக்கு முடி சூட்டி விட்டு..காட்டுக்குச் சென்று தவம் மேற்கொண்டான்'

வேட்டையாடுவதில் விருப்பம் கொண்ட சந்தனு, ஒரு நாள் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த போது, ஒரு அழகிய பெண் நேரில் வரப் பார்த்தான்.இருவரும் ஒருவர் இதயத்துள் ஒருவர் புகுந்து ஆனந்தம் அடைந்தனர்.

சந்தனு 'நீ யாராயிருந்தாலும், உன்னை மணக்க விரும்புகிறேன்' என்றான்.

அந்த பெண்...கங்காதேவி. அவள் தன் நிபந்தனைகளை அவனிடம் தெரிவித்தாள். தன்னைப் பற்றி ஏதும் கேட்கக் கூடாது..தன் செயல்களில் தலையிடக் கூடாது..நல்லதாய் இருந்தாலும், தீதாயிருந்தாலும் தன் போக்கில் விடவேண்டும்.அவ்வாறு நடந்துக் கொண்டால்..அவனது மனையியாக சம்மதம் என்றாள்.

காம வயப்பட்டிருந்த சந்தனு,,அந்த நிபந்தனைகளை ஏற்றான்.திருமணம் நடந்தது. தேவசுகம் கண்டான் மன்னன்.

பல ஆண்டுகள் கழித்து, அவள் ஒரு குமாரனைப் பெற்றாள். உடன், அக்குழந்தையை கங்கையில் வீசும்படிச் சொல்ல, திடுக்கிட்ட மன்னனுக்கு..நிபந்தனைகள் ஞாபகம் வர..அப்படியே செய்தான்.இது போல தொடர்ந்து ஏழு குழந்தைகளை செய்தான்.

எட்டாவது குழந்தை பிறந்த போது..பொறுமை இழந்த மன்னன்..'இதைக் கொல்லாதே..நீ யார்? ஏன் இப்படி செய்கிறாய்? இக் குழந்தையாவது கொல்லாதே!' என்றான்.

உடன்..கங்காதேவி, 'மன்னா..இம்மகனைக் கொல்லமாட்டேன்..ஆனால், நிபந்தனைப் படி நடக்காமல்..என்னை யார்? எனக் கேட்டதால்..இனி உன்னுடன் வாழ மாட்டேன்.ஆனால்..நான் யார் என்பதை சொல்கிறேன்' என்றாள்.

'நான் ஜன்கு மகரிஷியின் மகள்.என் பெயர் கங்காதேவி.தேவர்களுக்கு உதவவே..நான் உன்னுடன் இருந்தேன்.நமக்குக் குழந்தைகளாக பிறந்த இவர்கள்..புகழ் வாய்ந்த எட்டு வசுக்கள்.வசிஷ்டரின் சாபத்தால்..இங்கு வந்து பிறந்தனர்.உம்மைத் தந்தையாகவும், என்னை தாயாகவும் அடைய விரும்பினர்.அவர் விருப்பமும் நிறைவேறியது.சாப விமோசனமும் அடைந்தனர்.எட்டாவது மகனான இவன், பெரிய மகானாக திகழ்வான்.இவனைப் பெற்ற என் கடமை முடிந்தது..எனக்கு விடை தருக' என்றாள்.

கங்காதேவியின் பேச்சைக் கேட்ட சந்தனு..'ஜன்கு மகரிஷியின் மகளே! புண்ணிய புருஷர்களான வசுக்களுக்கு வசிஷ்டர் ஏன் சாபம் இட்டார்?இவன் மட்டும் ஏன் மண்ணுலகில் வாழ வேண்டும்..அனைத்தையும் விளக்கமாக சொல்' என்றான்.

கங்காதேவி..கூறத் தொடங்கினாள்.

(தொடரும்)

Monday, January 5, 2009

அத்தியாயம்-1

இட்சுவாகு குலத்தைச் சேர்ந்த மகாபிஷக் என்ற மன்னன் இவ்வுலகை ஆண்டு வந்தான்.அவனது புண்ணியச் செயல்களால்..அவன் இறந்ததும் தேவலோகம் அடந்தான்.தேவர்களுடன் சேர்ந்து அவன் பிரம்ம தேவரை வணங்கச் சென்றான்..அப்போது கங்கை நதி...கங்காதேவி வடிவில் அங்குத் தோன்றினாள்.

கங்காதேவியின் ஆடை காற்றில் சற்றே விலக..அதைக்கண்ட தேவர்களும்..ரிஷிகளும்..நாணத்தால் தலைக் குனிய..மோக வயப்பட்ட மகாபிஷக் மட்டும்.. அவளையே சற்றும் நாணமின்றி நோக்கினான்.

இச்சம்பவத்தால்..கடும் கோபம் அடைந்த பிரம்மன்..மகாபிஷக்கை 'பூ உலகில் மனிதனாகப் பிறந்து..கங்காதேவியால் விருப்பத்தகாத சிலவற்றை சந்தித்து..துன்புற்றுப் பின் சில வருஷங்கள் கழித்து..நல்லுலகை அடைவாயாக'என சபித்தார்.

பின் அவன் பிரதீப மன்னனின் மகனாகப் பிறந்தான்.

பிரம்மதேவர் அவையில் தன்னை நோக்கிய மகாபிஷக்கை கங்காதேவியும் கண்டு காதல் கொண்டாள்.அவள் திரும்பி வரும்போது..அஷ்ட வசுக்களை சந்தித்தாள்.அவர்கள் மனக்கவலையில் இருந்தனர்.

'தேவி..வசிஷ்டருக்கு சினம் வரும்படி நடந்துக் கொண்டதால் அவர் எங்களை மனிதர்களாக பிறக்க சபித்து விட்டார்.ஆகவே..எங்களுக்கு பூமியில் நீங்கள் தாயாகி எங்களை பெற்றெடுக்க வேண்டும்'என வேண்டினர்.

'உங்களை மண்ணுலகில் பெற்றெடுக்க நான் தயார்..ஆனால்..அதற்கு நீங்கள் விரும்பும் தந்தை யார்' என கங்காதேவி கேட்டாள்.

'தாயே! பிரதீப மன்னன் மண்ணுலகில் புகழுடன் திகழ்கிறான்.அவனுக்கு சந்தனு என்ற மகன் பிறந்து..நாடாளப்போகிறான்.அவனே எங்கள் தந்தையாக விரும்புகிறோம்.'என்றனர் வசுக்கள்.

இதைக்கேட்டு..கங்காதேவியும் மகிழ்ந்தாள்.

மீண்டும்..வசுக்கள்..'வசிஷ்டரின் சாபம் நீண்டகாலம் கூடாது..ஆகவே நாங்கள் பிறந்ததும்..உடனே எங்களை தண்ணீரில் எறிந்து..ஆயுளை முடித்து விட வேண்டும்' என்றனர்.

'உங்கள் கோரிக்கைக்கு ஒரு நிபந்தனை..புத்திரப்பேறு கருதி..ஒரு மகனை மன்னரிடம் விட்டுவிட்டு..மற்றவர்களை...நீங்கள் சொல்வது போல செய்கிறேன்' என வாக்களித்தாள் கங்கை.

வசுக்கள் மகிழ்ச்சியுடன் விடை பெற்றனர்.

(தொடரும்)

உள்ளே புகுமுன்....

பராசர மகரிஷியின் புத்திரர் வியாசர்.வேதங்களை தொகுத்தளித்தவர்.இவர்தான் மகாபாரதம் என்ற புண்ணியக்கதையைக் கொடுத்தவர்.

பாரதத்தை எப்படி உலகுக்கு அளிப்பது என வியாசர் சிந்தித்தார்.பிரம்மனை தியானித்தார்.பிரம்மன் நேரில் காட்சிக் கொடுத்ததும்..அவரிடம்..'பகவானே..இதை எழுதுகிறவர் பூமியில் யாரும் இல்லையே!'என்றார்.

பிரம்மனும்..'உம்முடைய நூலை எழுத..கணபதியை தியானம் செய்யவும்' என்று கூறிச் சென்றார்..

வியாசர் கணபதியை தியானிக்க..கணபதி தோன்றினார்..வியாசர் அவரிடம்..'பாரதத்தை நான் சொல்லச் சொல்ல..நீர் எழுத வேண்டும்" என்ற வேண்டுகோளை வைத்தார்.

வினாயகரும்..ஒப்புக்கொண்டு 'சரி...ஆனால் நான் எழுதும் போது என் எழுதுகோல் நிற்காது..எழுதிக்கொண்டே போகும்..இதற்கு சம்மதித்தால் எழுதுகிறேன்' என்றார்.

இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்ட வியாசர்'பொருளை உணர்ந்துக் கொண்டுதான் நீர் எழுத வேண்டும் ' என்றார்.

வினாயகரும் சம்மதிக்க..வியாசர் சொல்ல ஆரம்பித்தார்.ஆங்காங்கு பொருள் விளங்காமல் முடிச்சுகளை வைத்து அவர் சொல்லிக் கொண்டு போக ..பொருள் அறிய கணேசன் தயங்கிய நேரத்தில்..மற்ற

ஸ்லோகங்களைமனதில் கொண்டு வந்து வியாசர் சொன்னார்...

வாருங்கள்...வணக்கம்...

உலகம் போற்றும் இதிகாசங்கள் ராமாயாணமும்,மகாபாரதமும்.

ராமாயணத்தைவிட மகாபாரதம் பெரியது.ஒரு லட்சம் ஸ்லோகங்களைக் கொண்ட இதில் மனித வாழ்வில் எழும் சிக்கல்களும் உண்டு...அதைத் தீர்க்கும் வழிகளும் உண்டு.

இது சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் நடந்த வரலாறு என்று கூறப்படுகிறது.

மகாபாரதப்போரில்..ஈடுபட்ட வீரர்கள் எண்ணிக்கை முப்பத்தொன்பது லட்சத்து முப்பத்தாறாயிரத்து அறுனூறு.பதினெட்டு நாட்கள் போருக்குப்பின்...10 பேர் தவிர..அனைவரும் மாண்டனர்..

இறை நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே இதை படிக்க வேண்டும் என்பதில்லை.அனைவரும் படிக்கலாம்.தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு...அற்றதை விட்டு விடலாம்.

இப்பதிவின் நோக்கமே ..எளிமையாக...மகாபாரதக் கதையை சொல்ல வேண்டும் என்பதுதான்.

அனைத்து பதிவர்கள் ஆதரவையும்...அனைத்து..தமிழ் திரட்டிகளின் ஆதரவையும் வேண்டுகிறேன்...