Thursday, November 12, 2009

75-பதினெட்டாம் நாள் போர்

கௌரவர்கள் பக்கம் மீதம் இருந்தது சில வீரர்களே..இந்நிலையில், துரியோதனன் வேண்டுகோளை ஏற்றுச் சல்லியன் அன்றைய போருக்குத் தளபதி ஆனான்.கர்ணன் போர்க்களத்தில் இறந்தால் தானே போர்க்களம் சென்று கண்ணனையும், அர்ச்சுனனையும் கொல்வதாகக் கர்ணனிடம் கூறிய உறுதிமொழியை மனதில் கொண்டான்.சல்லியனை எதிர்த்து போராட தருமர் முன் வந்தார்.

இரு திறத்துப் படை வீரர்களும் போர்க்களம் அடைந்தனர்.இதுவரை நடந்த போரில் ஏராளமான உயிர்ச் சேதம்,பொருட் சேதம் ஏற்பட்டிருந்தது.தவிர யானைப்படை, தேர்ப்படை, காலாட் படை, குதிரைப் படை என்ற நால்வகைப் படைகளின் அழிவு பேரழிவுதான்.

சல்லியன் சிறு வியூகம் வகுத்தான்.அதற்கேற்பப் பாண்டவர்களும் வியூகம் அமைத்தனர்.நகுலன் கர்ணனின் புதல்வன் சித்திரசேனனுடன் போரிட்டான்.இருவரும் கடுமையாக போரிட்டனர்.இறுதியில் சித்திரசேனன் இறந்தான்.கர்ணனின் மற்ற இரு மைந்தர்களும் நகுலனுடன் போரிட்டு மாண்டனர்.சல்லியனின் புதல்வனைச் சகாதேவன் கொன்றான்.சல்லியனை எதிர்த்து..தருமர் போரிட்ட போது..பீமன் தருமருக்குத் துணையாக வந்தான்.அவனை சல்லியன் தாக்கினான்.தருமருக்கும்,சல்லியனுக்கும் விற்போர் நீண்ட நேரம் நடந்தது.கடைசியில்..தருமர் சீற்றம் கொண்டு..ஒரு வேலைச் செலுத்த அது சல்லியனை கொன்றது.

பின்..சகுனி போருக்கு வந்தான்.அவனைச் சகாதேவன் எதிர்த்து போரிட்டான்.சகுனியின் மகன் உலூகனுக்கும் நகுலனுக்கும் போர் நேர்ந்தது.உலூகன் நகுனனால் கொல்லப்பட்டான்.அதை அறிந்த சகுனி..பல பாண்டவ வீரர்களைக் கொன்றான்.ஆனால்..சகாதேவனை எதிர்த்து நீண்ட நேரம் அவனால் போரிட முடியவில்லை.அப்போது சகாதேவன்..'அடப்பாவி..உன்னால் அல்லவா இந்தப் பேரழிவு..குல நாசம் புரிந்த கொடியவனே! இது சூதாடும் களம் அல்ல..போர்க்களம்..இங்கு உன் வஞ்சம் பலிக்காது' என்றபடியே சகுனியின் தலையை ஒரு அம்பினால் வீழ்த்தினான்.பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் செய்த சபதம் நிறைவேறியது.

துரியோதனன் படைகள் அழிய,தளபதிகள்,உடன் பிறந்தோர் என பலரை இழந்தான்.போர்க்களத்தை உற்று நோக்கினான்.தன்னைத் தவிர யாரும் இல்லை என உணர்ந்தான்.ஒரு கதையை எடுத்துக்கொண்டு நடந்தான்.தன்னைக் காண வந்த சஞ்சயனிடம் 'நான் ஒரு மடுவில் இருப்பதாகக் கூறிவிடு' என்று அனுப்பி விட்டு மடுவில் புகுந்துக் கொண்டான்.பாண்டவர்கள் துரியோதனனைத் தேடினர்.அவன் மடுவில் இருப்பதை சில வேடர்கள் தெரிவித்தனர்.

அவன் இருக்குமிடம் வந்த தருமர் 'துரியோதனா..சத்ரியனான நீ போர்க்களத்தை விட்டு ஒடி வந்து பதுங்கிக் கொண்டாயே..அதுவா வீரம்..எழுந்து வெளியே வந்து போர் செய்' என்றார்.அதற்கு துரியோதனன்..'தருமரே..நான் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்கிறேன்.நாளை வந்து போர் செய்வேன் அல்லது காட்டிற்குச் சென்று தவம் செய்வேன்.எனக்குரிய நாட்டை தருமமாகத் தருகிறேன் .பெற்றுக்கொள்' என்றான்.

நடுவே புகுந்த பீமன்..'வீண் பேச்சை நிறுத்து..கதை யுத்தம் செய்வோம் வா' என்றான்.வேறுவழியின்றி துரியோதனனும் சம்மதித்தான்.இருவரும் குருசேத்திரத்தின் மெற்குப் பகுதியில் உள்ள புனிதமான சமந்த பஞ்சக மடுவின் கரைக்குச் சென்றார்கள்.சமமாகவே போரிட்டனர்.இரண்டு கதாயுதங்களும் மோதும் போது ஏற்பட்ட ஒலி எட்டு திக்கும் எதிரொலித்தது.போர் முடிவிற்கு வருவதாகத் தெரியவி
ல்லை.அப்போது கண்னன்..யுத்த நெறிக்கு மாறாகப் போர் செய்தால்தான் அவனை வீழ்த்தமுடியும் என்பதை உணர்ந்து..அவன் தொடையைப் பிளக்க வேண்டும்..என அர்ச்சுனனிடம் குறிப்பால் தெரிவிக்க..அர்ச்சுனனும் பீமன் பார்க்குமாறு தன் தொடையைத் தட்டிக்காட்டினான்.குறிப்பறிந்த பீமன்..தனது கதாயுதத்தால் துரியோதனனின் இரு தொடைகளையும் முறித்தான்.நிற்கவும் இயலாது துரியோதனன் கீழே வீழ்ந்தான்.ஆத்திரமும், சினமும் கொண்டு'பீமா இதுவா போர் முறை?இதுவா சத்திரிய தர்மம்?' என்றான். (தொடரும்)

3 comments:

பித்தனின் வாக்கு said...

மிக்க நன்றி. மிக அழகாக கூறியுள்ளீர்கள். எனக்கு ஒரு சந்தோகம், தன் தாய்மாமா சல்லியன் எதிர் அணியில் சென்றதற்காக பழிதீர்க்கும் விதமாக நகுலன் அவரைக் கொன்றான் எனவும், தந்து மருமகன் கையால் அவர் சந்தோசமாக இறந்தார் எனவும் கேள்விப் பட்டேன். அது உண்மையா அல்லது தருமர் தான் அவரைக் கொன்றாரா? நல்ல பதிவு. அடுத்த பதிவுக்காக ஆவலுடன்.
நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நகுலன் கர்ணனின் மகனைக் கொன்றான்..சல்லியன் புதல்வனைச் சகாதேவன் கொன்றான்.ஆனால் சல்லியனை தருமரே கொன்றார்.

பித்தனின் வாக்கு said...

தங்களின் விளக்கத்திற்கு நன்றி.

Post a Comment