Tuesday, August 9, 2011

160-தரும வியாதர் உரைத்த நீதிகள் - 5



வீட்டின் உள்ளே நான்கு அறைகள் இருந்தன.வீடு ஒரு கோயில் போல விளங்கியது.கோயிலில் உள்ள தெய்
வம் போல இருந்தனர் தரும வியாதரின் பெற்றோர்.தெய்வத்தை வழி படுவது போல பெற்றோரை வணங்கி வழிபட்டார் தரும வியாதர்.
'மகனே நீ நீடூழி வாழ்க.நீ நல்ல ஞானத்தை அடைந்திருக்கிறாய்.நாங்கள் உன்னால் உபசரிக்கப் பட்டு தேவ சுகத்தை இங்கேயே அடைந்துள்ளோம்.எங்களைத் தவிர உனக்கு வேறு தெய்வம் இல்லை எனபதை நாங்கள் அறிகிறோம்.உன் நல் ஒழுக்கத்தைக் கண்டு பாட்டனாரும்.முப்பாட்டனாரும் மிகவும் மகிழ்ந்துள்ளனர்.நீ மனத்தாலும்,சொல்லாலும்,செயலாலும் ஒரே தன்மையுடையவனாய் இருக்கிறாய்.ஜமதக்கினி தன் தந்தை பரசுராமரை எப்படி அக்கறையோடு கவனித்துக் கொண்டாரோ அப்படி நீ எங்களைக் கவனித்துக் கொள்கிறாய்' என தரும வியாதரின் பெற்றோர் அவரை மிகவும் பாராட்டினர்.
பின், தரும வியாதர் தன் பெற்றோரை கௌசிகனுக்கு அறிமுகம் செய்தார்.
பின் தரும வியாதர் கௌசிகனிடம்' தாய் தந்தையர் தான் நான் வணங்கும் தெய்வங்கள்.தேவர்கள் தேவேந்திரனை எப்படி வழிபடுகிறார்களோ அப்படி இவர்களை நான் வழிபடுகிறேன்.உயர்ந்த பொருள்களைக் கொண்டு இவர்களை ஆராதிக்கிறேன்.எனக்கு நாங்கு வேதங்களும் இவர்களே.என் மனைவியோடும், மகனோடும் இவர்களுக்கு நானே பணிவிடை செய்கிறேன்.இவர்களுக்கு பிரியமில்லாத எதையும் நான் செய்வதில்லை.உலகில் மேன்மை அடைய வேண்டுமாயின் தாய் தந்தையரை போற்ற வேண்டும்' என்றார் தரும வியாதர்.
அவர் மேலும்,'நீர் மிதிலை சென்று தரும வியாதரைக் காண்பீராயின் அவர் உமக்குத் தருமங்களைக் கூறுவார்' என அக் கற்புக்கரசி சொன்னாள்.இதை என் ஞானத்தால் நான் அறிந்தேன்' என்றார்.
கௌசிகன் தரும வியாதரிடம்' தூய விரதம் உடையவரே! பத்தினியின் சொற்களை அப்படியே உரைத்த உம்மை நான் சிறந்த தவசியாகக் கருதுகிறேன்' எனப் பாராட்டினார்.
தரும வியாதர், "கௌசிகனே..அந்தப் பத்தினி தருமங்களை அறியும் பொருட்டு உம்மை என்னிடம் அனுப்பியிருக்கிறாள்.இவை அனைத்தும் அவளுக்குத் தெரியும்.ஆயினும் என் மூலமாகவே நீர் மேன்மை அடைய வேண்டும்..என்பது அவளது எண்ணம்.நீர் நான் சொல்வதைக் கேட்பீராக! நீர் உம் தாய் தந்தையரைப் போற்றிப் பாதுகாக்கவில்லை.அவர்களின் அனுமதியின்றி வேதப் பயிற்சி பெற வீட்டை விட்டுச் சென்று விட்டீர்.உம்மைப் பிரிந்த துயரத்தால் அவர்கள் அழுது அழுது கண் குருடாயினர்.அவர்களைப் போற்றிப் பாதுகாக்க செல்வீராக' என்றார்.
கௌசிகனும், 'நான் செய்த நல்வினையால் இங்கு வரும் வாய்ப்பினைப் பெற்றேன்.இத்தகைய அறத்தைப் போதிப்பவர் உம்மைத் தவிர வேறு யாருளர்.இப்போது நான் நரகத் துன்பத்திலிருந்து கரையேறி விட்டேன்.உம்மை ஒன்று வேண்டுகிறேன்.சென்ற பிறவியில் உமது நிலை என்னவாக இருந்தது? அதையும் தெரிவிக்க வேண்டும்.அதைத் தெரிந்து கொண்டு என் ஊர் திரும்பி என்னைப் பெற்றோரை நங்கு பாதுகாப்பேன்" என்றான்.
"முற்பிறவியில் நடந்ததைக் கூறுகிறேன்.நான் முற்பிறவியில் அந்தணனாகப் பிறந்தேன்.வேதங்களைக் கற்று பண்டிதன் ஆனேன்.ஆயினும் என் பாவ கர்மத்தால் ஒரு பெரும் குற்றம் நேர்ந்து விட்டது.அரசனுடன் காட்டிற்குச் சென்ற போது, நான் ஒரு அம்பு செலுத்த, அது ஒரு முனிவர் மீது பாய்ந்தது.முனிவர் கடும் சினம் கொண்டார்.நான் விலங்கு என எண்ணி இப்படிச் செய்து விட்டேன்! பொறுத்தருளுவீர்..!! என மன்றாடினேன்.ஆயினும் சினம் தணியாத அம்முனிவர் "நீ வேடனாக பிறப்பாயாக!" என சபித்தார்.அதனால் இப்பிறவியை அடைந்தேன்' என்றார் தரும வியாதர்.
அது கேட்டு கௌசிகன்.."தரும வியாதரே! நீர் அந்தணர் குலத்தில் பிறக்கவில்லை என்பது உண்மை..ஆனாலும் அவர்களைவிட மேலான ஒழுக்கமுள்ளவராக உம்மை மதிக்கிறேண்.அந்தணன் என்பவன் யார்" யார் அறத்தைப் போற்றி பின்பற்றுகிறாரோ அவரே அந்தணர் ஆவார்.பிறப்பால் ஒன்றுமில்லை.அவரவர் ஒழுக்கத்தால் தான் போற்றப்படுகிறார்கள்...என்பதை நங்கு புரிந்து கொண்டேன்.அறிவைவிட உயர்ந்த ஞான ஒளி உம் முகத்தில் பிரகாசிக்கிறது.தருமத்தின் மீது பற்றுள்ளவரே, நான் விடை பெறுகிறேண்' என கைகளைக் கூப்பி வணங்கினான்.
தரும வியாதரும் விடை கொடுத்தார்.
வீடு சென்ற கௌசிகன் தாய் தந்தையரைக் கண் போல பாதுகாத்து வந்தான்.
இக் கதையை மார்க்கண்டேயர் யுதிஷ்டருக்கு உரைத்தார்.இதன் மூலம் கற்பின் சிறப்பும், தாய் தந்தையரை பாதுகாக்கும் அவசியமும்,பிறப்பால் மேன்மையில்லை, ஒழுக்கத்தால்தான் மேன்மையடையமுடியும் என்பன போன்ற நீதிகள் உணர்த்தப்பட்டன.

1 comment:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

Post a Comment