பார்வதி தன் சந்தேகத்தைத் தொடர்கிறார்..
பார்வதி-சிலர் என்ன தான் முயன்றாலும் எதுவும் கிடைக்காமல் அவதிப்படுகின்றனரே..ஏ ன் ?
ஈஸ்வரன்-யார் யாசிப்பவர்க்கு ஒன்றும் தராமல் அவர்களை வெறுத்து ஒதுக்கி விடுகிறார்களோ அத்தகையோர் மறுபிறவியில் எவ்வளவு முயன்றாலும் ஓர் இன்பத்தையும் பெற முடிவதில்லை.எதுவும் வித்தின்றி முளைப்பதில்லை.நற்செயல் அன்றி நற்பலன் இல்லைபார்வதி-சிலர் வயதான காலத்தில், அனுபவிக்க இயலாத முதுமையில் எல்லையற்ற செல்வத்தைப் பெறுகிறார்களே..ஏண்?
ஈஸ்வரன்-அத்தகையோர் செல்வம் உடையவராக இருந்தும் தருமச் செயல்களை வெகுநாள் செய்யாதிருந்து மரணகாலத்தில் நோயால் துன்புறும் போது அறம் செய்ய முற்பட்டவராவர்.அதனால் அனுபவிக்க வேண்டிய காலத்தில் செல்வம் முதலியவற்றைப் பெறாமல் இறுதிக் காலத்தில் (காலம் கடந்து) பெறுகின்றனர்.
பார்வதி-சிலர் திரண்ட செல்வத்தைப் பெற்றிருந்தும் நோயினால் அவதிப்பட்டு அவற்றை அனுபவிக்க முடியாமல் வருந்துகின்றனரே..ஏன்?
ஈஸ்வரன்-அத்தகையோர் முற்பிறவியில் நோயினால் பீடிக்கப்பட்டு இனிப் பிழைக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டபின் தான தருமங்களை செய்தவராவர்.அதனால் அவர்கள் மறுபிறவியில் செல்வத்தைப் பெற்றிருந்த போதிலும் அவற்றை அனுபவிக்க முடியாதவாறு நோயினால் துன்புறுகின்றனர்.
பார்வதி-சிலர் பார்ப்பதற்கு அழகானவராகவும், இனிமையாகவும் இருப்பது எந்தக் கர்மப் பலனால்?
ஈஸ்வரன்-யார் முற்பிறவியில் நாணம் மிக்கவராகவும் இனிமையாக பேசுபவராகவும் தருமம் செய்பவராகவும் விளங்கினார்களோ..அவர்கள் இப்பிறவியில் காண்பதற்கு அழகாகவும் இனிமையாகவும் காட்சியளிக்கின்றனர்
பார்வதி-சிலர் காண்பதற்குக் கவர்ச்சியில்லாது அருவருப்பாக இருக்கின்றனரே..அது எதனால்
ஈஸ்வரன்-முற்பிறவியில் தாங்கள் அழகாக இருக்கிறோம் என்று கர்வத்தினால் பிறரை இகழ்ந்தவர்கள், இப்பிறவியில் பிறர் இகழ அழகில்லாமல் இருக்கின்றனர்
பார்வதி-சிலரிடம் அழகும் இல்லை..செல்வமும் இல்லை..ஆயினும் மனதைக் கவரும் வண்ணம் பேசுகின்றனரே..பெண்களால் கவரப்படுகின்றனரே..அது எந்தக் கர்மத்தால்?
ஈஸ்வரன்-முற்பிறவியில் இனிமையாக பேசுபவராகவும், தம் மனைவியைத் தவிர வேறு பெண்களை எண்ணிப் பாராதவராகவும், தான தருமங்கள் செய்பவராகவும்,மகளிரிடம் காணப்படும் குற்றங்களைப் பொருட்படுத்தாது குணங்களையே பேசுபவராகவும் இருந்தவர்கள் இப்பிறவியில் அழகில்லாவிடினும் அன்புள்ளவராய் இருக்கின்றனர்.தன் அன்பான பேச்சால் அனைவரையும் கவர்கின்றனர்.பெண்களால் விரும்பப்படுகின்றனர்.
பார்வதி-சிலர் கல்வி அறிவும் ,கேள்வி ஞானமும், விடாமுயற்சியும் இருந்தும் வறுமையில் வாடுகின்றனரே..ஏண்?
ஈஸ்வரன்-யார் முற்பிறவியில் கல்வியிலும்,செல்வத்திலும் சிறந்து இருந்த போதும் யாருக்கும் ஒன்றும் தராமல், பசித்தவர்க்குக் கூட உணவு தராமல் இருந்தனரோ, அவர்கள் இப் பிறவியில் அறிவும்,ஞானமும் உள்ளவராய் இருந்தும் வறுமையுடையவர்களாகவே திகழ்கின்றனர்.விதைத்ததுதானே முளைக்கும்.
பார்வதி-உலகில் செல்வம் மிக்கவராக இருந்தும் சிலர் கல்வி அறிவு இல்லாதவர்களாக, மன உறுதி அற்றவர்களாக, முரடர்களாக உள்ளனரே ..ஏன்
ஈஸ்வரன்-முற்பிறவியில் கல்வியில்லாதவர்களாக இருந்த போதிலும் சிலர் ஏழைகளுக்கு உதவி செய்திருப்பர்.அதனால் இப்பிறவியில் அவ்வாறே செல்வந்தராகவும்,கல்வி முதலான சிறப்புகள் அற்றவராகவும் இருக்கின்றனர்.கல்வி இருந்தாலும், இல்லாவிட்டாலும் தானத்தின் பலன் அப்படியே செல்வத்தை உண்டாக்கும்.
பார்வதி- சிலர் புத்திசாலியாகவும்,நினைவாற்றல் உள்ளவராகவும், தெளிவான உச்சரிப்பு உடையவர்களாகவும் இருக்கின்றனரே..அது எந்தக் கர்மப் பயனால்?
ஈஸ்வரன்-அவர்கள் முற்பிறவியில் ஒரு குருவைச் சார்ந்து முறைப்படி கல்வி கற்றவார்கள் ஆவர்.செருக்கு இல்லாதவர் ஆவர்.மன அடக்கம் உள்ளவராக இருந்திருப்பர்.அதனால் அவர்கள் இப்பிறவியில் புத்திசாலித்தனமும்,நினைவாற்றலும் ,தெளிவான உச்சரிப்பும் உடையவர்களாகத் திகழ்கின்றனர்.
(பார்வதியின் சந்தேகங்களும்..ஈஸ்வரனின் பதில்களும் தொடரும்)