Sunday, May 17, 2009

40-கர்ணன் சபதம்

தருமர் முன் செய்த ராஜசூயயாகம் போல ஒரு யாகம் செய்ய விரும்பிய துரியோதனன் அதை கர்ணனிடம் தெரிவித்தான்.

ராஜசூயயாகம் செய்ய ஒரு நிபந்தனை உண்டு.பல நாட்டு மன்னர்களும் அந்த யாகம் செய்பவரது தலைமையை ஏற்க வேண்டும்.அதன்படி பல நாடுகளுக்குச் சென்று..அம்மன்னர்களை வென்று..உன் தலைமையை ஏற்கச் சொல்கிறேன் என துரியோதனனிடம் கூறிவிட்டு..கர்ணன் புறப்பட்டான்.

அங்கம்,வங்கம்,கலிங்கம் ஆகிய நாடுகளை வென்றான்.துருபதன்,சுகதத்தன் ஆகியோரை அடக்கினான்.நான்கு திசைகளிலும் மன்னர்களை வென்றான்.வெற்றி வீரனாக திரும்பிய கர்ணனை துரியோதனன் ஆரத்தழுவி வரவேற்றான்.

ஆனால் புரோகிதர்கள்..ராஜசூயயாகம் செய்ய ஒப்புக்கொள்ளவில்லை.காரணம் முன்னர் அந்த யாகத்தைச் செய்த தருமர் இன்னமும் இருக்கிறார்.அந்த யாகம் செய்த ஒருவர் உயிருடன் இருக்கையில் வேறு ஒருவர் செய்வது மரபல்ல. மேலும் தந்தை திருதிராட்டினன் முன் மகன் அதைச் செய்யக்கூடாது என்றும் கூறினர்.

ஆனால்..அதற்கு பதிலாக வைஷ்ணவ வேள்வி செய்யலாம்..என்றனர்.பொன் கலப்பையால் நிலத்தை உழுது இயற்றும் வேள்வி அது.இவ் வேள்வியில் கலந்துக் கொள்ள பல மன்னர்களுக்கு அழைப்பு அனுப்பினார்கள்.துரியோதனன் பாண்டவர்களிடமும் தூதுவனை அனுப்பினான்.

பதின்மூன்று ஆண்டுகள் முடிந்த பின்னரே அஸ்தினாபுரம் திரும்புவோம் என தூதுவனிடம் தருமர் உரைத்தார்.

ஆனால்..பீமனோ..'எங்கள் வனவாசம் முடிந்ததும்..நாங்கள் செய்யும் வேள்வியில் துரியோதனன் முதலானோர் ஆஹூதி (வேள்விப்பொருள்) களாகப் பயன்படுவார்கள்' என்றான்.

விதுரர் முதலியோர் கலந்துக் கொள்ள வைஷ்ணவ வேள்வியை சிறப்பாகச் செய்தான் துரியோதனன்.மேலும் அதற்கு கர்ணனே காரணம் என துரியோதனன் எண்ணினான்.

துரியோதனன் கர்ணனை நோக்கி 'கர்ணா..நீ எனக்கு மற்றொரு உதவியும் செய்ய வேண்டும்..பாண்டவர்கள் போரில் மடிந்ததும்..எனக்காக நீ ராஜசூயயாகத்தை நிறைவேற்ற வேண்டும்.அப்போது என் புகழ் மேலும் உயரும்' என்றான்.

கர்ணன் அப்போது ஒரு சபதம் செய்தான்..

'மன்னா..அர்ச்சுனனை கொல்லும் வரை..நான் மது, மாமிசங்களைத் தீண்டமாட்டேன்..இல்லை என்பார்க்கு இல்லை எனக் கூறமாட்டேன்'

கர்ணனின் இந்த சபதம்..தருமர் காதுக்கும் எட்டியது.கவச..குண்டலங்களுடன் பிறந்த கர்ணனை வெல்வது அரிதாயிற்றே..என அவர் கவலையுற்றார்.அப்போது வியாசர் தோன்றி..தான தர்மப் பலன் பற்றி தருமரிடம் விரிவாக எடுத்துரைத்து மறைந்தார்.

3 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//பொன் கலப்பையால் நிலத்தை உழுது இயற்றும் வேள்வி அது//

தங்க கலப்பை? புதிய செய்தி

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//அந்த யாகம் செய்த ஒருவர் உயிருடன் இருக்கையில் வேறு ஒருவர் செய்வது மரபல்ல. //

அப்படி யென்றால் அவரை கொன்றுவிடவேண்டுமா? சார்.

//மேலும் தந்தை திருதிராட்டினன் முன் மகன் அதைச் செய்யக்கூடாது என்றும் கூறினர்.
//

தந்தையின் பெயரில் செய்துவிடலாமா சார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

தந்தை உயிருடன் இருக்கையில் அவ்வேள்வியை தந்தைதான் செய்ய வேண்டும்.
மேலும் அவ்வேள்வி செய்த ஒருவர் முன்னரே இருந்தால்...மற்றொருவர் அவரை வென்ற பின்னரே செய்ய வேண்டும்.வியாச மஹாபாரதம் இதைத்தான் சொல்கிறது.
வருகைக்கு நன்றி சுரேஷ்

Post a Comment