Monday, July 26, 2010

106-அரசாட்சி பற்றிப் பீஷ்மர்

தருமர், பிதாமகாரிடம் 'சிறப்பான மன்னன் செய்ய வேண்டிய செயல்கள் எவை? கிராமங்களைக் காப்பதும்,ஒற்றர்களை ஏவுவதும்,குடிமக்களை அன்புடையவர்களாக இருக்குமாறு செய்வதும் எங்ஙனம்? என்று கேட்டார்.

பீஷ்மர் கூறத் தொடங்கினார்..'அரசன் முதலில் தன்னை வெல்ல வேண்டும்.அதாவது ஐம்பல அடக்கம் வேண்டும்.பிறகு பகைவரை வெற்றி கொள்ள வேண்டும்.தன்னை வென்றவனே பகைவனை வென்றவன் ஆவான்.கோட்டைகள்,நாட்டின் எல்லை,மக்கள் கூடும் இடங்கள்,சோலைகள்,ரகசியமான இடங்கள்,அரண்மனை ஆகியவற்றைப் பாதுகாக்கத் தகுதியுள்ள ஆட்களை நியமிக்க வேண்டும்.நன்றாகச் சோதிக்கப்பட்டவர்களும்,அறிவாளிகளும்,பசி,தாகங்களைப் பொறுத்துக் கொள்ளும் இயல்புடையவர்களும்,சமயத்தில் முட்டாளும்,குருடனும்,செவிடனும் போல நடிக்கத் தெரிந்தவர்களும் ஆகியவர்களையே ரகசிய ஒற்றர்களாக நியமிக்க வேண்டும்.அரசன் எல்லா அமைச்சர்களிடத்தும்,மூவகை நண்பர்களிடத்தும்,மைந்தரிடத்திலும் ,நகரத்திலும்,கிராமத்திலும்,பிற மன்னர்களிடத்திலும் ஒருவரை ஒருவர் அறியா வண்ணம் ஒற்றர்களை இருக்கச் செய்ய வேண்டும்.

கடைகள்,விளையாடும் இடங்கள்,மக்கள் கூடும் இடங்கள்,வீதிகள்,தோட்டங்கள்,பூங்காக்கள்,கல்வி நிலையங்கள்,நீதிமன்றங்கள்,வேலைக்காரர்கள் இருக்கும் இடங்கள், செல்வந்தரின் வீடுகள் ஆகிய இடங்களில் பிற அரசர்களால் அனுப்பப்படும் ஒற்றர்களைத் தன் ஒற்றரைக் கொண்டு தேடி அறிந்து தண்டிக்க வேண்டும்.ஒற்றரைத் தடுப்பதன் மூலம் தீமைகள் தடுக்கப் படும்.

பகை அரசன் தன்னை விடப் பலம் உள்ளவனாக இருந்தால் தூது அனுப்பிச் சமாதானம் செய்துக் கொள்ள வேண்டும்.நூல் அறிவு மிக்க அந்தணர்களையும்,க்ஷத்திரியர்களையும்,வைசியர்களையும் அமைச்சர்களாகக் கொள்ள வேண்டும்.பகைவர்களைக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.தக்க காலம் வரும்போது அவர்களை விரைந்து கொல்ல வேண்டும்.எப்போதும் மூர்க்கத்தனமாக போரையே நாடக் கூடாது.சாமம்,தானம்,பேதம் ஆகிய மூன்று வழிகளில் பெறக் கூடிய பொருள்களை அடைய வேண்டும்.குடிமக்களைக் காக்க வெண்டி அவர்களிடம் இருந்து ஆறில் ஒரு பங்கு வரி வசூல் செய்ய வேண்டும்.குடிமக்களைத் தான் பெற்ற மக்களைப்போல் கருத வேண்டும்.நீதி செலுத்துகையில் நண்பன் என்று பார்க்கக் கூடாது.நேர்மையும்,நடுவு நிலை தவறாமையும் உள்ளவர்களை நீதிபதிகளாக அமர்த்த வேண்டும்.இந்தக் குணங்கள் யாவும் மன்னனிடத்தில் எப்போதும் குடி கொண்டிருக்க வேண்டும்.

பலதுறை வல்லுநர்களை அரசன் எப்போதும் கலந்து ஆலோசிக்க வேண்டும்.தங்கம்,ரத்தினம் ஆகியவற்றை எடுக்கும் இடங்களிலும்,உப்பளத்திலும்,சுங்கச்சாவடிகளிலும் ,யானைக் கூட்டம் உள்ள இடத்திலும்,அமைச்சர்கள் அல்லது நம்பிக்கை உள்ளவர்களை நியமிக்க வேன்டும்.எப்போதும் தண்டநீதி செலுத்தும் அரசனைத் தருமம் வந்தடையும்.தண்டநீதி என்பது அரசனுக்கு உத்தம தருமமாகும்.அரசன் பகைவரிடத்து எப்போதும் விழிப்பாக இருக்க வேண்டும்.அவர்கள் வரக்கூடிய பாலங்களை உடைக்க வேண்டும்.வழியை அடைக்க வேண்டும்.வெகு தொலைவில் இருந்து வரும் பகைப் படைகளைக் கண்காணிப்பதற்குப் புற மதில்களில் அமைக்கப் பட்டுள்ள பிரகண்டி என்னும் இடங்களையும் ,மதில்மீது இருந்து அதைப் பற்ற வரும் பகைப்படை மீது அம்பு செலுத்தும் 'அகாசஜநநீ' என்னும் இடங்களையும் நன்கு பாதுகாக்க வேண்டும்.நால்வகைப் படைகளைப் பற்றிய ரகசியங்களைப் பகைவர் அறியாதவாறு பாதுகாக்க வேண்டும்.ஏராளமான முதலைகளும்,திமிங்கலங்களும் அகழியில் இருக்குமாறு செய்ய வேண்டும்.நாடெங்கும் கிணறுகளை வெட்ட வேண்டும்.முன்னோர்களால் வெட்டப்பட்ட கிணறுகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.கற்களாலும்,செங்கற்களாலும் வீடுகளை அமைக்க வேண்டும்.தேவையான இடங்களில் தண்ணீர்ச் சாலைகளையும் கடைகளையும் ஏற்படுத்த வேண்டும்.சந்தர்ப்பவசத்தால் காரணமின்றி ஒருவரைச் சினம் கொண்டு தண்டித்திருந்தால் அவன் மகிழ்ச்சியடையும்படி நல்ல சொற்களைக் கூறிப் பொருளையும் கொடுத்து அவனது வெறுப்புணர்ச்சியை மாற்ற வேண்டும்'

(பீஷ்மர் மேலும் தொடர்கிறார்)

Monday, July 19, 2010

105-சிறந்தது அரச தருமம்

(பீஷ்மர் தருமருக்கு உரைத்தல்)
பிரமசர்யம் - குருவின் கட்டளைக்கு அடங்கி நடக்க வேண்டும்.அவருக்கு பணிவிடை செய்ய வேண்டும்.வேதம் ஓத வேண்டும்.அடக்கம்,சுறுசுறுப்பு ஆகைய இவை பிரமசர்யம் ஆகும்

கிரகஸ்தம்- இல்லற தருமத்தில் தலையாயது விருந்தோம்பல்.மனைவியுடன் கூடித் தான தருமத்துடன் வாழ்தல் இல்லற தருமமாகும்.

சந்யாசம்-துறவு மேற்கொண்டு பற்றற்று இருப்பது சந்யாசம்.உயிர் வாழ சிறிதே உண்பர் துறவிகள்.ஒரு நாளைக்கு ஒரு வேளை..அதுவும் எட்டுக் கவளமே உண்பர்.ஒரு நாள் தங்கிய ஊரில் மறுநாள் தங்குவதில்லை.புலன் ஐந்தும் அடங்கும் வகையில் தியானம்,தவம் ஆகியவற்றில் ஈடுபட்டிருப்பது சந்யாச தர்மமாகும்.

யாவற்றினும் சிறந்தது அரச தருமம்- யானையின் அடியில் மற்ற விலங்குகளின் அடிகள் அடங்கி விடுவது போல அரச தருமத்தில் அனைத்து தருமங்களும் அடக்கம்.எந்த நாட்டில் அரச தருமம் குன்றுகிறதோ அந்த நாட்டில் அனைத்துத் தருமங்களும் சிதைந்து போகும்.வேதம் ஓதுதல்,ஓதுவித்தல்,தானம்,தருமம் ஆகிய அனைத்துத் தருமங்களும் அரச தருமத்தையே ஆதாரமாகக் கொண்டுள்ளன.ஆதலால் அரச தருமத்தை விட மேலானதாக எந்தத் தருமமும் இல்லை.

மாந்தாதா என்ற மன்னன் அரச தருமங்களை விளக்குமாறு திருமாலிடம் முறையிட வேள்வி செய்தான்.திருமால் இந்திரன் வடிவில் வந்து அரச தருமங்களை விளக்கினார். 'நல்லாட்சி நடத்தும் அரசர்களைத் தேவர்களும் பாராட்டுவர்.உலகில் நடைபெறும் நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனித்து நாடாளும் மன்னன் எல்லோராலும் போற்றப்படுவான்.' என்றார்.'எனவே அரச தருமத்திற்கு மேலான தருமம் எங்கும் , எக்காலத்தும் கிடையாது.எனவே..தருமா..நீயும் அரச தருமத்தில் உறுதியோடு இருப்பாயாக'

தருமா..பகை நட்பு இன்றி அனைவரையும் சம நிலமையில் வைத்து அரசாளும் அரசன் துறவிகள் பெறும் மேலான கதியை அடைவான்.போர்க்களத்தில் வெற்றி அல்லது வீர மரணம் என கடைசி வரை போராடும் மன்னன் துறவிக்கு நிகரானவன்.நீதி தவறாது நாடாளும் அரசனை நாட்டில் இருக்கும் மக்கள் செய்யும் தருமங்களின் புண்ணியப் பலனில் நான்கில் ஒரு பாகம் வந்தடையும்.அதேபோன்று கொடுங்கோல் ஆட்சி புரியும் மன்னனை..நாட்டில் வாழும் மக்கள் செய்யும் பாவத்தில் நான்கில் ஒரு பாகம் வந்து சேரும்.கானகம் சென்று கடுந்தவம் செய்யும் முனிவர்களை விட நாட்டை நன்கு பரிபாலிக்கும் அரசன் நூறு மடங்கு தருமத்தை அடைவான்.நாட்டில் நல்லாட்சி இல்லையெனில் நீர் நிலைகளில் பெரிய மீன் சிறு மீன்களை விழுங்குவதைப்போல வலியோர் மெலியோரை விழுங்கி விடுவர்.

முற்காலத்தில் நாட்டில் அரசன் இல்லாததால் எங்கும் அராஜகம் நிலவியது.மக்கள் பிரமனிடம் சென்று 'நாட்டில் எங்கும் குழப்பம் நிலவுகிறது.நாட்டை நல்வழிப் படுத்தி நல்லாட்சி அமைய ஒரு அரசரை அளித்தால்..அவரை வழிப்படுவோம்' என முறையிட்டனர்.பிரம தேவர் மனுவை அரசனாக இருக்கச் சொன்னார்.நாட்டாட்சி என்பது கடினமான செயல் என மனு தயங்க..மக்கள் ஒத்துழைப்பதாக வாக்களித்தனர்.நல்லாட்சியை மக்களுக்கு மனு வழங்கி, யாவரும் போற்றத்தக்க மேலான கதியை அடைந்தான்.

முன்னொரு சமயம் வசுமனஸ் என்னும் அரசன் தேவ குருவான பிரகஸ்பதியிடம் சென்று தனக்கு ராஜநீதியை அருளும்படிக் கேட்டான்.அவர்'உலகில் தருமம் நிலைத்திருக்க வேண்டுமானால் நல்ல அரசன் இருக்க வேண்டும்.அரசனிடம் கொண்ட அச்சம் காரணமாகத்தான் மக்கள் ஒருவரை ஒருவர் வஞ்சிக்காமல் இருக்கின்றனர்.சூரியனும், சந்திரனும் இல்லையெனில் உலகம் இருளில் மூழ்கிவிடும்.அது போல அரசன் இல்லா நாடும் கெடும்.ஒழுங்காக நாட்டை ஆளும் அரசன் இல்லையெனில் மேய்ப்பவன் இல்லா..பசு மந்தைப் போல நாடு சிதறிப் போகும்.தண்ட நீதியில்லை எனில் நாட்டில் திருடர் பயம் அதிகரிக்கும்.அப்பாவிகள், தருமவான்கள் ஆகியோரை அடித்துத் துன்புறுத்திப் பொருளைக் கவர்ந்து செல்வர்.உத்தமர் ஆட்சியில் மக்கள் கதவைத் திறந்து வைத்து உறங்குவர்.விலை உயர்ந்த அணிகளை அணிந்து மகளிர்..ஆடவர் துணையின்றி அச்சமின்றி வெளியில் சென்று வருவர்.ஒரு நாட்டில் பெண்கள் பயமின்றி வாழ்கிறார்கள் எனில் அது அந்த நாட்டில் நல்லாட்சி நிலவுகிறது என்பதற்கான அடையாளமாகும்.

மன்னன் முறையே அக்கினி,சூரியன்,மிருத்யு,குபேரன்,யமன் ஆகிய ஐந்து தேவர்களின் வடிவமாவான்.எனவே அரசனைப் பெருந் தெய்வமாக வணங்க வேண்டும்.உடன் பிறந்தவனாயினும் ,மகனாயினும்,நண்பனாகினும் அரசனுக்கு துரோகம் இழைத்தால் கடுமையாக தண்டிக்கப்படுவான்.அரசனின் சினத் தீயிலிருந்து யாரும் தப்ப முடியாது.நாடாளும் மன்னன் போஜன்,விராட்,சாம்ராட்.க்ஷத்திரியன்,பூபதி என்றெல்லா, புகழப்படுகிறான்.அரசன் அறிவு மிக்கவரை அமைச்சராக வைத்துக் கொள்ள வேண்டும்.நாட்டு மக்களைக் காப்பது அவனது தலையாய கடமை'என்று கூறினார் பீஷ்மர்.

(அரசாட்சிப் பற்றி பீஷ்மர் கூறியது தொடரும்)

Thursday, July 15, 2010

104-அரச பரம்பரை தோற்றம்

தேவர்கள் திருமாலிடம் சென்று மக்களை அடக்கி ஆளத்தக்க பெருமை மிக்க ஒருவனை தருமாறு வேண்டினர்.திருமால் 'விஜரஸ்' என்னும் புத்திரனை உண்டாக்கினார்.ஆனால் விஜரஸ் மன்னாக விரும்பவில்லை.துறவியானார்.அவருக்கு மகனாகப் பிறந்த கீர்த்திமான் என்பவரும் துறவுக் கோலம் பூண்டார்.அவருக்கு மகனாகக் கர்த்தமர் என்பவர் பிறந்தார்.அவருக்கு மைந்தனாக அனங்கன் பிறந்தார்.அவர் தண்ட நீதியில் வல்லவராக ஆட்சி புரிந்தார்.அனங்கனுக்குப் புதல்வனாக அதிபலன் என்பவன் பிறந்து சிறந்த முறையில் ஆண்டான்.அவன் தருமதேவரின் மகளான சுந்தியை மணந்து காம வயப்பட்டு அவளிடம் மயங்கிக் கிடந்தான்.

அவர்களுக்கு வேனன் பிறந்தான்.அவன் கொடுங்கோலனாகத் திகழ்ந்தான்.தரும நெறி தவறிய அவனை தவ முனிவர்கள் கொன்றனர்.வேனனுக்குப் பிறந்த முதல் மகன் நிஷதன் ஆவான்.குள்ளமாகவும்,கொடூரனாகவும் காணப்பட்ட அவனிடமிருந்து குரூரமான நிஷாதர்கள் தோன்றினர்.அவர்கள் விந்திய மலையை இருப்பிடமாகக் கொண்டனர்.அவர்கள் மிலேச்சர்கள் எனப்பட்டனர்.

வேனனின் இரண்டாவது மகன் பெயர் பிருது.அவன் இந்திரனுக்கு நிகரானவன்.தனுர் வேதத்தில் சிறந்தவன்.உலகிற்கு நன்மை புரிந்து ஆட்சி செய்ததால் உத்தமன் எனப் போற்றப்பட்டவன்.'ஆசை,கோபம்,ஆணவம் இன்றி விருப்பு,வெறுப்பு இல்லாமல் ஆட்சி புரிய வேண்டும் என்றும் தருமம் தவறியவர்களை தண்டிக்கத் தயங்கக் கூடாது'என்று சான்றோர் அவனுக்கு அறிவுரை கூறினர்.அவனும் அவ்வாறே ஆண்டதால்..ஆட்சி பெருமை மிக்கதாய் இருந்தது.உழவுத்தொழில் சிறந்தது.காட்டைத் திருத்தி நாடாக்கினான்.மலைகளை உடைத்து பூமியை சமமாக்கினான்.

பூமிதேவி ரத்தினங்களை அளித்து பிருது மன்னனை வாழ்த்தினாள்.அவன் காலத்தில் நாடே மகிழ்ச்சியாய் இருந்தது.பஞ்சம் எங்கும் இல்லை.வளம் கொழித்தது.கள்வர் பயம் இல்லை.கொடிய விலங்குகள் பற்றிய அச்சமும் மக்களிடம் இல்லை.விஷ்ணு,விரஜஸ்,கீர்த்திமான்,கர்த்தமன்,அனங்கன்,அதிபலன்,வேனன்,பிருது என்ற வரிசைப் படி விஷ்ணுவின் எட்டாவது சந்ததி பிருது மன்னன்.அவனால் தரும நெறி எங்கும் தழைத்தோங்கியது.இவ்வாறு அரச பரம்பரை தோன்றியது.அவன் திருமாலின் அம்சமாகவே கருதப்பட்டான்.உலக பாலர் உருவாய் நின்று உலகம் காத்தலின் இறைவன் என்றும் அழைக்கப்பட்டான்.

நான்கு குலங்கள்-

தருமர் கேட்டார்..'நான்கு குலங்களுக்கும் உள்ள பொதுவான தர்மங்கள் யாவை? சிறப்பானவை யாவை?'

பீஷ்மர் சொல்கிறார்..'சினம் இன்மையும்,சத்தியமும்,நேர்மையும்,தானமும், ஒழுக்கமும் எல்லாச் சாதிகளுக்கும் உள்ள பொது தர்மங்களாகும்..அடக்கம்,வேதம் ஓதுதல்,ஓதுவித்தல்,வேள்வி செய்தல்,செய்வித்தல்,தானத்தையும், யாகத்தையும் செய்வதுடன் கிடைத்ததைக் கொண்டு வாழ்தல்,தனக்கென வாழாது..நாளைக்கு என சேமித்து வைக்காது இருத்தல் ஆகியவை அந்தணர்க்குரிய தருமங்கள் ஆகும்.

யாகம் செய்தல்,வேதம் ஓதுதல்,ஈதல்,திருடர்களை ஒழித்தல்,விடா முயற்சி,போர்க்களத்தில் வீரத்துடன் போர் புரிதல்,தீயவர்களைத் தண்டித்தல்,நல்லவர்களைக் காத்தல் ஆகியவை க்ஷத்திரியர்களின் தருமங்கள் ஆகும்.

நாணயமான முறையில் பொருள் சேர்த்தல்,தானம் புரிதல்,பசுக்களைப் பாதுகாத்தல் முதலியவை வைசியரின் தருமங்களாகும்

மேற்கூறிய மூவகை வருணத்தார்க்கும் தொண்டு செய்வது நான்காம் வருணத்தாரின் தருமமாகும்' என்றார்..

(தொடரும்)

Thursday, June 10, 2010

103-அரசன் என்பது எப்படித் தோன்றியது

(சில வலையுலகப் பிரச்னையால்..சில நாட்கள் எழுதாமல் இருந்தேன்..அதனால் தான் தாமதமாக பதிவு வந்துள்ளது..இனி வார வாரம் தொடரும்..நன்றி)

மறுநாள் காலையில் பாண்டவர்களும் பிறரும் குருஷேத்திரம் சென்று பீஷ்மரை வணங்கி அருகில் அமர்ந்தனர்.தருமர் பீஷ்மரை..'அரசன் தோன்றிய வரலாற்றை விளக்கும்படிக் கேட்டார்.'இன்பம் துன்பம்,பசி தாகம்,பிறப்பு இறப்பு முதலியவை மனிதர்கள் அனைவருக்கும் பொதுவானவை.அப்படி இருக்கையில் எப்படி ஒருவன் மட்டும் அவர்களுக்குத் தலைவனாக இருக்கக்கூடும்?அறிவு ஜீவிகள் பலர் இருக்க அது எப்படி ஒருவன் மட்டும் ஆளத்தக்கவன் ஆவான்? இதற்கான காரணம் சாதாரணமாய் இராது..ஆகவே அது பற்றி விளக்க வேண்டும்' என்றார்.

பீஷ்மர் கூறத் தொடங்கினார்..'ஆதி காலத்தில்..கிருத யுகத்தில் மக்கள் யாவரும் தரும நெறியைப் பின் பற்றி வாழ்ந்தனர்.ஒழுக்கம் தவறாத அக்காலத்தில் மன்னனும் இல்லை, தண்டனையும் இல்லை..காலம் செல்லச் செல்லத் தரும நெறி குன்றியது.அறிவின் குறைவால் ஆசை வயப்பட்ட மனிதர் தம்மிடம் இல்லாது பிறரிடம் உள்ள பொருளைப் பெற விரும்பினர்.அதனால்..திருட்டு,கொலை,சூது,சினம் முதலிய கெட்ட குணங்கள் தலைவிரித்து ஆடத் தொடங்கின.எதைச் செய்வது..எதை செய்யக்கூடாது என வரைமுறை இன்றிப் போயிற்று.காமம் மிகுந்தது..மாதரின் ஒழுக்க நெறியும் குறைந்தது.வேத நெறி பாழ்பட்டது.தரும நெறி சிதைந்தது.இது கண்டு தேவர்கள் கவலையுற்றனர்.பிரம்ம தேவனிடம்சென்று'பகவானே..அருள் புரியுங்கள்..உலகில் தருமம் கெட்டது..அதர்மம் சூழ்ந்துள்ளது.நெறி கெட்ட உலகை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்' என முறையிட்டனர்.

பிரம தேவர் ஒரு லட்சம் அத்தியாயங்கள் கொண்ட நீதி சாத்திரத்தை இயற்றினார்.அதில் அவர் விரிவாக அறம், பொருள், இன்பம் மூன்றையும் விளக்கினார்.இம் மூன்றைக் காட்டிலும் மோட்சம் என்பது வேறானது என்றும்..அதில் கூறப்பட்டுள்ளது.மேலும் அதில் சத்துவம்,ராஜசம்,தாமதம் ஆகியவை பற்றியும்..தேசம்,காலம்,முயற்சியின் பயன்,ஞானம்,கருமம்,மந்திர ஆலோசனை,அரசன்,அமைச்சன்,தூதன்,ஒற்றன் ஆகியோர் இயல்பு பற்றியும்,சந்திவிக்கிரகம்,வெற்றிக்குரிய வழிகள்,நால் வகை படையின் இயல்புகள்,பெற முடியாத பொருளைப் பெறும் உபாயம்,பெற்றதைக் காக்கும் முறை,குற்றங்களுக்கு ஏறபத் தண்டனை ஆகியவை பற்றியும் விரிவாக இந்தத் தண்டனை நூலில் விளக்கப்பட்டுள்ளன.

பிரமதேவர் இயற்றிய இந்த நீதி சாஸ்திரத்தை சிவன் ..மக்கள் ஆயுள் வரவரக் குறைந்து வருவதைக் கண்டு பத்தாயிரம் அத்தியாயங்களாக அமைத்து அதற்கு வைசாலட்சம் என்று பெயரிட்டார்.இந்திரன் இதனை இன்னும் சுருக்கி 'பாஹூதந்தகம்' எனப் பெயரிட்டார்.அதனைப் பிரகஸ்பதி மூவாயிரம் அத்தியாயங்களாக்கி 'பாரஹஸ் பத்தியம்'என்று பெயரிட்டார்.சுக்கிரர் அதனை ஆயிரம் அத்தியாயங்களாகச் சுருக்கினார்.

இவ்விதம் மக்கள் ஆயுள் குறைவைக் கருதி இந்த நீதி சாஸ்திரம் மாமுனிவர்களால் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

(அரச பரம்பரை தோற்றம் அடுத்த பதிவில்)

Tuesday, May 11, 2010

102- பீஷ்மர் தருமங்களைச் சொல்லுதல் (2)

தருமரே! வெளியிடத்தகாத அரசாங்க ரகசியங்களைத் தவிர மற்றவற்றில் உண்மை பேச வேண்டும்..எப்போதும் அரசன் சாந்த குணம் கொண்டவனாக இருக்கக் கூடாது.எப்போதும் சாந்த குணம் கொண்ட அரசனை உலகம் மதிக்காது மீறி நடக்கும்..யானையின் தலையில் மாவுத்தன் ஏறுவது போலத் தாழ்ந்த மனிதனும் பொறுமை உள்ள அரசனை அவமதிக்கும் செயலில் ஈடுபடுவான்.அதற்காக அரசன் எப்போதும் கடுமையாகவும் நடந்து கொள்ளக் கூடாது.கடுமையான அரசனிடம் மக்கள் அன்பு பாராட்ட மாட்டார்கள்.ஆதலால் அரசன் எந்தெந்த நேரத்தில் எப்படி எப்படி நடக்க வேண்டுமோ..அந்தந்த நேரத்தில் அப்படி அப்படி நடந்து கொள்ள வேண்டும்.அதாவது அதிகத் தட்பமும் அதிக வெப்பமும் இல்லா வசந்த காலத்துச் சூரியனிப் போல இருக்க வேண்டும்.

மேலோரிடம் பணிவுடன் நடந்துக் கொள்ள வேண்டும்.இது பொது விதி..ஆயினும் மேலோர் தவறிழைத்தால் அவர்களையும் தண்டிக்கத் தயங்கக் கூடாது.மகரிஷி சுக்கிராச்சாரியார் இது சம்மந்தமாகச் சொன்னதை நினைவில் கொள்ள வேண்டும்..போர்க்களத்தில் தனது தருமத்தை மீறி அந்தணன் ஆயுதம் ஏந்திப் போர் புரிவானாயின் அரசன் அந்த அந்தணனை ஆயுதத்தால் தண்டிக்க வேண்டும்.. அரச தருமம் அனைத்துத் தருமத்தை விடச் சிறந்தது..அரசாங்கத்திற்குத் தீங்கு இழைப்போர் நண்பராக இருந்தாலும்..குருவாக இருந்தாலும் அவர்களைக் கொல்ல வேண்டும்.

அரசன் பதினெட்டுக் குற்றங்களை விலக்க வேண்டும்..இவற்றில் வேட்டை,சொக்கட்டான்,பகல் உறக்கம்,பிறரை நிந்தித்தல்,பெண் மயக்கம்,மதம், வீண் பாட்டு,கூத்து, வாத்தியங்கள்,குடி ஆகிய இப் பத்தும் காமத்தால் உண்டாவன.தெரியாத குற்றத்தை வெளிப்படுத்துவது,குற்றமற்றவனைத் தண்டிப்பது,வஞ்சனையாக ஒருவனைக் கொலை செய்வது,பிறர் புகழ் கண்டு பொறாமை கொள்வது,பிறர் குணங்களைக் குற்றமாகக் கூறுவது,பிறர் பொருளைக் கவர்ந்து கொள்வது ,கடுஞ்சொல் கூறுவது,கடுமையான தண்டனை வழங்குவது..ஆகிய எட்டும் சினத்தால் வருவன.அரசன் இவற்றை அறவே விலக்க வேண்டும்.

அரசன் எப்போதும் கர்ப்பிணியின் தருமத்தில் இருக்க வேண்டும்..கர்ப்பிணி தன் மனதிற்கும், நாவிற்கும் சுவையான உணவு உண்ணாமல்..கர்ப்பத்தை வளர்க்கத் தக்க வழியில் இருப்பது போல , அரசனும் தனக்கு வேண்டும் என்ற செயலைத் தள்ளிவிட்டு உலகுக்கு நன்மை பயக்கும் தரும வழியில் செல்ல வேண்டும்..தைரியமாக நியாயமான தண்ட நீதியைச் செலுத்த வேண்டும்..அப்படி நடந்துக் கொண்டால் யாரும் குறை சொல்ல மாட்டார்கள்.

அரசன் வேலைக்காரருடன் பரிகாசமான வார்த்தைகள் பேசக்கூடாது.பரிகாசமாகப் பேசும் மன்னனை ஏவலர்கள் அவமதிப்பார்கள்.அரசனின் உத்தரவை மீறி நடப்பார்கள்..ரகசியத்தைக் கேட்பார்கள்..அத்துடன் நில்லாது அதனைப் பறை சாற்றுவார்கள்.லஞ்சம் வாங்கி அரச காரியத்தைக் கெடுத்து விடுவார்கள்.அரசன் உத்தரவு எனப் பொய்ச் செய்திகளை பரப்புவர்.அரசன் எதிரில் அநாகரிகமாக நடந்துக் கொள்வர்.நான் சொன்னால் சொன்னபடி அரசன் நடப்பான் என ஆணவத்துடன் உரைப்பர்..ஆகவே வேலைக்காரர்களிடம் விழிப்பாக இருக்க வேண்டும்.

அரசன் எப்போதும் அமைச்சர்களுடன் செய்யும் ஆலோசனைகளைப் பிறர் அறியாவண்ணம் மறைவாகச் செய்ய வேண்டும்.காலையில் அறத்திலும்..மாலையில் பொருளிலும், முன்னிரவில் இன்பத்திலும்,பின்னிரவில் தெய்வ சிந்தனையிலும் ஈடுபட வேண்டும்.அரசன் நான்கு வருணத்தாரின் தர்மங்களையும் காக்க வேண்டும்.எல்லோரையும் நம்பி விடக் கூடாது.நம்பத் தக்கவர்களை மட்டுமே நம்ப வேண்டும்.அவர்களிடமும் அளவு கடந்த நம்பிக்கை கூடாது.

ஓதுவிக்காத ஆசிரியன், ஓதாத ரித்விக், பாதுகாவாத மன்னன், விருப்பம் இல்லாதவற்றைக் கூறும் மனைவி,கிராமத்திலேயே இருக்க விரும்பும் இடையன்,காட்டிலேயே இருக்க விரும்பும் நாவிதன் ஆகிய இந்த அறுவரையும் கடலில் உடைந்த கப்பலைப் போல தள்ளிவிட வேண்டும் என பிராசேதச மனு கூறியுள்ளார்.

நாட்டை நன்கு பாதுகாப்பதை விட மேலான ராஜ தர்மம் வேறேதும் இல்லை.' எனக் கூறி முடித்தார் பீஷ்மர்.அவர் உரையைக் கேட்டுக் கொண்டிருந்த வியாசர்,கண்ணன்,சாத்யகி ஆகியோர் மகிழ்ந்தனர்.

த்ருமர்..கண்களில் கண்ணீருடன் பீஷ்மரை வணங்கி 'மேலும் ஐயங்களை நாளை கேட்பேன்' என்று விடை பெற்றார்.பின்னர் அனைவரும் அஸ்தினாபுரம் அடைந்தனர்.

Thursday, May 6, 2010

101- பீஷ்மர் தருமங்களைச் சொல்லுதல்


தருமர்..கண்ணனையும்..பீஷ்மரையும் வணங்கிவிட்டுத் தம் சந்தேகங்களைக் கேட்கத் தொடங்கினார்..


'ராஜநீதியில் எல்லாத் தருமங்களும் அடங்கியுள்ளன.ராஜநீீதி தவறுமானால் உலகம் துன்புறும்..ஆகவே இந்த ராஜதருமங்களை எனக்கு விரிவாக எடுத்துரைக்க வேண்டும்' என்றார்.

பீஷ்மர்..அதன்படி ராஜதருமங்களைக் கூறத் தொடங்கினார்..

'நாடாளும் மன்னன் எப்போதும் முயற்சியுடன் இருக்க வேண்டும்..முயற்சி இல்லாதவனுக்குத் தெய்வத்தின் உதவி கிடைக்காது.வண்டிக்கு இரு சக்கரங்களைப் போல வாழ்க்கைக்கு இவ்விரண்டும் தேவை.இவ்விரண்டில் முயற்சியே மேலானது.ஒருவேளை உன் முயற்சி வீணாய்ப்போனாலும் அது குறித்து வருந்தக்கூடாது.எப்போதும் விடாமுயற்சி என்பது அரசர்களின் மிகப் பெரிய நீதியாகும்."முயற்சியற்ற மன்னனையும்..வேதம் ஓத வெளியே செல்லாத வேதியனையும் பாம்பு எலிகளை விழுங்குவது போல இப்பூமி விழுங்கிவிடும்" என்று சுக்கிராச்சாரியார் கூறியிருக்கிறார்.

ராஜ தருமத்தில் இரட்சண தருமம் என ஒன்றை அரசன் கவனிக்க வேண்டும்..இந்த இரட்சண தருமத்தை அரச தருமங்களுள் வெண்ணெய் போன்றது எனப் பிரகஸ்பதியும், சுக்கிரரும்,விசாலாட்சாரும், பரத்வாஜரும், கௌரசிரசும், இந்திரனும் போற்றியுள்ளனர்.இந்த இரட்சண தருமம் நிறைவேறும் வகையைக் கூறுகிறேன்...

பொறாமையின்மை,யுக்தியால் வரி வசூலித்தல், உபாயமின்றி வரி வாங்காமை,நல்லவர்களை அணைத்துச் செல்வது ,சூரத்தனம்,சுறுசுறுப்பு,உண்மை,குடிமக்களின் நன்மை,நேராகவும்..கபடமாகவும் பகைவர் பலம் பெறாமல் பார்த்துக் கொள்வது,பழுதான கட்டிடங்களைப் பழுது பார்ப்பது, காலத்திற்கேற்ப உடல் தண்டனை..பொருள் தண்டனை விதிப்பது, படைகளை மகிழ்விப்பது,செயலில் சோர்வின்மை,கருவூலத்தைப் பெருகச் செய்வது,நகரைப் பாதுகாப்பது,காவற்காரரிடம் நம்பிக்கை வைக்காமலிருத்தல்,நண்பர்..பகைவர்..ந்டுநிலையாளர் இவர்களைப் பகுத்தறிதல், வேலைக்காரரைப் பகைவரிடம் சேராதிருக்குமாறு செய்தல்,நகரை வலம் வந்து நேராகப் பார்வையிடுவது, துன்புற்றோர்க்கு ஆறுதல் கூறுவது, பகைவரை அலட்சியப் படுத்தாமை, இழிந்த செயல்களை விலக்குதல், நியாயத்துடன் பொருந்திய விடாமுயற்சி ஆகிய இக்குணங்கள் இரட்சண தருமங்களாகும்.

இந்திரன் விடாமுயற்சியால்தான் அமுதத்தைப் பெற்று அசுரர்களைக் கொன்று இவ்வுலகிலும்..தேவர் உலகிலும் பெரும் புகழ் பெற்றான்..முயற்சியால் சிறந்தவன் கல்வியில் சிறந்த பண்டிதனை விட மேலானவன்.அரசன் அறிவுடையவனாக இருந்தாலும்..அவனிடம் முயற்சியில்லை எனில் அவன் பகைவரால் வெல்லப்படுவான்..அரசன் மிக்க பலமுடையவனாக இருந்தாலும்..பகை சிறிதென்று அலட்சியமாக இருக்கக் கூடாது.நெருப்புச் சிறிதாயினும் சுடும்..நஞ்சு கொஞ்சமாக இருந்தாலும் கொல்லும்..இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு ஆளும் அரசன் இறந்த பிறகும் புகழப்படுவான்.

உன் செயல் அனைத்தும் சத்தியத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்..தவத்தோர்க்கு எப்படிச் சத்தியம் முதற் பொருளாக இருக்கிறதோ அப்படி அதுவே அரசர்க்கும் முதற் பொருளாகும்..நற்குணமும், நல்லொழுக்கமும்,புலனடக்கமும், தெளிவும்,தானமும் உள்ள அரசனை விட்டு ராஜ்யலட்சுமி விலக மாட்டாள்.. (தொடரும்)

Sunday, May 2, 2010

100-உபதேசிக்க பீஷ்மர் சம்மதம்

கண்ணன் பீஷ்மரின் வினாவிற்கு பதிலளித்தார்..

'வேதம் உள்ள அளவும் உம் புகழ் மேன் மேலும் விரிவடைய வேண்டும்..இந்தப் பூமி உள்ள காலம் வரை உம் புகழ் அழிவற்றதாக இருக்க வேண்டும்..அதற்காகவே இவ்வுபதேசத்தை நீரே அருளுமாறு கூறினேன்..நீர் தருமருக்குச் சொல்லப்போகும் உபதேச மொழிகள் வேதப் பொருளாக உறுதி பெறப் போகின்றன.உமது தெய்வீக உரையைக் கேட்கும் மக்கள் உயிர் துறந்த பின் புண்ணியங்களின் பயனை அடையப் போகின்றனர்.

கங்கை மைந்தரே! இவ்வாறு உம் புகழ் மிகப் பேசப்பட வேண்டும் என்பதற்காகவே உமக்கு மேலான ஞானத்தை அருளினேன்..போரில் கொல்லப்படாமல் இருக்கும் அரசர்கள் யாவரும்..பல தருமங்களையும் கேட்க விருப்பத்துடன் உம்மைச் சூழ்ந்து அமர்ந்திருக்கின்றனர். தர்மங்களை உம்மைவிட அறிந்தவர் எவருமில்லை..உலகில் குறை இல்லாதவரைக் காண முடியாது.ஆனால் உமது பிறப்பு முதல் பாவம் என்பதை உம்மிடம் சிறிதுக் கூடக் காணவில்லை.குறையொன்றும் இல்லாதவரே..ஒரு தந்தை மகற்கு உரைப்பது போல நீர் உபதேசம் புரிவீராக..தர்மம் தெரிந்தவர்கள் அதைத் தெரியாதவர்களுக்கு அதைத் தெரிவிக்க வேண்டும்..அவ்வாறு உபதேசிக்காவிடின் பாவம் வந்து சேரும்..ஆதலால் ஞானக்கடலே..உமது உபதேசம் ஆரம்பமாகட்டும்..' என்றார்.

அது கேட்டு பீஷ்மர்..'கண்ணா..உமது அருளால் நான் பெற்ற ஞான நல்லறத்தை..தருமத்தை உமது தாள் பணிந்து இப்போது சொல்லத் தொடங்குகிறேன்..தருமத்தை விரும்பும் தருமர் என்னிடம் அனைத்து தருமங்களையும் கேட்க விரும்பினால்..நான் மகிழ்ச்சியுடன் சொல்கிறேன்..தருமத்தைப் போற்றும் யார் அரசராக இருப்பதை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்களோ அந்தத் தருமர் என்னைக் கேட்கட்டும்..துணிவும், பொறுமையும், தருமமும், வீரமும், பெருமையும் ஆகிய இக்குணங்கள் எப்போதும் எவரிடம் நிலை பெற்றிருக்கின்றனவோ அந்தத் தருமர் என்னைக் கேட்கட்டும்..சத்தியம், தானம், தவம், சுறுசுறுப்பு, பரபரப்பின்மை ஆகிய நற்குணங்கள்..எவரிடம் குடி கொண்டிருக்கின்றனவோ அந்தத் தருமர் என்னைக் கேட்கட்டும்..ஆசையாலோ..அவசரத்தாலோ,பயத்தாலோ, பொருள் கிடைக்கும் என்னும் காரணத்தாலோ..அத் தருமத்திடம் அணுகா தரும சிந்தையுள்ளவர் எவரோ அந்தத் தருமர் என்னைக் கேட்கட்டும்..நான் தருமங்களை தருமருக்குக் கூறுகிறேன்' என்றார் பீஷ்மர்.

அதற்குக் கண்ணன் ' தருமர்..வெட்கத்தாலும்..சாபம் வருமோ என்னும் அச்சத்தாலும் நடுங்குகிறார்.வழிபடத்தக்க பெரியோர்களைப் போர்க் களத்தில் கொன்றதற்காகச் சோகமும், வெட்கமும் கொண்டுள்ளார்.சகோதரர்கள் கொல்லப்பட்டதற்காகப் பெரிதும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளார்.தாம் செய்த தீங்கிற்காக என்ன நேருமோ என பயந்து உமது அருகில் வராது இருக்கிறார்' என்றார்.

அதனை உணர்ந்த பீஷ்மர்..'கண்ணா, போர்க்களத்தில் உயிர் துறத்தல் க்ஷத்திரியர் கடமையாகும்..தந்தையும், பாட்டனும், ஆசாரியரும் உறவினரும் கெட்ட எண்ணத்துடன் போரிட வருவார்களேயாயின் அவர்களைக் கொல்லுதல் க்ஷத்திரிய தர்மம்தான்.க்ஷத்திரியனுக்கு உரிய இத்தகைய போர்த் தருமம் என்றும் மண்ணுலகம் விண்ணுலகம் இரண்டிலும் நற்கதிக்குக் காரணம் என மனு கூறியுள்ளார்' என்றார்.

பிதாமகரின் இவ்வுரையைக் கேட்டதும், தருமர் மிகவும் பணிவுடன் அவரை நெருங்கி அவர் பாதங்களைத் தொட்டு வணங்கினார்.வில்லாற்றல் மிக்க பீஷ்மர் மிகவும் மகிழ்ந்து தருமரை அமருமாறு பணித்தார்.பின்னர் சந்தேகங்களைக் கேட்குமாறு பணித்தார்.

(இதுவரை மகாபாரதம் 100 இடுகைகள் முடிந்துவிட்டன..இவ்வலைப்பூவிற்கு வருபவர் எண்ணிக்கைக்கான விட்ஜிட்டை நான் இணைக்கவில்லை..காரணம்..படிப்பவர் எண்ணிக்கை குறைவு எனில்..தொடரை தொடரும் எண்ணம் வராது என்பதால்...இருப்பினும்..இத் தொடரை படிப்பவர் அனைவருக்கும் நன்றி..பீஷ்மரின் உபதேசம்..கிட்டத்தட்ட 100 இடுகைகள் வரலாம்..உங்கள் ஒத்துழைப்புடன் இவை தொடரும்..நன்றி)