Wednesday, May 18, 2011

151-தானம் கொடுப்பவர்..ஏற்பவர் இயல்புகள் (3)





சுனஸ்ஸகன் யாதுதானி என்னும் அந்தப் பேயை நோக்கி, 'நான் நாய்களுக்கு எப்போதும் துணைவனாவேன்.இவர்கள் கூறியது போல என் பெயரைப் பகுத்துக் கூறமுடியாது.' என்றான்.

யாதுதானி அவனிடம் 'உம் பேச்சு தெளிவாக இல்லை.உச்சரிப்பும் சரியாக இல்லை.ஆதலால் இன்னொருமுறை உம் பெயரைச் சொல்லவும்' என்றாள்.நான் ஒரு போதும் கூறியதை திரும்பக் கூறமாட்டேன் என்று கூறியவாறு சுனஸ்ஸகன் திரிதண்டத்தால் அந்தப் பேயை ஓங்கி அடித்துக் கொன்றான்.திரிதண்டத்தை பின் தரையில் ஊன்றித் தரையில் அமர்ந்தான்.

பின் அனைத்து ரிஷிகளும் தாமரைக் கிழங்குகளையும்,தாமரை மலர்களையும் வேண்டிய அளவு எடுத்துக் கொண்டு குளக்கரையில் ஏறினர்.பின் தரையில் அவற்றை வைத்துவிட்டு தன்னீடிர் இறங்கி தர்ப்பணம் செய்தனர்.கரை எறி பார்க்கையில் தாமரைக் கிழங்குகளைக் காணவில்லை. 'எந்தப் பாவி கிழங்குகளை எடுத்துப் போனானோ' என வருந்தினர்.ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் கொண்டனர்.

அத்ரி, 'தாமரைக் கிழங்கை திருடிச் சென்றவன் பசுவைக் காலால் உதைத்தவன் ஆவான்! காலமல்லாத காலத்தில் வேதம் ஓதியவன் ஆவான்,நாய்களை இழுத்துச் செல்லும் இழிநிலையை அடைவான்.சந்நியாசம் ஏற்றும்,காமத்தை விடாத போலித் துறவி ஆவான்.அடைக்கலம் அடைந்தவனைக் கொன்ற பாவி ஆவான்' என்றார்.

காச்யபர், 'தாமரைக் கிழங்கைத் திருடியவன் எல்லாரிடமும் எல்லாவற்றையும் பேசும் நாவடக்கம் அற்றவனாவான்.அடைக்கலைப் பொருளை அபகரித்துக் கொள்பவனாவான்.பொய் சாட்சி சொல்பவன் ஆவான்.புலால் உண்ணும் பாவத்தைச் செய்பவனாவான்' என்றார்.

ஜமதக்னி, 'தாமரைக் கிழங்கைத் திருடியவன் தண்ணீரை மாசுபடுத்தியவன் ஆவான்.பசுவை அடித்துத் துன்புறுத்திய பாவி ஆவான்.காலம் அல்லாத காலத்தில் மனைவியைப் புணர்ந்தவன் ஆவான்.எல்லோரையும் பகைத்தவன் ஆவான்' என்றார்.

பரத்வாஜர்,'தாமரைக் கிழங்கைத் திருடியவன் தருமத்தைக் கை விட்டவன் ஆவான்.பெண்களுக்குத் தீமை புரிந்தவன் ஆவான்.குருவை பழித்தவன் ஆவான்.' என்றார்.

கௌதமர். 'தாமரைக் கிழங்கைத் திருடியவன், வேதங்களை மறந்தவன் ஆவான்.மூன்று அக்கினிகளைத் துறந்தவன் ஆவான்' என்றார்.

விசுவாமித்திரர், 'தாமரைக் கிழங்கைத் திருடியவன் , தாய் தந்தையைக் காப்பாற்றதவன் ஆவான்.வேதத்தை வஞ்சகமாகக் கற்றவன் ஆவான்.செருக்குடையவன் ஆவான்' என்றார்.

அருந்ததி,'தாமரைக் கிழங்கைத் திருடியவள் மாமியாரை அவமதிப்பவள் ஆவாள்.விருந்தினரைப் புறக்கனித்தவள் ஆவாள்.கணவனால் விரும்பத்தகாதவள் ஆவாள்' என்றாள்.

பசுஸகன்' தாமரைக் கிழங்கைத் திருடியவன் சந்ததியில்லாதவன் ஆவான்.ஏழையாவான்.அடிமையாகப் பிறப்பான்.நாஸ்திகன் ஆவான்' என்றார்.

சுனஸ்ஸகன், 'தாமரைக் கிழங்கைத் திருடியவன் ரித்விக்குகளில் ஒருவனான அத்வர்யு என்பவனுக்கும்,சாம வேதம் ஓதியவனுக்கும்,அதர்வண வேதம் ஓதியவனுக்கும் பெண்ணைக் கொடுத்தவன் ஆவான்' என்று கூறினான்.

ரிஷிகள் உடன் அவனை நோக்கி, 'உன் சபதம் அந்தணர்களுக்கு விருப்பமானது.ஆதலால் தாமரைக் கிழங்குகளைத் திருடியது நீதான்' என்று கூறினர்.

உடன் சுனஸ்ஸகன், "உண்மைதான்..கிழங்குகளை எடுத்தவன் நான்தான்.ரிஷிகளே உங்களைக் காக்கவே நான் இங்கு வந்தேன். உங்களைக் கொல்ல விருஷாதர்ப்பியினால் அனுப்பப் பட்ட யாதுதானி என்னும் பேய் என்னால் கொல்லப்பட்டது.நான் இந்திரன்.ஆசையை அகற்றியதால், அழியாத உலகங்கள் உங்களுக்குக் கிடைத்தன.உடன் புறப்பட்டு அந்த உலகங்களை அடையுங்கள்' என்று கூறினான். பின் ரிஷிகள் அனைவரும் சுவர்க்கத்திற்குச் சென்றனர்.

'தருமா..மிக்க பசியால் வாடிய போதும், அரசனால் பரிசுகள் வழங்கப்பட்டப் போதும் அந்தப் பரிசுகளில் ஆசை கொள்ளவில்லை ரிஷிகள்.இவர்கள் வரலாற்றைக் கொண்டு, 'எந்த நிலையிலும் ஆசை அற்றவர் மறுமை அடைவர்" என்பதை உணர்வாயாக' என்றார் பீஷ்மர்.

Tuesday, May 10, 2011

150- தானம் கொடுப்பவர்..ஏற்பவர் இயல்புகள் (2)



பின்னர் அமைச்சர்கள் மன்னனை அடைந்து நடந்ததைக் கூறினர்.அதைக் கேட்ட விருஷாதர்ப்பி சினம் கொண்டான்.கடுமையான யாகத்தைச் செய்தான்.யாக குண்டத் தீயிலிருந்து பெண் பேய் ஒன்று தோன்றியது.அதற்கு 'யாதுதானி' எனப் பெயர் வைத்தான்.சப்த ரிஷிகளையும், அருந்ததியையும்,வேலைக்காரர்களையும் நீ அழித்து விடு.அவர்கள் பெயர்களை நினைவில் வைத்துக் கொள்.கவனம் இருக்கட்டும் என ஆணையிட்டான்.ஆணைப்படி அந்தப் பேய் அவர்கள் இருக்குமிடம் நாடிச் சென்றது.

அப்போது அந்த ரிஷிகள் காட்டில் காய் கனிகளை உண்டு சஞ்சரித்துக் கொண்டிருந்தனர்.ஒருநாள் அவர்கள் கை, கால்,முகம், வயிறு ஆகிய இவை பருத்த சரீரம் உடைய 'சுனஸ்ஸகன்' என்ற பெயருடைய துறவியைக் கண்டனர்.அப்போது அருந்ததி ரிஷிகளைப் பார்த்து. 'நீங்கள் இந்தத் துறவியைப் போல தேஜஸ் உடையவர்களாக இல்லையே..ஏன்' என்றாள்.

'இவனுக்கு நம்மைப் போல சாஸ்திரப் பயிற்சி இல்லை. இவனுக்குப் பசி தீர்ப்பது ஒன்றே குறிக்கோள்.இவன் கஷ்டப்பட்டு எதுவும் செய்வதில்லை.ஆகமப் பயிற்சியிலும் ஈடுபடுவதில்லை.அதனால் மூர்க்கன்.சோம்பேறி.இருக்கும் இடத்தைவிட்டு எங்கும் நகர்வது இல்லை.அதனால் உடல் பருத்து இருக்கிறான்' என பதில் உரைத்தனர்.

ஆனால் சுனஸ்ஸகனோ பதில் ஒன்றும் சொல்லாது, அந்த ரிஷிகளைத் தாழ்ந்து வணங்கிப் பணிவிடைகள் செய்தான்.ஒருநாள் ரிஷிகள் காட்டில் மரங்கள் அடர்ந்து நிழல் செய்யும் பெரிய குளத்தைக் கண்டனர்.அந்தக் குளம் யாவராலும் மாசுபடாத நீரைத் தன்னகத்தே கொண்டுவிளங்கியது.அதில் தாமரை மலர்கள் அழகாக மலர்ந்திருந்தன.சேறில்லாது பளிங்கு போல விளங்கும் தூய நீரைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் அக்குளத்தை, விருஷாதர்ப்பி மன்னன் ஏவிய யாதுதானி என்னும் கொடிய பேய் காவல் காத்து வந்தது.ரிஷிகள் தாமரைக் கிழங்குக்காக சுனஸ்ஸகனோடு அக்குளத்தை அடைந்தனர்.பேயைக் கண்டு வியந்தனர்.'நீ யார்? யாருக்காக இங்குக் காத்துக் கொண்டிருக்கிறாய்?என்ன செய்ய நினைக்கிறாய்? என்று வினவினர்.

நான் யாராயிருந்தால் உங்களுக்கென்ன..பொருளற்ற வினாக்களை வினவ வேண்டாம்.இக்குளத்தைக் காவல் காக்கிறேன்..இந்த விடை உங்களுக்குப் போதும் என நினைக்கிறேன் என்றது பேய்.

ரிஷிகள் ஒன்றாக..'நாங்கள் பசியோடு இருக்கிறோம்.அதனால் நாங்கள் தாமரைக் கிழங்குகளைப் பறித்து உண்ண அனுமதி தர வேண்டும் என்றனர்.

ஒரு நிபந்தனைக்கு உட்பட்டால், தாமரைக் கிழங்குகளை எடுத்துக் கொள்ள அனுமதி தருகிறேன் ..உங்கள் பெயரை ஒவ்வொருவராக எனக்குச் சொல்ல வேண்டும் என்பதே அந்த நிபந்தனை என்றாள் யாதுதானி.

ரிஷிகள் ஒவ்வொருவராக பெயரைக் கூறினர்..

முதலில் அத்ரி மகரிஷி 'நான் ஒவ்வொரு இரவிலும் மூன்று முறை அத்யயனம் செய்கிறேன்.அதனால் அராத்ரி என்னும் என் பெயர் அத்ரி ஆயிற்று' என்றார்.

மகரிஷியே உம் பெயரை என் நினைவில் கொள்ள முடியவில்லை..ஆதலால் நீர் போய் குளத்தில் இறங்குக என்றாள் யாதுதானி.

அடுத்து வசிஷ்டர்..'நான் யாவரினும் சிறந்து இருப்பதாலும், சப்தரிஷி மண்டலத்தில் வசிப்பதாலும் எனக்கு வஷிஷ்டர் என்ற பெயர்' என்றார்.இந்தப் பெயரையும் நினைவில் கொள்ள முடியவில்லை.நீரும் போய் குளத்தில் இறங்குக' என்றாள் யாதுதானி.

இது போலவே..பரத்வாஜர்,காச்யபர்,கௌதமர்,ஜமதக்னி,விசுவாமித்திரர்,பசுசகன்..என அனைவரும் தங்கள் பற்றிக் கூற..எதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியவில்லை என குளத்தில்

இறங்கச் சொன்னாள் யாதுதானி.

அருந்ததியும், 'நான் என் கணவரின் கருத்துப்படி நடப்பவள்.மேலும் எல்லாப் பொருளையும் தாங்குவதும்,காப்பதுமாகிய இப் பூமியில் நான் என் கணவரை எப்போதும் சார்ந்திருப்பதால், எனக்கு அருந்ததி என்னும் பெயர் அமைந்தது' என்றால்.அப்பெயரையும் நினைவில் வைத்துக் கொள்ள இயலாத யாதுதானி அவளையும் குளத்தில் இறங்கச் சொன்னது.,

கடைசியாக சுனஸ்ஸகன் யாதுதானியிடம் வந்தான்.

(தொடரும்)
 

Thursday, April 28, 2011

149-தானம் கொடுப்பவர்..ஏற்பவர் இயல்புகள்..





தருமர் பீஷ்மரை நோக்கி, 'தானம் கொடுப்பவர் மற்றும் ஏற்பவர் இயல்புகள் யாவை? என வினவ பீஷ்மர் கூறலானார்..

'தருமா..இது தொடர்பாக விருஷாதர்ப்பி என்ற மன்னனுக்கும் சப்த ரிஷிகளுக்கும் நடந்த உரையாடலை அறிவாயாக..

ஒருசமயம் விருஷாதர்ப்பி அந்தணர்களிடம் 'தானம் வாங்கி உங்கள் துன்பத்தைப் போக்கிக் கொள்ளுங்கள்.உங்களிடம் எனக்கு மரியாதை உண்டு.அன்பு உண்டு.நான் உங்களுக்கு ஆயிரம் கோவேறு கழுதைகளைத் தருகிறேன்.ஒவ்வொரு கன்றை ஈன்ற பத்தாயிரம் பசுக்களைக் கொடுக்கிறேன்.விரைந்து செல்லும் வெள்ளைக் குதிரைகள் கொடுக்கிறேன்.எருதுகள் பத்தாயிரம் கொடுக்கிறேன்..கிராமங்களையும் ரத்தினங்களையும் தருவேன்.இன்னும் என்னென்ன உங்களுக்குத் தேவையோ..கேளுங்கள் தருகின்றேன்' என்றான்.

ரிஷிகள் மன்னனிடம் தானம் வாங்க விரும்பவில்லை.மன்னர் தரும் தானம் முதலில் இன்பம் தருவது போல இருந்தாலும் முடிவில் துன்பம் தரும்.ஆயிரம் கசாப்புக் கடைகளை வைத்திருக்கும் கசாப்புக்காரனும், மன்னமும் சரி.எனவே மன்னனிடம் தானம் வாங்குவது தீமை பயக்கும்.பொதுவாக அந்தணர்களுக்குத் தவம் எளிதில் கிடைக்கும்.மன்னனின் பொருள் காட்டுத்தீயைப் போல அந்த தவத்தையே எரித்து விடும்..என்று கூறி ரிஷிகள் காட்டுக்குச் சென்றனர்.

அவர்களைத் தொடர்ந்து செல்லுமாறு அமைச்சர்களை அனுப்பினான் மன்னன்.அத்திப் பழங்களைப் பறித்துத் தந்தனர் அமைச்சர்கள்.ரிஷிகள் அப் பழங்களை வாங்கச் சென்ற போது மன்னனின் வேலைக்காரர்கள் உள்ளே பொன்னை வைத்துத் தந்தனர்.

அத்ரி முனிவர் அவை பளுவாய் இருந்ததால் வாங்க மறுத்துப் பேசினார்..'நாங்கள் முட்டாள்கள் அல்ல.இவற்றின் உள்ளே பொன் உள்ளதை அறிவோம்.நாங்கள் ஏமாற மாட்டோம்.மறுபடியும் சொல்கிறேன்..அரசன் தரும் பொருள் மறுமை இன்பத்தை அளிக்காது.இம்மை மறுமைகளில் இன்பம் வேண்டுவோர் அரசர் தரும் இத்தகைய பொருள்களை வாங்கவே கூடாது' என்றார்.

கச்யபர்,'பூமியில் பொன்னும் பொருளும் போகமும் விரும்பத் தக்கது அல்ல' என்றார்.

வஷிஷ்டர்,'நூறு ஆயிரம் என மிகுதியானப் பொன்னை வாங்கினால் தாழ்ந்த கதிதான் கிடைக்கும்' என்றார்.

பரத்வாஜர்,'மான் குட்டி வளரும் போது கூடவே வளரும் கொம்பு போன்றது ஆசை.அது வளர்ந்து கொண்டே போகும்.அதற்கு எல்லையே இல்லை' என்றார்.

கௌதமர், "ஆசை நிறைவேறுதல் என்பது இல்லை.நதி நீரால் கடல் நிரம்பாதது போன்றது ஆசை.ஒரு நாளும் மனிதன் நிறைவடைய மாட்டான்' என்றார்.

ஜமதக்னி,'பிறரிடம் வாங்குவதற்கும் மனக் கட்டுப்பாடு வேண்டும்.ஆசைப்படுபவர்களுக்குத் தவம் என்னும் செல்வம் தொலையும்' என்றார்.

விசுவாமித்திரர், 'ஒரு விருப்பம் நிறைவேறும் போதே மற்றொரு விருப்பம் அம்பு போல மனதில் பாயும்' என்றார்.

சீலம் மிக்க ரிஷிகள் அனைவரும் உள்ளே பொன் வைத்த அக்கனிகளை ஏற்க மறுத்து வேறு இடம் சென்றனர்..

(தொடரும்)
 

Sunday, April 10, 2011

148- இந்திரனுக்கும் லட்சுமிக்கும் நடந்த உரையாடல்





காலத்தின் இயல்பு குறித்துப் பலி இந்திரனிடம் கூறும்போது, அப்பலியிடமிருந்து லட்சுமி ஒளிமிக்க பெண்ணாக வெளியே வந்தாள்.வியப்புற்ற இந்திரன் பலியை நோக்கி, 'ஒளியுள்ள இந்தப் பெண் யார்?" என வினவினார்.பலியோ தெய்வப் 'பெண்ணோ,மண்ணுலக மாதோ நான் அறியேன்.நீ அவளையேக் கேள் என்றான்.

உடன் இந்திரன், 'பெண்ணே..கண்ணைக் கவரும் அழகுடைய நீ யார்? பலியை விட்டு விலகி என் அருகில் நிற்கிறாயே ஏன்? என்றார்.

அது கேட்டு லட்சுமி சிரித்தாள்.'விரோசனும் என்னை அறியவில்லை.அவன் மகன் பலியும் என்னை அறியவில்லை.போகட்டும்..எனக்கு லட்சுமி,விதித்சை எனப் பலப் பெயர்கள் உண்டு.இந்திரா..நீயும், தேவர்களும் கூட என்னை அறியீர்' என்றாள்.

'பலியிடமிருந்து ஏன் விலகி விட்டாய்..என்னை அடையவா?' என்றார் இந்திரன்.

'பிரம்மதேவன் கூட எனக்குக் கட்டளையிட முடியாது.யாரிடம் இருக்க வேண்டும் எனக் கட்டளையிடும் வலிமை காலதேவனுக்கு மட்டுமே உண்டு'காலத்துக்குக் கட்டுப்பட்டவள் நான்.பலிக்கு உரிய காலம் மாறியது.நான் உங்களிடம் வந்து விட்டேன்.அவ்வளவுதான்' என்றாள் லட்சுமி.

'பலியைவிட்டு ஏன் விலகிவிட்டாய்..என்னை விடாமல் இருப்பாயா?' என்ரார் இந்திரன்.

'பலியை விட்டு விலகியதற்கு உரிய காரணங்களைக் கூறுகிறேன்.தானம்,தவம்,வாய்மை,வீரம்,தருமம் ஆகியவற்றினின்று விலகி விட்டான் பலி.ஆதலால் அவனை விட்டு விலகினேன்.இப்போது உன்னை அடந்துள்ளேன்.நீயும் அவற்றினின்று விலகினால்,நானும் உன்னை விட்டு விலகுவேன்' என்றாள் லட்சுமி.

'உலகில் உன்னைத் தன்னிடமே இருக்கச் செய்யும் சக்தி வாய்ந்தவர் யார்?' என்றார் இந்திரன்.

அத்தகையவர் யாரும் இல்லை என்றாள் லட்சுமி.

'செல்வத் திருமகளே..நீ எப்போதும் என்னிடம் தங்கியிருக்கும் உபாயத்தை சொல்வாயாக' என இந்திரன் வேண்ட, 'இதோ அந்த உபாயத்தைக் கூறுகிறேன்.வேத நெறிப்படி என்னை நான்கு பாகமாகப் பிரித்து அமைத்துக் கொள்' என அருளினாள் தேவி.

'எனது ஆத்ம பலத்திற்கும்,உடல் வலிமைக்கும் ஏற்ப அவ்வாறே உன்னை வணங்கி ஏற்றுக் கொள்கிறேன்'

'உலக உயிரினங்களைத் தாங்கும் ஆற்றல் பூமி தேவிக்குத் தான் உண்டு.ஆதலால் உனது நாங்கில் ஒரு பாகத்தைப் பூமி தேவியிடம் தந்துள்ளேன்.இனி அவள் பூமி பாரத்தைத் தாங்குவாள்'

ஓடும் நீர்தான் உலக உயிர்களை வளர்க்கிறது.எனவே உன் இரண்டாம் பாகத்தை னிரிடம் வைத்து உள்ளேன்'

'உனது மூன்றாம் பாகத்தை யாகத்திற்கு முதல் காரணமாக விளங்கும் அக்கினி தேவனிடம் வைத்துள்ளேன்'

உனது நான்காம் பாகத்தை மாந்தருள் சிறந்தவர்க்குக் கொடுத்துள்ளேன்.இந்த நான்கினிடத்தும் நீ நிரந்தரமாக தங்கியிருக்க உன்னை வேண்டுகிறேன்.உன்னிடம் தவறு செய்வோர் தண்டிக்கப் படுவர்' என்றார் இந்திரன்.

அப்படியே நடக்கட்டும் என இந்திரனுக்கு அருளினாள் லட்சுமி.

பின் லட்சுமியால் கை விடப்பட்ட பலி, இந்திரனிடம்,'சூரியன் கிழக்கே எந்த அளவு ஒளி வீசுகிறானோ அந்த அளவு மற்ற மூன்று திக்குகளிலும் ஒளி வீசுவான்.அந்தச் சூரியன் நடுப்பகலில் இருக்கும் போது, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் மறுபடி போர் மூளும்.அந்த நேரத்தில் நான் தேவர்களை வெற்றி கொள்வேன்.அந்தச் சூரியன் எப்போது பிரம்ம லோகத்திலிருந்து கீழ் உலகங்களைத் தகிப்பானோ அப்போது உன்னை நான் தோற்கடிப்பேன்.பின் நான் இந்திரன் ஆவேன்' என்றான்.

அது கேட்டு இந்திரன் கோபமுற்று

'உன்னைக் கொல்லக்கூடாது என பிரம்மதேவர் கட்டளையிட்டுள்ளார்.ஆகவே நீ தப்பித்தாய்.உடனே இந்த இடத்தைவிட்டுப் போ.நீ சொல்வது போல சூரியன் நடுவில் இருந்து ஒளி வீசுவதில்லை.எங்கும் சுற்றிக் கொண்டு ஒளி வீச வேண்டும் என்ற பிரமதேவனின் ஆணையை மீறாமல் அந்தச் சூரியன் செயல் படுகிறான்.அவனுக்கு ஆறு மாதம் உத்தராயணம்.ஆறு மாதம் தட்சணாயணம் ஆகும்.அதன்படி உலகிற்கு ஒளி வழங்கி வருகிறான், சூரியன்' என உரைத்தான்.

தருமரே! இவ்வாறு இந்திரன் சொன்னவுடன் பலி தெற்கு நோக்கிச் சென்றான்.பின் இந்திரன் விண் வழியாக இந்திர லோகம் அடைந்தார்.இந்தப் பகுதியில் காலத்தின் பெருமை கூறப்பட்டுள்ளதை கவனமாக ஆராய்ந்து பார்.கண்ணுக்குத் தெரியாத ஒப்பற்ற அந்தப் பொருளின் ஆற்றலை உணர்ந்துக் கொள்வாயாக' என்றார்
 

Friday, April 1, 2011

147-காலத்தின் வலிமை



காலத்தின் வலிமை பற்றி விரோசன் மகனான பலிக்கும்,இந்திரனுக்கும் நடந்த உரையாடலைக் கேள் என பீஷ்மர் தருமருக்கு சொல்லத் தொடங்கினார்.

இந்திரன், பிரம்ம தேவனிடம்,'தானம் செய்வதில் தளராது இருந்த பலி எங்கே?பலி இருக்கும் இடத்தை அறிய விரும்புகிறேன்.அந்தப் பலி வாயுவாய் எங்கும் உலவினான்.வருணனாக இருந்து மழை பெய்தான்.சூரிய சந்திரனாக இருந்து உலகுக்கு ஒளி நல்கினான்.தீயாக இருந்து உலகைத் தகிக்கச் செய்தான்.தண்ணீராக இருந்து உயிர்களின் தாகத்தைப் போக்கினான்.திக்குகளை விளங்கச் செய்தான்.அவன் எங்கே இருக்கிறான்..சொல்வீராக..'என்றார்.

பிரம்ம தேவர், 'ஒருவர் கேட்கும் போது பொய் கூறக் கூடாது.ஆதலால் உண்மையைச் சொல்கிறேன்.அந்தப் பலி ஒட்டகமாகவோ,பசுவாகவோ,கழுதையாகவோ,குதிரையாகவோ ஒரு பாழடைந்த வீட்டில் இருக்கும் தேடிப் பார்' என்றார்.

இந்திரன் 'பலி உண்மையில் பாழடைந்த வீட்டில் இருந்தால்..அவனை நான் கொல்லலாமா?' என்றார்.

பிரம்ம தேவர்,' இந்திரா..அவனிடன் நியாயத்தைக் கேள்.கொல்லாதே.'என்றார்.

இந்திரன் ஐராவதத்தின் மீது ஏறி எங்கும் பலியைத் தேடினான்.பாழடைந்த வீட்டில் கழுதையாக இருந்த பலியைக் கண்டு,'நீ ஏன் இந்தப் பிறவியை எடுத்தாய்? செல்வம் அனைத்தையும் தொலைத்து விட்டுக் கழுதையாக பிறந்துள்ளாயே, உனக்கு இப்பிறவியில் துன்பம் ஏற்படவில்லையா?உலகெங்கும் சுற்றித் திரிந்து பெருஞ்செல்வத்தைச் சேர்த்தாயே..இப்போது எங்கே அந்தச் செல்வம்? உனது நிலை பரிதாபமாய் உள்ளதே.நீ பலியாக இருந்த போது இன்ப போகங்களை அனுபவித்துப் பொருளை எல்லோர்க்கும் வாரி வழங்கினாய்.உன் எதிரில் தேவமகளிர் நடனம் ஆடினர்.கந்தர்வர்கள் ஏழிசை பாடினர்.நீ, ரத்தினங்கள் பதிக்கப் பட்ட தங்கக் குடையின் கீழ் அமர்ந்திருந்தாய்.யாகத்தின் போது ஆயிரம் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்தாய்.இப்போது என்னவாயிற்று அந்த வைபவம் எல்லாம்' என்று எள்ளி நகையாடினார்.

இந்திரனின் பேச்சைக் கேட்ட பலி.."தேவனே..உனது அறியாமைக்கு வருந்துகிறேன்.பிறர் வருந்துமாறு பேசுவது..உன் தகுதிக்கு இழுக்காகும்.நீ குறித்த குடை மாலை ஆகியவை குகையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன.நல்ல காலம் வரும்போது அவை மீண்டும் என்னிடம் வரும்.ஆகுவது ஆகும் காலத்துக்கு ஆகும்: போகும் காலத்து அனைத்தும் போகும்.இது காலத்தின் விசித்திரம்.இப்போது உன்னிடம் மிகுந்த பொருள் உள்ளதால் உன்னை நீயே புகழ்ந்து கொள்கிறாய்.இந்தக் காலம் அப்படியே இருக்காது.மாறும்.சாதுக்கள் துன்பம் கண்டு வருந்த மாட்டார்கள்.இன்பத்தில் மூழ்கி திளைக்கவும் மாட்டார்கள்.இரண்டையும் சமமாகக் கருதி மன அமைதியுடன் இருப்பர்.செல்வச் செறுக்கால் இறுமாந்து பேசாதே..நான்கூட ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தேன்.காலம் மாறிவிட்டது.இது மாறிக் கொண்டே இருக்கும்.எல்லாம் அதன் கையில்தான் உள்ளது'என்றான்.

அது கேட்ட இந்திரன் 'இப்போது உன் நிலை உனக்கு வருத்தத்தைத் தருகிறதா? இல்லையா? என்றார்.

பலி சொன்னான் 'உனது செல்வச் செருக்கால் அறிவிழந்து பேசுகிறாய்.சில உண்மைகளைச் சொல்கிறேன் கேள்..பொருள்களின் உண்மைத் தன்மை எனக்குத் தெரியும்.செல்வம் நிலையில்லாதது.யாக்கையும் நிலையில்லாதது.உலகில் எல்லாமே அழியக் கூடியதுதான்.இதை உணர்ந்துக் கொண்டதால் நான் எதற்கும் வருந்தாமல் இருக்கிறேன்.இந்தக் கழுதைப் பிறவியும் நிலையில்லாததுதான்.இப்படி உலக நிலையாமை என்னும் உண்மைகளைத் தெரிந்துக் கொண்ட ஒருவன் இவற்றின் அழிவு குறித்தும் வருந்த மாட்டான்.இது உலக இயல்பு எனற தெளிவு ஏற்பட்டபின் ஏன் நிலையாமை குறித்து வருந்த வேண்டும்? ஆறுகள் எல்லாம் கடலை அடைகின்றன.அது போலப் பிறவிகள் எல்லாம் மரணத்தை அடைகின்றன.இந்த இயற்கை நியதிகள் காலத்தால் ஏற்படுபவை என்ற தெளிவு ஏற்பட்ட பிறகு எதற்காகத் துக்கப்பட வேண்டும்?

ஒருவனை ஒருவன் கொன்றுவிட்டதாகவோ, வென்றுவிட்டதாகவோ எண்ணிப் பெருமிதம் அடைகிறான்.உண்மையில் கொல்லுவதும், வெல்லுவதும் அவன் செயல் அன்று.அவனது கருமத்தின் செயல்.அவன் அதற்குக் கர்த்தா அல்லன்.வேறொருவன் கர்த்தாவாக இருக்கிறான்.அவன்தான் பரமாத்மா.அவன்தான் எல்லாவற்றையும் காலத்திற்கு ஏற்றபடி இயக்குகிறான்.அதன்படி அனைத்தும் இயங்குகின்றன.மாற்றமுடியாத சக்தி வாய்ந்தது காலம்.அறிஞனையும்-முட்டாளையும், பலம் உள்ளவனையும்-பலம் இல்லாதவனையும், நல்லவனையும் -கெட்டவனையும்,வள்ளலையும்-வறியவனையும் வேறுபாடில்லாமல் காலம் தன் வயப்படுத்திக் கொள்கிறது.உலகமே காலத்தின் பிடியில்தான் இருக்கிறது.குழந்தை பிறப்பதும்,வளர்வதும், வாலிபனாகத் திகழ்வதும், வயோதிகனாக மாறுவதும், மரணத்தைத் தழுவுவதும் காலத்தின் விளைவு என்பதை உணர்தல் வேண்டும்.இப்படி யுகம் யுகமாகக் காலம் அனைத்துப் பொருளையும் மாற்றி அழித்து வருகிறது.இதற்குக் கடலைப் போல் கரை இல்லை.ஆகவே காலத்தைக் கடக்க யாராலும் இயலாது.

இப்போது கழுதையாக இருக்கும் நான் மேலும் பல வடிவங்களை எடுக்க முடியும்.ஆனால் காலத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது.இந்த உலகமே காலத்தின் ஆதிக்கத்தில் இருக்கின்றது.பஞ்ச பூதங்களின் வேற்றுமையும் காலத்தின் விளைவுதான்.காலத்தைக் காட்டிலும் ஆற்றல் மிக்க பொருள் உலகில் வேறொன்றும் இல்லை.அது கண்ணுக்கு புலனாகாது.ஆயினும் இதனைச் சிலர் ஆண்டு என்றும் மாதம் என்றும் நாள் என்றும் காலை என்றும் மாலை என்றும் நிமிடம் என்றும் விநாடி என்றும் கூறுகின்றனர்.

இந்திரா..இந்த உலகம் எதன் வசம் இருக்கிறதோ அதுதான் காலம் என உணர்வாயாக.நீ ஆற்றல் மிக்கவன் என எண்ணிக் கொண்டிருக்கிறாய்.உன்னைப் போல ஆற்றல் மிக்க பல இந்திரர்கள் கால வெள்ளத்தில் மறைந்தனர்.காலம் உன்னையும் கொண்டு செல்லும்.அந்தக் காலம் எப்போது வரும் என சொல்வதற்கில்லை.இதை உறுதியுடன் நம்புவாயாக.

அதிர்ஷ்ட லட்சுமி இப்போது உன்னிடம் உள்ளாள்.இது போல பல்லாயிரவரை இந்த லட்சுமி அடைந்திருக்கிறாள்.இப்போது உன்னிடம் லட்சுமி இருப்பதாலேயே செருக்கு அடையாதே.காலம் மாறும்.

நான் அசுரர்க்கு அதிபதியாக இருந்தேன்.தேவர்களை நடுங்கச் செய்தேன்.பிரம்ம லோகத்தையும் வெற்றி கொண்டேன்.அத்தகைய நான் இப்போது எப்படியிருக்கிறேன்..பார்..எல்லாருடைய கதியும் இதுதான்' எனவே தேவர்க்கு அரசனே..உண்மை உணர்ந்து அடக்கமாய் இரு" என்றான் பலி

Tuesday, March 15, 2011

146-பொருள் ஆசை துக்ககரமானது





பொருள்களின் மீது தோன்றும் வைராக்கியமே உண்மையான இன்பத்திற்குக் காரணம் என்பதை விளக்கும் கதை

பீஷ்மர் தருமரிடம், 'தருமா..வாய்மை,வைராக்கியம்,இன்ப துன்பங்களைச் சமமாகக் கருதுதல்,பற்றில்லாமல் செயலில் ஈடுபடுதல்,வீணாகக் கஷ்டப் படாமலிருத்தல் ஆகிய ஐந்துமே அமைதிக்குக் காரணமாகும்.துறவிகள் இந்த ஐந்தையுமே உத்தம இன்பமாகவும், உத்தம தருமமாகவும் கருதுவர்.இது தொடர்பாக மங்கி என்பவரின் கதையைச் சொல்கிறேன்' என்றபடி தொடர்ந்தார்.

எத்தனையோ தொழில்களைச் செய்தும் பொருள் சேர்க்க இயலாமையால் மங்கி என்பவர் சோர்ந்து போனார்.அவரிடம் சிறிதளவு பணம் இருந்தது.இதுதான் இறுதி என, அப்பணத்தைக் கொண்டு இரு கன்றுக் குட்டிகளை வாங்கினார்.அவற்றை உழவுத் தொழிலுக்கு பழக்குவதற்காக ஒரு நுகத்தடியில் பூட்டி ஓட்டிக் கொண்டு போனார்.பயிற்சி இல்லாக் காரணத்தால் கன்றுக் குட்டிகள் மிரண்டு ஓடின.அப்படி ஓடும் போது, ஒட்டகம் ஒன்று வழியில் படுத்திருந்தது.ஒட்டகம் மத்தியில் இருக்க, இரு புறமும் இரு கன்றுக் குட்டிகள் ஓட..ஒட்டகத்தின் தலை மீது நுகத்தடி உராய்ந்து சென்றது.அது கண்டு ஆத்திரமடைந்த ஒட்டகம் திடீரென எழுந்தது.இரு கன்றுக் குட்டிகளையும் நுகத்தடியுடன் தூக்கிக் கொண்டு விரந்து சென்றது.கன்றுகள் உயிர் போவது போலத் துடித்தன.மங்கி மனம் தளர்ந்து..

மனிதனிடம் ஆற்றலிருந்தாலும், அதிர்ஷ்டம் இல்லையெனில் பொருள் சேர்க்க இயலாது.இறைவனின் அருள் இருந்தால் தான் முயற்சியும் கை கூடும்.அலை கடலையும்,பல மலைகளையும் கடந்து முயன்றாலும் முயற்சி இல்லையெனில் பொருள் இல்லை .எவ்வளவோ முயற்சிகளில் ஈடு பட்டேன்..பயன் இல்லை.ஆயினும் விடாமுயற்சியுடன் இரு கன்றுகளை, ஏரில் பழக்கலாம் என நுகத்தடியில் பூட்டி ஓட்டினேன்.ஒட்டகம் ஒன்று கன்றுகளை நுகத்தடியுடன் தூக்கிச் சென்று விட்டது.கன்றுகளை எவ்வளவு முயன்றும் ஒட்டகத்தின் பிடியிலிருந்து மீட்க முடியவில்லை.அந்த ஒட்டகத்தின் இரு புறமும் கட்டித் தொங்கவிடப்பட்ட மணிகள் போல கன்றுக் குட்டிகள் தொங்குகின்றன.

தெய்வ சம்மதம் இல்லா முயற்சியில் என்ன பயன்.உண்மையான இன்பம் என்பது பொருள் ஆசையைத் துறப்பதுதான். ஆசையை நிறைவேற்றுவது இன்பமல்ல.ஆசையே இல்லாமல் இருப்பதுதான் நிலையான இன்பம் பொருள் பெருகப் பெருக ஆசையும் பெருகிக் கொண்டே போகும்.

என் ஆசை நிறைவேறிவிட்டது என நிம்மதியுடன் இருக்கும் மனிதனைக் காண்பது அரிது.பேராசைக் கொண்ட மனம்..வைராக்கியம் கொண்டு பொருள் பற்றினின்று விலக வேண்டும்.பொருள் சேர்க்க சேர்க்க அது அழிந்துக் கொண்டிருக்கக் கண்டும் மீண்டும் அதன் மீது நாட்டம் ஏன்' என பலவாறு சிந்தித்தார் மங்கி.

பின் உறுதி கொண்டு எழுந்தார்.'இப்போது என் மனம் உறுதி மிக்கதாய் ஆகிவிட்டது.காமமே..உன்னை மட்டும் நான் விட்டு விடுவேனா..உன்னையும் வேருடன் களைந்து எறிந்து விட்டேன்.பொருள் ஆசை துக்ககரமானது என்பதை அறிந்துக் கொண்ட நான், காமத்தை மட்டும் வளர விடுவேனா?இனி நான் எனக்கு உண்டாகும் துன்பங்கள் அனைத்தையும் பொறுத்துக் கொள்வேன்.பிறர் எனக்குத் துன்பம் தந்தாலும் நான் அவர்க்கு துன்பம் தர மாட்டேன்.

காமமே..இனி எனக்கு எது கிடைக்கிறதோ அதைக் கொண்டு மன நிறைவு கொள்வேன்.பழைய வாழ்க்கை இனி இல்லை.வைராக்கியம் மேலிடுகிறது.இன்பம்,மன நிறைவு,புலனடக்கம்,வாய்மை,பொறுமை ஆகிய அனைத்தும் இப்போது என்னிடம் இருக்கின்றன.காமமே! நீ ரஜோ குணத்திலிருந்து பிறந்தாய்.உன்னை ஒழிக்க வேண்டுமானால் முதலில் ரஜோ குணத்தைத் தொலைக்க வேண்டும்.குளிர்ந்த நீரில் இறங்கித் தாகத்தை போக்கிக் கொள்வது போல, பரம்பொருளைச் சார்ந்து கர்மங்களை ஒழிப்பேன்.ஆசையை அறவே துறப்பதால் ஏற்படும் இன்பம், அதைப் பெறுவதால் ஏற்படும் இன்பத்தை விடப் பல மடங்கு உயர்ந்ததாகும்.ஆன்மாவை அலைக்கழிப்பதில் பொறாமை,வஞ்சனை ஆகிய இவற்றைக் காட்டிலும் காமமே மிகவும் சக்தி வாய்ந்தது.இவை அனைத்தையும் வைராக்கியம் என்னும் வாளால் வெட்டி வீழ்த்திப் பரமானந்தத்தில் திளைக்கப் போகிறேன்' என்றார் மங்கி.

தருமா..இவ்வாறு மங்கி வைராக்கியம் மேலிட, எல்லா ஆசைகளையும் துறந்து அஞ்ஞானத்தை வேரறுத்து முடிவில் பிரமபதத்தை அடைந்து பேரானந்தம் அடைந்தார்.

Thursday, March 10, 2011

145-செல்வமாகக் கருத வேண்டியவை எவை?





ஞானம்,சத்தியம்,ஆசை,தியாகம் அகியவற்றின் தன்மையை விளக்குமாறு கேட்டுக் கொண்ட தருமருக்கு பீஷ்மர் சொல்லத் தொடங்கினார்.

'தருமா..இது சம்பந்தமாக ஒரு தந்தைக்கும் மகனுக்கும் நடைபெற்ற உரையாடலைத் தருகிறேன்.

வேதம் ஓதுவதையே தமது வாழ்க்கையின் முக்கியமாகக் கருதினார் ஒரு அந்தணர்.அவருக்கு மேதாவி என்றொரு மகன் இருந்தான்.பெயருக்கு ஏற்ப அவன் மேதாவியாக விளங்கினான்.முக்தியைப் பற்றிய அறிவும் அவனிடம் இருந்தது.அவன் தந்தையிடம்,'தந்தையே! மனிதனின் ஆயுள் மிகக் குறைவாக இருக்கிறதே..இந்தக் குறைந்த ஆயுளில் நிறைந்த புண்ணியத்தைப் பெறுவது எப்படி?'என வினவினான்.

தந்தை பதில் உரைத்தார்..'மகனே..முதலில் பிரமசர்யத்தில் இருந்த் கொண்டு வேதம் ஓதுதல் வேண்டும்.பிறகு இல்லறத்தில் ஈடுபட்டுச் சிரார்த்தம் முதலான நற்காரியங்களுக்காக மைந்தர்களைப் பெற வேண்டும்.பின் மூன்று அக்கினிகளை உண்டாக்கி, முறைப்படி யாகம் செய்ய வேண்டும்.இறுதியில் காட்டுக்குச் சென்று தவம் இயற்றி முக்திப் பேற்றை அடைய வேண்டும்.'

தந்தையின் இந்தப் பதிலில் திருப்தியடையவில்லை மகன்.அவனது நல்லறக் கருத்துகள் வேறு விதமாய் இருந்தன.'உலகத்தின் இயல்பை நீ நன்கு அறிந்துக் கொள்ளவில்லை போலும்.உலகத்தின் எல்லாப் பக்கங்களிலும் கிழத்தன்மை சூழ்ந்திருக்கிறது.இந்த நிலையில் எமன் விழிப்பாக உயிர் இனங்களைக் கவனித்து வருகிறான்.இதை எண்ணிப் பார்க்க பயமாய் இருக்கிறது.எமன் உலகத்தை ஒவ்வொரு வினாடியும் அழித்துக் கொண்டிருக்கிறான்.இரவும்,பகலும் ஒருவரின் ஆயுளை சிறிது சிறிதாகக் குறைத்துக் கொண்டிருக்கின்றன.இந்நிலையில் மரணவலையில் சிக்கியிருக்கும் துன்பத்தை இன்பமாக மாற்ருவது எப்படி என சிந்திக்கிறேன்.எவன் ஒரு நாளில் எந்த நல்ல செயலையும் செய்யவில்லையோ அந்த நாள் பயனற்ற நாள் என அவன் தெளிதல் வேண்டும்.நமது லட்சியங்கள் நிறைவேறுவதற்கு முன்னரே எமன் நம்மை தொடருகிறான்.

ஒவ்வொருநாளும்,நம் வாழ்நாள் குறைந்து கொண்டே வருகிரது.ஆழமற்ற நீர்நிலையில் வாழும் மீன் இன்பத்தை அடையாதது போல மக்கள் இன்பத்தைப் பெற முடிவதில்லை.நிம்மதியாகப் புல்லை மேய்ந்து கொண்டிருக்கும் ஆட்டைச் செந்நாய் கவர்ந்து செல்வது போல மனிதனை எமன் கவர்ந்து செல்கிறான்.ஆதலால் செய்ய வேண்டிய நல் அறங்களை இப்போதே செய்து விட வேண்டும்.ஏன் எனில் 'இந்த நல்ல காரியம் முடியவில்லையே, பாவம்.. என எமன் காத்துக் கொண்டிருக்க மாட்டான்.எப்போது நம் வாழ்நாள் முடியும் என யாராலும் சொல்ல முடியாது.ஆகவே எப்போதும் நல்ல செயல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

புண்ணியச் செயல்களால் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் உண்டாகும்.எப்போதும் தன் குடும்பம்..தன் குடும்பம் என அலைந்து திரிபவன் தகாத செயல்களிலும் ஈடுபடுவான்.குடும்ப நலன் கருதிக் காலப் போக்கில் பாவத்தை செய்யவும் தயங்க மாட்டான்.அத்தகைய அறக் கேடனை, உறங்கும் விலங்கைப் புலி கவர்ந்து செல்வது போல எமன் கவர்ந்து செல்வான்.வீடு,மனை,தோட்டம்,செல்வம் என அவற்றைச் சேர்ப்பதிலேயே கவனம் செலுத்தும் மன்னன் அவற்றை அனுபவிப்பதற்கு முன்னமே எமனால் கவரப் படுகிறான்.அறிஞன்-அறிவிலி.வீரன்-கோழை,மன்னன்-சாதாரண மனிதன் என எவ்வித பாகுபாடுமின்றி எல்லோரையும் அவர்கள் செயல் முடிவதற்குள், அவர்கள் ஆயுளை முடித்து விடுகிறான் எமன்.

பிற உயிர்க்கு துன்பம் செய்யாதவனை எந்த உயிரும் துன்புறுத்துவதில்லை.பசி,மூப்பு,பிணி ஆகிய இவை எமனின் படை வீரர்கள் என்பதை உணர வேண்டும்.இப் படை வீரர்களைத் தடுக்கும் சிறந்த கருவி சத்தியம் என்னும் வாய்மையாகும்.வாய்மை அல்லாதவற்ரை விலக்க வேண்டும்.முக்தி என்பது வாய்மையிலேயே நிலைத்துள்ளது.ஐம்புலன்களையும் அடக்கி வாய்மையை போற்றும் ஒருவனாலேயே எமனை எதிர்த்து நிற்க முடியும்.

வாய்மையைப் போற்றுபவன் இன்ப துன்பங்களைச் சமமாகக் கருதுவான்.விரதம்,தவம்,தியானம் இவற்றால் மனம்,சொல்,செயல் ஆகியவை தூய்மை அடையும்.தவத்திற்கு இணையானது வாய்மை.கண்ணுக்கு இணையானது கல்வி.தனித்து இருத்தல்,இன்பதுன்பங்களைச் சமமாக பாவித்தல்,ஒழுக்கம்,பணிவுடைமை,கொல்லாமை ஆகியவற்றையே ஒவ்வொருவரும் செல்வமாகக் கருத வேண்டும்.பிற செல்வங்கள் செல்வமே அல்ல.

ஞானம் தான் கண்!

சத்தியம் தான் மேலான தவம்!

ஆசைதான் மிகப் பெரிய துன்பம்!

தியாகம் தான் அழிவில்லாத இன்பம்!



மேலும், தாய்,தந்தை,தாரம்,மக்கள்,உறவினர்,நண்பர் யாராலும் ஒரு பயனும் இல்லை.தருமம் ஒன்றே துணையாகும்.ஆகவே மனக் குகையில் அடைபட்டிருக்கும் ஆன்மாவைக் கண்டு ஆராதனை செய்ய வேண்டும்.' என்று தந்தைக்கு உபதேசம் செய்தான் மேதாவி என்னும் மகன்.

பீஷ்மர் தருமரை நோக்கி,'மைந்தனின் பேச்சைக் கேட்ட தந்தை வாய்மையைப் போற்றி மேன்மை அடைந்தான்.நீயும் வாய்மையைப் போற்றி உயர்வாயாக' என்றார்.